குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

தமிழகத்தின் அடுத்த பெரும் திட்டமாக, அணுவுலைகள் மகேந்திர கிரி மையம், திருச்சி பெல், சென்னை ஆவடி, சூலூர் மற்றும் தாம்பரம் விமானபடைதளம், ஆவடி தொழிற்சாலை போன்ற பெரும் திட்டம் போல அடுத்த மகா முக்கிய திட்டத்தை தருகின்றார் மோடி.

இதனால் தமிழக தென்மாவட்டங்கள் குறிப்பாக தேரிக்காடு என சொல்லப்படும் அந்த பின் தங்கிய வறண்ட பிரதேசங்கள் இனி வளர்ச்சியினை நோக்கி செல்லும்.

ஆம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைவது உறுதியாகிவிட்டது, சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்ட நிலையில் திட்டத்தை தொடங்கி வைக்க மோடியே நேரில் வருகின்றார்.

சில வாரங்களில் அவர் தமிழகம் வர இருக்கின்றார். வந்து திட்டத்தை தொடங்குவார்.

ராக்கெட் ஏவுதளம் என்பதன் அமைவிடம் மகா முக்கியம், அதாவது மக்கள் வசிக்காத பகுதியாக இருந்தால் நல்லது, கடல் போன்றது அதுவும் நாடுகள் அதிகமில்லா பகுதி என்றால் மிக மிக நல்லது.

இந்த அமைவிடம் எல்லா நாட்டுக்கும் கிடைப்பதில்லை.

அமெரிக்காவுக்கு அதன் தென்முனையில் ஒரு நீண்ட கொம்பு போன்ற இடத்தில் கிடைத்தது அங்குதான் கென்னடி ராக்கெட் மையம் அமைந்திருக்கின்றது.

தென் அமெரிக்க கண்டத்து பிரெஞ்ச் கயானா இதில் முக்கியமான நாடு, அங்கிருந்து ஏவப்படும் ராக்கெட் பாதுகாப்பானது, கடல் பகுதி மிகுந்தது.

இதனாலேயே முன்பு இந்திய ராக்கெட்டுகள் கூட பிரெஞ்ச கயானாவுக்கு கொண்டு சென்று ஏவப்படும்.

ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளம் கசகஸ்தான் பக்கம் இருந்தாலும் ராக்கெட் வட துருவத்தை அண்டித்தான் பறக்கவிடப்படும். இதனால் ஆபத்தில்லை.

இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம் 1965களில் அறிமுகமான போது அப்போதைய சதீஷ் தவான், விக்ரம் சாராபாய் போன்றோருக்கெல்லாம் தமிழகமே வெகு விருப்பமான இடமாக இருந்தது.

குலசேகரன்பட்டினமே முதல் தேர்வாக இருந்தது.

இம்மாதிரி நிலையங்களை மேற்கே பாகிஸ்தான் பக்கம் அமைக்க முடியாது, இன்னும் மேற்கு கடலும் அதை தாண்டிய அராபிய பிராந்தியங்களும் சரியான இடமல்ல‌.

இந்த தென்முனை மிகச் சரியானது, இதை அண்டி இலங்கை எனும் மிகச் சிறிய தீவுதான் வரும். அதன் தென் பக்கம் எல்லாமே பரந்த திறந்த பெரும் கடல்.

இதனால் சதீஷ்தவான் காலத்திலே குலசேகரன்பட்டினமே தேர்வாக இருந்தது. ஆனால் திராவிட தமிழக அரசு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை.

இதனால் ஆந்திரா பக்கம் சென்றார்கள். அப்படி உருவானதுதான் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுகனை தளம்.

பின் இந்தியாவின் ராக்கெட் வளம் பெருக பெருக, அதி நவீன பெரிய ராக்கெட்டுகளை ஏவ இன்னொரு தளம் அவசியம் என தேவை வந்தது.

ஆனால் சில தடுமாற்றங்கள் எழுந்தன‌.

குலசேகரந்பட்டின ராக்கெட் தளம் என பேச்சு வரும்போதெல்லாம் அந்த தென்கிழக்கு கடற்கரையில் சலசலப்பு எழும். அணுவுலை, வாழ்வாதாரம், ஸ்டெர்லைட் என ஏதோ ஒன்று பெரிதாக வெடிக்கும்.

இந்த ரகசியம் இதுவரை புரியவே இல்லை.

அங்கே எதுவும் வரக்கூடாது, அந்த கடலும் கரையும் இப்படியே கிடக்கவேண்டும் என யார் விரும்புகின்றார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

இதனால் பின்னடைவு ஏற்பட்டது.

