காளிதாசனின் சாகுந்தலம் : 02
அன்னை காளியின் புகழ்போல் மிகவும் பெரிதாகப் படர்ந்து உயர்ந்திருந்த ஹிமாலய மலை அது. அதன் உச்சியில் வெள்ளியினை உருக்கி ஊற்றி வைத்தது போல் பனிச் சிகரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.
சூரியக்கதிர்கள் பட்டு அந்த மலைச்சிகரம் தங்கமாகவும் நவமணிகளாகவும் மாயமால ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.
பச்சை வர்ண புடவையினை சாற்றியது போல் மலை எங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. அமுதத்தை ஊற்றியது போல அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. அந்த மலையின் எல்லா வளங்களையும் தான் சுமந்து மக்களுக்கு கொடுப்பதற்காக வார்த்தையால் விவரிக்க முடியாத பெருமை மிக்க கங்கை ஓடிக் கொண்டிருந்தது.
அந்த இமாலயத்தின் அடிவாரத்தில் தேர் ஓடிக்கொண்டிருந்தது. இரு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் துஷ்யந்த மகாராஜா அமர்ந்திருந்தான். காட்டின் பாதையில் அந்த தேர் ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு மானைக் கண்டதும் துஷ்யந்தன் புன்னகைத்தான். வில்லெடுத்து கணைபொருத்தி ஏறெடுக்குமுன் மான் ஓட ஆரம்பித்தது, தேர் அதனை பின் தொடர்ந்தது.
ஏழு உலகத்தையும் வெல்லச் சென்ற சிவன் தன் பினாகம் எனும் வில்லை ஏந்தி கம்பீரமாகச் சென்றதுபோல் அமர்ந்திருந்து தேரோட்டியிடம் மானை விரட்டச் சொன்னான் துஷ்யந்தன்.
ஆனால் மான் போக்கு காட்டிற்று, ஆட்டம் காட்டிற்று. அதுகண்டு துஷ்யந்தன் சொன்னான்.
“தேரோட்டியே, நமக்கு போக்கு காட்டி ஓடும் அந்த மானை விடாதே, அது நம்மை பரிகசிப்பதைப் பார். நம்முன் ஓடுகின்றது. ஆனால் தப்பி மறைந்து விடவில்லை.
ஓடிச் சென்று முன்னால் நின்று கழுத்தை திருப்பி நம்மை பார்க்கின்றது. அதன் வாயில் கடித்த பாதி புல்லை வைத்துக் கொண்டு கனைக்கின்றது. எப்படி நம்மைச் சீண்டி ஓடுகின்றது பார்.
அதன் தொடை தசைகள் சுருங்கி விரிந்து துடிக்கின்றன. அது மான் தயார் நிலையில் இருப்பதைச் சொல்கின்றது. அது தப்பி ஓடவில்லை. மேய்ந்து கொண்டே ஓடுகின்றது. அச்சமின்றி ஓடுவதை, போக்கு காட்டுவதைப் பார்.
அது நிலத்திலும் வானிலும் துள்ளித் துள்ளி ஓடுவதைப் பார். இந்த நிலமகள் உடுத்தும் ஆடையான நீலக்கடல், நல்ல அறம் அறிந்தோர் மனம் போல பரந்த நீலக்கடல், புயல் காலத்தில் அலைகழிக்கப்படுவது போல நம்மை அலைக்கழிக்கும் அந்த மானைப் பார்.
இதையெல்லாம் பார்த்த பின்புமா குதிரையினை நீ வேகமாக செலுத்தவில்லை?”
தேர்பாகன் சொன்னான்.
“மன்னிக்க வேண்டும் மன்னா. பொல்லா குணம் கொண்டவர் மனம் போல் இந்த பாதை கரடுமுரடாக உள்ளது. அதனால் மிக்கச் சினம் கொண்டோர் தன் மனதைக் கட்டுப்படுத்தி சினம் தணிப்பதுபோல் குதிரைகளின் கடிவாளம் இழுத்து வேகம் குறைத்தேன்.
இனி பாதை சரியாக அமைந்திருப்பதால் நான் கடிவாளத்தை தளர்த்துவேன், வந்த பாதையால் எழுந்த தடங்கல் இது. இனி எல்லாம் வேகமாகும். அந்த மானும் உங்கள் வசமாகும், இயற்கையால் தேர் வேகம் குறைந்ததன்றி என்னால் அல்ல” என்றவன் கடிவாளத்தை தளர்த்தினான்.
