திருமுருகாற்றுப்படை : 13
பழமுதிர்ச்சோலை (190 முதல் 205ம் வரிகள் வரை)
“பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு”
நான்கு அறுபடை வீடுகளைக் காட்டிய நக்கீரர் இப்போது ஐந்தாம் வீடாக பழமுதிர்ச் சோலையினைக் காட்டுகின்றார்.
இந்த பழமுதிர்ச்சோலை குறவர்கள் வேடுவர்கள் வாழும் மலையாக இருந்தது. இந்த வேட்டுவ குறவர் குலத்தில் முருக வழிபாடு முக்கியமானது என்றாலும் அவர்கள் வாழ்வியல் படி அது அமைந்திருந்தது.
அவர்கள் முருகப்பெருமானுக்கு ரத்தபலி கொடுத்து பூஜை செய்தார்கள். முருகப்பெருமானுக்கு பூசை செய்யும் பூசாரி வேலினை கையில் பிடித்து ஆவேசமாக முருகப்பெருமான் அருளில் ஆடி குறி சொல்வான். நோய்களை தீர்த்து வைப்பான்.
முருகப்பெருமானின் அருள் பெற்று ஆடுவதால் அவனுக்கு வேலன் எனப் பெயர்.
இந்த ஆட்டம் வெறியாட்டம் என்றும் அழைக்கப்பட்டது. அவர்கள் சமூகத்தில் முருகப்பெருமான் வழிபாட்டில் இந்த ஆட்டம் இயல்பானதாய் இருந்தது.
பூக்களை கொடிகளுடன் கட்டி முருகப்பெருமானுக்கு சூட்டி வழிபடும் இந்த பூசாரி பண்டாரம் என அழைக்கபட்டான். இன்றும் கிராமங்களில் பூசாரிகள் பண்டாரங்கள் என அழைக்கப் படுவார்கள். பூ தொடுப்பவர்களுக்கும் இப்பெயர் உண்டு.
இவர்களெல்லாம் இந்த மரபில் வந்தவர்களே.
இப்படி முருகப்பெருமான் ஆவேசமாக வேலன் உடலில் இறங்கி ஆடும் வெறியாட்டு விழா நடத்தி முருகனை வணங்கும் குறவர்கள் நிரம்பியிருக்கும் மலை அது.
அந்த மலையில் வாழும் குறவர்கள் இயல்பு பற்றி முதலில் சொல்கின்றார் நக்கீரர்.
கவனிக்கவேண்டிய விஷயம் முருகப்பெருமானை முதலில் தேவலோக மங்கையர் வணங்க திருப்பரங்குன்றம் வருகின்றார்கள் என்றார். பின் திருசெந்தூரில் யானைமேல் முருகப்பெருமான் இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கின்றான் என்றார்.
பின் பழனியில் அவனை தேவர்களும் சிவனும் விஷ்ணுவும் வணங்க வருகின்றார்கள், ரிஷிகள் வருகின்றார்கள் என்றார். அப்படியே சுவாமி மலையில் வேதமறிந்தோர் வணங்குகின்றார்கள் என்ற நக்கீரர் இங்கே குறவர்களும் வணங்குகின்றார்கள் எனச் சொல்லி அந்த முறையினைச் சொல்கின்றார்.
சாமியாடி எனும் வேலனைப் பற்றிச் சொல்கின்றார்.
“பைங்கொடி ௩றைக்காய் இடைஇடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்”
அந்த பூசாரி மலையில் முருகப்பெருமானுக்கு எப்படி மாலை கட்டுகின்றான் என்றால் பச்சிலை கொடிகள் எனும் மணம் நிறைந்த கொடியினை எடுத்து நடுவில் மணக்கும் சாதிக்காயினை வைத்து கட்டுகின்றான். தக்கோல மரத்தின் மணமிகு காயினையும் வைத்து இடையில் பொதிகின்றான்.
பின் காட்டு மல்லியும் கூதாளம் பூவையும் சேர்த்துக்கட்டி சிறிய கண்ணியாக்கி அதனை முருகனுக்கு சூடுகின்றான். முருகப்பெருமானும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கின்றான் என்கின்றார்.
