நான் எப்படி எழுத வந்தேன்?
நான் எப்படி எழுதவந்தேன் என்றால் என்னை இழுத்து வந்தவர் அவர்தான். சேட்டை அதிகமான மந்தியினை நோக்கி கல்லெறியும் ஒருவன், அட நமக்கும் கல்லெறிய வருகின்றதே என வீசிப் பழகி, பின் ஈட்டி எறிந்து , துப்பாக்கி சுட்டு பழகுவது போல் நம் நிலைமையும் ஆகிவிட்டது.
நிஜத்தில் நாம் எதுவும் எழுதியதில்லை. 10ம் வகுப்பு படித்தபொழுது எதையோ எழுதிக்காட்டி “அதிகப்பிரசங்கி” என தமிழம்மா பேப்பரை கிழித்துபோட்டது நினைவிருக்கின்றது. அதன் பின் எதையும் எழுதியதில்லை. கட்டுரை போட்டியோ, பத்திரிக்கையோ எங்கும் எழுதியதில்லை.
கல்லூரி முடியும் பொழுது சக மாணவிக்கு ஆட்டோகிராஃபில் நாலுவரிக்கு 10 வரி எழுதப்போய் அதை வாசித்தவள் “கடைசி நாளில் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன், நல்ல வேளையாக என் வாழ்க்கையினை காப்பாற்றிவிட்டாய்” என தலைதெறிக்க ஓடிய காட்சியும் உண்டு.
இந்த முகநூலில் கூட முதலில் சமர்த்தாக “பார்ம் வேலி” என்பதைத்தான் விளையாடிக் கொண்டிருந்தேன்.
ஆனால் வாசிக்கும் வழக்கம் மிகச்சிறுவயதிலே இருந்தது. அப்படியே நாட்டு நடப்பை கவனிக்கும் வழக்கம் இருந்தது. எதையும் எழுதி வழக்கமில்லை.
அப்படி இருந்த எம்மை எழுத வைத்தது யாரென்றால், அது அங்கிள் சைமன்.
2010 வாக்கில் அன்னாரின் அட்டகாசம் எல்லை மீறி இருந்தது. சொல்வதெல்லாம் பெரும் பொய்களும் புரட்டுகளுமாக இருந்தன.
இலங்கை விவகாரங்களை வெகு அணுக்கமாக கவனித்து வந்ததால், இந்தப் புரட்டினை தாங்க முடியவில்லை. அதையும் மீறி தாய்நாட்டுக்கு விரோதமான பேச்சுக்களை அவர் பேசும்பொழுது நாமும் சில விஷயங்களைச் சொன்னோம்.
அப்பொழுது திமுகவினர் சைமனை தாக்க தடுமாறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நாம் உற்சாகமானோம், வளைத்துக் கொண்டார்கள்.
அப்பொழுதுதான் எமக்கு எழுதவரும் என்பதே எமக்குத் தெரிந்தது.
டைகர் கும்பலின் பெரும் பிம்பத்தை முதலில் உடைத்தவர்கள் வரிசையில் நாமும் உண்டு. பெரும் மிரட்டலுக்கு இடையில் நாம் ஒரு இந்தியனாக அதைச் செய்தோம். அதுதான் நமக்கு கவனம் பெற்றுத் தந்தது. திமுக காங்கிரஸ் கோஷ்டிகள் நம்மை கவனிக்க வைத்தது.
இன்று தமிழகத்து சங்கிகளுக்கு இருக்கும் மிரட்டல் 2010களில் தேசாபிமானிகளுக்கு இருந்தது. ஆனால் அந்த ஆபத்து உலகம் தாண்டி இருந்தது.
வம்பு வழக்கெல்லாம் அல்ல, அது உயிராபத்து. புலிகளைப் பற்றி பேசினாலே வரும் பெரும் ஆபத்து.
நாம் அப்போது நாட்டுக்காக உண்மையினை எழுதும்போதுதான் உபிக்கள் ஓடி வந்தார்கள், காங்கிரசாரும் வந்தார்கள்.
அப்பொழுது நம் தேசாபிமான எழுத்துக்கள் அவர்களுக்கு தேவையாக இருந்தன, ஒரே காரணம் அங்கிள் சைமன்.
அப்படித்தான் நாம் கவனம் பெற்றோம்.
( இந்த 2012ம் ஆண்டுதான் திருமதி சுந்தர்.சி டைகர் ஒரு டெரரிஸ்ட் எனச் சொல்ல, அவர் வீட்டுமேல் கல்லெல்லாம் எறிந்தார்கள், எனினும் அந்த தைரியம் கவனம் பெற்றது.
அந்த தைரியத்துக்காய் நாம் குரல் கொடுத்தபோது எது என்னவெல்லாமோ ஆனது வேறு விஷயம். )
எதையெல்லாமோ எழுதி குவித்தோம், நாம் எதெல்லாம் எழுதினோம் என்பது எமக்கே தெரியாத அளவு எழுதினோம், பலர் கவனிக்கத் தொடங்கினார்கள்.
திமுக தரப்பு கொண்டாடிற்று, அங்கிருக்கும் பெரும் தலைகளெல்லாம் எளிதில் பழக்கமாயின.
ஆனால் 2014ம் ஆண்டு மோடி வந்தபின் நாம் தேசாபிமானியாக நீடிக்க, அவர்கள் திராவிடம், தமிழ் என தேச எதிர்ப்பினை, மோடி எதிர்ப்பாக காட்ட, நாம் வெளிவந்துவிட்டோம்.
