தை அமாவாசையில் அபிராமி அந்தாதி
அபிராமி பட்டரின் பக்தி
தை அமாவாசையில் ஏகப்பட்ட வழிபாடுகள், பக்தி காரியங்கள் உண்டு என்றாலும் மிக முக்கியமானதும் தவிர்கக கூடாததுமானது அபிராமி அந்தாதி பாடலை பாடுவது.
காரணம் ஒரு தை அமவாசையில்தான் அபிராமி பட்டருக்கு சோதனை வந்து, அவரைக் காக்க அன்னையே வந்து தன் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி வீசி அமாவாசை அன்று பவுர்ணமி வர செய்து தன் உன்னத பக்தனான பட்டரை காப்பாற்றினாள்.
இந்த சம்பவம் என்றோ நடந்தது அல்ல, சுமார் 400 ஆண்டுக்கு முன்பு தமிழக திருக்கடையூர் ஆலயத்தில் சரபோஜி மன்னன் காலத்தில் நடந்த ஆச்சரியம்.
அவ்வகையில் இந்த நாள் அபிராமி அந்தாதி பாடி அன்னையினை வணங்க வேண்டிய உன்னத நாள், அபிராமி அந்தாதி எனும் ஆகச்சிறந்த அன்னைக்கான ஸ்தோத்திர நூல் தை அமாவாசையில்தான் கிடைத்தது.
அந்த அபிராமி பட்டரின் வரலாறு ஆச்சரியமானது, இந்நாளில் அவரை நினைவு கூர்ந்து அபிராமி அந்தாதி பாடுதல் பெரும் புண்ணியம்.
அந்த பட்டரின் பெயர் சுப்பிரமணி, பஞ்சாங்கம் பார்ப்பது அன்னையினை வழிபட நாள் நேரம் பூஜை குறிப்பது என திருக்கடையூரில் வாழ்ந்தவர். ஆனால் நாளாக நாளாக அவரின் பக்தியின் ஆழம் அதிகரித்து அது அவரின் தவகோலமாயிற்று. எல்லாம் கடந்த சமாதி நிலையாயிற்று, அவரின் ஆன்மா அன்னையோடு கரைந்தே போனது.
அதை அறியாதோர்க்கு அது பைத்தியகோலமாயிற்று.
சுப்பிரமணி என்ன செய்வார் என்றால் அன்னையின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பார், அபிராமி அபிராமி என சொல்லியதால் “அபிராமி பட்டர்” என்றானார்.
இவர் கோவில் நடைபாதை சன்னதியில் அமர்ந்திருப்பார் அப்படியே தியானத்தில் மூழ்குவார், எவ்வளவு ஆமழமான தியானம் என்றால் ஆடை அவிழ்வது கூட தெரியாமல் அமர்ந்திருப்பார், ஆடை என்ன அந்த மேனியில் அப்போது பாம்பு ஏறினாலும் அவருக்கு உணர்ச்சி இராது.
அந்த அளவு பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமாக ஆழ்நிலை தியானம் அவருக்கு கைகூடிற்று, மெய் வேறு ஆன்மா வேறு என எப்போதோ பிரித்துப் பார்க்கத் தொடங்கினார்.
இம்மாதிரி ஞானியர் மகா தவம் செய்பவர்களுக்கு பெரும் சக்தி பிரபஞ்சத்தில் இருந்து பாயும், எல்லோராலும் அந்த சக்தியினை தாங்க முடியாது, அந்த பெரும் சக்தி ஞானத்தோடு உடலில் சிந்தையிலும் மாற்றம் கொடுக்கும்.
அவர்களால் உலக மாயையினை புரிந்துகொள்ள முடியும், மாயையில் மக்கள் படும் அவலங்களை அறிந்து கொள்ளமுடியும். நிலையற்றதை நிலையானதாக எண்ணி மானிடர் செய்யும் பெரும் காரியங்களை அகங்காரங்களை கண்டு பரிகசிக்க முடியும்.
அம்மாதிரி ஞானியர் குழந்தைபோல் ஆகிவிடுவார்கள். தெய்வத்தின் தனிக் குழந்தை போல் நடந்து கொள்வார்கள்.
