குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம்
20/ 10/ 2023
தசரா பண்டிகை தேசமெங்கும் கொண்டாடபட்டாலும் தமிழகத்தில் அது விமரிசையாக கொண்டாடப்படும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயம்.
இந்துஸ்தானில் வெகு சிறப்பாக தசரா கொண்டாடபடும் இடங்களில் அது முக்கியமானது, அதுவும் பல வேடம் அணிந்த பக்தர்கள் விரதம் இருந்து காணிக்கை திரட்டி அதனை அம்மனுக்கு செலுத்தும் உன்னத பக்தி வேறு எங்கும் காணமுடியாதது
இன்று கடலோர சிறு ஊராக குலசேகரபட்டினம் சுருங்கிவிட்டாலும் அது மிக மிக பழமையானது, காவேரிபூம்பட்டின காலத்திலே அது உண்டு, அதற்கு முன்பே உண்டு
அன்று முக்கியமான துறைமுகமாகவும் அது இருந்திருக்கின்றது என்பதை காரைக்கால் அம்மையார் வாழ்வில் காணலாம், அம்மையார் பேய் உருவம் பெற்ற இடம் அதுதான்
காவேரிபூம்பட்டினத்தில் வணிகனாக வாழ்ந்த கோவலன் இந்த குலசேகரபட்டினத்தை மனதில் கொண்டுதான் பாண்டியநாட்டுக்கு வந்தான் எனும் குறிப்புகளும் உண்டு
அவ்வளவு பழமையான ஊர் அது, அதனால் அதன் ஆலயங்களும் அதன் கொண்டாட்டங்களும் பழமையானவை
அவ்வகையில் அந்த முத்தாரம்மன் ஆலயம் பிரசித்தியானது
அக்கோவிலில் சுயம்பாக சிவன் உண்டு, அவருக்கு ஞானமூர்த்தீஸ்வரர், ஞானாம்பிகை என எழுந்திருளியிக்கின்றார்கள் தெய்வங்கள்
இந்த அம்மன் , முத்து போன்ற அம்மன் நோயினை தீர்ப்பதால் முத்தாரம்மன் எனும் பெயர் கொண்டவள் என்றாலும், வங்க கடலின் சிறந்த முத்துக்களை பாண்டிய மன்னர்கள் ஆரமாக சூட்டியதால் முத்தாரம்மன் எனும் பெயர் கொண்டவளாக அமர்ந்திருகின்றாள் என்பதும் வரலாற்று செய்தி
மதுரை மீனாட்சிபோலவே இந்த குலசேகரபட்டின முத்தாரம்மனும் பாண்டியரின் வெகுவிருப்பமான தெய்வம், ஒரு காலத்தில் வெகுபெரிய ஊராக இருந்த இந்த துறைமுகம் பின் கடல்கோளால் மாறிவிட்டது
ஆனால் தெய்வம் மாறவில்லை அது தன் இயல்பிலே இருந்தது
இதனால் கடல்தொழில் இழந்ததால் விலகி சென்ற மக்கள் தெய்வத்தை அங்கு வந்துதான் வணங்கினார்கள், கடல் அழிவுக்கு பின் பல இடங்களில் அம்மக்கள் சிதறிவிட்டாலும் பின் அந்நிய படையெடுப்பு காலங்களில் சிதறினாலும் குலதெய்வமாக அவளே இருந்தாள்
இன்றும் தென்பகுதியின் ஏராளமான மக்களின் குலதெய்வம் அவள்தான்
அந்த முத்தாரம்மன் கோவிலில் தசரா வெகு விமரிசையாக கொண்டாடபடும், பகதர்கள் பல வேடம் அணிந்து வலம் வருவதை அங்கேதான் காணமுடியும்
ஏன் வேறு கோவில்களில் இல்லாத வழமை அங்குமட்டும் வந்தது?
