அய்யா உண்டு!!!
அய்யா வைகுண்டர் அவதார நாள் – மாசி 20.
இந்தப் பிரபஞ்சம் இந்த பூமிப்பந்தினை சரியாக கவனித்துக் கொண்டே இருக்கின்றது. இங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் அது கூர்ந்து நோக்குகின்றது. அந்த அசைவில் அராஜகமோ அகங்காரமோ பெருகினால் அது தானே ஏதோ ஒரு வடிவில் வந்து அதை நிர்மூலமாக்குகின்றது.
அது காலம் காலமாக இங்கு நடக்கும் விஷயம். எல்லா அராஜக அக்கிரமங்களும் அது டைனோசர்களாக இருந்தாலும் சரி டைனோசரை விட பிரம்மாண்ட சக்தியும் பேராசையும் கொண்ட மானிடர்களாக இருந்தாலும் சரி, இந்தப் பிரபஞசம் அக்கிரமக்காரர்களை ஏதோ ஒரு வகையில் சரியான நேரத்தில் அழிக்கும்.
ஆம் அதைத்தான் “அதர்மம் ஆடுமிடமெல்லாம் நான் அவதரித்து அதை அழிப்பேன்” என கீதையில் சொன்னார் கிருஷ்ண பரமாத்மா. அதை அதர்மம் ஆடுமிடமெல்லாம் பெரும் அவதாரமாகவோ இல்லை சிறு அவதார அம்சமாகவோ வந்து நடத்திக் கொண்டே இருந்தார்.
மச்சமாக, வராகமாக, பரசு ராமனாக, ராமனாக , கண்ணனாக அவதரித்த அவரின் அம்சம் தென்னகக் கடலோரமும் ஒரு அவதாரமாக அவதரிக்கும் அளவு அதர்மம் தலை விரித்தாடிற்று.
ஆம். அது வெகு பழைய காலம் அல்ல, வெகு சமீபத்தில் சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி பக்கம் நடந்த மாபெரும் மானிடக் குல நெருக்கடி.
அங்கு நடந்த மாபெரும் நெருக்கடிகள் 15ம் நூற்றாண்டில் இருந்து அய்யா அவதரித்த 19ம் நாற்றாண்டு வரை நடந்தவை.
அப்பொழுது அங்கு சில குழப்பங்கள் உண்டாயிற்று. அதற்கு காரணம் திருவாங்கூர் அரசுக்கு பிரிட்டிசார் உயர்த்திய கப்பமும், அதைக் கொடுக்க அந்த அரசாங்கம் மக்களிடம் வசூலித்த தொகைகளும் பெரும் சர்ச்சையாயிற்று.
ஒரு நாட்டு மக்களே ஒரு அரசனை விரட்டி அடிக்கச் செய்யப்படும் அநீதிக்கு அகராதியானவன் பிரிட்டிஷ்காரன். அவன் மலையாள அரசுகளிடமும் அதே வகையில் நெருக்கடி கொடுத்தான்.
திப்பு சுல்தானை கேரளத்தின் மேற்கு பகுதியில் விரட்ட வந்தவன் அப்படியே தன் வழமையான பாணியில் அதிகக் கூலி, வரி என மலையாள மன்னர்களிடம் பெரும் தொகைக் கோரினான்.
அது சமூகத்தில் வெவ்வேறு வடிவமாக உருவானது, அதுவரை ஆண்களுக்கான வரி பெண்களுக்குமானது, வயது வந்த பெண்களுக்கு “முலை வரி” என ஒன்று விதிக்கப் பட்டது.
முலைவரி என்றால் பெரிய பெண்களுக்கான வரி என்பது பல்வேறு வகையில் திரிக்கப்பட்டு அது இந்து மன்னனின் சமூகக் கொடுமை என ஐரோப்பிய மதமாற்ற சக்திகளால் மாற்றப்பட்டு பல்வேறு சர்ச்சையும் குழப்பமும் அவர்களால் உருவாக்கப் பட்டு நிலைமை விபரீதமானது.
ஏற்கனவே வடக்கே மராட்டிய அரசு, மொகலாய அரசு என வலுவான அரசுகளின் கரையில் ஒதுங்க முடியா ஐரோப்பிய கோஷ்டி, தென்னகக் கடற்கரையில் எளிதாகக் காலூன்றி மதமாற்றத்தை பெரிதாகச் செய்தது.
நாயக்கர்களிடம் கடற்படை இல்லாததால் தென்னக கடற்கரையெல்லாம் போர்த்துகீசிய, டச்சு, பிரிட்டானிய கடற்படை பாதுகாப்பில் வந்தது.
