03. அமர்நீதி நாயனார்

“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்” சுந்தரமூர்த்தி நாயனார்

மெல்லிய இதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர் மாலையைச் சூடிய அமர்நீதி நாயனார்க்கு அடியேன் என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்

யார் இந்த அமர்நீதி?

அக்கால‌ சோழவளநாடு எல்லா வகையிலும் செழிப்பாய் இருந்தது, காவேரி நிலத்தை இருபோகம் விளையச் செய்து விளைச்சலில் பலன் கொடுத்தது, இன்னொரு வகையிலும் சோழநாட்டுக்குப் பணம் கொட்டியது . அது வியாபார சமூகத்தின் உழைப்பு.

அன்று எந்த நாட்டிலும் இல்லாத செல்வம் சோழநாட்டில் கொட்டிக் கிடக்க இவைதான் மகா முக்கிய காரணம். இந்தச் செல்வத்துக்கு நல்லபடியாகக் காவல் இருந்த சோழமன்னர்கள் மூன்றாம் காரணம்.

செட்டியார்கள் எனும் மிகப் பெரும் வைசிய கூட்டம் அங்கே காவிரிப்பூம்பட்டினம் எனும் துறைமுகத்தின் வழியாகக் கடல் கடந்து பொருள் ஈட்டிக் குவித்தது, அந்நாட்களில் வெகுசில நாடுகளிலே இருந்த அந்த முன்னேற்றம் சோழநாட்டில் இயல்பாய் இருந்தது.

அந்த வணிகர்கள் சிவநேச செல்வர்களாய் இருந்தனர். உள்ளூரிலும் , வெளியூரிலும் வணிகத்தால் கிடைக்கும் லாபத்தில் பலர் பெரும் திருப்பணிகளை செய்தனர். கடல்கடந்து செல்லும் பொழுதும் நடக்கும் வழியெங்கும் தங்களைக் காக்கும் சிவனின் அருளிலே தங்கள் தொழில் நடப்பதாய் உணர்ந்து செய்தனர்.

ஆம். கடல்பயணம் மிகுந்த ஆபத்து உடையது. சிவன் அருள் ஒன்றே அவர்களை வெற்றிகரமாக நடத்தியது.
அந்த வணிகக் கூட்டத்து சிவனடியார்களில் ஒருவரே அமர்நீதி என்பவர். அவர் வழுவா நீதியுடைய வணிகராய் இருந்ததால், நீதியான வணிகராக இருந்ததால், நீதி கொண்டவர் என்ற பொருளில் அமர்நீதியார் என அழைக்கப்பட்டார்.

பழையாறு எனும் ஊரின் மிகப்பெரும் செல்வந்தரான அந்த அமர்நீதியார், அதன் அருகில் உள்ள‌ நல்லூரில் உள்ள சிவனின் ஆலயத்தில் அவரை மனமார வணங்கினார். அந்த “கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோயில்” என்பது மிகப் புகழ் பெற்ற சிவஸ்தலம். மிகப்பெரும் வரலாற்றைக் கொண்ட தலம் அது.

முன்னொரு காலத்தில் யானையும் சிலந்தியும் போட்டிப் போட்டு சிவனை வணங்கி, அந்த யானை மறுபிறப்பில் கோச்செங்கணான் எனும் நாயன்மாராக பிறந்து, அந்த நாயனார் சோழ அரசராகவும் இருந்ததால் கட்டபட்ட ஆலயம் அது.

திருநாவுக்கரசர் தீட்சைப் பெற்ற இடமும் அதுவே. இதனால் மிகப் பெரிய புண்ணிய ஸ்தலமான அந்தக் கோவிலுக்கு ஏகப்பட்ட சிவனடியார்கள் வருவார்கள்.

