காலிஸ்தான்

கனடாவில் இருந்து சீக்கிய காலிஸ்தான் கும்பல் செய்த அட்டகாசம் ஏராளம். ஒருவகையில் இதற்கு காரணமே காங்கிரஸ்தான். அக்கட்சியும் அதன் முதலாளியான பிரிட்டிசாரும் செய்த குழப்பங்களே இந்த பெரும் குழப்பத்தின் முதல் காரணம்.

சீக்கியர்கள் வாளேந்த ஒரே காரணம் மொகலயத்தின் அட்டகாசம்; அதுவும் அவுரங்கசீப் காலத்தில் நிலைமை எல்லை மீறிச் செல்ல, அவர்களின் குருக்களெல்லாம் கட்டாய மதமாற்றத்தில் கொல்லப்பட, அப்போதுதான் படைதிரட்டி போராடினார்கள்.

நிச்சயம் அவர்கள் ராஜா ரஞ்சித்சிங் தலைமையில் போராடித்தான் மொகலாயத்தை, மராட்டியரோடு சேர்ந்து ஒடுக்கினார்கள். அந்த இடைவெளியில்தான் பிரிட்டிசாரால் இங்கே புக முடிந்தது.

காசி கோவிலை மீளக்கட்டி தங்கத்தால் மூடியதில் சீக்கியர் பங்கும் இருந்தது.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. காஷ்மீர் இந்துக்களை அவுரங்கசீப் கட்டாய மதமாற்றம் செய்தபோது, அவர்கள் இந்துக்களுக்கு ஆதரவாக வந்து பெரும்போர் நடத்தினார்கள்.

சிந்து நதிக்கரை ஓரம் ஆப்கானியர்களை அவுரங்கசீப் குடியமர்த்தியபோது அவர்கள் தான் கடுமையாக எதிர்த்தார்கள்.

சீக்கியர்களின் முதல் ஆத்திரம் பாகிஸ்தான் பிரிவினையில் வந்தது. ஆப்கானியரை விடவே கூடாது என வாளேந்தி பெரும் பலிகளை தியாகமாகத் தந்த கூட்டம் பஞ்சாப் பிரிக்கப்படும் போது அழுதது.

அந்த வலி கொஞ்சமல்ல, தேசப்பிரிவினையில் பஞ்சாபியர் வலி மிக அதிகம், சொல்லமுடியா அளவு பாதிக்கபட்டார்கள்.

ஆனால், அந்த வலியில் மிளகும் உப்பும் தூவி ரசிக்கும் கொடுமையினை காங்கிரஸ் செய்தது. நேருவோ, இந்திராவோ அவர்களை மதிக்கவில்லை; கண்டுகொள்ளவில்லை என்பதே நிஜம்.

அவர்கள் கேட்டதெல்லாம் தங்களுக்கான தேசிய அங்கீகாரம். தனி மதம் எனும் பெரும் அங்கீகாரம்; இன்னும் சில கோரிக்கைகள் இருந்தன‌.

அவற்றை இடதுகையால் தள்ளினார் இந்திரா.

தேசப்பிரிவினையில் காங்கிரஸ் காட்டிய அமைதி, பஞ்சாப் எல்லை எரிந்தபோது இருந்த அலட்சியம், சுதந்திர இந்தியாவிலும் தாங்கள் படும் அவமானம் என கொதித்தார்கள்.

அந்த கொதிப்பில் காங்கிரஸை எதிர்த்தார்கள்.

இந்திரா, அரசியல் எனும் பெயரில் அகாலிதளத்தை முடக்க பிந்த்ரன்வாலேயினை உருவாக்கினார். சஞ்சய் காந்திதான் அவனை முதலில் மேடையேற்றினார்.

தமிழக சீமான் போல் இருந்த பிந்த்ரன்வாலேயினை பின்பு சர்வதேச உளவு சக்திகள், கடத்தல் கும்பல்கள் வளைத்தன. தான் வளர்த்தவனை தானே தடுக்கமுடியாமல் தடுமாறினார் இந்திரா.

