பூந்தானம் நம்பூதிரி
தெய்வம் எப்போதும் ஒருவனின் மனதை பார்க்கும், அவன் தன்மேல் கொண்டிருக்கும் தீராத பக்தியினை பார்க்கும் . மற்றபடி ஆன்மீக விதிகளோ, ஆச்சாரமோ, மொழியோ, இதர கட்டுப்பாடுகளோ அதற்கு அடுத்த நிலைதான் அல்லது அவை அவர்களுக்கு அவசியமே இல்லை.
உத்தமமான பக்தனை தெய்வம் நேரடியாக தன்னுள் ஈர்க்கின்றது. உலகுக்கு அவனை அடையாளம் காட்டி, அவன் தன்மேல் கொண்ட அன்பை ஊரறியச் செய்து அங்கீகரித்து அவனை ஏற்றுக்கொள்கின்றது.
விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் பூரணமான, மனம் கசியும் பக்திமுன், முழு சரணாகதியான பக்தி முன் உடைந்துபோகின்றது. மனமார்ந்த பக்தியே வெல்கின்றது என்பதை பல இடங்களில் தெய்வம் காட்டிற்று.
குறிப்பாக இந்துமதத்தில் அதனைப் பல இடங்களில் சொன்னது.
சைவமரபில் கண்ணப்பநாயனார், நந்தனார் எனப் பல வகைகளில் அதை காட்டிய தெய்வம் வைணவமரபில் அப்படி பல உதாரணங்களைத் தந்தது.
அந்த உதாரண வாழ்க்கையில் ஆகச் சிறந்த வாழ்க்கை பூந்தானம் நம்பூதிரி என்பவருடையது, குருவாயுரப்பன் அவரைக் கொண்டு மாபெரும் அதிசயங்களை செய்து அவரை உலகறியச் சேர்த்துக்கொண்டான்.
இன்றும் குருவாயூர் கோவில் கண்ணனும் தானும் வேறல்ல என்பதுபோல், ஜென்ம ஜென்மமாக வந்த தொடர்பு என்பதுபோல் அமைந்தது அந்த பூந்தானத்தை குருவாயூர் நாதன் உலகறிய ஏற்றுக்கொண்ட கதை.
தமிழகத்தின் அபிராமிபட்டரின் சாயலில் குருவாயூரில் நடந்த பக்திமிக்க வாழ்வு அவருடையது.
அந்த பூந்தானத்தின் வரலாறு ஒவ்வொருவரும் அறியவேண்டியது, ஒவ்வொருவருக்கும் அது உற்சாகம் தரக்கூடியது.
இளம் வயதுமுதலே குருவாயூரப்பன் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தார் அந்த பூந்தானம், நம்பூதிரியாகப் பிறந்தாலும் அவர் சமஸ்கிருதம் கற்கவில்லை, வேதம் தெரியாது, ஆகமம் தெரியாது.
பாகவதமோ, மகாபாரதத்தில் நாலு வார்த்தையோ ஏன் கீதையின் ஒருவரி கூடக் தெரியாது, எதுவும் தெரியாது.
தெரிந்ததெல்லாம் கண்ணன், கண்ணன், குருவாயூரில் இருக்கும் அந்த குழந்தை கண்ணன்.
இவருக்கு பெரிதாக வருமானமில்லை, பெரிய தொழிலும் இல்லை. தினமும் குருவாயூரப்பன் கோவிலுக்கு செல்வார், ஆங்காங்கே சிலவேலைகளை செய்வார், கிடைக்கும் கூலியில் குருவாயூரப்பனுக்கு விளக்கேற்றிவிட்டு அங்கே அமர்ந்திருப்பார்.
அங்கே நடக்கும் உபன்யாசத்தை கேட்பார், கொஞ்ச நாளிலே அதனில் கரைந்து போனார், அவருக்கு 16 வயது இருக்கும் போது கேள்வி ஞானத்திலே கண்ணன் புகழை சொல்லும் அளவுக்கு ஆற்றல் வந்தது.
குருவாயூரப்பன் மேலான பக்தி அவரை அந்த அளவுக்கு ஈர்த்துக் கொண்டது.
ஆனால், அவர் யாரிடமும் எதுவும் பேசமாட்டார். காரணம், ஆகமவிதி தெரியாதவர், சமஸ்கிருதம் தெரியாதவர் என அவருக்கு இழுக்கு இருந்தது, முறைப்படி கல்லாதவர், குரு இல்லாதவர் என ஏளனம் அதிகம்.
