ஞானசித்தர் – சுப்பிரமணிய பாரதியார்

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரும் பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிகச் சரியான ஆற்றல் மிக்கவர்களை, இறைசக்தி தேடிக் கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும்.

உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால் வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும்.

அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனைகள் பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும். வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், குருநாணக் , வீரசிவாஜி, குமரகுருபரர் என எத்தனையோ பேரை அப்படி காட்டமுடியும்.

அப்படி காசி உருவாக்கிய ஞானசித்தர்களில் ஒருவனே அந்த சுப்பிரமணிய பாரதி.

காசியில் கால்வைக்கும் வரைக்கும் பாரதிக்கு தான் யார் என தெரியவில்லை. எதை தேடுகின்றோம் என்பதும் புரியவில்லை. அவனுக்குள் ஒரு தேடலும் அழைப்பும் இருந்தது. ஆனால் அது எது என தெரியாமல் நெல்லை பக்கம் தடுமாறிக் கொண்டிருந்தான். எங்கும் அவனால் ஒட்டமுடியவில்லை.

அவன் ஆத்ம தேடலும் சிந்தையும் அவன் எதையோ சாதிக்கப் பிறந்தவன், எதனையோ தேடி ஓடுபவன் எனச் சொன்னாலும், அவனால் அதை தெளிவாக உணரமுடியவில்லை. ஆனால் தேடிக்கொண்டே இருந்தான்.

காசி எனும் ஞானபூமி அவனுக்குள் தெளிவினை கொடுத்தது. அவன் யார் எனும் உண்மையினை உணர வைத்தது. அவன் சுப்பிரமணியாய் காசிக்கு சென்று பாரதியாய் திரும்பி வந்தான்.

அந்த சுடர் அதன் பின்பே பிரகாசித்தது.

விவேகானந்தரும், வீரசிவாஜியும் அவன் வழிகாட்டிகளானார்கள். கண்ணன் அவன் தெய்வமானான்.

அவன் படைப்புக்களெல்லாம் தேசம், இந்துமதம் என இந்த இரண்டுக்குள்ளும் இருக்குமாறு பார்த்துக்கொண்டான். சுவாமி விவேகானந்தர் மேலான அவன் தேடல் அவர் சிஷ்யை நிவேதிதாவிடம் கொண்டு நிறுத்தியது.

அவள் விவேகானந்தர் சொன்ன இந்துப்பெண்கள் முன்னேற்றத்தினை போதிக்க, பாரதி புரட்சியாளனாய் மாறினான்.

அவன் சித்தன். பாரதம் ஒன்றையே நேசித்து இந்த தேசத்துக்காய் தன் வாழ்வு, கல்வி, கவி, படிப்பு என எல்லாமும் அர்ப்பணித்து தவமிருந்த பித்தன்.

வெள்ளையனை புகழ்ந்திருந்தால் தாகூர் அளவுக்கு சென்றிருக்க வேண்டியவன் தேசத்துக்காகப் பாடியதால் தரித்திர கோலம் பூண்டான்.

தொழிலை சரியாக செய்திருந்தால் இந்நேரம் அவன் மாபெரும் பத்திரிகையாளனாக விளங்கியிருப்பான். அவன் குடும்பம் சாட்டிலைட் ஊடகமாக நிலைத்திருக்கும், இன்று பிரதான ஊடகமாக அவன் ஊடகம் நின்றிருக்கும்.

அக்காலத்திலே ஒரு பஞ்சாலை தொடங்கியிருந்தால் இந்நேரம் தூத்துகுடி பக்கம் செல்வாக்கான குடும்பமாக அது விளங்கியிருக்கும்.

பிராமணர்கள் தொழில்துறையில் புகுந்த அக்காலங்களில் அவன் டி.வி.எஸ். அளவு ஒரு நிறுவனமும் நிறுவியிருக்கலாம்.

ஏன் ஒரு பதிப்பகம் தொடங்கியிருந்தாலே இன்று பல்லாயிரம் கோடி கொண்ட நிறுவனமாக வளர்ந்திருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு இந்துஸ்தானம், இந்துமதம், நாட்டுவிடுதலை, பாரதப் பெரும் கனவு என தன்னை எரித்து, தன் குடும்பத்தையும் வறுமையில் தள்ளி, பெரும் தரித்திரனாய் வாடி வதங்கி மறைந்தான் அந்த பாரதி.

பெயரினைக் கேட்ட நொடியில் கண்களில் நீர்கட்டும் வாழ்க்கை அவனுடையது.

சித்தர்களும் சில வரம்பெற்ற மனிதர்களும் இந்துமதத்தில் அடிக்கடி தோன்றுவார்கள். அவர்களின் காலத்தில் அவர்களை புரிந்துகொள்வார் யாருமிலர். பிரிதொருநாளில் அவர்களை தேடும்பொழுது அவர்கள் இருக்கமாட்டார்கள்.

ஞானியரும் யோகியரும் அவர்கள் வாழும் காலத்தில் அறியப்படுவதில்லை. வாழும் காலமெல்லாம் ஒரு பைத்தியகாரனை போல அவர்களை அடித்துவிரட்டும் சமூகம். அவர்கள் காலத்துக்குப் பின்பே அவர்களை நினைத்து கண்ணீர்விடும்.

