கிருஷ்ணார்பணம் – கோகுலாஷ்டமி
இந்த பூமி பிரபஞ்சத்தின் கட்டுபாட்டில் இயங்குவது, பூமியினை அந்த பிரபஞ்சம் இயக்குகின்றது, இந்த பிரபஞ்சம் பூமியின் எல்லா குரலுக்கும் செவி சாய்க்கின்றது
அன்று அந்த காலம் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது, தர்மம் நாராய் கிழிந்து கிடந்தது, பாம்பினை கண்ட பறவை குஞ்சாய் ஒடுங்கி கிடந்தது.
நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரம கூட்டம் மிதமிஞ்சி ஆடியது
கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். பெற்ற வரத்தை அதர்மத்தின் துணையாக்கி பூமியினையே உருட்டி விளையாடி கொண்டிருந்தார்கள்
சொந்த மருமகனை கொல்ல துணிந்த கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், அடங்கா சிசுபாலன், பெரும் ரவுடி ஜெராசந்தன் என தெரிந்த முகங்களே இப்படி என்றால் தெரியா முகம் எப்படி இருந்திருக்கும்?
இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது
பற்று, பாசம், அதிகாரம், அகங்காரம், பொறாமை, பேராசை என எல்லா மாயைகளிலும் சிக்கி அந்த பொல்லா கூட்டம் பூமியினை நரகமாக்கியது
அன்று பூமி கடலால் காற்றால் மட்டுமல்ல அதர்மத்தாலும் சூழபட்டிருந்தது
அந்த பூமி பிரபஞ்சத்திடம் கதறியது, அது பல்லாயிரம் கோடி மக்களை சுமந்து உணவூட்டும் வகையில் சக்தி கொண்டதுதான், மக்கள் நெருக்கமோ பெருக்கமோ அதற்கு சுமை அல்ல, ஆனால் மக்களின் பாவத்தின் சுமை பூமியினை அழுத்திற்று
அந்த கால ஷத்திரிய சமூகம் ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்தது, அடிதட்டு எளிய மக்களின் குரலின் வலி பிரபஞ்சத்தை ஆட்டி வைத்தது , எங்கும் அழுகையும் போரும் கண்ணீரும் அழுகையும் மிஞ்சி இருந்தது
பரசுராமர் அவதரித்து வேதங்களையும் அந்தணர்களையும் மட்டும் காத்தார், அடிதட்டு மக்களின் அழுகை அப்பொழுது இன்னும் அதிகரித்தது, குறிப்பாக ஆடுமாடு மேய்க்கும் யாதவர் வாழ்வும் உழவர் வாழ்வும் பெரும் இன்னலுக்குள்ளாயின
தர்மமும் இன்னும் பல நல்லோரும் கதறியபொழுதுதான், உலகில் அதர்மம் உச்சத்தில் இருந்தபொழுதுதான் அந்த அவதாரம் நிகழ்ந்தது
ஒன்று உழவர்களை காக்க பலராமனாகவும் இன்னொன்று யாதவர்களை காக்க கண்ணனாகவும் அவதரித்தது
யாருக்கும் தெரியாமல் ஆனால் தெரியவேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கிற்று
எல்லா அவதாரங்களும் ஜெனித்து வாழ்ந்து முடித்ததல்ல, நரசிம்ம அவதாரமெல்லாம் சில மணிகளே நின்றிருந்தது. ராமனும் கண்ணனுமே பால்யம் முதல் முதிர்வயது வரை மானிடராய் தெய்வ சக்தியில் வாழ்ந்து அதர்மத்தை ஒழித்து தர்மம் காத்து நின்றார்கள், அதில் கண்ணன் இன்னும் சிறப்பு, பிறக்கும்பொழுதே தன் மாய விளையாட்டை ஆரம்பித்தவன் அவன்
கிருஷ்ணா என்பது கறுப்பை குறிக்கும் சொல், இன்றும் ஆந்திராவின் கிருஷ்ணா நிதி அப்படித்தான் அழைக்கபடும், அந்த கருப்பு குழந்தையும் அன்று கிருஷ்ணன் ஆனது
அவன் வாழ்வினை படியுங்கள், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன் ஞானத்தில் மனம் உருகும், அவன் தத்துவத்தில் வாழ்வே புரியும், அவன் தந்திரத்தில் புன்னகை பெருகும்
கடைசியில் கைகூப்பி வணங்கி கதறி அழவும் தோன்றும், அப்படி ஒரு தெய்வீக அவதாரம் அவன்.
அவனின் ஒவ்வொரு அசைவும் ஞானம், ஒவ்வொரு அசைவும் தத்துவம், அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் தர்மம்.
