மாயம்மா
இந்துமதம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மதம். அவர்களை தெய்வமாக, அரசியாக, கவிஞர்களாக இன்னும் பலவாக உயர்த்திக் கொண்டாடிய மதம். பெண்கள் சன்னியாச கோலம் கொள்ளவும் முழு சுதந்திரம் அளித்தது.
பெண்களுக்கு முழு ஆன்மீக சுதந்திரம் அளித்தமதம் இந்துமதம், அதுவே அவ்வகையில் மானுட சமூகத்துக்கே வழிகாட்டிற்று.
அந்த வழியில் வந்தவள் மாயம்மா. மகா சித்திபெற்ற மாயம்மா, நாளை (10/02) அவளின் குருபூஜை நாள்.
பாரத தேசத்தின் மகா முக்கிய சக்தி மையம் காசி. பிரபஞ்ச பெரும் ஆற்றலும் ஆசியும் சக்திகளும் கொட்டிக் குவியும் இடம் அது. சர்க்கரை மூட்டையினைத் தேடும் எறும்புபோல அங்கு ஓடிச் சென்று வணங்கி தன்னில் பெரும் சக்தியினை குவித்த ஞானியர் ஏராளம்.
இந்த ஞானியர் அதன் பின் பாரதத்தின் இதர ஆன்மீக ஸ்தலங்களை, பிரபஞ்ச அருள் கொட்டும் இடங்களை எளிதாக அடையாளம் கண்டு ஓடிச்சென்று இன்னும் தங்களை வலுப்படுத்துவர்.
அப்படி அவர்கள் அடையாளம் காணும் இடம் தென்முனையான கன்னியாகுமரி.
அது வெறும் சுற்றுலா தலம் அல்ல, கடற்கரையில் ஓடி விளையாடி சூரியனைக் கண்டு மகிழும் இடமும் அல்ல, அது முழுக்க முழுக்க ஆன்மீக ஸ்தலம், மாபெரும் புண்ணிய ஸ்தலம்.
சரியான புரிந்துணர்வோடு அங்கு கால் வைத்து மனதை முழுக்க பிரபஞ்சத்தோடு இணைத்தால் பெரும் ஞானமும் பிரபஞ்ச ரகசியமும் மனதுக்குள் இறங்கி வந்து குடிகொள்ளும், தெய்வீகத் தன்மை தானே குடியேறும்.
அன்னை சக்தி அங்கே தவமிருந்து மானிடருக்கு வழிகாட்டினாள். இந்துக்களின் ஒவ்வொரு தலமும் என்றோ ஏதோ நடந்துவிட்ட வரலாற்று தலம் அல்ல, அது இங்கு இது நடந்தது என சொல்லிவிட்டுச் செல்லும் இடமும் அல்ல.
அது ஒவ்வொன்றும் சக்தி ஸ்தலங்கள், ஒவ்வொரு மானிடரும் இங்கு இதை செய்தால் பலன் என என்றோ தெய்வம் இறங்கி வந்து நாடகமாடி அறிவித்துவிட்டுச் சென்ற அடையாள ஸ்தலங்கள்.
அப்படித்தான் அன்னை சக்தி கன்னியாக வந்து தவமிருந்து அது மாபெரும் தியான ஸ்தலம், தியானம் கைகூடி யோகநிலை எய்தும் பெரும் புண்ணிய பூமி என காட்டிவிட்டுச் சென்றாள்.
அன்னை சிவனை அடைய தவமிருந்தாள் என்பது நாமும் தவத்தை அங்கு செய்தால் சிவனை அடையலாம் எனும் வழிகாட்டல் அன்றி வேறேதும் அல்ல.
இதனை ஞானியர் உணர்ந்தனர், இதனாலே காசி கன்னியாகுமரி என்றொரு சம்பிரதாயமே உருவானது. காசிக்கு செல்வோர் கன்னியாகுமரிக்கும் செல்லவேண்டும் எனும் ரிஷிகளின் போதனை வலுவானது.
மானிடராய் பிறந்து தாங்கள் யாரெனப் புரிய விரும்பிய ஆன்மாக்களெல்லாம் கன்னியாகுமரிக்கு வந்தே ஞானம் பெற்றனர்.
