வேத வியாசர்

““இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்பதுதான் சனாதான தர்மத்தினை விளக்கும் ஒரே வரி, அந்த அளவு எல்லாம் கொண்டது இந்த தர்மம்

அதன் இயல்பில் இன்று வியாச பவுர்ணிமா கொண்டாடபடுகின்றது

குரு பூர்ணிமா அன்று வியாசரை ஏன் கொண்டாட வேண்டும் என்றால் ஒவ்வொரு இந்துஸ்தானியும் அந்த மூலரிஷியினை ஏன் வணங்கி பணியவேண்டும் என்றால், ஏன் அந்த பவுர்ணமியினை வியாச பவுர்ணமி என தேசம் காலம் காலமாக கொண்டாடுகின்றது என்றால் அந்த காரணங்கள் வலுவானவை

இந்துமதத்தின் சிறப்பு அது எப்போது தோன்றியது யாரால் தோற்றுவிக்கபட்டது என சொல்லமுடியாதது, காரணம் அது தோன்றவுமில்லை மறையவும் மறையாது

ஆம், பிரபஞ்சம் தோன்றும்போதே இந்துமதம் பிறந்தது அதை அப்போது உணர்வார் யாருமில்லை, சூட்சுமமக்க இந்த பிரபஞ்சத்தை அதுவரை யாரும் அறிய முயன்றதில்லையே தவிர இந்துமதததின் ஆதிதொடக்க நிலை அதுதான்

இந்த உலகையும் மக்களையும் இந்த பிரபஞ்சத்தையும் உற்றுநோக்கிய ரிஷிகள் இவை எல்லாவற்றையும் இயக்கும் மூலசக்தியினை உணரமுடிந்தார்கள், மானிடர்கள் மேல் கொண்ட அன்பாலும் கருணையாலும் அவர்கள் லவுகீக வாழ்வில் படும் சிரமங்களை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு நல்வழியும் போதனையும் சொல்ல மூல சக்தியினை தேடினார்கள்

தீரா தவத்தில் தங்கள் மனத ஆன்மாவினை இந்த பிரபஞ்சத்தில் கலந்து அதன் இயக்கத்தையும் அசைவையும் தாத்பரியத்தையும் மனதால் உணர்ந்தனர்

இந்த பிரபஞ்ச விதிகளை ரகசியங்களை தன்னில் உணர்ந்த அவர்கள், பிரபஞ்ச மொழியினை மனதால் படித்தனர்

படித்ததை வழி வழியாக தங்கள் சீடர்களுக்கு சொல்லி கொடுத்தனர், குருபரம்பரை பந்தமாக இது தொடர்ந்தது

அதுவரை இந்த வேதமெல்லாம் தங்கசுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கபட்ட தங்க மண்போல, பட்டம் தீட்டாத வைரகற்கள் போலத்தான் இருந்தன, ஒரு சிலருக்கு அவை புரியும் பலருக்கு புரியாது

மாபெரும் தத்துவங்கள், மனவியல், வாழ்க்கை போதனை, பிரபஞ்ச ரகசியம், ஜோதிடம், வழிபாட்டு முறைகள், பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் வழிகள் என என்னென்னவோ அங்கே கலந்து கிடந்தது

அவைகளை வகைபடுத்தி பிரிப்பார் யாருமில்லை, மக்களுக்கு சொல்வாரும் யாருமில்லை, இவையெல்லாம் பல்லாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட காலம்

அப்போது பராசுரமுனி என்றொரு முனிவர் இருந்தார், அவர் மாபெரும் ரிஷி

வசிஷ்டரை வணங்கினால் ரிஷிகள் அனைவரையும் வழங்கினாற்போல என்பார்கள் . வசிஸ்டரே ஆதி மகரிஷி. ஆதி பிரம்மரிஷி கூட வசிஷ்டர்தான், அவரிடமிருந்து வேதாந்த விதையைப் பெற்றவர் சக்தி. சக்தியின் சீடர் இந்த‌ பராசரர்

அவர் யமுனாகரையில் தவமிருந்தார் வானியல் விதிப்படி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருவாகும் உயிர் மிகபெரிய மகானாக விளங்கும் என்பதை அறிந்தவர் ஒரு மீணவபெண்ணை மணந்து ஒரு மகனை பெற்றெடுத்தார்

அக்குழந்தை கருப்பாகவும் கொஞ்சம் அவலட்சணத்துடன் இருந்த்து , அதற்கு கிருஷ்ண (கருப்பான) துவைபயானர் (தீவுவாசி) என என பெயரிட்டனர், அக்குழந்தை அந்த பெயரோடுதான் வளர்ந்தது

மீணவ பெண்மணி பெற்றெடுத்த அக்குழந்தை பின்னாளில் ஞானத்திலே வளர்ந்தது தன் தவவலிமையால் மாபெரும் தெய்வங்களே அவருடன் உறவாடும்படி அது ஞானியாக பரிணமித்தது

தன் மனோதவ வலிமையால் இடைவிடாது தியானத்தில் இருந்த அந்த மகான், அப்படியே மக்கள் நலனிலும் இந்த உலகின் மீதும் பெரும் அன்பு கொண்டிருந்தார்