அந்த சாபத்துக்கு ஞானியரும் சித்தர்களும் தப்பமுடியாது. அந்த வரிசையில் வந்தவன் எட்டயபுரத்து சித்தன் பாரதி.

“எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்” என அவன் தன்னை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டுதான் களத்துக்கு வந்தான்.

எல்லா சித்தனையும் போல அந்த பாரத சித்தனுக்கும் சம்பாதிக்கத் தெரியாது. அந்நியனுக்கு அடிப்பணிய தெரியாது. அவனுக்கு செல்வாக்கு கிடையாது. அவனுக்கு பெரும் ஆதரவும் கூட்டமும் கிடையாது. அவன் கையில் பத்து காசு கிடையாது. அவனிடம் அதிகாரம் கிடையாது. பெரும் நிலபுலனும் தொழிற்சாலையும் கிடையாது.

அவனிடம் இருந்ததெல்லாம் ஆழ்ந்த அறிவு. அந்த அறிவினை மிஞ்சிய பூரண ஞானம். சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேசப்பற்று. பல மொழிகளில் பெரும் அறிவு. இந்துமதம் மேல் அபார நம்பிக்கை.

அவனின் தொழில் எழுத்தும், பாட்டும். அவனின் பலம் அது, வாழ்வு அது, மூச்சும் கைகோலும் கைவிளக்கும், வாழ்வின் மூலதனமும் அது.

அந்த மொத்த வரத்தையும் இந்நாட்டுக்கும், நாட்டு விடுதலைக்கும், இந்த மதத்துக்கும், கலாச்சார பண்பாட்டுக்குமாய் கொடுத்தான் பாரதி.

இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு. அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனைமிக்க தேசியவாதிகள் குறைவு. அதை தனி மனிதனாக நின்று லட்சம்பேர் சுமக்க வேண்டிய சுமையினை தனித்து சுமந்தான் அவன்.

நிச்சயமாக பராக்கிரம பாண்டியனும், விக்ரம பாண்டியனும் பின் கட்டபொம்மனும் பூலித்தேவனும் ஆயுதவழி போரைத் தொடங்கி வைத்த நெல்லை மண்ணேதான் பாரதியினை கொடுத்து பேச்சிலும், எழுத்திலும், பாட்டிலும் சுதந்திரப் போரை தொடங்கி வைத்தது.

வங்கத்து சட்டர்ஜிக்கு முன்பே வந்தே மாதரம் பாடியவன் அவனே. தன் எழுத்து ஒன்றாலேயே இந்தியா முழுக்க தேசபக்தர்களை திரட்டியவனும் அவனே.

ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல, அந்த சிறு கூட்டம் பேரோளியினை இங்கு ஏற்றியது. அவர்கள் கொடுத்த வீச்சும், ஏற்றிவைத்த புரட்சித் தீயும் கொஞ்சமல்ல‌.

ஒருவன் காலமான பின்பும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும் அவனின் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு சிலரே.

அதில் ஒருவன் எங்கள் பாரதி, நெல்லை மண் கொடுத்த சித்தன் பாரதி.

அந்தத் திருமகன் மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி. பல தலைமுறை ரிஷிகளின் ஞானமும் அறிவும் ஒருங்கே பிறந்த பிறப்பு. தெய்வம் அவனுக்கு பாடும் வரத்தை கொடுத்தது.

அந்தப் பாடலையும் அவன் தனக்காக பாடவில்லை. அவனின் பாடெலெல்லாம் தேசம், சமூகம், தெய்வம் என இந்த மூன்று பிரிவில்தான் வருமே தவிர, அவனுக்காகவோ அவன் குடும்பத்துக்காகவோ அவன் பாடவில்லை.

நெல்லையின் வறண்ட பகுதியில் வளரும் மரமெல்லாம் நீருக்கு ஏங்கி தவிக்க வேண்டும் என்பதும், தமிழகத்தில் இருக்கும் அறிவாளிகளெல்லாம் ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கி தவிக்க வேண்டும் என்பது விதி.

அந்த கொடுமைக்கு அவனும் தப்பவில்லை.

ஆச்சரியமானவன் அந்த சுப்பிரமணி, ஆறு வயதில் கவிதை எழுதினார். நெல்லையில்தான் தமிழைக் கற்றார், அந்த ரிஷிகேஷ் சன்னியாசி சிவானந்தாவும் அவரும் வகுப்புத் தோழர்கள். எட்டயபுரம் மன்னர் அந்த அறிவில் சிறந்த மாணவர்களை தன் ஆதரவில் படிக்க வைத்தார்.

இருவருமே சரித்திரமானது ஆச்சரியம்.

காசி சுப்பிரமணியினை உருவாக்கியது. அவன் பாரதியாக மலர்ந்து ஞானம்பெற்றது அங்குதான். பல மொழிகளைக் கற்று மொத்த இந்தியாவினையும் உணர்ந்தது அங்குதான், அதன் பின்புதான் சொன்னான்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை காணோம்”

உண்மைதான். பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அது அவருக்குத் தெரிந்தது.

வெறும் தமிழ் மட்டும் படித்துவிட்டு தமிழ் உயர்ந்தது எனச் சொல்வதில் என்ன இருக்கின்றது? உலகமொழியெல்லாம் சொன்னானே பாரதி, அதில் இருந்தது உண்மை.

