அட்ட வீரட்டானத் தலங்கள் 4

திருப்பறியலூர் – இளங்கொம்பனையாள் சமேத தக்ஷபுரீஸ்வரர்

சிவபெருமானின் அட்டவீராட்டான தலங்களில் நான்காம் தலம் திருப்பறியலூர். தேவாரம் பாடப்பெற்ற இத்தலம் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர் முதல் திருமுறையில் இந்த தலத்தினை பாடித்தான் அந்த பதிகத்தை தொடர்ந்தார்.

“கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே”

என்பது அந்த பாடல்.

திருநாவுக்கரசர் தன் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலை இங்கு பாடினார்.

“தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ் செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே”

அப்படியான இந்த இந்த ஆலயத்தின் சிவன் பெயர் தட்சபுரீஸ்வரர், இது தட்சனை அவர் வதம் செய்ததால் வந்த பெயர்.

தட்சன் வரலாறு எல்லோரும் அறிந்தது, அதுவும் அவன் நடத்திய யாகம் மகா பிரசித்தியானது, அந்த யாகம்தான் அவனின் முடிவும் இந்த தட்சபுரீஸ்வரரின் அடையாளமுமானது.

அந்த தட்சன் கதை லிங்க புராணம் உள்ளிட்ட பல புராணாங்களில் உண்டு, சிவ புராணத்தில் உண்டு. அதன் தழுவலில் தமிழ் இலக்கியம் பல உண்டு

“தக்கையாக பரணி” அப்படியானது, ஒட்டகூத்தர் மிக அழகாக தட்சன் செய்த யாகம் பற்றி அங்கே சிவன் நடத்திய திருவிளையாடல் பற்றி உன்னத காவியமாக எழுதியிருப்பார்

தமிழின் மிக அழகான பக்தி இலக்கியம் அது, ஒருவகையில் கம்பனின் பாடல் போல் அழகானது.

அப்படியான அந்த தட்சன் கதையினை கண்டால் இந்த ஆலயத்தின் சிறப்பு புரியும்

தட்சன் என்பவன் பிரம்மனின் மகனான பிரஜாபதிகளில் ஒருவர், பிரஜாபதிகள் என்போர் படைப்பு தொழிலுக்காக பிரம்மனால் உருவாக்கபட்டவர்கள்

காசிபர், வசிஷ்டர், மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், தட்சன் மற்றும் கிரது ரிஷிகள் என அந்த பெரும் வரிசை உண்டு

இந்த வரிசையில் வரும் தட்சனும் சக்திமிக்கவன், படைப்பின் முக்கிய இடம் அவனுடையது, 27 நட்சத்திரங்களும் அவனின் மக்கள், இன்னும் மன்மதன் மணந்த ரதி போன்ற எல்லா படைக்கும் சக்திகளும் அவனில் இருந்தே உருவாயின‌

அதாவது படைப்பு தொழிலுக்கு உதவியான அவன் தன் மக்கள் மூலம் படைக்கும் தொழிலை இன்னும் எளிதாக நிறைவாக வேகமாக செய்துவந்தான்

அவனின் மகளில் ஒருத்திதான் தாட்சாயினி இவள் சக்தியின் அம்சமாக பிறந்தவள்

தட்சனின் மருகமகன்களும் அபார சக்திமிக்கவர்கள் தனிபெரும் தேவர்களாக இருந்தார்கள். எமதர்ம ராஜன், மன்மதன், சந்திரன் என பெரிய வரிசை அது

இவனின் மகள் அருந்ததி எமதர்மனின் மனைவியாகி பெற்ற வாரிசுகள்தான் வசுக்கள், முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள், அதிதி , யட்சர்கள், நாகர்கள் என பெரும் வரிசை உண்டு

வாசுகி முதலான நாகங்களும், குபேரன் முதனால யட்சர்களும் இவன் வம்சமே

அவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவன் இந்த தட்சன்

இந்த தட்சனின் பெரும் குடும்பத்தில் மகளாக வந்தவள் தாட்சாயினி, அவள் அம்பாளின் அம்சமாக பிறந்தவள் அவனின் செல்லமகள் என்பதால் அவன் பெயரிலே தாட்சாயினி என அழைக்கபட்டாள்

