வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து
வள்ளுவன் ஒரு சுத்தமான இந்து என்பதை எவ்வளவோ வழிகளில் சொல்லமுடியும். அதை தயக்கமின்றி விளக்கலாம்.
“ஆதி பகவன்” என்பது இந்துக்களின் சிவனையும் சக்தியினையும் குறிக்கும் சொல். இன்றும் “பகவதி” என்றே அன்னை ஆதி தமிழான மலையாளத்தில் அழைக்கப் படுகின்றார்.
“ஓம் நமோ பகவதே” என்பதே இந்து மந்திரங்களின் மூல மந்திரம், தொடக்க மந்திரமாக இன்று வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றையும் ஆதிபகவன் பெயரைச் சொல்லி அழைத்து தொடங்குவது இந்துக்கள் மரபாய் இருந்தது, வள்ளுவன் ஒரு இந்துவாக அதைச் செய்தான்.
இதனை அவன் தன் குருவாகிய ஒளவையாரிடம் இருந்து பெற்றுக் கொண்டான். உண்மையில் வள்ளுவனின் 1330 குறளும் ஒளவையின் ஞானகுறளின் விரிவாக்கம்.
ஞானகுறள் என்பது முழுக்க ஞான யோகத்தை விளக்கி, அதன் மூலம் முக்தியினை அடையச் சொல்லும் வழி. வள்ளுவன் அதனையே அறம், பொருள், இன்பம் அதன் மூலம் வீடுபேறு என விளக்கிச் சொன்னான்.
இரண்டுமே இந்து தர்மப்படி இறைவனை அடைவது என்பதே. ஔவை சுருக்கமாகச் சொன்னதை விளக்கமாக, எல்லா வழியினையும் கடந்து கர்ம யோகமாக வாழ்வது எப்படி என்பதே வள்ளுவன் விளக்கும் குறள்.
ஒளவை தன் குறளை, சிவனைத் தொழுது தொடங்கினாள் இப்படியாக. ஆதி என்பது ஆதிமூல பரம்பொருளை குறிப்பது.
“ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்”
வள்ளுவனும் அப்படியே “ஆதி பகவன் முதற்றே உலகு” எனச் சொன்னான். இது “ஓம் நமோ பகவதே” எனும் மூல மந்திரத்தின் இன்னொரு வடிவம் அன்றி வேறல்ல.
வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் இதோ.
ஆளாளுக்கு எழுதிய விளக்கங்களில் அர்த்தம் மாறிற்றே தவிர, மூலம் ஒளவை சொன்ன அந்த வரியே.
ஒளவையின் ஞானக்குறளின் சாயலே திருகுறள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. இந்து ஞான போதனையாக ஒளவை எழுதியதை தழுவித்தான் வள்ளுவன் குறள் பாடினான்.
இன்னும் பார்க்கலாம்.
அடுத்து இறைவன் எனும் சொல் தமிழருடையது. அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர். மற்ற மதத்தவருக்கு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது.
சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை. அவர்களின் சொல் கடவுள் அல்லது வேறு பெயர்கள்.
இந்துக்களின் சொல்லை வள்ளுவன் அப்படியே வைத்திருக்கின்றான்.
அப்படியே தெய்வம் என்பதும் இந்துக்கள் பெயரே, தமிழ் இந்துக்கள் வணங்கப் பயன்படுத்திய பெயர். “வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்” என இந்துக்கள் அடையாளத்தை வைக்கின்றான் வள்ளுவன்.
முத்தாய்ப்பாக ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தாதவன் நிலைக்கு “இந்திரனே சாலுங் கரி” என ஆணித்தரமாகச் சொல்கின்றான்.
பெண்ணாசையால் இந்திரன் பட்டபாடுகளை சொல்லும் குறள் அது. இந்திரன் கதை இந்துமதம் தவிர எந்த மதத்தில் இருந்தது?
அடுத்ததாக அட்டகாசமாக கடவுளின் 8 குணங்களை குறித்து “கோளில் பொறியியற் குணமிலவே எண்குணத்தான்” என்கின்றான் வள்ளுவன். அதாவது கடவுளுக்கு 8 குணம் உண்டாம்.
இதையே அப்பரும் “எட்டு வான் குணத்து ஈசன்” என அழகாகக் குறிப்பிடுகின்றார். ஆக வள்ளுவன் இந்துக்களின் நம்பிக்கையினை குறளில் வைத்திருக்கின்றான்.