அதற்கு காரணம் அங்கிருக்கும் சிவனும் அன்னையும், அவர் ஞானமூர்த்தீஸ்வரர் அன்னை ஞானாம்பிகை அவ்வகையில் இருவரும் ஞானத்தை வழங்கும் உச்ச தெய்வங்கள்
ஞானம் அளிக்கும் தலமாக அமைந்த தலம் அந்த குலசேகரபட்டினம்
அங்கே விரதம் இருப்பவர்கள் இஷ்டத்துக்கு கடவுள் வேடம் அணியமுடியாது அதற்கு பல பாரம்பரியங்கள் அன்றே இருந்தன
ஒவ்வொரு மனிதன் உள்ளும் ஒரு தெய்வ வடிவு உண்டு, தெய்வம் மனிதனின் மனதினுள் இருக்கின்றது, அந்த தெய்வ சக்தியினை வளர்த்து ஒவ்வொரு மனிதனும் தெய்வ நிலைக்கு மாறவேண்டும் என்பதை போதிக்கும் பக்தி முயற்சியாகத்தான் அது தொடங்கபட்டது
அது வெறும் கேளிக்கை அல்ல, வேடம் அணிந்து ஆடிபாடும் கூத்தும் அல்ல
அது வழிபாடு உன்னதமான ஞான போதனை, ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் தெய்வ நம்பிக்கையினை வளர்க்கும் ஒரு வழிமுறை
அக்காலத்தில் வேண்டுதலோடு வருபவர்கள் கோவிலுக்கு வந்து வணங்கி நிற்பார்கள், சோளி உருட்டுதல் போல முத்துக்களால் ஆன பகடைகள் அன்னையின் சன்னதியில் உருட்ட்படும்
அவள் கொடுக்கும் உத்தரவில்தான் ஒருவர் தனக்கான தெய்வ வேடத்தை போட்டுகொள்ள முடியும்
சினிமா கலைஞர்கள், இதர கூத்து கலைஞர்களை போல அல்ல இந்த வேடம், அதற்கு விரதம் இருக்கவேண்டும், முறையான வழிபாடுகளை செய்துகொண்டிருக்கவேண்டும்
சபரிமலைக்கு செல்வது போல கடும் விரதம் அவைகள்
இங்கே ஆணோ பெண்ணோ யார் என்றாலும் அம்மன் அனுமதிபடி வேடமிடலாம் ஆனால் விரதம் மிக முக்கியம
வேடமிட்டு இப்படி யாசகம் ஏந்தி அன்னைக்கு காணிக்கை வாங்குவதில்தான் அந்த கோவிலின் முழு தாத்பரியமே அடங்கியிருக்கின்றது
உண்மையில் வேடமிட்டு காணிக்கை வாங்குவதும் ஒரு வழிபாடே, அது ஞானம் பெருக்கும் வழி, முத்தாரம்மன் கோவில் அதை சரியாக நவராத்திரி காலங்களில் செய்கின்றது
தெய்வ வேடமிட்டு ஒருவன் செல்லும் போது அவனுக்குள் அவனை அறியாமல் தெய்வசிந்தனை மேலோங்கும், அந்த சிந்தனையில் மனம் ஒருமுகபடும் , ஒருமுகபட்ட மனம் தெளிவினை கொடுக்கும்
இப்படி தெய்வ வடிவங்களை மக்கள் காணும்போது அங்கே தெய்வ சிந்தனை அவர்களுக்கும் மேலோங்கும்
அங்கே காண்பதும் தெய்வநிலை, காணபடுவதும் தெய்வநிலை எனும் பெரும் பக்திமுயற்சி முன்னெடுக்கபடும், ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும்
கவலையிலும் துயரத்திலும் இருக்கும் மனிதன் தன் தெய்வதோற்றம் முன்னால் வந்து நிற்கும்போது பெரும் மகிழ்ச்சி அடைவான், நிம்மதி கொள்வான்
இப்படி பல நுணுக்கமான வழிகள் அங்கே போதிக்கபட்டன
அப்படியே யாசகம் என்பது எல்லோராலும் பெற்றுவிட முடியாது, தெய்வ வேடம் அணிந்து சென்றாலும் மனதின் ஆங்காரம் யாசகத்துக்கு கைநீட்ட தயங்கும்
ஒருமனிதனின் அகங்காரம் கர்வம் என எல்லாமும் வந்து தடுக்கும்
அதனை மீறி யாசகம் பெறும்போது ஆணவம் அகலும், பெரும் அகங்காரம் ஒழியும் அகங்காரமும் கர்வமும் ஒழியும் போது ஞானம் தானே கைகூடும்
இப்படி தெய்வவடிவம் ஏந்தி வீடு வீடாக ஊர் ஊராக செல்லும்போது அவனுக்குள் பல அனுபவம் ஏற்படும்,பலதரபட்ட மனிதர்களை அவன் பார்க்கமுடியும்
அங்கே நோயாளிகள் இருப்பார்கள், ஏழைகள் இருப்பார்கள், அங்கஹீனர்கள், தீரா வறுமை கொண்டவர்கள் இருப்பார்கள் அவர்களையெல்லாம் பார்க்கும் போது தெய்வம் தன்னை சரியாக படைத்தது பற்றியும், தன்னை நல்ல நிலையில் வைத்திருப்பதும் புரியும்
வசதியானவர்கள் தங்கள் வேண்டுதலை வாய்விட்டு சொல்லி காணிக்கை கொடுக்கும் போது எல்லா மானிடரும் துன்பமிக்கோரே, எல்லோருக்கும் ஒவ்வொரு கவலை உண்டு எனும் ஞானம் தெளியும்
