பாரதம் துலங்குகிறது
சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும்.
காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான பெரும் சன்னதிகளும் எழுப்பப் படுகின்றன.
காசி துலங்கியதில் இருந்து இதனை அறிய முடிகின்றது. கால பைரவர் வழிபாடுகள் பெருகப் பெருகப் பல மாற்றங்களை உணர முடிகின்றது.
காவி நிறம் ரயில் முதல் பல இடங்களில் வருகின்றது. டெல்லியில் நடராஜர் சிலை எழுகின்றது.
வராஹி என்றொரு தெய்வம் பற்றி இங்கே முன்பு பரபரப்பில்லை. இப்போது வராஹி தெய்வ வழிபாடுகள் காணுமிடமெல்லாம் நடக்கின்றன.
தெரிந்தோ தெரியாமலோ மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் கூட அது காட்டப்பட்டது. அவரை மீறி அக்காட்சி வந்ததுதான் ஆச்சரியம்.
முன்பெல்லாம் கேட்ட குரல்கள் அதாவது இந்து துவேஷம், சனாதன ஒழிப்பு இவை எல்லாம் இப்போது கேட்பதில்லை. மெல்ல அடங்குகின்றன.
மக்களிடம் இந்து அறநிலையத்துறை பற்றி கேள்விகளும், இந்து ஆலயங்கள் பற்றி அக்கறைகளும் வருகின்றன.
எல்லா இந்து ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன. மக்களிடம் பெரும் மாற்றம் வந்திருக்கின்றது.
இந்துக்களின் எழுச்சி நம்ப முடியாத சிலிர்ப்பு. இந்துமதம் வேகமாக எழுவதும், அது தன் முழு பலத்தோடு சீறுவதும் இதுவரை நடந்திராத ஆச்சரியம்.
அந்த செய்தி உண்மையா பொய்யா தெரியவில்லை. ஆனால் “கருங்காலி மாலை” என வந்த அலையும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாதது.
சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட அந்நிய தேச கிறிஸ்தவனே காளியினை வணங்கிக் கொண்டிருப்பது உலகளவில் பெரும் கவனம் பெற்றது.
மோடியால் மட்டுமல்ல அவரைத் தாண்டி ரிஷி சுணக், அமெரிக்காவில் விவேக் ராமசாமி போன்றோர் இந்து மதத்தை பெரும் இடத்துக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.
அமெரிக்காவில் மிகப் பெரிய இந்து ஆலயம் திறக்கப் படுகின்றது.
இந்தியாவினுள் இது காலம் இல்லாத பெரும் மாற்றங்களை இந்து அடையாளங்களுடன் காண முடிகின்றது. தேசமும் தேச மக்களும் ஒரு ஆன்மீக அலையில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கம்யுனிஸ்ட், நக்சலைட், மதசார்பற்ற காங்கிரஸ் என எல்லாமும் தடம் மாறுவதையும், காலம் மாறுவதைப் புரிந்தும் புரியாமலும் திமுக தடுமாறுவதையும் கவனிக்க முடிகின்றது.
வீட்டு உள் அலங்காரமெல்லாம் இப்போது இந்து பாணி சாயலில் இருப்பது பேஷனாகின்றது. இந்து சாயல்கள் பல இடங்களில் வருகின்றன.
இந்து உடைகள் இப்போது நாகரீகமாகின்றன.
உலகெல்லாம் கரும்பச்சை நிறம் எனும் ராமனின் நிறம் விருப்ப நிறமாகின்றது.
இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு விஷயத்தை மவுனத்தால் சொல்கின்றது. காலம் மாறுவதையும் ஆன்மீகம் எழுவதையும் இந்து மதம் மேல் எழுவதையும் மெல்லிய வெளிச்சமாகக் காட்டுகின்றது.
எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் இந்து மதம் மேல் எழுகின்றது. அரசியல், சட்டம், ஊடகம், மக்கள் மன்றம், சமூகம் என இன்னும் எல்லாத் துறைகளிலும் அது தன் மறுமலர்ச்சியினைக் காட்டுகின்றது.
இதை ஆழ கவனித்தால் உங்களுக்கே புரியும். இனி இந்து மதம் மேல் எழும், எதைப் பற்றியும் அஞ்ச வேண்டியதில்லை.
தர்மம் கால பைரவர் வடிவிலும், வராஹி வடிவிலும் அது பலத்த எச்சரிக்கையினை செய்கின்றது.
