சுதந்திர இந்தியாவின் முதல் சங்கி, பூரண இந்து – ராஜாஜி
அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி. அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி. லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம்.
சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசப்பணி என பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான்.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகப்படுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்தது அந்த மாமனிதனே.
அந்த மகா மனிதனைத்தான் அவன் பிராமணன் என்பதாலும், இந்து என்பதாலும், மிகப்பெரிய அறிவாளி என்பதாலும், அதையும் தாண்டி அப்பழுக்கற்ற தேசபக்தன் என்பதாலும் குறிவைத்து சாய்த்தது.
ராஜாஜியினை இட ஓதுக்கீட்டுக்கு எதிரி, வர்ணாசிரமவாதி எனச் சொல்லும் கும்பலை இலங்கை நோக்கி அழைத்துச் செல்லலாம். அதாவது இலங்கையில் அடிமட்டத்தில் இருக்கும் பெரும்பான்மை சமூகம் முன்னேற இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தால் அது இன துவேஷம், சிறுபான்மையினரான தமிழரின் உரிமையினை பறிக்கும் செயல் என்பார்கள்.
ஆனால் அதையே இந்தியாவில் செய்தால் அது புரட்சி, சமூகநீதி என்பார்கள்.
அப்படிபட்ட தமிழகத்தில் சில பிராமணர்களின் அடையாளம் மறைக்கப்பட்டது. அவர்களின் புகழும், அவர்களின் தேசப்பற்றும், அறிவு கூர்மையும் மக்களிடம் இருந்து அப்பட்டமாக வெளியேற்றப்பட்டது. அவர்களில் ஒருவர்தான் ராஜாஜி.
ஆளுநர், மத்திய அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர். பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.
மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். அது பிரிட்டிஷ் இந்தியாவின் உச்ச பதவியாக இருந்தது.
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சுருக்கமாக ராஜாஜி.
சக்கரவர்த்தி என்பதால் அவர் தந்தை பெரும் அரசர் என நினைக்கவேண்டாம், அவர் தந்தை பெயர் சக்கரவர்த்தி.
சேலத்துக்காரர், பெரும் வழக்கறிஞர். அக்காலத்திலே இந்தியா முழுக்க பிரபலமான பெரும் பிரபலம் அவர். அவர் மட்டும் நாட்டுக்காய் அல்லாமல் தனக்காய், வழக்கறிஞராக சம்பாதித்திருந்தால் பிரபல வழக்கறிஞர் எத்திராஜூம் இல்லை, அவர் கல்லூரியும் இல்லை.
அதை போல் நூறு கல்லூரிகளை கட்டியிருப்பார் ராஜாஜி. ஏன் நீதிக்கட்சி பிரமுக வழக்கறிஞர்கள் போல பெரும் பணம் ஈட்டியிருக்கலாம்.
ஆனால் அந்த தேசபக்த மனம் அதை விரும்பவில்லை.
சுதந்திர போராட்ட வீரர், காந்தியுடன் போராடியவர், சிறைக்கு செல்லும் அளவு தண்டிக்கப்பட்டவர். பின்னாளில் காந்தி மகனுக்கு தன் மகளை மணமுடித்து சம்பந்தி ஆனவர்.
அதாவது காந்தியின் மருமகள் ஒரு தமிழச்சி.
பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். முடிந்த வரை நல்லாட்சிதான் நடத்தினார். அவரின் பெரும் சாதனை மதுவிலக்கினை கொண்டு வந்தது. அரசு வருமானம் குறையத்தான் செய்தது, சாதுர்யமாக வரிகளை, அதாவது விற்பனை வரிகளை சீரமைத்து அரசினை திடப்படுத்தினார்.
பின்னாளைய காமராஜரின் முறையான நிர்வாகத்திற்கு இதுதான் அடிப்படை.
கட்சிக்குள் எங்கு அவருக்கும் காங்கிரசாருக்கும் மோதிற்று என்றால்? சுதந்திரம் வாங்கியவுடன் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு எல்லாம் பல சலுகைகள் வழங்கப்பட்டன.
நாடு பணமின்றி தவிக்கின்றது, ஏழ்மையில் இருக்கின்றது, அதனால் காங்கிரசார் இந்த சலுகைகளை எல்லாம் அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நாட்டுப்பற்றில்தானே போராடினோம், அதற்கு ஏன் சன்மானம்? எனச் சொன்னார் ராஜாஜி.