எல்லா மொழியும் கற்றாலும் தமிழரிடம் தமிழிலும் உருது பேசும் வடக்கத்திய‌ இஸ்லாமியரிடம் இந்தியிலும்தான் பேசினார். இந்நாட்டு மொழியில் அவருக்கு ஒரு தீரா பெருமை இருந்தது.

தமிழ்மேல் தீராப் பாசம் இருந்தது. தமிழ் கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், பல்லாண்டு கால இலக்கிய உலகுக்கு திடீர் திருப்பம் அவரே கொடுத்தார்.

பாரதியின் வாழ்வில் நாம் கண்ட விஷயம்.

அம்மனிதனிடம் உண்மை இருந்தது. அது அநீதியினைக் கண்டபொழுதெல்லாம் பொங்கச் சொன்னது. இந்த தேசத்துக்காக அவனை எழுதச் சொன்னது.

இத்தேசம் பெண்களை வழிபட்டு காத்த தேசம். அதன் கலாச்சார மாண்பு அது. ஆனால் இடைபட்ட காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி இடப்பட்ட வேலி பெண்ணடிமைத்தனமாயிற்று. அதுவும் ஐரோப்பாவில் பெண்கள் உழைத்தால்தான் ரொட்டி என்ற அளவில் அவர்கள் சிக்கல் மாற, பாரதமோ பெண்களை கடின உழைப்புக்கு அனுப்பாமல் தர்மம் காத்தது.

இந்த தர்மமே பெண்ணடிமைத்தனம் என்றானது. வெளிநாட்டில் ஆணும் பெண்ணும் சேர்ந்து போராட பாரதத்தில் ஆண்கள் மட்டும் போராடுவது, அவனுக்கு வித்தியாசமாய் தெரிந்தது.

பெண்கள் சக்தியும் தேசத்துக்கு வேண்டும் என்றுதான் அவன் பாடினான்.

இங்கு பெண்ணுக்கும் எல்லா உரிமையும் வேண்டும் என்ற முதல் குரல் அவனிடமிருந்தே வந்தது. பாரதி பணத்துக்காகவும் வாய்ப்புக்காகவும் வாழ்ந்திருந்தால் அவன் வாழ்வு எப்படி இருந்திருக்கும்?

எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடப்பட்டிருப்பான்

ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்காரக் கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பார். இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலப்புலமை அப்படி.

பாரதி தாகூரை போல் வளைந்திருந்தால் மிகப்பெரிய கவிஞனாக அவனால் லண்டனில் வலம் வந்திருக்க முடியும், பெரும் சுகபோகத்துடன் வாழ்ந்திருக்க முடியும்.

ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் நான்கு மில்களோடு நெல்லையையும், தூத்துக்குடியினையும் ஆண்டுகொண்டிருக்கும்.

அவ்வளவு ஏன்? ஆசிரியப்பணியினை ஒழுங்காகச் செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான்.

அந்தப் பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சிகள் நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.

அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான். ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது. இன்னொன்று இந்து மதம் நிலைக்க, மதமாற்றம் தடுக்க, அதற்கு வாய்ப்பாய் இருந்த சில சமூக வழக்கங்களை கண்டித்து உண்மையை உரக்கச் சொன்னது.

ஆம், யாராலும் புரிந்து கொள்ளமுடியா அந்த பாரதி உண்மை பேசினான், நாட்டை நேசித்தான், வாழ்வை இழந்தான்.

அவனது தேசப்பற்று ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது. சமூகப்பற்றும் மதப்பற்றும் சொந்த மக்களே பாரதியை விரட்ட வைத்தது.

அவன் போராடினான், நம்பினான், தன்னாலும் வாழமுடியும் என நம்பினான். ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்கினான்.

அவனை புரிந்து கொள்ள கெஞ்சினான், ஆனால் அவனின் ஏழாம் அறிவுக்கும் இங்கிருந்தோரின் ஐந்தாம் அறிவுக்கும் பொருந்தவில்லை.

வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில், அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.

உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும், அது பாரதியினை நினைத்தால் ஒவ்வொருவர் மனதிலும் தானாக வரும்.

பிரிட்டிசார் விரட்டினர் ஓடினான், வறுமை விரட்டியது ஓடினான், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினான், ஓடினான் முடிந்தவரை ஓடினான், முடியவில்லை இறந்தான்.

ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை.

அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செய்தது. பாவம் அவன் “நல்லதோர் வீணை செய்தே” என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது. “சக்திகொடு” என கெஞ்சத்தான் முடிந்தது.

அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசக்கூட யாருமில்லை, பேசினாலும் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவன் கையில் எவ்வளவு இருக்கின்றது, சொத்துபத்து எவ்வளவு இருக்கின்றது என காணும் செல்வங்களையே கணக்கிட்ட உலகம் அவனின் பெரும் அறிவுச் செல்வத்தை கண்டு கொள்ளவில்லை.

கொண்டாடப்பட வேண்டியவனை பைத்தியம் என ஒதுக்கினார்கள், விரட்டினார்கள். அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான். அந்தோ பரிதாபம்.

அங்குமிங்கும் ஓடினான், இந்தச் சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை.

உலகிலே மிகக் கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால், அது ஒரு அறிவாளியினை பத்து முட்டாள்களோடு வாழவிடுவது. அதுதான் பாரதிக்கும் நடந்தது.

குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயப்படுத்தின. அவனும் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்தான், காலம் அவனுக்கு வாய்க்கவில்லை.

