ஸ்ரீம‌ன் நாராயணீயம்

கார்த்திகை மாதம் 28ம் தேதி குருவாயூரில் அரங்கேற்றப்பட்டது.

காலம் காலமாக ஒவ்வொரு காலத்திலும் அரும்பெரும் புனிதமான இந்து நூல்களை வழங்கிய இந்துமதம் 15, 16ம் நூற்றாண்டிலும் அற்புதமான நூல்களை, பக்தி வழிபாட்டு பாடல்களை, ஸ்லோகங்களை மக்களுக்கு கொடுத்தது.

அக்காலகட்டத்தில் தான் அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி, அருணகிரிநாதரின் அழியா நூல்கள், குமரகுருபரரின் மகா பெரிய பக்தி நூல்களெல்லாம் வந்தன‌.

அதே காலகட்டத்தில் கேரளத்தில் உருவான நூல்தான் “ஸ்ரீம‌ன் நாராயணீயம்”

கேரளம் பரசுராமரால் உருவாக்கபட்டு மாவலி சக்கரவர்த்தியால் சிறப்புற ஆளபட்டு விஷ்ணுவழிபாட்டுக்கு பெயர் பெற்ற பூமி.

அந்த பூமியில் இருந்து காலத்துக்கு ஏற்றபடி பக்தியும், பக்திநூல்களும், அழியா ஆலயங்களும் வந்துகொண்டே இருக்க பகவான் அருள்செய்வார், அந்த அருள் எல்லா காலத்திலும் யார் மூலமாவது வெளிபடும்.

அவர்கள் பக்திமிக்க ஓவியம், கலை, பாடல் , சிற்பம், ஸ்லோகம் என தந்துகொண்டே இருப்பார்கள், இந்த பிரபஞ்சம் அப்படித் தரவைக்கும்.

ஆதிசங்கரர் முதல் பலர் அங்கிருந்துதான் வந்து இந்துமதத்துக்கு அள்ளி அள்ளி கொடுத்தார்கள்.

அப்படி 16ம் நூற்றாண்டில் பகவனால் தேர்ந்துகொள்ளபட்ட ஒருவர் தான் மேல்பத்தூற் பட்டத்ரி. குருவாயூர் அருகிருக்கும் அந்த ஊரில் நம்பூதிரியாக பிறந்தவர் பட்டத்ரி.

அவரின் இயற்பெயர் அறிவாறில்லை, இளம்வயதிலேயே சமஸ்கிருதமும் தமிழும் மலையாளமும் கற்று எல்லா பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஸ்லோகமும் பாடும் ஆற்றல் பெற்றதால் அவர் பட்டத்ரி என்றானார்.

தாந்திரி என்பதுபோல பட்டத்ரி என்பது ஒரு பதவி அல்லது அடையாளம்.

இவரை பகவான் ஆட்கொண்ட விதம் ஆச்சரியமானது. யாரை எப்படி வளைக்கவேண்டும் என தெரிந்த அந்த பரம்பொருள், கண்ணன் அர்ஜூனனை வளைத்ததுபோல குரு மூலமாக இவரை பிடித்தது.

இவரின் குரு “அச்சுத பிஷாரடி” இவர்தான் பட்டத்ரிக்கு எல்லா கலையும் கற்றுகொடுத்தார், அவருக்கு வாதநோய் வந்தது.

குருமேல் அபாரபக்தி கொண்ட பட்டத்ரி முதிய வயதில் தன் குரு மிகப்பெரிய பாடுபடுவதை கண்டு மனம் நொந்தார், தன் குரு தன்னைபோல் ஆயிரம் பேரை உருவாக்குவார், அவரின் சக்தியும் அறிவும் பெரிது, அவர் சேவை வேண்டும் என விரும்பியவர் குருவுக்கு உபயோகம் பெரிதும் இல்லா தனக்கு அந்நோய் வரட்டும், குரு பல மாணவர்களை உருவாக்கட்டும், குருவுக்காக தான் அழிதல் நல்லது எனும் பெரும் தியாகத்தினை செய்ய முன்வந்தார்.

பகவானிடம் வேண்டத் தொடங்கினார். தன் குரு வாழட்டும், அவர் பலருக்கு எல்லாமும் சொல்லிகொடுத்து மதம் வாழவைக்கட்டும், அந்த கொடியநோய் தனக்கு வரட்டும் என வேண்டிக்கொண்டார்.

அப்படியே நோய் இவருக்கு வந்து குரு பிழைத்து பணியாற்ற தொடங்கினார்.

குரு எழுந்த மகிழ்ச்சியில் நோயினை சுமக்க முயன்றாலும் பட்டத்ரியால் முடியவில்லை, அது வழமையான நோய் என்றால் இளம் உடல் சுமக்கும், பகவான் அனுப்பிய நோய் என்றால் விடுமா?

நோயின் தீவிரம் அதிகமானது, நோய் கொடுத்த பகவானே ஒரு வழியும் கொடுத்தார்.

