ஸ்ரீரங்கனும் ஜீயர்புரமும்…
தொன்மையான இந்துமத தெய்வங்களின் திருவிளையாடல் கொஞ்சமல்ல, பாரத கண்டம் முழுக்க அது இயல்பாய் இருந்தது, தங்களுக்கு பெரும் ஆலயம் கட்டி விடாமல் விழா எடுத்து பிராமாண்ட தேர்செய்து நாள் தோறும் சீர் செய்து படையல் செய்து கொண்டாடும் பக்தர்கள் மேல் அந்த தெய்வங்களுக்கு எப்போதுமே வாஞ்சை இருந்தது
அதனை காட்ட அடிக்கடி அவை திருவிளையாடலை நடத்துவதுண்டு, ஆனால் அந்த திருவிளையாடலை யார் உன்னதமான பக்தர்களோ, யார் எதுவுமற்ற நிலையிலும் யார் தான் ஒன்றுமே செய்யாத நிலையிலும், யார் மிகுந்த கீழான் நிலையில் இருந்தாலும் தன்னை பழிக்காமல் போற்றி வணங்கும் பக்தர்களை அவை தேடி வந்து அதிசயம் செய்வதுண்டு
தாங்கள் எப்போதும் உண்டு, எக்காலமும் தன் பக்தர்களுடன் தாங்கள் உண்டு என அவை அடிக்கடி நிரூபித்து செல்லும்
அது மதுரையில் திருவிளையாடலாய் உண்டு, குருவாயூரிலும் பல ஆலயங்களிலும் அதிசயமாய் உண்டு, அப்படியே ஸ்ரீ ரங்கத்திலும் அது உருக்கமான வரலாறாய் உண்டு
ஸ்ரீரங்கத்தில் ஏகபட்ட நாடகங்களை பகவான் நடத்தியிருந்தாலும் பங்குனிமாதம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபடும் அந்த நிகழ்வு, இந்த ஆண்டும் நேற்று கொண்டாடபட்டது
அன்று பகவான் ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி ஜீயர்புரம் எனும் கிராமம் சென்று அருள் பாலிப்பார், அங்கே அவருக்கு பழைய சோறும், மாவடுவும் கீரையும் படைக்கபடும்
ஸ்ரீரங்கத்தில் அக்கார அடிசில், நெய்பொங்கல் என ஏற்கும் பெருமாளுக்கு அங்கு பழையசோறும் கீரையும் படைக்கபட்டுவதும், அதுவும் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி கையால் படைக்கபடுவதும் உருக்கமான பக்திவரலாற்றை கொண்டது
இந்துமதம் சாதிகொடுமை மதம் , பார்பானிய தீண்டாமை மதம் என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் மிக கொடிய பொய்கள், அம்மதம் எல்லா சாதியினரையும் அரவணைத்தது, ஏன் துலக்க நாச்சியார் என ஆப்கானிய பெண்ணையே ஏற்றுகொண்டு கோவிலில் இடமளித்தது
அப்படியான இந்துமதத்தின் தெய்வம்தான் பங்குனி திருவாதிரையில் பழையசோற்றை ஒரு முடிதிருத்தும் தொழிலாளி கையாலும் பெற்று எல்லோரும் தனக்கு சமம் என்பதை சொல்கின்றது
ஏன் ஜீயர்புரம் செல்கின்றார் ஸ்ரீரங்நாதன்
முற்காலத்தில் அங்கோர் கிழவி இருந்தாள் , அவளுக்கு இரண்டே உறவு ஒன்று ஸ்ரீரங்க ரங்கன், இன்னொருவன் தன் பேரன்
அவன் முடிதிருத்தும் தொழிலை செய்துவந்தான்
அந்த கிழவியும் அவனும் ரங்கநாதனின் பக்தர்கள், அவனை தவிர ஏதும் அறியாதவர்கள், தன் பேரனுக்கு ரங்கன் பெயரையே இட்டு “ரங்கா..ரங்கா” என வாய்நிறைய அழைத்துவந்தாள் கிழவி
அவளிடம் வறுமை ஒன்றேதான் சொத்து, இதனால் அவளிடம் மனமிருந்த அளவு பகவானுக்கு அள்ளிகொடுக்க சக்தியில்லை, அவளை கோவிலுக்கு அழைத்து செல்லவும் யாருமில்லை