இதனால் அவர் தன்போக்கில் அமர்ந்து தான் கேள்விபட்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை மட்டும் பாடுவார். அப்போது அந்த ஆலயத்தின் பிரசித்தியான பட்டர் நாராயண நம்பூதிரி.
அவர் இவரை சுத்தமாக மதிக்கவில்லை, யாரோ ஆர்வக்கோளாறு பிடித்தவர் என எண்ணிக்கொண்டார். அந்த நாராயண நம்பூதிரி மிகக் கடுமையான ஆச்சாரமிக்கவர், சமஸ்கிருத ஞானி மிகக் கண்டிப்பானவர்.
சமஸ்கிருதமும், ஆச்சாரமும் வழிபாடுகளுமே இறைவனை அடையும் வழி எனக் கண்டிப்பாக இருந்தவர்.
ஒருநாள் இந்த பூந்தானம் வழமை போல் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும் போது தனக்கு தெரிந்த வகையில் உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்.
”பத்மநாபோ அமரப்ரபு” என்று வரக்கூடிய ஒரு பதத்தை தவறாக பதம் பிரித்து “பத்மநாபோ மரப்ரபு” என அவர்போக்கில் பாராயணம் செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்பதால் திறந்த வெளியில் வண்டி ஓட்டுபவன் போல அவர்போக்கில் இலக்கின்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், இலக்கண விதிப்படி அது தவறு.
அவ்வரி “பத்மநாபாய நம:, அமர ப்ரபவே நம” என வரும் அதாவது “பத்ம நாபனே அமரர்களான தேவர்களுக்கெல்லாம் தலைவனே” என வரும்.
இவர் இலக்கணம் அறியாமல் “”பத்மநாபோ மரப்ரபு”” என சொன்னதில் மரங்களுக்கு அதிபதியே எனப் பொருள் மாறிபோயிற்று.
இதை அவர் அறியவில்லை. ஆனால், நாராயண பட்டத்ரி காதில் விழுந்துவிட்டது, ஆச்சாரமான அவர் கடும் கோபம் கொண்டு , “அறிவில்லாத மடையனே, புனிதமான விஷ்ணு சகஸ்ரநாமம் உனக்குத் தெரியாது என்றால் வாயை மூடிக்கொண்டிரு, மாறாக தப்பு தப்பாக படித்தால் கோவிலை விட்டே விரட்டியடிப்பேன்” எனச் சீறினார்.
மான்குட்டிபோல் விழித்தார் பூந்தானம், அவருக்கு பக்தி இருந்த அளவுக்கு சமஸ்கிருதமோ பொருளோ தெரியாது. இந்த நாமத்தை சொன்னால் பகவானுக்கு சிறப்பு எனத் தெரியும். ஆனால், எப்படி சொல்லவேண்டும் எனத் தெரியாது.
தொடுக்கத்தெரியாதவன் மாலை தொடுத்தது மாட்டிக்கொண்டது போல் கூனி குறுகி நின்றார்
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக நாரயண பட்டதிரிக்கு மட்டும் ஒரு குரல் கேட்டது..
” நான் மரத்துக்கும் கடவுள் இல்லை என்றால், வேறு யார் மரத்துக்கு அதிபதி சொல்?
மரத்துக்கும் நானே அதிபதி, தேவர்களுக்கும் நானே அதிபதி. நாராயண பட்டதிரியே, உன் இலக்கண அறிவைக் கொண்டு பக்தியை அளக்க முயற்சிக்காதே, பட்டதிரியின் ஆச்சாரத்தை விட பூந்தானத்தின் பக்தியே எனக்குப் பெரிது!” என்று குருவாயூரப்பன் குரல் ஒலித்தது.
நாராயண நம்பூதிரி அந்த இடத்திலே ஞானம் அடைந்தார், எல்லா வடிவமும் பகவான் அல்லவா? இதனை நமக்கு சொன்னவர் எவ்வளவு பெரிய ஞானியாக இருக்கமுடியும் என அவரைப் பணிந்தார்.
அதன்பின்பே அவர் ஞானியாக “நாராயணீயம்” எனும் பிரசித்தியான நூலை எழுதினார், இதன் பின் கோவிலில் உபன்யாசம் செய்யும் வேலைக்கு அங்கீகரிக்கபட்டார் பூந்தானம்.