அந்த அற்புதத் தலத்தில் மனதைப் பறிக் கொடுத்து , அதன் முன்னால் மடம் கட்டி, அங்கு வரும் சிவனடியார்கள் தங்கவும், திருநீறு அணியவும், திருமண் பூசவும், அமுது உண்ணவும், அவர்களுக்குப் புது உடையும் அளித்து, அவர் பொருளுக்கு காவலாகவும் இருக்க வழிவகை செய்து , அதை தன் பொறுப்பில் பராமரித்தும் வந்தார் அமர்நீதியார்.

அடிக்கடி வியாபார விஷயமாக வெளிச்சென்றாலும், சில நாட்களில் அவரே அந்த மடத்தில் இருந்து சிவனடியார்களை மகிழ்வுடன் கவனிப்பார். அதை மிக மகிழ்வான உளசுத்தியுடனும், சிவனடியாருக்கு செய்வதை சிவனுக்கே செய்யும் கவனத்துடனும் பக்தியுடனும் செய்து கொண்டிருந்தார்.

மடத்துக்கு வரும் சிவனடியாருக்கு பாதபூஜை செய்து, அமுதளித்து, புது காஷாயம் (கோவணம்) கொடுத்து ஆசிவாங்குவது அவரின் பிறவிக் கடமை. அதில் அவருக்கு அவ்வளவு மகிழ்வு, திருப்தி. தன் வியாபாரத்தின் லாபமே சிவனுக்குத்தான் என்பது போல ஒரு நிறைவு அவருக்கு இருந்தது.

தொழில்களில் வித்தியாசமானது வணிகத் தொழில். அது விவசாயம் , சிற்பம் போன்ற உற்பத்தி தொழில் அல்ல. அதன் இயல்பே வேறு.

விவசாயி ஒருவன் தானம் செய்யும் பொழுது நெல்லை , அரிசியினை கொடுப்பதில் இது எவ்வளவு மதிப்பு என காண்பதில்லை. இடையன் மாட்டிலும் ஆட்டிலும் மதிப்பு அறிந்து தானம் செய்வதில்லை.

ஆனால் வணிகம் அப்படி அல்ல, எடுத்து வைக்கும் காசுமுதல் கையில் கிடைக்கும் ஒவ்வொரு பொருள் வரை அவன் மதிப்பிட்டே தீர வேண்டும், இதன் லாப நஷ்டமென்ன என அவன் கணக்கிட்டேத் தீர வேண்டும். அது அல்லாது அவன் தொழில் நிலைக்காது. அதன் இயல்பு அது.

பொருள் கணக்கிட்டே எல்லாம் செய்தல் என்பது வணிக தர்மம் .

ஆனால் அந்த வணிகனாய் இருந்தும் கொஞ்சமும் லாப நோக்கின்றி சிவனுக்காய் அள்ளி கொடுத்தார் அல்லவா. அங்கு தான் அமரநீதியார் தனித்து நின்றார்.

அன்று ஆனிமாதம் பூரம் நட்சத்திரம் , வியாபார விஷயங்களெல்லாம் முடித்த நிலையில் பழையாற்றில் இருந்து தன் மடத்தை பார்வையிட நல்லூர் வந்திருந்தார் அமர்நீதியார், வரும் அடியார்களை எல்லாம் இன்முகத்துடன் வரவேற்று , உபசரித்துக் கொண்டிருந்தார்.

அவரே மடத்தின் வாசலில் நின்று கொண்டு, வரும் அடியார்களை வணங்கி, குனிந்து நின்று , சிவநாமத்தில் வாழ்த்தி, வரவேற்று ஆசிவாங்கி உள்ளே அழைத்து தேவையானதைச் செய்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்தார் அந்த அடியவர். சிவந்த மேனி. ஒல்லியான உருவம். நெற்றியில் திருநீறு. கையில் கம்பு. அதன் நுனியில் இரு துணிகள் . கழுத்தில் உருத்திராட்சம். கண்களில் கருணை . உதட்டில் புன்னகை என அவர் சாந்தசொரூபியாகக் காட்சியளித்தார்

இடுப்பு உடையான கோவணம் மட்டும் அணிந்திருந்தார்.

அந்நாளைய வழக்கப்படி அரசன் மூன்று உடை அணிவான். வேட்டி, மேல் துண்டு, தலைப்பாகை என மூன்று உடை அது.

