திருமுருகாற்றுப்படை : 15
( 227 முதல் 247 வரையான வரிகள்)
“மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி”
இனி பாடலைக் காணலாம்.
“மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர” என்பது முதல் வரி.
“மாண்டலை” என்பது “மாண் தலை” எனப் பிரிந்து வரும். மாண்புமிக்க தலை, கவுரவமான கம்பீரமான தலை எனப் பொருள். அப்படியான தலை கொண்டது சேவல்.
“சேவலின் கொண்டைதான் அதன் பெரும் அழகு”. அப்படி அழகான தலை கொண்ட சேவல் கொடியினை, மண்ணி என்றால் அலங்கரித்து எனப் பொருள்.
அலங்காரமான சேவல் உருவம் பதிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு எனப் பொருள். திருவிழா என்றால் கொடியேற்றி வழிபடுதல் வழமை. அப்படி முருகனின் திருவிழாவுக்கு சேவல் கொடி பறக்கின்றது என்பது பொருள்.
“நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி”
என்பது அடுத்த வரி.
ஐயவி என்றால் வெண்கடுகு. வெண் கடுகு இந்துக்கள் வழிபாட்டில் பயன்படும் முக்கியமான மூலிகை. சாம்பிராணி புகையில் வெண்கடுகு கலந்து தூபமிட பில்லி சூனியம், துர்சக்திகளெல்லாம் அகலும் நல்ல சக்திகள் கூடும் என்பது ஐதீகம்.
இங்கே முருகனுக்கு அந்த வெண்கடுகை அரைத்து நெய்யோடு கலந்து பூசுகின்றார்களாம். அது ஒருவித தைலம் போல சாற்றப்படுகின்றது.
இதனில் சூட்சும பலனும் உண்டு. பல நல்ல சக்திகளை இது ஈர்த்து தரும், அப்படியே விக்ரஹங்களுக்கான பலமும் உறுதியும் கூடும்.
பல இடங்களில் புணுகு சாற்றுவார்கள். சில இடங்களில் தைலம் சாற்றுவார்கள். மருந்து சாற்ற்றுவார்கள். இங்கே எண்ணையும் வெண்கடுகும் சாற்றப்படுகின்றது. இந்த முறை அக்காலத்தில் இருந்திருக்கின்றது.
அப்படி எண்ணையும் வெண்கடுகும் கலந்த பசையினைச் சாற்றி, மலர்களைத் தூவி இறைவனை வணங்குகின்றார்கள் என்கின்றார்.
அடுத்த வரி இதோ.
“முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்”
இந்த வரிகளில் பலிபீடத்துக்கு வரும் குறத்தி பற்றி சொல்கின்றார். குறி சொல்பவள் குறத்தி. குறி சொல்லி ஆடும் வழக்கம் அவர்களுடையது, குறத்தி சொல்லும் அருள்நிலைச் சொல்லே குறி என்றானது.
அப்படி முருகன் தன்னில் இறங்கி தன் மூலமாக குறி சொல்லப் போகின்றான். நல்ல வார்த்தை சொல்லப் போகின்றான் என வழமையாக வெறியாட்டம் ஆடும் பெண் வருகின்றாள்.
சாமியாடி பெண் வருகின்றாள். அவள் பல நாட்கள் விரதம் இருந்து காப்புகட்டி பல வகை கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து விட்டு வருகின்றாள்.
அவள் வரும் கோலம் பற்றி நக்கீரர் சொல்கின்றார்.
அவள் இரு மாறுபட்ட நிறம் கொண்ட ஆடைகளை அணிந்திருக்கின்றாள். அவள் கையில் செந்நிற நூல் கயிற்றை காப்பாக கட்டியிருக்கின்றாள்.
தன் மூங்கில் கூடையில் பிரம்பினில் விளைந்த வென்மையான அரிசி, மூங்கில் அரிசியின் பொரியினை கொழுத்த ஆட்டின் இரத்தத்தில் கலந்து எடுத்து வீசியபடி வருகின்றாள்.
அதாவது முருகப் பெருமானோடு பல சிறு தெய்வங்கள் வரும். அவன் படையில் இருக்கும் சில சக்திகள் வரும். அவற்றுக்கும் உணவு கொடுத்தபடி, ஆட்டு ரத்தம் கலந்த சிகப்பு பொறியினை வீசியபடி வருகின்றாள்.
“சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி”
என்பது அடுத்த வரி. அந்த இடத்தின் அலங்காரத்தைச் சொல்கின்றது.
அங்கே பசுமஞ்சளை நல்ல நீரில் கரைத்து தெளித்திருக்கின்றார்கள். பல இடங்களில் வாசனைமிக்க சாந்துகளை பூசியிருகின்றார்கள்.
(மஞ்சள் என்பது கிருமி நாசினியாக சொல்லப்படுவது. பலர் கூடும் இடத்தில் நோய் பரவாமல் இருக்கவும், குறவர்கள் வருமிடத்தில் நறுமணம் கமழவும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றதாம்.)
செவ்வரளிப் பூக்களை சிறிய சிறிய துண்டுகளாகத் தொடுத்து ஆங்காங்கே தொங்க விட்டிருக்கின்றார்கள். முருகனுக்கு பிடித்த சிகப்பு நிறமாக அந்த அலங்காரப் பகுதி மாறியிருக்கின்றது என்கின்றார்.
அடுத்த வரி இதோ.
“நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி”
இந்த வரிகளைக் கொஞ்சம் கவனமாக அதன் பின்புலத்தோடு பார்க்க வேண்டும்.
அந்த முருகப்பெருமான் இருக்கும் பழமுதிர்சோலை மலையில் நடக்கும் விழாவில், பல மலைகளில் இருந்து குறவர்கள் வருகின்றார்கள்.
அப்போது குறத்தி வந்து முருகனுக்கு பிடித்த குறிஞ்சிப் பண் பாடத் தொடங்குகின்றாள். அந்த மலை அருவியின் ஓசையினை “ஓம்” எனக் கொண்டு அவள் பாடத் தொடங்குகின்றாள்.
கூட்டம் பக்தி பரவசமாய் நிற்கின்றது, அவள் மெல்ல பாடிப் பாடி ஆடி வழிபாட்டை செய்பவள். முருகனுக்குரிய தெண்டகம் இசையினை அவள் வாசிக்கின்றாள். அப்போது மலர்களை தூவுகின்றாள். ரத்தம் கலந்த திணை அரிசியினை தூவுகின்றாள்.
திடீரென அவள் ஆவேசம் கொண்டவளாய் எழுந்து ஆடுகின்றாள். அவள் மேல் முருகப்பெருமான் இறங்கிவிட்டதை அறிந்த பக்தர்கள் “முருகா முருகா” என அலறி வீழ்கின்றார்கள்.
சிலர் அழுகின்றார்கள். சிலர் பரவசமாய் நிற்கின்றார்கள். சிலர் நறுமண புகையெழுப்பி வரவேற்கின்றார்கள். முருகப்பெருமானுக்கு கொம்புகள் ஊதப்படுகின்றன, பெரும் இசை எழுகின்றது.
அந்தக் குறத்தி தொடர்ந்து ஆவேசமாய் ஆடுகின்றாள்.
இதைக் கண்ட பக்தர்கள் பணிந்து வணங்க, தெய்வ நம்பிக்கை இல்லா சிலர் கூட முருகன் வந்துவிட்டான் என அஞ்சுகின்றார்கள்.
பொல்லாதவர்களுக்கு அச்சமூட்டும் நிகழ்வாக இது அமைகின்றது. தீயவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அங்கே ஆடிக் கொண்டிருக்கின்றான் முருகப்பெருமான்.
முருகப்பெருமான் வந்துவிட்டான் அவன் பிணிமுகம் எனும் யானைமேல் வந்துவிட்டான் என அந்த யானையினையும் வாழ்த்திப் பாடி வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் பக்தர்கள்.
இதுதான் அந்த வரிகளின் பொருள்.
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் இன்று நடக்கும் கிராம விழாக்கள், சிறுதெய்வம் என பலரால் தவறாகச் சொல்லப்படும் விழாக்களெல்லாம் முருகப்பெருமானின் அக்கால திருவிழாவின் தொடர்ச்சியாக இருப்பதை கவனிக்கலாம்.