எனினும், அவர்மேல் பொறாமை கொண்ட கூட்டம் அவர் எங்கே சறுக்குவார் எனப் பார்த்துக் கொண்டிருந்தது. காரணம், இவர் உபன்யாசம் செய்ய வந்தபின் மற்றவர்கள் பேசுவதை கேட்க யாருமில்லை.
அந்த பூதானம் ஒவ்வொரு நாளும் மாலை குருவாயூரப்பனுக்கு தீபாராதனை செய்த பிறகு ஸ்ரீமத் பாகவதத்தை ஒரு ஈடுபாடு கொண்டு பாகவத கதைகளை எல்லோருக்கும் கூற ஆரம்பித்தார். பூந்தானத்தின் பக்திபூர்வமான வார்த்தைகளைக் கேட்ட பக்தர்கள் மனமகிழ்ந்து அவர் கூறும் விளக்கத்தையே அதிகம் விரும்பத் துவங்கினார்கள்.
அதனால் வெகு விரைவிலேயே குருவாயூர் கோவில் பாகவதம் உபன்யாசம் என்பது பண்டிதர்கள் மூல சம்ஸ்கிருத ஸ்லோகங்களை படிப்பதும், பூந்தானம் அதனுடைய விளக்கத்தை கதையாக சொல்வதும் என்ற முறையில் உருவானது. பூந்தானத்துக்கு சம்ஸ்கிருத அறிவு கிடையாது. ஆனால், அவர் பக்திபூர்வமாக தான் உணர்ந்த கதைகளையும் சரித்திரங்களையும் சொல்லலானார்.
அப்படி ஒருநாள் சொல்லும்போது தன்னை மறந்த நிலையில் அப்படியே கண்ணனில் நிறைந்து “ருக்மணி தேவி கண்ணனை நினைத்து உருகி ஒரு கடிதம் எழுதி ஒரு அந்தணரிடம் கொடுத்து துவாரகைக்கு அனுப்பி வைத்தார். அவர் அந்தக் கடிதத்தை கண்ணனிடம் கொடுத்தார்” என்று விளக்கம் கூறினார்.
இது மூல நூலான பாகவதத்தில் சொல்லப்படவில்லை.
மூல நூலில் கடிதம் கொண்டு வந்த அந்தணர் கண்ணனிடம் விஷயத்தை கூறுவது போல அமைந்து இருக்கும். கடிதத்தை கையில் கொடுத்தாரா இல்லையா என்று இருக்காது.
இதனை பிடித்து கொண்ட பண்டிதர்கள் அவரை சரியாக பிடித்து அரைகுறையாக பிதற்றுகின்றார் என குற்றம்சாட்டி இழிவுபடுத்தத் தொடங்கினார்கள்.
பூந்தானம் திகைத்தார். காரணம், அவருக்கு பாகவத நூல் தெரியாது, வாசித்து பொருள் அறிந்தவருமில்லை , அப்படி ஒரு சம்பவம் உண்டா என்றே தெரியாது.
கேள்வி ஞானத்தில் மட்டும் தெரிந்துகொண்டவர் தன் மனதால் காட்சிப்படுத்தி சொல்லிவிட்டார்.
இப்போது சிக்கிக் கொண்டவர் “குருவாயூரப்பா” என அலறினார்.
அப்போது திடீரென பகவானின் கர்ப்பகிரகத்தின் கதவு படார் என அடித்துக் கொண்டது. உள்ளே இருந்து ஒரு அசரீரி கேட்டது, ”என்னிடம் கடிதம் கொடுக்கப்படவில்லை என்று எந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? ருக்மணி எழுதிய கடிதத்தை அந்த அந்தணர் என்னிடம்தான் கொண்டு வந்து கொடுத்தார்” என்று கர்ஜனை போல பகவானின் குரல் ஒலித்தது.
அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் பூந்தானத்தின் பக்தியையும் அந்த கபடமற்ற பக்தியின் காரணத்திற்காக பகவான் இரங்கும் தன்மையும் கண்டு வியந்து நின்றார்கள்.
அதன் பின் அவர் அந்த ஆலயத்தில் பாகவதத்தை பொழிய ஆரம்பித்தார். அவர் காரியத்தில் யாரும் தலையிடவில்லை.
அவருக்கு பகவான் அருள் இருந்தது. அப்படியே குறையும் இருந்தது. ஆம். அவருக்கு குழந்தைகள் இல்லை, பிறந்தாலும் இறந்து கொண்டே இருந்தன.