அப்படி இந்த பட்டரும் பெரும் பிரபஞ்ச சக்தி தன்னில் இறங்கியதால் முழுக்க மாறிபோனார் திடீரென சிரிப்பார் கத்துவார் அழுவார்.
ஞானம் அடைந்தோர் முக்தி நிலை எட்டியோர் எப்போதும் சிரிப்பில் இருப்பர். இதை சாதாரணமானோரால் புரிந்த கொள்ள முடியாது. காணும் விஷயங்களை எல்லாம் அபிராமியாகக் கண்டவர், அழகான பெண்களை அபிராமி என அழைத்தபோது தவறாக புரிந்து கொள்ளபட்டு அடிக்க முயன்ற சம்பவமும் உண்டு.
அவரின் அபரிமிதமான பக்தியும், முழுஞான கோலமும் அவரை பித்தன், மூளை குழம்பியவன் என அழைக்க வழி செய்தது. சிலருக்கோ அவர் எரிச்சலாகப் பட்டார், சிலருக்கோ ஆலயத்தில் அப்படி பழியாக கிடப்பதால் எதிரியுமானார், தொந்தரவுமானார்.
சிலர் அவரை சித்தர் என அடையாளம் கண்டதால் அந்த பொறாமையால் எதிரிகளாகக் கூட மாறி இருந்தார்கள். நாங்களெல்லாம் பக்தி செய்யவில்லையா இவர் மட்டும்தான் பக்திமானா என்ற தர்க்கங்களும் இருந்தன.
பட்டர் அடிக்கடி அன்னை முன் கண்ணை மூடி அமருவதும் அவர் போக்கில் பேசுவதும் தொடர்ந்தது.
இப்படி இருந்த நிலையில்தான் சரபோஜி மன்னர் தை அமாவாசை அன்று அங்கு வந்தார். அவர் மராட்டிய வம்சம் என்றாலும் தமிழ் தெரிந்த மன்னராயிருந்தார்.
அது சிலருக்கு மராட்டியர் இங்கு ஆள்வதா எனும் சர்ச்சை இருந்த காலங்கள். நாயக்கர்களிடம் இருந்து மராட்டிய சிவாஜி குலம் தஞ்சை ஆட்சியினைப் பெற்றதில் சில அரசியல் குழப்பங்கள் இருந்த நேரம்.
(நாயக்கர்களும் இந்துக்கள், மராட்டியர்களும் இந்துக்கள். ஆனால் எங்கே முரண்பட்டார்கள் என்றால் பிற்கால நாயக்கர்கள் ஆப்கானியர்களைத் தீவிரமாக எதிர்க்கவில்லை. வரிகட்டி வாழ்ந்தால் போதும், வரிகட்டி தப்பினால் போதும் என நினைத்து சமரசம் செய்து கொண்டார்கள்.
ஆனால் சிவாஜி தொடங்கி வைத்த மராட்டிய இந்து சாம்ராஜ்யம் அதி தீவிரமானது. மொகலாயரை விரட்டி இந்துஸ்தானத்தை மீட்க முழு முனைப்போடு இருந்தது, அங்கு சமரசமே இல்லை.
அவர்கள் அதி தீவிர போரில் இருந்தார்கள். போர் என்றால் வரியும் நிதியும் அவசியம். மராட்டியரின் வரி கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அவுரங்கசீப்புக்கு ஜிசியா வரி கட்டி வாழும் அவல நிலையில் இந்துக்கள் இருந்த நேரம், அந்த வரியில் பாதியினை கொடுங்கள். மானமும் கவுரவமும் கொண்ட சுதந்திர இந்துராஜ்யம் நாங்கள் அமைப்போம் என எழுந்தார்கள், அமைத்தர்கள்.
சிவாஜி நாட்டில் வரி கொஞ்சம் அதிகம் சந்தேகமில்லை. ஆனால் இந்துக்கள் இந்துக்களாக வாழவும், அந்நிய ஆட்சியினை விரட்டவும், பெரும் சேனையும் போரும் நடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் எனும் காலங்களில் வேறு வழியில்லை.
ஆனால் ஒரு சில நாயக்கர்கள் இதை ஏற்கவில்லை. வரி அதிகம் என ஒரே வாக்கியத்தில் இந்துக்கள் பலரைக் குழப்பப் பார்த்தார்கள். சில முரண்பாடுகள் வந்த காலம் அது.)