ஔவையார் முதல் ராமானுஜர், அய்யா வைகுண்டர், யோகிராம் சுரத்குமார், காஞ்சி பெரியவர், யோகி பரமானந்த பிரம்மஹம்சர் வரை ஏராளமானோரை சொல்லமுடியும் என்றாலும் மகா முக்கிய அடையாளம் சுவாமி விவேகானந்தர்.
காசியில் ஞானம் பெற்ற அவர் தன் அமெரிக்க பயணத்துக்கு முன் கன்னியா குமரிக்குத்தான் ஓடிவந்தார். அங்குதான் தவமிருந்தார், அங்குதான் தன் ஞானத்தை இன்னும் பொலிவாக்கிக் கொண்டு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மங்காப் புகழோடு இந்துமதம் வளர்க்க விதையிட்டார்.
பாரதத்தின் தவபுதல்வனுக்கு எது மாபெரும் ஸ்தலம் என்பது தெரிந்திருக்கின்றது.
இந்த வரிசையில் கன்னியாகுமரிக்கு வந்தவர்தான் அந்த சித்தர் மாயம்மா, அவரின் பூர்வீகமென்ன, வயதென்ன எப்படி கன்னியாகுமரிக்கு வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவரின் வாழ்வும் வழிகாட்டலும் அங்குதான் நடந்திருக்கின்றது.
அவரின் வயது கிட்டதட்ட 300 வருடகாலத்துக்கு மேம்பட்டது என்பது நிஜம், அவர் வந்தது பற்றி சரியான தகவல் இல்லை என்றாலும் பல தலைமுறைகளாக அவரைக் கண்டவர்கள் உண்டு என்பதால் வயது மிக மிக நீண்டது.
அவரை பற்றி நாம் முன்பே சொல்லியிருக்கின்றோம். வட நாட்டில் அல்லது வடகிழக்கு மாகாணத்தில் இருந்து வந்து கன்னியாகுமரியில் சித்தராகி ஒரு பிச்சைக்காரக் கோலத்தில் அலைந்து திரிந்த சித்தர்.
அவரின் உண்மை பெயர் யாருக்கும் தெரியாது, அன்பர்கள் வைத்த பெயர் மாயம்மா.
காலத்தால் வயதான சித்தர் என்றும், வாலிபர்கள் சேட்டையில் இருந்து தப்ப தன்னை மூதாட்டியாக அழுக்காக மாற்றிக் கொண்டாள் காரைக்கால் அம்மையார், ஒளவையார் போல தானே முதுமை தோற்றத்தை வரவழைத்துக் கொண்டவள் என்றும் சில தகவல் உண்டு என்றாலும் அவர் காலமெல்லாம் ஒரு பிச்சைக்காரக் கோலத்தில் அழுக்கு உடையுடன் கலைந்த தலையுடன் பராரியாக அலைந்தது உண்மை.
அவரைக் கண்டாலே ஓடும்படி, ஒதுக்கி வைக்கும்படிதான் அன்றைய கன்னியாகுமரி வைத்திருந்தது. குப்பைத் தொட்டி உணவும் சுற்றி கரும் பைரவர்களும் கந்தல் உடையும் குளிக்காத மேனியுமே அவள் தோற்றமாயிற்று.
அவளை யாரும் கண்டுகொள்ளா நிலையில் அவளை அடையாளம் காட்டியது அதே தெருவோர பைரவர் வாகனம்.
சாலையில் அடிபட்டு குடல் சரிந்து இறந்து கிடந்தது அந்த ஜீவன், யாரும் தொட தயங்கும் அந்த சடலத்தை தொட்டு குடலை உள் வைத்து ஒரு குச்சியால் மூடி தள்ளி வைத்தாள், அதனையே உற்றுப் பார்த்தாள். சட்டென எழும்பியது ஜீவன்.
இறந்து கிடந்த சடலம் உயிர்பெற்று ஓடியதில்தான் அவளை அடையாளம் கண்டது சமூகம்.
ஆனால் அவள் யாரையும் கண்டு கொள்வதில்லை, சருகுகளை அள்ளி வெறும் கையால் தீ மூட்டுவாள், அது யாகத்தில் ஒரு வகை என யாருக்கும் தெரியவில்லை.