அந்நொடி அந்த குதிரைகள் வேட்டை நாய்போல் பாய்ந்தன. ராமபிரானின் அம்புபோல் சீறிச் சென்றன.
குதிரைகள் உடலை முன்னால் நீட்டி ஓடிய அந்த வேகத்துக்கு அதன் குளம்புகள் தாளத்தை தப்பாமல் எழுப்பியபடி ஓடின, நேராக ஓடின.
குதிரையின் பிடரி முடி அசையாமல் நிற்பதுபோல் தோன்றிய காட்சியில் ஓடின, அவ்வளவு வேகமாக ஓடின.
குதிரையின் கால்கள் எழுப்பும் புழுதி தேரில் படாத அளவு வேகமாய் ஓடின.
பினாகம் வில்லை ஏந்திய சிவனைப் போல் துஷ்யந்தன் அமர்ந்திருந்த அந்த தேர் இந்திரனின் தேர் போல, கதிரவனின் தேர் போல பாய்ந்து சென்றது.
அவன் முன்பு தொலைவில் புள்ளியாய் தெரிந்ததெல்லாம் சட்டென அவன் கண்முன் பிரம்மாண்டமாய் தெரிந்து பின் நொடியில் மறைந்தது.
வளைவுகளோ, பாதை சந்திப்போ எதுவுமே அவன் அறியாதபடி நேர்கோடு போன்ற பாதையில் செல்வதுபோல் தேர் சென்றது. எதுவுமே தொலைவிலில்லை எல்லாமே கண்முன் என்பதுபோல் வேகமாய் சென்றது.
அந்த வேகத்தில் மானைத் தேர் நெருங்கிற்று. அம்பினை வில்லில் பொருத்தி அவன் மான்மேல் ஏவிவிட நாணை தொட்ட நேரம் குரல் ஒன்று ஒலித்தது.
“அந்த மானைக் கொல்லாதீர்கள், கொல்லாதீர்கள். அது காட்டுமான் அல்ல. இங்கிருக்கும் முனிவர்க்கு சொந்தமான மான், அதைக் கொல்வது பாவம்”
துஷ்யந்தன் யார் என நோக்கும் போதே மானுக்கும் தேருக்கும் இடையே கைகளை தூக்கியபடி வந்தனர் இரு முனிவர்கள்.
துஷ்யந்தன் பாகன் தோளைத் தொட்டான். பாகன் கடிவாளத்தை இறுக்கினான் தேர் நின்றது.
முனிவர்கள் சொன்னார்கள் “மன்னா, இந்த மான் எங்கள் ஆசிரமத்திற்கு உரிய மான். எங்கோ வழிதவறி சென்றது. திரும்ப ஓடிவந்தபோது நீங்கள் அதை காட்டுமானாக துரத்தி இங்கே வந்துவிட்டீர்கள்.
இது கொல்லக்கூடிய மான் அல்ல.
மலர்குவியல் மேல் தீ பந்தம் வைப்பாருண்டோ? அழகான இளங்கொடிமேல் மின்னல் தாக்குவதா? அது தகாதது அல்லவா?
மிகுந்த ஆற்றலும் செல்வாக்கும் அறமும் கொண்ட மன்னருக்கு இது பொருந்தா செயல்தானே? மன்னன் கொடியவர்களை அழித்து குடிகாக்க வேண்டுமே அன்றி குற்றமில்லாதவரை அவனே அழிக்கலாமா?” எனச் சொல்லி பணிந்தனர்.
“துறவியரே, இனி நான் அதனை கொல்ல மாட்டேன். அறியாமல் செய்ய முயன்றேன். மன்னிப்பீர்” என்றபடி வில்லை தளர்த்தினான் துஷ்யந்தன்.
மகிழ்ந்த முனிவர்கள் சொன்னார்கள் “கெடுதலில்லா மன்னவனே, நல்ல குருவினால் வளர்க்கப்பட்டவனே, கீர்த்தியுள்ள மன்னனே நீ வாழ்வாயாக.
