தைப் பூசம்
இந்திய தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் கொண்டாடப்படும் பண்டிகை தை பூசம்.
இது வான்கோள்கள் சஞ்சாரத்திலும் முக்கியமானது, இன்றைய நாளில் மகர ராசியில் சூரியனும் கடகத்தில் சந்திரனும் வரும் நாள், பவுர்ணமியும் கூடிவரும் நன்னாள்.
பவுர்ணமி என்றால் நிறைவு, கடக ராசி என்பது மோட்ச தத்துவம், மோட்ச கர்மாவினை உணரும் வழி அங்கே உண்டு.
அதாவது இந்நாளில் ஞானம் பெருகும், தான் யார் என்பது புரியும் அதற்கான கிரகபலன்கள் அதிகம் சாதகமாக உண்டு.
ஒவ்வொருவர் மனமும் மாயையினால் நிறைந்துள்ளது, அந்த மாயை நீங்கினால் ஆத்ம ஒளி பெருகும், அந்த ஆத்ம ஒளி பெருகினால் மாயை விலகி ஞானம் நிறைந்து மோட்ச பாதை கைகூடும்.
அந்த ஞானத்தை வேண்டி முருகப்பெருமானிடம் வேண்டும் நாள்தான் தைப்பூசம்.
இதனாலே இந்நாளில் வள்ளலார் ஞானமடைந்தார், திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு சிவன் தரிசனமானார், புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் சிவனின் நடனத்தை கண்டார்கள் என பல சிறப்புக்களை சொல்வார்கள்.
காரணம் முழுமை அடையும் நாள் இது, மாய ஆசைகள் மயக்கங்கள் எல்லாம் மறைந்து பூரண ஞானம் பெருகும் நாள்.
தமிழகம், இலங்கை, மலேயா, சிங்கப்பூர் என பல நாடுகளில் அது கொண்டாப்படும் சிறப்பே சிலாகிப்பானது, விடுமுறை கொடுத்து கொண்டாடும் அளவு அது மகா முக்கியமான பண்டிகையும் ஆயிற்று.
தை பூசம் முருகனுக்கான நாள் என்பது மட்டுமல்ல விஷயம், சிவ பார்வதி நடனமும் நடந்தது அந்த நாளிலே என்கின்றது புராணம்.
அதாவது சிவனும் பார்வதியும் பூரணத்துவம் எனும் முழுமையினை அடைந்த மிக சிறப்பான நாள். இதனால் சிவாலயங்களில் இந்நாள் மிக விமரிசையாக கொண்டாடப் படும்.
தமிழர்களிடையே இந்நாள் முருகப்பெருமானுக்கான அதி உச்ச கொண்டாட்ட நாளாயிற்று.
பவுர்ணமி என்பது மகா முக்கியமான நாள், வான சாஸ்திரத்திலும் வான்கோள்கள் புவியிலும் மானிட வாழ்விலும் பல பாதிப்புகளை கொடுப்பதையும் அந்தகால ஞான சமூகம் அறிந்திருந்தது, பிரபஞ்சத்தில் கலந்திருந்த ரிஷிகள் அதை மிக எளிதாகக் கண்டறிந்தார்கள்.