இந்த மக்களுக்கு ஏதும் செய்யவேண்டும் நல்வழிகாட்ட வேண்டும் என அவர் விரும்பினார், மானிடர்மேல் மகத்தான பாசமும் அன்பும் கொண்டவர் அவர்தான்

அந்த நல்ல மனதுக்கு விநாயக பெருமானும் வழிகாட்டினார், விநாயக பெருமான் எப்போதும் யார் மானிடருக்கும் உலகுக்கும் நல்வழிகாட்ட நினைப்பார்களோ யார் இந்த மானுடர் மேல் பெரும் அன்பு கொண்டிருப்பார்களோ அவர்களுக்கு ஓடிவந்து வழிகாட்டுவார்

அப்படி அவரின் திருவருளால் அந்த கிருஷ்ண துவபாயானார் தன் இடைவிடா பெரும் தியானத்தால் வேதங்களை உணர்ந்து அந்த பிரபஞ்ச மொழியினை மானிடருக்கு கொடுக்க விரும்பினார்

அதுவரை யாரும் செய்யாத முயற்சியினை அவரே முன்னெடுத்தார் அது சிரமானது, யாரும் செய்யதுணியாதது என்றாலும் அவர்தான் முதன் முதலில் அதை தொடங்கினார் இன்றுவரை அதை செய்த ஒருவர் அவர்தான்

அவரே வேதங்களை நான்கு பகுதிகளாக பிரித்தார், வேதம் எனும் பொது மூட்டையினை பகுதி பகுதியாக ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என பிரித்து வகுத்தவர் அவர்தான்

வேதங்களை வகுத்ததால் அவர் வகுப்பாளர் அதாவது வியாசர் என்றானார், வேதங்களை வகுத்ததால் அவர் பெயர் வேத வியாசர் என்றாயிற்று

அவர் வேதங்களை வகுத்ததோடு நிறைவடையவில்லை வேதாந்த தத்துவங்களை சூத்திரங்கள் என வகுத்தார்

அது உபநிஷங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என வகுக்கபட்டன‌

இது உலக இயக்கம், பிரபஞ்ச ரகசியம், மானிட ஆத்ம ரகசியம் எனும் வேதாந்தமாயின, வேதங்களின் அந்தமான அதாவது வேதங்களின் முடிவுவரை அலசி ஆராய்ந்து எழுதபட்டது அந்த மூன்று நூல்கள்

இவை எல்லாம் மிகபெரிய தத்துவங்கள், மானிடர்கள் எல்லோரும் இதை புரிந்துகொள்வது சுலபமில்லை மாபெரும் ஞானிகள் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் என்பதால் இன்னும் கொஞ்சம் அதாவது நடுத்தர அறிவுடையவருக்கு பல விஷயம் புரிய புராணங்களை தொகுத்தார்

18 புராணங்கள் அப்படி அவரால் தொகுக்கபட்டன‌

பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம்
நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்
வாயு புராணம் என 18 புராணங்களை கொடுத்தார்

இன்றுள்ள இந்துமத பிரிவுகள் அந்த வழிபாட்டு முறைகள் கடவுள்கள் என எல்லாமும் இங்கிருந்துதான் வந்தன, இந்த புராணங்கள்தான் இன்றிருக்கும் இந்துமதத்தின் ஆணிவேர்

மிக பெரும் ஞானியரால் மட்டும் புரியும் வேதங்களை வகுத்து, அந்த வேதங்களை இன்னும் எளிமையாய் சொல்ல மூன்று சூத்திரங்களை உருவாக்கி, அதை செயல்பாட்டில் அதாவது செயல்முறை காட்சியில் காட்ட 18 புராணங்களை கொடுத்தவர் வியாசர்

அந்த 18 புராணங்கள் அடிப்படையின் பரிட்சார்த்த முயற்சித்தான் ஆலயங்கள், அந்த வழிபாடுதான் ஆகம விதிகள், பூஜைகள், யாகங்கள் என இன்னும் வளர்ந்தன‌

இப்படி பல வகை வழிகளை போதித்தவர் பாமரனும் கேட்டவுடன் வேதங்களின் தர்மத்தை அறிந்துகொள்ள இரு இதிகாசங்களை கொடுத்தார்

அதில் ஒன்றை அவரே எழுதினார், ஆம் ராமாயணம் மகாபாரதம் எனும் இருபெரும் இதிகாசங்களின் மூலம் அவரே

அதிலும் விநாயகபெருமான் அருளோடு பாரத்தை அவரே எழுதினார்

நடந்த தன் குலத்தின் வரலாற்றை பாடமாக சொல்லி அதில் பகவத் கீதையினை கலந்து (கீதை என்பது வேத தத்துவம் அது மகாபாரதத்துக்கு முன்பே இருந்தது, கண்ணன் அந்த வேத கருத்துக்களைத்தான் போதித்தான்)
சொன்னார் வியாசர்