யுகங்களை தாண்டி அவன் நிலைத்து நிற்க அதுதான் காரணம் அன்றைய வியாச முனி முதல் இன்றைய ஓப்பன் ஹைமர் , ஹாக்கின்ஸ் வரை அவனை படிக்கவும். அன்றைய வில்லிபுத்தூராழ்வார் முதல் இக்கால வாலி வரை அவனை கொண்டாடவும் அதுதான் காரணம்
பிறக்கும் பொழுதே சவால்கள் அதிகம், தப்பி பிழைத்தால் வாழவிடா அரக்க கூட்டம் பூத கூட்டம் ஒடி ஓடி துரத்தியது, பிஞ்சு வயதிலே அந்த அதர்ம கும்பலை ஒழிக்க தொடங்கினான் கண்ணன். அன்று ஆயர்பாடியில் தொடங்கிய அவனின் அதர்மத்துக்கு எதிரான போராட்டம் மஹாபாரத களத்தில்தான் முடிந்தது
அவனுக்கு சவால் அதிகம், பொறுப்பும் அதிகம், ஆனால் வாழ்வினை மிக ஆனந்தமாக விளையாட்டாக சிரித்த முகத்துடன் கடந்து சென்றவன் கண்ணன்
அவனுக்கும் வாழ்வெல்லாம் சோகமே, தாயிடம் வளரவில்லை உடன்பிறந்தார் யாருமில்லை. பலராமன் பலமும் கொஞ்ச்காலமே அர்ஜூனன் அவ்வப்போது வந்து போனான், மற்றபடி அவன் வாழ்வெல்லாம் அவன் தனிமையே
ராமருக்காவது லட்சுமணனும் அனுமனும் இருந்தார்கள்
கண்ணனுக்கு அப்படி யாருமில்லை, அவன் அதுபற்றி வருந்தவுமில்லை
கோபியர் சூழ்ந்தால் தடுக்கவுமில்லை, அவர்கள் இல்லா காலத்தில் ஏங்கியதுமில்லை
ஆம்,அதுதான் கண்ணன் வந்ததை அவன் விலக்கவுமில்லை, விலகியதை தேடவுமில்லை
கண்ணனின் யுகம் எப்படி தொடங்கிற்று?
அவன் காலம் வரை அடிவாங்கிய ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட அந்த ஆயர்பாடி கூட்டம் அவன் தலமையில் திருப்பி அடித்தது, அந்த இனத்துக்கே அப்பொழுதுதான் ஒரு மரியாதை வந்தது
விளையாட்டும் வேடிக்கையுமாக அம்மக்களை காத்து கொண்டே வந்தான், அவன் வளர வளர அதர்மம் மெல்ல மெல்ல அழிந்தது
பூதகி முதல் சகடாசுரன், காளிங்கன் வரை வளர வளர அழித்து கொண்டே வந்தான், வேடிக்கையும் விளையாட்டுமாக அதர்மத்தை அழித்து கொண்டிருந்த அவன் பிறப்பின் நோக்கம் தெரிந்தது தன் அவதார கடமையினை நிறைவேற்ற கிளம்பினான்
அவனின் முதல் குறி கம்சன், அதுவும் தாய்மாமன் கம்சன். பந்த பாசத்தை அறுத்து அந்த ஞானதெளிவில் கம்சனை அழித்து போட்டுவிட்டு தன் தாய் தந்தையினை விடுவித்துவிட்டு தாத்தாவிடம் ஆட்சியை கொடுத்து மறுபடியும் ஆயர்பாடிக்கு காவலானான்
ஆனால் ஒரு கம்சனா வந்தான்? ஓராயிரம் கம்சர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்
பல்வேறு தொந்தரவுகள் கொடுத்தார்கள், ஒரு கட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்காக துவாரகையை சொர்க்கத்திற்கு நிகராக உருவாக்கி, உலகிலே முதன் முதலாக அதுவரை ஒடுக்கபட்ட, விரட்டபட்ட, கடுமையாக புறக்கணிக்கப்ட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு நாடு கொடுத்து வாழச்செய்தான்.
அவன் போரிட்ட இடமெல்லாம் வெற்றி கிட்டின, அவன் சென்ற இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறின, தர்ம நீதிகள் கிடைக்காத இடங்களில் அவரே தர்மத்தினை ஏற்றி வைத்தான்.
ஒவ்வொரு அதர்மக்காரனுக்கும் ஒரு பலவீனம் இருந்தது, அந்த பலவீனம் யாருக்கும் தெரியாது எனவும், சிவனிடம் தாம் பெற்ற வரம் இன்னொருவர் அறியாதது எனவும் ஆட்டம் போட்ட அந்த கோஷ்டிகளின் பலவீனத்திலே அடித்து அழித்தான் கண்ணன்
ஒவ்வொருவரையும் அழிக்கவேண்டிய இடம் பார்த்து நேரம் பார்த்து வகைபார்த்து அவன் அழித்து கொண்டே வந்தான், நரகாசுரன் முதல் ஜெயத்ரதன் வரை அப்படித்தான் அழிந்தார்கள்
ஒவ்வொருவராக தேடி தேடி அழித்தாலும் அக்கிரம கூட்ட எண்ணிக்கை அதிகமாய் இருந்தது, கண்ணன் அவர்களையெல்லாம் மொத்தமாக கூட்டிவைத்து அடிக்க வழிதேடினான், அந்த அழகான திட்டத்துக்குத்தான் பாண்டவர்களை பயன்படுத்திகொண்டான்
அப்படியே தன் அண்ணன் பலராமன் துரியோதனனோடு சம்பந்தம் செய்யாமல் விலக்கி வைத்து தொடக்கத்திலே பலராமனை களத்தில் இருந்து அகற்றினான்
கண்ணனின் மிகசிறந்த ராஜதந்திரம் மகாபாரதம். அது துரியனுக்கும் பாண்டவருக்கும் நடந்த போர் என்றால் அறியாமை, மொத்த தர்மத்தையும் ஒரு பக்கமும் மொத்த அதர்மத்தை மறுபக்கமும் திரள வைத்து மொத்தமாக அவன் அதர்மத்தை நசுக்கி போட்ட நாடகம்.