நாயக்கர்களும் வலு இழந்து நவாப்களும் வீழ்ந்து பிரிட்டனின் கை ஓங்க ஓங்க புதுவிதமான குழப்பங்கள் கடற்கரையில் வந்தன. ஆம் அவர்களைக் கட்டுப் படுத்துவோர் யாருமில்லை.
திருச்செந்தூர் ஆலயம் டச்சுக்காரர்கள் ஆயுத குடோன் ஆனது.
வாணிப மையம் ஆற்றங்கரை நகரங்களில் இருந்து கடற்கரை துறைமுகங்களுக்கு மாறி இனி துறைமுகங்களே பொருளாதார கேந்திரமாகும் என அறியாத பாரத கண்டத்து தமிழகமும் அறியாமையில் இருந்தது.
அப்பக்கம் இன்னும் கொடிதாக திருவிதாங்கூர் சமஸ்தானம் நாடார்கள் உள்ளிட்ட சமூகம் மேல் குறிப்பாக பாண்டி நாட்டில் இருந்து வந்தவர்கள் மேல் (இவர்கள் நாயக்கர் காலத்தில் குடியேறிய சிறிய இனம்) ஒரு வித வன்மம் கொண்டது அல்லது அதுவரை இல்லாப் பிரிவினையும் வெறுப்பும் யாராலோ உருவாக்கப்பட்டது.
அன்று பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணையெல்லாம் இல்லை. இப்பொழுது இருக்கும் ரப்பர் தோட்டம் முதல் செவ்வாழை தோட்டமெல்லாம் அன்று இல்லை.
வியாபாரமும் இன்னும் சிறு விவசாயமும் நாடார்கள் உள்ளிட்ட இனங்களுக்கு வாழ்வினைக் கொடுத்தது.
பிரிட்டிஷார் கோரிய பெரும் கப்பம் திருவாங்கூர் மன்னனை பாதிக்க, மன்னனின் கடும் வரிமுறையில் நாடார் இன மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.
அந்த வரி என்ன கொடுமையெல்லாம் செய்ததென்றால் நாடார் பெண்கள் மார்பு துணிக்கும் வரி விதிக்கப்பட்டது.
இது இழிவுபடுத்தும் செயல் என்றல்ல, இன்றும் கேரளத்தில் கிராமங்களில் பெண்கள் மேலாடை எப்படி இருக்கும் என்பது எல்லோரும் அறிந்தது. இதில் வரி கட்டாத நாடார்களிடம் வசூலிக்க அப்படிச் செய்தார்கள்.
இன்னும் தலப்பாகை கட்டினால் வரி (அன்று வசதியுள்ளவன் தலைப்பாகை கட்டுவான்), மாடி வீடு கட்டினால் வரி (பணக்காரன் மாடி வீடு கட்டுவான்), இன்னும் பனை தொழிலுக்கும் பெரும் வரி எனக் கடும் வரிகள் சுமத்தப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் உணவு மட்டும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டது. வேறு எல்லாம் திருவாங்கூர் அரசுக்கே.
இதில் இருந்து மக்கள் தப்ப ஒரே வாய்ப்பு மதம் மாறுவது, அப்படி மாறிவிட்டால் திருவாங்கூர் அரசு விலக்கு அளிக்கும். அதாவது பிரிட்டிசார் அப்படிக் காவலை கிறிஸ்தவர்களுக்கு கொடுப்பார்கள்.
ஆம், பிரிட்டன் நினைத்திருந்தால் அம்மக்களை கொடுமைப் படுத்தாதே என இதனை தடுத்திருக்கலாம்.
ஆனால் பிரிட்டானியரும் திருவாங்கூர் அரசனை வைத்து ஆடினார்கள், மதம் மாற்ற அப்படி மக்களை வதைத்தார்கள், அரசனுக்கும் வேறு தெரிவு இல்லை.
எங்களுக்காக யாருமே இல்லையா என அந்தச் சாபம் பிடித்த சனம் கதறிய பொழுது தான் 1809ம் ஆண்டு தென் தாமரைக்குளம் என்ற ஊரில் அந்த அவதாரம் அவதரித்தது, அதன் பெயர் முத்துகுட்டி.
முடிசூடும் பெருமாள் எனும் பெயர் அரசப் படைகளால் கண்டிக்கப் பட்டபின் முத்துகுட்டி என மாறிற்று.