பாமரனும் புரியும் வண்ணம் வேதங்களின் தத்துவத்தை அதில் சொன்னார்

இன்றுவரை மட்டுமல்ல என்றும் உலகின் மிக நீண்ட இதிகாசம் மகபாரதம், அந்த பெருமை வேறு எந்த இலக்கியத்துக்குமில்லை, அதுதான் வியாசமாமுனியின் மாபெரும் சாதனை, இந்துமதத்தின் மிகபெரிய ஞான அடையாளம்

வியாசர் படைத்த பாரத காவியத்தில் 6,00,000 செய்யுள்கள் இருந்தன. அவற்றில் 1,00,000 மட்டுமே நாம் வாழும் பூவுலகில் உள்ளன. மீதமுள்ள 500,000 செய்யுள்கள் தேவ லோகம், பித்ரு லோகம் (நம் முன்னோர்கள் வாழும் உலகம்) போன்ற பல உலகங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டன என்கின்றது தரவுகள்

அப்படியானால் அவர் எவ்வளவு பிரமாண்டமாக பாரதத்தை எழுதியிருப்பார், நீங்களும் நானும் படிப்பதெல்லாம் அவர் அவர் எழுதியதில் ஆறில் ஒரு பங்கைத்தான் நாம் படித்துகொண்டிருக்கின்றோம் அது கூட முழுமை இல்லை

இதிகாசம் என்றால் வேத தர்மம், தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டவை, இந்த மண்ணின் தாத்பரியம், அந்த தர்மசாஸ்திரங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு, பராசர ஸ்மிருதி, ஆபஸ்தம்ப ஸ்மிருதி போன்று மிக அதிகம் உண்டு…

இன்னும் இவேதத்திற்கு அங்கமான சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் போன்ற சாஸ்திரங்களனைத்தின் சாரத்தையும் எடுத்து மகாபாரதத்தை படைத்தார்.

“இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்று மகாபாரதம் பற்றி அவர் சொன்ன மாபெரும் வாக்கியம்

மகாபாரதம் தர்மங்களின் குவியல். அது உபாசனை மற்றும் உபதேசங்களின் பொக்கிஷம். அது வாழ்க்கை முறை

வாழ்வியல் நெறியினை வேதநெறிமுறைகளை கலந்து போதிக்கபட்ட உன்னத காவியம், அவை மானிடருக்கு எக்காலமும் வழிகாட்டும் விளக்குகள்

இந்துமதத்தை யார் தோற்றுவித்தார் என்பதை சொல்லமுடியாது இது இயற்கையோடு இணைந்தே பிறந்த ஞானமதம், ரிஷிகள் அதனை வேதங்களாக சொல்லி வைத்தனர்

வியாசர்தான் அதனை வகைபடுத்தினார், தெய்வங்களை அடையாளபடுத்தினார், தத்துவங்களை எழுதி தந்தார், பாமரனும் புரியும்படி அதை இதிகாசமாக்கினார்

அவர்தான் இந்துமதத்துக்கு இந்த உலகில் ஒரு அடையாளத்தை அமைத்தார், அந்த குருதான் எல்லா குருக்களும் உருவாகி வர காரணமாய் இருந்தார்

அவர் இல்லையென்றால் வால்மிகி இல்லை, அவர் இல்லை என்றால் ஆதிசங்கரர் பிரம்மசூத்திரத்துக்கு உரை எழுதமுடியாது, அவர் இல்லை என்றால் அந்த வேதங்கள் இல்லை

அவரின் வேதங்களை அவரின் சீடர்களான பைலர், வைசம்யானர், ஜெமினி, சூமந்து ஆகியோர்தான் மக்களிடம் கொண்டு வந்தனர்

அவரின் புராணங்களை அவரின் சீடர் ரோமஹர்ஷணர் மக்களுக்கு தந்தார்

ஆக இன்று எல்லோரும் காணும் இந்துமதமும் அதன் மாபெரும் தத்துவ நூல்களையெல்லாம் ஏட்டில் தந்த குரு அந்த பெருமானேதான்

அவர் இல்லை என்றால் இங்கு வெற்றிடமும் காரிருளும் நீடித்திருக்கும், அவர் இதனையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் ஊமை கண்ட கனவுபோல இந்துமதம் ரிஷிகளோடே முடிந்திருக்கும்

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் நிலைபெற்று நிற்கின்றதென்றால் இன்னும் காலமுள்ள காலம் வரை நிற்கும் என்றால் அதற்கு அவர்தான் காரணம்

வியாசர் பெருமான் இல்லையென்றால் சனாதான தர்மம் என ஒன்றே இல்லை, அது அமையபடாமலே போயிருக்கும்

வேதங்களை, பிரபஞ்ச விதிகளை, இன்னும் தேவ ரகசிங்களை, படைப்பின் நோக்கத்தை இயல்பை மானிடன் பின்பற்றி இந்த உலகில் தர்மம் நிலைக்க செய்யபட்ட வாழும் முறை அல்லது தர்மம் அந்த சனாதான தர்மம்

அதை உருவாக்கியது வேதங்களும் உபநிஷங்களும் இன்னபிற வேதாந்தங்களும், அதனை தொகுத்து தந்தவர் வேத வியாசர்

