காளிதாசனின் மேகதூதம் : 07
ஆறாம் பத்து ஸ்லோகங்கள்
“மேகமே, தசபுர பெண்களின் அழகினை கண்டு களித்தபின் உன் பயணத்தை வடக்கு நோக்கி தொடர்வாயாக, பிரஹ்மாவர்த்தம் எனும் புண்ணிய பூமியினை உன் நிழலால் கடப்பாயாக, ஏனென்றால் அது புண்ணிய பூமி அல்லவா?, பல அவதாரங்கள் இன்னும் அரூபியாய் வாழும் இடமல்லவா? அதனால் அங்கே கால் வைக்க கூடாது, அமைதியாக கடந்து சென்றுவிடு
அப்படி பணிவாய் அந்த பூமியினை கடந்தபின், பிரசித்தியானதும் தர்மம் மீட்கபட்டதும் கீதை உரைக்கபட்ட இடமுமான குருஷேத்திரத்தை அடைவாய், அங்கேதான் நீ உன் மழைதுளிகளால் தாமரைபூக்களை சிதறடிப்பதுபோல அர்ஜுனன் தன் எதிரிகளை நோக்கி தன் கூரிய அம்புகளை மழைபோய் எய்து சிதறடித்தான், தங்களுக்குள் மோதிய ஷத்ரிய குலம் நாசமாய் அழிந்ததை இன்றும் எடுத்துகாட்டும் அந்த குருஷேத்திரத்தை அடைவாய்
மேகமே, உன்னொரு விஷயம் சொல்கின்றேன் கேள், அந்த குருஷேத்திரத்தில் பாண்டவர்களும் கவுரவர்களும் மோதும்போது இருவருமே தனக்கு உறவினர்கள் என்பதால் அந்த சண்டையினை காணவிரும்பாத பலராமர் அவருக்கு விருப்பமான மதுராவினை விட்டு நீங்கி குருஷேத்திரத்தின் மேற்கு தொலைவுக்கு சென்று சரஸ்வதி நதியோரம் தங்கியிருந்து அந்நதியின் நீரால் தூய்மை பெற்றார், அதாவது இந்த போரின் அழிவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என தன் தூய்மையினை உறுதி செய்தார்
அழகான மேகமே, நீயும் அந்த சரஸ்வதி நதியோரம் சென்று உன்னை தூய்மை செய்துகொள் நீயும் நல்லோர் தீயொரெல்லாம் கடந்து வந்திருக்கின்றாய் அல்லவா? அதனால் உனக்கும் தூய்மை செய்தல் அவசியம்
மேகமே, நீ அந்த பலராமரை போல வெண்ணிறமானவன் அல்ல, கருப்பு நிறம் ஆனால் அது உனக்கு ஒரு குறையாகுமா? ஆகவே ஆகாது..
மேகமே, நீ குருஷேத்திரத்தை கண்ணார கண்டு கண்ணன் நடத்திகாட்டிய போர்காட்சிகளை பெருமூச்சுவிட்டபடி நினைந்து நகர்வாய் அப்போது கண்கலம் எனும் மலையினை அடைவாய், அதுதான் ஹிமாலயத்தில் இருந்து கங்காதேவி பாரத நாட்டிற்கு வருவதற்காக காலடி எடுத்துவைக்கும் முதல் இடமாகும்
அந்த கங்கை எப்படிபட்டவள்? ஸ்கர மன்னனின் அறுபதாயிரம் மகன்கள் சொர்க்கம் அடைய படிகளின் வரிசைபோல் இருந்தவள், ஜஹ்னு எனும் ராஜரிஷியால் மகளாக ஏற்றுகொள்ளபட்டவள், சிவபிரானின் தலையினால் தாங்கபட்டு அங்கே அமர்ந்திருக்கும் அவளை பார்வதி தேவி தன் ஸகளத்ரம் என கண்கள் புருவம் நெளிய நோக்குவாள்.
கங்கையோ சிவனிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்ட வெண்ணிற நுரையென சிரிப்பதன் மூலம் பார்வதியினை பரிகாசம் செய்வாள், அப்படியே தன் அலை எனும் கரங்களால் சிவனின் தலையில் இருக்கும் சந்திரனை பற்றி இழுத்து அதனால் அவரின் ஜடாமுடியினையும் பற்றி இழுப்பவள் போல் ஆட்டம்காட்டுவாள், அந்த அடங்காத கங்கையினை நீ அடைவாயாக.
