சதீஷ் தவான்

இந்தியாவின் விண்வெளி பலம் இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கின்றது. மாபெரும் வான்வெளி பலம் பெற்றிருக்கின்றோம். உலகின் எந்த இடத்தையும் தாக்கமுடியும், நிலவுக்கும் நம்மால் செல்லமுடியும்.

வானில் சுற்றும் செயற்கைகோள்களை கூட நம்மால் தகர்க்க முடியும். அசையும் இலக்கு, அசையா இலக்கு என நிலத்திலும் நீரிலும் வானிலும் உள்ள இலக்கை நம்மால் அடிக்க முடியும்

அவ்வளவு பெரும் வான்பலம், ஏவுகனை பலம் இந்தியா பெற்றிருக்க அவர் மகத்தான காரணம்; அவராலேதான் தேசம் இந்தளவு பெரும் வல்லமை பெற்றிருக்கின்றது.

ஒவ்வொரு இந்தியனும் நன்றியோடு வணங்கவேண்டியவர் அவர். ஒவ்வொரு இந்திய அறிவியல் மாணவனுக்கும் அவரே வழிகாட்டி.

அப்துல்கலாம் எனும் மாமனிதன் தன் குருவாகக் கொண்டாடியது அவரைத்தான். தான் சாதிக்க அவரே காரணம், அவர் வழிகாட்டுதலே காரணம் என வணங்கிச் சொன்னது அவரைத்தான்.

சதீஷ் தவான்!

1920ல் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தவர்; லாகூரில் கற்றுவிட்டு எந்திரவியல் சம்பந்தமாக அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றார். உலகம் அப்போதுதான் விமான யுகம், வான் வெளியுகத்தில் கால் வைத்திருந்தது.

அது சம்பந்தமாக கற்றுவிட்டு பேராசிரியருமாகி அங்கே அவர் பெரும் ஆய்வுகளை செய்த போதுதான் தாய்நாட்டின் பணிக்காக 1962ல் திரும்பினார்.

அது சீனாவோடு இந்தியா யுத்தம் புரிந்து அடிவாங்கியிருந்த நேரம், மிக மோசமான அந்தத் தோல்வி ஒவ்வொரு இந்தியனையும் பாதித்தது. இனி அப்படி ஒரு தோல்வி கூடாது என ஒவ்வொரு இந்தியனும் தேசப்பற்றால் பொங்கிய நேரத்தில்தான் 42 வயது தவான் இந்தியா வந்தார்.

வந்து தேசிய அறிவியல் கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

1971 வரை சதீஷ் தவான் அதிகம் அறியப்படவில்லை. ஒரு அறிவியல் பேராசிரியராக இந்திய அறிவியல் முகமாக அறியப்பட்டார். தேசத்தின் அறிவியல் யுகத்திற்கு வலுவான அடிதளமிட்டுக் கொண்டிருந்தாலும் பெரிதும் அவர் கவனம் பெறவில்லை.

1971ல் நடந்த விக்ரம் சாராபாயின் மரணமே அவர் மேல் பொறுப்புக்களை திணித்தது.

1972 வங்க யுத்தத்தில் இந்தியா வென்றாலும், அடுத்தடுத்து பெரும் யுத்தம் வரலாமென யோசித்து பெரும் காரியங்களை செய்யத் தொடங்கிற்று.

வான்வெளி பலம், அணுசக்தி பலம் அவசியம் என தேசம் உணர்ந்து அதற்கான காரியங்களைச் செய்ய முனைந்தது அப்போதுதான்.

அந்நிலையில்தான் சதீஷ் தவானிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பெரும் சீர்திருத்தங்களையும் பெரும் பாய்ச்சல்களையும் தவான் காட்டினார்.

விண்வெளி தலைமையகம் தெற்கே அமைதல் வேண்டும். முப்பக்கம் கடல் கொண்ட அந்த பிராந்தியமே பல வான்வெளி ஆய்வுக்கு உகந்தது எனச் சொல்லி தெற்கே பல விண்வெளி கேந்திரங்களை உருவாக்கினார்.

விண்வெளி மையத் தலைமையகம் பெங்களூர் வர அவர்தான் காரணம்.

இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி அமைப்பு அவர் தலைமையில்தான் உருவாகி பெரும் பாய்ச்சல் காட்டிற்று.

1975ல் ஆரியபட்டா, பின் பாஸ்கரா, ரோகினி என அவர் தலைமையில்தான் சாதித்தது.

அவர் செய்த மிகப்பெரிய விஷயம் திறமையானவர்களை முன்னே கொண்டு வந்தது. அப்துல் கலாமினை அவர்தான் அடையாளம் கண்டு முன்னே கொண்டு வந்தார்.

கலாமின் ராக்கெட்டுகள் பல தோற்ற நேரம், தோல்விக்கான பொறுப்பைத் தானே வாங்கி, தானே பதிலளித்து கலாமினை தற்காத்தார்.

ஆனால் ராக்கெட்டுகள் பெரும் வெற்றிபெற்ற நேரம் கலாமினை பேசச் சொல்லிவிட்டு அவர் பின்னால் அமர்ந்து கொள்வார்.

கலாம் எனும் மாபெரும் விஞ்ஞானியினை நாட்டுக்குத் தந்தவர் அவர்தான். அவரை உருவாக்கியதே அவர்தான்.

தவானின் இன்னொரு முக்கிய சாதனை, சாராபாய் மரணத்துக்கு பின் சரியான நபர்களை அணுசக்தி துறைக்குக் கொண்டு வந்தது.

பிரம்ம பிரகாஷ், ஆர்.சிதம்பரம் போன்றோரை அவர்தான் முன்னிறுத்தினார், அதில் தான் முதல் அணுகுண்டை தேசம் பெற்றது.

இப்படி பெரும் சாதனைகளை அவர் செய்தார். அணுசக்தி, செயற்கைக்கோள் பலத்தினை பெற அவரே அடிப்படை.

இன்சாட், பி.எஸ்.எல்.வி., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களின் வெற்றிகளுக்கு வழிவகுத்தவர் தவான்.

இந்த அனுபவம் தான் பின்னாளில் அக்னி, பிருத்வி ரக ஏவுகனைகளாக மாறின‌.

இதுதான் பின்னாளில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் நுட்பமாக மாறி இன்று சக்திமிக்க ஏவுசாதனமாக மாறி நிற்கின்றது.

வலுவான இந்தியாவுக்கு அவரே அடித்தளமிட்டார். இன்று காணும் எல்லா ஏவுகனை, ஏவு வாகனம், செயற்கைக்கோள், அணுசக்தி என எல்லாமே அவரால் வந்தது.

அவர் கனவுபடி தான் இன்று இந்தியா வளர்ந்து நிற்கின்றது.

பெரும் எடைமிக்க செயற்கைக்கோளை நம்மால் ஏவ முடிகின்றது; நிலவினைத் தொடமுடிகின்றது, சக்திமிக்க ஏவுகனைகளை அணுகுண்டொடு பொருத்தி உலகை மிரட்ட முடிகின்றது. இதெல்லாம் அவர் தேசத்துக்கு செய்த மாபெரும் சாதனை.

ஒன்றுமே இல்லாத காலத்தில், உருப்படியாக நாலு துப்பாக்கி கூட செய்யத் தெரியா காலத்தில் நாமும் சாதிப்போம் என அவர் நம்பிக்கை ஊட்டிச் செய்த சாதனை.

அக்காலங்கள் கடுமையானவை, 1970களில் சதீஷ் தவானின் ராக்கெட் சோதனை பல தோல்விகளைத் தழுவின. உருப்படியான ஏவுதளமோ, ஏவுசாதனங்களோ அவற்றை கொண்டு செல்ல சரியானப் போக்குவரத்துக் கருவிகளோ கிடையாது.

ஆலையில் இருந்து சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டு சென்ற காலம் உண்டு.

அந்நிலையிலும் எவ்வளவோ தோல்விகளுக்கு இடையிலும் அவர் போராடினார், இடைவிடாமல் போராடினார்.

பெரும் அவமானங்கள், பரிகாசங்கள்; இதெல்லாம் இந்தியாவால் ஒருகாலமும் முடியாது எனும் நகையாடல்கள் என எல்லா வசைகளையும் தாண்டி நின்றார்.