முத்துகுட்டி கேட்டு வளர்ந்ததெல்லாம் தாலாட்டும் சந்தோஷ குரல் அல்ல.
அவன் கேட்டு வளர்ந்ததெல்லாம் அரசப் படைகள் நாடார்கள் உள்ளிட்ட மக்களை பச்சை மட்டையால் அடித்து இழுத்துச் செல்வதும், வரி என இருக்கும் சேலையினையும் உருவிச் செல்வது என்றே இருந்தது.
அவனும் பனை ஏறினான், இன்னும் பல தொழிலெல்லாம் செய்து அரசுக்கே கொடுத்துவிட்டு அரை வயிற்றுக் கஞ்சியோடு படுத்தும் கொண்டான்.
ஆனால் பிரபஞ்சம் அவனோடு பேசிற்று, அந்த மலையும் கடலும் சுசீந்திரம் ஆலயமும் அவன் மனதோடு பேசின, அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் எனும் நினைவு வந்தும் வராமலும் போனது.
அந்த குழப்பமான நிலையில் 18 வயதில் திருமணமும் ஆயிற்று.
ஒருவன் ஜாதகப்படி 21 வயதுக்கு மேல்தான் சுயபுத்தி வரும், தன்னறிவு வரும். இதனால்தான் 21 வயதில் விழா எடுப்பது அக்கால வழக்கமாய் இருந்தது, இன்றும் வாக்கு செலுத்த 21 வயதுதான் சரி, வாழ்வின் முக்கிய முடிவுகளை அதைத் தாண்டி எடுப்பதுதான் சரி.
அந்த 21 வயதில்தான் முத்துகுட்டிக்கு மிகக் கடுமையான காய்ச்சல் வியாதி வந்தது.
எல்லா அவதாரங்களும் ஒரு கடும் சோதனையில் தான் தங்களை யார் என அறிந்து கொள்ள முடியும்.
மரணத்தின் எல்லை வரை அல்லது மனதின் கடைசி வலு ஒடியும் வரை அவர்களை வதைக்கும். இறைசக்தி அந்த விளிப்புக்கு கொண்டு சென்ற பின்புதான் சக்தியினையும் ஞானத்தையும் கொடுக்கும்.
முத்துகுட்டிக்கு கடும் காய்ச்சல் வந்தது, அப்பொழுது திருச்செந்தூரில் மாசித் திருவிழா நடந்து கொண்டிருந்தது.
முத்துகுட்டியினை வண்டியில் தூக்கிப் போட்டு திருச்செந்தூர் ஆலயம் கொண்டு சென்றார்கள்.
கடற்கரை வழியாகச் செல்லும் பொழுது அவர் ஓடிச் சென்று கடலில் வீழ்ந்தார் அல்லது ஒரு சக்தி தூக்கி கொண்டு சென்றது.
ஆம் அவர் அவதார வடிவம் எடுக்கும் நேரம் நெருங்கிற்று, தாயாரோ தவித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன் பின் இரு நாட்கள் அவரைக் காணவில்லை, அதிசயங்களைச் செய்யும் முருகன் தன் மகனைத் தருவான் என தவித்தபடி பார்த்திருந்தார் தாய்.
திருச்செந்தூர் ஆலயம் எப்பொழுதும் அதிசயங்களைச் செய்வது. அது புராண காலம் தொடங்கி சஷ்டி கவசம் பாடிய தேவராயர் முதல் குமரகுருபரர் வரை எத்தனையோ பேருக்கு மாபெரும் அதிசயங்களைச் செய்த ஸ்தலம்.
அந்த ஸ்தலம் முத்துகுட்டிக்கும் அந்த அதிசயத்தை செய்தது, அந்தக் கோவிலின் முன்னால் கடலில் இருந்து ஒரு தெய்வீக வடிவமாக எழுந்து வந்தார் முத்துகுட்டி.
ஆனால் பழைய முத்துகுட்டியாக அல்ல. தெய்வீக சக்தியும் அருள் வடிவும் மாபெரும் வல்லமையும் கொண்ட தேவ வடிவமாக வந்து நின்றார். அவரின் மானிட ஆன்மா மறைந்து தெய்வீக ஆன்மா அந்த உடலில் இறங்கியிருந்தது.
மகனே என பந்தபாசத்தில் ஓடிய தாயிடம் “நான் இனி மகனில்லை. நீ என் அன்னையில்லை” என மானிட குணங்களின் பந்தத்தை தாண்டி தேவ தன்மைக்கு மாறிச் சொன்னார்.