அந்த வறுமையிலும் கண்ணனை நினைத்துப் பாடி மகிழ்ந்தான். அப்பொழுதும் பாரதப்போரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுதத் துணிந்தான்.

ஆனாலும் கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று.

கனவு வேறு, கடமை வேறு, வாழ்க்கை வேறு என்பது மெல்ல விளங்கிற்று.

அதை உணர்த்தியது அவரது தோழரான வ.உ.சி.யின் சிறைக் கொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்.

இன்னும் வ.வேசு அய்யர் முதல் நீலகண்ட பிரம்மச்சாரி வரை, அவரின் தோழர்களுக்கு நிகழ்ந்ததை எல்லாம் எண்ணி மனம் வருந்தினார்.

ஆம் வெள்ளையனின் நரித் திட்டத்தில் தேசம் அவர்களை கைவிட்டது. வெள்ளையரிகளின் கைக்கூலிகள் நிரம்பிய காங்கிரஸ், சுதந்திரத்தை மெல்ல மனதுக்குள் சொல்லும் அளவு போர்குணத்தை அடக்கியது.

மக்களால் கைவிடப்பட்ட போராளிகள் வரிசையில் தன் கண்முன்னே தன் தோழர்கள் இணைந்து சரிவதைக் கண்டு துடித்தான் பாரதி. அவனின் பாடலும் எழுத்தும் கூட மக்களிடம் சென்று சேர்வது தடுக்கப்பட்டது, வெள்ளையனை விட அவன் கைகூலிகள் அதை சரியாகச் செய்தனர்.

விளைவு, ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார்.

அந்த யானை விறகு பொறுக்க கிளம்பியது. அந்த சூரியன் ஒரு அறைக்கு விளக்காக முயன்றது.

இறுதி காலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழத்தெரியாதவர் என்றும் புறக்கணிக்கப்பட்டவர். அப்போதும் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியாப் பாடல்களும்.

ஒன்று நிச்சயமாக சொல்லலாம். இந்தியாவின் தேசிய கீதமாக்குவதற்கு தகுதியானவை அவரது பாடல்களைத் தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறு பாடல்களில்லை.

ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது. எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள். எந்தப் பாடல்? 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியதாகச் சர்சையில் சிக்கிய‌ அதே பாடல். “ஜண கண மன” எனும் அந்தப் பெரிய பாடல்.

அன்று தாகூர் எழுதியது மிகப் பெரும் பாடல். அதைப் பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம். அதனை ஐந்து நிமிடங்களுக்கு சுருக்கி “இந்திய தேசிய கீதம்” என அறிவித்துவிட்டார்கள்.

இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும், வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டப் பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஆனால் “தாயின் மணிக்கொடிபாரீர்” அல்லது “வந்தே மாதரம் என்போம்” போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்து பாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.

தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய “நோபல் பரிசு”, பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என பாடிக்கொண்டிருந்தார். அவருக்கு வெள்ளையன் கொடுத்தது “தேசத் துரோகி” பட்டமும் சிறைதண்டனையும்.

பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி. தாகூர் சிறந்த கவிஞர்தான். ஆனால் பாரதியின் “கணல்” அல்லது “உணர்ச்சி” அவர் பாடலில் இல்லை.

இன்றும் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என அவன் பாடியதே நடந்து கொண்டிருகின்றது.

அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை. பாரதி முன்னமே இறந்தார். இல்லை 1947ல் இறந்திருப்பார்.

எப்படியோ. பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதிக் கொடுமைக்கும் எதிராக தீ வைக்கத் துணிந்தவர் பாரதி.

அவர் பாஷையில் சொல்வதென்றால் “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு”.

அவர் வைத்த அந்த‌ தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.

பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது. அவராவ‌து அறிவாளி, இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி. ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை. வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான்.

வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதை பாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார். பிள்ளைகளுக்காய் அல்ல. பிஜி தீவில் கரும்புக்காட்டில் அவதிப்படும் இந்தியருக்காக‌.

உலகின் கஷ்டத்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை. புரியவும் புரியாது. காரணம் அவர் மனநிலை அப்படி.

புரிந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாத ஒரு நிலை.

மொத்தத்தில் இந்தியா பிளவுபடுவதை பார்த்தால் பாரதி தாங்கமாட்டான், அதுவும் நாத்திக கோஷ்டிகளின் அட்டகாசத்தை கண்டால் அவன் செத்தேவிடுவான் என முன்னறிந்த தெய்வம், அவனை அப்படியே யானை வடிவில் எடுத்துக் கொண்டது.

இன்று அவர் பெரும் கவிஞர். இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர். கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞர். எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றாரோ அதே உணர்ச்சியை அந்த‌ப் பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாயாச வித்தைக்கு சொந்தகாரர்.

60 வருடம் 100 வருடம் கழித்து போடப்படும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு.

ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதையாய் விரட்டி விரட்டி கொத்தப்பட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன்.

ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர். தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார். அப்படி ஒரு சூரியனை கொடுத்ததற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம்.

எம்மை பொறுத்தவரை பாரதி திருஞான சம்பந்தரின் ஒரு சாயல் கொண்ட பிறப்பு, அதில் சந்தேகமில்லை.

தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய்,நெல்லையனாய் அஞ்சலி செலுத்துவோம்.

வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டபட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதற்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கப்பட்டான்.

அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம். வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன விற்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது.

தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும், பாடலிலும் சொல்லிச் சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதியிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது.

தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசிய‌க்கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?

அவன் பாடல்களையும் தேசியமயமாக்கச் சொல்லலாம்.

எல்லா இந்தியனும் அதனை படிக்கலாம்.

சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பாரதப் ப்ரதமர் மோடி பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.

கைகளைக் கூப்பி கண்ணீர் விட்டுச் சொல்லலாம், 1920க்கு பின் ஒரு உச்சபீட தலைவன் இந்தியாவில் பாரதியினை நினைவு கூர்ந்தார்.

இதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது.

பாரதிக்கான மிகப்பெரும் அங்கிகாரம் அது. அது இன்னும் தொடரவேண்டும். பாரதி புகழ் இந்தியா எங்கும் பரவி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத்தான் இருந்தது.

அந்த சுப்பிரமணி பாதையில் “வெள்ளிப் பனிமலை மேல் உலவுவோம்” என சீனாவினை மிரட்டி கொண்டிருக்கின்றது.

அவனின் பாடலை கவனியுங்கள், அவனுக்கு பெரும் உலக கவனமும் தேசாபிமானமும் எதிர்கால சமூக சிந்தனையும் நிரம்பி இருந்திருக்கின்றது.

நாத்திகத்தின் போக்கை 1917லே உணர்ந்தான். எல்லோரும் ரஷ்ய புரட்சியினை மானிட சாதனை எனச் சொல்ல “பராசக்தி எழுந்தாள்” என நெற்றியில் அடித்துச் சொன்னவன் பாரதி.

அவன் பாடலில் தேசத்தின் நலம், எதிர்காலம், கலாச்சாரம், சமூகம், மானிடம், விஞ்ஞானம், இந்துமத கோட்பாடுகள் என எல்லாமும் கலந்திருக்கும்.

அப்படி ஒரு கவிஞன் இனி சாத்தியமில்லை, அவன் வறுமையில் போராடினான், அவன் ஓட ஓட விரட்டப்பட்டான், வறுமையும் வெள்ளையனும் அவனை விரட்டிக் கொண்டே இருந்தன‌.

ஆனால் அவன் கண்ட கனவு பெரிது, மிகப்பெரிய மனசிகரத்தில் அமர்ந்து எல்லா பக்கமும் பார்த்து பார்த்து அவன் எழுதிய பாடல்களின் தன்மையும் சிந்தனையும் அதை அறுதியிட்டு சொல்கின்றன.

கற்பனையில் எதை எல்லாமோ தேசம் பற்றி எழுதிவிட்டு, பின் தன் வறுமை உணர்ந்து “சக்திகொடு” என சக்தி தேவியிடம் கெஞ்சியிருக்கின்றான்.

கொஞ்சம் நம்பிக்கையில் “கிழம் கூடி வெட்டி மனிதரை போலே” என சீறியிருக்கின்றான். திடீரென “நல்லதோர் வீணை செய்தே, சொல்லடி சிவசக்தி” என கதறி இருக்கின்றான்.

ஒரு கணம் அவன் இடத்தில் இருந்து நினையுங்கள். அந்த ஞான ஒளி காற்றில் ஆடிய கோலம் தெரியும். அந்த சிங்கத்தின் வலியும் வேதனையும் புரியும்.

நல்லவர்களும் ஞானிகளும் வாழும் பொழுதை விட காலமான பின்பே விஸ்வரூபமெடுப்பார்கள்.

அந்த தென்னக ஞான வீணை நலங்கெட புழுதியில் எறியப்பட்டாலும், அதன் இன்னிசை எந்நாளும் இந்நாட்டில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

நாட்டிற்காகவும், இச்சமூகத்திற்காகவும் ஒலித்த வீணை அது.

தமிழ்சமூகத்தின் அறிவுடை மகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மாபெரும் தேசப்பற்றாளனுக்கு “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்..” என்ற அவரின் வரிகளுடன் அஞ்சலிகள்.

நெல்லையின் அடையாளம் தாமிரபரணி மட்டுமல்ல, நெல்லையப்பர் மட்டுமல்ல, பாரதி எக்காலமும் அந்த மண்ணின் ஞான அடையாளம்.

நெல்லையப்பரும் காந்திமதி அம்மையும் தத்தெடுத்து வளர்த்த தனிக் குழந்தை அவர், இன்னொரு ஞான சம்பந்தர்.

பாரதியின் மனைவி செல்லம்மாள் ஒரு பேட்டியில் சொன்னார். “அவர் ஒரு யுகபுருஷன் என்பது எனக்கு பின்னர்தான் தெரிந்தது, ஒரு யுகபுருஷனுடன் வாழ்ந்திருக்கின்றேன் என்பதை விட என்ன பெருமை வேண்டும்?”

ஆம், பாரதி பிறந்த மண்ணில் பிறந்தோம், அவன் பேசிய பேச்சினை பேசினோம் என்பதைவிட என்ன பெருமை வேண்டும்?

பாரதியில் கரைந்தோரெல்லாம் தேசியம் பேசினார்கள், ஜெயகாந்தன் பேசினார், கண்ணதாசன் பேசினார், எல்லோரும் பேசினார்கள்.