துஞ்சத்தெழுதச்சன் எனும் வேதம் அறிந்தவன் இவருக்கு பிரச்னமிட்டு பார்த்தான், சோழி உருட்டி பார்த்ததில் குருவாயூருக்கு சென்று வேண்டச் சொன்னார்.

முடிந்தும் முடியாமலும் திருவதிகைக்கு கடும் வயிற்றுவலியோடு சென்ற அப்பர்சுவாமிகளைப் போல குருவாயூர் சன்னதிக்கு வந்து பணிந்தார் பட்டத்ரி.

அப்போது “மச்சம் தொட்டு நாவில் வை” என்றொரு குரல் கேட்டது.

மற்றவர்க்கு மீனை உண் என அர்த்தமாகும் அச்சொல் விஷ்ணுவினை நொடிதவறாது வணங்கிய அவருக்கு புரிந்தது.

மச்ச அவதாரத்தினை தன் நாவால் பாடச் சொல்கின்றார் என உணர்ந்த பட்டத்ரி, குருவாயூர் குளத்திலே மூழ்கி எழுந்து, அங்கேயே தங்கி எழுத ஆரம்பித்தார்.

குருவாயூரப்பன் சன்னிதியில் 100 நாட்கள், ஒரு நாளுக்கு ஒரு தசகம் (10 சுலோகங்களுக்குக் குறையாமல் கொண்டது) என்ற கணக்கில், 1036 சுலோகங்கள் இயற்றினார்.

இப்படி எழுந்ததுதான் “ஸ்ரீமன் நாராயணீயம்”, உண்மையில் இது “ஸ்ரீமத் பாகவத” புராணத்தின் மிகச்சுருங்கிய வடிவம்.

ஒவ்வொரு ஸ்லோகம் முடியும் போதும், “குருவாயூரப்பா நான் எழுதுவது உண்மையா?” என புராண சம்பவத்தை அவர் உறுதிபடுத்த கேட்பதும் , “ஆம், நடந்ததை எழுதுகின்றாய்” என குருவாயூரப்பன் பதில் சொல்வதுமாக எழுதினார்.

ஒவ்வொரு பத்து ஸ்லோக முடிவில் ஆண்டாள் சொல்வது போல தன் நிலை சொல்லி தனக்கு நோய்குணமாகவும் வேண்டிக்கொண்டார்.

அவரின் நோய் தீர்ந்ததும் அங்கே அந்நூல் அரங்கேற்றப்பட்டது, குருவாயூர் சன்னதியில் அது முழுக்க பாடப்பட்டது.

அது பாடப்பட ஒவ்வொருவரும் மனம் உருகினார்கள், அழுதார்கள், கதறினார்கள். பகவானின் பெருமையும் அந்த தலத்தின் மகிமையும் அந்த ஸ்லோகங்களில் அப்படி சொல்லப்பட்டிருந்தன‌.

தமிழகத்தில் மணிவாசகரின் திருவாசகம் போல அது அவ்வளவு உருக்கமானது.

குருவாயூர் ஆலயத்தின் சக்திவாய்ந்த கொடையாக அது கொண்டாடப்பட்டது, எல்லாரும் எல்லா மொழியிலும் மொழிபெயர்க்கவும் எல்லா இந்துக்களின் வீட்டிலும் அது இருக்கவேண்டும் எல்லா இந்துக்களும் அதை பாராயணம் செய்யவேன்டும் என உளப்பூர்வமாக முடிவானது.

“ஸ்ரீமத் பாகவதம்” எனும் மகா பெரிய புராணத்தை காலத்துக்கு ஏற்றபடி மூலம் மாறாமல் சுருக்கிக் கொடுத்த பெரும் ஞானசேவை அந்நூல்.

கார்த்திகை மாதம் 28ம் தேதி குருவாயூரில் அது அரங்கேற்றப்பட்டது, அது இந்நாள்.

அதனால் இந்நாள் “ஸ்ரீமன் நாராயணீயம்” அருளபட்ட நாளாக கொண்டாடப்படுகின்றது.

அந்நூல் யாரோ ஒரு பட்டத்ரிக்கு அற்புதம் நிகழ எழுதப்பட்டது அல்ல, அது எல்லா மக்களும் நலம் பெற பகவான் ஒரு பக்தன் மூலம் செய்த ஏற்பாடு.

தன் பக்தர்கள் தன்னை அறிந்து, தன் வழி அறிந்து, தன்னைப்பாடி நலம்பெற பகவான் செய்துகொண்ட ஏற்பாடு.

அங்கே அவர் வேண்டிக் கொள்வது அவருக்காக அல்ல, தன் நோய்க்காக அல்ல, தன் குருவுக்காக நோயினை ஏன் வாங்கினார்?

தன் குருவால் இந்த மதம் வாழட்டும் என வாங்கினார், அழிவது தான் என்றாலும் வாழ்வது நாராயணன் வழியாக இருக்கட்டும் என வாங்கினார்.

அந்தத் தியாகம்தான், அந்த அன்புதான் நாராயணனின் ஒவ்வொரு பக்தர் மேலும் அவருக்கு இருந்தது.