அப்படியான காலங்களில் ஆலயத்துக்கு சரபோஜி மன்னர் வந்தபொழுது பட்டர் வழமை போல தவக்கோலத்தில் சன்னதி முன் அமர்ந்திருந்தார். மற்றவர்களோ ஒரு மனநிலை சரியில்லதவர் என்பது போல் அவரை கண்டு வழமையாகக் கருதி அவர்கள் போக்கில் நின்றார்கள்.
மன்னன் எப்போதும் ஆலயத்தில் முதல் மரியாதையினைப் பெறுபவன். அப்படி அவன் வந்தபோது எல்லோரும் மன்னனைக் கண்டு எழுந்து மரியாதை செய்தபோதும் பட்டர் செய்யவில்லை.
மன்னனுக்கு அது ஆத்திர மூட்டியது. அந்த ஆத்திரத்தை சிலர் இன்னும் தூண்டினார்கள்.
மன்னன் அவரைப் பற்றி விசாரிக்கும் போது பட்டரின் எதிரிகள் அவர் திமிர்பிடித்தவர் என்றும் யாரையும் மதிக்காதவர் என்றும் பழி சொன்னார்கள். மன்னனுக்கு அவர்மேல் இன்னும் கோபம் வந்தது.
எனினும் ஆலய சன்னதியில் யாரையும் பகைப்பது மரபல்ல என்பதால் மன்னன் அவர் அருகே நின்று அன்னையினை தரிசனம் செய்தான்.
பட்டர் அந்நேரம் “அபிராமி உன் முகம் இன்றைய பவுர்ணமி போல் ஜொலிக்குதடி” எனச் சொல்லி விட்டார். மன்னன் தை மாச தர்ப்பணத்துக்காக வந்தவன், அவனுக்கு பட்டர் தன்னை அவமானப்படுத்துவது போல் தோன்றிற்று.
தன்னை சிலர் மன்னனாக ஏற்கவில்லை எனும் செய்தி பரவி இருந்த நேரம் பட்டர் இப்படிச் சொன்னது தன்னை அவமானப்படுத்தும் விஷயமாக உணர்ந்தவன் சீறினான்.
“பட்டரே இன்று அமாவாசை.”
அவன் மன்னன் என்பதை கொஞ்சமும் கவனியாமல் அல்லது தெரியாமல் “இன்று பவுர்ணமி” எனச் சொன்னபடி சிரித்தார் பட்டர்.
பட்டர் பஞ்சாங்கம் கணிப்பதில் வல்லவர் எனப் பலர் சொன்னதால் மன்னன் இது தனக்கான அவமானம் என உணர்ந்து அவ்விடம் விட்டு அகன்று ஆலயத்தின் வெளியே நின்றுகொண்டு அவரை இழுத்துவரக் கட்டளையிட்டான்.
பட்டரும் கொண்டு வரபட்டார். அப்பொழுது மன்னன் கேட்டதற்கும் “ஆம் இன்று பவுர்ணமி” என அவர் தவத்தின் பிரகாசத்தில் அன்னையினை தன் மனக்கண்ணில் கண்டபடியே சொன்னார்.
“இன்று நிலா வருமா?” எனக் கேட்டான் மன்னன்.
“வந்து கொண்டே இருக்கின்றது” என்றார் பட்டர்.
“இந்த ஆலயம் முன் குழி வெட்டுங்கள். இன்று நிலா வராவிட்டால் குழியில் நெருப்பினை இட்டு இவனை ராஜ நிந்தனைக்காக உள்ளே தள்ளுங்கள்” என்றபடி தன் அரண்மனை திரும்பினான் மன்னன்.
கோவில் அருகே குழி வெட்டப்பட்டது, பட்டர் தவநிலையிலேயே இருந்தார்.
பட்டருக்கு ஒரு உறவினர் உண்டு. அவர் பட்டரின் பக்தியினை அறிந்திருந்தார். அவர் வந்து பட்டரை உலுக்கி நினைவு திரும்பச் செய்து, அவருக்கு வந்திருக்கும் ஆபத்தைச் சொன்னார்.
பட்டருக்கு என்ன நடந்தது என அப்பொழுதுதான் தெரிந்தது. அமாவாசையினை பவுர்ணமி எனச் சொல்லி அரசன் வெட்டிய எரிகுழியில் தள்ளி சாகடிக்கப்படும் ஆபத்தை உணர்ந்தார்.