அவர் முதலில் வணங்கியது அந்த திருச்செந்தூர் ஆலயமே, அங்கே அவருக்கென ஒரு கூட்டம் கூடிற்று.
அவரின் போதனையும் பாடலும் தத்துவமும் வேறு வகையில் இருந்தன.
பாண்டிய நாட்டின் அந்த ஸ்தலத்திலே தன் அவதார நோக்கத்தை தொடங்கினார், தலைப்பாகை அணிவது அடிமைகளுக்கு அனுமதியில்லை என்பதை உடைக்க அங்கே தலைப்பாகை கட்டினார்.
காவி உடையும் தலைப்பாகையும் நெற்றியில் விபூதியுமாய் 22 வயது முத்துகுட்டி தெய்வச் சாயலாய் தன் இனம் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த கன்னியாகுமரி பக்கம் வந்தார்.
ஒரு தோப்பு அவரின் குடியிருப்பாயிற்று. அது சாமித் தோப்பு என்றானது.
அன்று இந்துக்களில் பல பிரிவுகள் இருந்தன. அவர்களுக்குள் சிற்சில சச்சரவுகளும் இருந்தன. அவர் சைவம், வைஷ்ணவம் என இரண்டும் ஒன்றே என்பதை போதிக்கத் தொடங்கினார்.
மக்கள் அவரை நாராயணனின் வடிவமாகக் கருதினர். அவரோ சிவனே அய்யா எனப் பாடி ஒற்றுமையினை முதலில் வளர்த்தார். ஒரு கட்டத்தில் அவரும் திருவாங்கூர் மன்னனும் சந்திக்க வேண்டிய நேரமும் வந்தது.
வைகுண்டரின் எழுச்சி மதமாற்ற சக்திகளுக்கு பெரும் தடையாய் அமைய அந்த கோஷ்டி திருவாங்கூர் மன்னனுக்கு ரகசிய எச்சரிக்கைகளைச் செய்தன. மன்னனும் பதவிக்காகப் பல கொடுமைகளைச் செய்ய ஆரம்பித்தான்.
பழைய முத்துகுட்டியாக அவரை எண்ணி சித்திரவதை செய்ய அடித்தல், ரத்த காயத்தில் உப்பு மிளகு பூசுதல், தீயில் எறிதல் என என்னவெல்லாமோ செய்தனர் வீரர்கள்.
மட்டையால் அடித்தால் பச்சை மட்டை பூமாலையாய் அவர்மேல் வீழ்ந்தது. கத்தி வைத்து வெட்டினால் அது விசிறியாயிற்று.
தீயில் எறிந்தால் அவர் பஞ்சு மெத்தையில் அமர்வது போல் அமர்ந்தார்.
கடைசியில் பட்டினி கொண்ட புலியிடம் அவரை உணவாகப் போட்ட பொழுது புலி அவர் காலடியில் பூனை போல் அமர்ந்திருந்தது.
திருவாங்கூர் மன்னன் மிகப் போராடிப் பார்த்து அவரிடம் சரணடைந்தான், அவரை ஒரு மகான் என ஏற்றுக்கொண்டு அவர் வழியில் செல்லும் பக்தர்களுக்கும் மக்களுக்கும் சலுகைகள் வழங்கினான்.
மதமாற்ற கும்பலும் அவரிடம் மோதிவிட்டு ஒதுங்கினார்கள்.
நாடார்கள் காலணி அணியும் உரிமை முதல் தலைப்பாகை அணியும் உரிமை வரைப் பெற்றனர், மாடி வீடுகள் வந்தன.
பெண்கள் மார்புக்கும் சேலை வந்தது, நியாயமான உழைப்பின் பலன் கைகளுக்கு வந்தது.
முத்துகுட்டி “அய்யா வைகுண்டர்” எனக் கொண்டாடப்பட்டார். அவருக்கான பக்தர் கூட்டம் பெருகிற்று.
திருச்செந்தூர் முதல் திருவனந்தபுரம் வரையிலான பகுதிகளில் அவரின் செல்வாக்கு பெருகிற்று, அவரின் எழுச்சி அங்கு பெரும் திருப்பங்களைக் கொடுத்தது.
காயல்பட்டினம் தொடங்கி குளச்சல் வரையிலான கடற்கரை முழுக்க தங்கள் மதம் பரவ வேண்டும் என்ற அவர்களின் திட்டத்துக்கு பெரும் சவாலாக அய்யா எழும்பினார்.
இந்துக்களின் பல பழக்க வழக்கங்களை மூடநம்பிக்கை எனக் காட்டி, கல்லும் சிலையும் சாமியல்ல என வாதம் செய்தன.