திடீரென கடலில் குதிப்பாள், அவளை காணமுடியாது.
விவேகானந்தர் மண்டபமில்லா அக்காலத்தில் அங்கு நீந்தி சென்று தவமிருப்பாள், அந்த பாறையில் நிற்கும் உருவம் திடீரென கரைக்கும் வரும்.
காணாமல் போன மீனவர்களை எண்ணி ஊர் அழுதால் கடல் மேல் மாயம்மா நடந்து செல்வதும், மீனவர்கள் திரும்பி வருவதும் நடந்தது.
அவள் யாரையும் தேடிச் செல்வதில்லை. மாறாக ஊரே வந்து வணங்கும். அவள் யாரையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை.
மாறாக கடைவீதியில் எல்லா கடையும் திறந்திருக்க அவள் விரும்பிய கடைக்குள் சென்று உணவினை எடுத்து அவளும் உண்டு தன்னை சுற்றிய ஜீவன்களுக்கும் வீசுவாள்.
அவள் கால்பட்ட கடையும் வியாபாரமும் செழிக்கும் என்பதால் அவள் தெய்வமானாள்.
அவளைத் தேடி வந்த கூட்டம் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டே இருக்கும், அவள் பேசமாட்டாள். நகர்ந்துவிடுவாள். அவள் காலடி பட்ட மண்ணை எடுத்து சுகம் அடைந்தோர் கோடி.
திடீரென உணவகத்துகுள் புகுந்து உண்பவள் எச்சில் சோற்றை யாருக்காவது நீட்டுவாள். அதை வாங்க பெரும் கூட்டம் கூடிற்று.
ஒரு வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி 1990 வரை கன்னியாகுமரியில் மதமாற்றம் நிகழாமல் இருக்க அவளும் பெரும் காரணம்.
1967ல் விவேகானந்த மண்டபம் அமையக் கூடாது என சர்ச்சை வந்த நிலையில் அந்த செய்தி கேட்டு அவள் சத்தமாக சிரித்தாள். பின் கடலில் நடந்தே பாறைக்குச் சென்றாள் என்ற செய்தியும் உண்டு.
அவளுக்கு பக்தர்கள் பெருகினார்கள், நாடாளும் பிரதமர்கள் ஜனாதிபதிகள் வரை வந்தார்கள்.
மாயம்மா செய்த அற்புதமும் சித்து வேலைகளும் அமைதியாகச் செய்த மாயங்களும் ஏராளம், பக்தர்கள் ஏராளமானோர் பெருகினார்கள்.
1980களிலே ஆன்மீகம் தேடிய இளையராஜா சந்தித்த சித்தர்களில் மாயம்மாவும் ஒருவர். இது பற்றியெல்லாம் அவர் நிரம்பப் பேசியுள்ளார்.
இளையராஜா தன் வீட்டில் வைத்து அவரை காத்துக் கொள்ள விரும்பினார், ஆனால் சித்தர்கள் தங்கள் இருப்பிடத்தை தாங்களேதான் தேர்ந்து கொள்வார்கள்.
அப்படி ராஜேந்திரன் எனும் சீடரின் முயற்சியில் சேலம் அருகே குடில் அமைத்து வாழ்ந்த மாயம்மா அங்கேயே சமாதி அடைந்தார், இன்றும் அந்த சமாதி அங்கு உண்டு.
ரமணர், காஞ்சி பெரியவர், யோகிராம் சுரத்குமார் போன்றோரின் வரிசையில் தேசமே வணங்கிய பெரும் ஞானசித்தர் மாயம்மா.
அன்னை சக்தியின் அவதாரமாக அசாமில் பிறந்து பின் கன்னியாகுமரிக்கு வந்து ஒரு பிச்சைக்கார கோலத்தில் தவமிருந்து, மதமாற்றம் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்த புண்ணிய பூமியினை காத்து ஒரு காவல் தெய்வம் போல் இருந்தவர் மாயம்மா.
அவரைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு என்றாலும் அவரைச் சந்தித்த சீடரின் நேரடி அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.