சிந்தியுங்கள் பாண்டவருக்கே உரிய பங்கை கொடுக்க விரும்பா அயோக்கியன் மற்ற மக்களை சும்மாவா விட்டிருப்பான்? எவ்வளவு கொடும்பாடு பாடுபடுத்தியிருப்பான்
மகாபாரத போருக்கு கண்ணன் திட்டமிட்ட இடம்தான் மாபெரும் நுணுக்கம், இன்றுவரை சர்வதேச உளவுதுறைகளும், நிர்வாகவியலும், மேலாண்மையிலும் கை தட்டி ரசித்து பாடமாய் வைத்திருக்கும் அந்த இடம்
ஆம் துரியன் அழிக்கபட வேண்டும், ஆனால் இப்பொழுது கூடாது. தனக்கும் அவனுக்கும் யுத்தம் என தொடங்கினால் தன் எதிரியெல்லாம் அவன் பக்கம் சாய்வர்
விடவே கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக காய்நகர்த்தினான் கண்ணன்
இரு பாத்திரங்கள் அவனுக்கு கண்ணில் பட்டன, அவைகள்தான் பின்சக்தியாக அதை நடத்தி காட்டவும் முடியும் என கணக்கிட்டான்,
ஒருத்தி பாஞ்சாலி இன்னொருவன் துரியன்
பாஞ்சாலியின் சக்தி பற்றி அவனுக்கு தெரியும், பாண்டவர் பாசம் மிகுந்தவர்கள், தகுந்த பெண் இன்றி அவள் அழுது புலம்பாமல் சண்டைக்கு செல்லமாட்டார்கள். அவ்வளவு நடந்துமே கடைசிநேரம் கலங்கிய அர்ஜூனன் சும்மா சண்டைக்கு செல்வானா?
ஒரு விடாத பிடிவாதகாரியினையும் ஒரு மகா முரட்டு பொறாமை பிடிவாதகாரனையும் மோதவிட்டால் போதும் எல்லாம் தானாக நடக்கும் என்றுதான் அந்த திட்டத்தை கையில் எடுத்தான்
அதை செயல்படுத்த அப்பக்கம் சகுனியினையும் இப்பக்கம் அர்ஜூனனையும் அவனே இயக்கினான்,
பாரத போரின்பின்னணி பாஞ்சாலியும் துரியனும் என்றால் அதை களத்தில் நடத்தியது அர்ஜூனனும் சகுனியுமே.
தன் திட்டபடி துரியனை தூண்டிவிட காலம் பார்த்த கண்ணனுக்கு ஒரு இடத்தில் மயன் சிக்கினான், அதுவும் “அர்ஜூனன் கண்ணன் சொன்னபடி செய்” என மயனை அனுப்பிய இடமே கண்ணனின் ராஜதந்திர வாழ்வின் மிக சிறந்த இடம்.
மயனிடம் இந்திரபிரஸ்தம் எனும் அழகிய நகரை நிர்மானிக்க சொன்னான் கண்ணன், அந்த அழகிய நகரினை துரியன் பார்த்து பொறாமையால் கருகும் படி ராஜ்யசூய யாகத்துக்கும் ஏற்பாடு செய்தான்.
ராஜ்யசூய யாகமென்றால் எல்லா அரசர்களும் வரவேண்டும், நல்லோரும் பொல்லாரும் வரவேண்டும் என பொருள், அதுதான் கண்ணனின் திட்டம்
அங்கு வந்து அந்த அழகிய அரண்மனையினை கண்டு பொறாமையில் வெந்த துரியனுக்கு பாஞ்சாலியின் ஏளனம் இன்னும் கோபத்தை தூண்டியது
எல்லாம் கவனித்த கண்ணன் எதுவும் நடக்காதது போல் சிசுபாலனை மட்டும் கொன்று தான் யார் என்பதை எல்லா மன்னர்களும் கூடிய அந்த சபையில் நிரூபித்து எச்சரிக்கை செய்தான். அதுதான் கண்ணன் தெய்வ அவதாரம் என நிரூபித்த முதல் இடம்
திருந்துபவர்கள் திருந்துங்கள் என அவன் எச்சரித்த இடம் அது, புரியவேண்டியவருக்கு அது புரிந்தது. அழியவேண்டியவருக்கு அது தெரியவில்லை
சிசுபாலன் எனும் பெரும் அரக்கன் அழிந்த நிலையில் துரியனுக்கு இருந்த பலம் போனது, அடுத்து பீமனை வைத்தே ஜராசந்தனை கொன்றான் இரண்டாம் பலமும் போனது
அடுத்து பாஞ்சாலியும் துரியனும் சந்திக்க ஏதுவாக பாண்டவர் சூதாட்டம் ஆடும்பொழுது மறைந்து கொண்டான் கண்ணன், எல்லாம் முடிந்து பாஞ்சாலி கதறும் பொழுது அங்கே வந்தவன் அவளை காத்து நின்றான், ஒன்றும் அறியாதவன் போல் அடுத்த ஆட்டத்தை அவளை வைத்தே தொடங்கினான்
வனவாசம் முழுக்க அவர்களோடு சுற்றி திரிந்தான், சும்மாவா திரிந்தான்? அது பாண்டவருக்கு துரியனை எதிர்க்கும் மிகபெரும் பயிற்சியும் இன்னும் சில பலம்பெறும் காலமுமாக அதை மாற்றி காட்டினான்.
ஆம். வனவாச காலத்தில் பாண்டவர்களை கண்ணன் சும்மா இருக்கவிடவில்லை, தொலைதூரத்தில் சில கொடிய மன்னர்கள் இருந்தார்கள். பாண்டவரோடு இணைந்து அவர்களை அழித்தான், காரணம் நாளை சண்டை என வந்தால் அவர்கள் நிச்சயம் துரியோதனுக்கு உதவ வருவார்கள்.