அய்யா கொஞ்சமும் தயங்கவில்லை, அவரும் உருவமில்லா இறைவனை ஏற்றுக் கொண்டார், எந்த ஆயுதத்தை எடுத்தால் வாய் அடங்குமோ அதைச் செய்தார்.
ஆம், இந்துக்களுக்கு அவர் பல வாழ்க்கை முறைகளை கற்றுக் கொடுத்தார்.
அழுக்கானவர்கள், அசைவம் உண்பவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், உழைக்க மட்டும் தெரிந்த காட்டுமிராண்டிகள் என்றொரு பிம்பத்தை பிரிட்டிஷ் அமைப்புக்களும் அவர்கள் மேல் சுமத்தியிருந்தன. அதில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் சில மேலானவர்களும் இருந்தார்கள்.
ஒருவனை அடிமைப்படுத்த வேண்டுமானால் அவனை மனதால் உடைக்கும் அந்த தந்திரத்தில் அப்படி ஒரு பிம்பம் உருவாக்கி வைத்திருந்தார்கள்.
அய்யா வைகுண்டர் அந்த நாடார் உள்ளிட்ட இந்துக்களுக்கு புதுப்பாதை காட்டினார்.
அசைவம் தவிர்த்தல், குளித்து சுத்தமாய் இருத்தல், கூடி சைவ உணவினை உண்ணும் பந்தி முறை, உருவமில்லா இறைவனை வழிபடும் முறை எனப் பல விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்.
அவர் இந்துக்களில் சீர்திருத்தம் செய்தார், இந்துமதத்தை எதிர்த்து புரட்சி செய்தார் என்பதெல்லாம் சரியான வார்த்தைப் பதம் அல்ல.
அவர் இந்துக்களுக்கு தங்களை யார் என உணர்த்திக் காட்டினார் என்பதே சரி.
நல்ல இந்து அசைவம் உண்பதில்லை; நல்ல இந்து நெடுநேரம் தூங்குவதில்லை; நல்ல இந்து குளிக்காமல் இருப்பதில்லை; வழிபாடு செய்யாமல் இருப்பதுமில்லை.
அய்யா இந்துக்களை இந்து வழிபாட்டின் உன்னத முறைக்குத் திருப்பினார்.
அவர் போதனைகளெல்லாம் சிவன், நாராயணன், அன்னை சக்தி என்றேதான் இருந்தது.
கல்லையும் மண்ணையும் வணங்கும் காட்டுமிராண்டிகள் எனப் பழி சொன்னபொழுது “இந்துக்களின் நோக்கமே கல்லில் வழிபாட்டைத் தொடங்கி கண்காணா இறைவனை மனதால் உணர்வது” என முழங்கிச் சொன்னார் அய்யா.
இதனால்தான் அவரின் வழிபாட்டு முறையில் உருவ வழிபாடு இல்லை.
ஒன்றாம் வகுப்பில் தொடங்கி கல்லூரியில் படிப்பு முடிக்கும் மாணவன் போல உருவ வழிபாடு தொடங்கி உருவமற்ற வழிபாட்டில் மனம் பக்குவப்பட்டு நிற்பதே முழு பக்தி நிலை, சித்தர்கள் ஞானிகளின் யோக நிலை.
அதை முதலிலே சொல்லி வழிநடத்தியவர் அய்யா, அவரின் போதனை காலத்துக்கு தக்கதாயும் யாரும் வாதம் செய்ய முடியாதபடியும் இருந்தது.
பேய் விரட்டும் தந்திரத்தை அவர் முன்னும் தூக்கிப் போட்டார்கள். பேயினை இவன் ஓட்டட்டும் பார்க்கலாம் என சவால் விட்டார்கள்.
அப்பகுதியில் காணிக்காரர்கள், மலையரசர்கள் எனச் சில மலைவாழ் மந்திரவாதிகள் உண்டு. மந்திர செய்வினைகளில் கைகேந்தவர்கள். அதுவும் மலையாள மாந்தரீகம்.
அவர்களை அடக்கிக் காட்டி அவர்களை மண்டியிடச் செய்தார் அய்யா. அவர்களின் மாய வேலைகள் அய்யாவிடம் எடுபடாமல் போக, பலர் அவரே அவதாரம் என ஏற்றுக் கொண்டார்கள்.
ஆம் அய்யா செல்லும் வழியெல்லாம் நோய்கள் ஓடின, பேய்கள் அலறின, அரசுகள் அவருக்கு அஞ்சின.