தாட்சாயினி தட்சனுக்கு மகளாக பிறந்தாலும் அவள் சக்தியின் அம்சம் என்பதால் சிவனை தேடிகொண்டே இருந்தாள், அவள் பிறப்பின் ரகசியபடி அவள் சிவனை மணக்க சில காரணங்களுக்காக பிறந்தவள்

உரிய காலம் வந்தபோது அவள் மனம் சிவனில் கரைந்தது, அவரை மணந்துகொள்ள முடிவெடுத்தாள்

தட்சனுக்கு அகம்பாவம் அதிகம், அதுவும் பிரஜாபதிகளில் ஒருவன் பிரம்மனின் வாரிசு, பெரும் பெரும் சக்திமிக்க தேவர்களின் பிதாமகன் மூலவன் என அவன் கர்வம் கொண்டிருந்தான்

அவனுக்கு சிவன் மேல் சில வருத்தமும் இருந்தன, ஒருமுறை கயிலாயத்துக்கு அவன் சென்றபோது சிவன் அவர்போக்கில் அமர்ந்திருந்தார் இவனை அதிகம் கண்டுகொள்ளவில்லை

தெய்வம் எப்போதும் அந்தஸ்தை செல்வாக்கை காணாது ஒருவன் உள்ளத்தைத்தான் காணும், அகங்காரமிக்கவன் ஆண்டவனுக்கு உகந்தவன் அல்ல‌

அதனால் காரைக்கால் அம்மையாரை எழுந்துநின்று வரவேற்ற ஈசன் இவனை கண்டுகொள்ளவில்லை

அதில் இருந்தே சிவன் மேல் ஒரு வன்மத்தில் இருந்தவன் தன் மகளின் ஆசையினை மறுத்தான், ஆனால் விதிப்படி சிவனை அடையவேண்டிய தாட்சாயினி தட்சனை மீறி சிவனோடு சென்றுவிட்டாள்

தட்சனின் அகங்காரம் இப்போது கொடிய கோபமுமாகவும் ஆயிற்று, தன்னை மதிக்காத சிவன் தன் மகளையும் கவர்ந்துசென்றான் என்பதில் அவனுக்கு அகங்காரம் எல்லை மீறிற்று

எனினும் காலம் கனிய காத்திருந்தான்

யாகங்கள்தான் உலகை காக்கும், உலகை இயக்கும், யாகங்கள் இல்லையென்றால் உலகம் பல நெருக்கடிகளை சந்திக்கும்

இதனால் யாகம் அவசியம் அதுவும் படைப்புதொழிலை செய்வோர்க்கு மிக மிக அவசியம்

தட்சன் அப்படி ஒரு பெரிய யாகத்தை செய்ய முடிவெடுத்தான், முப்பது முக்கோடி தேவர்களையும் அழைத்து அவரவர்க்கு உரிய பங்கினை யாகத்தில் வழங்க முடிவெடுத்தான்

அந்த பெரிய யாகத்தில் எல்லோரும் வரும் யாகத்தில் சிவனை வேண்டுமென்றே தவிர்த்தான்

எல்லோரையும் அழைத்துவிட்டு ஒருவரை தள்ளிவைப்பது பொதுவெளியில் அவமானபடுத்தும் விஷயம், இன்னொன்ன்று தன்னை விட அவன் தாழ்ந்தவன் அதனால் அழைக்கவில்லை என சொல்லாமல் சொல்லும் விஷயம்

இம்மாதிரி யாகங்களில் தேவர்களுக்கு அவிர்பாகம் முக்கியம் அதுதான் உச்சமரியாதை யாகம் பூர்த்தியாகும் இடமும் அதுதான்

சிவனுக்குரிய அவிர்பாகத்தை அவன் கொடுக்கமறுத்தான், யார் சொல்லியும் அவன் கேட்கவுமில்லை. சிவனை அழைக்கவேண்டும் என பலர் சொல்லியும் அவன் அகந்தையால் அதனை மறுத்தான்