அவரின் மனதை புரிந்த பகவான் தன் பக்தனை உலகுக்கு காட்டி, தன் பக்தர்களை அவரின் வார்த்தை மூலமாக வணங்கச்செய்து நலம் அருள சித்தம் கொண்டு அந்நூலை உலகுக்கு அளித்தார்.

அபிராமி அந்தாதி என, சம்ஸ்க்ருத “சவுந்தர்ய லஹரி”யினை தமிழில் 16ம் நூற்றாண்டில் தந்த இந்துமதம், “கந்தபுராண”த்தை திருப்புகழ் என 16ம் நூற்றாண்டில் தந்த இதுமதம், ஸ்ரீமத் பாகவதத்தை “ஸ்ரீமன் நாராயணீயம்” எனத் தந்தது.

இன்று அது அருளப்பட்ட நாள்.

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் அது , ஒவ்வொரு இந்துவும் பாராயணம் செய்ய வேண்டிய நூல் அது.

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் என எல்லா பாக்கியமும் கிடைக்கும்.

தினம் ஒரு ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஓராயிரம் சிக்கல்கள் தீரும்.

இன்று கார்த்திகை 28, இன்று அந்நூலின் ஒரு ஸ்லோகத்தையாவது வாசிப்பது நல்லது.

குருவாயூரப்பனை மனதால் வேண்டி, உங்கள் கோரிக்கையினை சொல்லி அந்நூலின் சில ஸ்லோகங்களை சொன்னால் குறையெல்லாம் தீரும், நலமெல்லாம் ஓடிவரும்.

குருவாயூரப்பனும் உங்களை ஒருநாள் தன்வசம் இழுத்து அணைத்து அருள்வான்.

இந்த நாராயணீயத்தின் சாயல்தான் கண்ணதாசன் பாடலாக, விஸ்வநாதன் இசையில் “அமர ஜீவிதம் சுவாமி…..” என வந்தது.

எப்போது கேட்டாலும் “கிருஷ்ணா…” என அழவைக்கும் பாடல் அது..

அப்பாடலே அப்படி என்றால் ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட நாராயணீயம் எப்படி இருக்கும்? அதனால் அதனை படித்து பகவானில் கரைந்துபோதல் பக்தி அனுபவம்.

மார்கழி தொடங்கும் முன்பாக இன்று நாராயணீயத்தை படித்து தொடங்குதல் நன்று, அது இந்துக்கள் கடமை.

காஞ்சி மகாபெரியவர் தவறாமல் சொன்ன போதனைகளில் இந்த நாராயணீய பாராயணம் செய்தலும் ஒன்று.

இந்துக்களின் தெய்வமெல்லாம் சக்திவாய்ந்தவை, அவை ஒவ்வொரு பக்தனையும் ஒவ்வொரு வடிவில் ஆட்கொண்டு கோடி மக்களுக்கான வழியினை தன் ஆலயத்தில் திறக்கின்றது.

பாலதேவராயனுக்கு வயிற்றுவலி தீர கந்த சஷ்டி கவசம் கொடுத்து மக்கள் நோய் தீர்த்த அம்மதம், பட்டத்ரி மூலம் நாராயணீயம் அருளி மக்கள் நோய் தீர வழிசெய்தது.

அந்த தெய்வங்கள் அவ்வளவு கருணையானவை, காலம் காலமாக தன் மக்களை காக்கும் பெரும் கடப்பாடு கொண்டவை, தலைமுறைகள் மாறினாலும் அவை மாறுவதில்லை. அந்த கருணையும் அன்பும் மாறுவதே இல்லை.

வியாசரின் காலத்துக்கு பின், அதாவது பன்னெடும் காலத்துக்கு முன் வந்த அந்த நூலின் சாரம் சுமார் 400 வருடத்துக்கு முன்பு மீண்டும் இம்மக்களுக்கு அப்படியே கொடுக்கப் பட்டதென்றால் இந்துமதத்தின் சக்தி என்ன என்பதும், எப்படி யுகம் யுகமாக அது தொடரும் என்பதும் தெரிய வருகின்றது.

இவ்வளவு சக்திவாய்ந்த மதமா இந்துமதம்? இவ்வளவுக்கு காலம் காலமாக தன் பக்தர்களை தன் மக்களை ஒவ்வொரு இடத்திலும் சந்திக்கும் மதமா இந்துமதம் எனும் ஞான‌கர்வம் ஒவ்வொரு இந்துவுக்கும் வரும் நாள் இது.

இந்த உலகில் எந்த கொம்பனுக்கும் இல்லா பாரம்பரியம் எங்களுக்கு உண்டு, எந்த இனத்திலும் இல்லா அளவு யுகம் யுகமாக தெய்வம் வந்து காவல் இருக்கும் பெருமை எங்களுக்கு உண்டு, இதோ சாட்சி என ஒவ்வொரு இந்துவும் ஞானச்செறுக்குடன் நாராயணீயத்தினை பாராயணம் செய்யும் நாள் இது.