உன் இரக்கமான இந்த செய்கை உன் குலத்திற்கே பெருமை சேர்க்கும். எங்கள் குரலுக்கு செவி சாய்த்ததால் நீ அறம் செய்தவனாவாய். பெருவாழ்வு வாழ்வாய்.
இந்த மான் மேல் இரக்கம் காட்டிய உனக்கு நல்ல மகன் பிறப்பான். அவன் அகிலத்தையே ஆளுவான். அவனால் நீ புகழடைவாய்.
இந்த உயிர்க்கு நீ செய்த புண்ணியம் உனக்கு மகனாய் வந்து உயர்த்தட்டும்” என அவனுக்கு கை உயர்த்தி ஆசி வழங்கினார்கள்.
“தவமிக்க அந்தணரின் வாழ்த்துதானே ஒரு மன்னனை செழிப்பாக்கும்” என்றபடி வணங்கிய கரங்களுடன் ஆசியினை பெற்றுக்கொண்ட துஷ்யந்தன் “துறவிகளே, நான் ஓய்வெடுக்க இங்கு வழியுண்டோ?” எனக் கேட்டான்.
துறவியர் சொன்னார்கள்.
“மன்னா நாங்கள் யாகத்துக்கு விறகு சேகரிக்கச் செல்கின்றோம். நீங்கள் சற்று நடந்தால் அழகான மாலினி ஆறு வரும். அதன் அழகிய தோள்கள் போன்ற கரையில் அந்த நதிபெண்ணின் அழகிய தோள்கள் போன்ற கரையில் கண்வ முனிவரின் ஆசிரமம் உண்டு.
அங்கே நீங்கள் சென்று இளைப்பாறலாம். பணிவிடைகள் உண்டு. விரும்பினால் தங்கிவிட்டு கூடச் செல்லலாம்.
களத்தில் வில்லை பூட்டி திசையெங்கும் மேகமாய் பொழியும் உங்கள் பராக்கிர பெருமையின் கதைகளை எங்கள் ஆஸ்ரமமும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அப்படியே எங்கள் நோன்பு தவத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்” என்றார்கள்.
“கண்வ முனி அங்கே இருக்கின்றாரா? அவர் பெயரைக் கேட்டதும் என் உள்ளம் அவரை சந்திக்கச் சொல்கின்றது” என்றான் துஷ்யந்தன்.
முனிவர்கள் சொன்னார்கள் “மன்னா அவர் தற்சமயம் அங்கே இல்லை. ஆனால் அங்கே வருவோரை உபசரிக்க அவர் மகள் சகுந்தலை அங்கேதான் இருக்கின்றாள். உபசரணை செய்வதில் அவளை மிஞ்ச யாருமில்லை.
அவள் உங்களுக்கு உணவிட்டு பணிவிடை செய்வாள், தயங்க வேண்டாம்.
எங்கள் குரு கண்வமுனி கத்தியவார்க்கு சோம தீர்த்தத்தில் நீராடச் சென்றிருக்கின்றார். அங்கே முன்பு சந்திரன் வந்து தன் கர்மவினை தீர நீராடி சாபம் நீங்கினான்.
அப்படி சகுந்தலை பெற்ற சாபங்களை, இனி அவள் எதிர்காலத்தில் எதுவும் தீவினைப் பெறுவதாக இருந்தால் அதனையும் சேர்த்து அதனை தீயில் பொசுக்கச் சென்றிருக்கின்றார். கர்ம நெருப்பினை குளிர்ந்த நீரால் அணைக்கச் சென்றிருக்கின்றார், அவர் வர சில காலமாகும்.
நீங்கள் ஆசிரமம் செல்லுங்கள். அங்கே சகுந்தலை இருப்பாள். அழகே உருவான அவளின் பணிவிடையில் நீங்கள் களைப்பு நீங்கி மகிழ்ச்சியடைவீர்கள்” என்றனர்.
“முனிவர்களே, ஓவியம் போன்ற அவளை நான் காணச் செல்கின்றேன். நான் அவளிடம் முனிவர்களுக்கும் துறவியருக்கும் சகாயம் செய்யும் ஆட்சியினை நான் நடத்தும் விதத்தை சொல்கின்றேன், அவள் அதனை பின்னர் முனிவரிடம் சொல்லட்டும்.
