கந்தர்வ குரலோன் – எஸ்.பி. பால சுப்பிரமணியம்

கலைகள் என்பது தெய்வத்தின் வரம் எனச் சொல்லும் இந்துமதம், சில கலைஞர்களுக்கு கந்தர்வர்களின் அனுகிரகம் இருப்பதாக தன் ஞானத்தால் சொல்லும்

அந்த அனுகிரஹம் பெற்றவர்கள் தொடும் கலை சிறக்கும், காலத்துக்கும் அவர்கள் நிலைப்பார்கள், எது மாறினாலும் அவர்களுக்கு கொடுக்கபட்ட வரம் மாறாது, அந்த கலை மாறாது.

வாழும் காலமட்டும் அந்த கந்தர்வ அருள் அவர்களோடு இருக்கும், அந்த சக்தி அவர்களை பெரும் உச்சத்தில் வைத்து பெரும் ஜனவசியமும், மக்கள் அபிமானமும் கொண்டு நிறுத்தி வைத்திருக்கும்.

மிக சிலருக்கே அது அமையும், வெகு அபூர்வமாகவே அது அமையும், வெகு சிலரே காலத்தால் அப்படி உருவாகி வருவார்கள்.

இவர்கள் ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் சாதிப்பார்கள், தொட்டதெல்லாம் துலங்க வைப்பார்கள்.

இதற்கு பூர்வ ஜென்ம பலனும், முன்னோர்கள் தேடி வைத்த நல்ல கர்மாவும் ஒரு காரணம்.

அப்படி உருவாகி வந்தவர் அந்த “கந்தர்வ குரலோன்”.

அவர் தந்தை ஒரு கதாகாலட்சேபம் செய்பவர். ஆலயங்களில் உருக்கமாகப் பாடுபவர், திருப்பதி, திருக்காளத்தி எனப் பல பிரசித்தியான ஆலயங்களில் பாடியவர்.

அந்த அருள் இவருக்கு அப்படியே வந்தது, அதுதான் கடைசி நொடி வரை அவரை புகழின் உச்சத்தில் நிறுத்தியது.

இசையும் பாடலும் ஒரு தவம், மனதையும் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஒரே நிலையில் நிறுத்தும் ஒரு யோகம். அது ஒரு தவம்.

இதனாலே திறமையான, ஆத்மாவில் இருந்து பாடும் இசைக்கலைஞன் முகமும் மனமும் மிகத் தெளிவானதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும், ஒரு யோகிக்குரிய பக்குவமான முகம் நல்ல பாடகனுக்கும் வரும்.

அவர்களிடம் ஒரு அமைதி குடிகொள்ளும், வார்த்தைகளில் இனிமையும் நிறைவும் மின்னும், அந்த யோகத்தில் அமைதிபெற்ற மனம், அமைதியான பக்குவத்தையும் இன்னும் பல சிறப்புகளையும் கொடுக்கும்.

ஆண்டாண்டு காலம் தவமிருக்கும் யோகியின் பக்குவமான மனதையும் தேஜசான முகத்தையும் இசையில் மூழ்கும் ஒரு பாடகன் பெறுவான், பாடலில் அற்புதம் நிகழ்வதெல்லாம் அப்படியே.

இசையால் இறைவன் வந்தான், இசையால் மழை வந்தது என்பதெல்லாம் இசையால் அல்ல அந்த இசையினை தன் மனதின் யோகத்தால் தவத்தால் செய்யும் அந்த மனதின் சக்தியாலே.

அப்படித்தான் எல்லா இசைமேதைகளும் பாடகர்களும் இம்மண்ணில் வந்தனர், கோடிக்கணக்கான ராகங்களை பாடினர்.

அப்படி ஒரு பிறவியில் பாடலை பாடமுடியாத சிலர் அவர்களில் சிலர் மறுபிறப்பும் எடுத்து வந்தனர், ஒரு சிலரை நாம் அடையாளம் கண்டுகொண்டோம், அப்படி வந்தவரில் அந்த பால சுப்பிரமணியம் முக்கியமானவர்.