அதற்கு, நீ வழக்கறிஞன் சம்பாதித்துவிட்டீர், நாங்கள் எங்கே போவது? என்ற ரீதியில் எதிர்க்கத் தொடங்கினார்கள்.
காங்கிரசில் ராஜாஜி அதிருப்தி கோஷ்டி உருவாகியது இப்படித்தான். ராஜாஜி சொன்னதில் தவறொன்றும் இருக்க முடியாது.
காங்கிரஸ் செய்த மிகப் பெரிய தவறு ராஜாஜியினை அவமானப்படுத்தியது. பின் காமராஜருக்கும் அதுவே நிகழ்ந்தது. கடைசியில் மூப்பனாருக்கும் அதுதான் நடந்தது.
இந்நாட்டின் எதிரி மதவாதம் என நேரு சொல்ல, “மதம் இந்நாட்டை காக்கும். ஆனால் கம்யூனிசமும் அதன் உப கோஷ்டிகளுமே மிகப்பெரிய எதிரி. இதை ஒரு நாள் உணர்வீர்கள். உங்கள் பாகிஸ்தான் பாசமும், சீன நேசமும் இந்நாட்டை மிகப்பெரும் இக்கட்டில் தள்ளும்” என ராஜாஜி எச்சரித்ததில் காங்கிரஸில் இருந்து விரட்டப்பட்டார்.
பின் சுதந்திரா கட்சியினைத் தொடங்கினார்.
கொஞ்சம் உலக நடைமுறைகளை அறிந்தவர். பெரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். 2030ல் வரும் மாற்றத்தை அவர் 1950களில் கொண்டுவர நினைத்ததுதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
அதாவது பள்ளிக்கூடங்கள் இன்றளவும் வெளிநாடுகளில் காலை முதல் மதியம் வரைதான் செயல்படும்.
அதன்பின் அம்மாணவர்கள் பகுதிநேரப் பணிகளில் ஈடுபடுவார்கள். முன்னேறிய நாடுகளில் எல்லாம் அதுதான் நிலை. இதனால் அவை அழிந்துவிடவில்லை, மாறாக உச்சம் பெற்றன.
அதனை தமிழகத்திலும் கொண்டுவர நினைத்தார், அறிவித்தார். யாரடா சிக்குவார்? என அலைந்த கழகங்களுக்கு அல்வா போல மாட்டினார்.
அப்படியானால் மதியத்தின் பின் மாணவர்கள் என்ன செய்வார்கள்? எனக் கேட்டனர். பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம், கைத்தொழில்கள் அல்லது வேறு தொழில்கள் படிக்கலாம், கல்வி மட்டும் வாழ்வாகாது என்றார்.
விடுவார்களா? துண்டை தலையில் கட்டிக்கொண்டு களமிறங்கினர், அவர்களாக ராஜாஜியின் திட்டத்திற்கு பெயர் வைத்தனர்.
இது குலக்கல்வி திட்டம். பார்ப்பணியத்தின் விஷம், விவசாயி மகன் விவசாயி, மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்ப்பான், செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தைப்பான், அய்யகோ விட மாட்டோம். எழுவீர்! இந்த ஆச்சாரியாரை விரட்டுவீர் எனப் பொங்கினார்கள்.
பெரும் கலவரத்தில் ராஜாஜியின் சமாதானம் எடுபடவில்லை. அவர் சொன்னதற்கெல்லாம் கடும் திரிபுகள் காட்டப்பட்டன. அமைதியாகச் சொன்னார், ஒரு காலத்தில் நான் சொன்னதை உணர்வீர்கள், அதோடு அவர் தீவிர அரசியலை விட்டு வெளியேறினார்.
அவரின் குலக்கல்வி சர்ச்சகுரியது என்பார்கள். உண்மையிலே அதன் நோக்கத்தை அறிந்தால் வாழ்த்தாமல் இருக்க முடியாது.
ஆம், மூன்று விஷயங்களை உள்ளடக்கிய மிக நுட்பமான விஷயம் அது. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தினை பார்க்கும் முன் சீனாவின் மாவோவினையும், ஜப்பானியரையும் நோக்கிவிட்டு வரவேண்டும்.