இன்னும் எவ்வளவோ தத்துவங்கங்களை கொண்டதுதான் குலசேகரபட்டின முத்தாரம்மன் விழா
அது வெறும் மாறுவேட கேளிக்கை அன்று, மாறுவேடத்தில் யாசகம் பெறும் வழிமுறையும் அன்று, அது ஞானம் பெறும் ஏற்பாடு
நவராத்திரி காலங்களில் பக்தர்கள் நல்வழி பெறவேண்டும், நல்ல போதனை பெறவேண்டும் என செய்யபட்ட ஏற்பாடு
ஒவ்வொருவன் மனதிலும் பல வடிவங்களில் அசுரன் உண்டு, மகிஷாசுரன் போல பல வகை அசுர குணங்கள் உண்டு
நிறைவின்மை, பேராசை, ஆங்காரம், கடும்சினம், மோகம், பொன்னாசை , பெண்ணாசை என ஏகபட்ட ஆசைகள் அசுரகுணமாய் உண்டு
தெய்வ வேடமிட்டு அந்த குணங்களை நவராத்திரி காலங்களில் ஒழித்துகட்ட செய்யபட்ட ஏற்பாடுதான் இந்த வேடமணிதல் நிகழ்வு
இது இன்று நேற்று நடந்ததல்ல அக்காலத்தில் இருந்தே தொடர்ந்துவரும் நிகழ்வு
இதன் தாத்பரியம் அறியாதோர் அது வெறும் கேளிக்கை என்றும், கூத்து என்றும் பரிகசிக்கலாம் ஆனால் உண்மை அது அல்ல
அது ஞானம் வழங்கும் பயிற்சி, இறைநிலைக்கு மனிதனை உயர்த்தும் பெரும் பயிற்சி
கடவுள் வேடம் அணிந்து அவனை தெய்வமாக உணரவைப்பதும் மனதின் துர்குணங்களை அடக்கும் பயிற்சி
யாசகம் ஏற்கவைத்து அது எவ்வளவு கடினமானது என்பதையும் அதே நேரம் ஆங்காரத்தை உடைக்க செய்யும் பெரும் பயிற்சி
நாலுவீட்டில் யாசகம் பெற்றவன் பின் விரதம் முடிந்து தன் வீட்டுக்கு ஒருவன் யாசகம் வாங்க வரும்போது மறுக்கமாட்டான், தர்மம் ஏந்துபவன் மனம் அவனுக்கு புரியும்
பல வீடு ஏறி இறங்குவதால் எங்கே யாருக்கு எது தேவை என்பதும் அடுத்த மக்களின் சிரமமும் மனமும் புரியும், தன் தாழ்வு மனப்பான்மையில் இருந்து நீங்குவான்
தன்னையும் , உலகையும் புரிவதுதான் ஞானம், அந்த ஞானம் கிடைக்க தடையாய் இருப்பது அஹங்காரமும் ஆசையும் அறியாமையும்
தெய்வவேடமிட்டு யாசகமேந்த சொல்லி இந்த மூன்றையும் ஒழித்து நவராத்திரி காலங்களில் தன் பக்தன் ஞாம பெற அன்னை முத்தாரம்மன் வழிகாட்டுகின்றாள்
இந்துஸ்தானத்தின் மிக பழமையான அந்த குலசேகரபட்டினத்தின் ஆலயம், இந்துஸ்தானத்தின் பெரும் ஞானமரபை, இந்துக்களின் மாபெரும் ஞானபயிற்சியினை இன்றும் பின்பற்றி மக்களை பயிற்றுவித்தபடி தசரா கொண்டாட தயாராகின்றது
இந்துமதம் ஞானம் வழங்கும் மதம், யாசகம் பெறுவது ஞானம் அளிக்கும் பயிற்சி என சிவபெருமானையே அப்படி அலையவிட்டதாக சொல்லும் மதம்
யாச்கம் என்பது கர்மா தீர்க்கும், யாசகம் என்பது அகங்காரம் தீர்க்கும், யாசகம் என்பது சினமும் வன்மமும் அழிக்கும் பெரும் ஞானம் கொடுக்கும்
அதை தெய்வத்தின் பெயரால் வேடமிட்டு யாசகம் பெற்று ஞானம் பெற போதிக்கின்றது அந்த குலசேகரபட்டின ஆலயம்
நவராத்திரி காலத்தில் இந்த காட்சிகளை அங்கு நிறைய காணலாம், அதுதான் எப்படியான பெரும் ஞான பரம்பரை இந்த இந்துபரம்பரை என்பதையும், எவ்வளவு நுணுக்கமான வாழ்வியல் பயிற்சிகளை அது கொடுத்தது என்பதையும் மிக மிக உன்னதமான ஞானத்தை அது போதித்தது என்பதும் தெரியும்
தெற்கே ஒரு போதனை எக்காலமும் உண்டு, நவராத்திரி காலங்களில் வீட்டுக்கு வந்து நிற்பது தெய்வ வடிவமுள்ள பக்தர்களாக மட்டுமல்ல அது அன்னை முத்தாரம்மனாகவே கூட இருக்கலாம் என்பார்கள்
அதனால் இக்காலகட்டத்தில் கையேந்தும் பக்தர்களுக்கு முடிந்ததை மறுக்காதீர்கள், அது அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கர்மம் தீர்க்கும் வாய்ப்பு
கொடுக்க கொடுக்க கர்மம் குறையும், ஆணவம் அழிந்து வாங்கி அன்னையிட்ம் சேர்ப்பதில் அவர்கள் கர்மமும் அழியும்
நீங்கள் கொடுபப்தற்கு ஏற்ப ஞானமும் பொருளும் அன்னை உங்களுக்கு நிரம்ப தருவாள், முத்துபோல் வாழ்வையும் மனதையும் மின்னவைப்பாள் அது சத்தியம்.