நிலவு என்பது சுயமாக ஒளிரும் கோள் அல்ல, அப்படி ஒளிரவும் அதனால் முடியாது. அது சூரிய ஒளியினை மட்டும் பிரதிபலிக்கும், அப்படி அது முழுநிலவாக ஒளிரும் பொழுதும் சூரிய ஒளி மறைக்கபடும் பொழுதும் அதன் ஒளி அளவின் கதிர்வீச்சு , பூமியில் இருந்து நிலவு இருக்குமிடம் இடம் பொறுத்து. நிலவின் ஈர்ப்புவிசை மாறுபாடு பொறுத்து பூமியில் சில பாதிப்புகளை அது ஏற்படுத்தும்
அந்த பாதிப்பு பூமியின் ஒவ்வொரு பொருளிலும் மானிட உயிர்களின் மனநிலையிலும் தெரியும்
பவுர்ணமி மற்றும் அமாவாசை அன்று கடல் நீர் பெருகுவதும் பின் வாங்குவதும் இதனாலே
ஒருவன் தெளிவான மனநிலைக்கும் சிந்தனைக்கும் ஜாதகரீதியாக சந்திரன் காரணமென்பதால் அம்மாவாசை போன்ற நாட்களில் மன அழுத்தம் ஏற்படும் சிலருக்கு விபரீதமான சிந்தனைகள் வந்து குழப்பும்
இது இன்றைய நவீன மனநல மருத்துவத்தாலும் நிரூபிக்கபட்ட ஒன்று
இது அவர்களை திகைக்க வைக்கும் விஷயம், விஞ்ஞானம் பதில் சொல்லமுடியாத விஷயம்
அன்று மனம் அமைதியாக இருக்க சில பூஜைகளும் தியான வழிபாடும் முக்கியம் , இதனால் இந்துமதம் இதற்கான சில பரிகாரங்களை பூஜை என சொல்லி வைத்தது.
பண்டைய மேற்காசியாவிலும் கிரேக்க ரோமானிய கலாச்சாரத்திலும் இது சொல்லபட்டிருக்கின்றது, லத்தீனில் நிலவை லூனா என்றார்கள், இதனாலே மனநிலை சரியில்லாதவர்கள் லுனாட்டிக் என அம்மொழியில் குறித்தார்கள், இன்றும் மேற்குலகில் மனநிலை சரியில்லாதோர் அப்படியேதான் அழைக்கபடுகின்றார்கள்
(இந்த ஞானம் மேற்கே இருந்தவர்களுக்கு அலெக்ஸாண்டர் காலத்தில் இந்தியாவில் இருந்து அறியபட்டது என்கின்றது வரலாறு )
இந்த சந்திரன் தன் இயல்பில் முழு உச்சம் பெறும் பொழுதெல்லாம் ஒருவன் சிந்தனையில் தெளிவு கிடைக்கின்றது, அவன் தன்னை வென்று தன் சுயத்தை தேடும் பொழுது அந்த பவுர்ணமி நாள் அவனுக்கு மிக தெளிவான சிந்தனையினை கொடுக்கின்றது, பிரபஞ்சம் இயற்கையாகவே அவனின் சிந்தனை தேடலை நிறைவு செய்கின்றது.
ஒருவனின் ஆன்மாவும் மனமும் எதை தேடுகின்றதோ அதை பொறுத்து அந்த சிந்தனை மிக மிக உச்சம் பெறும் நேரமும் அதுவே
இதை அறிந்த இந்து சமூக முன்னோர்கள் ஒவ்வொரு மாத பவுர்ணமியும் கொண்டாட சொன்னார்கள், அன்று வழிபட்டால் ஞானம் பெருகும் சிந்தை தெளியும் மனம் பூரண அமைதிபெறும் என அனுபவத்தால் போதித்தார்கள்
இந்துக்களின் சாயலே இன்று எல்லா மதங்களிலும் பவுர்ணமி பெருமையாய் தெரிகின்றது, ஞானங்களின் தாயான இந்துமதத்துக்கு வருடத்தின் ஒவ்வொரு மாத பவுர்ணமியும் அம்மாவாசையும் இந்துக்களுக்கு முக்கியமாயிற்று, அந்த நாளோடு வரும் நட்சத்திரமும் மகா முக்கியமாயிற்று
பவுர்ணமி இறைவழிபாட்டுக்கான நாளாகவும் அமாவாசை முன்னோருக்கான தர்ப்பணம் போன்ற நாளாகவும் இந்துக்களால் குறிக்கபட்டது.