மோடி “மேக் இன் இந்தியா” என பெரும் புரட்சி செய்தார், அதில் இந்திய விண்வெளி செயற்கைகோள் வரை தனியார் கூட்டு தயாரிப்பில் செய்ய வழிசெய்யப்பட்டது.

இந்திய விண்வெளி நிறுவனம் இஸ்ரோவும் நம்பகமான ராக்கெட் செலுத்தும் மையமாக உலகளவில் மோடி காலத்தில் நம்பிக்கை பெற்றுவிட்டது.

இனி பன்னாட்டு ராக்கெட்டுகளை அடிக்கடி ஏவவேண்டி வரும், இது பெரும் பணமும் வேலைவாய்ப்பும் கொட்டும் விஷயம்.

இதனால் மறுபடி குலசேகர ராக்கெட் ஏவுதளம் அமைய அவசியம் வந்தது.

ஆனால் எதிர்ப்பும் வந்தது, அது வழமை.

என்ன மாயம் நடந்ததோ. மோடி அரசு அதனை மிக அமைதியாக எதிர்கொண்டது. ஒரு சலசலப்பில்லாமல் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது.

நிச்சயம் இது சாதனை.

இப்போது கட்டுமான வேலை தொடங்க இருக்கின்றது. அதை தொடங்கி வைக்க மோடி தமிழகம் வருகின்றார்.

ஆக 1971லேயே அமையவேண்டிய குலசேகரபட்டின ராக்கெட் தளம் காங்கிரஸால் முடியாமல் மோடி காலத்தில்தான் தமிழகம் வருகின்றது.

இது வெறும் ராக்கெட் தளம் என கடக்கும் விஷயம் அல்ல, இதனால் பெரும் வேலை வாய்ப்பும், குடியிருப்பும் அப்பக்கம் வரும்.

தூத்துக்குடி முதல் கூடங்குளம் வரையான கடல்பகுதி கடும் முக்கியத்துவம் பெறும், வேலை வாய்ப்பும் கூடும், பாதுகாப்பும் அதிகரிக்கும்.

ஆக தமிழகத்துக்கு உலகமே திரும்பி பார்க்கும் மிகப்பெரிய முக்கியத்துவத்தை மோடி தருகின்றார்.

அமெரிக்காவின் கென்னடி தளம், ரஷ்யாவின் பைகானூர் மற்றும் வடக்கு ரஷ்ய தளம், சீனாவின் தியாங்கோங் போல உலகளவில் குலசேகரன்பட்டினம் எனும் பெயர் அடையாளமாகும்.

மோடிக்கு தேசாபிமானிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் ஸ்ரீஹரி கோட்டா நிலையத்துக்கு சதீஷ்தவான் பெயரை இட்டது போல, இந்த நிலையத்துக்கு அப்துல் கலாம் அவர்கள் பெயரை சூட்டினால் மிக்க பொருத்தமாக, நன்றியாக இருக்கும்.

அம்மாமனிதனின் அற்புதமான, விஞ்ஞான இந்தியனின் பெயரை சுமந்து அந்த தளம் நின்றால் நாட்டுக்காக வாழந்த அம்மாமனிதனுக்கான நன்றி அஞ்சலியாக அது அமையும்.

அதனை மோடி செய்வார் என எதிர்பார்ப்போம்.

உலக அரங்கில் பாரதத் தென்முனையினை, பாண்டிய அடையாளப் பெரும் பெயரை உலகளவில், வானளவில் கொண்டு செல்ல அடித்தளமிடும் மோடியினை பாண்டிய மண்ணின் மக்களும் தேசாபிமானிகளும் பெரும் ஆவலோடு எதிர்கொண்டு வரவேற்க காத்திருக்கின்றார்கள்.

அவர்களோடு இந்துஸ்தானின் மூத்த கோவிலை கொண்டிருப்பவளும், கண்ணகி காலத்துக்கும் முந்தையவளுமான குலசேகர முத்தாரம்மனும் காத்திருக்கின்றாள்.

மோடி அந்த அம்மனை வணங்கி அருள்பெற்று செல்லவேண்டும் என்பதே தென் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

காலம் காலமாக இந்த தேசத்துக்காக கடலோரம் காவலிருக்கும் அன்னை, அந்த தலைவனை, நாட்டின் தலைமகனை வாழ்த்தி வரமருள தயாராக இருக்கின்றாள்.

தேசத்தின் மூத்த தாயினை மோடி சந்தித்து ஆசி வாங்கிச் செல்லட்டும். எல்லாம் நல்லபடியாய் நடக்கட்டும், தேசம் வலுக்கட்டும்.