ஸ்ரீரங்கத்து தேவதை
இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற வெகு சில பெண்கள் உண்டு. அமெரிக்காவின் கமலா ஹாரீஸ் உள்ளிட்ட வெகு சிலரே அந்த இடத்தில் உண்டு, அப்படி சில அரசியல் பெண்களுக்குத் தனி செல்வாக்கு உலகில் உண்டு.
அந்த வரிசையில் முதன் முதலில் ஒரு தமிழச்சி இடம் பிடித்திருக்கின்றார். உலகம் அவரை உற்று கவனித்து பல விஷயங்களில் பாராட்டிக் கொண்டிருக்கின்றது.
அவர் திருச்சி தமிழச்சி, பின் வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதராபாத்திலுமாக வசித்து, பள்ளி நடத்தியபொழுது சுஷ்மாவின் பார்வையில்பட்டு தேசிய பணிக்கு வருகின்றார். சுஷ்மாவின் அனுபவம், அவர் தனக்கு மிகச் சரியான வாரிசாக இருப்பார் என்பதைச் சொல்லிற்று.
காலம் அதை உண்மை எனவும் காட்டிற்று, நாட்டுபற்றாளர் நம்பிக்கை எதுவும் பொய்த்ததில்லை.
நிர்மலா சீதாராமன்!
உலகில் விரல்விட்டு எண்ணும் மிக உயர்ந்த வரிசை பெண்களில் ஒருவர், இன்று இந்திய நிதியமைச்சர்.
அவர் முதலில் வர்த்தகத்துறை இணை அமைச்சராகத்தான் பதவியேற்றார், அதில் அவர் செய்த மிக நுணுக்கமான சீர்திருத்தமே இந்திய ஜவுளித்துறைக்கு அஸ்திவாரமான நூல் சந்தையினை சீனப் பிடியில் இருந்து விடுவித்தது.
அவர் செய்த சீர்திருத்தங்கள் அன்றே சீன இறக்குமதிக்கு கடிவாளமிட்டு இந்திய உற்பத்திக்கு முன்னுரிமை பெற வழிசெய்தது.
அவரின் திறமையினை கண்டு மிக முக்கியத்துவமான ராணுவ அமைச்சர் பதவியினை மோடி கொடுத்திருந்தார். மகா சிரமமான பணியும் அதுவே.
உலகில் ஆயுத தொழில், கச்சா எண்ணெய், தங்கம் எல்லாம் விட சக்திவாய்ந்தது. அள்ள அள்ளக் குறையா பணம் அது, கொட்டிக் கொடுக்க கம்பெனிகள் குவிந்து நிற்கும் துறை அது. அதில் பணத்துக்கு அப்பாற்பட்டு நிற்க தனி குணம் வேண்டும், நிர்மலா அதில் வென்றார்.
ராணுவ அமைச்சர் ஒரு நாட்டில் ஆயுதம் கொள்முதல் செய்யும்பொழுது ஏகப்பட்ட அரசியல் இம்சைகள் நடக்கும், சர்வதேச கம்பெனிகள் இந்தியாவில் இருக்கும் தங்கள் அல்லக்கை கட்சிகள் மூலமாகப் பல இடைஞ்சல்களைக் கொடுக்கும், அதையும் தாண்ட வேண்டும்.
நிர்மலா காலத்தில் அதை அவர் திறம்படச் செய்தார், அவரின் அதி உச்ச சாதனை அப்பொழுது ரஷ்யாவிடம் எஸ்400 சாதனத்துக்கு கையெழுத்திட சென்றது, அமெரிக்க மிரட்டல், இதர சிக்கல்களைச் சமாளித்து அந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக நிர்மலா கையொப்பமிட்டபொழுது உலகமே அவரைக் கூர்ந்து கவனித்தது.
இன்று சில சர்ச்சைக்கு உள்ளானாலும் அன்று எஸ்400 அதி உயர் சாதனமாக்க கருதபட்டது.
சில பத்திரிக்கைகள் அன்றே அவரை இரண்டாம் இந்திரா காந்தி என எழுதின, தமிழக பத்திரிகைகளில் அது வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டு கூடுதலாக 2018ல் நிர்மலாவின் கார் தாக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரு தேசியவாதி தாக்கப்பட்டால் அவர் நாட்டுக்கு நல்லது செய்கின்றார் எனப் பொருள், இந்திரா அப்படித்தான் முன்பு தாக்கப்பட்டிருந்தார்.