பவுர்ணமி அன்று மானிட மனதின் எழுச்சியினை மேம்படுத்தவும், அம்மாவசை அன்று எழும் இனம்புரியாத குழப்பங்களை அடக்க முன்னோர் நினைவு வழிபாடு எனவும் அது வழிகாட்டிற்று
சித்திரா பவுர்ணமி முதல், பங்குனி உத்திரம் வரை இப்படித்தான் உருவானது, அதில் தை மாதம் வரும் பூச நட்சத்திரமும் சேர்ந்து கொண்டது
பூச நட்சத்திரம் என்பது பிரமாண்டமாக கொடுக்கும் தன்மையுடையது, பசுபோல அள்ளி அள்ளி கொடுக்கும் சாயல் கொண்டது
அதனாலே பூச நட்சத்திரம் முக்கியமாயிற்று
அந்நாளில் மகர ராசியில் சூரியனும் கடக ராசியில் சந்திரனும் இருப்பதால் பலன்கள் மிக பெரியவை, மிக தெளிவான சிந்தனையும் அறிவும் அன்று ஒருமனிதனுக்கு உதிக்கும், அதில் தொடங்கும் எல்லா காரியமும் வெற்றிபெறும்
பவுர்ணமி பற்றி இந்துமதம் சொன்ன சிறப்புக்களை சொல்லி முடியாது, ராமாயணம் மகாபாரதம் முதல் ஏகபட்ட இடங்களில் பவுர்ணமி உண்டு
முழு நிலவு நாளில் சூரிய கிரகணம் பவுர்ணமி அன்றுதான் அரவாணை பலியிட்டு போரை தொடங்கினார்கள் பாண்டவர்கள்
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூச பவுர்ணமி
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார் என ஏகபட்ட சிறப்புக்களை சொன்னது
அப்படித்தான் முருகன் அன்னையிடம் அந்நாளில் வேலினை பெற்றான் என்றும், தாருகாசுரனை வதம் செய்தான் என்றும் கந்தபுராணம் கூறுகின்றது
முருகன் வேல் வாங்கி அதை கொண்டு போர் புரிந்து அசுரர்களை உடல் ரீதியாக அழித்து கொன்றான் என்பது நடந்த வரலாறு, ஆனால் அதெல்லாம் சூரசம்ஹார கொண்டாட்டத்திலே கொண்டாடிய பின் தை பூசம் எதற்கு?
முருகபெருமான் அவதரித்தது விசாக நட்சத்திரம் என சொல்லபடும் பொழுது தை பூசத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவது ஏன்? அதுவும் பழனி போன்ற ஆலயங்களில் கொண்டாடபடுவது ஏன்?
இதில்தான் இருக்கின்றது முருகபெருமானின் தனிபெரும் சிறப்பு
முருகன் வெறும் வீரன் மட்டும் அல்ல, அவன் ஞானபண்டிதன். பிரம்மனுக்கே வேதம் சொல்லி தகப்பனும் மூல பொருளுமான சிவனுக்கே ஞானம் சொன்ன மாபெரும் ஞானி
அவனின் ஒவ்வொரு அசைவும் ஞானம், ஒவ்வொரு செயலும் வார்த்தையுமே ஞானம், ஞானத்தின் மொத்த அவதாரம் முருக பெருமான்
ஞானம் என்பது என்ன? தன்னை உணர்ந்து கொண்டு மாயையில் இருந்து வெளிவந்து இறைநிலை எய்துதல், பிரபஞ்சத்தில் அப்படியே ஐக்கியமாகிவிடுதல்
தன்னை உணர்தல் என்பதே ஞானம், மாயை அகல்தலே ஞானம், எல்லா விஷயத்திலும் இறைவனை இணைத்து சிந்திப்பதே ஞானம்
மாயையினை விலக்குதல் என்பதே ஞானத்தின் முதல் படி
மாயையினை விடுவித்தல் என்றால் மாய உறவுகள் பாசவலைகள் என எல்லாவற்றில் இருந்தும் தன்னை விடுவித்து கொள்வது, எதுவுமே நிலையற்றது என்பதை உணர்ந்து இறைவன் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்ந்து அவன் அடி பணிந்து நிற்கும் பற்றற்ற கோலம்
இந்த கோலத்தை மானிடர்க்கு உணர்த்த பழனி வந்து ஆண்டியாய் நின்றான் முருகன்
பிள்ளையாருடன் ஞானபழத்துக்கு முருகன் சண்டையிட்டு பழனி வந்ததாக புராணம் சொன்னாலும் முருகன் ஆண்டி கோலத்தில் போதித்ததே உண்மையான ஞான திருகோலம்.