சுமார் 50 ஆண்டுகாலம் தென்னிந்திய மக்களை தன் குரலால் கட்டிப் போட்ட அந்த அற்புதத் தேன் குரலோன், கந்தர்வர் கலைவடிவம்.

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் அந்த அற்புத பாடகன் காலம் கொடுத்த வரம்.

அவர் பாட ஆரம்பமான காலங்கள் சுவாரஸ்யமானவை.

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள்

அது எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள்.

1960களின் மத்திய பகுதிகள் அப்படித்தான் இருந்தன‌

அப்பக்கமோ எந்த சங்கீதத்தையும் முறைபடி கற்காமல் பொறியியல் கல்லூரி ஒன்றில் மிக பிரமாதமாக பாடிகொண்டிருந்தான் அந்த பாலசுப்பிரமணிய எனும் பதின்மயது மாணவன்

அவனுக்கு குரு கிடையாது, முறைபடியான சங்கீதம் கிடையாது, சாதகம் கிடையாது இன்னும் பலவும் கிடையாது, தந்தை ஒரு கோவில் பாடகர் எனினும் அவரிடம் இருந்து முறைபடி ஏதும் பெற்றதும் கிடையாது

ஆனால் அவன் வம்சம் காலம் காலமாக கதாகாலட்சேபம் செய்த குடும்பம் என்பதால் சங்கீதம் காதின் வழியாக அவனுக்குள் செல்லாமல் ரத்தத்திலே வந்திருந்தது

எந்த பண்டிதனும் பாடமுடியாத ராகமெல்லாம் அவனுக்கு எளிதாய் வந்தது

குயிலோசையினை இன்னொரு குயில்தான் அடையாளம் காணும் எனும் வகையில் அவனை மிக சரியாக அடையாளம் கண்ட ஜானகி அவனை மேடைகளில் பாட வெளிச்சம் கொடுத்தார்

ஜானகி பாடிய பாடல்களிலே அழகான பாடல் பாலசுப்பிரமணியத்தை அடையாளம் காட்டியது

அன்றைய திரையுலக சக்கரவர்த்தி எம்ஜிஆருக்கு தன் பின்னணி குரலுக்கு மாற்று தேவைபட்டது, சினிமாவில் தன் குரல் இளமையாய் பாட விருப்பம் கொண்டிருந்தார்.

காலம் மிக சரியான இடத்தில் பாலசுப்பிரமணியத்தை நிறுத்தியது.

பாலசுப்பிரமணியம் திரைக்கு வந்த கதை இப்படித்தான்

1970களில் அவர் எம்ஜிஆருக்கு பாட வருமுன் சுந்தர தெலுங்கிலும் சில பாடல்கள் பாடியிருந்தார், எனினும் அடிமைப்பெண் படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்பதே அவரின் முதல் தமிழ்பாடலாயிற்று

எம்ஜிஆருக்கு மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து சில பாடல்களை பாடிய பாலசுப்பிரமணியத்திற்கு 1975க்கு பின் வாய்ப்புகள் பெருகின.

அவரை தொடக்கத்தில் கைதூக்கிவிட்டது எம்.ஜி.ஆர் , அவர்தான் அவரை மேலேற்றிவிட்டார்

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த பின்னால் பல இளையவர்கள் சினிமாவுக்கு வந்தார்கள், அவர்களுக்கும் பாலசுப்பிரமணியம் குரல் அட்டகாசமாக பொருந்தியது

அப்பொழுது இளையராஜா யுகம் வேறு ஏற்பட மேடைபாடல் காலங்களிலே நண்பர்களாக இருந்த அவர்களுக்கு நேரம் போதா அளவு பாடல்கள் குவிந்தன‌

1980களில் உச்சம் பெற்ற எஸ்,பி.பி அதன் பின் கிட்டதட்ட 30 வருடங்கள் அதிலே நின்றார். தமிழ் மட்டுமல்ல தென்னக மொழி அனைத்திலும் பாடினார்