அவளுக்கோர் பெரும் ஆசை இருந்தது, பெரும் செலவில் ஸ்ரீரங்க ஆலயத்தில் பகவானுக்கு நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் உணவளிக்கவேண்டும் என்பது அது
வாழ்வில் மனமிருப்போர்க்கு பொருளிருப்பதில்லை என்பது விதி, அவளும் அதற்கு விலக்கு அல்ல
ஆனால் அப்படி காலம் வரும், ஏதோ பிறப்பில் அந்த கோவிலில் அறுசுவை நைவேத்தியம் வைப்பேன் என எண்ணிகொள்வாள்
எந்நாளும் அவளிடம் ஒரு வழக்கம் இருந்தது, தன் வீட்டின் பழைய சோற்றை ஒரு பிடி ரங்கனுக்கு எடுத்து வைத்துவிட்டே உண்பாள், அவளிடம் இருந்தது அதுதான்
பழைய சோற்றை பகவானுக்கு படைக்க கூடாது என்பது ஐதீகம், பக்தி என்பது ஐதீகம் சாஸ்திரம் கடந்தது, அவள் பக்தியின் உச்சத்தில் அதை யாருக்கும் தெரியாமல் செய்தாள்
ஒரு நாவித குலத்து பெண்மணியின் இந்த செயலை யாரும் அறியவில்லை, ஆனால் பகவான் அறிந்தார், அவள் பக்தியினை உலகறிய செய்ய ஒரு நாடகம் நடத்தினார்
அன்று வழமைபோல சவரதொழிலுக்கு கிளம்பினான் பேரன், விரைவில் வந்துவிட சொன்னவள் அவனுக்கு கீரை சமைத்து வைப்பதாக சொன்னாள், அவனும் கேட்டுகொண்டு கிளம்பினான்
சென்றவன் தொழிலை முடித்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்ப எண்ணினான், அன்று அந்த காவரி அவனை இழுத்து கொண்டு சென்றது, அவன் அலறி மூழ்கியதை யாரும் அறியவில்லை
சென்றவன் தொலைதூரத்தில் அதே காவேரியால் கரையில் ஒதுக்கபட்டான் , இனி அவன் திரும்ப ஒரு நாளாகும்
கிழவி அது அறியாமல் சமைத்து வைத்து காத்திருந்தாள், பழையசோறும் மாவடுவும் கீரையும் வைத்தவள், மறக்காமல் பகவானுக்கும் எடுத்து தனியே வைத்து வணங்கிகொண்டாள்
நேரமாகி கொண்டிருந்ததே தவிர பேரனை காணவில்லை
நேரமாகியும் அவன் வராததை கண்டு பதறியவள் அவன் சவரம் செய்யும் இடத்துக்கே சென்றாள் அவனை காணாவில்லை
“ரங்கா ரங்கா” என ஊரெல்லாம் தேடியவள் வீட்டுக்கு வந்தபோது நிம்மதி கொண்டாள் அங்கே பேரன் ஒன்றுமே அறியாதவன் போல் அமர்ந்திருந்தான்
நிம்மதி சிரிப்பு சிரித்த கிழவியிடம் “நான் இங்கிருக்க ரங்கா ரங்கா என ஊரெல்லாம் அலைகின்றாயா” என்றான், அவன் கையினை பிடித்து அழுதவள், உள்ளே அழைத்து சென்று அவனுக்கு உணவு படைத்தாள்
அவனும் வழமைபோல் உண்டான், பின் கொஞ்சம் படுத்து கொண்டான், “பாட்டி கொஞ்சம் கால்பிடித்து விடுகின்றாயா வலி” என்றான்
கிழவியும் அவன் மேல் கொண்ட அன்பால் அதனை செய்தாள், அவன் ஒன்றுமே அறியாதவன் போல அவளுடன் அளவாளாவினான், பின் அவளையும் உண்ண செய்தான்
இருவரும் அன்று வழமைபோல் அன்பை பரிமாரி கொன்டார்கள், கிழவியோடு மாலை ஊரெல்லாம் சுற்றிவந்து அவளுக்கு பொருட்களெல்லாம் வாங்கி தந்தான் பேரன்
கிழவிக்கு மகிழ்ச்சி பொங்கிற்று, இரவும் நெருங்கிற்று கிழவி புதுசோறு பொங்கி அவனுக்கு உணவிட்டு பின் தாம்பூலம் மடித்து கொடுத்தாள்
அதை மென்றபடியே கேட்டன் பேரன், “உனக்கு ஏதும் பெரிய ஆசை உண்டா?”