ஆம் தாய் தந்தை உடன்பிறப்பு என எல்லாமும் மாயை, அதிகாரம் மாயை, ஆடை அணிகலன் மாயை, வீடு மாயை, எல்லாமும் மாயை, அதிலிலிருந்து மீளாமல் பாசகட்டு உடையாமல் ஞானம் கிடைப்பதில்லை, தனித்திரு, எளிமையாய் இரு என்பதே பழனியில் ஆண்டியாய் நிற்கும் ஞானதிருகுமரன் போதிக்கும் தத்துவம்
இதனாலே பழனியில் ஆண்டி கோலத்தில் நிற்கின்றான் முருகன், போகர் உள்ளிட்ட சித்தரெல்லாம் உருகி உருகி பழனிமுருகனை வழிபட்ட காரணம் இதுதான்
ஆம் சித்தர்கள் எனும் ஞானிகள் ஞான திருகோலத்தில் நிற்கும் அந்த குமரனை பழனியில் கண்டு மகிழ்ந்தனர், ஞானபழமான முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எனும் அடையாளமாகவே பழம் கலந்த பஞ்சாமிர்தம் வழங்கபட்டது
அந்து வகை பொருளை கலந்து செய்யபடுவது பஞ்சாமிர்தம், ஐவகை புலன்களை அடக்கினால் முறையாக பயன்படுத்தினால் அமிர்தம் எனும் ஞானநிலையினை அடையலாம் எனும் தத்துவம் அது
வெறுமனே ஞானியர் பழனியில் அந்த ஏற்பாட்டை செய்யவில்லை, இந்துக்களில் ஒவ்வொரு ஏற்பாட்டிலும் ஆயிரமாயிரம் தத்துவம் உண்டு
முருகனின் ஆறு அறுபடை வீடுகளும் தியானத்தின் ஒவ்வொரு கட்டத்தை குறிப்பவை, மூலாதாரம் முதல் ஆக்ஞை என ஆறு சக்கரங்கலும் ஒவ்வொரு படைவீட்டிலும் சக்தி அடையும்
இதனாலே ஆறு முக்கியமான முருகன் ஆலயங்களுக்கும் செல்ல வலியுறுத்தினார்கள், அருணகிரி நாதர் முதல் குமரகுருபரர் வரை எல்லா ஞானியரும் இப்படி 6 சக்கரங்களும் தூண்டபட்டே ஞானியராயினர்
முருகனின் பெரும் சிறப்பும் அவனின் ஆலயங்களும் அந்த அறுபடை வீடுகளின் தத்துவமும் மாபெரும் ஆச்சரியங்களும் நுணுக்கமான மறைபொருளும் கொண்டவை.
மானிட மனங்களுக்கும் குணங்களுக்கும் அவை எளிதில் புரியாது , அங்கு சென்றால் நலம் என முன்னோர் சொன்னதை கேட்டு சென்று உணர்ந்தால் அன்றி சொல்லி புரியவைக்க முடியாதது.
தை பூசம் அன்று முருகனுக்கு அன்னை வேல் கொடுத்தாளே ஏன்? ஆம் அந்த வேல்தான் ஞானவேல்
யுத்தம் செல்லும் முருகனுக்கு ஈட்டி, கத்தி வாள், கோடரி, வில் அம்பு குதிரை யானை என கொடுக்காமல் அன்னை ஏன் வேல் கொடுத்தாள்?
