சுப்பிரமணிய புஜங்கம் : 01 / 06
முன்னுரை & கடவுள் வாழ்த்து ஸ்லோகம் 01
முருகப்பெருமான் பக்தியில் முக்கியமான வழிபாட்டு பாடல் இந்த சுப்பிரமணிய புஜங்கம். இது மகா அவதாரமான ஆதிசங்கரப் பெருமானால் அருளப்பட்டது.
இதற்கு ஒரு பின்னணி வரலாறும் உண்டு.
அவதாரங்களும் சோதனையில் சிக்கும், அதற்கு காரணம் அந்த சோதனையால் அவர்கள் பெரும் தத்துவத்தை உலகுக்கு கொடுக்க வேண்டும், பெரும் போதனையினை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதே
எல்லா அவதாரங்களுக்கும் எல்லா தேர்ந்தெடுக்கபட்ட ஆத்மாக்களுக்கும், புண்ணிய ஆத்மாக்களுக்கும் பெரும் பெரும் சோதனை வரும், அதெல்லாம் மானிடருக்கு நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு செல்ல பெரும் சக்தி செய்யும் பெரும் வாய்ப்பு
அதைத்தான் கண்ணன் செய்தான், ராமபிரான் செய்தார், இன்னும் பற்பல அவதாரங்கள் செய்தார்கள். சோதனை காலத்தில்தான் அவர்களின் அதி உன்னத பக்தியும் உள்மன ஏக்கமும் வெளிபடும்
ஆழ்வார்கள், அடியார்கள், நாயன்மார்கள், அபிராமிபட்டர், கம்பன் என எல்லோரும் இப்படியான இக்கட்டான நிலையில்தான் அழியா பாடல்களை பாடினார்கள்
கடைசி நம்பிக்கையாக இறை சன்னதிமுன் நிற்கும் மனம் அப்படி மாபெரும் தத்துவத்தை பொழியும் என்பதால் பிரபஞ்ச பெரும் சக்தி இப்படியான காட்சிகளை அடிக்கடி உருவாக்கும்
ஆதிசங்கரர் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது
வடக்கே தன் வாதம் மற்றும் தனி வரத்தால் பலரை வென்று இந்துமதத்தை நிலைநாட்டி கொண்டிருந்தார் ஆதிசங்கரர், அவரிடம் தோற்றுபோன பலர் அவரை பழிவாங்க முடிவு செய்தனர்
சங்கரர் இருக்கும்வரை இனி தங்கள் மதமும் தாங்களும் வாழமுடியாது என அஞ்சிய கூட்டம் அபிநவ குப்தர் என்பவன் தலமையில் அவருக்கு பல தீமைகளை மாந்தீரிகமாகவும் இன்னும் பல வடிவிலும் வரவைத்தன
ஒரே நேரத்தில் பல நோய்கள் அவரை தாக்கின
உத்தமான பக்தனுக்கு, களங்கமே இல்லாத ஆத்மாவுக்கு பகைவரால் துன்பம் என்றால் அது இறைவன் அந்த ஆத்மாவினை புடம்போட பெரும் திட்டத்தோடு அனுமதிக்கின்றான், பெரும் நன்மைக்காக தன் அடியாருக்கு அந்த துன்பத்தை அனுமதிக்கின்றான் என பொருள்
அப்பர் சுவாமிகள் வாழ்வில் இதை காணலாம்
அப்படி ஆதிசங்கரரும் கடும் நோயில் வீழ்ந்து மருந்துகள் பலனளிக்கா நிலையில் சிவபெருமானே தஞ்சம் என படுக்கையில் வீழ்ந்தார்
சிவபெருமான் அவர் கனவில் தோன்றி “நீ ஜயந்திபுரம் சென்று பன்னீர் இலை விபூதிவாங்கி பூசிகொண்டால் உன் நோய் தீரும். எல்லாவித மந்திர தந்திர தாக்குதலையும் முறியடிப்பவன் ஜயந்திபுர முருகனே” என சொல்லி மறைந்தார்
அப்படியே திருச்செந்தூரை அடைந்தார் ஆதிசங்கரர்
அவர் ஒரு அதிகாலையில் அங்கு கோவில் முன் நின்றிருந்தார், அவரின் ஞானகண்ணில் ஆதிஷேஷன் முருகபெருமானுக்கு பூஜை செய்யும் காட்சி தெரிந்தது
இதனால் புஜங்க வடிவில் ஒரு பாடல் பாட தொடங்கினார்
புஜங்கம் என்றால் சர்ப்பம் என பொருள், சமஸ்கிருதத்தில் ஒரு இலக்கிய வடிவம் புஜங்கம் என அழைக்கபடும், வார்த்தைகளை பாம்பு நெளிவது போல் அமைத்து பாடபடும் பாடல் அது
இது சமஸ்கிருத யாப்பிலணக்கண மரபு, தமிழில் வெண்பா என்பது போல புஜங்கம் என்பது அங்குள்ள பாடல் இலக்கணம்
இந்த புஜங்கத்தை 33 பாடல்களாக பாடினார், அந்த பாடல்கள் மிக அழகானவை, இந்த சஷ்டி காலத்தில் செந்தூர் முருகனுக்கு பாடவேண்டியவை
