கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்
கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் பீடம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பது அதிர்ச்சி செய்தி . அவர் இந்துமதத்துக்கும் இந்த தேசத்துக்கும் செய்த சேவைகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் மகா புண்ணிய பணிகள்.
பொதுவாக தமிழக ஆதீனங்கள் திராவிடத்துக்கு அஞ்சும் இயல்புடையவை, இந்துமதத்துக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நடந்தாலும் தன் பணி திராவிடத்துக்கு காவல் இருப்பவை
ஆதீனங்களின் ஆதார கடமையே மதத்தை காப்பதும் பரப்புவதுமே என்பதை மறந்து, தங்கள் சுயலாபத்துக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுத்து மவுனம் காக்கும் இயல்பு கொண்டவை
ஆதீனங்கள் மட்டும் மிக சரியாக இருந்திருந்தால் தமிழகத்தில் திராவிட போலி குழப்பமும் அரசியலும் இந்த அளவு வளர்ந்து தமிழகம் சீரழிந்திருக்காது
அவ்வகையில் இந்த ஆதீனம் அவர்களில் இருந்து வேறுபட்டு நின்றார், முழுக்க தேசியமும் தெய்வீகமும் கொண்ட சுத்த சன்னியாச கோலத்தில் நின்றார்
அவர் கோவை பக்கம் இன்னொரு முத்துராமலிங்க தேவராக வலம் வந்தார் அதனை மறுக்கமுடியாது
சுத்தமான ஒரு ஆதீனம் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தார், ஒரு ஆதீனம் என்னென்ன கடமைகளை செய்யவேண்டுமோ அதையெல்லாம் சரியாக செய்தார்
அபாரமான தமிழ்புலமை அவருடையது , சைவ நூல்களில் மாபெரும் தேர்ச்சியும் சிறந்த ஞானமும் கொண்டிருந்தார், ஏகபட்ட நூல்களை எழுதினார்
உள்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் சென்று சைவ போதனைகளை பரப்பினார், திருவாசகம் தேவாரம் எல்லாம் அவருக்கு மிக மிக இயல்பாக வந்தது
மக்கள் பணியே மகேசன் பணி என்பதை ஏற்று எவ்வளவோ அனாதை இந்து குழந்தைகளை காக்கும் ஆசிரமம் நடத்தினார், ஆக சிறந்த கல்வி கொடுத்தார்
கோவை பக்கம்,பல்லடம் பக்கம் ஆலய பணிகள் நிரம்ப செய்தார், நவகிரக கோவில்கள் என அவர் கட்டிவைத்ததெல்லாம் பெரும் திருப்பணி
பசும்பொன் தேவரின் பாதிப்பு அவரில் அப்படியே இருந்தது, சாதிகளை அவர் மனதாலும் கருதவில்லை, எல்லா சாதி மக்களிடமும் பரிவு காட்டினார், குறிப்பாக அடிதட்டு மக்களின் பகுதிகளுக்கு அடிக்கடி சென்றவர் அவர்கள் சார்ந்த ஆலயத்தில் பெரும் முனைப்பு காட்டினார்
அவர்கள் கோவில் கும்பாபிஷேகம் திருப்பணி என தவறாது கலந்துகொண்டார், அவர்களோடு அவர்களில் ஒருவராக நின்றார், மதமாற்றம் எங்கு ஆரம்பிக்குமோ அங்கு சரியாக நின்று தடுத்து கொண்டிருந்தார்
அவரின் பணி மிக மிக பெரியது, ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியாதது, நீண்டகாலம் ஓடிய சைவ ஜீவநதி அவர்
அந்த நதி எத்தனையோ உயிர்களை காத்தது, இந்துமதத்தை பசுமையாக வைத்திருந்தது, எவ்வளவோ காரியங்களை தான் சென்ற இடமெல்லாம் செழிக்க வைத்தது