அரைகுறை சித்தாந்தமும் முரட்டுத்தனத்தில் உள்ளே ஏற்றிய குருட்டு ஆன்மீகமும் அவர்களுக்கு உண்மையினை புரிய வைக்க முடியவில்லை.
ஆம், இறைசக்தி என்பது ஒன்றுதான், தர்மம் என்பது ஒன்றுதான். இங்கு அக்கிரமிகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர் வடிவில் நடமாடுகின்றது என்பதை அவர்களால் உணரமுடியவில்லை.
எங்கெல்லாம் நீர் தேவையோ அங்கெல்லாம் மழை பெய்யும் என்பது பிரபஞ்ச விதி. அதையே எங்கள் நாட்டில் பெய்ததுதான் மழை, உங்கள் நாட்டில் பெய்தால் விஷம். எங்கள் நீரைத்தான் குடிக்க வேண்டும் என்றால் எப்படியோ அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள்.
கடைசியில் அய்யா வைகுண்டரிடம் தோற்று, அவரும் அவர் சீட கோடிகளும் இருக்கும் வரை மதமாற்றம் சாத்தியமில்லை என அலறி அடித்து ஓடினார்கள்.
சாதியற்ற சுத்தமான சனாதன தர்மத்தை அய்யா நிலை நிறுத்தினார், அது நாடாருக்கான பிரிவு எனச் சொல்வது மடத்தனம்.
அங்கு அன்று பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோரும், அவரைப் பின் பற்றியவர்களில் பலர் நாடார்கள் என்பதால் அவர் நாடாருக்கான அவதாரம் அல்ல. அவர் யாருக்காகப் போராடினாரோ அதில் பெரும்பான்மையினர் நாடார்கள்.
அய்யா வைகுண்டர் எல்லோருக்கும் பொதுவானவர், “தாழக் கிடப்பவரை தாங்குதலே தர்மம்” என வாழ்ந்து காட்டியவர்.
ஆம், உயர இருப்பவரை பிடித்து கீழே இருப்பவரோடு அமர வைத்து எல்லோரையும் பராரியாக்குவது அல்ல புரட்சி, அது தர்மமும் அல்ல.
“தாழக் கிடப்போரை உயர்த்தி வைப்பதே தர்மம்”, அதை அழகாகச் செய்தார் அய்யா.
எந்த சாதியோ, எந்த இனமோ, மொழியோ, குலமோ அவருக்கு சிக்கல் அல்ல. அவரை நினைந்து வணங்கினால் அவர் மாபெரும் அருளினை உங்களுக்குத் தருவார்.
கலியுகத்தில் அவர் வழிபாடு மிக முக்கியம் என இறைவனால் செய்யப்பட்ட ஏற்பாடு அவர்.
ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு வடிவினைக் காட்டும் பரம்பொருள் இந்த யுகத்தில் அவரைத்தான் திருச்செந்தூரில் அடையாளமிட்டுக் காட்டியது.
அய்யா வைகுண்டர் என ஒருவர் வரவில்லை எனில் தென்னகக் கடற்கரை முழுக்க இந்து மார்க்கமே அழிந்திருக்கும்.
அவர் வரவில்லையெனில் 19ம் நூற்றாண்டில் என்னென்ன மாறுதெல்லாமோ நடந்து தொலைந்திருக்கும். சின்ன மீனை விழுங்கிப் பெரிய மீனை விழுங்கும் தந்திரப்படி நாடார்கள் மதம் மாறியபின் திருவாங்கூர் அரசனே குறி வைக்கப்பட்டிருப்பான்.
அப்படியெனில் இன்றைய பத்மநாபபுரம் கோவிலுமில்லை. அந்த தங்கமுமில்லை. எல்லாம் லண்டனுக்கு அனுப்பப்பட்டிருக்கும்.
அய்யா வைகுண்டர் காலத்தால் வந்து பல காவல்களை இங்கு செய்த அவதாரம்.
ராமனும் கண்ணனும் அவதரிக்காவிட்டால் வட பாரதத்தில் இந்துமதம் இன்று இருந்திருக்காது, அப்படியே முருகப்பெருமானும் அய்யா வைகுண்டரும் எழுந்தருளாமல் இருந்திருந்தால் தென்னகக் கடலோரம் இப்படி இந்து அடையாளமாய் இராது.
அய்யா ராமனைப் போல், கண்ணனைப் போல் காலத்தால் வந்த அவதாரம்.
அய்யா இந்து போராளி அல்ல; சீர்திருத்தவாதி அல்ல; நாடார்களுக்காய் வந்தவரும் அல்ல.