இனம் இனத்தோடு சேருமல்லவா?
வனவாச காலத்திற்குள் பாண்டவர்களை போருக்கு தயார் படுத்தினான், நினைத்திருந்தால் துவாரகையிலே அவர்களை தங்க வைத்திருக்கலாம், வைக்கவில்லை
காரணம் நாடு நாடாக அலைந்தால் தான் நிறைய அரசுகளின் நட்பு கிடைக்கும் எனும் தந்திரம், அப்படியே கிடைத்தது, பல அரசர்கள் பாண்டவருக்கு துணைநின்றனர்.
அவனை கொல் இவனை கொல் என பீமனையும் அர்ஜூனனையும் கண்ணன் ஓயாமல் ஏவி கொண்டிருந்ததில் பெரும் பயிற்சி அவர்களுக்கு கிடைத்தது, ஆயுதங்கள் கிடைத்தன, வரங்கள் கிடைத்தன, பலரின் நட்பும் கிடைத்தது.
பெரும் போருக்கு பாண்டவர்களையும்,நண்பர்களையும், பாசுபதகனை போன்ற ஆயுதங்களையும் தயார் படுத்திவிட்டுத்தான் ஒன்றும் அறியாத அப்பாவியாக துரியோதனிடம் தூது சென்றான்.
நிச்சயம் துரியோதனன் ஒரு அங்குல நிலமும் கொடுக்கமாட்டான் என கண்ணனுக்கும் தெரியும்,
தெரிந்தும் ஏன் சென்றான் என்றால் கௌரவர் கூட்டணியில் குழப்பத்தினை ஏற்படுத்த, அதுதான் திட்டம்.
பாண்டவரும்,கௌரவரும் அப்படியே மோதிக்கொண்டால் 18 நொடிக்குள் பாண்டவர் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. துரியனின் கூட்டனி அப்படி பலமானது
அரை குண்டூசி கூட கையில் இருந்தாலும் கொல்லமுடியாத துரோணர், நினைத்த போது மட்டும் மரணம் பெரும் பீஷ்மர், உலகை அழிக்கும் விதுரர், இன்னும் வெல்ல முடியாத கர்ணன், கிருபர், நித்திய சஞ்சீவி அஸ்வத்தாமர் என மிக நீண்ட வரிசை அது.
அவர்களுக்குள்ளும் துரியன் மீது கோபமிருந்தது, ஆனால் குலப்பெருமைக்காக பாகுபலி கட்டப்பா போல கூட இருந்தார்கள்,எக்காலமும் துரியனை விட்டு கொடுக்கா மாவீரர்கள் அவர்கள்
தூது சென்ற கண்ணன் நிகழ்த்திய நாடகத்தில் விதுரர் வெளியேறினார், அஸ்வத்தாமன் மேல் துரியோதனனுக்கு சந்தேகம் ஏற்படுத்தினான் கண்ணன்
இதற்கு மேல் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் ஈகோ பிரச்சினை, விளைவு பலமிக்க கூட்டணி சிதறியது.
போதாக்குறைக்கு கர்ணனிடம் குந்தியை அனுப்பி அவனையும் காலம் பார்த்து குழப்பியாகிவிட்டது.
எதிரி கூட்டத்தை மனதளவில் குழப்பிவிட்டுத்தான் அவன் போரை தொடங்கினான், அதாவது பாண்டவர் 14 வருடமாய் தயாராகி வந்தனர், துரியன் பக்கம் அங்ககாரமும் அலட்சியுமே இருந்தது.
பாரத போரும் தொடங்கியது உறுதியாக சொல்லலாம் அது வரலாற்றின் முதன் முதல் உலகப்போர், எல்லா நாட்டு அரசும் பங்கெடுத்தன. ஒவ்வொரு அதர்மக்காரனாக தேடி தேடி அழிக்காமல் வாழ வேண்டிய நல்லவரெல்லாம் இப்பக்கமும் அழிய வேண்டிய அதர்ம கும்பலெல்லாம் துரியன் பக்கமாக நிற்க வைத்தான் கண்ணன்
எவ்வளவு அழகான திட்டம் அது, எவ்வளவு நுட்பமான தந்திரமது, ஆனால் எல்லாம் செய்துவிட்டு அப்பாவியாக தேரோட்டியாக வந்தான் கண்ணன்.
துரியனுக்கு தன் படைகளை கொடுத்து பாண்டவ படைகளை அழிக்க வழி செய்த அவன், தானே பாண்டவரோடு வந்து துரியனை ஒழிக்கவும் வந்து அமர்ந்தான் , இருபக்கமும் எப்படியும் அழியட்டும் எனும் ஒருவகையான தந்திரம் இது
பல்லாண்டுகள் கழித்து ஆசிரியரையும், உறவினரையும் கண்ட அர்ச்சுணன் தசை ஆடியது, உணர்ச்சியில் சண்டையிட மறுத்தான், அரசே வேண்டாமென்றான், அர்ச்சுணன் இல்லாவிட்டால் பாண்டவர் ஏது? யுத்தம் ஏது? தர்மம் நிலைப்பது ஏது?
மாபெரும் உபதேசம் கொடுத்தான் கண்ணன், தெளிந்தான் அர்ச்சுணன், அது அர்ச்சுணனுக்கு மட்டுமல்ல அல்ல மொத்த உலகிற்கு, அதுவே புனிதமான பகவத் கீதை.