அடுத்த பெரும் வியாபார சமூகம் , கற்ற சமூகம் மற்றும் அந்தண சமூகமும் ஈருடை அணியும். இடுப்பில் வேட்டியும் மேலே சால்வை போல் துண்டும் அணிவார்கள்.

உழைப்பாளர் வேட்டி மட்டும் அணிவார், சில சிவனடியார்கள் வேட்டி அணிவார்கள் .

அதி தீவிர சிவனடியார்கள் காஷாயம், கௌதாம்பீனம், கோவணம் என சொல்லும் ஒரு உடை மட்டும் அணிவார்கள்.

இந்த சிவனடியார் அதிதீவிர கௌதாம்பீனி கோலத்தில் வந்தார்.

திருவோடும் கையில் இருக்காது. காரணம் உணவு என்பது அடியார்களுக்கு அக்காலத்தில் சிக்கலில்லா விஷயம். சிவனடியார்களுக்கு எல்லா வீட்டு திண்ணைகளும் உணவு வழங்கின.

இதனால் சிவனடியார்கள் கௌதாம்பீனி கோலத்தில் கையில் நுனியில் கோவணம் கட்டிய கம்புடன் இருப்பார்கள் . அவர்களின் சொத்துக்கள் இவைகள் தான்.

நடுத்தர வயது கொண்ட அந்த சிவனடியார் வெயிலில் வந்து அமர்நீதியாரை அடைந்து தனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா எனக் கேட்டார்.

“அய்யா, இது என்ன கேள்வி. சிவனும் அவர் அடியாரும் எனக்கு வேறா?. என்ன உதவி வேண்டும், எவ்வளவு வேண்டும் என சொல்லுங்கள், நான் வேறு எதற்கு மடம் கட்டி காவல் இருக்கின்றேன். இந்த அமரநீதி எக்காலமும் சிவனடியாருக்கு உதவுவதை உயிர்க் கடமையாகக் கொண்டவன்” என சொல்லி வணங்கி நின்றார்.

அந்த சிவனடியார் மெல்ல , “நீங்கள்தான் அந்த அமர்நீதியாரா? நிரம்பக் கேள்விப்பட்டிருக்கின்றேன்” எனக் கூர்மையும், பெருமையும் நிறைந்த பார்வையோடும், கொஞ்சம் சிரிப்போடும் சொன்னார்.

அந்தக் கோவில் முன் ஏழுகடல் தீர்த்தம் என ஒரு குளம் உண்டு. எல்லா சிவனடியாரும் களைப்பு நீங்க அதில் நீராடிவிட்டே ஆலயம் புகுவார்கள்.

இந்த சிவனடியாரும் குளிக்க விரும்பினார். அமர்நீதியிடம் “நான் குளிக்கச் செல்கின்றேன். எனக்கு மாற்று உடையாக இந்த கௌதாம்பீனம் மட்டும் உண்டு. மழை வரும் போல் இருக்கின்றது. நீர் இதை கொஞ்சம் பாதுகாக்க முடியுமா? நான் குளித்துவிட்டு வந்து வாங்கி கொள்கின்றேன்” என்று சொன்னார்.

“அட. இது என் பாக்கியம் அல்லவா? கொடுங்கள் . நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள் . இதை என் அறையிலே வைத்து கொள்கின்றேன் “, எனச் சொல்லி கம்பில் இருந்த இரு கோவணங்களில் ஒன்றை வாங்கி தன் அறையில் வைத்துவிட்டு அடுத்த அடியாரை எதிர்பார்த்து நின்றார் அமர்நீதி.

சற்று நேரத்தில் மழையில் நனைந்தபடி ஓடிவந்தார் சிவனடியார்.

“அய்யா, என் கவுதாம்பீனத்தை கொடுப்பீர்களா? கையில் இருந்த கோவணமும் நனைந்துவிட்டது” எனக் கேட்க, “இதோ தருகின்றேன்” என உள்ளே ஓடினார் அமர்நீதி.