மாவோ தன் ஆட்சியில் ஒரு விஷயத்தை செய்தான். அதாவது விவசாயம் மற்றும் தன் குடும்பத் தொழிலை விட்டு நகரில் ஒரு மாதிரி சுற்றிக்கொண்டிருந்தவர்களை பிடித்து, தேவைபட்டால் அடித்து, அதையும் மீறி தேவைபட்டால் கொன்று மிரட்டி “கலாச்சார புரட்சி” செய்தான்.
ஏன் என அவனிடம் கேட்டதற்கு அவனின் பதில் இப்படி இருந்தது.
எல்லோரும் இந்த தொழில்களை விட்டுவிட்டு சென்றால் ஒரு காலத்தில் சீனாவில் அந்த தொழிலே மறைந்துவிடும். அதெல்லாம் பரம்பரை பரம்பரையாக வந்தவை. அழிந்துவிட்டால் மீட்டெடுக்க ஆயிரம் ஆண்டு ஆகலாம்.
ஜப்பானியர்கள் சொல்வதும் இதுதான். குழந்தைகளுக்கு எல்லா தொழிலும் தெரிந்திருக்க முடியாது. ஆனால் பெற்றோர் என்ன சொல்லி கொடுக்க முடியுமோ அதை சொல்லி கொடுக்கலாம். ஜப்பான் நாட்டில் எல்லா தொழில் கலையும் அடையாளம் அற்று போகாது.
இதை இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஆச்சரியமானது மட்டுமல்ல, முழு உண்மையுமானது. கொரோனா காலத்தில் அதைச் சிலர் உணர்ந்திருக்கலாம்.
இன்று மானிட இனம் விஞ்ஞான மாயையில் சிக்கித் தவிக்கின்றது. கடிகாரம் இல்லாவிடில் அவனுக்கு மணிபார்க்க தெரியாது, கடை திறக்காவிட்டால் உணவு இல்லை, கேஸ் சிலிண்டர் இல்லாவிட்டால் சமைக்க முடியாது, மின்சாரம் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. அந்த அளவு ஒரு விஞ்ஞானத்தை நம்பிய வாழ்வுக்குள் சிக்கிவிட்டது மானிட இனம்.
இந்த விஞ்ஞானத்தை காட்டி ஒவ்வொரு நாளும் அதன் மேம்பட்ட வடிவத்தைச் சொல்லிச் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தை ஒரு கூட்டம் பிடுங்கிக் கொண்டே இருக்கும்.
அறியாமையில் சிக்கியிருக்கும் கூட்டமும் அதை கொடுத்து ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும். இதனால் மனம் கெட்டு, மதிகெட்டு, பணமும் கெட்டு ஒரு மாயை உலகம் உருவாகிவிட்டது.
ஒருவன் வீடு முதல் வாழ்வு வரை விஞ்ஞானம் வைத்ததே வாழ்க்கைத் தரம் என்றாயிற்று.
சரி, ஒருநாள் ஏதோ இயற்கை கோளாறால் மின்சாரம் இல்லை, வானியல் கோளாறால் செயற்கை கோளும் இல்லை, விஞ்ஞானம் மொத்தமாய் தோற்றுவிட்டால் மானிட இனம் எப்படி வாழ்வைத் தொடங்கும்?
விவசாயம் தெரியாது, நெசவு தெரியாது, வயல் வேலை தெரியாது, தச்சு வேலை தெரியாது, உலோக வேலை தெரியாது, சிற்பம் தெரியாது, ஓவியம் தெரியாது, இசைக் கருவி தெரியாது, சமையல் தெரியாது, துணி துவைக்க தெரியாது எனில் ஒரு மானிட இனம் எப்படி வாழும்?
ஒரு நாடு எல்லாவற்றுக்கும் தயாராக இருத்தல் வேண்டும். இப்பொழுதெல்லாம் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு சிந்தனை வந்திருக்கின்றது.
விஞ்ஞானம் தோற்றுவிட்டால் என்ன எனும் சிந்தனை. அதே நேரம் மானிட உழைப்பில் எந்திரங்களை குறைத்து சுற்று சூழலை காத்து எல்லோருக்கும் வேலை எனும் பெரிய சிந்தனை.
சுருக்கமாகச் சொன்னால் பாரதத்தில் அன்று இருந்த அந்த சிந்தனை.