அடுத்து அவர்களின் இயல்பை பற்றிச் சொல்கின்றார்.
“நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர.”
அந்தக் குறவர்கள் மலையில் விளைந்த தரமான சந்தனத்தை உடலில் பூசியபடி, தங்கள் நிறத்தோடு மாறுபடும் அந்த சந்தனத்தை பூசியபடி பளபளக்கும் மார்பை கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொடுந்தொழில் புரிபவர்கள். விலங்குகளை வேட்டையாடும் தொழில் செய்பவர்கள். அதுவும் ஒரே அம்பில் பல விலங்குகளைக் கொல்லும் அளவு அம்பு ஊடுருவிச் செல்லும் அளவு வலிமையான வில்லை உடையவர்கள்.
அந்த வேடுவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிற்கின்றார்கள். மூங்கில் குழாயில் பழங்களுடன் தேன் ஊற்றிப் புளிக்க வைத்த மதுபானத்தைப் பருகி மகிழ்ச்சி கொண்டு, தொண்டகம் எனும் சிறிய பறையின் இசைக்கு ஏற்ப ஆடிப்பாடி மகிழ்கின்றார்கள்.
அடுத்து அங்கு வரும் பெண்களை, மலைவாசிப் பெண்களைப் பற்றிச் சொல்கின்றார்.
“விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு ௩றுங்கால்
குண்டுசுளை பூத்த வண்டுபடு சுண்ணி”
அந்த பெண்கள் மணமிக்க மலர்களின் அரும்புகளை எடுத்து கைகளால் அதை விரியச் செய்து, காம்புகள் நீளமாகக் கொண்ட அந்த மலர்களை, பல வகை மலர்களை மாலையாய்த் தொடுத்து அணிந்திருக்கின்றார்கள்.
“இணைத்த கோதை அணைத்த கூந்தல்” என்கின்றார்.
அப்படியான அழகான மலர் மாலையினை இரு அடுக்குகளாகக் கொண்டு கூந்தலை கட்டியிருகின்றார்கள். அது அவர்கள் சிகைக்கு அழகு சேர்க்கின்றது. புத்தம் புதிய மலர்கள் என்பதால் வண்டுகள் மொய்க்கின்றன.
அடுத்து சொல்கின்றார்.
“முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅந்த வால் இணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை,
அவர்களின் ஆடைகளின் அழகைச் சொல்கின்றார். மிக அழகானச் செடியின் இலைகளைக் கொடிகளோடு பிணைத்து அதனில் மணமிக்க மலர்கள் பல கலந்து தொடுத்து வண்டுகள் ஆடும் புதிய மலர்களுடன் ஆடையினை அணிந்திருக்கின்றார்கள்.
“திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மட௩டை மகளிரொடு”
அதாவது அவர்கள் தழைகளால் ஆன ஆடையினை அணிந்திருக்கின்றார்கள். அதுவும் இடுப்புப் பக்கம் எப்படி அணிந்திருக்கின்றார்கள் என்றால் பல மணிகளை அது யானை முத்து, மூங்கில் முத்து இன்னும் மலையில் கிடைக்கும் மணிகளை அழகான வடம்போல் ஆக்கி இடுப்பைச் சுற்றி கட்டிக் கொண்டு அதன் மேல்தான் இலை தழையும் பூக்களும் கொண்ட ஆடைகளை கட்டியிருக்கின்றார்கள்.
முருகப்பெருமான் இருக்கும் இடத்துக்கு மயில் வர வேண்டும் அல்லவா? அங்கே இந்த குறிஞ்சி நிலப் பெண்கள் மயில் போல் அங்கே வலம் வருகின்றார்கள்.
இப்படி அந்த மலையின் குறவர்கள் வாழ்வு, அவர்களின் தோற்றம் பற்றி சொல்லும் நக்கீரர் அடுத்து அங்கு வரும் முருகப்பெருமான் பற்றி பாடுகின்றார்.
(தொடரும்)