ஐப்பசி பவுர்ணமி – அன்னாபிஷேகம்
“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது. அதைக் கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதைச் சொல்ல விளைகின்றோம்.
இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல. சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம்.
சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை. அதாவது பக்குவப்பட்ட நிலை. உண்பதற்கு தயாரான பக்குவத்துக்கு வந்துவிட்ட அரிசியினை சோறு என்கின்றோம். அது அரிசி பக்குவமாக வெந்த நிலை என்பதையே குறிக்கும்.
பழந்தமிழரிடம் சோறு எனும் வார்த்தை பக்குவபட்டதை அல்லது மென்மையாகிவிட்டதை குறிக்கும். தமிழரிடம் அரிசி சாதத்துக்கு அடிசில் எனும் பெயர்தான் இருந்ததே தவிர சோறு எனும் வார்த்தை இல்லை.
“நெய்பட அடிசில்” எனச் சொல்லும் வரியும் “அக்கார அடிசில்” எனச் சொல்லும் வரியும் இங்கே சோற்றுக்கு அடிசில் எனும் பெயர் இருந்ததைத்தான் சொல்கின்றன.
ஆம் சோறு என்பது அரிசிச்சோற்றை மட்டும் குறிக்கும் என்பதும் தவறான வாதமாகும், அடிசில் என்பதுதான் சரியான வாதமாகும்.
அது அன்னம் போல் வெண்மை நிறத்துக்கு வருவதால் அன்னம் என்றும் அழைக்கப்பட்டது.
நெல்லுச்சோறு, கம்பஞ்சோறு, வரகு சோறு, மூங்கில் சோறு என எல்லா தானியனங்களின் பக்குவபட்ட நிலையே சோறு.
மென்மையான பகுதி அல்லது பக்குவமான நிலை சோறு எனப்படும் என்பதற்கு சோற்றுக்கற்றாழை சிறந்த உதாரணம்.
ஆம், கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, யானை கற்றாழை என பலவகை உண்டு. சோற்று கற்றாழையின் உட்பகுதி சோறு போல மென்மையானது என்பதால் அது சோற்றுக்கற்றாழை என்றாயிற்று.
இன்னும் கிராமங்களின் வார்த்தைகளில் கூட பனைமரத்தின் மென்மையான பகுதி பனஞ்சோறு என்று அழைக்கபடும். வார்த்தை சோறு என்பது அரிசி சாதம் அல்ல, அது மென்மையான பதநிலை என்பதை சொல்கின்றது.
இப்பொழுது முக்கியமான விஷயத்துக்கு வரலாம், “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என ஏன் சொன்னார்கள்?
எங்கே இறைவன் இருப்பானோ அந்த மனதில் ஞானம் இருக்கும். ஞானம் இருக்கும் இடத்தில் கடினத்தன்மை இராது. மாறாக அன்பும் கருணையும் மிகுந்திருக்கும், அந்த மனம் இளகிய மனமாக “சோறு” எனும் பக்குவ நிலையினை அடைந்திருக்கும்.
இதைத்தான் “சோறு கண்ட இடம்” அதவாது ஞானமிக்க இளகிய மனம் இருக்குமிடம் சொர்க்கம் என்றார்கள் இந்துக்கள்.
இன்னும் அவர்களிடம் இதை விளக்கும் வாக்கியம் உண்டு “ஆத்துக்குள் நின்று அரோகரா அரோகரா எனக் கத்தினாலும் சோற்றில் உண்டாம் சுகம்” என்பது சித்தர் வாக்கு.
இது “அகத்துக்குள் இருந்து அரோகரோ என கத்தினாலும் சோற்றுக்குள் உண்டாம் சுகம்” என்ற வரியின் திரிபு.
அகம் என்றால் வீடு அல்லது இறைவன் இருக்கும் ஆலயத்தில் நின்று அரோகரா எனச் சொல்லிக் கொண்டிருந்தாலும், மனம் ஒரு பக்குவ நிலை அதாவது சோறு போன்ற பதநிலையினை அடைந்தால்தான் நிம்மதி கிட்டும் என்பதே சித்தர் சொன்ன பொருள்.
ஆம், சோறு என்பது அரிசியினை பொங்கிவைக்கும் விஷயம் அல்ல, சோறு என்றால் பதம் எனப் பொருள்.
சாறு, சேறு, சோறு என மூன்றும் தொடர்புடைய வார்த்தைகள், சாறு என்றால் நீர், சேறு என்றால் கூழ், சோறு என்றால் மிருதுவான நிலை, மிதமான பக்குவம்.
ஆம் அந்த சரியான பக்குவ நிலைதான் “சோறு”.
இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்லலாம்.
சமஸ்கிருதத்தில் சாதம் என்றால் அது மூலப்பொருள்.
“சத்” என்பது பரம்பொருளைக் குறிக்கும் ஒரு வார்த்தை. சாத்வீகம், சாக்தம் என்பதெல்லாம் அதன் சாயலான பொருளே, சத்+அம் என்பது ஒரு பக்குவ நிலையினைக் குறிக்கும் வார்த்தை.