ரபேல் விமானத்தின் சர்ச்சைகளைத் தாண்டி, ஊழல் இல்லை என நிரூபித்து அவைகளை இந்தியா பெற முழுக் காரணமாக இருந்தார் நிர்மலா, அது மிகப்பெரும் சாதனை.
அவர் காலத்தில் ராணுவம் முழு பலம் பெற்றது, ஒரு கட்டத்தில் புல்வாமா தாக்குதல் நடக்க, அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலாவின் கடும் நடவடிக்கையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானை தாக்கின. எத்தனையோ முறை முன்பு அடிவாங்கிய இந்தியா, நிர்மலா தலைமையில் திருப்பி அடித்தபொழுது உலகமே கைத்தட்டியது.
நிர்மலா சீதாராமன் பாதுகாப்புதுறையில் செய்த சீர்திருத்தமே இப்பொழுது சீன நெருக்கடியில் தேசத்தை வலுவாகக் காத்துக் கொண்டிருக்கின்றது.
நிர்மலா பதவிக்கு வந்த நாளிலிருந்து இலங்கை கடற்படை அடக்கி வாசித்தது என்பது இன்னொரு விஷயம்.
முதல் ஆட்டத்தில் தேசத்தை பலமான ராணுவபாதைக்கு இழுத்து சென்ற நிர்மலா, அடுத்த ஆட்டத்தில் பொருளாதாரத்துறை அமைச்சரானார்.
ஒரு தமிழ்ப்பெண் தொடர்ந்து அமைச்சராக, அதுவும் மகா முக்கிய அமைச்சராக பதவியேற்றது அதுதான் முதல்முறை.
பொருளாதாரத்தில் பலத்த சீர்திருத்தம் கொண்டுவந்தார், பற்பல விஷயங்களில் அவர் செய்த மாறுதல்கள் நல்ல பலனைக் கொடுத்திருந்தது.
ஆனால் எதிர்பாரா விதமாக உலகமே அதிரும் வண்ணம் கொரோனா தாக்கி அமெரிக்கா போன்ற நாடுகளே திணறியபொழுது, இந்தியப் பொருளாதாரத்தினை தாங்கி நிற்கின்றார்.
அதுவரை நிர்மலா என்ன கிழித்தார் என்றவர்கள் அவசரகால நிதியாக கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடியினை அவர் அறிவித்தபொழுது வாய்மூடி நின்றார்கள்.
அந்த 20 லட்சம் கோடியில்தான் இந்தியா கொரோனா காலத்திலும் பொருளாதாரத்தை உயிரோடு வைத்திருக்கின்றது.
அந்நேரம் மோடி விவசாயிகளுக்கு அறிவித்த 19 ஆயிரம் கோடி நலத்திட்டமும் நிர்மலாவின் மிகச் சிறந்த நிர்வாகத்தில் ஒன்று.
சீனாவும், அமெரிக்காவும், ஜப்பானும், தென்கொரியாவுமே தடுமாறி நிற்கும்பொழுது இந்திய பொருளாதாரம் தாக்குபிடித்து நிற்கும் அதிசயம் நிர்மலாவால் நடந்து கொண்டிருக்கின்றது.
வங்கிகளை இணைத்தது, வாராக்கடன்களை மீட்க வழிவகை செய்தது என நிர்மலா செய்து கொண்டிருக்கும் சாதனைகள் ஏராளம்.
சிக்கலான நேரத்தில் ஆட்சிக்கு வந்த நிர்மலா, மிக அழகாக நாட்டை நடத்திச் செல்கின்றார்.
சீனா நெருக்கடிக்கு உள்ளான இந்நேரம் சீனாவினை விட்டு வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் உள்ளே இழுக்க அனைத்து காரியங்களையும் செய்து கொண்டிருகின்றார் நிர்மலா.
கொரோனாவில் இருந்து மீண்ட உலகத்தை உக்ரைன் யுத்தம் முடக்கினாலும் நிர்மலாவின் வழிகாட்டலில் தேசம் நிலைத்து நிற்கின்றது. தேசக் கப்பலை அழகாக நடத்தி செல்கின்றார் நிர்மலா
ஆசியாவில், குறிப்பாக தெற்காசியாவில் மிகப்பெரிய பொருளாதார முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. பர்மா, வங்கதேசம், தாய்லாந்து, இந்தோ சீன நாடுகளெல்லாம் பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றன.
