காளிதாசனின் மேகதூதம் : 13
பன்னிரெண்டாம் பத்து ஸ்லோகங்கள்
“அன்பே, ஹிமாலயத்தில் இருந்து தெற்கே வரும் குளிர்ந்த காற்று நான் இருக்குமிடமும் வருகின்றது, அக்காற்று ஹிமாலயத்தின் தேவதாரு மரங்களின் தளிர்களை தொட்டு வரும், அப்போது அந்த மரங்களில் வடியும் பாலின் இனிமையான மணம் அதில் கலந்திருக்கும்
அந்த இனிமையான மணத்தினை கொண்டு அக்காற்று ஹிமாலயத்தில் இருந்து வருவதை உறுதி செய்து கொள்கின்றேன், என் அன்பிற்கு எக்காலமும் உகந்த காதலியான உன்னயும் அக்காற்று தழுவி வந்திருக்கும் என்பதால் அக்காற்றை ஆசையாய் தழுவுகின்றேன்
என் அன்பே, வறண்ட நிலத்தில் மழைபொழியும் போது ஒரு வாசம் எழும், அப்படி நான் உன்னை ஆசையுடன் தழுவும் போது உன்னிடமிருந்தும் ஒரு வாசம் உன் முகத்திலும் உண்டு
அப்படியான மணத்தை அனுபவிக்கமுடியாமல் இங்கே தனித்து சிக்கி கிடக்கின்றேன், மன்மதன் என்னை அப்படி துன்புறுத்தும் காலத்தில் மழைக்காலம் வேறு வந்துவிட்டது
வானில் எங்கும் மழைமேகங்கள் எழுந்து சூரியனை மறைக்க தொடங்கிவிட்டது, எல்லா உயிரும் துணை தேடும் இக்காலத்தின் நாட்கள் எனக்கு மட்டும் வருத்தத்தை தருகின்றன, அப்படி ஒரு பரிதாப கஷ்டம் எனக்கு நேர்ந்துவிட்டது
என் காதலியே, இப்போது சாமங்கள் நீள்கின்றன அதனால் இரவும் நீண்டுவிடுகின்றது, அந்த இரவில் உன் நினைவு என்னை வாட்டுவதால் அந்த இரவை ஒரு நொடியாக மாற்றமுடியுமா என சிந்திக்கின்றேன், பகலோ கடும் வெப்பமாக உள்ளது, அதை எப்படி குளிர்விப்பது என்றும் யோசிக்கின்றேன்
இதெல்லாம் சாத்தியமானது அல்ல தான், உன் நினைவினை கூட்டும் நீண்ட இரவினை நொடியாக்குவதும், பகலில் ஏதேனும் வேலை செய்தால் உன் நினைவினை குறைக்கலாம் என்றால் அதை தடுக்கும் வெப்பத்தை குறைப்பதும் முடியாதுதான்
ஆனால் என் அன்பே, இப்படி சிந்திப்பதால் எப்போதும் என் நெஞ்சில் வலிக்கும் உன் நினைவுகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசமடைய முயல்கின்றேன் ,முடியவில்லை
அன்பே, எனக்கு இங்கு ஆறுதல் எவருமில்லை ஆனால் இந்த சாப நாட்களுக்கு பின் நாம் கூடி அடையபோகும் பலவகை இன்பங்களை எண்ணி ஆறுதல் அடைகின்றேன், உனக்காக நான் வாழ்கின்றேன்
நீயும் இப்போதுள்ள கஷ்டத்தை நினைத்து பயம் கொள்ளாதே, எனக்காகவும் நீ வாழவேண்டும்
கால சக்கரம் சுழலும் போது இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும், நிரந்தரமான இன்பமோ தீரா துன்பமோ யாருக்குமில்லை என்பதை அறிந்தவள் நீ.