ப்ரசாத் அல்லது பிரசாதம் என்பது இறைவனுக்கு இடும் படையலாயிற்று, இன்றும் கோவில்களில் கொடுக்கும் பிரசாதம் என்பதன் பொருள் “இறைவனுக்கு படைக்கபட்டது” என்பதே.
(வரப்பிரசாதம் எனும் வார்த்தை இறைவன் வழங்கிய வரம் என்று பொருளானதும் இப்படித்தான். ப்ரசன்னம் எனும் தோன்றுதலை குறிக்கும் வார்த்தை, வெளிப்படுவதை குறிக்கும் வார்த்தை. பிரசவம் என்றானதும் இப்படிதான்.
பிரசவம் எனும் வடமொழிச் சொல்லுக்கு புறம்தருவித்தல் எனும் அழகான தமிழ்ச் சொல் உண்டு, அது கடல் கடந்த தமிழரிடம் இன்றும் உண்டு)
ஆம், சாதம் என்பது அரிசி சோற்றை குறிக்கும் என்பது தவறான வார்த்தை.
சாத்துதல், படைத்தல் எனும் பொருளில் வரும் வார்த்தை அது. இன்றும் வைணவர்கள் இறைவனுக்கு சாற்றிய அமுதமான அடிசிலை இறைவனுக்கு “சாற்றிச் சொன்ன அமுது’ என்பதாக ‘சாத்தமுது’ எனத் தமிழில் சொல்வார்கள்.
சாத்திய அமுது என்பது திரிந்து சாதம் ஆகியிருக்க சில வாய்ப்புகள் உண்டு
இதனால் ஆழச் சிந்தித்தால் இன்னும் விஷயம் விளங்கும்.
ஏன் எத்தனையோ தானியங்கள் இருந்தபொழுது சோறு படைத்தார்கள்? சிவனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் இதர அரிசிகள் படைக்காமல் ஏன் சோற்றால் அபிஷேகம் செய்தார்கள்?
அதுவும் புழுங்கல் அரிசியில் செய்யாமல் ஏன் பச்சரிசியில் செய்தார்கள்?
இரு விஷயம் முக்கியமானது. முதலில் அரிசி அன்று அபூர்வ பொருள் அதிகம் விளையாது. அன்றாட உணவில் கம்பும் கூழும் உண்டே தவிர அரிசி அதிகம் இல்லை, அந்த நாள் இறைவனுக்கு சாத்துதல் எனும் பெயரில் மக்களெல்லாம் வயிறாற உண்ண வைக்க நோக்கம் இருந்தது.
வெண்மை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துமதம் உடை, திருநீறு போல அரிசி அன்னமே வெண்மையாக இருப்பதைக் கண்டது. ஆம் அரிசி அன்னம் போல் மனம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதும் தத்துவம்.
இரண்டாவது கண்டிப்பாக பச்சரிதான் வைப்பார்கள். காரணம் அவித்த நெல் முளைக்காது. அதாவது அதில் உயிர் இல்லை, அதை அவித்தால் இறந்ததை அவித்ததாகின்றது. உயிர் இல்லாததை இறைவனுக்கு படைக்காமல் பச்சரிசி எனும் அவிக்காத அரிசியினை முதல் பொங்கலாக, படையலாக இட்டார்கள்.
சோறு எனும் நிலைக்கு அரிசி பக்குவப்பட்டு மானிடருக்கு பயனாவது போல, மனம் பக்குவப்பட்டு மானிடருக்கும் இறைவனுக்கும் மனிதன் பயனுற வாழவேண்டும், பக்குவப்படா அரிசி பசியாற்ற உதவாது. பக்குவப்படா மனித மனம் இறைவனை அடையாது.
இதுதான் சிவலிங்கத்துக்கு அன்னம் சாற்றும் தத்துவம்.
(இறந்தோருக்கு பிண்டம் வைப்பதிலும் இந்த அர்த்தம் உண்டு, நான் பக்குவப்பட்டுவிட்டேன். இறப்பு இயல்பானது தவிர்க்க முடியாதது என அதைத் தாங்கும் பக்குவத்தை அடைந்துவிட்டேன் எனப் பொருள்.
மூன்று பிண்டம் என்பது முக்காலமும் சாவு உண்டு என மனதைப் பக்குவப்படுத்தும் ஒரு தத்துவம் )
சரி, ஐப்பசியில் ஏன் சரியாக வைத்தார்கள்? எத்தனையோ காலம் இருந்தும் ஐப்பசி மாத பவுர்ணமிக்கு ஏன் அன்னமிட்டார்கள்?
ஆடியில் விதைப்பது புரட்டாசி இறுதியில் அறுவடையாகும், மறுபடி ஐப்பசியில் விதைப்பது தைமாதம் அறுவடையாகும்.
ஆடிமாத காவேரி பொங்கி அதன் விளைச்சலின் முதல் படையல் சிவனுக்கு இடுதல் விசேஷம். தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்ட லிங்கத்துக்கு பிரம்மாண்ட அன்னம் சாத்தபட்டது இதனாலேதான்.