சிவனை இழிவாகவும் மட்டம்தட்டியும் பேசியவன், சிவனின் சக்தியினை குறைத்து சொல்லி ஏளனமும் செய்தான், சுடுகாட்டில் இருப்பவன் சடாமுடியன், கபாலம் ஏந்திய யாசகன் தன் மகளை மாயத்தால் கவர்ந்து சென்றவன் என எகத்தாளம் செய்துகொண்டிருந்தான்

தட்சன் யாகம் செய்யபோகின்றான் அங்கே தங்களுக்கு அழைப்பில்லை என்றது ஆத்திரட்டாள் தாட்சாயினி

பெண்களுக்கு எப்போதும் இரு குண்ம் உண்டு, பிறந்தவீட்டின் சிறப்பிலும் பெருமையிலும் தங்களுக்கு இடம் வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் அப்படியே கணவனையும் விட்டுகொடுக்கமாட்டார்கள்

தாட்சாயினிக்கும் அதே மனம் வந்தது, தன் தந்தையிடம் நீதிகேட்பேன் என கிளம்பினாள், அவனின் மனம் அறிந்தவர் அவளை தடுத்தார்

ஆனாலும் தகப்பன் வீடு செல்வது என் உரிமை, அங்கே தன் கணவனுக்கு அவிர்பாகம் வாங்குவதும் தன் கடமை என்றவள் யாகம் நடக்கும் இடத்துக்கு சென்றாள்

அங்கே தட்சன் அவளை பரிகாசம் செய்தான், சுடுகாட்டில் ஆடும் கூத்தாடி மனைவிக்கு இங்கு இடமில்லை என்றான் இன்னும் பற்பல பரிகாசங்களை செய்தான்

சிவநிந்தனை அத்தனையும் செய்தான், அவன் சிவன் மேல் கொண்டிருந்த வெறுப்பும் அகங்காரமும் அவளுக்கு அப்போது முழுக்க தெரியவந்தன‌

சிவன் தன்னை ஏன் தடுத்தார் என்பது அவளுக்கு புரிந்தது ஆனாலும் தகப்பனோடு வாதிட்டு வெல்லலாம் என பேசியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

சக தேவர்களும் பிரம்மனும் சிவனை அழைக்கா தட்சனை கண்டிக்கவில்லை, அவர்களிடம் நீதிகேட்ட தாட்சாயினிக்கு மவுனமே பதிலானது

மிக மிக ஆணவத்துடன் சிவனை அவன் நிந்தித்தபோது மனம் உடைந்த தாட்சாயினி, “சிவனை இந்த அளவு வெறுக்கும் ஒருவனின் மகளாய் பிறந்ததில் அவமானபடுகின்றேன், இந்த தட்சன் மூலம் வந்த உடல் இனி வேண்டாம்” என சொல்லி தீயில் மாய்ந்தாள்

அவள் இறந்துவிட்டாள் எனும் செய்தி கேட்டதும் சிவன் ஆவேசமானார், அவர் உடலில் இருந்து வீரபத்திரன் வெளிபட்டான்

தட்சனின் யாகசாலையில் புகுந்து அகதளம் செய்தார் வீரபத்திரர், அவரின் கோபம் முன்னால்நிற்க முடியா எல்லோரும் ஓடி ஒளிந்தனர்

எல்லா தேவர்களுக்கும் அடி விழுந்தது, தட்சன் சிவனை நிந்தித்தபோது வாய்விட்டு சிரித்த சூரியனின் பல்லை உடைத்தார் வீரபத்திரர்

(அதனாலே இன்றும் சூரியனுக்கு மென்மையான உணவையே படைப்பார்கள்)

இப்படி எல்லோரையும் நொறுக்கி தள்ளியவர் தட்சனின் தலையினை வெட்டி வீழ்த்தினார், ஆத்திரம் கொந்தளிக்க தாட்சாயினி உடலை கையில் ஏந்தி பெரும் ஆட்டம் ஆட ஆரம்பித்தார்

அந்த ஆட்டத்தால் பிரபஞ்சம் கலங்கிற்று, இனி உலகமே இருக்காது எனும் அளவு எல்லாம் கலங்கிற்று, சிவன் சாந்தமாகாவிட்டால் இனி பிரளயம் என அஞ்சியோர் திருமாலிடம் சரணடைந்தனர்