குழப்பம் அதிகரித்தது. இந்திராவின் பிடிவாதமும் அதிகரித்தது. பிந்த்ரன்வாலே அட்டகாசம் காலிஸ்தான் என அதிகரித்தது, மோதலும் பலியும் தொடர்ந்தது.

தங்கள் இனப் பெண்ணான மேனகாவினை ஒதுக்கிவிட்டு இத்தாலி சோனியாவினை இந்திரா அரவணைத்தது அவர்களுக்கு இன்னும் வலிகொடுத்தது.

இந்திராவுக்கு இருந்த சீக்கிய வெறுப்பு கொஞ்சமல்ல, அதன் காரணம் மர்மமானவை.

ஒரு கட்டத்தில் ராணுவத்தை இறக்கி, பொற்கோவிலை தாக்கி, அவனைக் கொன்றார் இந்திரா. பொற்கோவில் இனி அழிக்கப்படும் என பரவிய வதந்திக்கு இந்திராவே பலியானார்.

அந்தக் கொலையினைத் தொடர்ந்து கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியரின் எண்ணிக்கை கொஞ்சமல்ல‌.

ஆனால், இந்திராவுக்கு பின்பும் நிலைமை சரியாகவில்லை. 1947ல் எல்லையில் நடந்த கொடூரம், இந்திரா செய்த தாக்குதல், உச்சமாக டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை என சீக்கிய-காங்கிரஸ் மோதல் தொடர்ந்தது.

இது வெளிநாட்டில் இருந்த சீக்கியர்களின் அட்டகாசத்தை அதிகரித்தது.

லண்டன், கனடா என எங்கெல்லாம் இருந்தோ மிரட்டினார்கள். இந்திரா வம்சத்தை வேரறுப்போம் என்றார்கள். ஆனாலும் ராகுலை தொட்டுபார்க்கவில்லை; அவரைப் பற்றி அன்றே தெரிந்திருக்கின்றது.

வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக காலிஸ்தான் இயக்கம் ஆகிப்போனது. பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லா நாடுகளும் ஆதரித்தன‌.

இந்தியாவின் அயலக கொள்கை தலைகீழாக கிடந்த காலங்களில், காலிஸ்தான் பெரும் மிரட்டலை செய்தது. இந்திராவுக்கு பின் நிலைமை மோசமானது.

கனடாவில் சீக்கியர்கள் குடியேறி வலுத்தபின் பெரும் விபரீதம், 1985ல் நடந்தது. இன்றுவரை குற்றவாளிகள் தண்டனை பெறா கொடுமை அது.

1985-ம் ஆண்டு ஜுன் 23-ம் தேதியன்று லண்டன் வழியாக டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம், அட்லாண்டிக் கடலின் மேல் ஐரிஸ் கடற்கரை அருகே சென்றபோது திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விமானத்தில் 24 இந்தியர்கள், 268 கனடியர்கள் மற்றும் 27 பிரிட்டிஷ்காரர்கள், விமானச்சிப்பந்திகள் என மொத்தம் 329 பேர் பயணித்தனர்.

உலகையே உலுக்கிய இந்த விமான வெடிப்பில் சம்பந்தபட்டது காலிஸ்தான் அமைப்பு. அது பகிரங்கமாக அறிவித்தாலும் கனடா பெரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பிரதாயத்துக்கு ஒரு கமிஷன் அமைத்தார்கள். பக்கம் பக்கமாக எழுதினார்கள். கடைசியில் ரிபுதமன் சிங் மாலிக், அஜெய்ப் சிங் பக்ரி மற்றும் இந்தர்ஜித் சிங் ரெயாத் என மூவருக்கும் 9 ஆண்டுகள் தண்டனை கொடுத்து விடுவித்தார்கள்.

உலகின் பெரும் கொடுமைகளில் இதுவும் ஒன்று.

ஆனால் லேசான முனங்களுடன் கடந்து சென்றது கனடா. அதன் பின்பும் காலிஸ்தான் இயக்கம் அங்கே இருந்தது.