ஆனால் அதிர்ந்து நின்றார், காரணம் அந்த கோவணம் மாயமாக மறைந்திருந்தது. இதற்கு முன் அப்படி நடந்ததே இல்லை.

மிகுந்த வருத்தத்துடன் அடியார் முன் தலைகுனிந்து நின்றார். விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவனடியார் முகம் இருண்டது, சட்டென சொன்னார்.

“இப்படி சிவனடியார் சொத்துக்களைத் திருடித்தான் சம்பாதின்றாயா.. எங்கே என் கோவணம், உன்னை நம்பி கொடுத்தால் இப்படி திருடுவாயா” என சீறி நின்றார்.

“அய்யா. நான் அப்படி செய்பவன் அல்ல. நான் புதிதாகக் கொடுக்க வைத்திருக்கும் ஏகப்பட்ட உடைகளும் கோவணமும் உள்ளே உண்டு. வந்து உடைமாற்றி தலைத் துடைத்து அமுது உண்ணுங்கள்” என கெஞ்சிக் கொண்டிருந்தார் அமர்நீதி.

ஆனால் “நீ திருடன், கோவணத் திருடன், அயோக்கியன், சொன்ன சொல் காக்கத் தெரியாதவன்” என வார்த்தையால் சுட்டுக் கொண்டிருந்தார் சிவனடியார்.

அன்று கோவிலில் சிறப்பான நாள் என்பதால் வந்த மக்கள் கூட்டம் கூடியது , மாபெரும் அவமானத்தில் தலைகுனிந்து நின்றார் அமர்நீதி.

காலம் காலமாக அவர் செய்துவரும் தர்மத்தின் மேல் முதல் கல் விழுந்திருக்கின்றது.

கூட்டம் கூடியது. ஒரு சாரார் அமர்நீதிக்காகப் பேசிப் பார்த்தாலும் சிவனடியாரின் சீற்றம் முன் நிற்க முடியவில்லை. அமர்நீதி மாற்றுக் கோவணம் கொடுக்கின்றேன். புது கோவணம் கொடுக்கின்றேன் என என்ன சொன்னாலும் சிவனடியார் ஏற்றுக் கொள்ளவில்லை.

தவியாய் தவித்த அமர்நீதியினை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தபடி தன் அட்டகாசத்தை செய்துக் கொண்டே இருந்தார் சிவனடியார்.

வாதங்கள் நீண்டு, ” உங்கள் கோவணத்துக்கு ஈடாக என்ன வேண்டும் . கேளுங்கள் . எது வேண்டுமானாலும் தருகின்றேன்”, என மன்றாடி நின்றார் அமர்நீதியார்.

இறுதியில் துலாபாரம் ஒப்புக் கொள்ளப்பட்டது . சிவனடியாரின் கம்பின் நுனியில் இருந்த‌ கோவணம் ஒரு தட்டில் வைக்கப்பட்டு மறு தட்டில் என்ன வைத்தால் தராசு சரியாகுமோ அப்பொழுது அந்த தட்டில் இருப்பதெல்லாம் அடியார்க்கு சொந்தம் என பஞ்சாயத்தில் முடிவானது.

தராசில் சிவனடியாரின் கோவணம் வைக்கப்பட்டு முள் சரிந்தது, அப்பக்கம் புதுக் கோவண துணிக்கட்டை வைத்தார் அமர்நீதி. தராசுமுள் அசையவில்லை, இன்னும் கூடுதல் துணிகளை வைத்தார். தராசு முள்ளால் எந்த அசைவுமில்லை.

அதிர்ந்த அமர்நீதி அரிசி மூட்டை என பலதும் வைத்தும் தராசில் துளியும் சலனமில்லை.

சிவனடியார் சாதாரண ஆசாமி இல்லை என அமர்நீதியின் மனம் சொன்னாலும், கோவணத்தைத் தொலைத்தது தானல்லவா எனும் குற்ற உணர்வு அவர் மனதைப் பீடித்திருந்தது. சிவனடியார் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்ததற்கு சிவன் தரும் தண்டனை என ஏற்றுக் கொண்டார்.