அவ்வகையில் அடியார் பொன் காமராஜ் முக்கியமானவர. இன்று கன்னியாகுமரி பக்கம் காணிமடம் எனுமிடத்தில் யோகிராம் சுரத்குமார் மந்த்ராலயம் அமைத்திருக்கும் அவர் அடிப்படையில் மாயம்மாவின் சீடர், அக்குடும்பமே மாயம்மாவின் பக்த குடும்பம்.
மாயம்மா பேசுவதில்லை. அவருக்கு தமிழ் தெரியாது, அவர் பேசுவதெல்லாம் கீய்ய்ய் ஓய்ய்ய் எனும் கிளிமொழி ஒன்றேதான்.
இந்த அடியார் அடிப்படையில் வழக்கறிஞர், 1970களில் வழக்கறிஞர் என்றால் அதுவும் நாடார் சாதி வழக்கறிஞர் என்றால் அதன் மதிப்பும் வரவேற்புமே தனி.
அப்படிப்பட்டவர் தன் வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் அதனை எடுத்துக் கொண்டு புதிய அலங்கார ஆடை அணிந்து மாயம்மாவினை சந்தித்து ஆசிபெற சென்றிருக்கின்றார்.
வழக்கமாக ஒரு பார்வை பார்த்து ஆசீர்வதிக்கும் மாயம்மா அன்று ஆக்ரோஷமாகி அந்த வழக்கறிஞர் பட்டத்தை சட்டென பறித்திருக்கின்றார், இடது கையினை உயர்த்த அருகில் இருந்த சருகு தீப்பிடித்து எரிய, சட்டென அந்தச் சான்றிதழை கிழித்து நெருப்பில் போட்டுவிட்டார் மாயம்மா.
இவரோ அதிர்ந்து நிற்க மகா ஆக்ரோஷமாக இவரின் புது ஆடையினை கிழித்தெறிந்து ஒரு இரும்பு கையினால் உடலை கிழித்து ரத்தம் வழிய வழிய கையிலும் காலிலும் துளைத்திருக்கின்றார்.
அருகிருப்பவர்கள் காப்பாற்ற முயன்றும் வழியில்லை எல்லோரும் ஓடிவிட்டனர், காமராஜும் மயக்கமாகிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்தவர் முன் மாயம்மா சிரித்தபடி நின்றிருக்கின்றார், ஓய்ய் என அவர் குரலெழுப்பி கையினை ஆட்டவும் காயம் மறைந்து உடல் பூரணமாயிருக்கின்றது.
அத்தோடு கடலுக்குள் இழுத்துச் சென்று அமிழ்த்து ஆசி கொடுத்து அனுப்பியிருக்கின்றார்
வக்கீல் தொழில் அவர் கர்மா அல்ல என்பதைச் சொல்லி, வக்கீல் கனவு படிந்த எல்லா குருதியும் அகற்றி, அவரின் கர்மாபடி ஒரு ஆன்மீக அமைதி வாழ்வு வாழ அவரை பணித்து திருப்பி அனுப்பினார்.
அதன்பின் தான் வழக்கறிஞர் தொழிலுக்கு செல்ல பிரபஞ்சம் அனுமதிக்கவில்லை என்பதை உணர்ந்து மாயம்மாவின் சீடராக அவரின் ஆன்மீக வாழ்வு தொடங்கிற்று.
தன் அந்திமக் காலம் நெருங்கியதை அறிந்த மாயம்மா அவருக்கு ஒரு நோய்வரச் செய்து திருவண்ணாமலைக்கு அனுப்பிவிட்டார்.
அங்கேதான் யோகிராம் சுரத்குமாரை கண்டு பணிந்தவர் அதன் பின் அவரின் முழு சீடராகி இன்று அவரின் தோற்றத்திலே காணிமடத்தில் பிரம்மாண்ட மந்திராலயம் அமைத்து இறைபணி செய்து கொண்டிருக்கின்றார்.
மாயம்மாவுக்கு ஏகப்பட்ட பக்தர்கள் உண்டு, சீடர்கள் உண்டு எனினும் அந்த பொன்.காமராஜர் வாழும் சாட்சி.
கன்னியாகுமரி பக்கம் யோகிராம் சுரத்குமார் எனும் யோகிக்கு பெரும் மந்த்ராலயம் எழும்பவும் அதற்கு ஒரு பக்தன் உருவாகவும் அன்னை மாயம்மாவே மூலக் காரணம்.