இதைத்தான் ராஜாஜி சொன்னார். அதுவும் கல்வி பயிலாமல் செய்யவேண்டும் எனச் சொல்லவில்லை. தகப்பன் தொழிலைத்தான் மகன் பார்க்க வேண்டும் எனவும் சொல்லவில்லை.
மாறாக, மதியம் வரை கல்வி. அதன் பின்னால் மாணவர்கள் விரும்பிய தொழிலை கற்கலாம் என்றார்.
இது இன்றுவரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சாதாரண விஷயம். மதியம் வரை பாடக்கல்வி. மதியத்துக்குப் பின் வாழ்க்கைக்கான கல்வி என அது இயல்பாய் இருக்கின்றது.
வெளிநாடுகளில் தங்கள் கல்விக்கான பணத்தை மாணவர்களே சம்பாதிக்கும் படி இது செயல்படுத்தப்படுகின்றது.
இதனால் தந்தையிடம் இருந்து வியாபாரம் முதல் எல்லா தொழிலையும் மகன் கற்கலாம். அத்தொழில் அழியாது, அதை தாண்டி தனக்கு பிடித்தமான தொழிலுக்குச் செல்ல அதை கற்கும் வாய்ப்பாகவும் இருக்கும்.
இன்றும் மேலைநாட்டு மாணவர்கள் அதிக பாடச்சுமையின்றி பள்ளியினையும், அதைத் தாண்டி ஏகப்பட்ட வாய்ப்புகளை பெறவும் இதுதான் காரணம்.
இந்திய பாடத்திட்டம் அப்படி அல்ல 24 மணிநேரமும் படிப்பு எனும் மாபெரும் சுமையினை ஏற்றி வைத்திருக்கின்றது.
தமிழக மாணவர்கள் அன்றே உலகத்தரத்துடன் இருக்க வழிசெய்தவர் ராஜாஜி.
ஆம், மதியம் வரை கல்வி என்பது அரசின் நிதிச்சுமையினை குறைத்தது. பலவகையான தொழில்களை இங்கு காக்கச் செய்தது. எந்த காலத்தையும் சமாளிக்கும் வண்ணம் சமூகத்தையும் எதிர்கால தலைமுறை மனதையும் அது காத்தது.
இதனால்தான் அன்று படித்து வேலை இல்லை என்றால் உழைத்து முன்னேற எல்லோரும் தயாராய் இருந்தனர். ஜி.டி நாயுடு முதல் இன்றைய பெரும் வியாபார சாம்ராஜ்யம் வரை அப்படியே.
ஆனால் முழு படிப்பு எனும் மாயைதான் பள்ளித்தேர்வில் சாவு, கல்லூரித்தேர்வில் சாவு, பணியிடத்தில் தற்கொலை எனப் பல கொடுமையினை செய்கின்றது.
ஆம், கல்வி, தொழில் என பல விஷயம் கையில் இருப்பவன் எதையாவது பற்றிக்கொண்டு வாழ்வான், இதை விட்டால் எதுவும் தெரியாது என்பவன் சாவான்.
ராஜாஜி, மாணவர்கள் எல்லா வகையிலும் சிறக்க வழிசெய்தார்.
குலக்கல்வி எனச் சொல்லி, அவர் திட்டத்தை விரட்டி விட்டார்கள், இன்று என்னாயிற்று?
ஒரு வாதத்துக்குச் சொல்லலாம். விவசாயம் ஒழிந்தது, இன்றிருக்கும் தலைமுறைக்கு ஏர்மாடு வைத்து உழவு செய்யத் தெரியாது, களை எது பயிர் எது எனத் தெரியாது.
மிக்ஸி இல்லா இடத்தில் அம்மி பயன்படுத்தத் தெரியாது, சிலிண்டர் இல்லா இடத்தில் எந்த விறகு எரியும் என்று கூடத் தெரியாது, ஏன் விறகு வெட்டவும் தெரியாது.
ஆம், நாகரீகம், கல்வி என வெகுதொலைவுக்கு வந்துவிட்டோம். இது அந்நிய நாடுகளிடம் நம்மை அடிமைப்படுத்துகின்றது. பாரம்பரியத்துக்கும் நமக்குமான தொடர்பை வெட்டுகின்றது. வந்த வழி தெரியாமல் செல்லும் வழியும் தெரியாமல் ஒரு அடிமை சமூகத்தை உருவாக்குகின்றது.