பிறவிப்பெருங்கடல் என வாழ்வினை சொல்வது இந்துக்களே. வள்ளுவன் அதனைத் தன் குறளில் வைத்திருக்கின்றான்.
இன்னும் மலர்மிசை ஏகினான் என மிக அழகாக இந்து கடவுள்களைக் குறிக்கின்றான்.
வேறு எந்த மதத்து தெய்வம் மலர்மிசை ஏகிற்று?
“தவ்வையை காட்டிவிடும்” என சீதேவி மூதேவி விஷயங்களைச் சொல்கின்றான் வள்ளுவன். இந்துமதம் தவிர எந்த மதத்தில் சீதேவி மூதேவி நம்பிக்கை உண்டு?
தானமும் தவமும் என இந்துக்களின் நம்பிக்கையினையே வள்ளுவன் சொல்கின்றான்.
இந்துக்களின் தர்மத்தையே துறவு முதல் பல இடங்களில் அவனால் குறளாக வைக்க முடிந்தது.
“ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் “
“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்“
எனப் பசுவினையும் அந்தணனையும் பற்றிச் சொல்கின்றான் வள்ளுவன். இந்துமதம் தவிர எந்தமதம் பசுவினையும் அந்தணரையும் கொண்டாடிற்று?
ஊழ் பற்றி வள்ளுவன் ஒரு அதிகாரமே இயற்றினான். கர்ம வினைப்பற்றி, விதி பற்றி இந்துமதம் தவிர வேறு எந்தமதம் சொல்லிற்று?
தவம், தியானம், அந்தணர் வழிபாடு முறை என இந்துமதம் தவிர எந்த மதம் சொல்லிற்று?
நன்றாக ஆராய்ந்து படித்துப் பாருங்கள். வள்ளுவன் ஒரு இந்து என்பதும், இந்துக்களின் நம்பிக்கையினையும், தத்துவத்தையும் அவன் குறளாக வைத்திருகின்றான் என்பதும் புரியும்.
குறள் இந்துக்களின் நூலாகவே 1930 வரை சைவ சிந்தாந்த கழகம், ஆதீனங்கள் என எல்லாவற்றாலும் கருதப்பட்டது.
தொடக்க கால பிரிட்டிசார் கூட இந்து நூலாகவே கருதினர், உண்மையும் அதுவே.
குறள் இந்துக்கள் அடையாளம் அல்ல என்பது 1930களுக்கு பின் வந்த திராவிட புரட்சி, கடவுள் மறுப்பு காலங்களில் செய்யப்பட்ட கட்டுக்கதையே அன்றி வேறல்ல.
மிக மிக முக்கியமான விஷயம் கள்ளுன்ணாமை, கொல்லாமை , புலால் மறுத்தல் என இந்துககளின் மரபை, வாழ்வியலை அழுத்திச் சொன்னான் வள்ளுவன்.
அதனை அனுதினமும் ஒயின் குடிக்கும் கூட்டமும், பன்றி மாமிசம் வரை அனுமதிக்கபட்ட கூட்டமும் எப்படி எங்கள் நூல் எனக் கொண்டாட முடியும்?
வள்ளுவன் லோகம், லோக நலன் என எந்நாளும் சொன்ன இந்து மரபில்தான் “உலகு” என எல்லா இடத்திலும் பாடினான். ஒரு இடத்திலாவது தன் இடம், தன் மதம், தன் குலம் எனப் பாடவே இல்லை.
அப்படியான வள்ளுவன், உலகம் என எப்போதும் உலக நலன் பேசிய வள்ளுவன், யூதநலம் ஒன்றையே பேசிய கிறிஸ்துவின் வழி வந்தவனாக எப்படி இருக்க முடியும்?
வள்ளுவன் ஒரு இந்து. அதை எங்கும் இந்துக்களால் நிரூபிக்கமுடியும். அவர்கள் ஒரு ஆதாரத்தை காட்டினால் இந்துக்கள் ஆயிரம் ஆதாரங்களை காட்டமுடியும்.
அந்த பத்து லட்சமெல்லாம் எமக்கு அவசியமில்லை. மாறாக அதனை அவர்கள் தங்கள் மனநல சிகிச்சைக்கே பயன்படுத்திக் கொண்டு புத்தி தெளியட்டும்.