அதுவரை தன் உடன் இருந்த அர்ஜூனனுக்கு அக்கீதையினை போதிக்கா கண்ணன் மிக சிறந்த இடத்தில் அதை சொன்னான், அதுவும் சண்டையினை தொடங்க என்பது ஒரு காரணம்,
போரில் அபிமன்யு கொல்லபட்ட பின்பும் , இளம் பஞ்சபாண்டவர் கொல்லபட்ட பின்பும் அர்ஜூனன் மிக தெளிவாக சண்டையிட அவனை தயார் படுத்தினான் என்பது சொல்லபடா காரணம்
அபிமன்யு கொல்லபடபோவது அவனுக்கு தெரியாமலா இருக்கும்? இவ்வளவுக்கும் அவன் தங்கை மகன் அவன், தாய்மாமனாக இருந்தும் தன் பற்றற்ற கர்ம கோலத்தில் சரியாக இருந்தான் கண்ணன்
18 நாள் பெரும்போரில் கண்ணனால் குழப்பபட்ட கௌரவர் படை கூட்டணி வீரர்கள் மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வந்தனர் அதுதான் பாண்டவருக்கு வாய்ப்பானது அவர்கள் பெரும் பலசாலிகள், வரம்பெற்றவர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருந்தது,
அதில் சரியாக இடம்பார்த்து அடிக்க சொன்னான் பாண்டவர்கள் அடித்தார்கள், நியாயம் வென்றது.
சாவை நான் சொன்னபொழுது அழைப்பேன் என நின்ற பீஷ்மரை படுக்கையில் கிடந்து அழை என அனுப்பிவைத்தான் கண்ணன், துரோணரா? ஆயுதம் இல்லாவிட்டால் நீ அவ்வளவுதானே, ஆயுதத்தை கீழே விழவைத்து துரோனரை அழித்தான்.
கர்ணனின் கவச குண்டலம் வாங்கி, குந்தியிடம் வரம் வாங்கி, பரசுராமனிடம் சாபம் வாங்க வைத்தவன் அவனே
கர்ணனின் பலமான வஜ்ராயுததை கடோத்கஜனை பலிகொடுத்து எடுத்தவனும், குந்தி மூலம் நாகாஸ்திரத்துக்கு கட்டு போட்டவனும் அவனே
கர்ணனுக்கு மட்டும் அவனிடத்தில் ஒரு பாசம் இருந்தது, அவன் நல்லவன் என்பதும் தன்னை போல தாய்பாசம் அறியாதவன் என்பதும் ஒரு அனுதாபத்தை கொடுத்தது, அதனாலே விஸ்வரூப தரிசனமும் நிம்மதியான மரணமும் கர்ணனுக்கு வாய்த்தது
அர்ஜூனன் என்னதான் கீதையினை பெற்றிருந்தாலும் எதிரிகள் உயிரெடுக்க அஞ்சினான், அவனின் முதல் பாதி ஆட்டம் உறவுகளை காயபடுத்துவதாய் மட்டும் இருந்தது
அபிமன்யு கொல்லபட்ட பின்பே அவனுக்கு ரத்தம் கொதித்து அந்த பேயாட்டம் ஆடி எதிரிகளை சரித்தான், அபிமன்யுவினை போராட விட்டதும் அவனை பலிகொடுத்து அர்ஜூனனை தூண்டிவிட்டதும் கண்ணனே
ஒரு கட்டத்தில் தன் இலக்கான துரியனை ஒருவரும் இல்லாமல் களத்துக்கு வரவைத்தபொழுது கண்ணன் வென்றிருந்தான்
கம்சனில் இருந்து கர்ணன் வரை ஒவ்வொருவராக கண்ணன் கொன்றது துரியனுக்காகவே. எல்லோரையும் இழந்தவனை இடம்பார்த்து அடிக்க சொல்லி கொன்றவனும் அவனே
கடைசியில் காந்தாரியின் சாபத்தை வாங்கி பாண்டவரை காத்ததும் கண்ணனே..
எல்லாம் முடிந்து கடைசி ஆட்டத்தை ஆட அஸ்வத்தாமன் வந்தபொழுது அவனையும் ஆடவிட்டான் கண்ணன்
அவன் நினைத்திருந்தால் இளம் பஞ்சபாண்டவரை காத்திருக்க முடியாதா? கடோத் ஜகனையும் அபிமன்யுவினையும் காத்திருக்க முடியாதா என்றால் முடியும்
ஆனால் ஏன் செய்யவிலை?
சகோதர பாசம் வலுவானது ஆனால் சகோதரர் பிள்ளைகளுக்குள் வரும் மோதல் கொடுமையானது. திருஷ்ட்ராசனும் பாண்டுவும் நன்றாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால் பிள்ளைகள்?
இதே நிலை பாண்டவருக்குள் வந்தால்?
இந்த கணக்குத்தான் பாண்டவரின் புதல்வர்களை அப்படியே விட்டு யுத்தத்தில் அழிந்தார்கள் என சொல்லவைத்தது
அவன் செய்த எல்லாவற்றிலும் ஒரு அர்த்தமும் நியாயமுமிருந்தது.
பிரமாஸ்திரம் அஸ்வத்தாமன் ஏவுவான் என கண்ணனுக்கு தெரியாதா? தெரியும் தெரிந்தும் ஏன் அனுமதித்தான்?
