திருமுருகாற்றுப்படை : 14
( 206 முதல் 226 வரையான வரிகள்)
“செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,
ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
அந்த குறவர்கள் நடுவில் பழமுதிர்சோலை மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் தோற்றத்தைச் சொல்ல விளைகின்றார் நக்கீரர். அதனைப் பாடுகின்றார்.
“செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்”
அதாவது முருகப்பெருமான் செந்நிறக் கடவுள், செவ்வாயின் அதிபதி என்பது அதனால்தான்.
முருகப்பெருமானின் ஸ்லோகம் “குங்கும ரக்த வர்ணம்” என அவனின் நிறத்தைச் சொல்கின்றது.
“பவழத் தன்ன மேணி” என்பது முருகப்பெருமானை குறித்து குறுந்தொகை சொல்லும் வரி. அந்த முருகன் செந்நிறமானவன், செவ்வாய்க்கு அதிபதி என்பதால், போர்க்கடவுள் என்பதால் செந்நிற ஆடைகளை அவனுக்கு சாற்றுவதே வழமை.
“குன்றி மேய்க்கும் உடுக்கை” எனக் குறுந்தொகையில் சிகப்பான ஆடை அணிபவன் முருகன் எனச் சொல்வார்கள்.
அதனை நக்கீரரும் பாடுகின்றார். அப்படியே காதில் அசோகமரத் தளிர்களை முருகப்பெருமான் சூடியிருக்கின்றார் என்கின்றார்.
“கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
அவன் இடுப்பில் கச்சை கட்டியிருகின்றான். காலில் வீரகழலை அணிந்திருக்கின்றான். தலையில் வெட்சி மலர்களாலான கண்ணிகளை அணிந்திருக்கின்றான்.
அவன் பல விதமான இசைகளைக் கேட்பதில் பிரியமுள்ளவன் என்பதால் பல வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. அவன் குழலை விரும்புவான் என்பதால் புல்லாங்குழல் வாசிக்கப்படுகின்றது. கோடு என்றால் கொம்பு, அந்தக் கொம்புகளை ஊதுகின்றான். இன்னும் பல வகை இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன.
காட்டில் கிடைக்கும் மூங்கிலும், கொம்பும் இன்னும் பல வகையான இசைக் கருவிகளும் அங்கு ஒலிக்கின்றன.
அடுத்து பாடுகின்றார்.
“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்”
தகரன் என்றால் ஆட்டுக்கிடாய் மேல் வருபவன் எனப் பொருள். “மஞ்ஞையன் புகரில்” என்றால் மயில் மேல் எழுந்தருள்பவன். “சேவல் கொடியன்” என்றால் சேவல் கொடி ஏந்தியவன்.
அவன் ஓங்கி வளர்ந்தவன், கைகளில் வளையங்களைக் கட்டியிருப்பவன்.
அடுத்து பாடுகின்றார்.
“நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு” நரம்பினால் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு அழகிய குரலோடு மகளிர் பாடுகின்றார்கள் என்பது பொருள்.
“குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்”
சிறிய புள்ளிகள் கொண்ட மணமிக்க ஆடையினை முருகன் இடுப்பில் கட்டியிருக்கின்றான். எப்போதுமே தலைவர்கள் அரசர்கள் தரை வரை புரளும் ஆடையினை அணிந்திருப்பர். அந்த ஆடையினைப் பிடித்துச் செல்ல சேவகர்களும் இருப்பார்கள்.
அப்படி முருகனும் தரைவரைப் புரளும் அழகான மணமிக்க ஆடையினை அணிந்திருக்கின்றான். அந்த ஆடை தரைவரை புரள்கின்றது என்கின்றார் நக்கீரர்.
அடுத்து பாடுகின்றார்.
“முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து”
தன்னுடைய வலிமையான கைகளினால் அவர்களுக்கு வரமருளியபடி எனப் பொருள். மெல்லியத் தோள்களை உடைய மகளிர் ஆடிப்பாட அவர்களுடன் தன் பெரிய வல்லமையான கையினைக் காட்டியபடி எழுந்தருள்கின்றான் முருகப்பெருமான்.
“குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே அதான்று”
இப்படி குன்றுகள் தோறும் ஆடும் முருகன் இங்கும் அதே கோலத்தில் எழுந்து வருகின்றான். அது மட்டுமன்று எனத் தொடர்கின்றார்.
அடுத்து சொல்கின்றார்.
“சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்”
முருகப்பெருமானை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வழிபடுவார்கள். அப்படி இங்கே திணையும் மலரும் படைத்து, ஆட்டை அறுத்து படையலிட்டு கோழிக் கொடியோடு ஒரு களத்தினை அமைத்து அவனை வழிபடுகின்றார்கள்.