இந்துக்கள் தன்னிலை மறந்து அப்பக்கம் ஒரு மாதிரி குழம்பிய பொழுது, பனை ஏறுதலும் விவசாயமும் இன்னும் வியாபாரமும், உணவுப் பழக்கமும், வாழ்வியலும், சூழலும் காலமும் அவர்களை இந்து மதத்தில் இருந்து பிரித்த பொழுது, அங்கு வந்து அவர்கள் யாரென அவர்களுக்கே உணர்த்திய ஒரு அவதாரம்.
ஆம் அவரை வணங்கும் யாருக்கும் மாயை நீங்கும், அவரை நினைத்து வணங்கும் பட்சத்தில் கலி அவர்களைத் தொடமாட்டான்.
தான் ஒரு இந்து எனும் உணர்வும் அறிவும் தன்னறிவும் சுய சிந்தனையும் ஒருவனுக்கு வரும்.
அவரடி பணியும் பொழுது பேயோ, பிசாசோ இதர சூனியமோ ஒருவனைத் தொட முடியாது.
அந்த ஞானவடிவம் இன்றும் எல்லோருக்கும் அருள் பாலித்துக் கொண்டே இருக்கின்றது.
அவரின் அந்த அகிலத் திரட்டும் அருள்நூலும், சாட்டு நீட்டோலையும் அவர் ஒரு மகான் என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
சாமிதோப்பு அவரின் தலமை பதி என்றாலும் அவர் உருவாக்கிய பதிகளும் அவரின் அன்புக்கொடி மக்களும் அவரின் அவதார சாட்சியாக நிற்கின்றனர்.
கன்னியாகுமரிக்கு கடலாடச் செல்லும் இந்துக்கள் அங்குள்ள பகவதி அம்மனை எப்படி தவிர்க்கவே கூடாதோ அப்படி சுசீந்திரம் ஆலயமும் சுவாமி தோப்பும் கண்டிப்பாய் செல்ல வேண்டிய இடங்கள்.
‘சுச்சீ’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு சுத்தம் எனப் பொருள். அந்த ஆலயம் அங்கு வருவோரை சுத்தமாக்கும்.
அய்யா வைகுண்டரின் பதியில் அவரை வணங்கினால் அவனின் மாயை நீங்கும், அதுவும் இந்துக்கள் வணங்கினால் அவர்கள் தாங்கள் சனாதன தர்மம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும், அதில் கலந்துவிட்ட மாசுக்களை நீக்கி விழிப்படையும் அறிவினை உடனே பெறுவார்கள்.
ஒரு இந்து எப்படி வாழ வேண்டுமோ, எப்படி செயலாற்ற வேண்டுமோ அப்படி அவர்கள் மனமும் வாழ்வும் மாறும், இது நிச்சயம்.
அய்யா வைகுண்டர் புரட்சியாளன், தனிப் பிரிவு கண்டவர் என்பதெல்லாம் பைத்தியங்களின் அறிவுகெட்ட புலம்பல்கள்.
அய்யா இந்துக்களுக்கு தாங்கள் யாரெனக் காட்ட வந்த ஒரு அவதாரம், புலி தன் காயத்தை தானே நக்கி ஆற்றுவது போல் இந்து அரசன் இந்துக்களை கொடுமைப் படுத்தியபொழுது அதில் குளிர்காய நினைத்தபொழுது வந்து தடுத்து இந்துக்கள் யார் எனக் காட்டிவிட்டுச் சென்ற அவதாரம்.
பெரும் மகான்களும் இளமையிலே ஞானம்பெற்று எல்லாம் போதித்து சாதித்தவர்கள் நெடுநாள் இவ்வுலகில் வாழ இறைவன் அனுமதிப்பதில்லை. வாழ்வின் மொத்த கால சாதனையும் இளம் வயதிலேயே செய்து விடுபவர்கள் அதன் பின் செய்ய ஏதுமில்லை.
ஆதிசங்கரர், விவேகானந்தர் போலவே அய்யா வைகுண்டரும் தன் 39ம் வயதில் இளம் வயதில் வைகுண்டம் ஏகினார்.
இன்று (03/03/2024) அவரின் அவதார நாள். கிபி 1831ம் ஆண்டு, கொல்லம் ஆண்டு 1008ம் தேதி மாசி 20ம் தேதி இதே நாளில்தான் அவர் திருச்செந்தூரில் அவதாரமாய் கடலில் இருந்து வெளி வந்தார்.