போர் முடிந்து துரியனின் படைகளில் இருந்து ஒருவன் எழும்பலாம், ஏன் பாண்டவர் பக்கம் இருந்த படைகளில் இருந்து கூட ஒருவன் புத்திமாறி திரியலாம்
தோல்வியின் வெறியும், வெற்றியின் மமதையும் மிகபெரும் விளைவுகளை கொடுக்கும், இதனால் எல்லோரும் மொத்தமாய் சாகட்டும் என அனுமதித்தான்
அவன் கணக்கு சரியாய் இருந்ததாலே 18 நாளுக்கு பின் போர் தொடரவில்லை இல்லை வெகுசில ஆண்டுகளில் அடுத்த பெரும் போர் தொடங்கியிருக்கும்.
கண்ணனின் கணக்கும் தொலைநோக்கும் அவன் நடத்தி காட்டிய போரும் அவன் அழித்த அதர்மமும் அது மீள் எழாதவாறு அவன் செய்துவிட்ட ஏற்பாடும் மகா உன்னதமானது
எல்லோரையும் அடக்கி இனி யுத்தமே இல்லை என்ற நிலையில் அர்ஜூனனின் வாரிசை மன்னராக்கி தர்மம் தளைக்க வழிசெய்துவிட்டு ஓய்ந்தான் கண்ணன்
நினைத்து பார்க்க பார்க்க கண்ணனின் புன்னனைக்கு பின்னால் இருக்கும் அந்த வியூகமும் அவன் அதை செயல்படுத்திய முறையும் புல்லரிக்க வைக்கும் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் காட்சிகள்.
கடவுளாக நம்புபவர்களுக்கு அவன் கடவுள், நம்பாதவர்கள் அவன் நிச்சயம் பெரும் ராஜதந்திரி ,ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன், பெரும் அறிவாளி, ஞானவான் என்பதை மட்டும் மறுக்கவே முடியாது.
பெரும் ராஜ தந்திரமும், மேலாண்மை நுட்பத்தினையும் உலகிற்கு கொடுத்தது கிருஷ்ணன்.
அந்த கீதை இருட்டில் ஒளியாகும், வெயிலுக்கு நிழலாலுகும், மழைக்கு குடையாகும், துன்பத்தில் ஆறுதலாகும், இன்பத்தில் பயம் கொடுக்கும் மிரட்டலாகும்
ஒரு மனிதன் எந்த மனநிலையில் அதை படிப்பானோ அந்த நிலைக்கு அவனுக்கு கீதை அவ்வளவு அழகாக ஆறுதலும் ஞானமும் சொல்லும்
இதனாலே உலகின் ஒப்பற்ற நூலென அது கொண்டாடபடுகின்றது. அந்நூலால் ஞானிகளை, வீரர்களை, யோகிகளை, நல்ல வேலைக்காரனை, நல்ல அரசனை என யாரை உருவாக்க முடியுமோ அவர்களை சரியாக உருவாக்க முடியும், அப்படி ஒரு நூல் இதுவரை கீதையினை தவிர எந்நூலுக்கும் சாத்தியமில்லை
மதிநுட்பத்திலும், ராஜ தந்திரத்திலும் உலகில் முத்திரை பதித்தவர்கள் உண்டு, பாரதவரலாற்றை நன்கு கற்ற சாணக்கியனே அதில் முதலிடம்
கண்ணனின் மகாபாரத மாய வித்தைகளை சுருக்கமாக சொன்னால், அதற்கு இன்னொரு பெயர்தான் அரசியலும்,உளவுதுறையும்
உலகம் இந்தியாவின் பொக்கிஷம் என கொண்டாடும் “அர்த்த சாஸ்திரம்” மகாபாரத சுருக்கமே
பழம் காலத்தினை விடுங்கள், தற்போது உலகின் அதிசிறந்த தளபதிகளுக்கும் உளவுதுறையினருக்கும் முன்னோடியாக வழிகாட்டுதலாக இருப்பது கண்ணணே.
கண்ணனின் வாழ்வும், மாய வேலைகளும் குறிப்பிடுவது ஒன்றே ஒன்றுதான் “தீயவர்களின் கூடாரம் மிக பலமானதாகத்தான் இருக்கும், ஆனால் அந்த பலத்தில் ஒரு சிறிய பலவீனம் இருக்கும், தர்மத்தினை நிலை நாட்டுவதற்காக அது இறைவனால் அனுமதிக்கபட்டது, அந்த பலவீனத்தினை அறிந்து நிதானமாய் இறைவன் துணையோடு போரிடுபவனுக்கு என்றுமே தோல்வி இல்லை, அதர்மம் நிச்சயம் வீழும்”
பாரதததினை விடுங்கள், நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு சோதனை காலங்கள் இருக்கும், சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கம்சனையோ,காளிங்கனையோ அல்லது துரியோதனன் போல அறவே நியாயம் இல்லாத 200% கொடுமையாளரின் சித்திரவதைகள நீங்கள் அனுபவத்திருக்கலாம்.
அப்பொழுது தர்மத்தினை காக்கும் பொருட்டு , உங்களை பாதுகாத்து கைதூக்க நிச்சயம் ஒருவர் வந்திருப்பார் அல்லது வருவார்.