வேல் வடிவமும் தீபத்தின் வடிவமும் ஒன்றே, கவனித்து பாருங்கள் தெரியும்.
தீபம் கொடுக்கும் புற வெளிச்சமும் ஞானம் கொடுக்கும் அக வெளிச்சமும் ஒன்றே.
அந்த வேல் என்பது ஞான வடிவம், ஞானமேந்தி நிற்கின்றான் முருகன் என்பதே ஞானவேல் என்றாயிற்று
அந்த வேலை வீசும் இடமெல்லாம் மாயை அகன்றது சுயம் விழித்து கொண்டது, தாருகாசுரன் முதல் சூரபத்மன் வரை அந்த வேல் பட்டதும் மாயை அகன்று “இவ்வளவுதானா நாம்” என அகங்காரம் உடைந்து என முருகன் பாதம் பணிந்தனர்
முருகன் அவர்கள் அகங்காரத்தை ஞான வேல் வீசி கொன்றான், ஆம் அகங்காரம் கர்வம் ஆசை புகழ் ஆட்சி என்பன எல்லாம் மாயை, அந்த மாயையினை அகற்ற ஞாம வேண்டும் அதை தெய்வமே நம் மேல் வீச வேண்டும்
முருகன் அவதார புராணம் அதைத்தான் சொல்கின்றது.
ஞானத்தின் குறியீடாக வேலை கண்ட இந்து அதை அப்படியே வணங்கினான், வேல் வழிபாடு என்பது ஞானம் வேண்டி நிற்கும் வழிபாடு
ஞானத்துக்கும் அறிவுக்கும் என்ன வித்தியாசம்?
அறிவு குறைவுள்ளது, ஞானம் நிறைவுள்ளது பூரணமானது
உலக வாழ்வின் இன்பங்களுக்கும் சவுகரியங்களுக்கும் வேண்டியதை கொடுப்பது அறிவு, அதை கடந்த முழுமை நிலை பற்றி யோசிப்பது ஞானம்
கோவிலை இப்படி கட்டலாம் என்பது அறிவு, கோவிலில் இருந்து எப்படி அருளை பெறலாம் என சிந்திப்பது ஞானம்.
இப்படி சமைத்தால் சுவை என சொல்வது அறிவு, இதை உண்டால் ஆயுள் நீளும் அதில் உலகுக்கு என்னென்ன நன்மை செய்யலாம் என சிந்திப்பது ஞானம்
சுயநலமாக சிந்திப்பது அறிவு, எதையுமே பொதுநலத்திலும் இறை நலத்திலும் சிந்திப்பது ஞானம்
அறிவு செய்யும் செயலின் உடனடி பலன் பற்றி யோசிக்கும், ஞானம் காலம் காலமாக நின்றிருக்கும் தத்துவம் பற்றி யோசிக்கும்.
அறிவு எல்லாவற்றிலும் லாப நஷ்ட கணக்கு பார்க்கும், ஞானம் அதை எல்லாம் கடந்த ஒரு தீர்க்க தரிசனமான எதிர்காலத்தை சொல்லும்
அறிவின் எல்லை மிக குறுகியது, ஞானம் பிரபஞ்சம் போல் மகா பெரியது
அந்த ஞானத்தை தடையின்றி அருள்பவனே முருகன், அந்த ஞானத்தை பவுர்ணமி நாளில் பெற்று கொள்ள வேண்டும் பண்டிகையே தைபூசம்
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளிதருவான் முருகன், ஞானத்தால் மனம் அமைதி அடையும், சிந்தனை ஒருமுகமாகும் , பதற்றமோ இதர சிக்கலோ இருக்காது
தெளிந்த மனமும் மிக சீரான சிந்தனையும் நல்ல செயலை கொடுக்கும் , அந்த செயல் மகா வெற்றியாய் முடியும்
அது போராக இருந்தாலும் சரி உடல் நலமாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி எல்லாவற்றுக்கும் முதல் தேவை தெளிந்த மனமும், சீரான ஞானமுமே.
