மாரிதாஸ் மலைச்சாமி
தேசாபிமானியும் திராவிடத்தின் வைரியுமான அன்பர் மாரிதாஸ் மலைச்சாமி என்பவருக்கு இன்று ( 06th March) பிறந்த நாள்.
அன்பர் இந்த இணைய உலகில் தேசியவாத தமிழக தேசாபிமானிகளால் மிகவும் எதிர்பார்க்கபடுபவர், அவர் கொட்டும் உழைப்பும் தகவல் சேகரிப்பும் அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் ஆர்வமும் சாமான்யமானது அல்ல.
அது சவால்மிக்கது, ஒரு வார்த்தை ஆதாரமில்லாமல் சொல்லமுடியாதது. சரியான தரவுகளை சரியான வகையில் திரட்டி, எத்தனனையோ எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் இடையில் மக்கள் முன் வைப்பது என்பது உயிருக்கு துணிந்த போராட்டம்
சுதந்திர போராட்டத்தை தொடங்கிவைத்த தாதாபாய் நவ்ரோஜி, எப்படி இந்துஸ்தானம் பிரிட்டிசாரால் சுரண்டபடுகின்றது என்பதை சரியான தரவுகளொடு சொன்னாரோ அதற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல மாரிதாஸரின் உழைப்பு
இதனால் அவர் பெற்ற பகையும், நிம்மதி குலைக்கும் வழக்குகளும் ஏராளம், இப்பொழுதும் ஒருவித அச்சுறுத்தலில்தான அவர் இருக்கின்றார் என்பது ரகசியமல்ல
அதுவும் எந்த பாதகத்துக்கும் துணியும் போதை கும்பல்களின் தரவுகளை திரட்டி ஆதாரத்தோடு அதுவும் ஆளுமட்சி பலம் கொண்ட சதிகாரர்களை எதிர்த்து நிற்பது என்பது ஒரு ராணுவ வீரனுக்குரிய கடப்பாடு
அவ்வகையில் அவரின் உழைப்பும் சேவையும் ராணுவத்தாருக்கும், உளவுதுறையினரின் உழைப்புக்கும் சற்றும் குறைந்தது அல்ல
தொடக்கத்தில் எப்படி இருந்தாரோ அதே நெருப்புடன், அந்த துடிப்பும் ஆர்வமும் கொஞ்சமும் குறையாமல் ஒவ்வொரு வீடியோவிலும் இருப்பதை காணலாம்
ஒரு வகையில் தமிழகத்தில் தேசப்பணி என்பதும் தேசாபிமானம் என்பதும் மிகவும் சோர்வினைக் கொடுப்பது. சில இடங்களில் விரக்திக்கு தள்ளும், தேவையில்லா வேலையில் இறங்கி புலிவாலைப் பிடித்து விட்டோமோ என அஞ்ச வைக்கும், குழம்ப வைக்கும்.
அப்படியான ஒரு வெறுப்பு தமிழக தேசாபிமானிகளுக்கு அடிக்கடி வரும்.
அதை தாண்டி இயங்குவது என்பது மனதால் பலமிக்க, தன் சுதர்மத்தை உணர்ந்த, பலனை எதிர்பாரா கர்ம யோகத்தில் கரைந்தவனால் மட்டுமே முடியும்
மாரிதாஸர் அதைத்தான் செய்கின்றார்
அவர் பாஜகவில் இணைவதில் என்ன சிக்கல் என எமக்கு தெரியாது, அண்ணாமலை ஒன்றும் தமிழக பாஜகவின் நிரந்த கட்சி தலைவர் அல்ல என தெரிந்தபின்னும் ஏன் தயங்குகின்றார் என்பதும் எமக்கு தெரியாது
அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் நல்லது என்பதை மட்டும்தான் சொல்லமுடியும்
அவர் ஏகலைவன் ஆனால் அங்கே இணைந்தால் கட்டைவிரலை கேட்பார்கள் என எதிர்தரப்பு சிண்டு மூட்டிவிடுவதும் உண்டு, ஏகலைவனுக்கு பலமே கட்டைவிரல் என்பதால் நிச்சயம் அதை யாரும் கோரமாட்டார்கள் எனினும் ஏன் தயங்குகின்றார் என்பது புரியவில்லை
காலம் நல்ல மாற்றத்தை ஒரு நாள் கொடுக்கும்.
மகாபாரதக் கர்ணனாக அவர் எங்கோ சிக்கிவிட்டார் என சொல்வாரும் உண்டு , அதெல்லாம் ஆதாரமில்லாத் தரவுகள்.