மேகமே, திக்விஜம் என ஆகாயத்தை தாங்கும் யானைகள் பூமியில் இறங்காது, ஆனால் ஒருபக்கம் சரிந்து தன் துதிக்கையால் ஆற்று நீரை அருந்தும்,அப்படி நீயும் ஒரு பக்கம் சரிந்து கங்கையில் நீரை அருந்துவாய். அந்த அழகு கோலத்தில் கங்கையுடன் யமுனை கலந்துவிடும் பிராயகை இதுவோ என எல்லோரும் ஆச்சரியபடுவார்கள்
ஏன் தெரியுமா மேகமே, கங்கை வெண்மையானது, யமுனை கருப்பானது. பிராயாகையில் இரண்டும் கூடும்போதுதான் அந்த நீர் கருப்பாகும், ஆனால் உன் நிழல்பட்ட கங்கை கருமையாவதால் பிராயகை இதுவோ என மக்கள் ஆச்சரியபடுவார்கள்
மேகமே, இப்படி கங்கையின் நீரை பருகியபின் நீ ஹிமாலயம் அடைவாய். அங்கிருக்கும் மலை இடுக்குகளில் வாசமிக்க கஸ்தூரியினை தரும் கஸ்தூரிமான்கள் தங்கியிருக்கும் ,வற்றின் நாபியில் இருந்துவரும் கஸதூரி அங்கு படிந்து அந்த சூழலே மணம் மிகுந்ததாய் இருக்கும்
மேகமே ஹிமாலயம் சிவன் தங்கும் மலை, வெண்ணிறமான பனிமூடிய சிகரங்களை கொண்டது, அந்த வெண்ணிற சிகரங்களின் மேல் நீ கொஞ்சம் தங்கி இளைப்பாறுவாயாக, கரிய நிறம் கொண்ட நீ அந்த வெண்ணிற சிகரங்களில் இருக்கும்போது எப்படி இருப்பாய் என்றால், சிவனின் வாகனமான ரிஷபம் மண்ணை கொம்பால் கிளறும்போது அதன் கொம்பில் ஒட்டிகொள்ளும் கரிய மண்போல் காட்சியளிப்பாய்
மேகமே அந்த ஹிமாலயத்தில் கஸ்தூரி மான்கள் மட்டுமல்ல, சமாரம் எனும் வால் அடர்ந்த கவரிமான்களும் அதிகம், அந்த முடியில் இருந்துதான் சாமரம் செய்வார்கள் , அவ்வகை கவரிமான்கள் நிறைய அங்கு உலாவும்
அதே மலையில் சரளம் எனும் நீண்டு வளரும் மரங்கள் உண்டு, அவை நெருக்கமாக வளர்ந்திருக்கும், மலையில் வீசும் பலமிக்க காற்றால் அவை ஒன்றோடு ஒன்று உரசி தீ பிடிக்கும் , அந்த நெருப்பு இந்த மான்களின் வாலில், அடர்த்தியான வாலில் பற்றிவிடும்
அப்போது மேகமே நீ விரைந்து உன் மழைதுளியால் அதனை அணைத்து மான்களை காப்பாயாக, வறுமையால் வரும் பசிநெருப்பு செல்வர்களால் அணைக்கபடுவது போல, உன் பெரும் செல்வமான மழையால் மான்களின் துன்பத்தை போக்குவாயாக, செல்வத்தின் பயனே பிறர் துன்பத்தை போக்குவதல்லவா?
மேகமே, அந்த ஹிமாலயத்தில் சிங்கமும் யானையும் அஞ்சும் ஒரு மிருகம் உண்டு, சரபம் என அதற்கு பெயர், சிங்கத்தையும் யானையினையும் கொல்லும் அந்த கொடிய அந்த மிருகத்துக்கு எட்டு கால்கள் உண்டு
நீ இடி இடித்து கர்ஜிக்கும் போது சிங்கம் வந்துவிட்டதென அந்த சரபம் உன்மேல் பாய்ந்து தாக்க முனையும், ஆனால் உன் உயரம் எட்டாததால் அது பாறைகளில் மோதி அவயம் உடைந்து கிடக்கும், அப்போது நீ கல் போன்ற ஆலங்கட்டிகளை வீசிவிடு
மேகமே, யாராலும் கொல்லமுடியாத அதனை நீ ஆலங்கட்டிகளை வீசி தாக்கு, அது நாலாபுறமும் சிதறி ஓடும்படி பலமாக தாக்கிவிடு. அற்பமும் பலனற்ற காரியங்களை செய்பவர்களை விரட்டி அடிப்பது போல் அடித்துவிடு
வாய்ப்ப்பை நழுவ விடாதே…
மேகமே, நீ பரோகோபகாரி எல்லோருக்கும் நன்மை செய்கின்றாய், துஷ்டருக்கு தண்டனை தருகின்றாய் அப்படியான குணம் கொண்ட நீ உன் ஆத்துமஷேமத்துக்காய் ஒரு காரியம் செய்தாக வேண்டும்
சிவபெருமான் எல்லையற்ற கருணை கொண்டவர், அவர் தன் அளப்பரிய கருணையால் தன் பாதங்களை அந்த மலையில் பதித்து எல்லோரும் தன் பாதம் கண்டு வழிபட வகை செய்திருக்கின்றார், அந்த திருபாத சுவடுகளை எப்போதும் சித்தர்களும், யோகிகளும் பூஜித்து கொண்டே இருப்பார்கள்