பின் இந்தியாவுக்கு எதிரான புலிகள் இயக்கம், தாவுத் கோஷ்டி, வடகிழக்கு கோஷ்டி என எல்லாருடனும் அவர்கள் பகிரங்கமாக அல்லது மறைமுகமாக உலகெல்லாம் கைகோர்த்து மிரட்டினார்கள்.

(பெரும் சோகமாக எந்த காஷ்மீர இந்துக்களுக்காக குரு கோவிந்த்சிங், தேஜபகதூர் போன்றோரெல்லாம் கொல்லப்பட்டார்களோ, அந்த காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கும் பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதிகளோடு இவர்களும் சேர்ந்துகொண்டார்கள்.

மிக மிகக் கொடுமையான வீழ்ச்சி இது.)

ராஜிவ் கொலையில் கூட அவர்கள் மேல் சந்தேகம் வந்தது, ஆனால் ஆதாரமில்லை.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் 2001க்கு பின் கொஞ்சம் அமைதியானாலும் பின் மெல்ல மெல்ல தலை காட்டினார்கள்.

மோடி வந்தபின் அவர்கள் ஆட்டம் தீவிரமாயிற்று. பலர் அவர்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அது பல இடங்களில் பகிரங்கமாகத் தெரிந்தது.

விவசாயிகள் போராட்டம் எனும் நாடகத்தின் பின் காலிஸ்தான் கும்பல் இருந்ததும் நிஜம், பெரும் பின்னணி அவர்கள்தான்.

ஆனால் இந்திரா போல அடக்குமுறை செய்யாத மோடி அழகாகப் பின் வாங்கினார். இப்போது செய்ய வேண்டியதைச் செய்கின்றார்.

முதல் முறையாக அன்னிய மண்ணில் அடிவாங்கத் தொடங்கியிருக்கின்றது காலிஸ்தான் இயக்கம்.

இது பிரிட்டிசாரும் அவர்களைத் தொடர்ந்து காங்கிரசும் குழப்பிய குழப்பத்தின் முதல் கட்டத் தீர்வு. இனி முழுத் தீர்வை இந்தியா மெல்ல மெல்ல எடுக்கும்.

இந்த நடவடிக்கையால், கனடா அந்த கனிஷ்கா விமானத்தில் கொல்லப்பட்ட 329 பேருக்கு கொடுக்காத நீதியினை மோடி அரசு கொடுத்துள்ளது.

இனி ஒவ்வொன்றாக நடக்கும்.

வழக்கமாக எல்லா இடத்திலும் குதிக்கும் ராகுல் காந்தி கூட, தன் பாட்டி செய்த தவறை மோடி திருத்துகின்றார் எனத் தெரிந்து ரயில் நிலையம் சென்று போர்ட்டராகி விட்டார்.

1985ல் கனிஷ்கா விமானம் வெடிக்கப்பட்ட போதே இந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது போஃபர்ஸ் பீரங்கி பேரம் கமிஷன், போபால் வாயு விபத்தில் மவுனம் என காங்கிரஸ் பரபரப்பாக இருந்ததால் இதெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லை.

காங்கிரஸ் செய்யத் தவறியதை இந்த அரசுதான் மிகச்சரியாக செய்து கொண்டிருக்கின்றது. தேசத்தின் எதிரிகள் இனி பூமியில் அல்ல நிலாவுக்குச் சென்று பதுங்கினாலும் தேசம் விடுவதாக இல்லை.

(எமக்கு என்ன வருத்தமென்றால், இதையெல்லாம் தமிழக ஊடகங்கள் இந்நேரம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

தேசம் கடந்து வந்த பெரும் ஆபத்தை, மிரட்டலான காலங்களைச் சொல்லி, இப்போது அடைந்திருக்கும் வலுவான நிலையினைச் சொல்ல வேண்டும்.

இது நாட்டிற்கான வளர்ச்சி; அதாவது மோடி அஜித்தோவல் தாண்டி நாட்டின் பலத்தைச் சொல்ல வேண்டும். அதை யாரும் சொல்லவில்லை, பேசவில்லை என்பது தான் பெரும் சோகம்.

நம் கடமை இதையெல்லாம் சொல்வது , அதனைச் சரியாகச் சொல்கின்றோம்.)