அரிசிக்குப் பிறகு தன்னிடம் இருந்த நவரத்தினங்களைக் கொட்டினார், பொன், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளைக் கொட்டினார். மீதம் இருந்த செல்வத்தை எல்லாம் வைத்தார். கொஞ்சமும் தராசு அசையவில்லை.

“இவர் சரியான கொள்ளை வியாபாரி, நல்ல அளவை அளக்காமல் ஊரை ஏமாற்றி செல்வம் சேர்த்திருப்பார் போலும் ” என்ற முணுமுணுப்புகள் வர ஆரம்பித்தன‌.

அமர்நீதியின் வியாபார மோசடியினை சிவன் நிரூபித்துக் கொண்டிருப்பதாக ஒருவன் சொல்லிக் கொண்டான்.
ஊரை ஏமாற்றி சேர்த்த செல்வத்தில் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தால் சிவன் விட்டு விடுவாரா. பொறுத்திருப்பாரா. இனி இவன் பொருளெல்லாம் சிவனடியாருக்கு. அவர் கோவில் உண்டியலில் போட்டு விட்டு செல்வார் என்றது இன்னும் சில குரல்கள்.

‘இந்த சிவனடியாரை ஏமாற்றியது போல் எத்தனை பேரை ஏமாற்றினானோ. படுபாவி. வசமாக சிக்கினான் என்றெல்லாம் எகத்தாளம் பேசியது ஒரு கோஷ்டி.

அந்நாளில் வங்கிகள் கிடையாது மக்கள் தங்கள் சேமிப்பை வணிகர்களிடமே கொடுத்து வைப்பார்கள். சிலர் வட்டி வாங்குவார்கள், சிலர் பணப்பாதுகாப்பு மட்டும் போதும் என்பார்கள், அப்படி பலரின் சேமிப்பு அமர்நீதியாரிடம் இருந்தது.

‘இந்த மனிதன் மோசடியானவன் போலும். இவனோடு நம் பணமும் போனது’, என சில குரல்கள் சாபமிட்டு விம்மிக் கொண்டிருந்தன‌.

அமர்நீதி மொத்த சொத்தையும் தராசில் வைத்தும் முள் நேராகவில்லை.

முன்பே பார்த்தபடி வணிகத் தொழிலில் பல சிக்கல்கள் உண்டு. வணிகம் செய்ய காசும், பொருளும் பிரதானம் . கொள்முதல் செய்யவும் லாபம் பார்த்து மறுபடி கொள்முதல் செய்யவும் காசே பிரதானம்.

இங்கோ முழுப் பொருளையும் தராசில் வைத்தாகி விட்டது, இடையனுக்கு மாட்டுக் கூட்டம் போனது போல, விவசாயிக்கு நிலமும், விதைநெல்லும் போனது போல ஒன்றுமில்லாது நின்றார் அமர்நீதி.

தராசு கட்டி சம்பாதித்தவனுக்கு சோதனை தராசு வடிவிலேயே வந்தது. எந்தத் தராசில் பொருள் அளந்து சம்பாதித்து சிவனுக்குக் கொடுத்தாரோ, இப்போது அதே தராசில் தன் நிலை விளக்கப் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார் அமர்நீதி.

தராசோ சிறிதும் அசையவில்லை, எல்லாம் வைத்தாயிற்று. வேறு எதுவுமில்லை என ஒதுங்கவும் முடியாது. காரணம் முள் சரியாகி தட்டு சமநிலையினை எட்டுவதுதான் தொலைத்தக் கோவணத்துக்கான ஈடு. அதுவே நியாயம்.

பெரும் பொருளும், நிறைசெல்வமும், புகழும் தந்த பலம் அப்போது அவரை விட்டு அகன்றிருந்தது. எந்நிலையிலும் தளர்வடையாத அமர்நீதி அந்நொடி மனமுடைந்தார்.