இலங்கை மக்கள் புரட்சிக்கு உள்ளாகி மிகப்பெரிய இக்கட்டில் இருக்கின்றது.
பாகிஸ்தானும் மீளமுடியா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றது.
இன்று அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பலமுள்ள நாடுகள் இரண்டுதான், ஒன்று சீனா, இன்னொன்று இந்தியா.
சீனாவின் அடக்குமுறையான அரசின் தன்மையே வேறு, அங்கு தேர்தல் இல்லை, கம்யூனிச அரசின் பேச்சைத் தவிர வேறு எதையும் சொல்லும் ஊடகம் இல்லை, டிவிட்டர், முகநூல் என எதுவுமில்லை. பெரும் இரும்புத்திரை நாடு அது.
அங்கு 1975 முதல் பொருளாதார பாய்ச்சல் அதிகம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகம். அதைக் கொண்டு எப்படியோ சமாளிக்கின்றார்கள் என்றாலும், முந்தைய ஆண்டை விட அவர்கள் பொருளாதாரம் சரிந்திருப்பது நிஜம்.
ஆனால் இந்தியா அப்படி அல்ல, அது ஜனநாயக நாடு. இங்கு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஓயாத இரைச்சலும், சத்தமும், குழப்பமும் உண்டு.
அந்நிலையிலும் மிக வலுவான பொருளாதாரத்தைக் கொண்டு ஆசியாவின் வலுவான நாடு என அது இன்று தனித்து நிற்க இந்திய நிதியமைச்சர் மிகப்பெரும் காரணம்.
கொரோனாவில் இருந்து தேசத்தை மீட்க அவர் அறிவித்த 19 லட்சம் கோடி நிதியில்தான், இப்பொழுதும் மாநில அரசுக்கு வட்டியில்லா கடன் என அவர் அறிவித்ததில்தான் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
மிகச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் அமர்ந்து தேசத்தை காத்திருக்கின்றார் நிர்மலா சீதாராமன்.
இன்று உலக நாடுகள் ஜெர்மனியினை நிமிர வைத்த ஏஞ்சலோ மார்கலுக்கு நிகராக நிர்மலா சீதாராமனை கொண்டாடுகின்றன.
அவரைத்தான் ஊறுகாய் மாமி, பாப்பாத்தி, லூஸ் ஜாக்கெட் என்றெல்லாம் திமுகவும் திராவிட தரப்புகளும் கரித்துக் கொட்டின.
இன்று அந்த பெண்மணியின் மிகச்சிறந்த பொருளாதார நடவடிக்கைதான் தேசத்தை தாங்கி நிற்கின்றது.
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் கிழித்துவிடுவோம் என்ற கும்பலெல்லாம் இப்பொழுது ஒருவேளை தமிழகம் தனிநாடாக இருந்தால் கூட இலங்கை போல் நாசமாகியிருப்போம் என உணர்ந்து கள்ளமவுனம் காக்கின்றன.
நிச்சயம் இலங்கை அளவு முக்கிய இடம் தமிழகத்துக்கு இல்லை, இலங்கையின் அமைவிடமும், வளமும் தமிழகத்தை விட அதிகம். ஆனால் அந்த இலங்கையே தடுமாறும்பொழுது தமிழகமெல்லாம் தனிநாடாய் இருந்திருந்தால் பெரும் சீரழிவினை சந்தித்திருக்கும்.
நிர்மலா முதலமைச்சரின் மகளோ, மருமகளோ அல்ல, அவர் குடும்பம் அரசியலில் இருந்ததுமில்லை. எப்படி இவ்வளவு பெரும் இடத்தை பெற்றார் நிர்மலா?
இன்று நிதியமைச்சராக அவரைத் தெரியும. ஆனால் சிவகாசி, தூத்துக்குடி என பல இடங்களில் களப்பணி செய்து நாடு முழுக்க ஒரு பரதேசியாய் அலைந்து தேசத்தை முழுக்க படித்துத்தான் அவர் அந்த இடத்துக்கு வந்தார் என்பது பலருக்கு தெரியாது.