ஏனென்றால் வேதத்தில் கூறியிருப்பவை கடினமான விஷயம். சாமானிய அறிவுக்கு எட்டாதது. அப்படிப்பட்ட வேதத்தில் கூறியுள்ள தர்மத்தை சாமானியனும் கடைபிடித்து பயிற்சி செய்யும் விதத்தில் அழகான போதனைகளாகவும் கதைகளாகவும் வரைமுறைப்படுத்திய இலக்கியமே அவரின் புராணமும் இதிகாசமும்

உண்மையில் மானுடரை நிரம்ப நேசித்தார் வியாசர் மனிதன் மனிதனாக வாழ வேதங்களை முடிந்தவரை எளிதாக்கி அதனை தர்மமாய் மாற்றி தந்தார்

ஞானியருக்கு வேதம், படித்தோருக்கு புராணம், அடிமட்ட மக்களுக்கு இதிகாசம் என ஒவ்வொருவர் அறிவுக்கும் ஏற்றபடி சிந்தித்து கொடுத்தார் என்றால் மானிடர் மேல் அவர் கொண்ட அக்கறை எவ்வளவு என்பது விளங்கும்

எப்படியெல்லாம் அவர் பாடுபட்டிருக்கின்றார்?

சனாதன தர்மத்தை வியாசர் உருவாக்கவில்லை. மகரிஷிகள் தரிசித்த சாஸ்வத சத்தியங்களின் வடிவமான சனாதன தர்மத்தை நெறிப்படுத்தி வியாசர் நமக்கு அருளியுள்ளார்.

இங்கு நாம் காணும் எல்லாமும் அவர் தந்தது அவர் வகுத்தது அதனால் “வ்யோசிஷ்டம் ஜகத் சர்வம்” என்ற புகழ்பெற்ற கூற்று உள்ளது. சிருஷ்டியில் அனைத்தும் வியாசரின் எச்சில் என்பது இதன்பொருள்.

இத்தனை நூல்கள் மூலம் கூறிய ஞானம் நமக்கு போதித்த வியாசரைத்தான் மூல குருவாக கருதமுடியம், அதனாலே இந்நாள் வியாச பூர்னிமா என்றானது

காரணம் எல்லா குருக்களும் வியாசர் சொன்னதைதான் நமக்கு சொன்னார்கள், வியாசர் எல்லாவற்றையும் எல்லா குருக்களுக்கும் போதித்திருக்கும் வகையில் அவர்தான் குருக்களின் குரு

சனாதான தர்மத்தை வகுத்த அந்த வியாசர் வேதங்கள் வழியில் மூன்று விதமான போதனைகளை அளித்துள்ளார். முதலாவது தர்மம். தர்மம் எப்போதும் செயல் வடிவில் இருக்கும். ஒவ்வொருவரும் தம் பிறவியை அனுசரித்துச் செய்யவேண்டிய செயல் தர்மம் எனப்படுகிறது.

இரண்டாவது உபாசனை, பக்தி. பகவானை எந்தெந்த வடிவங்களில் எவ்விதமாக வழிபட வேண்டும்? எந்தெந்த இறை வடிவத்தின் தத்துவம் எவ்விதமாக இருக்கும்? பகவான் ஒருவனே என்றாலும் கூட பதர்களை அருளுவதர்காக அவரவர் வாழ்வியல் குணங்களுக்கு ஏற்ப உபாசனை செய்வதற்காக அனேக அவடிவங்களாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டான். ஒரே பகவான் சிவனாக, விஷ்ணுவாக, ராமனாக, கிருஷ்ணனாக, அம்மனாக, கணபதியாக, சுப்பிரமணியராக, சூரியனாக பல்வேறு வடிவங்களோடு வேத காலத்திலிருந்தே வழிபடப் படுகிறான்.

இவ்விதம் கூறப்படுகிற தெய்வங்களை எவ்விதம் வழிபட வேண்டும்? அந்தந்த தெய்வங்களுக்கான பிரத்யேக நட்சத்திரம், திதி என்ன? பூஜை விதானம் என்ன? மந்திரம், தந்திரம் என்னென்ன? இவையனைத்தையும் வேதங்களிலிருந்து வியாச பகவான் புராணங்கள் மூலம் நமக்களித்துளார். அதனால் தர்மத்திற்கு அடுத்த அம்சமான உபாசனையில் யாருக்கு எந்த தெய்வத்தின் மீது பிரீதி உள்ளதோ அந்த தெய்வத்தை வழிபட முடியும்.

அவ்வாறு வழிபட நினைக்கும்போது அதற்கான வழிமுறைகள் நியமங்கள் ஆகியவற்றை வியாசர் அழகுற அமைத்து கொடுத்துள்ளார். சிவ ஆராதனை செய்பவர்களுக்காக சிவனை முதன்மைக் கடவுளாக கொண்ட புராணங்கள், அதேபோல் விஷ்ணுவை முதன்மையாகக் கொண்ட விஷ்ணு புராணங்கள், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஹயக்கிரீவர் முதலான ஒரே விஷ்ணு தத்துவத்தின் பற்பல வடிவங்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அளித்து உள்ளார்.