மேகமே, நீ அந்த திருபாதசுவடுகளை பிரதட்சணம் செய், அந்த பாதசுவடுகளை வணங்குவோர்க்கு கயிலாயத்தில் பூதகணமாகும் வாய்ப்பு கிடைக்கும் , அப்படியானால் உனக்கு எவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்கும் என்பதை யோசித்துபார், அந்த திருபாதங்களை உன்னால் முடிந்த அளவு பிரதட்சணம் செய்து வணங்கு
மேகமே, அந்த திருப்பாத சுவடுகள் பக்கம் நிறைய மூங்கில்கள் உண்டு, வண்டுகள் துளைத்த அவைகளின் துளையில் காற்று நுழைந்து வெளியேறும் போது இனிய ஓசை உண்டாகும், அந்த குழலோசை நீண்டு ஒலிக்கையில் மனம் உருகும் கிண்ணர பெண்கள் திரிபுரசம்ஹாரம் செய்த சிவனை புகழ்ந்துபாடுவார்கள்
நீ அப்போது உன் இடியோசையினை எழுப்பு, அது மலைகளின் சரிவுகளில் பெரும் பள்ளங்களில் இன்னும் குகைகளில்லாம் பட்டு எதிரொலிக்கும் போது இனிய மிருதங்க ஒலிப்ப்ல் கேட்கும்
அது மூங்கிலில் காற்று எழுப்பும் சுருதி, கிண்ணர பெண்கள் இசைக்கும் பாடல் ஆகிய இரண்டுக்கும் பொருத்தமான தாளமாக அமையும்
சுருதி, பாடல், தாளம் இணைந்த அந்த சங்கீதம் சிவனுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும், அதனால் நீ சிவனின் பெரும் அருளையும் பெற்றுகொள்வாய்
மேகமே, நீ அடுத்து மானஸரோவம் செல்லவேண்டும், அந்த மலைமுகட்டில் அதற்கான பாதை தெரியாமல் நீ தடுமாறுவாய் ஆனால் அஞ்சாதே, அந்த மழைகாலத்தில் எல்லா பக்கமும் கலங்கிய நீர் வருவதால் சுத்தமான நீரை தேடி அன்னபறவைகள் மானசரோவம் நோக்கி செல்லும், நீ அவைகள் பின்னால் சென்றால் அந்த மானசரோவத்தை அடையலாம்
மேகமே, அங்கு செல்ல பெரும் மலைகள் தடையாய் இருக்கும் ஆனால் பரசுராமன் அன்றே ஒரு மலைவழிபாதையினை உருவாக்கியிருக்கின்றார், கிரவுஞ்ச மலை பிளவு வழியே அது செல்லும், அன்னபறவைகள் அவ்வழி செல்லும் போது நீயும் செல்லகடவாய்
அது குறுகிய பாதை என்பதால் நீயும் உன் உடலை குறுக்கி நீளவாக்கில் நீட்டி கடந்து செல்வாய், உன் கரிய மேனியுடன் நீ அப்படி நீண்டு குறுகி செல்லும்போது கருத்த நிறம் கொண்டஉண்ணை காணுகையில் மகாபலி மன்னன் மேல் தன் காலை வைக்க வந்த திருமாலின் பாதம் போலவே தெரியும்.
மேகமே, நீ அன்னபறவைகளை பின்னால் சென்று கிரவுஞ்ச பாதை வழியாக மானசரோவத்தை அடைவாய், அது ஆம்பல் மலர்களை குவித்து வைத்தது போன்ற அழகான வெள்ளை மலைசிகரங்களை அங்கே காண்பாய்
சிவனின் குளிர்ந்த மனமெல்லாம் குவிந்து கிடப்பது போல் அந்த மலை பனியாலும் குளிராலும் வெண்மையாக காட்சியளிக்கும்
மேகமே அந்த வெண்பளிங்கு மலை எப்படியானது என்றால் வானலோகத்திலிருக்கும் அழகான அப்சரஸ்கள் தங்கள் முகத்தை பார்த்துகொள்ளும் கண்ணாடிபோல விளங்கும், மிக அழகான ஒப்பனையும் பேரழகும் கொண்ட அப்பெண்களின் பெரும் அழகை காட்டும் பிரமாண்ட கண்ணாடி போல அந்த காட்சி தெரியும்
மேகமே, அந்த பனிசிகரங்களில் சிறிய பிளவுகளை நீ காண்பாய், அது என்ன தெரியுமா? முன்பு ஆயிரம் கைகளை கொண்ட ராவணன் கைலாயத்தை பெயர்த்தெடுக்க முயன்றபோது ஏற்பட்ட அசைவில் உண்டான பிளவுபோல் இருக்கும் , அது ராவணன் கைலாயத்தை அசைக்க முயன்று தோற்றோடிய காட்சியினை உனக்கு நினைவுபடுத்தும்..
மேகமே இப்படியான மான்சரோவரில் மகா புனிதமான மலையில் நீ நிற்கும் பேற்றினை பெற்றுவிடுவதால் அங்கே அந்த அருளை பெரும்பொருட்டு கொஞ்சம் பணிந்து நிற்ககடவாய், புனிதமும் பேரழகும் கொண்ட அந்த மானசரோவத்தில் நீ நினைவற்று கிடக்கக் கடவாய்..”
(தொடரும்…)