இதைத் தடுக்க அன்றே சிந்தித்தவர் ராஜாஜி. இன்று இல்லையேனும் இன்னும் 20 வருடமல்ல 100 வருடம் ஆனாலும் ஒரு நாள் உலகமே மாறும். அப்பொழுது ராஜாஜியினை நிச்சயம் தமிழகம் கைகூப்பி வணங்கும்.
ஆம். இந்தக் கல்வி முறையும் மாறி வாழ்வுக்கான விஷயங்களை தேடி எடுக்கும்.
விவசாயம், வியாபாரம் , கலைகள், மற்றும் எல்லா தொழிலும் இங்கு ஒரே இரவில் வந்தது அல்ல. அவை ஒவ்வொரு குலமும் தனித் தனியாக போராடி, சிந்தித்து சிந்தித்து உருவாக்கிய பொக்கிஷங்கள்.
அது இந்திய விவசாயம், கலை, கோவில் சிற்பம் வழிபாடு, பிரம்மாண்டம், இந்திய உணவு, மருத்துவம், நெசவு, கால்நடை பராமரிப்பு, ஆன்மீகம், இசை, பாடல் என எல்லா இடத்திலும் உண்டு.
அதை எந்த சாதி செய்கின்றது என்பது மகா குறுகிய மனப்பான்மை. அக்கலை மேம்பட்டு வருகின்றதா? காக்கப்பட்டு வருகின்றதா? எனும் சிந்தனைதான் மேம்பட்ட உன்னத மனப்பான்மை.
அந்த பரந்த மனப்பான்மை ராஜாஜிக்கு இருந்தது.
நிச்சயமாக அவர் பீஷ்மர் தான். ஆச்சாரியர் எனும் பட்டத்திற்கு தகுதி கொண்டவர்தான். அவரின் அறிவாற்றல் பெரிது. புத்தி கூர்மை மிகப் பெரிது. ஆனால் அவர் வாழ்வில் செய்த பெரும் தவறு ஒன்று உண்டு.
மதுகடைகள் திறக்கப்பட்டபொழுது கொட்டும் மழையில் 90 வயதில் மன்றாடினார். நொந்துபோனார் ராஜாஜி. நாடு சீரழியும் பாதை அவர் கண்ணுக்குத் தெரிந்தது. காமராஜரை வீழ்த்தியதை எண்ணி மனம் வருந்தத்தான் செய்தார்.
புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமமானவர் ராஜாஜி. ஆனால் அவரின் திட்டங்கள் எல்லாம் மிகுந்த தொலைநோக்கும், ஆழ்ந்த அர்த்தமும் கொண்டவை. மிகப்பெரும் புத்திசாலி அவர்.
அமெரிக்கா சென்று கென்னடியின் கரங்களை பிடித்து, ரஷ்யாவுடன் அணு ஆயுத பெருக்கத்தில் சண்டையிடாதீர்கள். மனுகுலத்திற்காக இருவருமே அணுகுண்டுகளை கடலில் எறியுங்கள் எனச் சொன்னவர் ராஜாஜி.
அவர் சுதந்திர போராட்டக்காரர்தான். ஆனால் சில இடங்களில் தன் தொலைநோக்குப் பார்வையினை அழுத்தமாக வைத்தார். அதில்தான் ராஜாஜியின் திறன் அடங்கி இருக்கின்றது, அது என்ன?
“சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல, நாம் இந்த நாட்டை நாம் ஆளும்பொழுது கடுமையான சட்டமும், பெரும் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களும் நமக்கு தேவை. இல்லை என்றால் கொஞ்சநாளில் இந்த சுதந்திர போராட்ட கஷ்டம் எல்லாம் நம் மக்களுக்கு மறக்கும். அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கும். எங்கும் பிரிவினைவாதமும், லஞ்சமும், ஊழலும், மக்கள் நலம் காக்கா அரசுகளின் சுயநலமும் பெருக்கெடுக்கும்.
அப்பொழுது வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என மக்கள் வாய்விட்டுச் சொல்லும் காலம் வரும். அதனால்தான் சொல்கின்றேன் சுதந்திர இந்தியா பற்றியும், அதன் ஆட்சிமுறை பற்றியும் பெரும் திட்டமில்லாமல் சுதந்திரம் வாங்குவது மகா ஆபத்தானது. காலம் காலமாக மன்னராட்சியிலும், பின் பிரிட்டனிடனும் அடிமையாக வாழும் இந்நாட்டு மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவம் புரியாது. இவர்கள் நிச்சயம் அரசியல் அடிமைகளாக மாற வாய்ப்புக்கள் அதிகம்.”