எல்லா வலிகளையும் தனி மனிதனாகத் தாங்கி, அந்த வலி தன் சக விஞ்ஞானிகளான கலாம் போன்றோருக்கு அழுத்தமோ கவலையோ வராமல் பார்த்துக் கொண்டார்.

பெரும் விஞ்ஞானி என்பதை விட அவரின் இடைவிடா போராட்ட குணமும், மிகச் சரியான தலைமைப் பண்பும், கொஞ்சமும் அகங்காரம், கர்வம் இல்லாத கடும் அர்ப்பணிப்புமே போற்றத் தக்கவை.

அப்துல்கலாம் எனும் மாபெரும் விஞ்ஞானி உருவாகி வர சதீஷ் தவான் எனும் அவரின் விஞ்ஞான குருநாதரே பெரும் காரணம்.

இன்று அந்த பீஷ்மருக்குப் பிறந்த நாள், 103ம் ஆண்டு பிறந்த நாள்.

42 வயதில் தேசத்துக்காக உழைக்க ஆரம்பித்த அவரின் உழைப்பு சுமார் 40 வருடங்கள் வரை நீண்டது. தன் இறுதி நாள் வரை, 2002 வரை நாட்டின் விண்வெளித் திட்டங்களில் அவரின் ஆலோசனை இருந்தது.

தேசத்தின் விஞ்ஞான கோவில் அஸ்திவாரத்துக்கு, பலமான இந்தியாவினை உருவாக்க அடிக்கல்லாய் இருந்து தாங்கியவருக்கு, வான்வெளி வேலியிட்ட மாபெரும் விஞ்ஞானிக்கு, அப்துல்கலாம் எனும் அரும் பெரும் விஞ்ஞானியினை அடையாளம் கண்டு ஜொலிக்கச் செய்த மேதைக்கு தேசம் தன் அஞ்சலியினை செலுத்துகின்றது.

அவருக்கு ஏனோ பாரத ரத்னா கொடுக்கப்படவில்லை; ஆனால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்கலம் ஏவும் மையத்துக்கு அவர் பெயர் தான் இடப்பட்டுள்ளது. அதிலிருந்து வானுக்குச் சென்று சாதிக்கும் ஒவ்வொரு இந்திய செயற்கைக்கோளிலும் அவரின் முகம் புன்னகைக்கும், அவரின் கரம் தழுவி நிற்கும்.

அந்த மாமனிதன் வரலாற்றில் இருந்து ஏராளமான இளைய தலைமுறையினர் உருவாகி வந்து தேசத்தை இன்னும் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் பெரும் விஞ்ஞானியாக வர வாய்ப்பிருந்தும் இந்தியா வந்து இந்தியாவினை தலை நிமிர வைக்கப் போராடி, தான் பெரும் தோல்வியுற்ற நேரத்தில்லெல்லாம் பறவைகளை கவனித்து, பறவைகளின் பறத்தலை ஆய்ந்து, அதனிடம் இருந்து அறிவியலை கற்று, அதனைக் கொண்டே தேசத்தின் விஞ்ஞானத்தை பலமாக்கியவர் அவர்.

பறவைகளை கவனித்து அவர் எழுதிய “Bird Fight” நூல் எப்போதும் பிரசித்தியானது.

இப்படியான மாபெரும் மேதைகள் வரலாறெல்லாம், அவர்கள் போராட்டமெல்லாம் ஒவ்வொரு இந்திய மாணவனும் படிக்கக்வேண்டிய விஷயம். அரசுகள் அதற்கு வழிசெய்தல் வேண்டும்.

சதீஷ் தவான் என்பது இந்தியாவினை புது யுகத்துக்கு அழைத்துச் சென்ற விஞ்ஞான தேவனின் பெயர், அந்த நாமத்தைச் சொல்லி நன்றிக் கண்ணீரோடு வணங்குகின்றது தேசம்.

வானில் சுற்றும் இந்திய செயற்கைக்கோளும், நிலவில் சுற்றும் கலனும் அந்த இந்தியனின் புகழை, இந்தியப் பெருமையாக வானில் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன‌.

தன்னலமற்ற சேவையால் என்றும் தேசத்தை காத்துக் கொண்டிருக்கின்றார் அந்த தவான்..