அவதாரங்கள் எவ்வாறு ஏற்பட்டன? அவற்றின் வரலாறு என்ன? அவதாரங்களை எவ்வாறு உபாசனை செய்ய வேண்டும்? இவை அனைத்தையும் நமக்களித்தவர் வியாச பகவான். லட்சுமி சரஸ்வதி துர்கா லலிதா காளி போன்ற வடிவங்கள் அவை ஆவிர்பவித்த நேரங்கள் அந்த வடிவங்களில் இருந்துகொண்டு அம்பாள் செய்த லீலைகள்… இவை அனைத்தையும் வர்ணித்துள்ளார் வியாசர்.

அதேபோல் கணபதி பற்றி பல புராணங்களில் வர்ணித்துள்ளார். கணபதியை பரமாத்மாவாக நிரூபித்து காணபத்திய வழிபாடுகளைத் தெரியச் செய்தார். சுப்பிரமணிய வைபவங்களை ஸ்காந்த புராணத்தில் கூறியதோடு இதர புராணங்களில் கூட கந்தன் உபாசனையின் சிறப்புகளை விளக்கினார். சூரிய உபாசனை குறித்து புராணங்களில் எழுதியதோடு ஆதித்திய புராணம் போன்ற உப புராணங்களிலும் சூரியனை வர்ணிக்கிறார்.

இவ்வாறு சனாதன தர்மத்தில் உள்ள ஷண் மதங்களான சூரியன் சுப்பிரமணியன் கணபதி சிவன் சக்தி விஷ்ணு என்ற வேத சம்பந்தமான இந்த ஆறு வித கடவுளர்களின் உபாசனை வழிமுறைகளை போதித்தார். இவ்விதம் தர்மத்திற்கு அடுத்ததாக உபாசனை வழிமுறைகளை முறைப்படுத்தினார்.

மூன்றாவது வேதாந்த விசாரணை. இது மிகப் பிரதானமானது. இதுவே மிக முக்கியமானது. வியாச பகவான் ஒவ்வொரு நூலிலும் தர்மத்தை போதித்து, பக்தி எனபப்டும் உபாசனையை விளக்கி, மூன்றாவதான ஞானத்தையும் விளக்குகிறார்.

வேதாந்தத்திலும் உபநிஷத்திலும் கூறப்படுவவற்றின் சரமனைத்தியும் ஞானம் என்கிறோம். இது ஆத்மா விசாரணை எனப்படும் புத்தி ஆராய்ச்சி மூலம் அறியப்பட வேண்டியது. ஞானத்தை முழுமையாக ஒவ்வொரு புராணத்திலும் அளிக்கிறார்.

சனாதன தர்மம் என்றால் என் மூன்றும் சேர்ந்ததே. தர்மம், உபாசனை, ஞானம் இம்மூன்றையும் போதித்தவர் வியாச பகவான்.

வியாசர் கூறிய சொற்களை பயிற்சி செய்து அனுஷ்டானம் செய்து கடைபிடித்து அதன் பின்னர் பிறருக்கு போதனை செய்பவரே ஆச்சாரியர். ஒவ்வொரு ஆச்சாரியாரின் கடமை என்னவென்றால் வியாச பகவானிடம் பக்தியோடு வியாசர் படைத்தளித்த நூல்களைத் தான் படித்தறிந்து அனுபவத்தில் பெற்று பின்னர் சீடர்களுக்கு போதிக்க வேண்டும். அப்படிப்பட்ட சனாதனமான வியாச சம்பிரதாயத்தை போதிப்பவரை வியாசருக்குச் சமமாக வழிபடுகிறோம்.

வியாசர் எழுதிய நூல்களை வழிபடுவது, வியாச தர்மத்தை போதிக்கும் குருவை வழிபடுவது இவ்விரண்டும் இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

இவ்விரண்டிற்கும் பிறகு செய்ய வேண்டியது ஆத்ம விசாரணை. ஆத்ம தத்துவம் என்ன? உண்மையில் பிரம்மம் என்றால் என்ன? இவ்விஷயம் குறித்து ஆராய வேண்டும். இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்று என்று இல்லாமல் ஒன்றோடு ஒன்று இணைத்தும் செய்யலாம்.

ஞானத்தின் மீது பார்வையை வைத்து, தர்மத்தை கடைப்பிடித்தபடி, உபாசனை செய்து வந்தால் கிராமமாக ஞானத்தை அடைந்த மோட்ச நிலையைப் பெறுவோம். இது வழிமுறை.

ஆனால் இம்மூன்றையும் போதிப்பவர் சாட்சாத் விஷ்ணுவுக்கு சமமானவர் என்று தத்தாத்ரேய மஹாத்மியம் பிரம்மாண்ட புராணத்தில் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட ஆச்சாரியரின் அவதாரமாக நாம் வியாசரை வணங்குகிறோம். வியாசர் ஒரு மேதை மட்டுமல்ல. விஷ்ணுவின் அம்ச சொரூபம் என்று புராணங்கள் கூறுகின்றன.