உண்மையில் அவரை கவனித்தால் அவரிடம் ஒரு ஒழுங்கான இயக்கம் தெரியும், இலக்கு வைத்து முறையாக இயங்கும் ஒரு ஆளுமை தெரியும், மிக பரபரப்பான இறுக்கமான நபர் அவர், செயல் ஒன்றே பிரதானம்
ஒருவகையி ஜெயகாந்தன் சாயல்
அப்படிபட்டவர் அரசியலுக்கு வந்தால் கடும் உழைப்பை கொட்ட மட்டும் வருவேன் என தயங்கலாம், பத்தோடு பதினொன்றாக இருக்க அவர் விரும்பாமல் இருக்கலாம்
எது எப்படியாயினும் அவரின் தொண்டு எக்காலமும் உண்டு, மோடி எனும் மாமனிதரையும் அவரால் பலன் பெறும் இந்தியாவினையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் அவரின் பணி வாழ்த்துகுரியது
பொதுவாக மாகாண அரசுகள் யாரை குறிவைக்குமோ அவர்களை கண்டு மெல்லிய அச்சம் கொள்கின்றது என்பது அரசியல்
அதனை முன்பு காங்கிரஸ் திமுகவினருக்கு 1960களில் செய்தது, அந்த தீவிரத்தில்தான் திமுக வளர்ந்தது
1990களில் ஜெயலலிதாவினை எதிர்கட்சி குறிவைக்க தொடங்கி அது 1996ல் உச்சத்துக்கு சென்றபொழுது எப்படி அஞ்சினார்கள் என்பது புரிந்தது
அப்படி மாரிதாஸுக்கும் சிலர் அஞ்சலாம், இது மாரிதாஸரின் மகத்தான வெற்றி அதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்
மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு
குருஷேத்திர போரில் பலமிக்க பலராமன் கலந்து கொள்ளவில்லை அவன் தனியே நின்றான், அதுபற்றி கிருஷ்ணரிடம் பாண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.
கண்ணன் சொன்னான் “நம் எதிரிகளிடம் போகாத வகையில் அவன் நமக்கு நல்லதுதானே செய்கின்றான். நாளையே நம் கை தாழ்ந்தால் வராமல் போய் விடுவானா என்ன? அதர்மத்தோடு கலக்காமல் தனித்து நிற்றலும் நம்மோடு சேர்ந்த வகைதானே?
இன்று அவன் தனித்து நின்றாலும் முன்பு எவ்வளவு அதர்மக்காரர்களை அழித்திருக்கின்றான். அவன் அழித்த அதர்மக்காரர்களெல்லாம் இன்று இருந்து கவுரவரோடு சேர்ந்திருந்தால் என்னாகும்?
அவன் நமக்காகவே போரிட்டான், இன்னும் போரிடக் காத்திருக்கின்றான், அவனை நான் அறிவேன்”
மாரிதாஸர் அந்த பலராமன் வகை, அவரால் நிச்சயம் பல நன்மைகள் விளைகின்றன. இன்னும் விளையும்.
அவர் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மதுரை மீனாட்சியும், சென்னை காளிகாம்பாளும் அருள் புரியட்டும்.
மிகப்பெரிய எதிர்காலம் அவருக்கு அமையட்டும், அவரின் தேசாபிமான போராட்டமெல்லாம் பெரும் அங்கீகாரத்தை பெறட்டும்.
தேசம் வாழ, தமிழகம் தன்னிலை மீட்டெடுக்க, மாயைகள் அகல எல்லா நலமும் பலமும் அருளும் அவருக்கு சூழ்ந்து நிற்கட்டும்.
இந்துஸ்தான மக்களிடம் அவர்களின் அடிமை நிலையினைத் தன் பரபரப்பான கட்டுரைகளால், பெரும் ஆதாரங்களால் சொல்லி, சுதந்திரத்தின் அவசியத்தை தாதாபாய் நவ்ரோஜி சொன்னபொழுது நெல்லையின் பாரதி உருக்கமாய்ப் பாடினான்.
“முன்னாளில் இராமபிரான் கோதமனா தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத் தியஎமது பரத கண்ட
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப் பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில மக்களவ ரடிகள் சூழ்வாம்.
அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம் மைந்தன், தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென் உயிர் துடைப்பேன் என்னப் போந்து,
யௌவன நாள் முதற்கொடுதான் எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி யானுழைப்புத் தீர்த லில்லான்.
கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக் கருணையும்அக் கருணைப் போலப்
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு நிகரின்றிப் படைத்த வீரன்,
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம் எனஅதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித் தனக்குழையாத் துறவி யாவோன்.
மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும் மதியாதே வாணாள் போக்குந்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்,
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய் நவுரோஜி சரணம் வாழ்க;
எண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு இருந்தெம்மை இனிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந் துக எமது பரதநாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி போற்புதல்வர் பிறந்து வாழ்க
விண்புல்லு மீன்களென அவனன்னார் எவ்வயினும் மிகுக மன்னோ!”
அந்த வாழ்த்து மாரிதாசருக்கும் பொருந்தும், முழுக்க பொருந்தும், மிகச் சரியாய் பொருந்தும்.
அவர் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு பல விழிப்புக்களை, தெளிவுகளைக் கொடுக்க, மறைந்துகிடக்கும் உண்மைகளை எடுத்துரைக்க, மாயச் சுவர்களைத் தகர்க்க, முகமூடிகளைக் கிழிக்க எல்லா சக்தியினையும் தெய்வங்கள் அருளட்டும்.
அவரை நினைக்கையில் அவருக்கு உரிய காவல் இல்லையோ எனும் அச்சம் அடிக்கடி எழும், காசியினை காக்கும் கால பைரவர், காலத்தால் வந்த இவருக்கும் பெரும் காவல் அருளட்டும், அவரை விட யார் காவல் இருந்துவிடமுடியும்?
கால பைரவர் அருளில் அவருக்கு எல்லா காவலும் வாய்க்கட்டும், தேசம் அவரால் பல நல்ல விஷயங்களை அடையட்டும்.