வாராஹி என்றால் போர்க் கடவுள், “வார்” (War) என்பதோடு வாராஹி எனும் அந்தச் சொல்லை சேர்த்துப் பார்த்தால் பொருள் விளங்கும். மூலச்சொல் வாராஹிதான்.
வாராஹி கண் விழித்த பின்பு தான் இங்கே இதுவரை ஆடிய அராஜகக் கும்பல்கள் மெல்ல அடங்குகின்றன, தர்மத்துக்கானப் போரை அவளே செய்து கொண்டிருக்கின்றாள்.
கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அந்த கார் ஏன் வெடிக்க வேண்டும் என்பதையும் இன்னும் பல மெய் சிலிர்க்கும் சம்பவங்களையும் கண்டால் உங்களுக்கே புரியும்.
அவளின் பெரும் போர் தொடங்கி விட்டது.
இந்துமத, இந்திய எதிரிகளெல்லாம் உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் முழுக்க அடக்கப்படுவதைக் கண்டால் வாராஹி வந்துவிட்டதை இதை விட என்ன ஆதாரத்தைச் சொல்லி விளக்க முடியும் எனும் அற்புதமான பதிலும் வருகின்றது.
கால பைரவரே தீர்ப்புகளைச் சொல்லத் தொடங்குகின்றார். இனி இங்கு மோசடி அரசியல், ஊழல், அதிகார துஷ்ப்ரயோகம், மர்ம சக்தி ஆட்டம், பொய்யிலும் புரட்டிலும் செய்யும் அட்டகாசமெல்லாம் இனி எடுபடாது. அவரவர்க்கான தண்டனையினை அவரவர் பெற்றே தீருவர். கால பைரவர் அதைச் செய்வார்.
காசி துலங்கிவிட்டது. இன்னும் சில விஷயம் மட்டும் பாக்கி இருக்கின்றது. மதுரா துலங்கத் தயாராகின்றது.
மானுடன் எவ்வளவுதான் முயன்றாலும் காலம் ஒத்துழைக்காமல் எதுவும் சாத்தியமில்லை. அவ்வகையில் கால பைரவரின் எழுச்சி தேசத்தையும் மதத்தையும் காக்க உருவாகி விட்டது.
மக்கள் மனமும் சிந்தையும் மாறிக் கொண்டிருப்பதையும், இந்து மதம்பால் பெரும் பற்றோடு அவர்கள் நாடி வந்து அணைப்பதையும் உலகம் அமைதியாகக் காண்கின்றது.
சுவாமி விவேகானந்தர் தன் உரையில் சொல்வார்.
“இந்த உலகில் ஆன்மீக அலையும் லவுகீக அலையும் மாறி மாறி எழும். பொருளாதாரத்துக்கான இந்த மோதல்கள் முடிந்த பின் அரசுகள் மாறிய பின் ஆன்மீக அலை மீண்டும் எழும்.”
இதோ அவர் வாக்கு பலித்துவிட்டது. இந்து மதம் தான் மீண்டெழுவதை பல இடங்களில் காட்டுகின்றது. ஆலயங்களில், அரசியலில், ஊடகங்களில், வாழ்க்கை பாணியில், பொது இடத்தில் என எல்லா இடத்திலும் காட்டுகின்றது.
விடிவெள்ளியினைக் காட்டியிருக்கும் இந்துமதம் அயோத்தி துலங்கி அங்கே அந்த ஆலய மணியோசை கேட்கத் தொடங்கும்போது முழு கதிரவனாக மெல்ல மெல்ல வெளிபட்டுத் துலங்கி உலகுக்கே ஒளி கொடுக்கும்.
இனி எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. கவலையுற வேண்டியதில்லை. பிரபஞ்சம் தன் அலையினை அடிக்க ஆரம்பித்து விட்டது. அங்கு எல்லோரும் வெறும் கருவிகளே.
அமைதியாக பிரபஞ்சத்தை உற்று கவனியுங்கள். அது மவுனமாகப் பேசுவதை கவனியுங்கள். அது வைக்கும் புள்ளிகளையும் அது இழுக்கும் கோடுகளையும் மெல்ல கவனியுங்கள். பெரும் மாற்றத்துக்கு தேசம் மவுனமாகத் தயாராகிக் கொண்டிருப்பது புரியும்.
காலதேவனே சக்தி வாய்ந்தவன். அவன் கண் விழித்திருப்பது மிகப்பெரும் ஆறுதல்…