“வியாசர் விஷ்ணுரூபாய” என்பது ச்லோகம்

அபாந்தரதமர் என்பவர் ஒரு மகரிஷி. பிரம்மதேவர் தன்னிடம் பகவான் மூலம் அருளப்பட்ட வேதத்தை பூலோகத்தில் அந்தந்த காலத்திற்கேற்ப அளிப்பதற்காக நாராயணனை பிரார்த்தனை செய்தார். நாராயணன் தன் அம்சத்தோடு கூடிய அபாந்ததமரை பிரம்ம லோகத்தில் தோற்றுவித்தார் என்று மகாபாரதத்தில் ஒரு விவரம் உள்ளது.

இவ்விதமாக வியாசதேவர் ஒரு சிறந்த அமைப்பை சமைத்துக் கொடுத்தார். வியாச அவதாரம் இப்போதும் உள்ளது. திவ்ய பூமிகளில், சூட்சும பூமிகளில், பாரத தேசத்தின் சித்த பூமிகளில் இன்றும் உள்ளார். அவரை நினைத்தாலே நாம் உய்வடைவோம்.

இன்று முக்கியமாக செய்ய வேண்டியது வியாசபூஜை. இதனை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். வியாசரை அஷ்டோத்தர சத நாமங்களால் வழிபட்டு சோடச உபசார பூஜை செய்ய வேண்டும். வியாச தூதிகள் நிறைய உள்ளன. வ்யாசாய விஷ்ணு ரூபாய… போன்ற சுலோகங்கள் உள்ளன. அவற்றைப் படிக்க வேண்டும்.

அபாந்தரதமர் ஒவ்வொரு மன்வந்திரத்தில் ஒவ்வொரு வியாசராக அவதரித்துக் கொண்டிருப்பார் என்று புராணங்கள் மூலம் தெரிகிறது. எத்தனை பேர் வியாசராக வந்துள்ளனர்? இன்னும் எத்தனை பேர் வரப்போகிறார்கள்? என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

வியாசர் என்பது ஒரு மனிதரின் பெயர் அல்ல. அது ஒரு பதவியின் பெயர். இப்போதைய மன்வந்திரத்தில் கிருஷ்ண துவைபாயனர் வியாசராக உள்ளார். அடுத்த மன்வந்திரம் வரும்போது வேறொருவர் வியாசராக அவருவார். அகஸ்தியர் கூட வியாசராவார் என்று கூறப்படுகிறது. அபாந்தரதமருடைய தேஜஸ் அந்தந்த ரிஷிகளிடம் பிரவேசித்து அதன் மூலம் வேதங்களை பரப்புவார். அதனால் நாம் வழிபடுவது உண்மையில் அபாந்தரதமரே! ‘அந்தர தமஸ்’ என்றால் உள்ளிருக்கும் இருட்டு. அதாவது அக்ஞானம்.

உள்ளே இருக்கும் அஞ்ஞானம் என்ற இருட்டை விரட்டி ஞானம் என்ற பிரகாசத்தை ஒளியைவிட செய்பவரே குரு. அப்படிப்பட்ட வியாசரை நினைத்து தியானிக்க வேண்டும். அவர் வரலாற்றை நாம் இன்று தியானிக்கவேண்டும்.

பராசர மகரிஷியின் புதல்வர் வியாசர். பராசர மகரிஷியின் குரு சக்தி மகரிஷி. பராசரரின் தந்தை சக்தி மகரிஷி. எவ்வாறு வியாசருக்கு பராசரர் குருவும் தந்தையும் ஆனாரோ அதே போல் பராசரருக்கு சக்தி மகரிஷி தந்தையும் குருவும் ஆவார். சக்தியின் தந்தையும் குருவும் வசிஸ்டர். வசிஷ்டரின் தந்தையும் குருவும் பிரம்மதேவர். பிரம்மதேவரைத் தோற்றுவித்தவர் நாராயணன். நாராயணன் என்றாலும் சிவன் என்றாலும் ஒரே தெய்வம். ஆதலால் சதாசிவ சபாரம்பாம் என்றும் நாராயண சபாரம்பாம் என்றும் கூறுகிறோம்.

வியாசர் கூட சுதந்திரமாக ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கவில்லை. சானாதனமாக, பரம்பரையாக இருக்கும் சித்தாந்தத்தை, இருக்கும் ஒரே சத்தியத்தை… அவர் எடுத்துரைத்தார். யார் உண்மையான ஆச்சாரியார் என்றால் எது சாதனமாக, பரம்பரையாக இருக்கும் சாதியமோ… அதை அளிப்பவர் சிறந்த ஆச்சாரியாரே தவிர புதிய நூல், புதிய மனிதர், புதிய போதனை போன்றவற்றின் பின்னால் சென்றால் அது நம்மை உய்வடையச் செய்யாது என்பதை அறிய வேண்டும்.

வியாசருக்கும் நமஸ்காரம் செய்கிறோம் என்றால்… குருபரம்பரை வியாசரிடம் இருந்து தொடங்கவில்லை. பரமாத்மாவிடம் இருந்து பிரம்ம தேவருக்கும் பிரம்ம தேவரிடம் இருந்து வசிஷ்டருக்கும் தொடர்ந்தது. வசிஷ்டர் ரிஷிகள் அனைவருக்கும் பிரதிநிதியாக இருப்பவர்.