கிழவி சொன்னாள் “ஒருநாள் ரங்கனை முழுக்க அருகிருந்து பார்த்து அவனுக்கு படையலிட வேண்டும், அதை தவிர என்ன ஆசை உண்டு, ஆனால் அதெல்லாம் நடக்குமா?” என்றவள் வேலையினை பார்க்க தொடங்கினாள்
பேரன் ஒன்றும் சொல்லவில்லை
மறுநாள் அவன் சவரம் செய்ய செல்லவில்லை, பாட்டி இன்று நான் ஓய்வெடுக்கின்றேன் எனக்கு சமைத்து போடு , அசதி என்றான்
கிழவியும் கொஞ்சமும் தயங்காமல் அவனுக்கு வேண்டியன் வகை வகையாக படைத்து வைத்தாள், அவனும் குளித்து முடித்து வந்தான்
கிழவி வழக்கம்போல் பகவானுக்கு எடுத்து வைத்தபின் அவனை உண்ண சொன்னாள், அவன் உண்ண தயாராகும் நேரம் வாசலில் குரல் கேட்டது
“பாட்டி… பாட்டி… நான் வந்துவிட்டேன்”
கிழவிக்கு தூக்கிவாரி போட்டது, பேரன் இதோ சாப்பிட அமர்ந்திருக்கின்றான், அப்படியானால் வாசலில் நிற்பது யார்? என அதிர்ந்தவள் , “என்ன சொல்கின்றாய் யார் நீ?” என அதிர்ந்து கேட்டாள்
“நான் நேற்று ஆற்றில் விழுந்துவிட்டேன், அது என்னை தூரத்தில்தான் தள்ளியது, நான் திரும்பி வர ஒரு நாள் ஆகிவிட்டது, நீ என்னை தேடுவாய் அழுவாய் உன்ணாமல் ஏங்கி தவித்திருப்பாய் என அவசரமாய் வந்தேன்” என்றான்
கிழவிக்கு மயக்கமே வந்தது, அப்படியானால் இவன் என திரும்பி பார்த்தால் அவனை காணவில்லை
பகவானுக்கு படைக்கபட்டது மட்டும் காணாமல் போயிருந்தது, கிழவி அஞ்சி ஒடுங்கினாள் அப்போது ஒரு குரல் கேட்டது
“பெண்ணே அஞ்சாதே, நள் தோறும் நீ படைக்கும் பக்தி மிக்க பழைய சோற்றை ஏற்றுகொண்டே இருந்தேன், நீ உன் கையால் எனக்கு உணவூட்ட ஆசைபட்டாய் அல்லவா?
நானே அதனால் நேரில் வந்தேன், உன்னுடன் ஒருநாள் இருந்து உண்டது நானே”
கிழவி ரங்கா ரங்கா என அலறினாள், அவன் காணாமல் போன ஒருநாள் கிழவியோடு பேரனை கண்ட ஊரும் அதிர்ந்தது, வந்தது பகவானே என அறிந்து அவளின் பக்தி உலகறிந்ததாயிற்று
அதே நேரம் ஸ்ரீரங்கம் தலமை அர்ச்சகர்க்கு பங்குனி மாத திருவாதிரை அன்று பகவானுக்கு ஜீயர்புர பழைய சோறு என உத்தரவும் வந்தது
அன்றில் இருந்து பங்குனி மாதம் திருவாதிரை அன்று திருவரங்கத்தில் இருந்து பகவான் பல்லக்கு பவனியாக ஜீயர்புரம் வருவார், அங்கே நாவிதனுக்கு முதல்மரியாதை செய்யபடும், அவன் படைக்கும் பழையசோற்றை மாவடுவினை கீரையினை பகவான் ஏற்றுகொள்வார்
இந்த வைபவம் ஆண்டு தோறும் நடைபெறும் அப்படி பங்குனி திருவிழா நடக்கும் திருவரங்க கோவிலில் நேற்றும் நடந்தது
இந்துமதம் வைதீக மதம், சாதி கொடுமைமிக்க மதம் என்றால் இவையெல்லாம் என்றோ நிறுத்தபட்டிருக்கும், என்றோ மாற்றபட்டு இந்த பக்தியின் உச்சமான நிகழ்வே நிறுத்தபட்டிருக்கும்