எங்கே யார் எந்த ஊரில் தன்னை எப்படி வழிபட்டாலும் அங்கே சென்று அருள் வழங்கும் முருகன் அங்கும் தன் அருளை வழங்குகின்றான் என்கின்றார்.
முருகப்பெருமான் எங்கெல்லாம் தன் அருளை வழங்குவான் என்பதைச் சொல்கின்றார் நக்கீரர்.
“ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்”
அன்புடன் தன்னைத் தேடி வழிபடுவோர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான் என்கின்றார்.
“வேலன் தைஇய வெறியயர் களனும்”
வேல் பூஜை செய்து ஆட்டை அறுத்து வெறியாட்டம் ஆடும் களத்திலும் அவன் இருப்பான்.
“காடும் காவும் கவின்பெறு துருத்தியும்”
அவன் காடுகளிலும் சோலைகளிலும் அழகான ஆற்றின் கரையிலும் ஆற்றுக்கு இடையிலும் அமர்ந்திருப்பான்.
“யாறும் குளனும் வேறுபல் வைப்பும்”
அவன் ஆற்றிலும் குளத்திலும் இன்னும் மக்கள் உருவாக்கி வைத்த இடத்திலும் இருப்பான்.
“சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்”
அவன் நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கம் போன்ற இடத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும் சந்திப்பிலும், புதிய கடம்ப மலர்கள் மணக்கும் இடத்திலும் இருப்பான்.
“மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்”
கந்துடை என்றால் மரத்தினாலோ கல்லிலோ ஒரு அடையாளத்தை செய்து அதை சிவலிங்கம் போல முருகனை நினைந்து வணங்குவார்கள்.
அப்படி மன்றம் எனும் சபையிலும், மரத்தடியில் மக்கள் கூட்டத்திலும், தன்னை கல்லில் வழிபடும் இடத்திலும் அந்த முருகன் இருப்பான் என்கின்றார்.
ஆக இந்த வரிகளில் நக்கீரர் பழமுதிர்ச்சோலை முருகனின் அழகை சிறப்பை சொல்லிப் பாடுகின்றார்.
அவன் செந்நிற மேனி கொண்டவன் அப்படியே செந்நிற ஆடை அணிந்திருக்கின்றான். காதில் அசோகமரத் தளிர்களை முருகப்பெருமான் சூடியிருகின்றார் என்கின்றார்.
அவனைச் சுற்றி பலவிதமான கருவிகளால் கொம்பும், புல்லாங்குழலும் இன்னும் பலவுமான இசைக்கருவிகள் முழங்குகின்றன.
அவன் ஆட்டுக்கடாயில் வந்து மயில் மேல் சேவல் கொடியோடு அருள் புரிகின்றான். ஓங்கி உயர்ந்த வடிவில் நிற்கின்றான்.
நரம்பிசைக் கருவிகளின் இசையோடு மெல்லிய இனிய குரலோடு அவனை மகளிர் பாடி வரவேற்கின்றார்கள்.
அவன் பாதம் தாண்டி மண்ணில் புரளும் ஆடையினைக் கட்டியபடி, வாசனைமிக்க ஆடையினை தாங்கியபடி வருகின்றான்.
தன்னுடைய வலிமையான கைகளால் அருள் வழங்கியபடி வருகின்றான். அந்த முருகன் இந்த மலையில் மட்டும் வருபவனல்ல, அவனின் இயல்பு எங்கும் நிறைந்திருப்பது.
அதன்படி இங்கே சிறு தினையும், மலர்களும், சேவல் கொடியும் கொண்டு வரும் அவன், எல்லா இடத்திலும் எழுந்தருள்வான். அன்பர் தேடும் இடமெல்லாம் எழுந்தருள்வான்.
வேல் பூஜை செய்து ஆட்டை அறுத்து வெறியாட்டம் ஆடும் களத்திலும் அவன் இருப்பான். அவன் காடுகளிலும் சோலைகளிலும் அழகான ஆற்றின் கரையிலும் ஆற்றுக்கு இடையிலும் அமர்ந்திருப்பான்.
அவன் ஆற்றிலும் குளத்திலும் இன்னும் மக்கள் உருவாக்கி வைத்த இடத்திலும் இருப்பான். அவன் நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கம் போன்ற இடத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும் சந்திப்பிலும், புதிய கடம்ப மலர்கள் மணக்கும் இடத்திலும் இருப்பான்.
மன்றம் எனும் சபையிலும், மரத்தடியில் மக்கள் கூட்டத்திலும், தன்னை கல்லில் வழிபடும் இடத்திலும் அந்த முருகன் இருப்பான் என்கின்றார்.
அடுத்து அந்த மலையில் நடக்கும் பூசை பற்றி சொல்கின்றார்.
(தொடரும்..)