அப்படி உதவ வருபவர்களின் உருவத்தில் எல்லாம் எக்காலமும் பகவான் கிருஷ்ணன் புன்னகை தவிழ வாழ்ந்து கொண்டே இருப்பான்
கண்ணன் உண்டு என நம்புவர்களுக்கு அவன் உண்டு எக்காலமும் உண்டு, இல்லை என சொல்பவர்களும் அவன் ராஜதந்திரத்தை வியக்காமல் இருக்க முடியாது, அது கதை என்றால் கூட அப்படி ஒரு கதையினை நிச்சயம் மானிடரால் எழுதவே முடியாது
கண்ணன் ஒரு ஞானாசிரியன், அவனே கர்ம யோகி, அவனே பக்தியிலும் பக்திமான்
அனுதினமும் சிவவழிபாடு செய்து பக்திமார்க்கத்திலும், கர்மத்தை மட்டும் செய்து கர்ம மார்க்கத்திலும், ஞானத்தை போதித்து ஞானமார்க்கத்திலும் உயர நின்றவன் அவன்
அதனாலே கீதை எனும் பெரும் ஞான நூலை கொடுக்கும் தகுதியும் தன்மையும் அவனிடம் இருந்தது
கண்ணனின் வாழ்வினை கவனியுங்கள் மிகபெரும் தத்துவம் ஒளிந்திருக்கும், அவன் எதையும் ஆசையோடு பற்றியவனுமல்ல , எதையும் முழுமையாக பிடித்தவனுமல்ல
ஆயர்பாடியிலும் அதே சிரிப்பு, கம்சனை கொன்றாலும் சிரிப்பு, ஜெராசந்தனுக்கு அஞ்சி ஓடினாலும் சிரிப்பு, துவாராகாவிலும் சிரிப்பு. எல்லா சிரமங்களையும் வலியினையும் அழுகையினையும் அவன் சிரித்தே கடந்தான்
ஆம், விதிக்கபட்டதை சிரித்து கொண்டு கடக்காமல் என்ன செய்யமுடியும் எனும் தத்துவம் அது
கம்சன் சாகும் பொழுது இருந்த அந்த மனநிலையே அவனுக்கு அபிமன்யு சாகும்பொழுதும் இருந்தது,
அவனுக்கு எல்லாமும் ஒன்றே.
ஆம் அவன் யுத்தம் செய்த அல்லது யுத்தம் நடத்திய இடமெல்லாம் பெரும்பாலும் அவன் உறவுகளே, அதர்மக்காரன் உறவுகளாய் இருந்தாலும் தயக்கமின்றி அழி என்பதில்தான் கண்ணனின் தத்துவமே இருந்தது.
இந்த உலகம் ஒரு மாயை, இங்கு நடப்பதெல்லாம் ஏற்கனவே முடிவுசெய்யபட்டது, இதில் வருந்தி ஒன்றும் ஆகபோவதில்லை என்பதில் சரியாக இருந்தான் , நேரம் வரும்பொழுது அதர்மம் அழியும் என்பதில் அவன் முழு நம்பிக்கையோடிருந்தான், அதை செயல்படுத்தியும் காட்டினான்
தெளிந்த ஞானமும் நல்புத்தியுடையோரும் தன்னை பணிவர், தன்னை பணிவோரை எக்காலலும் காக்க வேண்டும் என்பதில் கருத்தாயிருந்தான்.
அப்படி இன்றுவரை காக்கின்றான், ஆயர்பாடியில் மட்டுமல்ல இன்றுவரை எங்கெல்லாம் அதர்மம் ஓங்கி தர்மம் நசுங்கி அபயகுரல் எழுகின்றதோ அங்கெல்லாம் கண்ணன் ஏதோ ஒரு உருவில் வந்து காத்து கொண்டே இருக்கின்றான்
இப்பொழுது மோடி வடிவில் பாரத்தை காத்து கொண்டிருக்கின்றான் கண்ணன்
அவன் வாழ்வில் அவன் நிம்மதியாக இருந்ததாக ஒரு இடத்தை கூட காட்டமுடியாது, அவன் ஒன்று அதர்மத்துடன் போராடி கொண்டிருப்பான் அல்லது அதை வீழ்த்த திட்டமிட்டு கொண்டிருப்பான், காலமெல்லாம் மிகபெரும் போராட்டத்தை புன்னகைத்தபடி கடந்தவன் அவன்
அவனுக்கும் சோகம் உண்டு, அழுகை உண்டு, கண்ணீர் உண்டு, அவமானம் உண்டு ஆனால் அதையெல்லாம் கடந்து வந்தான். அவனிடம் படிக்க வேண்டிய பாடம் ஏராளம் உண்டு
அவனைபடித்தால் அவதாரமே அவ்வளவு சிரமம், அழிவு, கண்ணீர், பிரிவு, அவமானம் எல்லாம் பட்டது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் எனும் தெளிவு வரும்.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுத்ததை யாருடனோ அனுதினமும் நடத்தி கொண்டே இருக்கின்றோம் , எதிரியே இல்லாதவன் கூட தன்னுடன் ஒரு யுத்தம் நடத்தி கொண்டுதான் இருக்கின்றான்
கண்ணன் நடத்திய யுத்தத்திலே இழப்புகள் உண்டு , கண்ணனே பின்வாங்கிய காலமும் உண்டு என்பதை மனதில் வைத்தால் நாம் நடத்து போரில் இழக்கும் இழப்புகள் மனதை பாதிக்காது, பின் வாங்கினாலும் ஒரு நம்பிக்கை இருக்கும்.