திருமால் தன் ச்கராயுதத்தால் அந்த தாட்சாயினி உடலை துண்டு துண்டாக்கினார், அது 51 துண்டுகளாக வீழ்ந்தன, அப்படி வீழ்ந்த இடங்கள்தான் 51 சக்திபீடங்கள்

தேசம் முழுக்க இருக்கும் சக்தி ஆலயங்கள்

அவள் உடல் இல்லா நிலையில் கொஞ்சம் சாந்தமானார் சிவன், அவரிடம் யாகத்தின் அவசியம் பற்றியும் யாகம் நிறைவடையாவிட்டால் எழும் பெரும் சிக்கல் குறித்தும் எடுத்து சொல்ல்பட்டது

பின் யாகம் நடத்தபட்டது, அப்போதும் தட்சன் மேல் கருணை கொண்ட சிவபெருமான் அவனை உயிர்பித்தார் ஆனால் அவன் தலைக்கு பதிலாக ஒரு ஆட்டுதலையினை பொருத்தினார்

பின் அவிர்பாகத்தை பெற்றுகொண்டு ஆழ்ந்த தவம் செய்ய சென்றுவிட்டார்

இதுதான் தட்சனை சிவன் ஆட்கொண்ட வரலாற்றின் சுருக்கம்

இந்த் சம்பவம் நடந்த இடம்தான் அந்த திருபறியலூர் என அறியபடுகின்றது, அதனாலே சிவன் அங்கு தட்சபுரீஸ்வரர் என அமர்ந்து அருள்பாலிக்கின்றார்

இந்த கதையின் தாத்பரியமும் அந்த தலத்தின் சிறப்பும் புரிந்துகொள்ள கொஞ்சம் எளிமையானது

ஜீவாத்மா நடத்தும் போராட்டங்களை அது சொல்கின்றது

தாட்சாயினி என்பது ஜீவாத்மாவின் வடிவம் அது தட்சனின் மகளாய் பிறந்து தவிக்கின்றது என்பது மாயையிடம் சிக்கிய ஜீவாத்மாவின் போராட்டம்

பரமாத்மா எவ்வளவோ எச்சரிக்கின்றது, ஜீவாத்மா மாயையில் விழ கூடாது மாயையில் விழந்துவிட்டால் மீள்வது கடினம் என கடும் எச்சரிக்கை செய்கின்றது, ஆனாலும் ஜீவாத்மா விழுந்து சரிகின்றது

எல்லோர் மனதின் உள்ளும் தெய்வத்தின் குரல் உண்டு, எல்லா ஆத்மாவும் எச்சரிக்கபடுகின்றது அதை மீறினால் அழிவு என்பதை தாட்சாயினி கதை சொல்கின்றது

தட்சன் என்பவன் அகங்காரம் கொண்ட ஆத்ம வடிவம், சிவன் அவன் தலையினை அகற்றினார் என்பது அகங்காரம் கொண்ட தலையினை அகங்காரத்தை அகற்றினார் என பொருளாகும்

அவனுக்கு ஆட்டுதலையினை பொருத்தினார் என்பது அகங்காரமற்ற தலையாகும். மேய்ப்பனை நம்பி பின் தொடரும் ஆட்டின் தலை, அகங்காரமற்றதும் முழுக்க மேய்ப்பனை நம்பும் குணமும் கொண்ட ஆட்டின் தலையினை கொடுத்தார் என்பது அவனுக்கு இறைவனுக்கு கட்டுபட்ட மனம் வாய்த்தது என்பதன் அடையாளமாகும்

தட்சனின் கதை இன்னொரு மகாமுக்கிய பாடத்தை போதிக்கின்றது

அது எக்காரியம் செய்தாலும் சிவனை நினைந்தே செய்தல் வேண்டும், சிவனை தள்ளிவிட்டு மானிட அகந்தையால் இறைவனை மறந்துவிட்டு தள்ளிவிட்டு செய்யும் காரியம் சிறக்காது முழுமை அடையாது