அன்று அவர் முகம் தெரியாது, இன்றுள்ள வசதி அன்றில்லை, வெறும் ரேடியோ மட்டுமே. கச்சேரிகள் என்ற கொடுமை தெருவுக்கு தெரு நடக்கும் காலகட்டமது

அங்கெல்லாம் எஸ்பி குரல் மட்டுமே ஒலித்தது. உண்மையில் வசீகரமான குரல் அது. வெண்கல குரலை தேனில் குழைத்து கொடுத்தது போல ஒரு ஏகாந்தம் அதில் உண்டு, இன்றுவரை உண்டு

எந்த பாடல் ஆனாலும் அதன் தன்மை மாறாமல் பாடுவதில் அவரை மிஞ்ச முடியாது. அது காதல், கடவுள், உருக்கம், துக்கம் என எதுவானாலும் அதுவாகவே உருகிபாடுவார்

தமிழகத்தில் எல்லோரும் அவர் குரலை கேட்டார்கள், அவரை தேடினார்கள்

பொதுவாக எல்லோரும் நடித்துவிட்டு பாடுவார்கள், ரஜினி கூட “அடிக்குது குளிரு..” என பயமுறுத்தினார், ஜெயலலிதா “அம்மா என்றால் அன்பு” அன்றே அரசியல் பாடினார் இன்னும் ஏராளம்

ஆனால் பாடிவிட்டு நடிக்க வந்தவர் எஸ்.பி, சீர்காழி கோவிந்தராஜனை போலவே பாடிவிட்டுத்தான் நடிக்க வந்தார், அவர் குரல் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அப்படி

உண்மையில் அற்புதமான நடிப்பு அவரிடம் இருந்தது. திருடா திருடா படத்தின் அந்த சுவாரஸ்யமான சிபிஐ அதிகாரியினை மறக்க முடியாது, காதலன் படத்தின் தந்தையினை மறக்க முடியாது இன்னும் ஏராளமான வேடங்கள்

சிகரம் படத்தில் ஒரு பாடகனாகவே வந்த அவரை யார் மறக்கமுடியும்?

அற்புத நடிகனும் அவருக்குள் இருந்தான் நேரம் வரும்பொழுது வெளிவந்தான், காதலன் போன்ற படங்களில் வந்தான்.

ஆச்சரியமாக முறையே சங்கீதம் படிக்காவிட்டாலும் எந்த ராகத்திலும், எந்த தாளத்திலும் அட்டகாசமாக பாடலை இழுத்துகொண்டு போகும் வித்தை அவருக்குள் இருந்தது

சங்கராபரணம் படத்திற்காக 4 மொழிகளிலும் விருது வாங்கிய சாதனையாளர் அவர் வாங்கியது சாதாரண விஷயம் அல்ல‌

4 மொழி இசை விற்பனர்களும் ஒரு குற்றம் கண்டுபிடிக்கமுடியாதபடி அப்பாடல் இருந்தது

பிறவி கலைஞன் என்பதால் அவருக்கே அது சாத்தியம்

அந்த பாடல் ஞானம் அவருக்கு எல்லா விருதுகளையும் கொடுத்தது, தேசிய விருதுகளை கொடுத்தது

அதன் பின் உயர பறந்த அவரின் கொடி பெரும் புகழை கொடுத்தது, 40 ஆயிரம் பாடலை பாடியவர் எனும் கின்னஸ் சாதனையினையும் கொடுத்தது

கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களுக்கு பாடியிருக்கின்றார், எம்.எஸ் விஸ்வநாதன் காலமுதல் இப்பொழுதிருக்கும் இசை அமைப்பாளர் அனிருத் வரை 5 தலைமுறையினருடன் பணி செய்திருக்கின்றார்

சுசிலாவோடு இணைந்து பாடியது முதல் ஜாணகி, வாணி ஜெயராம் என தொடர்ந்து இன்றைய பாடகிகள் வரை பாடியிருகின்றார்