தேசத்தின் மகத்தான தலைவராக அறியப்படுகின்றார் நிர்மலா. நிச்சயம் அந்த அறிவான தைரியமான தமிழச்சியின் சேவை அளப்பறியது.
கை நிறைய வளையலும், வகை வகையான உடையும், முகம் நிறைய ஒப்பனையுமாக பெண் எம்பிக்கள் (தமிழக எம்பிக்களும்) வரும் பாராளுமன்றத்தில் நூல் சேலையும், ஒப்பனையற்ற முகமுமாக, வயலுக்கு வேலைக்குச் செல்லும் பாமர பெண்போல் வரும் அந்த நிர்மலாவின் எளிமை அளப்பறியது.
எல்லா கேள்விக்கும் எல்லா பதிலையும் நுனியில் வைத்திருக்கும் அந்த துல்லியம் அளப்பறியது.
புயல் காலம் போன்ற காலங்களில் தமிழ்நாட்டுக்கு அவர் ஓடிவந்து ஆற்றிய சேவைக்குத்தான் அவர் மேல் தாக்குதல் நடந்தது. எனினும் அவர் பின்வாங்கினார் இல்லை, அந்த தைரியம் வாழ்த்துக்குரியது.
நிர்மலா பாதுகாப்பு அமைச்சராக இருந்தபொழுது சென்னை ஆவடியும், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும் பெரும் வேலை வாய்ப்புகளை பெற்றன, அதை மறுக்க முடியாது.
தேசிய அமைச்சராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு தன்னால் முடிந்த சேவையினை செய்து கொண்டே இருந்தார்.
ராணுவத்தைக் காத்த மாதரசி இப்பொழுது தாய் போல் இந்திய பொருளாதாரத்தையும் காத்துக் கொண்டிருக்கின்றார்.
ஒரு விஷயம் அவரின் எதிரிகளும் ஒப்புகொள்ள கூடியது, அது அவரின் நேர்மை.
தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகா சக்திவாய்ந்த பதவியின் அமைச்சராக இருந்தும் ஒரு துளி தங்கம் கூட அவர் அணிந்தவரில்லை.
வித விதமான கார்களில் வந்து வகை வகையான சொத்துக்களை அவரும் வளைத்ததில்லை. அவர் கட்சிக்காரர்களும் வளைத்ததில்லை.
அவர் கண்ணசைத்தால் எத்தனையோ பிரம்மாண்ட கம்பெனிகளின் பங்குகள் அவர் காலடிக்கு வந்திருக்கும், திருப்பதி பெருமாளை விட கோடிக்கணக்கான தங்கம் அவர்முன் குவிந்திருக்கும்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி நாட்டுப்பற்று எனும் ஒரே ஒரு நோக்கில் உழைத்துக் கொண்டிருக்கின்றார்.
அவரின் குடும்பத்தாரை எங்காவது காணமுடியுமா? அரசியல் அழிச்சாட்டியத்திலோ இல்லை வேறு விவகாரங்களிலோ அவர்கள் தென்பட்டார்களா? இல்லை.
நிர்மலா இந்தியாவினை காத்து நிற்கும் சக்தி, பராசக்தியின் வடிவம்.
இரண்டாம் இந்திரா என்றும், இந்தியாவின் ஏஞ்சலா மார்கோல் என்றும், இந்தியாவின் கோல்டா மேயர் என்றும் உலகெல்லாம் புகழாரம் சூட்டப்படும் அந்த காவல் தேவதைக்கு இன்று பிறந்த நாள்.
தமிழரின் தனிபெரும் பெருமையாக உயர்ந்து நிற்கும் அந்த தாரகைக்கு இன்று பிறந்த நாள்.
ஒரு விழாவில் தேசத்துக்காய் குடும்ப உறுப்பினர்களை இழந்த தாய்மார்களின் காலில் விழுந்து வணங்கினார் நிர்மலா.. அப்படி தேசம் இப்பொழுது அவர் காலில் விழுந்து வாழ்த்துக்களை சொல்கின்றது.
தமிழக பெண்கள் யாரை முன்னுதாரணமாகக் கொண்டு தேசியத்தில் கலந்து இந்நாட்டையும் மாநிலத்தையும் வளர்க்க உறுதி பூண வேண்டும் என்றால் அதில் நிர்மலாவுக்கும் இடம் உண்டு.