அன்பே, நாம் மீண்டும் எப்போது சேருவோம் என்பதையும் சொல்கின்றேன் கேள், கார்த்திகை மாத முதல் ஏகாதசியன்று விஷ்ணு தன் பாம்புபடுகையில் இருந்து எழும்பொது என் சாபம் முடிவுக்கு வரும். அதனால் கண்ணைமூடி இந்த நான்கு மாதங்களையும் பொறுத்துக்கொள்
அதன்பின் நான் அங்கு வந்துவிடுவேன், நான் வரும் காலம் வசந்தகால தொடக்கமாய் இருக்கும், அப்போது மேகங்கள் இல்லா இரவினை நிலவின் நல்ல வெளிச்சத்துடன் காணலாம், அந்த இரவுகளில் நம் இன்பமயமான பொழுதுகளை வகை வகையான இன்பத்தோடு பன்மடங்கு பெறலாம்
அவனின் செய்திகளை இப்படி சொன்ன மேகம், மீண்டும் சொல்கின்றது
“அபலை பெண்ணே, இதையெல்லாம் உன்னிடம் கூற சொன்ன உன் அன்பான காதலன், அதன் பின் உங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த ரகசியமொன்றை சொல்ல சொன்னான். அப்படி சொல்லி மேலும் அடையாளபடுத்த சொன்னான்
அபலையே நீ அவனோடு கூடி களித்தபின் அவர் கழுத்தை கட்டிகொண்டே தளர்ச்சியில் உறங்கிவிடுவாயாம், பின் திடீரென தூக்கத்தில் எழும்பி அழதொடங்குவாயாம் , பலமுறை அவன் காரணம் கேட்டபின்னும் சொல்லாமல் அழுதுவிட்டு கடைசியில் கனவில் அவன் இன்னொரு பெண்ணோரு சிநேகித்தான் அது தாளாமல் அழுததாக சொல்வாயாம்
உங்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்த இந்த ரகசியத்தை சொல்லி அவன் தன் செய்தியினை உறுதிபடுத்த சொன்னான்
பெண்ணே இன்னும் அவன் சொன்னதை சொல்கின்றேன் கேள்
“கருத்த கண்களை உடைய அழகியே, நான் வாய்மொழியாக மேகத்திடம் சொல்லி அனுப்பிய செய்திகளை கேட்டு நான் நலமுடன் இருப்பதையும், உன்னை சந்திக்கும் நாளை எதிர்பார்த்து வாழ்வதையும் உறுதியாக அறிந்துக்கொள்
சிலர் நான் இறந்துவிட்டேன் என்பார்கள், சிலரோ இன்னொருத்தியுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் என்பார்கள் இந்த ஜனவதந்தியினை நம்பாதே
பிரிந்தால் அன்பு குறையும் உறவு அழியும் என்பார்கள் அதையும் நம்பாதே. பிரிந்த பொழுதில்தான் ஏக்கம் மிகுந்து அன்பு என்பது மிகபெரிய குவியலாக உருவெடுத்து அனுபவிக்க காத்து கொண்டிருக்கும”
மேகமே, இப்படி நான் சொன்ன எல்லாவற்றையும் என் காதலியும் உன் தோழியுமான அவளிடம் சொல்லிவிடு, இதுவே நான் அவளை பிரிந்த முதல் தருணம். ஆறுதலற்று இருக்கும் அவளிடம் நான் சொன்னதையெல்லாம் சொல்லி ஆறுதல்படுத்து
கயிலாயம் சென்று திரும்பும் நீ அவள் சொன்ன செய்தியினை என்னிடம் வந்து சொல், அவள் சொன்ன அடையாளங்களோடு சொல்
அப்படியே காலை வேளையில் கொடியின் காம்பில் சோர்ந்திருக்கும் மல்லிகை மலர்போல் இருக்கும் என் உயிரையும் காப்பாற்று
என் அன்பான நண்பனான மேகமே, நல்லவனே, உன் நண்பனுக்கு இந்த உதவியினை நீ செய்வாயா? இப்பணியினை ஏற்றுகொள்கின்றாயா?
செய்கிறேன் என நீ பதில் சொல்லவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை, ஆம் செய்கிறேன் எனும் பதிலில் இருந்துதான் உன் பெருந்தன்மையினை அறிந்துகொள்ள வேண்டும் என்பதுமில்லை
உன் சுபாவத்தை உலகத்தார் போல நானும் அறிந்திருக்கின்றேன், உலகில் மக்களை கேட்டுகொண்டா நீ அவர்களை வாழவைக்கின்றாய்?
சாதகபறவைகள் உன்னிடம் நீர் வேண்டி பறக்கும் போது நீ இதோ தருகின்றேன் என கர்ஜித்து கொடுப்பதில்லை, அமைதியாக கொடுப்பாய்
பெரியோர்கள் தம்மிடம் ஒருவன் ஒன்றைவேண்டினால் உடனே மறுபேச்சில்லாமல் கொடுப்பார்கள், அது அவர்கள் இயல்பு, நீயும் பெருந்தன்மையான பெரியோர்கள் வரிசை என்பதால் என் கோரிக்கையினை நீ ஏற்றுகொண்டதாக கருதுகின்றேன்
மேகமே, உன் மவுனமே என் கோரிக்கையினை நீ ஏற்றுகொண்டுவிட்டாய் , இந்த உதவியினை உடனே செய்வாய் என்பதை காட்டுகின்றது
மேகமே பிரதிபலன் கருதாதவனே, நீ என்னிடம் கொண்ட நட்பினாலோ, நான் அவளை பிரிந்திருக்கும் துயரம் அறிந்ததாலோ, என் நிலைகண்ட இரக்கத்தாலோ உன் தகுதிக்கு பொருந்தாதாயினும் உன்னை நிர்பந்திக்கின்ற எனக்காக இந்த வேண்டுகோளை செய்வாய்
இதை செய்தபின் உன் அழகு இன்னும் விருத்தியாகும், நீ விரும்பிய தேசமெல்லாம் சஞ்சாரம் செய்வாய்,
என் நண்பனே, பரோபகாரியே. நான் என் காதலியினை விட்டு பிரிந்திருப்பது போல நீ உன் காதலியான அழகிய மின்னலை ஒரு நொடி கூட பிரிந்திருக்க கூடாது என்பதுதான் என் பிரார்த்தனை, அன்புகுரியவரின் பிரிவு அவ்வளவு கொடியது அது உனக்கு வரகூடாது.
(முற்றும்.)