கண்ணதாசன் காலமுதல் இன்றைய இம்சை கவிஞர்கள் காலம் வரை பாடியிருகின்றார்

நிச்சயமாக இது அவருக்கு பெரும் ஆசீர்வாதம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்

பாடகராக மட்டும் கடந்து செல்லமுடியாத மனிதர் அவர். இசை அமைப்பாளர், பிண்ணணி குரலாளர், நடிகர், தயாரிப்பாளர் என ஏக முகங்கள் உண்டு

சுமார் 45 படங்களுக்கு அவரே இசை அமைத்தார், சிகரம் போன்ற படங்கல் அதனில் முக்கியமானது

எல்லாவற்றிற்கும் மேல் கொஞ்சமும் பந்தா இல்லாத பாடகர், அவரின் பேட்டிகளிலோ நேரலை நிகழ்ச்சிகளிலோ கொஞ்சமும் ஆணவம் இருக்காது, யாரையும் புண்படுத்தும் சொற்களும் இருக்காது

ஜென்டில்மேன் என சொல்லபடும் அந்த பண்பு அவரிடம் நிரம்ப உண்டு

நிச்சயம் தமிழ் திரையுலகின் அற்புதமான பாடல்கள் 1970க்கு பின் கிடைத்தன, தமிழ் திரையிசையின் பொற்காலங்கள் அவை

கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சிலரும் பண்டைய இலக்கியங்களை பிழிந்து சாறு கொடுத்தனர். அந்த தேன் தமிழை தன் குரல் மூலம் உயர நிறுத்தியவர் எஸ்.பி.பி

மோகன் படத்தின் பொற்கால பாடல்கள், இளையராஜா இசையின் உன்னத காலங்களில் வந்த மணியோசை போன்ற பாடல்களில் பாலசுப்பிரமணியத்தின் பங்கு மகா அதிகமானது

மோகன் படங்கள் தொடர்ந்து வெற்றிவிழா கண்டன, 16 படங்கள் தொடர்ந்து வென்றன என்றால் அங்கே தூணாக நின்றவர் எஸ்.பி.பி

அவரால்தான் அந்த படங்கள் மட்டுமல்ல, அந்த காலங்களே இனிமையாயின, தமிழ் திரைய்லகின் மிக ரசனையான காலங்கள் அவர் பாடிய அந்த காலங்கள்

1970களில் அந்திம காலங்களில் பாட வந்த அவர் பின் ரஜினிகாந்தின் ஆஸ்தான பாடகராகிவிட்டார்

இந்த 50 வருடங்களில் ரஜினி எவ்வளவோ மாறினார், காலம் எவ்வளவோ மாறிற்று, இசைகள் மாறின, பாடல்கள் மாறின, கதை களம் மாறிற்று என்னவெல்லாமோ மாறிற்று

ஆனால் மாறாமல் இருந்தது பாலசுப்பிரமணியத்தின் குரல்

1970களில் ரஜினிக்கு பாடிய அதே குரல் 2020ல் தர்பார் படத்திலும் அப்படியே பாடிற்று, அது அப்படியே பொருந்தவும் செய்தது

அவரின் குரல் போலவே அந்த பணிவும் பண்பும் புன்னகையான முகமும் கடைசிவரை மாறவில்லை

இன்று அவரின் நினைவு நாள்

திரைபாடல் தாண்டி சீர்காழிக்கும், டி.எம் சவுந்திரராஜனுக்கும் அடுத்து மிக உருக்கமான பக்திபாடல்களை பாடியதும் அவர்தான்

அண்ணாமலையார் முதல் நவகிரகங்கள் வரை அவர் பாடிய பாடலெல்லாம் அவ்வளவு உருக்கமானவை, அதை கேட்டு கண்களை மூடுவது ஆழ்ந்த பிரார்த்தனைக்கு சமம்

இசை கலைஞர்கள் மரிப்பதில்லை, காலம் காலமாக அவர்களின் தவம் இன்னொரு பிறப்பெடுத்து வந்து கொண்டே இருக்கும், அந்த பாடல் யோகியும் மறுபடி நம்மிடை பிறந்து வருவார்

