காளிதாசனின் சாகுந்தலம் – 01
முன்னுரை
காளிதாசனின் மேகதூதம் கடந்த பதிவிலே முடிவு பெற்றுவிட்டது என்பதை தெரிவிக்கின்றோம்.
காளிதாசன் மேகத்திடம் தன் காதலி இருக்குமிடத்தையும் அதை அடையும் வழியினையும் சொல்லி அவளுக்கு சொல்லவேண்டிய செய்தியும் சொல்லி காவியத்தினை முடிக்கின்றார் காளிதாசர்.
அது மேகத்தின் வழி அழகான வர்ணனையுடன் பாரத தேசத்தின் வடபகுதியின் அழகைச் சொன்ன காவியம்.
வட பாரத மலைகள், நதிகள், நாடுகள் அப்படியே ஆலயங்கள், பண்டிகைகள், ஊர்கள் எனச் சொல்லி கயிலாயம் பற்றிச் சொல்லி மிக அற்புதமாக பாரதத்தை படம் பிடித்துக் காட்டியிருந்தான் காளிதாசன்.
ஒரு மேகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு நுணுக்கமாக எழுதமுடியுமா என்றால் அவனால்தான் முடியும்.
நாம் ஓரளவு அல்ல மிகக் குறைவாகத்தான் அவனின் வரிகளைச் சொன்னோம். அது இன்னும் ஆழமானது. காலம், பருவம், மக்கள் வாழ்வு, நதிவளம், ஆலய நுணுக்கம், நாட்டின் பெருமை என மிக மிகக் கூர்ந்த கவனத்தோடு அவன் அதனை படைத்திருந்தான்.
மேகம் ஒன்று ராமகிரியில் இருந்து கிளம்பி இமயமலைமேல் இருக்கும் அலகாபுரியினை அடைவதுதான் ஒரு வரிக் கதை. அந்த மேகத்திடம் காதலியினைப் பிரிந்த காதலன் தன் நிலை சொல்லி அவளிடம் சேதி சொல்லும் படிச்சொல்லி பல விஷயங்களை நுணுக்கமான வர்ணனையுடன் சொன்னான் காளிதாசன்.
அந்த விசாலமான பார்வையும் மிக நுணுக்கமான வர்ணனைகளும் அவனைத் தவிர யாருக்கும் வராது. அது காளியின் அருள் இல்லாமல் சாத்தியமே இல்லை.
அந்த மகாகவிஞன் உலக இலக்கியத்தின் முன்னோடி, உலக இலக்கிய ஆலயத்தினை அவனே கட்டி தெய்வமாக அமர்ந்தான்.
கிரேக்க கவிஞனோ, ஐரொப்பிய ஷேக்ஸ்பியரோ அவன் காலடிக்கு கூட வரமுடியாது. அவனே எந்நாளும் கவிச் சூரியன்.
அவ்வகையில் ஒவ்வொரு இந்தியனும் இந்துவும் அவனில் பெருமை அடையவேண்டும்.
இன்றைய தமிழக குப்பைகளை, கழுதைகூட தின்னத் தயங்கும் காகிதங்களை வைத்துக் கொண்டு நானே இலக்கியவாதி எனச் சொல்பவர்கள் வாழும் தமிழுலகிற்கு அந்த ஞானப்பறவை அதிகம் தெரியாது.
ஆனால் அவன் பல்லாயிரம்காலம் கடந்து நிற்கின்றான். இன்னமும் நிற்பான் எனும்பொது, இந்த இலக்கிய இம்சைகளின் கிறுக்கல்கள் சில நாட்களுக்கு பின்னர் கூட யாரும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். ஒரு தலைமுறைக்கு கூட இந்த அரைகுறை எழுத்து நில்லாது எனும்போதுதான் அவன் அருமை தெரியும்.
ஆம், இன்றுள்ள தமிழக இலக்கியவாதிகளில் பலர் இலக்கிய கோமாளிகள். ஆனால் அவர்களெல்லாம் பெரிய பிம்பம்போல் காட்டப்பட்டதில் அரசியலும் இந்திய துவேஷ சக்திகளின் கரங்களும் உண்டு.
இந்தியாவின் அரசியல் ஊடகம் மட்டுமல்ல இலக்கியமும் அந்நியப் பிடியில்தான் உண்டு. அதுதான் இலக்கியம் என நம்பும் மனநோயும் பெருகிவிட்டது.
காளிதாசன் அந்த வகை அல்ல, அவன் ஞானக் கவிஞன்.
அவனின் காவியங்கள் வெறும் வர்ணனை அல்ல, வெறும் பெண்களின் வர்ணனை அல்ல, அது ஒரு ஆன்மா பரமாத்மாவினை நோக்கி ஏங்கும் வகை.
ஆண்டாள் பாடல்களுக்கு அவனே முன்னோடி.
தெய்வநிலையில் இருந்து வீழ்ந்த ஆன்மா மீண்டும் தெய்வநிலைக்கு ஏங்கி நிற்கும் கோலம்தான் அவன் காவியங்கள், அவன் கையாளும் அடிப்படை தத்துவம் அதுதான்.
பரம்பொருளில் இருந்து வீழும் ஜீவாத்மா மீண்டும் பரமாத்மாவோடு இணைய இயங்கும் ஏக்கமே அவன் காவியம்.
அவன் வேதங்களிலும் புராணங்களிலும் இருந்தே வரிகளை எடுத்து அதை கவிச்சிற்பமாய் செதுக்கினான்.
அப்படிபட்டவனின் மேகதூதத்தை கண்டோம், அடுத்து சாகுந்தலையினை பார்க்கலாம் என்றிருக்கின்றோம்.
மிக மிக அழகான வர்ணனையும், மிக அழகான உதாரணங்களும், மிகத் தேர்ந்த காதல் காட்சியும், அற்புதமான உவமைகளும் மானிட உண்மைகளும் கொண்ட காவியம் அது.
அதனை அவ்வப்போது பார்க்கலாம். அவன் காவியங்கலில் கரைந்திருப்பது போல நிறைவும் ஏகாந்தமும் வேறேதும் இருப்பதில்லை, அன்னை காளி அவன் எழுத்தில் எக்காலமும் வாசம் செய்கின்றாள்.
(தொடரும்…)