அது மாசித் திருவிழா காலமாகவும் மாசி மகம் பௌர்ணமியாகவும் இருந்தது என்கின்றது குறிப்புகள்.
திருச்செந்தூரில் ஞானம் பெற்ற அய்யா அங்கிருந்து தன் சாமிதோப்பு நோக்கி நடந்த ஊர்வலம்தான் “அய்யா வைகுண்டர் அவதார விழா” என கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று சிறப்பாக நடக்கின்றது.
அய்யாவின் அன்புக்கொடி மக்கள் இன்று அவரை நினைந்து ஊர்வலமாக அவர் சென்ற பாதை வழியே நடந்து அந்த அவதாரத்தை நினைவு கூறுகின்றனர்.
நீங்கள் யாராகவும் இருக்கலாம், எந்த தேசத்தில் எந்த மொழியில் எந்த இனமாகவும் மதமாகவும் சாதியாகவும் இருக்கலாம், அய்யா வைகுண்டரை நினைந்து வணங்கினால் உங்களின் மாயை விலகும்.
கலிகால கொடுமைகளோ மயக்கமோ வீண் கலக்கமோ அர்த்தமே இல்லாத சஞ்சலமோ உங்களை நெருங்காது.
உங்கள் மனம் தெளிவாகும், மிகப்பெரிய அமைதியும் ஞானமும் உங்களில் குடி கொள்ளும், தர்மம் உங்களில் குடி கொள்ளும்.
அந்தப் பிரபஞ்ச தர்மமும் நல்வடிவான இறைசக்தியும் உங்களை பல தர்மங்களை செய்ய வைக்கும். தர்மத்தில் வாழும் உங்கள் மனமும் வாழ்வும் தர்மத்தை காத்து நிற்கும்.
ஒரு வேளை நீங்கள் இந்துக்களாக இருந்தால் ஒரு நல்ல இந்து எப்படி இருக்க வேண்டுமோ அப்படி உங்கள் மனமும் வாழ்வும் செயலும் சொல்லும் மாறும். இது சத்தியம்.
கலிகால கொடுமையில் கலியின் மாயை நிறைந்திருக்கும் இக்காலங்களில் அதை விலக்கி உங்களை யாரெனக் காட்டி, உங்கள் கடமையினைக் காட்டும் சாவியும் விளக்கும் அய்யாவின் பாதங்களில்தான் உண்டு, அதை எடுத்துக்கொண்டு கலியினைக் களையுங்கள்.
அவரின் “அகிலத்திரட்டு” எனும் வழிபாட்டு நூலும், பல விதமான தீர்க்க தரிசனங்களைச் சொல்லி இந்த கலிகாலம் அறிவியல் எனும் பெயரில் எப்படியெல்லாம் மாயையில் சிக்கும், நாகரீகம் எனச் சொல்லி எப்படியெல்லாம் சீரழியும் என்பதையும் அந்த கலிகாலத்தில் எப்படி வாழவேண்டும் எனச் சொன்ன “அருள் நூல்” சுவடியும் மாபெரும் கொடைகள்.
அந்த இரு நூல்களின் போதனையும் இக்கால கீதைகள், பகவான் கண்ணன் மறுமுறை பிறந்து தந்துவிட்டுச் சென்ற தத்துவ சுரங்கங்கள், கலிகால ஆன்ம கவசங்கள்.
கன்னியாகுமரி செல்லும் ஒவ்வொரு இந்துக்களும் கால் பதித்து வணங்க வேண்டிய தலம் அய்யாவின் சாமிதோப்பு பதி, அய்யா எக்காலமும் அங்கிருந்து அருள் பாலிக்கின்றார்.
மண்டைக்காடு, சுசீந்திரம் அருகே இருக்கும் அந்த தலம் மகா சிறப்பானது, சூட்சும சக்தி பல மிக்கது.
பாரதத்தில் வடக்குப்பக்கம் ஒரு காலத்தில் ஆடு மாடு மேய்க்கும் இனத்துக்கு கண்ணன் வந்தது போல, உழவருக்கு பலராமன் வந்தது போல 19ம் நூற்றாண்டில் பாரதத் தென்முனையில் அனாதையான ஒரு அபலைக் கூட்டத்துக்கு ஆபத்பாந்தவராய், அனாத ரட்சகராய் வந்தவர் அய்யா.
நாராயணின் அம்சமாக வந்தவர் அய்யா.
அய்யா எக்காலமும் உண்டு, எந்நாளும் எந்த நிமிடத்திலும் உண்டு.
அய்யா உண்டு!!!