ஆனால் இந்துமதம் சாதிகளை கடந்த மதம் என்பதால், எப்போதும் அவன் அருளை அனைவருக்கும் பெற்றுதர உருவான மதம் அதையே பின்பற்றும் மதம் என்பதால் காலமெல்லாம் நிலைத்துவிட்டது
இந்த திருவிளையாடல் மூலம் உலகுக்கு பகவான் சொல்லு விஷயம் இதுதான், ஒருவன் யாராக இருந்தாலும் எக்குலமாக எத்தொழில் செய்பவனாக இருந்தாலும் அவன் பக்தி உன்னதமானது என்றால் காலமெல்லாம் அவன் பெயரும் பக்தியும் நிலைக்கும்
தெய்வம் தன்னை மனதால் கொண்டாடுபவனை ஆலயம் தாண்டி அவன் வீட்டுக்கே சென்று அரவணைத்து ஏற்றுகொள்கின்றது
இந்துமதத்தில் எக்காலமும் சாதியோ குலமோ தொழிலோ உன்னதமான பக்திக்கு தடையாக இருந்ததே இல்லை என்பது
ஸ்ரீரங்க நாதன் எக்காலமும் உண்டு, ரங்கா என என யார் உளமாற அழைத்தாலும் அவன் ஓடிவந்து உங்கள் பக்தியினை ஏற்று காலமெல்லாம் நிலைக்கும் அளவு பெரும் இடத்தில் உங்களை ஏற்றிவைப்பான்
அன்று ஜீயர்புரத்தில் பெரும் பணக்காரர்கள், தனவந்தர்கள், வேதம் பயின்றோர் என யார் யாரோ இருந்தார்கள், ஆனால் யார் இன்றுவரை நிலைத்தார் என்றால் அந்த கிழவிதான் பேசபடுகின்றாள்
உன்னதமான பக்திக்கு பகவான் கொடுத்த அங்கீகாரம் இது, பெரும் செல்வந்தரோ பண்ணையாரோ பொருள் கொண்டவரோ கல்விமானோ யாருக்கும் கிடைக்கா அப்பாக்கியம் ஒரு சவரதொழிலாளி வாழும் குடிசைக்கு கிடைத்தது
பக்தியின் மகிமை அது
உளமார்ந்த பக்தி இருக்குமிடமெல்லாம் நன் நான் இருப்பேன், உளமார என்னை அழைத்தால் ஓடிவருவேன் என அவன் சொல்லியபடி நேற்றும் அந்த வைபவம் நடந்தது
இன்று கிழவி இல்லை அந்த குடிசை இல்லை ஆனாலும் என்றோ ஒரு பக்தை செய்ததற்காக ஆண்டுதோறும் சென்று பழையசோறும் கீரையும் ஏற்று திரும்புகின்றது அந்த நன்றியுள்ள தெய்வம்
மனிதனும் அவன் வாழும் பூமியும் அவன் காரியமும் மாறகூடியது, ஆனால் தெய்வம் ஒருகாலும் மாறாதது, உண்மையான பக்திக்கு தெய்வம் கால காலத்துக்கும் கட்டுபடும் என்பதை நேற்றும் சொன்னது அந்த வைபவம்
நீங்கள் யாராகவும் இருங்கள், எங்கு வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் உங்கள் பக்தி உண்மையாக இருந்து மனபூர்வமாக நீங்கள் அவனை வணங்கினால், எப்போது நீங்கள் அவனை அழைத்தாலும் அவன் வருவான்
அப்படி அழைக்காவிட்டாலும் நீங்கள் துயரில் இருந்தால் மாபெரும் இன்னலில் இருந்தால் அவனே வந்து உங்கள் குறையினை தீர்ப்பான், அதை சொல்லியபடி ஒலித்து கொண்டிருக்கின்றது ஸ்ரீரங்கத்தின் ஆலயமணி
ஒன்றா இரன்டா இந்த இந்துமதத்தின் அதிசயங்கள், அவை ஏடுதோறும் எழுதினாலும் காலமெல்லாம் போதாது.