ஆயினும் அதுகாறும் அவர் பின்பற்றி வந்த அவருடைய தர்மநெறி அவரைத் தட்டி எழுப்பியது. சிவபக்தியும், சிவனடியார்களுக்குச் செய்த உண்மையான சேவையும் அவரைக் கலங்காமல் நேர்மையாக சிந்திக்க வைத்தது.

இங்கே இன்னும் தராசு சமநிலைக்கு வரவில்லை என்பதால் மேற்கொண்டு பொருள் வைக்க வேண்டும்.
ஆனால் வைப்பதற்கோ ஒன்றுமேயில்லை, அவருக்குச் சொந்தமானதாக எஞ்சி இருந்தது அவரும், அவர் மனைவியும் மற்றும் அவரது மகன் மட்டுமே.

அதனால் மேலும் சிந்திக்காமல் தன் குடும்பத்தோடு தராசுத்தட்டில் ஏறுவதே சரி என்று முடிவெடுத்தார்.
தட்டில் ஏறும் முன் சிவன் முன்னால் அமர்நீதி தன் குடும்பத்தோடுச் சென்றார் . கைக் கூப்பினார், நெஞ்சின் அடி ஆழத்தில் இருந்து வந்த கண்ணீரோடு சொன்னார், “சிவனே, ‘இதுவரை நான் செய்த அடியவர் அன்பினில், சிறிதும் தவறாதிருந்தது உண்மையானால், துலாம் நேர் நிற்க” எனச் சொல்லி பஞ்சாட்சரம் சொல்லித் தராசுத்தட்டில் குடும்பத்தோடு ஏறினார்.

மறுநொடி தராசு முள் நேரானது. தராசுதட்டுகள் சமமாயின. தராசில் தன் உண்மையான சிவபக்தியினை நிறுத்திக் காட்டினார் அமர்நீதி.

ஆம் . அதுவரை ஒரு கோவணத்துக்கு ஈடாகாத அமர்நீதியின் செல்வங்கள் இந்த வார்த்தைச் சொல்லி அமர்நீதி குடும்பமாகத் தராசுத் தட்டில் ஏறியதும் முள் நேரானது.

கூட்டம் தலைக்கவிழ்ந்தது, சிவனடியார் கூட்டத்தைப் பார்த்தபடி அமர்நீதியையும் பார்த்துக் கொண்டிருந்தார். அமர்நீதி சிவனடியார் அன்பினில் தவறாமல் இருந்திருக்கின்றார் என்பது சிவன் சந்நிதியிலே உண்மையாயிற்று.

அடுத்து என்ன?

ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் பொருளெல்லாம் இனி சிவனடியாருக்குச் சொந்தம், அவ்வகையில் பொன்னும், பொருளும், அமர்நீதியும், அவர் குடும்பமும் சிவனடியாரின் சொத்து. இனி அவர் சொற்படித் தான் இவர்கள் இயங்க வேண்டும்.

சிவனடியார் அமர்நீதியினை கோவில் பெருக்கச் சொன்னாலும் செய்ய வேண்டும், அவருடைய செல்வ மகனை மாடு மேய்க்கச் சொன்னாலும் மேய்க்க வேண்டும்

தராசுப் பிடித்து வியாபாரம் செய்த அமர்நீதியார், சிவனடியாரின் கோவணத்துக்கு காவல் இருக்க வந்து தராசில் ஏறிக் குடும்பத்தோடு அடிமையுமானார்.

அந்நிலையிலும் தன் உண்மை நிரூபிக்கப்பட்ட மகிழ்வில் “அடியாரே, நான் உங்கள் கோவணத்தைத் திருடவில்லை, இதுகாலம் ஒரு சிவனடியாரிடம் கூட நான் அன்பில் இருந்துத் தவறவில்லை. உங்களால் அது உலகுக்கும் தெரிந்து விட்டது, தராசு மூலம் சிவனும் சொல்லிவிட்டார்.

எனக்கு அது போதும்.