அவர் பிறந்தது சாதாரண குடும்பமே, அவரின் கல்வியும், தேசப்பற்றும், நேர்மையும் அவரை இந்த இடத்துக்கு கொண்டு சென்றது.
அவரின் பணிவும் எளிமையும் அசாத்தியமானது. சமீபத்தில் உலகின் மிக முக்கிய நாட்டின் சக்திவாய்ந்த நிதியமைச்சரான அவர் பெண் திருமணம் மிக மிக எளிதாக எளிமையாக நடந்தபோது ஆச்சரியப்படாதவர் யாரும் இருக்க முடியாது.
தமிழிசை அக்காவினை உயர்த்தியது போல் தேசிய கட்சியே இப்பெண்ணையும் உயர்த்தியது, திராவிட கட்சிகளில் குடும்ப தலைவன், தலைவனின் அடிப்பொடி தவிர எந்த வீட்டு பெண்களும் டெல்லிக்கு போக முடியாது. போனாலும் உருப்பட முடியாது.
தமிழக பெண்கள் அரசியலில் சாதிக்க தேசிய கட்சியும் ஜனநாயக கட்சியுமான பாஜக ஒன்றே சரியான தேர்வு என்பது தமிழிசை, நிர்மலா விஷயத்தில் உறுதியாயிற்று.
பாராளுமன்றத்தில் திமுக காட்டும் பொய்முகங்களை கிழித்துப் போடுவதில் தனி முத்திரை பதிப்பவர் நிர்மலா அம்மையார்.
அந்த “ஸ்ரீரங்கத்து தேவதை” தரணியில் தொடர்ந்து மின்னி பாரதப் பெருமையினை உயர்த்த ஸ்ரீரங்கத்து நாதன் அருள் புரியட்டும்.
பாரத கண்டத்தின் எல்லா தெய்வங்களும், முன்னோர்களின் ஆத்மாவும், ரிஷிகளின். ஞானமுனிகளின் அரூப வடிவங்களும் அவர்களை வாழ்த்தட்டும்.
ஔவையாரும், மங்கம்மாளும் கலந்து வந்த அந்த ஞானப்பிறப்பு. இன்னும் பல பெருமைகளை தேசத்துக்கு பெற்று தந்து காத்து நிற்கட்டும்.
வருங்காலத்தின் இந்திய பிரதமர் ஒரு தமிழ்ப்பெண் என உலகம் கூறும் கட்டியம் பலிக்கட்டும், நாடும் தமிழகமும் செழிக்கட்டும்.
அந்த “ஸ்ரீரங்கத்து தேவதை” இப்பொழுது தேசத்தை காத்துக் கொண்டிருக்கின்றது.
அவரின் துல்லியமான நிர்வாகத்தில்தான் தேசம் உலகின் ஐந்தாம் பொருளாதார வலுவுள்ள நாடு எனும் பெரும் இடத்துக்கு உயர்ந்து உலக சாதனை படைத்திருக்கின்றது.
ஒரு படத்தில் கண்ணதாசன் எழுதிய வரிகள் அப்படியே இக்காலத்தில் நிர்மலாவுக்கும் பொருந்தும்.
“எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளிவந்தது. அது எந்த கைகள் தந்த ஒளியோ”
ஆம், எல்லாம் அந்த “ஸ்ரீரங்கத்து தேவதை” தந்தது, அவர் இருக்குமிடம் நோக்கி தொழவேண்டியது நம் கடமையாகின்றது.
காலம் அந்த மகராசியினை காத்து வரட்டும், தெய்வம் எல்லா வளங்களையும் அவளுக்கு கொடுக்கட்டும், பாரததத்தின் முதல் தமிழராக அவர் பிரதமர் நாற்காலியினை ஒருநாள் ஏற்கட்டும்.
உலகின் ஆற்றல் மிகுந்த நிதியமைச்சர் என சர்வதேசம் ஒப்புக்கொண்ட அந்த தாரகைக்கு, வேலுநாச்சியார், தாராபாய் வழிவந்த தேசமங்கைக்கு ஸ்ரீரங்கத்து தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பிரார்த்திப்பதில் தேசம் பெருமையும் மகிழ்வும், நிம்மதியும் அடைகின்றது.