மாயம்மா இப்படிப்பட்ட பெரும் சித்தர், ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மாவினை காட்டி கொடுத்து அருளாசி வழங்கி கொண்டிருந்த பெரும் சித்தர். மேற்சொன்னது ஒரு சிறிய சம்பவம் மட்டுமே ஏராளமானோர் வாழ்வில் இப்படி ஏகப்பட்ட அதிசயங்கள் நடந்தது உண்மை, சாட்சிகள் ஆயிரமாயிரம் உண்டு.
இவரால் கன்னியாகுமரி பக்கம் மதமாற்றம் தடுக்கபட்டது உண்மை, அய்யா வைகுண்டர் காலத்துக்கு பின் மாயம்மா நெடுங்காலம் அந்த அற்புதத்தைச் செய்தார்.
மதமாற்றம் உச்சமாக இருந்த காலங்களில், காசியின் பழைய காலம் போல கன்னியாகுமரி எனும் புனிதமான மண் அடையாளம் இழந்து திசைமாறிச் சென்ற காலங்களில் வந்து அதனைக் காத்து அடையாளமிட்டு சென்ற அவதாரம் அவர்.
இன்று அந்த மாயம்மாவுக்கு குருபூஜை நாள், தை மாதம் 24ம் தேதி அது அனுசரிக்கப்படும்.
அவ்வகையில் இன்று குருபூஜை அந்த ஞானத்தாய்க்கு கொண்டாடப்படுகின்றது, கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தின் கிழக்குவாசல் சக்தி வாய்ந்தது.
அம்மன் மூக்குத்தி ரத்தினத்தால் கப்பல் அங்கு கரை தட்டியது. அதனால் முன் கதவை மூடி வைத்திருக்கின்றார்கள் என்பதெல்லாம் இடைச் செருகலாக இருக்கலாம். உண்மையில் அந்தக் கோவிலின் சன்னதி வாசல் அபார சக்தி வாய்ந்தது. அதைத் தாங்க எல்லோராலும் முடியாது.
மாயம்மா அந்த சக்தியினை உள்வாங்கி நடமாடிய மகா சக்தி, அந்த சக்தியின் உக்கிரமே ஒரு பராரி கோலத்தில் அவரை மாபெரும் நடமாடும் சக்திபீடமாக நிறுத்தியது.
அவர் நடமாடிய அந்த முகப்பில் இன்றும் அந்தக் கோவில் எதிரில் அவருக்கு சிறிய மணிமண்டபம் மாயம்மா பெயரால் கட்டப்பட்டுள்ளது, பக்தர்கள் சேர்ந்து கட்டிய சிறிய ஆலயம் அது.
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் ஆலயம், விவேகானந்தர் நினைவகம் போல முக்கியமானது இந்த மாயம்மா மண்டபம்.
இன்று அந்த மகாசக்தி மாயம்மாவின் குருபூஜை, எங்கிருந்தோ வந்து கன்னியாகுமரி எனும் அதி உன்னத ஸ்தலத்தில் பெரு ஞானம் பெற்று எத்தனையோ மக்களுக்கு வாழ்வளித்து, இந்து மகா சமுத்திரக் கரையோரம் ஒரு மாபெரும் இந்து சமுத்திரமாய் நின்று பார்வையிலும் சைகையிலும் பல்லாயிரம் பக்தகோடிகளைக் காத்த அந்த மாபெரும் யோகியிடம் எல்லோரும் பிரார்த்திக்கலாம்.
அவரின் பக்த கோடிகள் இன்று அவருக்கு சத்சங்கமாகவும் கூட்டு வழிபாடாகவும் வழிபாடு செய்கின்றார்கள், இந்து மரபில் சித்தர்களுக்கும் குருக்களுக்குமான இந்த சத்சங்க வழிபாடு மகாமுக்கியம், இந்துமதம் ஓரளவு நிலைபெற்றிருக்க இவை மகா முக்கிய காரணம்.
அவ்வகையில் மாயம்மாவின் பக்தகோடிகளுக்கு குருபூஜை நாள் வழிபாடு சிறக்க வாழ்த்துவோம். அந்த ஞானமூதாட்டியின் அருளும் பாதுகாப்பும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.