என்னிடம் இனிப் பொருளில்லை, தவிரவும் நாங்கள் இனி உங்கள் அடிமை, சொல்லுங்கள். என்ன செய்யவேண்டும். சிவனடியாருக்கு அடிமையாவதை விட என்ன கடமையும் பெருமையும் உண்டு.

பொன்னோடும், பொருளோடும் செய்த சிவனடியார் சேவையினை இனி வேலைக்காரனாய் செய்யப் போகின்றேன்,.” என மகிழ்வோடு சொன்ன அமர்நீதியினைக் கண்டு கூட்டம் கண்ணீர் விட்டது.

அந்த நல்லூர் சிவனை நோக்கி இப்படியும் ஒரு சிவபக்தியா என மனம் உருகி நின்றார்கள்.
“அடியவரே சொல்லுங்கள்..” என அமர்நீதி சொல்லிக் கொண்டே இருக்க, சிவனின் கருவறை நோக்கி சென்ற சிவனடியார் அப்படியே மறைந்தார்.

அந்நேரம் ஆலயமணி முழங்கிற்று, பேரொளி சூழ்ந்தது, வெளிச்சத்தின் நடுவில் இன்னிசை முழங்க பார்வதியுடன் வீற்றிருக்கும் சிவன் அவருக்கு காட்சியளித்தார்.

அப்படியே திகைத்து நின்றார் அமர்நீதி, எல்லாம் புரியவே அவருக்கு சில நொடிகள் ஆனது.

சிவன் மெல்லச் சிரித்தார், இருவரும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து பின் பேசினர்

“அய்யனே, சோதனை ஏன்? கொடு என சொன்னால் எதுவும் கொடுத்திருப்பேனே? ஏன் இப்படி ஒரு நாடகம்?”

சிவன் சொன்னார் “அமர்நீதி, கடைசியில் சொன்ன வாக்கியத்தை, ‘இதுவரை நான் செய்த அடியவர் அன்பினில், சிறிதும் தவறாதிருந்தது உண்மையானால், துலாம் நேர் நிற்க’ எனச் சொன்ன வாக்கியத்தை முதலிலேயே சொல்லியிருக்கலாமே.

நீ உன் பொருளில் நம்பிக்கை வைத்தாய். உன் பொன்னும் மணியும் ஈடாகும் என்றாய். உன் பலத்திலே நீ நின்றாய், நான் என் பலத்திலே நின்றேன்.

நீ எப்பொழுது உன்னிடம் ஒன்றும் இல்லை என என்னிடம் சரணடைந்து உன் அன்பினை நிரூபிக்க மன்றாடத் தொடங்கினாயோ, அப்பொழுதுதான் நாம் உண்மை விளக்கினோம், எந்தவித அன்பானாலும் என்னைச் சரணடைந்தால் மட்டுமே அது பலம் கொள்ளும், சக்தி பெறும்.

ஆயினும் சிவனடியாரின் குறைப் போக்கும் உயரிய அன்பில் நீ உன்னை மறந்தாய். என்னையும் அழைக்க‌ மறந்தாய், கடைசியில் என்னிடமே சரணும் புகுந்தாய், உன் அன்பு உலகில் மிகச் சிறந்த அன்பு.

சத்தியம் என்பது வலிமையானது, அது அன்பால் என்னை அழைக்கும் போது காக்கப்படும், உன் விஷயத்தில் அதுதான் நடந்தது” என வாழ்த்தினார் சிவன்

வாழ்த்திய சிவன் முன்பு வணங்கி, நன்றிக்கண்ணீர் பெருக நின்றுக் கொண்டிருந்தார் அமர்நீதி.

“சிவனே இனி வாழ்நாளெல்லாம் சிவனடியார் தொண்டு செய்வேன், இனி வியாபாரம் செய்கிலேன்” என சொல்லிக் கொண்டிருந்த அமர்நீதியாரை நோக்கி மெல்ல நகைத்த சிவன் சொன்னார்.