அதுவரை அவர் பாடல்களின் இனிமையான நினைவுகளோடு காத்திருப்போம்

பாடகன், இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகன் என எல்லா பக்கமும் முத்திரை பதித்த ஒரு கந்தர்வன் அவர்

குரலாலே மக்களை கட்டிபோட்ட ஒரு வரம் அவருக்கு இருந்தது, இன்றும் அவர் பெயரை சொன்னாலே அழுதுவிடும் அளவு ஏகபட்ட மக்களை வசிகரித்தவர்

அந்த பாடகனை நினைக்கும் போது அவன் பாடிசென்ற வரிகள் மறுபடி மறுபடி நெஞ்சில் அலைமோதுகின்றன‌

“ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான்பாடும் போது அறிவாயம்மா….” எனவும், “எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்” என்றும் கண்ணதாசன் அவனுக்காகவே எழுதிய வரிகள்

எந்த பாடல் என்றாலும் அந்த உணர்ச்சியினை அப்படியே பாடலில் கொண்டுவரும் ஒரு தனிப்பட்ட வரம் அவருக்கு இருந்தது

பழைய பாடலொன்று உண்டு, தாயினை தேடிவரும் மகனின் மனதின் குரலை அழகாக சொன்ன பாடல் அது, அது ஏதோ ஒரு படத்தில் எம்ஜிஆருக்காக எழுதப்பட்டு பின் சிவகுமார் படத்தில் பொருத்தபட்டது

“ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது

அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிர்கிறது”

என தொடரும் பாடல், பின் ஒரு கட்டத்தில் உருக்கமாகும், எஸ்பிபி எவ்வளவு உருக்கமான பாடகன் என்பது அப்போதுதான் தெரியும்.

இசைவிதிகளுக்கு உட்பட்டு பாடினாலும் ஒரு மகனின் ஏக்கம் அக்குரலில் அவ்வளவு உருக்கமாக வரும்

“அன்னை என்பது மானுடம் அல்ல, அதுதான் உலகத்தில் தெய்வீகம்.
அன்றவள் சொன்னது தாலாட்டல்ல, அம்மா பாடிய சங்கீதம் “

அந்த பாடலும் வரியும் யாருக்கு புரியுமோ இல்லையோ நீண்ட காலம் தாயை பிரிந்துவிட்டு சந்திக்க வரும் மகனின் மனதுக்கு புரியும்

இதுதான் எஸ்பிபி, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காலகட்டத்தில் அது குழந்தையோ, பால்யமோ, பதின்வயதோ, வாலிபமோ, வாழ்ந்து முடித்த முதிர்ச்சியோ ஒவ்வொரு பருவத்தையும் அவர் மறக்கமுடியாதபடி தொட்டுவிட்டார்

எல்லா பருவத்திலும் உடன் இருந்து வந்தவர் போல கலந்துவிட்டார், ஒவ்வொரு ஆன்மாவும் அவரால் ஏதோ ஒருவகையில் ஈர்க்கப்பட்டது

தாய் இருக்கும் போது அவளைத் தேடி வரும்போதெல்லாம் விமானப் பயணங்களில் அந்த பாடல்தான் ஒலிக்கும், மனம் ஏதோ செய்யும்.

இன்று அவளுமில்லை, பாலசுப்பிரமணியமுமில்லை. ஆனால் அவர் பாடல் அந்த நினைவுகளையெல்லாம் மீட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

எல்லோரின் நினைவிலும் இப்படி ஏதோ ஒரு வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அந்த கந்தர்வ பாடகன், அவனுக்கு ஒரு காலமும் அழிவில்லை

“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..”

என்ற வரிகளெல்லாம் அவனுக்கு எக்காலமும் பொருந்தி நிற்க கூடியவை, அவனை இயக்கிய அந்த மகாசக்தியே அவனுக்கான வரிகளை அவன் வாயாலே பாடவைத்து நிலைக்கவும் வைத்துவிட்டது.