அதனால் ஒவ்வொரு செயலிலும் இறைவனை முதலில் அழைத்து அவனுக்கான இடத்தை கொடுக்கவேண்டும், அப்படி இறைவனை அழைக்கா மனம் ஆணவமிக்க மனம் அது அழியும்

மாயையின் பிடியில் இறைநிந்தனை செய்தல் பெரிய பாவம், அகந்தையாலோ இல்லை பொருளில் மயங்கியோ பிரதிபலன்களாலோ இறைநிந்தனையினை செய்வது அழிவுக்கு முன்னோடி

தன் குருவி மூளையில் இந்த பிரபஞ்சத்தை அறிவால் அறிந்துகொண்டு , அல்ப மானிட அறிவில் இறைவன் இல்லை என தெரிந்துகொண்டதாக பிதற்றுவதும் , இறை நம்பிக்கையினை கொச்சைபடுத்துவதெல்லாம் தட்சனின் அழிவினைபோலத்தான் முடியும்

தாட்சாயினி என்பது ஜீவாத்மா தத்துவம், அந்த ஆத்மாமேல் எவ்வளவு பாசத்தை பரமாத்மா வைத்திருக்கின்றது, எப்படியெல்லாம் தேடிவருகின்றது, ஜீவாத்மாவினை எவ்வளவுக்கு பரமாத்மா அன்பு கொண்டு காக்கதுடிக்கின்றது என்பதுதான் இந்த புராணத்தின் தாத்பரியம்

வழிதவறி போனாலும் ஜீவாத்மாவினை தேடி பரமாத்மா வரும் , மாயையில் சிக்கினாலும் ஜீவாத்மாவினை அது மீட்க துடிக்கும்

அப்படியே அது திசைமாறினாலும் பின் அடுத்தடுத்த பிறவியில் தன்னோடு சேர்த்துகொள்ளும் என்பதை இந்த புராணத்தின் தொடர்ச்சி காட்டும்

இந்த காட்சியில் தட்சனின் அவமானத்தால் இறக்கும் தாட்சாயினி பின் பர்வத மகராஜாவின் மகளாய் பிறந்து சிவனை அடைவாள் என்பது புராணம்

அப்படி எத்தனை பிறவி எடுத்தாலும் பரம்பொருள் ஒவ்வொரு ஆத்மாவ்க்காக காத்திருக்கின்றார், ஒரு பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியில் தன்னோடு அந்த ஆத்மாவினை காக்க தயாராக இருக்கின்றார் என்பதை சொல்லும் புராணம் இது

அகந்தையும் ஆணவமும் கூடாது, யாராக இருந்தாலும் இறைவனை அகந்தை நீங்கி பணியவேண்டும், அகந்தையில் ஆடினால் பரம்பொருளே இறங்கிவந்து ஆணவத்தை அழிக்கும் என்பதும், அகந்தை நீக்கிய மனதை அதுவே அருளும் என்பதும் இந்த புராணத்தின் செய்தி

ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனுக்கே முன்னுரிமை கொடுத்து வணங்கவேண்டும் அந்த குரலுக்கே செவிசாய்க்க வேண்டும் என்பதுதான் தாட்சாயினி , தட்சன் என இருவரும் சொல்லும் போதனை

ஜீவாத்மா மாயையில் சிக்கி அதோடு வளர்ந்து பின் போராடி பரமாத்மாவுடன் இணையும் காட்சியினையும், அகந்தையே மாயை, அகந்தை அழிந்தால் மாயை அழியும் என்பதையும் மாயை அழிந்தால் ஞானம் வாய்க்கும் உண்மை தெளியும் என்பதை சொல்கின்றது தட்சன் கதை

இந்த போதனையோடுதான் திருபறியலூரில் வீற்றிருகின்றான் அந்த தட்சபுரீஸ்வரர்

அங்கு சென்று வழிபட்டால் கர்ம வினை தீரும், இனம்புரியாத காரணம் புரியாத சிக்கலுக்கெல்லாம் காரணமான கர்மவினை தீரும்