இதனால் அவர் மனமொடிந்தார். அப்போதும் ஏதோ குருவாயூரப்பனுக்கு தான் குறை வைத்ததாகக் கருதியவர் “சந்தனா கோபாலம்’ ஓதுவதன் மூலம் குருவாயூர் இறைவனைப் பிரியப் படுத்தத் தொடங்கினார்.
ஆம். மிகப்பெரிய குறை வந்தபோதும் அவர் பகவானை பழிக்கவில்லை, தெய்வம் பொய் எனச் சொல்லவில்லை, நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என அழவில்லை.
மாறாக தன் பக்தி இன்னும் போதாது என தன்னை குறைபடுத்தி பகவானை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினார்.
அதனால் “சந்தனா கோபாலம்’ விடாமல் ஓதினார், அந்த பலனாய் அவருக்கோர் மகன் பிறந்தான்.
ஆனால் ஒரு வயது ஆகும் போது அவனுக்கு முதல் பிறந்த நாளில் சோறுட்டும் விழா நடக்கும் போது இறந்துவிட்டான்.
பூந்தானம் மீண்டும் மனமுடைந்தார். ஆனால், அந்நேரமும் தன்னை குறைபட்டுக் கொண்டாரே தவிர பகவானை சாடவில்லை, பகவான் மனம் குளிரா வண்ணம் தான் ஏதோ பாக்கி வைத்திருப்பதாகக் கருதி கோவில் வாசலிலே கிடையாய் கிடந்தார்.
அப்போது கண்ணன் குழந்தை வடிவாய் அவர் மடியில் வந்து படுத்துக் கொண்டான், “கண்ணா, நீ என் மகனாய் வந்துவிட்டாயா? நீ என் மகனாய் இருக்கத்தான் வேறு குழந்தை தராமல் சோதித்தாயா?
இனி நீயே என் மகன், நீயே என் மகன்” என அந்த குருவாயூரப்பனை தன் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
அதன் பின் முழு ஞானியானவர் அந்த ஞானத்தில் கொடுத்ததுதான் “ஞான பான” பானை எனும் மலையாள யாப்பில் அமைக்கப்பட்ட செய்யுள் அது. துளி சமஸ்கிருதம் இல்லாமல் சுத்தமான மலையாளத்தில் அவர் அதைப் பாடினார்.
இன்றளவும் மலையாள கீதை எனப் போற்றப்படுகின்றது.
அதி உயர்ந்த போதனைகளை, மாபெரும் தத்துவங்களை பட்டினத்தாரின் தமிழ்போல மலையாளத்தில் மிக இயல்பாக எழுதி வைத்தார், படிப்போர் புரிந்து கொள்ளும்படி பெரிய ஞானத்தில் மகா யோகியாய் எழுதி வைத்தார்.
இதை எழுதி அவர் குருவாயூர் மண்டபத்தில் அரங்கேற்றியபின் இரு குழந்தைகள் அவருக்கு வாய்த்தன.
காலமெல்லாம் குருவாயூரப்பனின் பக்திக்கு அவரும், குருவாயூரப்பன் கருணைக்கு இவருமாக வாழ்ந்தார்கள். கடைசி வரை கண்ணனை தன் மூத்த மகனாகவே கருதிக் கொண்டாடினார்.
தன் அந்திமக்காலம் வரை குருவாயூர் கோவில் வாசலில் தான் ஓதாமல் உணர்ந்த ஞானத்தால் பாகவதம், கீதை என கண்ணன் புகழை பாடிக்கொண்டே இருந்தார், ஒரு நாள் கூடத் தவறவில்லை.
கண்ணனும் அவருடன் அடிக்கடி விளையாடினான். ஒருமுறை காட்டில் அவர் கொள்ளையரிடம் சிக்கிக் கொண்டார், கண்ணா என அவர் அழைத்தபோது குதிரை வீரன் வந்து அவரைக் காத்தான்.
ஆனால், கூலியாக அவர் மோதிரத்தை வாங்கிக் கொண்டு சென்றான்.
மறுநாள் அவர் ஆலயம் வந்தபோது அந்த மோதிரம் பகவான் கையில் இருந்ததாகவும், அதை இவரிடம் கொடுக்கச் சொல்லி உத்தரவு வந்ததாகவும் சொல்லி கொடுத்தார் குருக்கள்.
இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் அவருக்கும் குருவாயூர் கண்ணனுக்கும் நடந்து கொண்டே இருந்தது.