இனி தன் கடைசி ஆசையினை சொல்லிவிட்டுச் சாகலாம் என முடிவெடுத்தார். எது நடந்தாலும் அன்னை விட்ட வழி, அவள் மேலான தியானத்தால் வந்த பழி அவளால் அகலட்டும். இல்லை, குழிதான் முடிவு என உணர்ந்தார்.
அதன்படி தான் 100 பாடல்களைப் பாடவேண்டும் என்றும், இந்த அந்தாதி நெடுநாளாக திட்டமிட்ட ஒன்று என்றும், கடைசியாக அதை பாடிவிடவேண்டும் என்றும் அரசாங்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார்.
அப்படி அந்த தை அமாவாசை மாலையில் பாடத் தொடங்கியதுதான் அபிராமி அந்தாதி.
அபிராமி அந்தாதியின் 79ம் பாடலை பாடும்போது அவர் மிக உணர்ச்சிகரமானார். 79ம் பாடலை நெருங்கும் போதும் அன்னையிடம் இருந்து சலனமில்லை என்ற போது அன்னை திருவுருவத்தை, எந்நாளும் எந்த உருவத்தை மனதில் பதித்து துதித்தாரோ அந்த அன்னையிடம் இருந்து அசைவே இல்லை.
பட்டர் தன் உயிர் போகும் நிலையில் அன்னையினை உற்று பார்க்கின்றார்.
அன்னை அவரிடம் வாய் திறந்து பேசவில்லை, அவள் காதுகளில் பட்டர் பேசுவது விழுகின்றதா தெரியவில்லை, அவளின் கை கால் அசையவில்லை, நாசியில் மூச்சு இல்லை.
ஆனால் சிலையில் அவள் கண்கள் திறந்திருக்கின்றன. அந்தக் கண்கள் பட்டரையே பார்க்கின்றன, அருட்பார்வை பார்க்கின்றன, அந்த திறந்த கண்களைக் கண்டு உற்சாகமாகப் பாடுகின்றார் பட்டர்.
அன்னையின் அருளே இந்த விழியில் தெரிகின்றதே இனி எனக்கு என்ன அருள் வேண்டும் எனப் பாடுகின்றார்.
அன்னையின் அருள்பார்வை கிடைத்தால் கல்வி, செல்வம், அதிகாரம் என எல்லாமே முப்பெரும்தேவியரால் நொடியில் அருளப்படும். அந்த அருட்பார்வை பெற்றவனை காலனும் அணுக அஞ்சுவான்.
அப்படிப்பட்ட சர்வ சக்தி வாய்ந்தவள் அன்னை.
அன்னை வேத வடிவினள், வேதத்தை சரிவர கற்றோர் மனம் நல்லவழியில் சத்சங்கத்தில் ஆலயவழிபாடுகளிலேதான் இணைந்திருக்கும். பட்டர் அப்படி ஆலயத்திலேயே தான் இருந்தவர்.
அந்த நம்பிக்கையில் பாடுகின்றார். அன்னையே நீயும் வேதங்களும் வேறல்ல நான் உன்னை நெஞ்செல்லாம் தியானித்து வாழ்ந்ததால், பின்பற்றியதால் என் மனம் உன்னிலே அதாவது வேதத்திலே நிறைந்திருந்தது.
இப்படி உன் நினைவால் நான் வாழ்ந்ததால் நான் இந்த உலக வாழ்வை முடித்தாலும் இனி நரகத்துக்குச் செல்லமாட்டேன். அந்த கர்மவினை தீர மறுபடி பிறந்து கெட்ட வாழ்வு வாங்கி வந்து கயவருடன் கூடியிருக்கமாட்டேன் எனக்கு அது போதும்” என மருகுகின்றார்.
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் பட்டர் அன்னையிடம் சரணடைந்து இனி நீ விட்டவழி, என்னை காப்பதும் கொல்ல விடுவதும் உன் கையில்தான் இருக்கின்றது எனும் முழு சரணாகதி, அதே நேரம் முழு நம்பிக்கையான சரணாகதி.