பந்தம் என்பதும் உறவு என்பதும் கர்மவினையால் கிடைப்பவை, உறவுகளால் வரும் சிக்கலுக்கெல்லாம் கர்ம வினைதான் காரணம்

அதுதான் தட்சனுக்கும் தாட்சாயினிக்கும் வந்தது சிவனுக்கும் தாட்சாயினிக்கும் வந்தது

அதனால் இந்த தலத்தில் வணங்கினால் கர்மவினை தீரும், கர்மவினை தீர்ந்தால் உறவுகளுடனான பிணக்கும் சண்டையும் தீரும்

அப்படி பாண்டவர்க்கு தீர்த்து கொடுத்தான் கண்ணன்

இங்கே தட்சனுக்கும் தாட்சாயினுக்கும் கர்மவினை தீர்த்தார் சிவபெருமான்

இந்த தலம் அப்படியான தலம், அங்கு வந்து வணங்கினால் கர்மவினை தீர்ந்து உறவுகளுடனும் நண்பர்களுடனும் இன்னும் காரணமே இல்லாமல் வரும் பகைகளெல்லாம் களையபடும், சிவன் அருளால் எல்லாம் தீரும்

அப்படியே தட்சனின் அகங்கார தலை அறுந்து ஆட்டுதலை கிடைத்தது போல் உங்கள் அகங்கார மனம் அகன்று மேய்ப்பனை தொடரும் ஆட்டினைபோல் உங்கள் மனம்முழுக்க இறைவன் பின்னால் செல்லும்

ஆட்டுக்கு மேய்ப்பன் காவல் என்பதுபோல் உங்களின் முழு காவலையும் அந்த சிவன் ஏற்றுகொள்வார்

கர்மவினை தீர்த்துவைக்கவும், அகந்தையினை தீர்த்து உங்களை ஆட்கொள்ளவும் அந்த திருபறியலூர் தலத்தில் உங்கள் வேண்டாத வினையெல்லாம் பறித்து எது தேவையோ அதைமட்டும் அருள காத்துகொண்டிருகின்றார் தட்சபுரீஸ்வரர்

படைப்பின் மூலத்தினை பிரபஞ்சம் தொடங்கிய நாட்களில் என்ன நடந்தது என அறிந்தவர் யாருமில்லை, பல்வேறு சக்திகள் இணைந்த பிரபஞ்சம் இது

ஈரப்பு சக்தி விலக்கு சக்தி இயக்கு சக்தி என பல உண்டு. இன்றைய விஞ்ஞானம் அதற்கு மின் சக்தி,காந்த சக்தி , காஸ்மிக் என வகை வகையான பெயர்களை இடுகின்றது

இந்த சக்திகளுக்குள் பலவகையான சக்திகளுக்குள் குழப்பம் வந்து மூலசக்தி அதனைசரி செய்திருக்கலாம் ஏதோ ஒரு சக்தி அதீமாக ஆடி பிரபஞ்ச சமநிலை பாதிக்கபட்டபோது மூல சக்தி அதனை திருத்தி சரிசெய்திருக்கலாம்

அது தட்சன்கதை என மக்களுக்கு புரியும்படி இந்துக்களால் சொல்லபட்டிருக்கலாம், விஞ்ஞானம் வளர்ந்து பல உண்மைகளை சொல்லும் எதிர்காலத்தில் இதன் ரகசியம் புரியும்

அதனால் இவையெல்லாம் கற்பனை அல்ல என்பது நிஜம், இந்த பிரபஞ்ச ரகசிய புராணத்தோடுதான் ஆத்ம தத்துவத்தையும் இந்துமதம் போதிக்கின்றது

பரசலூர் என இப்போது அழைக்கபட்டாலும் அங்கு ஒரு பக்தனின் தேவையற்ற அகங்காரத்தை , கர்ம வினைகளை பறிக்கும் சிவன் அமர்ந்திருப்பதால் அது திருபறியலூர் என்றே அந்நாளில் இருந்து அறியபட்ட கோவில்

அவரை அண்டி வணங்குங்கள் எல்லா நலமும் அருளும் வினை நீங்கி கிடைக்கப் பெறுவீர்கள் இது சத்தியம்.