அவர் வைகுண்டம் போகும் காலம் வந்தது, “என்னை தேடி விஷ்ணு தூதர்கள் வரப் போகின்றார்கள்” என்றபடி விடைபெற்று உறங்கச் சென்றார்.
அப்படியே தூதர்கள் வந்து அவரைப் பணிந்தார்கள், “பரமாத்வினை பணியும் நீங்கள் என்னை பணிவதேன்” என்றார் பூந்தானம்.
அந்த இரு தூதர்களும் சொன்னார்கள் “அய்யனே, நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம்.
தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் பணிந்தோம், நீங்கள் விரும்பும் நாளில் உங்களை வைகுண்டம் அழைத்துச் செல்வோம்” என்றார்கள்.
அவர் ஒரு நாள் அவகாசம் வாங்கினார்.
அப்படி வாங்கியவர் தான் மட்டும் செல்ல விரும்பாமல் “என்னோடு வைகுண்டம் வர விரும்புகின்றவர் யார்? விரும்பியோர் வரலாம்” என அறிவித்தார்.
ஆனால், உலக மக்கள் மாயையில் சிக்கியவர்கள் அல்லவா? தெய்வம் தங்களுக்கு பொன்னும் பொருளும் கொடுக்க வேண்டும். அதை மட்டும் கொடுத்துவிட்டால் போதும் , அதை கொண்டு வாழவேண்டும், வாழ்ந்து தீர்க்கவேண்டும் என மாய ஆசை கொண்டவர்கள் அல்லவா?
ஒருவரும் செல்லத் தயாரில்லை.
கோவிலில் விழுந்து வணங்கும் ஜனம், வைகுண்டம் அடைய விரும்பவில்லை என்பதை அறிந்து உரக்கச் சிரித்தார் அந்த ஞானி.
நாளெல்லாம் கோவிலில் வந்து கோவிந்தா என உருகுபவர்கள், வைகுண்ட பிராப்தி என கெஞ்சுபவர்கள் யாரும் உயிரை விடத் தயாரில்லை, யாருக்கும் ஞானம் வாய்க்க வில்லை என உரக்கச் சிரித்தார்.
ஆனால், அவரின் வேலைக்காரப் பெண் நம்பினாள், அவரை நோக்கி புன்னகைதார்.
அன்று இரவே அந்த தூதர்கள் வந்தார்கள், இவரும் அந்த வேலைக்காரியும் காற்றில் கரைந்தார்கள், பகவானோடு ஐக்கியமானார் பூந்தானம்.
தமிழகத்தில் ஆண்டாள் போல குருவாயூரப்பன் கோவிலில் இந்த பூந்தானம் முக்கியமான ஆழ்வார், மலையாள ஆழ்வார்.
இன்றைய கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் பிறந்து குருவாயூரில் முக்தி அடைந்தவர் அவர். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். அது மலையாளத்தில் “தெய்வீக ஞானத்தின் பாடல்” என்று பொருள்படும்.
முன்பே பார்த்தபடி ஞானப்பனா என்ற இவரது தலைசிறந்த படைப்பு. மலையாளத்தில் இவரது மற்ற முக்கிய கவிதைகள் பாசா கர்ணாமிருதம் மற்றும் குமாரகரணம் அல்லது சந்தனகோபாலபனா என்பதாகும்.
இவரது மற்ற படைப்புகளில் இராகவியம், விஷ்ணுவிலாசம் மற்றும் சமஸ்கிருதத்தில் சீதாராகவம் மற்றும் நவீன மலையாளத்தில் விஷ்ணுகீதா மற்றும் பஞ்சதந்திரம் ஆகியவை அடங்கும்.
இன்று அவரின் குருபூஜை நாள், குருவாயூர் கோவிலில் அந்த மலையாள ஆழ்வாருக்கு பூஜையும் பிரார்த்தனைகளும் வெகு விமரிசையாக நடக்கின்றன.
நீங்கள் குருவாயூர் கோவிலில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், குருவாயூரப்பனை மனமார நம்புகின்றவர்களாக இருந்தால் இன்று அந்த பூந்தானத்தை முன்னிறுத்தி அந்த அடியார் பெயரில் குருவாயூர் நாதனை வேண்டுங்கள், நீங்கள் கேட்ட வரத்தை தந்து உங்கள் குறையினை குருவாயூர் நாதன் தீர்த்துவைப்பான். இது சத்தியம்.