வசிஷ்டரிடம் இருந்து வந்த குருபரம்பரையில் வந்தவர்தான் வியாசர்

இங்கு வரை சனாதன தர்மத்தின் அனைத்து சம்பிரதாயத்தில் இருப்பவர்களும் இதே முறையை கடைபிடிப்பர். இதன்பிறகு துவைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் குருபரம்பரை மாற்றம் பெறுகிறது. வியாசருக்குப் பிறகு அவரவர் சம்பிரதாயம் மாறுகிறது. சிலர் யமுனாச்சாரியார், சிலர் மத்வாச்சாரியார், சிலர் ஆதிசங்கரர் என்று குரு பரம்பரை மாற்றம் பெறுகிறது. மூன்றும் நமக்கு சம்மதமே!

சனாதன தர்மத்தில் வெவ்வேறு ஸ்தாயிகளில் மூன்று பிரிவுகளின் உதவியும் ஒருவருக்கொருவர் அவசியம், அதனால் அனைத்து சம்பிரதாயத்தினரும் வியாசரையே குருவாக வணங்குவர்.

இன்று வியாசரை ஆராதனை செய்து விட்டு அதன் பிறகு அந்தந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் அவரவர் குருமார்களை பூஜை செய்வர். சம்பிரதாயமான வித்யையை எடுத்துக்கூறி வழிகாட்டும் குருவிடம் மேற்சொன்ன குருபரம்பரையைக் கண்டு வணங்க வேண்டும்.

நாராயணனிடம் இருந்து தொடங்கி வியாசர் வரையும் பின்னர் அந்தந்த குருபரம்பரை முழுவதையும், தன்னெதிரில் பிரத்தியட்சமாகத் தென்படும் குருவிடம் கண்டு வழிபட வேண்டும். அதற்காகவே குருபூஜை.

உத்தமமான குருவானவர் முதலில் தான் வியாச பூஜை செய்துவிட்டு சீடர்களையும் செய்விப்பது வழக்கம். ஏனென்றால் இன்று இவர் குருவாக அமர்ந்து இருந்தாலும் இவரும் ஒரு குருவின் சீடர் தானே! இது தனிமனித வழிபாடு அல்ல என்பதை அறியவேண்டும். தனிமனித வழிபாடாக மாறி ஒவ்வொருவரும் தானே தெய்வம் என்று கூறினால் அது சனாதன தர்மத்தின் வழி அல்ல!

சனாதன தர்மத்தில் குருவை வழிபடுவது சிறந்த சம்பிரதாயம். ஞானமார்க்கத்தில் கூட குருபூஜை பற்றி உயர்வாக கூறப்படுகிறது. பரமாத்மாவிடம் எத்தனை பக்தி இருக்குமோ அதே பக்தி குருவிடமும் இருக்க வேண்டும். குரு அளிக்கும் மந்திரம், மந்திரத்தின் மூலம் கூறப்படும் தெய்வம், குரு… இம் மூன்றும் ஒரே ரூபம் என்ற உணர்வோடு வழிபடவேண்டும். குரு பக்தி இல்லாவிட்டால் குரு மந்திரம் பலிக்காது. இறையருளும் கிட்டாது. இறுதியில் ஞானம் கூட கிட்டாது.

குரு பக்தி ஆழமாக இருந்தால் சீடனுக்கு ஞானம் பெறும் அறிவுக் கூர்மை இல்லாவிட்டாலும், மந்திரத்தை பலிக்க செய்துகொள்ளும் திறமையோ தியானமோ இல்லாவிட்டாலும் தியானமும் மந்திர சித்தியும் தானே வரும். குருபக்திக்கு அத்தனை மகிமை உள்ளது.

ஒரு புராண கதை உண்டு

தோடகாச்சாரியாருக்கு சங்கராச்சாரியாரிடம் அபாரமான பக்தி, கௌரவம். ஆனால் கற்றுத்தந்த பாடம் எதுவும் தலையில் ஏறாது. சிலருக்கு பிறவியிலேயே மந்தம் இருக்கும். பூர்வஜென்ம விதிவசம். மீதி உள்ளவ சீடர்கள் நன்கு படித்தனர் ஆனால் இவர் குரு சிஷ்ரூஷயை விடாமல் சிறப்பாக அன்போடு செய்வார். மற்ற சீடர்களுக்கு இவர் மீது ஏளனம் அதிகமாக இருந்தது. குரு பாடம் கூறும் போது கிரி இன்னும் வரவில்லை என்றார். ஆச்சாரியாருக்கு கிரி என்ற பெயர். அவர் வந்ததும் பாடம் தொடங்கலாம் என்றார். அங்கிருந்த சீடர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அவனுக்கு பாடம் சொன்னாலும் தலைக்கு ஏறாது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சுவரும் அவனும் ஒன்று என்றனர்.

குருதேவர் அவற்றை கவனித்தார். அவர்களின் கர்ரவத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார். அப்போதுதான் துணிகளை உலர்த்த விட்டு திடீரென்று தொடக்கம் என்ற சந்தஸ்ஸில் அற்புதமான விதிதாகில… என்ற ஸ்லோகத்தில் வேதாந்த ரகசியம் அனைத்தையும் பாடினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மற்ற சீடர்கள் சாச்திர பாடத்தில் எதை அப்டிக்கின்றனரோ அவையாவற்றையும் அழகான ஸ்லோகமாக, ஆசுகவியாக பாடிக்கொண்டே வந்து குருநாதரைப் பணிந்து வணங்கினார்.