பட்டர் சாவின் விளிம்பில் நிற்கின்றார். அமாவாசை அன்று நிச்சயம் நிலா வராது. அதனால் பட்டர் சாகப்போவது உறுதியாகின்றது.
அந்நிலையில் பட்டர் 79ம் பாடலை தன் மரண சாசனமாகச் சொல்கின்றார்.
அன்னையே உன் விழிக்கே எல்லா கர்ம வினைகளும் தீரும்படி அருள் கிடைக்கும். அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு படிநிலைகளும் உன் அருளால் வாய்க்கும்.
தாயே ! நீ வேறு வேதம் வேறு அல்ல, நீ தான் வேதம், வேதங்கள்தான் தான் நீ. நான் உன்னை எக்காலமும் என் நெஞ்சில் தாங்குவதால் என் வாழ்வின் வேதமாய் நீதான் இருக்கின்றாய்.
நான் முன்பு செய்த தவப்படி உன் அருளைப் பெற்றேன். உன் விருப்பப்படியே என்னை நீ ஆட்கொண்டாய், இதோ நான் சாகப் போகின்றேன்.
ஆனால் நான் அஞ்சவில்லை. பயப்படவில்லை. காரணம் உன் அருள்பார்வை கிடைத்தாலே முக்தி உண்டு, வேதங்கள் எல்லாம் அறிந்து பெறவேண்டிய முக்தியினை உன் அருள்பார்வை ஒன்றே கொடுத்துவிடும். அவ்வகையில் நான் முக்தி பெற்று விட்டேன்.
இனி நான் இந்த பூலோக வாழ்வை முடித்தாலும் முக்திநிலை அடைவேன். மறுபடி பிறந்து வரும் அவலமில்லை. நான் முக்தி அடைந்துவிடுவதால் நரகத்தில் வீழ்ந்து பின் கெட்டவாழ்வினை அடைந்து தீயவருடன் சேர்ந்து உன்னை மறந்து ஒரு வாழ்வு வாழும் நிலை வருமோ என அஞ்சத் தேவையில்லை.
எனக்கு மறுமை பற்றிக் கவலை இல்லை. அடுத்த பிறவி பற்றிக் கவலையில்லை. உன்னில் கலந்துவிட்ட ஆத்மா இனி அடுத்த பிறவியில் தீயவருடன் சேர்ந்து உன்னை மறக்குமோ எனும் அச்சமில்லை.
அதனால் தாயே இந்த தண்டனை என்பது கூட நீ செய்யும் விளையாட்டே, என்னை உன்னிடம் வரவைக்க நீயே என்னை இப்படி ஆட்டிவைத்தாய் எனச் சொல்லி நம்பிக்கையுடன் பாடலை முடிக்கின்றார்.
அன்னை தன்னை எப்படியும் காப்பாள் என நம்பும் குழந்தை போல் பட்டர் இந்தப் பாடலைப் பாடி, கொஞ்சமும் சலனமில்லாமல் அன்னையிடம் தன்னை முழுக்க ஒப்படைத்து நிற்கும்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
இந்த 79ம் பாடல் பாடி முடித்தபொழுதுதான் அன்னை தன் காது தோடுகளிலொன்றை கீழ்வானில் வீசி எறிய, நிலா வந்து அந்த அமாவாசை பவுர்ணமியானது.
மாடத்தில் வீற்றிருந்த சரபோஜி மன்னனும் அந்த அதிசயத்தைக் கண்டான். எல்லோரும் கண்டார்கள், பெரும் ஆச்சரியமும் பரபரப்பும் எங்கும் தொற்றிக் கொண்டது.
மன்னன் பட்டரை நோக்கி விரைந்தான். நெருப்பு எரிந்த குழி பின் மூடப்பட்டது. பட்டருக்காக அன்னையே வந்து மகா அதிசயம் செய்து பிரபஞ்ச இயக்கத்தையே மாற்றியதில் பட்டரை எல்லோரும் பணிந்தார்கள்.
நாடாளும் மன்னனே பட்டரை பணிந்தான் என்றபின் என்ன சாட்சி வேண்டியிருக்கின்றது?
பட்டரின் இந்த முழு சரணாகதிதான், அன்னையினை முழுக்க நம்பி அவளை மனமார தியானித்து அடுத்த பிறப்பில்லை அதனால் அன்னையினை மறக்கும் நிலை இல்லை என கடைசி வரை வைராக்கியமாக நம்பிக்கை வைத்த அந்த நம்பிக்கைதான் அவருக்கு இந்தப் பெரும் அற்புதத்தை செய்தது.