“அமர்நீதியே, நீர் தராசில் நின்று அதை சமமாக்கியதால் எமக்கு சொந்தம், உம்மை நான் எப்படி விடமுடியும், குடும்பத்தோடு தராசில் ஏறும்”

அப்படியே தராசில் ஏறினார் அமர்நீதி

உடனே தராசு புஷ்பக விமானமாக மாறி கைலாயம் சென்றது, அங்கு சிவனை முகம் முகமாக தரிசிக்கத் தொடங்கினார் அமர்நீதி.

இன்றும் அவர் கயிலாயத்தில் இருந்து வணிகர்களைக் கவனிக்கின்றார், எந்த வணிகன் சிவன்மேல் உள்ளார்ந்த அன்போடு வணிக லாபத்தை செலவழிக்கின்றானோ அவனுக்கு பரம்பொருளின் அன்பை ஆசியினை அவர் வழங்குகின்றார் என்பது ஐதீகம்.

செட்டிநாட்டு வியாபாரிகளிடம் தொன்றுத் தொட்டு வரும் நம்பிக்கை இது, அவர்கள் சிவநேசமிக்க செட்டியார்களாக வாழ்ந்து வருவதும் , எக்காலமும் அவர்கள் இறைப்பணியிலும், தொழிலிலும் சிறந்து விளங்குவதும் உலகறிந்தது.

இன்றும் அந்த நல்லூர் கோவிலில் ஆனி மாதம் பூர நட்சத்திரத்தன்று அமர்நீதியாருக்கு குருபூஜை செய்யப்பட்டு துலாபாரம் நடைபெறும்.

துலாபாரம் எனும் அந்த நடைமுறைக்கு இக்கோவிலும் அமர்நீதி வரலாறும் பெரும் எடுத்துக்காட்டுகள். அஸ்திவாரங்கள்.

தன்னிடம் உள்ளதை எல்லாம் இறைவனுக்கு கொடுத்து தானும் குடும்பத்தோடு தராசுத்தட்டில் ஏறி நிற்கும் அளவு சிவபக்தி அமர்நீதிக்கு இருந்தது, அந்த அன்புதான் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கியது

தன்னையே சிவனுக்குக் கொடுக்குமளவு அவர் அன்பின் உச்சத்தில் இருந்திருக்கின்றார், அன்பில் எல்லாம் உச்ச அன்பு அதுவே. பரம்பொருள் எதிபார்க்கும் அன்பும் அதுவே

உண்மைக்கு சோதனை அதிகம். .ஆனால் தெய்வத்தின் மீதான அன்பினால் காக்கப்படும் . உண்மைக்கும் , உள்நோக்கமில்ல்லா கபடமற்ற பரம்பொருள் மீதான‌ அன்புக்கும் இக்கட்டு வந்தால், அந்நேரம் அந்த பரமனை மனமுருக அழைத்தால் அவரே வந்து நம் களங்கத்தை தீர்த்து சத்தியம் காத்து அந்த அன்பினை உலகறிய செய்து அருள்புரிவார்.

அமர்நீதி நாயனார் வாழ்வு சொல்லும் தத்துவமும் அதுவே.

தாராசு ஏந்தி தனக்கு திருப்பணி செய்த பக்தனை, தராசிலே நிறுத்தி அவன் பக்தியினை சிவன் உலகறிய செய்த சரித்திரம் இதுதான்

தெய்வபக்தியும் அடியார்பால் அன்பும் கொண்ட ஒரு நல்ல வணிகன் எப்படி இருக்க வேண்டும்?

அப்படிபட்டவருக்கு பரம்பொருள் எப்படியெல்லாம் உதவுவார் என்பதற்கு அமர்நீதியார் எக்காலமும் மிகபெரும் உதாரணமாய் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

இன்று அவருக்கு குருபூஜை, அந்த அடியார் நினைவாக ஏதாவது ஒரு சிவனடியார்க்கு ஒரு வஸ்திரமோ, உணவோ, எதுவோ தானம் செய்தால் நிச்சயம் பெரும் பலன் உங்களை அடையும், அது சத்தியம்