நோய் நொடி, கடன் , அவமானங்கள், தீரா சிக்கல்கள், விரோதம், வறுமை என எதுவாக இருந்தாலும் இந்த பாட்லகளை பாடி முருகபெருமானை, செந்தூர் முருகபெருமானை தொழுது வேண்டினால் தீரும் என்பது நம்பிக்கை
அப்படியான அந்த பாடலை இந்த சஷ்டி காலத்திலும் பாடலாம்
இந்த சமஸ்கிருத பாடலையும் அதன் சுருக்கமான விளக்கத்தையும் பார்க்கலாம், மிக நீண்ட விளக்கமெல்லாம் இப்போது சாத்தியமில்லை
ஒரு நாளைக்கு ஆறுபாடல்களை காணலாம், இப்போது கடவுள் வாழ்த்தோடு தொடங்கலாம்
சாஸ்திரபடி விநாயகபெருமானை தொழுதுவிட்டுத்தான் காரியங்களை தொடர்வது இந்துமரபு அவ்வகையில் சங்கரரும் விநாயகரை தொழுது தொடங்குகின்றார்
முதல் ஸ்லோகம் இதோ
“ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி”
பாடலின் பொருளை காணலாம்,
“ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ”, அதாவது எக்காலமும் விநாயகபெருமான் இளமையானவர் குழந்தை மனம் கொண்டவர், அவரை எந்த வடிவில் கொண்டாடினாலும் வந்து அமர்வார். அவரிடம் அகங்காரமில்லை ஆணவமில்லை தான் பெரும் தெய்வம் என்பதெல்லாம் இல்லை
குழந்தை மனமுடைய அந்த விநாயகபெருமான் ஒரு தேங்காய்க்கும் அருகம்புல்லுக்கும் கூட பெரும் வரமளிப்பார், எப்போதும் அவர் குழந்தைதான்
ஆனால் விக்னாத்ரிஹந்த்ரீ” , அதாவது பெரும் பலம் கொண்டவர் எவ்வளவு பெரிய மலை என்றாலும் நொடியில் சிதறடிப்பார் அவ்வளவு சக்தி கொண்டவர் என பொருள்
இரண்டாம் வரி “மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா” , அதாவது “மஹாதந்தி வக்த்ராபி” என்றால் பெரிய யானை முகத்தை கொண்டவனே என பொருள்
“பஞ்சாஸ்யமான்யா” என்பதற்கு இரு பொருள் உன்டு, இரண்டுமே பொருத்தமானது
பஞ்சாஸ்யம் என்றால் அகன்ற பெரிய என்ற பொருள் உண்டு, பஞ்ச பாத்திரம் அப்படி வந்ததுதான். அதே நேரம் பஞ்சாஸ்யம் என்றால் சிங்கம் என்றொரு பொருள் உண்டு
பொதுவாக யானை சிங்கத்துக்கு பயப்படும், சிங்கத்தை கனவில் கண்டால் கூட யானை அலறும் அப்படியானது சிம்மத்தின் பலம்
ஆனால் இந்த யானைமுகம் சிங்கத்தையே அஞ்சவைக்கும் ஓடவைக்கும் என்கின்றார் ஆதிசங்கரர்
அப்படியே பஞ்சம் என்றால் ஐந்து என பொருள், ஐந்துமுகம் (ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம்) கொண்ட சிவனால் பணியபடும் பெருமானே என பொருள்
திரிபுரத்தை எரிக்க சிவன் கிளம்பும்பொது விநாயகர் அருளில்லாமல் தேர் அச்சு முறிந்தது, பின் சிவன் தன் தவறை உணர்ந்து விநாயகரை பணிந்த பின்பே அந்த வதம் சரியாக நடந்தது
அடுத்து “விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே” என்கின்றார்
விதீ+ இந்திரன் என பொருள் வரும், அதாவது விதி எழுதும் பிரம்மனும் இந்திரனும் பணியும் பெருமானே என்பது பொருள், பிதா என்றால் மூலம்
“விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி” , அதாவது மங்களை கொடுக்கட்டும், ஐஸ்வர்யங்களை கொடுக்கட்டும் என பொருள்
ஆக சுப்பிரமணிய புஜங்கத்தில் விநாயகரை தொழுது பாடலை பாடுகின்றார் ஆதிசங்கரர்
“விநாயக பெருமானே, எக்காலமும் உள்ளத்தாலும் உடலாலும் பாலர் போல குழந்தைவடிவில் இருப்பவரே ஆனால் மலைபோன்ற கஷ்டங்களையும் சிதறடிக்கும் பலம் கொண்டவரே, சிம்மமும் அஞ்சும் யானை முகத்தோரே, சிவனும் இந்திரனும், பிரம்மாவும் இன்னும் பலரும் பணிந்து நிற்கும் மூலவரே, மங்களமும் ஐஸ்வர்யமும் அருளும் பிதாவே, நான் பாடும் இப்பாடல் பலன் கொடுக்கும்படி அருள்புரிவீராக..”
(தொடரும்..)