அதன்பின் தேசாபிமானமாக மட்டும் எழுதிக்கொண்டிருந்தோம், வேறு எதுவும் எழுதத் தோன்றவில்லை.
இந்த கொரோனா காலங்களின் முடக்கத்தில் பகவத் கீதை மனதைத் தொட்டது. அதனை எழுதும் பொழுதுதான் சம்பத்லக்ஷ்மி வந்து நாயன்மார் எழுதச் சொன்னார்கள்.
அவர் பாலகுமாரனின் உதவியாளராக இருந்தவர். அவரே சொல்லும்பொழுதுதான் நம்பிக்கை வந்து நாயன்மார் தொடரை எழுதினோம்.
அதை எழுத எழுதத்தான் இந்தியாவின் ஞானமரபும், இந்துமதம் பற்றியும், இங்கு நடந்த இந்துத் துவேஷம் பற்றியும் ஒரு தெளிவு வந்தது.
அந்தத் தெளிவுதான் இப்பொழுது ஏகப்பட்ட இந்துப் பாடல் விளக்கமும், வீரசிவாஜி தொடரையும் எழுதவைத்து இவ்வளவு பேரை பின் தொடரவும் வைக்கின்றது.
இனி நாமே நினைத்தாலும் எழுதுவதை நிறுத்த முடியாதபடி பலர் நம்மை எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்காக இதனை தொடரத்தான் வேண்டும்.
என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த இந்து மதத்துக்கும் இவ்வளவு பெரிய ஞானக்கடலுக்கும் சம்பந்தே இல்லாத என்னை, இங்கு இழுத்து வந்தது அங்கிள் சைமனார்தான்.
காட்டில் விலங்குகள் வேட்டையாடிய எத்தனையோ பேரை கோவிலுக்கும் ஆன்மீகத்துக்கும் இழுத்து வந்த காட்சியெல்லாம் புராணங்களில் உண்டு.
அப்படி எம்மை இழுத்து வந்தவர் அங்கிள் சைமனார்தான்.
எம்மை இங்கு இழுத்து வந்தது அவர்தான்.
அவரது ஆமைக்கறி அழிச்சாட்டியம்தான்.
வீதியில் வம்படி செய்து கொண்டிருந்த எதையோ அடிக்கக் கிளம்பியவனை, நாட்டை காக்கும் ராணுவத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டது போல் ஆகிவிட்டது நம் நிலைமை.
ஒருவகையில் உபிக்கள் எப்படியானவர்கள்? எப்படியான உள்நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதிகள் எனக் காட்டித் தந்தவரும் அவர்தான்.
இன்று நாம் அதே வேகத்தில் அவர்களோடு இருந்திருந்தால் திமுக அரசின் பதவிகள் கூட தேடி வந்திருக்கும். எமக்கு அது தெரியும்.
ஆனால் நாடு முக்கியம் அல்லவா? இந்த நாடும் அதன் கலாச்சார மாண்பும் முக்கியம் என்றுதான் அதையெல்லாம் விலக்கி வந்திருக்கின்றோம்.
எவ்வளவோ பெரும் வாய்ப்புகளை உதறிவிட்டுத்தான் அல்லது ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் எப்பொழுதும் போல தேசாபிமானியாகவே நிற்கின்றோம்.
அவ்வகையில் அங்கிள் சைமன் சில உண்மைகளை எமக்கும் அவரை அறியாமலே தெரியப்படுத்தியிருக்கின்றார்.
அங்கிள் ஒருகாலமும் திருந்தப்போவதுமில்லை, அவரின் காமெடிகள் குறையப் போவதுமில்லை. சீனிக்கிழங்கை தின்னும் எதுவோ செவி அறுத்தாலும் நிற்காது எனும் அளவுக்கு அவர் பணத்தில் ருசி கண்டுவிட்டார், இனி விடமாட்டார்.
அவருக்கு இன்று (நவம்பர் 8) பிறந்த நாள் என்கின்றார்கள். அவர் பிறந்த காரணம் பல பேரை முட்டாளாக்க என்றாலும், சிலரை சிரிக்க வைக்க என்றாலும், எம்மையும் எழுத வைத்திருக்கின்றார்.
இன்னும் பலரை எழுதவைக்க அவர் வாழட்டும், பலரை உருவாக்கட்டும்.
சைமனிடம் நாம் கேட்பது ஒன்றுதான். மயிலுக்குத் தோகை அழகு, சேவலுக்கு கொண்டை அழகு.
அது போல சீமானுக்கு அந்த பொய்தான் அழகு.
தயவு செய்து திருந்தவேண்டாம், இப்படியே தொடரவும். அதுதான் தமிழர் சிரிக்க நல்லது.
நின்றுபோன கடிகாரமும் இருவேளை சரியான நேரம் காட்டும் என்பார்கள். அப்படி திடீரென சில உண்மைகளை அங்கிள் கேட்டுவிடுவதும் உண்டு.
திராவிட அழிச்சாட்டியத்தின் சில அட்டகாசங்களை அன்னார் கேட்பார். ஆனால் ஓவராகப் பொய் சொல்லி விஷயத்தை குழப்பிவிடுவார் என்பதுதான் சோகம்.
எம்மையும் எழுத்தாளனாக்கிய அந்த மகானுக்கு நன்றிகள். அவர் 60 ஆயிரம் பிறை காண வாழ்த்துக்கள். அவர் வாழட்டும்! தமிழகம் சிரிக்கட்டும்! எல்லோரும் மகிழட்டும்!