அவரின் ஆகசிறந்த குணம் அசாத்தியமான தைரியம் , திராவிட குரல்கள் எங்கு எழுந்தாலும் முதல் கண்டனம் தெரிவிப்பவராக இருந்தார்
இந்துமதத்தை பகுத்தறிவு எனும் பெயரில் திராவிட கும்பல் காயபடுத்திய போதெல்லாம் வீழ்த்தமுயன்ற போதெல்லாம் கடுமையான பதிலடி அவரிடம் இருந்து வந்தது
கடைசிவரை அதில் சரியாக இருந்தார், திராவிடகழக வீரமணி போன்றோர் வாயே திறக்கமுடியாதபடி சரியான வாதங்களை முன் வைத்தவர்
தேவர் பெருமகனாரை சிலர் சாதிவட்டத்தில் அடைக்க முயன்றபோது, தேவர் இந்துக்கள் சொத்து இந்துமத சொத்து என முழங்கியது அவர்தான், ஜெயலலிதா பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் சாற்ற மூலகாரணமும் அவர்தான்
அந்த விழாவில் மற்ற ஆதீனங்களெல்லாம் ஒதுங்கி கொள்ள, ஒரு தேசபக்தனுக்கு முருகபெருமான் அடியார்க்கு நான் வராமல் யார் வருவார் என முதல் ஆளாக வந்து கலந்துகொண்டவர் அந்த ஆதீனம்
அவரின் நாட்டுபற்று ஒரு ராணுவவீரனை போல மகா உயர்ந்தது, தேசாபிமான இயக்கத்துடன் நல்ல உறவில் இருந்தார், ஆ.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களுக்கும் அவருக்கும் உன்னதமான பந்தம் இருந்தது
டெல்லி பாராளுமன்றத்தில் செங்கோல் சாற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட ஆதீனங்களில் இவரும் மகா முக்கியமானவர்
இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் இருப்பவனே துறவி, அவன் எதைகண்டும் அஞ்சமாட்டான் எனும் வகையில் அவரின் பேச்சும் நடவடிக்கைகளும் தைரியமானவை
கோவையில் கார் சிலிண்டர் வெடிகுண்டு வெடித்தபோது, “கோட்டை ஈஸ்வரன் எம்மக்ளை காத்துவிட்டான்” என முதலில் சொன்னவர் அவர்தான்
55 வயதான அவர் நுரையீரல் பாதிப்பால் காலமாகிவிட்டார் அவருக்கு நாடெங்கும் அஞ்சலிகள் குவிகின்றன
தமிழுலகம் நல்ல புலவனை இழந்திருக்கின்றது, தேசாபிமானிகள் ஒரு தேசாபிமானியினை இழந்திருக்கின்றார்கள், உண்மையான துறவியினை ஆதீன மடங்கள் இழந்திருக்கின்றன
உன்னதமான இந்துவினை இந்து உலகம் இழந்திருகின்றது
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என முழுக்க சிவனுக்கு மட்டுமே அடிபணிந்த அந்த அடியார், நக்கீரர் போல மிக மிக தைரியமாக நின்ற அந்த சிவனடியார் கயிலாயம் ஏகிவிட்டார்
எந்த சிவனை அந்த ஆத்மா காலமெல்லாம் துதித்ததோ அங்கே அந்த ஆத்மா ஜோதியாக கலந்துவிட்டது
அந்த ஆத்மா நிம்மதி சூழ இளைப்பாறி அவர் கனவுகண்ட இந்து தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் தமிழும் இந்துமதமும் தேசியமும் ஒளிவிடும் தமிழகத்தில் விரைவில் பிறக்கட்டும்
அப்போதாவது போராட்ட வாழ்வினை வாழாமல் நிம்மதியான வாழ்வினை வாழட்டும்
அதுவரை அந்த கயிலாய நாதனிடம் தேசத்துக்காக இந்த மதத்துக்காக இந்த மாகாண மக்களுக்காக அது வேண்டிகொண்டே இருக்கட்டும்.