மற்ற சீடர்களின் கர்வம் ஒழிந்தது. குருபக்தியின் மகிமை தெரிந்தது.

குரு கடாக்ஷம் எத்தனை உயர்ந்தது என்றால் சாஸ்திரங்களை படிக்காவிட்டாலும் அவற்றின் மூலம் எந்த ஞானம் வர வேண்டுமோ அந்த ஞானத்தை சீடரிடம் ஒளிர செய்பவார் குரு. குருபக்தியும் சக்தி அது. ஒரு நூலை நாமே படித்து அறிவதற்கும் குருமுகமாக கேட்டு அறிவதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. குருமுகமாக கேட்டால் அதன் சாரம் கிடைக்கும். அது சக்தியோடு பணிபுரியும்… சித்தியாக மாறும். குரு என்பவர் ஞானத்திற்கும் நமக்கும் இடையில் பாலமாக இருப்பவர். அவர் மூலம் நமக்கு ஞானம் கிடைக்கிறது. ஞான சொரூபமாக, முழுமையான குரு பரம்பரையின் சொரூபமாக குருவை வணங்கவேண்டும்

இன்று எல்லா குருக்களையும் வணங்க வேண்டும், இந்துஸ்தானம் எனும் இந்த மகா ஞான சமுத்திரத்தின் ஆழம் அதிகம், இந்த பர்வதத்தின் அகலமும் உயரமும் மகா அதிகம்

இதன் ஒவ்வொரு துளியும் ஒரு குரு, அதன் ஒவ்வொரு கல்லும் ஒரு குரு

இந்த குருக்களின் குருவாக இருப்பவர் அந்த வியாசபெருமான், அவர் இல்லையேல் இங்கு எதுவுமில்லை வேதமில்லை, இதிகாசமில்லை, புராணமில்லை, ஆலயமில்லை வழிபாடு சாஸ்திரம் என எதுவுமில்லை

ஏன் அவ்வளவு சிரமபட்டு இதையெல்லாம் வகுத்தார் வியாசர்

அவர் மக்கள்மேல் கொண்ட அன்பு அப்படி, பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே மானிடர் நலமொடும் நலல் தர்மத்தோடு வாழவும் அவர் விரும்பினார், மானிட சாதிமேல் கொண்ட தனிபெரும் பாசத்தால் இந்த மாபெரும் காரியத்தை செய்து மகா குரு என்றானார்

வாழ்வியல் தர்மம், பக்தி வழிபாடு, வேதாந்த விசாரணை என பல நல்ல அம்சங்களை கலந்து, ரிஷிகள் மட்டுமே உணர்ந்த வேதங்களின் சாரை அதில் நன்றாக ஊறவைத்து , எலல தரப்பு மக்களும் ஞானத்துடனும் அறிவுடனும் நடந்து வாழ்வின் பொருளை அடையவும், சமூகம் சமூகமாய் இயங்கவும், உலகம் அமைதியில் இறைவனை அடைந்து உய்யவும் சனாதான தர்மம் எனும் தர்மத்தை நிறுவிய அந்த மகா குருவுக்கு நன்றி சொல்லி வழிபட வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை

ஆலயங்களிலும் வீடுகளிலும் அவரை நினைந்து என்னென்ன பக்தி நூல்கள் உண்டோ அதையெல்லாம் அவரை நினைந்து வைத்து விளக்கேற்றி பூதூவி தீபமிட்டு வணங்கி அவர் வகுத்த நூல்களில் எது புரியுமோ அதனில் நாலுவரி படித்தாவது அவருக்கு அஞ்சலி செலுத்துதல் வேண்டும்

““இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என இந்த தர்மத்தை நிறுவிய அவருக்கு மகத்தான அஞ்சலியும் வழிபாடும் செய்தல் மகா அவசியம்

உங்களுக்கு எந்த வழியில் அவரை வழிபட தெரியுமோ, இந்துவழிபாட்டின் எந்த வழி புரியுமோ எது வழக்கபட்டதோ அதனில் அவரை வணங்கலாம், காரணம் எல்லாம் அவர் காட்டிய வழி, அந்த ஞான சுடர் ஏற்றிய ஒளி

சனாதான தர்மத்தை இங்கே மிக பெரிய அளவில் நிறுவி காலமெல்லாம் அது இந்துஸ்தானை ஆளவும் இந்துஸ்தானிகள் இந்துக்களாக வாழவும் எவ்வளவோ மகான்களும் ரிஷிகளும் காலம் காலமாக வந்து வழிகாட்டவும் பெரும்பணி செய்த அந்த வியாசருக்கு உலகின் எல்லா மாந்தர், எல்லா குருக்கள் சார்பாகவும் நன்றிகள்

அவரின்றி இல்லை இந்த சனாதான தர்மம், அது இன்றி இல்லை இந்த உலகம்