இத்தேசத்தில் எங்கெல்லாம் தேசியம் பேசப்படுமோ, அங்கெல்லாம் மூல முதல்வராக பாரதி நிற்பார். அவரின் வரி அவரை விட முந்தி கொண்டு நிற்கும்.

அதுதான் நம் பாரதியின் வெற்றி, அவன் வணங்கிய காளி கொடுத்த தனிபெரும் வெற்றி, எக்காலமும் இங்கு கவிராஜனாய் அவன் நிலைத்து நிற்கும் வெற்றி.

தேசத்தை மனமார நேசிப்பவர்கள், இந்துமதத்தை தன் மனமார நேசிப்பவர்கள், காலம் காலமாய் இங்கு நிலைப்பார்கள் எனபதற்கு, தன் திறமையினை நாட்டுக்கும் மதத்துக்கும் கொடுத்த ஒருவன் எக்காலமும் நிலைப்பான் என்பதற்கு தெய்வம் கொடுத்த ஒரு பெரும் சாட்சி பாரதியார்.

பாரதி பெரும் சவால், அவனை முழுக்க உள்ளே எடுக்கவும் முடியாமல் விரட்டவும் முடியாமல் அவர்கள் இன்றுவரை தலைமேல் கொள்ளியாக துடிப்பது கொஞ்சமல்ல‌.

அவனை படிக்காமல் தேசபற்று வராது, நல்ல தமிழ் கவிதை வராது, பாடல் வராது. தேசியமோ தமிழோ எதுவுமே உருப்படியாக வராது.

பாரதியினை படித்தோரெல்லாம் இங்கு மாபெரும் அறிவுச்சுடராய், தேசியவாதிகளாய், மாபெரும் கலைஞர்களாய் ஜொலித்தார்கள். அது சுஜாதா, ஜெயகாந்தன், பாலசந்தர் என பெரும் வரிசை.

அந்த ஞானத்தமிழன் பெயர், அவன் நடமாடிய சென்னை கடற்கரைக்கு சூட்டப்பட வேண்டும். அவனை உருவாக்கிய ஞானபூமியான காசியில் அவனுக்கோர் பெரும் சிலை வேண்டும்.

“தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என தேசியத்தை காக்க அவன் இங்கு வேண்டும்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையினை கொளுத்துவோம்” என பெண்ணுரிமை காக்க அவன் வேண்டும்.

“பாரத தேசமென்று பெயர் சொல்லுவார், ‍ மிகப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்” என முரசு கொட்ட அவன் வேண்டும்.

“சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றே துதிப்போம்” என ஆன்மீகத்தை துணிச்சலாய் பேச அவன் வேண்டும்.

“ஓடி விளையாடு பாப்பா.. ” என அடுத்த தலைமுறையினை கைபிடித்து அழைத்து செல்ல அவன் வேண்டும்.

“சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.” எனப் பாட அவன் வேண்டும்.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே – இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? – இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?” என நாட்டை வணங்க அவன் வேண்டும்.

“மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி
பாகார்ந்த தேமொழியாள்,படருங் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்பரம சக்தி
ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை
சோகாட விக்குளெனைப் புகவொட் டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்”

நிச்சயம் அவன் காளிதாசனின் மறுபிறப்பு, அந்த காளிதாசன் நாட்டுக்காய் பாட பிறந்து வந்த அரும்பிறப்பு.

பாரதம் பாரதமாக வாழவும், தமிழகம் ஞான பூமியாய் பாரதத்துக்கு வழிகாட்டி நிற்கவும் அவன் இங்கு வேண்டும். எக்காலமும் எங்கள் பெருமைக்குரிய பாரதி வேண்டும்.

நாட்டுக்காய் வாழ்ந்த அவன், இப்பொழுதும் தன் படத்தை உற்றுப் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இப்பொழுதும் கெஞ்சுகின்றான்.

“பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!”

என கதறி கதறி கெஞ்சுகின்றான். ஒவ்வொருவரிடமும் அவன் இன்றும் கெஞ்சுகின்றான்.

அவனின் குரலுக்கு தேசாபிமானியாய் செவிசாய்ப்பதே அந்த தேசபித்து பிடித்த ஞான சித்தனுக்கு செய்யும் மாபெரும் அஞ்சலி..

பாரதத்தின் கவிசித்தனுக்கு, இந்துஸ்தான பித்தனுக்கு ஆத்மார்த்த அஞ்சலிகள்.


பாரதி என்பவன் வெறும் கவிஞன் அல்ல, வெறும் தேசாபிமானி அல்ல, சில கட்டுரைகளையும் புத்தகமும் பாடல்களும் எழுதி வயிறு வளர்க்க துணிந்தவனும் அல்ல‌.

அவன் ஒரு சித்தன். இந்து மரபில் வந்த ஞான சித்தன். அவனின் பாடல்கள் தேசாபிமானிகளுக்கும், கண்ணனின் பக்தர்களுக்கும், காளியின் பக்தர்களுக்கும், இன்னும் வீரசிவாஜியினை தேடுவோருக்கும் விவேகானந்தரை தேடுவோருக்கும் மட்டுமல்ல, அது வாழ்வில் நிம்மதியும் ஞானமும் தேடுவோருக்கும் பயன்படும்.

திருமூலரும், பட்டினத்தாரும், ஒளவையாரும் பாடிய பாடல்களின் தத்துவங்களை தன் ஒரே பாட்டில் சொல்லி சென்ற பெரும் சித்தன் அவன்.