உறவுகளுக்குள் வரும் பகையும் நம்மை பாதிக்காது கண்ணனே அப்படித்தான் செய்தான் எனும் ஆறுதல் வரும்
வாழ்வின் சில நேரம் சிலர் மேல் ஆண்டாண்டு காலம் வைத்த நம்பிக்கைகள் பொய்த்து அவர்களின் உண்மைமுகம் வெளிபடும்பொழுது மிகபெரும் சோகம் தாக்கும், மனம் தடுமாறும்
இவர்களா இப்படியா என மனம் கலங்கி நிற்கும், அர்ஜூனன் அப்படித்தான் கலங்கி நின்றான் கீதையும் கண்ணனும் அவனை தேற்றினார்கள். அபிமன்யு கொல்லபடும் பொழுதுதான் அயோக்கிய கூட்டத்தின் உண்மை முகமே அவனுக்கு தெரிந்தது அப்பொழுதும் கண்ணனே துணையிருந்தான்
ஆம் சில முகங்களின் உண்மை நிறம் தெரியும் பொழுது கண்ணனை நினையுங்கள் அவன் கீதையினை நினையுங்கள் மிகபெரும் தெளிவும் நம்பிக்கையும் வரும், சோகமோ வருத்தமோ உங்களை தாக்காத நிலைவரும்
அர்ஜூனன் போல அவனை சரண்டைந்தால் காப்பான் எனும் நம்பிக்கை வரும், பாஞ்சாலியினை காத்தது போல் நம்மை காப்பான் எனும் அந்த உற்சாகம் வரும்
அவன் பசுக்களின் காவல்காரன் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆன்மாவுக்கும் தர்மத்துக்கும் உரிமைக்கும் அவனே காவலன், அவனை வணங்க வணங்க எல்லா வளமும் பெருகும் எனும் நம்பிக்கை வரும்
ஆயர்பாடி மக்களை வாழவைத்தது போல் நம்மையும் வாழவைப்பான் எனும் திடம் வரும்
எல்லாம் இழந்தாலும் பாரதம் படித்தால் நம்பிக்கை வரும், எல்லாம் இருந்தாலும் பாரதம் படித்தால் அடக்கம் வரும்.
அவன் மாடுமேய்க்கும்பொழுது அதை அழகாக செய்தான், ஆயர்பாடி வாழ்வை குறையின்றி வாழ்ந்தான், அவன் நாடோடியாக அலைந்தபொழுதும் ஆனந்தமாய் இருந்தான், அரசனாய் வாழும்பொழுதும் அமைதியாய் வாழ்ந்தான்
எங்கு எந்த நிலையோ அதை ஏற்றுகொண்டு வாழ்ந்தால் சிக்கலே இல்லை, மனம்போல் வாழ்வு என்பதை என்றோ சொல்லிகொடுத்தவன் அவன், இல்லாததை நினைந்து அழாமல் இருக்கும் வாழ்வில் ஆனந்தம்கண்டவன் அவன், அவன் வாழ்வின் போதனை அது
வருவதை பெற்றுகொண்டான் சென்றதை நினைத்து அவன் கலங்கவில்லை
அக்காலத்தில் பெண்குழந்தைகள் விளையாட கண்ணன் உருவ பொம்மையினைத்தான் கொடுப்பார்கள், அக்குழந்தைகள் முழுக்க கண்களின் கதைகேட்டுத்தான் வளரும்
அதனால் தங்களை யசோதையாகவும், கோபியராகவும் கருதி கொள்வார்கள். கணவனை கண்ணன் போல் கொண்டாடுவார்கள், குழந்தைகளை கண்ணன் போல் வளர்ப்பார்கள்
ஞானாசிரியன், வீரன், தந்திரசாலி, தர்மவான், பெண்களை மதித்து காப்பவன் என பன்முகம் கொண்ட கண்ணனின் குணத்தில் ஒன்றேனும் தங்கள் குழந்தைக்கு வருமாறு பார்த்து கொண்டார்கள், அதனாலே அக்கால இந்தியா அவ்வளவு சரியாக இருந்தது
ஜீஜாபாய் அப்படித்தான் வீரசிவாஜியினை உருவாக்கினாள், அவன் இந்துராஜ்ஜியத்தை அந்த வளர்ப்பில்தான் அமைத்தான்
கண்ணன் ஒவ்வொரு வீட்டிலும் வரவேண்டும் என தவமிருந்து கொண்டாடிய தேசம் இது, கண்ணன் எல்லா வீட்டிலும் உருவாக வேண்டும், தர்மத்தை தளைக்க வைக்க வேண்டும் என தவம் இருக்கும் தேசம் இது
கோகுலாஷ்டமியினை தேசம் கொண்டாடுகின்றது, கண்ணணின் கால் பட்ட யமுனை உற்சாகமாக கரைபுரண்டு ஓடுகின்றது, கண்ணனை சுமந்த கங்கை அவன் நினைவுகளோடு நடைபோடுகின்றது
உலக இந்துக்களெல்லாம் அவன் நினைவில் மூழ்கி ஒருவித புன்னகையோடும் பரவசத்தோடும் அவன் பெயரை சொல்லி அழைத்து கொண்டிருக்கின்றனர்.
அந்த பிஞ்சு கால்களோடும் புன்னகைத்த முகத்தோடும் வரும் கண்ணன் அவரவர் பக்திக்கு ஏற்ப விஸ்வரூபம் காட்ட ஓடிவந்து கொண்டிருக்கின்றான்
இந்த தேசத்தின் எல்லா அதர்மக்காரர்களையும் அரக்கர்களையும் அழித்து தேசம் மிக உன்னதமாக ஒளிவீச அவன் அருள்புரியட்டும்
ஆயர்பாடி அவனை அன்போடு அணைத்ததுபோல் ஆசையோடு அள்ளி அணைத்து கொண்டிருகின்றது தேசம்
“தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த பாரதநாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதாசாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே” என் பாரதி சொன்னது முக்கால உண்மை, எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை
“கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்
நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே
அண்ண லின்னருள் வாடி ய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே…
என்ற மகாவியின் வரிகளோடு அவனை வணங்கி கொண்டிருக்கின்றது தேசம்
சர்வம் கிருஷ்ணார்பணம்