முருனை வழிபட்டால் பில்லி சூனியம்,ஏவல் தீரும் என்கின்றார்களே ஏன்?
பில்லி சூனியமும் ஏவலும் மனகுழப்பத்தை ஏற்படுத்தும், குழம்பிய மனம் செய்வதெல்லாம் முடங்கும்
முருகனை வழிபட வழிபட ஞானம் பெருகும் அந்த ஞானம் மனதை தெளியவைக்கும் தெளிந்த மனதை எந்த சூனியத்தாலும் ஏவலாலும் குழப்ப முடியாது, இதனாலே மனதெளிவில்லாதோர் முருகனை வழிபட சொன்னார்கள்
ஆம். தை பூசம் என்பது முருகனிடம் ஞானம் வேண்டும் பண்டிகை, அந்நாளின் வழிபாடும் விரதமும் கொண்டாட்டமும் அதற்காகவேதான் ஏற்படுத்தபட்டன
தை பூசம் கொண்டாட விரதம் அவசியம் என்றார்கள், விரதம் இருக்க இருக்க உடல் உலக கட்டுகளில் இருந்து விடுபடும், அளவான உணவும் கடுமையான தியானமும் மனதை ஒருமுகபடுத்தும்
சிலர் மனம் வேறு எங்கும் செல்ல கூடாது என்பதற்காக அலகு குத்தி கொள்வார்கள், அப்படி குத்தபடும் பொழுது மனம் அதிலே நின்றுவிடும் அதை தாண்டி யோசிக்காது, ஒருவித தியான முறை அது
வாயிலும் நாக்கிலும் சிலர் அலகு குத்துவார்கள், ஆம் உடலின் எல்லா சிக்கலும் வாயாலும் நாவாலுமே வரும். அது உணவு, வார்த்தை , பேச்சு என பல விஷயங்களாக விரியும்
வாயினை அடக்கும் ஞானம் கிடைத்தால் வாழ்வே மாறும் என முருகனிடம் மன்றாட அப்படி குத்தி கொண்டார்கள், வேலால் குத்தி கொண்டார்கள். உணவும் வார்த்தையும் ஞானமாய் இருக்க வேண்டும் என குறிப்பால் சொன்னார்கள்.
உடலை வருத்த வேண்டும், உடல் வருத்த வருத்த அது மனதின் கட்டுக்குள் வரும், மனதின் கட்டுக்குள் வந்த உடல் ஞானம் பெற ஏதுவாகும்.
அந்த உடலோடு ஞானபண்டிதனான முருகன் பாதம் சேரவேண்டும்
மூடனிடம் கவலையினை கொட்டினால் அது பஞ்சு மூட்டையில் நீர் புகுந்தது கனமாகிவிடும், ஞானியிடம் கவலையினை கொட்டினால் அது உப்புமூட்டை நீரில் கரைவது போல் கரைந்தே விடும்
பாரங்களை முருகனிடம் கொட்டிவிடுங்கள் என்பதையே காவடி தத்துவமாக்கினார்கள், அது பின்னாளில் மயில் இறகு எல்லாம் வைத்து அழகான காவடியாயிற்று
மயில் இறகு மருத்துவகுணமும் இன்னும் பல சூட்சும சக்திகளையும் கொண்டது, தீபத்தை போல அதை பார்க்க பார்க்க மனம் தெளிவடையும், சமணார்கள் மயிலறகை கொண்டாடிய ரகசியம் இதுதான், இன்றும் பல மனவள மருத்துவங்களில் அது உண்டு
இதனாலே அன்றே மயிலறகினை காவடியில் வைக்க சொன்னது இந்துமதம்
காவடி என இருபக்கமும் சுமை வைத்தார்களே ஏன்?