வாழ்வின் நிலையாமையும் , உறவுகள் எனும் மாயையினையும், குடும்பம் குழந்தைகள் எனும் பற்றினையும் அவன் துறந்ததையும் வெகு எளிதாக தன் பாடலில் அவன் மறைமுகமாக சொல்லியிருந்தான்.

பற்றற்ற வாழ்வினையும் மாய வாழ்வின் காட்சிகளையும் மிக சுருக்கமாக அதே நேரம் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியிருந்தான்.

அது அவனின் வாழ்வின் கடைசிகாலங்கள்.

சம்பாதிக்க தெரியாதவன், பித்து பிடித்தவன், வாழ தெரியாதவன், வெற்று வேட்டு, அரைகிறுக்கன் என பல வகையில் அவன் புறககணிக்கபட்டிந்த காலம் அது.

பிள்ளைகள் பாசம் அறியாத பித்தன், மனைவிக்கு மல்லிகை பூ கூட கொடுக்காத மடையன், பெண் பிள்ளைகள் இரண்டு இருந்தும் இரு அணா கூட சேர்க்கா ஊதாரி என சொந்தமும் பந்தமும் இனமும் வாட்டிய நேரம்.

அவன் “நல்லதோர் வீணைசெய்தே நலங்கெட புழுதியில் எறிவாயோ.. சொல்லடி சிவசக்தி” என அவன் தன் விதியினை நொந்து அழுது அழுது அதிலும் விரக்தியாகி ஞானம் எட்டியிருந்த காலம்.

அப்பொழுது அவனின் காலம் நெல்லை மாவட்டம் கடையத்தில் கழிந்தது, கொஞ்ச நாள் மாமனார் ஊரில் மனைவி வாழ்ந்திருக்க அவன் அப்பகக்ம் சுற்றி கொண்டிருந்தான்.

தன்மானமிக்க ஒருவனால் மாமனார் வீட்டில் வாழ்தல் முடியாது, பாரதியின் வறுமை அப்படி அவனை தள்ளியிருந்தது.

ஊரும் உலகமும் அவனை செய்த ஏளனமும், வசவுகளும் இன்னும் அவனை நோகடித்திருந்தன‌.

அந்நிலையில்தான் அவன் பாடினான்.

அவன் இளமைகால எட்டயபுர வாழ்வு நினைவுக்குவந்தது, அந்த பெற்றோர் படமாய் நின்றார்கள்.

அவன் படித்த படிப்பு நினைவுக்கு வந்தது, கற்றதை எல்லாம் நினைத்து பார்த்தான், தன் கற்றதில் பெற்ற கருத்தையும் நினைத்தான்.

அப்படியே அவன் குடும்பமும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள், கண்முன் நடமாடும் குழந்தைகளையும் மனைவியினையும் கண்டான்.

அப்படியே வானத்து பறவைகளையும் கண்டான், ஓடியாடும் கால்நடைகளை கண்டான், மரங்களை கண்டான்.

மனதுக்குள் அவன் வீட்டில் படமாய் நிற்கும் தந்தையும், நடமாடும் குழந்தைகளும், பிற்காலத்தில் அவன் விட்டுவிடபோகும் ஆவியும் நினைவுக்கு வருகின்றன‌.

தான் சந்திக்கும் அவமானங்களோடு அதே நேரம் பெரும் ஞானத்தோடு பாடுகின்றான்.

உலகமாந்தர் எதெல்லாம் பெருமை கவுரவம் வாழ்வு என கருதுகிறார்களோ, அதையெல்லாம் மாயை என உணந்து பாடுகின்றான்.

அவன் கல்வியில் கரைகண்டவன் பெரும் வாழ்வும் பணமும் கொண்டாட்டமும் பெற்றிருக்கமுடியும், ஆனால் தர்மத்துகாய் அதனை இழந்தவன்.

இம்மானிடரின் மாயையினை அறிந்து, அதனை அவர் உணராமல் இருப்பதை அறிந்து பாடுகின்றான்.

“நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”

ஆம் , வாழ்வின் நிலையாமையினை இதனைவிட யார் சொல்லமுடியும்?

இங்கு காணும் எல்லாம் மாயை, இங்கு ஆழகற்றது கூட மாயை, எல்லாம் மாயை என உணர்ந்துபாடும் பாரதி.

நின்றதும் நிற்பதும் மாறும், வருவதும் மறையும் என தொடங்கும் பாடலில் வானமும் மாயை காணும் எல்லாமும் மாயை என பாடும் பாரதி இன்னும் ஆழமாக செல்கின்றான்.

கண்ட காட்சி கண்ட உறவுகள் அது கொடுக்கும் குணங்கள், சிரிப்பு பாசம் அழுகை கண்ணீர் வஞ்சகம் பொறாமை அன்பு சண்டை என எல்லாமும் மாயை என உணர்ந்து மானிட வாழ்வை சோலைக்கு ஒப்பிட்டு பாடுகின்றான்.

சிறிய விதையில் இருந்து மரங்கள் வருவதும் மரங்களில் இருந்து விதைகள் வருவதும் மாயை, இந்த உயிர்கள் தொடர்ச்சியே மாயை என அவனே ஞானசிரிப்பு சிரிக்கின்றான்.

மறுபடியும் ஆழத்துக்கு செல்கின்றான்.