வேதங்கள் பயின்று, யாகங்கள் பல மந்திரங்கள் பல சொன்னால்தான் முக்தி என்பதை, அன்னையே வேதம் அவள் மேல் கொள்ளும் நம்பிக்கை ஆயிரம் யாகங்களுக்குச் சமம் என்பதைச் சொல்லி நிரூபித்தவர் பட்டர்.
இந்த 79ம் பாடலிலேயே அன்னை அமாவாசையில் நிலாவினைக் காட்டி அற்புதம் செய்தாலும், பட்டர் தியானக் கோலத்தில் இருந்து கண்விழிக்கவில்லை.
அவருக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை, பவுர்ணமி வந்ததும் மன்னன் தன்னை பணிந்ததும் கொஞ்சமும் தெரியவில்லை.
அவர் தன் போக்கில் தொடர்ந்து பாடுகின்றார். அவரின் சாட்சியாக அன்னை வந்ததைக் கூட அறியாமல் அவர் போக்கில் பாடுகின்றார். அந்தாதியினை 100 பாடலாக முடிக்க வேண்டும் எனும் வைராக்கியத்தில் பாடினார், பாடி முடித்து எழுந்தார். அன்னையினை தன் காலமெல்லாம் வணங்கினார்.
அரசன் அழைத்தும் அன்னை பாதம் விட்டு நகரமாட்டேன் என அன்னைக் காலடியிலேயே வாழ்ந்து அவளுடனே கலந்துவிட்டார்.
இப்படி அபிராமி பட்டர் எனும் தன் அதிசிறந்த அடியார் மூலம் அன்னை “அபிராமி அந்தாதி” எனும் அற்புத நூலை தை அமாவாசை அன்றுதான் நமக்குத் தந்தாள்.
அபிராமி பட்டர் அந்தாதி பாடியது அவருக்காக என்றால் மடமை, ஞானியர் எதையும் தனக்காகச் செய்வதில்லை.
பட்டர் ஒரு பாடல் தொகுப்பை நமக்குவிட்டுச் சென்றார், அதை பாடி அன்னையினை தொழுதால் வாழ்வின் எல்லா தடைகளும் அகலும். எல்லா ஆபத்தும் நீங்கும்.
இன்று மாலை முடிந்தோர் அபிராமி அந்தாதியினைப் படியுங்கள். தனியாகப் படிப்பதை விட கூட்டமாகச் சேர்ந்து அன்னை ஆலயங்களில் படித்தல் நலம்.
வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கமான அம்மன் வழிபாட்டின் போது இதை கொஞ்சம் சிறப்பாக இன்று செய்தல் நலம்.
ஆலயங்களில் பாடலை ஒலிக்கவிட்டு கேட்பதும் நல்ல பலனைத் தரும்.
இன்று 100 பாடல்களையும் பாடி தியானித்தல் நன்று. அது வாழ்வில் பெரும் புண்ணியத்தை, எல்லாத் தடைகளையும தாண்டிக் கொண்டுவரும்.
முடியாதவர்கள் ஒரு சில பாடல்களை குறிப்பாக 79ம் பாடலை மட்டுமாவது பாடி வணங்கட்டும்.
இன்றைய நாள் அபிராமி அந்தாதி பாடல் ஒவ்வொரு இல்லத்திலும் ஆலயத்திலும் இந்துக்கள் நாவிலும் ஒலிக்க வேண்டிய நாள். ஒவ்வொரு இந்துவின் காதும் அதைக் கேட்க வேண்டிய நாள்.
அபிராமி பட்டருக்கு எல்லா நலனும் வழங்கிய அன்னை, இன்று தன்னை அந்த வரிகளைப் பாடி வணங்கும் எல்லோருக்கும் எல்லா நலன்களையும் அருளட்டும்.
அன்னைக்கு அலங்காரம் பல செய்து, தீபமேற்றி, தூபமிட்டு அபிராமி அந்தாதியினை ஒரே குரலாய்ப் பாடி எல்லோரும் அன்னையின் அருளை அவள் சன்னதியில் பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்.