நன்மை தீமை என இரண்டையும் முருகனிடம் ஒப்படைத்துவிடு, அவன் இரண்டையும் சீர்தூக்கி பார்த்து நன்மையே தருவான் என்பதற்காக
முருகனை மலைமேல் வைத்தார்களே ஏன்? அதில் இரு விஷயங்கள் இருந்தன
முதலாவது மலை ஏறி செல்லுதல் உடலுக்கு நல்லது, உயரமான இடத்தில் சுத்தமான காற்று உலவும் அது சுவாசத்துக்கு நலம், நலமான மூச்சு நல் சிந்தனை கொடுக்கும்
ஒவ்வொரு படியாக ஏறி முருகன் சன்னதி அடைவது போல, ஒவ்வொரு படிநிலையாக கடந்து ஞானம் பெற வேண்டும் என அடையாளமாய் சொன்னது இந்துமதம்
இப்படி ஏராளமான தத்துவங்களுடன் முருகனை கொண்டாட சொன்னார்கள், அந்த மகா முக்கியமான நாள்தான் தைபூசம் என கொண்டாடபடுகின்றது
அந்த ஞானபண்டிதனை இந்த பவுர்ணமி முழு நாளில் வணங்கி நில்லுங்கள், அவன் கையில் இருக்கும் ஞானவேலை நோக்கி வணங்குங்கள்
அந்த ஞானபண்டிதன் உங்களுக்கு ஞானம் போதிப்பான், அதில் மாயை விலகும் உங்களுக்கே நீங்கள் யார் எனும் உண்மை விளங்கும்
தன் சுயம் அறிந்த யாரும் வழிமாறி திரிவதில்லை, தன் கடமையினை மிக சரியாக பற்றின்றி கலக்கமின்றி செய்வார்கள், எல்லா நலமும் வளமும் அவர்களுக்கு கைகூடும்.
வாழ்வின் மீளமுடியாத மாயையில் நீங்கள் சிக்கியிருக்கலாம், அது போதை, மது,மாது, பில்லி சூனியம், கடனால் வந்த வறுமை என எதுவாகவும் இருக்கலாம்
முருகனிடம் இந்நாளில் வேண்டி நில்லுங்கள், அவன் ஞானம் தருவான், அந்த ஞானத்தில் உங்களின் மாயை விலகும், யானை சங்கிலியில் கட்டபட்டிருப்பது போல் உங்களை கட்டி போட்டிருக்கும் அந்த மெல்லிய சங்கிலியினை உடைக்கும் பலம் வரும்
தன் பலம் உணர்ந்த யானை அதை எளிதில் அறுப்பது போல் அந்த ஞானத்தால் அதில் இருந்து வெளிபடுவிர்கள், உங்கள் மனம் பார்க்க முடியாதபடி இருந்த இருளை அந்த ஞானதீபம் விரட்டும், மாய பனிமூட்டம் அகன்று உங்கள் வழியும் பாதையும் உங்களுக்கு தெரியும், அதில் நடக்க தொடங்குவீர்கள்.