எவ்வளவு தீர்க்கதரிசனமான உண்மை. இப்பொழுது அதனைத்தானே பாரதம் கண்டுகொண்டிருக்கின்றது? வெள்ளையன் ஆட்சி பரவாயில்லை எனச் சொல்லாதோர் யார்?
அரசியல் அடிமைகள் உருவாவார்கள் என கணித்து சொன்ன ராஜாஜியின் வாக்கு தீர்க்கதரிசனமான உண்மை.
இதில்தான், இந்த முத்திரையில்தான் ராஜாஜி தனித்து நிற்கின்றார், அதுவும் தமிழனாக. வாழ்த்த வேண்டிய தலைவர்தான், மறக்கக் கூடாதவர்.
இலக்கியப் பணிகளிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. பல நூல்களை எழுதினார். “குறை ஒன்றும் இல்லை..மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடல் அவரின் கவி முகத்தையும் காட்டும்.
வியாசர் விருந்து என மகாபாரத்தை சுருக்கிக் கொடுத்த ராஜாஜியின் பணி மகத்தானது. மிக அற்புதமான தமிழும் ஆழ்ந்த கருத்தும் கொண்ட அட்டகாசமான படைப்பு அது.
அறிவார்ந்த எழுத்து எப்படி இருக்கும் என்பதை அதில்தான் காணமுடியும்.
ராஜாஜி போன்றவர்களை மக்கள் நலன் அறியா எருமை என்றும் விரட்டிவிட்டு, ஏடுகளிலும், சினிமா உலகிலும் காட்டிவிட்டு, அதனை ஆட்சிக்கும் கொடுத்துவிட்டு, தமிழனை கண்ணீர் கடலில் எறிவதுதான், தமிழன் பிச்சைக்காரனாய் வாழ்வதுதான் விதி என்றால்? என்ன செய்வது?
இன்று (நவம்பர் 10) ராஜாஜியின் பிறந்த நாள். இப்படியும் ஒரு தலைவர் இருந்திருக்கின்றார் என்பதை நினைத்துக் கொள்ளலாம்.
அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்ற பொழுதும் டெல்லியில் வாடகை வீட்டில்தான் இருந்தார். பதவி விட்டு இறங்கும் பொழுது கைகடிகாரமும் உடையும் தவிர ஏதும் எடுத்து வரவில்லை.
மதம் நாட்டை காக்கும், கம்யூனிசமும் போலி புரட்சிகளுமே நாட்டைக் கெடுக்கும் என முதலில் சொன்னவர் அவரே.
இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தை செலுத்த ஹிந்தி அவசியம் என “குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது தாய் பல வந்தம் செய்தாலும் பரவாயில்லை. அப்படி இந்தியினை கற்க வைப்பேன்
தமிழ்மொழி நமக்கு கால் போன்றது, ஹிந்தி வண்டி மாதிரி, ஆங்கிலம் ரயில் மாதிரி” என்று விளக்கம் தந்த ராஜாஜியினை மறக்க முடியாது.
எல்லா எதிர்ப்பிலும் அவர் சொன்ன அந்த தைரியமானா வார்த்தை மறக்க முடியாதது. “ஆதி சங்கரரும், ராமானுஜமும் தங்கள் அபிமானத்தை சொன்னர்கள், நான் என் அபிமானத்தை சொன்னேன். அதை மாற்றமுடியாது”
சாதிக் கொடுமை தொடர்பான சட்டம், பெண் உரிமை, ஆலய நுழைவுச் சட்டம் எனப் பல முன்னோடி சட்டங்களும் வரைவுகளும் அவர் கொடுத்ததே.
1937ல் தன் அமைச்சரவையில் தாழ்த்தபட்டோரை, பெண்களை சேர்த்து வழிகாட்டியவர் ராஜாஜி. அதைத்தான் பின் கக்கன் மூலம் காமராஜர் செய்தார்.
மதுவிலக்கு கொண்டுவந்து, பள்ளிச்சாலை திறக்க வழி செய்தவர் ராஜாஜி. காமராஜர் பள்ளிகளை அதிகப்படுத்தினார்.