முருகப்பெருமானே இங்கு எல்லா வடிவிலும் இருக்கின்றான். அவரவர் குலவழக்கப்படி அவனை கொண்டாடுகின்றார்கள்.
நக்கீரர் இந்த திருமுருகாற்றுப்படையில் மிக சூசகமாக ஒன்றை சுட்டிக் காட்டுகின்றார்.
ஒரே முருகப்பெருமானை ஒவ்வொருவரும் அவரவர் தொழில்படி அவரவர் வழமைபடி வணங்குகின்றார்கள். அவனும் அவர்களோடு வந்து அவர்கள் பக்திக்கு தலைவணங்கி ஏற்றுகொள்கின்றான்.
அவனை திருப்பரங்குன்றத்திலே தேவ மகளிர் வணங்குகின்றார்கள். பழனியிலே முனிவரும் ரிஷிகளும் வணங்குகின்றார்கள். அவன் ஏற்றுக் கொள்கின்றான்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் மீனவர்கள் கரையில் இருக்கின்றான். அவர்களும் வணங்குகின்றார்கள் ஏற்றுக் கொள்கின்றான்.
திருத்தணி மலையில் மக்கள் வணங்குகின்றார்கள் ஏற்றுக் கொள்கின்றான்.
சுவாமி மலையில் பிராமணர்கள் வேதம் சொல்லி வணங்குகின்றார்கள், மாமிசம் தொடாத பிராமணர்கள் அதிசுத்தம் பேணும் பிராமணர்கள் வழிபடுகின்றார்கள் ஏற்றுக் கொள்கின்றான்.
அப்படியான முருகன் குறவர்களிடத்தில், கொல்லும் தொழில் செய்வோரும் ரத்தம் சதை என எப்போதும் திரியும் வேடுவரான குறவர்களிடமும் வருகின்றான்.
அவன் இனம் கடந்த, குலம் கடந்தவன். அவன் யாராயினும் எத்தொழில் செய்தாலும் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அவன் பேதம் பார்ப்பதில்லை.
அவன் வேதம் படித்தோரிடமும் வருவான். ஒன்றுமே அறியாத பாமரர்கள் ரத்த பலியிட்டாலும் வருவான், எப்படி யார் அழைத்தாலும் அவர்கள் அழைப்புக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டு வந்து நிற்பான் எம்பெருமான் என்கின்றார் நக்கீரர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நடந்த அந்த முருகன் வெறியாட்டம்தான், அவன் பலியினை ஏற்று குறவர்களுக்கு அருள் புரிந்த அந்த காட்சிதான், பின்னாளில் அவர்கள் ஊர்களில் குடியேறும் போதும், காடுகளை ஊராக்கும் போதும் வழிபாடாக தொடர்ந்தது.
இன்று காணும் கருப்பண்ணசாமி, முனிஸ்வரன், சுடலை, அய்யனார் என்னும் காவல் தெய்வங்களும் முருகப்பெருமானே.
முதலில் எல்லாம் முருகப்பெருமானின் அம்சமாகவே இருந்திருக்கின்றது, முருகன் பெயராலே கொண்டாடப் பட்டது.
பின்னாளின் பவுத்த, சமண குழப்பங்களில் எல்லாம் மாறிற்று. ஆனாலும் அது மீட்டெடுக்கப்படும் போது முருகனின் பெயர்கள் பலவிதமாக மாறிவிட்டாலும் அவற்றின் கையில் வேல் இருப்பதும் ஈட்டி இருப்பதும் நக்கீரர் சொன்ன வழியிலே இன்றும் விழாக்களும் பலிகளும் நடப்பதும் இங்கு எல்லாமே முருகனே என்பதைச் சொல்கின்றது.
ஆம், இந்த காட்சிதான் தமிழகத்தில் சிறுதெய்வம் பெரும் தெய்வம் எனும் வேறுபாடெல்லாம் இல்லை. ஒரே முருகப்பெருமானை ஆளாளுக்கு காலவோட்டத்தில் ஒவ்வொரு பெயரில் அழைக்கின்றார்கள். மற்றபடி எல்லாம் அவனே என்பதைச் சொல்கின்றது.
அதற்கு சரித்திர சான்றாக இந்த வரிகளோடு நிற்கின்றார் நக்கீரர்.
(தொடரும்..)