ஆம், ஒரு மனிதன் பெறவேண்டிய செல்வங்களில் முதலாவது செல்வம் ஞானம், அது இருந்தால் எல்லா வளமும் தானாக ஓடிவரும். முழுமையான மனிதனாக முழுவாழ்வு வாழ்ந்து முடிய ஞானம் மகா அவசியம்
ஞானமே ஒருவனை முழு மனிதனாக்கும், அந்த முழு மனிதனே நல்ல சமூகத்தை உருவாக்க உலகுக்கு வழிகாட்டுவான்
முருகன் ஞானகுமரன், ஞானபண்டிதன், ஞானத்தை சுமந்தி நிற்கும் பேரறிவு திருவுருவம் அவன். தன்னை அண்டுவோர்க்கு ஞானம் தர காத்து கொண்டிருக்கின்றான்
ஏணியில் ஏறி நடப்பவனை நகரும்படிகட்டு வேகமாக ஏற்றிவிடுவது போல், கடலில் மிதக்கும் கட்டையினை காறறு வேகமாக கரை சேர்ப்பது போல், எரியும் விறகினை கற்பூரம் இன்னும் வேகமாக எரிய வைப்பது போல், பூச நடத்திர பவுர்ணமியும் தன் பங்குக்கு இயல்பான ஞானத்தை வேகமாய் கொடுக்க தயாராய் இருக்கின்றது
ஞானம் வழங்க பிரபஞ்சமும் பிரபஞ்ச நாயகனும் தயாராய் இருக்கும் இந்நேரம் அவனடி பணியுங்கள், அவனிடம் ஞானம் வேண்டி நில்லுங்கள், அந்த ஞானமகன் உங்களுக்கு ஞானம் தந்து மாயை அகற்றி நல்வழி காட்டி வாழ்வாங்கு வாழ வைத்து இறைபதம் சேர்ப்பான்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான், அவன் இருக்கும் இடமெல்லாம் ஞானமும் இருக்கும் அதை தேடி சென்று வணங்குங்கள்
ஞானம் உங்களுக்கு இந்நாளில் முருகன் அருளில் நிரம்ப கிடைக்கும், அதில் மிக தெளிவாக செயலாற்றுவீர்கள், தொட்டதெல்லாம் துலங்கும், அதில் இவ்வுலக வாழ்வினை எளிதாய் கடந்து நல்லதான மறுமையினை பரம்பொருளின் பாதத்தில் அடைவீர்கள்.
மஞ்சள் ஞானத்தின் நிறம், முருகபெருமானை மஞ்சளாடை அணிந்து வழிபடுவடும் அன்றைய மரபு
பூச நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான், மகர ராசியின் அதிபதியும் அவரே. சனி வீட்டில் சூரியனும் சனி நட்சத்திரத்தில் சந்திரனும் வருவதால் சனி எனும் காரியத்தின் அதிபதியின் அருள் எளிதில் கிடைக்கும்
சனிபகவான் என ஏன் சொல்கின்றோம் என்றால் அவர்தான் நேர்மை நியாயத்தின் வழி நடத்துபவர், சனிபகவானின் சோதனையெல்லாம் ஒருவன் நேர்வழியில் நடக்கின்றானா என்பதை சரிபார்க்கவும், அவன் நடக்காவிட்டால் நடக்க வைக்கவும் வருபவை
சனிதான் ஒருவனை நல்ல வழியில் நேர்மையான வழியில் நடத்துவார், எந்த சம்ரசமும் அவரிடம் இல்லை
அதனால் இந்நாள் நம் கர்மத்தை நேராக நியாயமாக செய்ய அருள்வேண்டி பெறும் நாளாகவும் அமைகின்றது
பாரதம் புதிய யுகத்தில் நுழைகின்றது, ராமபிரான் இந்த யுகத்தின் ஆட்சியில் அன்னை சீதையோடு அமர்கின்றார்
நேர்மைக்கும் நீதிக்கும் தூய்மைக்கும் உதாரணமானவர்கள் ராமனும் சீதையும், அவர்கள் அருளில் ஆண்களுக்கு ராமன் குணமும் பெண்களுக்கு சீதையின் மனமும் வாய்க்கட்டும்
எங்கும் நீதியும் நேர்மையும் செழிக்கட்டும், எல்லா இடமும் நியாயமும் தர்மமும் அரங்கேறட்டும் ஞானவான்களிடம் ஆலயங்களும் ஆட்சியும் கிடைத்து அவர்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் வழிகாட்டட்டும்
எல்லாம் நல்லபடியாக நடக்க, எல்லோருக்கும் ஞானமும் நேர்மையும் பெருக முருகபெருமான் அருள்புரியட்டும்
அனைவருக்கும் இனிய தைப் பூச நல்வாழ்த்துக்கள்.