ராஜாஜி காலத்தையும் இக்காலத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். குறுகிய அரசியலால் இம்மாநிலம் இழந்திருப்பது தெரியும்.
எந்த குலக்கல்வி என கூறப்பட்ட திட்டத்தால் அவர் வீழ்த்தப்பட்டாரோ? அந்த முறை அதாவது மதியம் வரை மட்டும் பள்ளி திறக்கும் காலம் தொலைவில் இல்லை. பல கல்லூரிகளில் அது நடந்துகொண்டெ இருக்கின்றது. இதனை எல்லாம் 65 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னதுதான் தவறா?
காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது, பலரின் அரசியல் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கின்றது.
ராஜாஜி பெரும் அறிஞன், மாமேதை.
மறக்க முடியா அந்த மாமேதைக்கு பிறந்தநாளில் உள்ளம் கனத்த அஞ்சலி.
அவரைப் போல் ஒரு தேசாபிமானியினை, அவரைப் போல் ஒரு ஞானியினை, அவரைப் போல் ஒரு வழக்கறிஞரை தமிழகம் உருவாக்கியிருக்குமா என்றால் இல்லை.
அது என்ன ராசியோ தெரியவில்லை. யாரெல்லாம் அவரை வீழ்த்தினார்களோ, அவர்களின் இறுதிமரியாதையும், இறுதி ஊர்வலமும் அந்த ராஜாஜி என்பவரின் பெயர் கொண்ட ஹாலில்தான் நடந்திருக்கின்றது.
ராஜாஜி என்பவரின் பெயர் சூட்டப்பட்ட ஹாலில்தான் அவரை எதிர்த்து ஆடியவர்கள் எல்லாம் அடங்கிக் கிடந்தார்கள்.
தமிழக அரசியலின் விசித்திர யதார்த்தம் இது, ராஜாஜி இல்லை என்றாலும் அவரின் பெயர் சூட்டபட்ட ஹால் பெரும் தத்துவத்தை எல்லாம் தமிழகத்திற்கு சொல்லி கொண்டே இருக்கின்றது
மனித புனிதன், முக்கால ஞானி ராஜாஜியின் நினைவுகளில் மூழ்கும் பொழுது அவனின் அந்த பாடல் காதோரம் ஒலிக்கின்றது
“குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா..” என அந்த வரி மோதுகின்றது
அவன் காட்டிய வழியில் ஆன்மீகமும் கலாச்சார பண்பாடும் கொண்ட இந்தியா உருவாகிவரும் வேளையில் என்ன குறை இருக்க முடியும்?
விரைவில் தமிழகத்தில் தேசியம் மலர்ந்து, “குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா..” என நிச்சயம் நெஞ்சம் நிறைந்து நன்றி கண்ணீருடன் அவரை நினைந்து நெஞ்சுருகிப் பாடும் நிலை வரும், வரவேண்டும்.
அந்த அஞ்சலி உண்மையான அஞ்சலியாக அந்த மாமனிதனுக்கு, பெரும் ஞானிக்கு அமையும்.
இந்திய சுதந்திரத்தை திருவாவடுதுறை ஆதீனத்தை கொண்டு முறைபடி ஓதி, தேவாரப் பாடலைப் பாடி
““தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே”
என டெல்லியில் இந்து தமிழ் பாடல் முழங்க சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து சுதந்திர இந்தியாவின் முதல் சங்கியாக இருந்த அந்த பூரண இந்துவினை ஒரு காலமும் மறக்கமுடியாது.
ராஜாஜி போன்ற மாபெரும் மேதைகள் வழியில்தான் இன்று மோடி, ஜெய்சங்கர் போன்றோர் வந்து தேசத்தை தாங்கி நிற்கின்றார்கள்.
ராஜாஜியின் கனவில்தான் அண்ணாமலை போன்ற தேசாபிமானிகளும் இங்கு உருவாகி ஒளி விடுகின்றார்கள்.
ராஜாஜியின் தேசியமும் தெய்வீகமும் எனும் பெரும் கனவு நிச்சயம் ஒருநாள் தமிழகத்தில் சபையேறும். அந்நாளில் அந்த ஞானி மாபெரும் வெளிச்சம் பெறுவான். அவனின் மங்கா புகழுக்கும் தீர்க்கமான அறிவுச்சுடருக்கும் எக்காலமும் அழிவில்லை.