சென்றவர்கள் இனி வரமுடியாது, வந்ததும்தங்கமுடியாது என்பதை உணர்ந்து சென்றது பொய்யான உலகம் இது , பொய்யான வாழ்விது என உணர்பவன் கடைசியாக பெரும் தத்துவத்தோடு முடிக்கின்றான்.

“காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”

காண்பதெல்லாம் உறுதி என நம்புகின்றோம் அது அல்ல காண்பது எதுவுமே உறுதியானது அல்ல, நாம்காணும் காட்சி எல்லாமே அன்னை சக்தி போட்டு காட்டு கோலங்கள், அவளின் இயக்கம், அதுதான் நித்திய உண்மை என முடிக்கின்றான்.

இந்த உலகம் அன்னை சக்தி மாய காட்சிகளால் ஆடும் இடம், அன்னை சக்தி ஒன்றே நிலையானவள், அவள் உலகை இயக்கும் காட்சியில் மானிடர் மயங்கிக் கொண்டிருக்கின்றனர் என நிம்மதி கொள்கின்றான் பாரதி.

“சொல்லடி சிவசக்தி” என அழுதவன், “காண்பது சக்தியாம்” என இப்பாடலில் ஆறுதல் கொள்கின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறுதல் தரும் பாடல் இது.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும் மனிதனுக்கும் பெரும் ஞானநிம்மதி தரும் பாடல் இது.

தாயும் தகப்பனும் படமாக நிற்கும் பொழுது, குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் பொழுது, ஒரு நாள் நாமும் இவ்வுலகை நீங்கி படமாக நிற்போம் எனும் பொழுது பெரும் தோட்டமும் அந்த இளமைகால நினைவுகளும் விளையாட்டும் சந்தித்த மனிதர்களும் பழைய நினைவுகளும் மேலோங்கும் பொழுது இந்த பாடல் நினைவுக்கு வராமல் போகாது.

பந்தபாசம் என்பது மாயை, எல்லாமே மாயை என்பதை இப்பாடலை தவிர விளக்க முடியாது.

வெறும் மயக்கங்களிலும் புரிந்துகொள்ளமுடியா வலிகளிலும் இன்னும் பல அவமானங்களிலும் வேதனைகளிலும் பிரிவுகளிலும் அழுகையிலும் இப்பாடல் எப்பொழுதுமே துணை நிற்கும்.

அவ்வகையில் ஒவ்வொரு மனிதனின் ஆன்மாவுக்குமான பாடலை எழுதி வைத்தான் அந்த ஞானசித்தன்.

அவன் நிச்சயம் முக்காலமும் அறிந்தவன், தான் வாழும்போதே ஞானசுடராய் இந்து ஞானியாய் இந்துஸ்தானத்தின் வீரமகனாய் வாழ்ந்து அப்படியே கரைந்துவிட விரும்பினான்.

மாணிக்கவாசகர் போல, ஆன்டாள் போல, நந்தன் போல அவன் இளம் வயதிலே ஞானம் அடைந்து இறைபாதம் கலந்துவிட மன்றாடினான்.

அதையே தன் பாடலாகவும் வைத்து பாடினான்.

“நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?”

என தனக்குத் தானே தன் மனதிடம் சொல்லிக் கொண்டான்.

ஏ மனமே , நீ பாரதி, நீ ஞானம் அடைந்தவனின் ஆழ்மனம், சோற்றுக்காகவும் வாழ்வுக்காவும் வாழும் மனமல்ல நீ, எமனுக்கு அஞ்சும் குணமும் உன்னுடையது அல்ல.

அதெல்லாம் வேடிகை மனிதர்களுடையது, அது சோற்றுக்கு அழும் சாவுக்கு அழும், வயதானாலும் சாக துணியாது கதறும்.

ஆனால் நீ பாரதியின் மனம், நீ அந்த மனிதர்களை போல நானும் வீழ்வேன், அர்த்தமில்லா வாழ்வு வாழ்ந்து வீழ்வேன் என எண்ண கூடாது, வாழ்வின் அர்த்தம் சொல்லிவிட்டு சட்டென கிளம்ப நீ தயாராக இரு.

என தனக்கு தானே சொன்னவன், அந்த ஞானத்தில் எமனையே பார்த்து சொன்னான் “காலா உன்னை சிறு துரும்பென மதிக்கிறேன், என் காலடியில் வாடா உன்னை மிதிகின்றேன்”.

எவ்வளவு ஆத்மபலம் இருந்திருக்கவேண்டும்? நிலையற்ற உலகில் எல்லாம் மாயை என உணர்ந்து எப்போது வேண்டுமானாலும் விடைபெற்று செல்ல எவ்வளவு ஞானவைராக்கியம் இருந்திருக்கவேண்டும்.

அவன் சித்தி அடையாமல் அவன் முழுஞானம் அடையாமல் அது சாத்தியமில்லை.

ஒருவகையில் எப்படிவாழவேண்டும் என விரும்பினானோ அப்படி வாழ்ந்தான், எப்படி பாடவேண்டும் என நாட்டுக்காய் சிந்தித்தானோ அப்படி பாடினான்.

தன் முடிவு எப்படி வரவேண்டும் என விரும்பினானோ அப்படியே சென்றும் சேர்ந்தான், அந்த அளவு கர்மம் அறிந்த முழு ஞானியாய் அவன் வாழ்ந்திருந்தான்.