நான் இங்கு வந்து சென்றதன் அடையாளமாக இந்த குடிலுக்கு ஏதும் செய்ய விரும்புகின்றேன், இறைவன் அதற்கு துணையிருக்கட்டும்.”
முனிவர்கள் விடைபெற அந்த கண்வ முனிவரின் ஆசிரமம் நோக்கி தேரில் சென்றவன் அதை தொலைவில் கண்டதும் தேரை நிறுத்தினான். பின் தேரில் இருந்து இறங்கி தன் அரசக் கோலம் ஆயுதக் கோலம் எல்லாம் களைந்து ஒரு சாதாரண மனிதன் கோலத்தில் நின்று சொன்னான்.
“பாகனே, மிகப் பெரியதும் முடிவில்லாததும் தூயதுமான முக்தி நிலைக்குமானதுமான முளைகளாக முளைத்திருக்கும் இந்த குடிலுக்குள் நான் அரசனாக செல்லக் கூடாது, அடியானாகச் செல்லவேண்டும்.
இதுவரை நான் அடையா தாகத்தை அங்கே ஏதும் பருகி தீர்த்துக் கொள்வேன். அப்படியே இதுவரை நான் செய்த பாவக் கறைகளை இந்த புனிதமான குடிலில் கழுவி நீக்கிக் கொள்வேன்” என்றான்.
“அறிவுடை மன்னர் சொல்வது இந்த பாகனுக்கு பாதிதான் புரியும் மன்னா. நான் ஆற்றில் குதிரைகளை கழுவி குளிப்பாட்டச் செல்கின்றேன்” என்றான் பாகன்.
ஆனாலும் துஷ்யந்தனின் விழிகள் பலவற்றை அளப்பதைக் கண்டு அவன் நெற்றி சுருங்கி உதடு மெல்ல புன்னகைப்பதைக் கண்டு அங்கே நின்றான் பாகன்.
அதை அவதானித்த துஷ்யந்தன் சொன்னான் “பாகனே, யாரும் எனக்கு வழிகாட்டி சொல்லிக் கொடுக்காமலே வாழவேண்டிய இடத்தை அறிந்து கொண்டேன். தவங்கள் செய்வதையே வாழ்வாகக் கொண்டவர்கள் இடத்துக்கு வந்திருக்கின்றேன்.
ஏழு ஏழு பிறப்பிலும் காணமுடியாத அழகான தவக்கோலமிக்க இடத்துக்கு வந்திருக்கின்றேன்” என்றான்.
அங்கே தெரிந்தது ஒரு குடில்தான். அதைத் தவிர ஏதுமில்லை, யாருமில்லை. பின் எப்படி இதுதான் முனிவர்கள் இடம் என இவர் முடிவு செய்தார் எனக் குழம்பிய பாகன் கேட்டான் “இது தவம் செய்யும் இடமென எப்படிச் சொல்கின்றீர்கள் மன்னா? வேடுவர்கள் குடிலாகவும் இருக்கலாமே?”
குதிரைகளைத் தவிர ஏதும் அறியாதவனிடம் புன்னகை பூக்கச் சொன்னான் துஷ்யந்தன்.
“இங்கிருக்கும் காட்சிகளைக் கண்டால் புரியாதா பாகனே?
அதோ அந்த மரப்.ந்தில் காதல் கிளிகள் இரண்டு இருப்பதைப் பார், அந்த மரத்தடியில் தானியங்கள் சிதறிக் கிடப்பதை பார்.
அன்பான காதலர்களை ஆதரித்து காக்கும் அன்பு மனம் கொண்டோர் இங்கு இருக்கவேண்டும் அல்லவா? தவமிக்கோர் மனமன்றி யார் மனம் இப்படி இருக்க முடியும்?
அதோ பார் பழமரங்கள் பழுத்து அந்த பழமெல்லாம் கருங்கற்கள் மேல் விழுந்து கனியின் சாறுகள் அந்த கற்கள் மேல் வடிந்திருப்பதைப் பார். ஓவியப் பலகையில் சித்திரம் தீட்டி வண்ண மையினைக் கொட்டி அழகான காட்சியாக அது காட்டும் அழகைப் பார். அந்த கற்கள் மேல் பொங்கும் கதிரவன் ஒளிபட்டு மின்னும் அழகான ஜாலத்தைப் பார்.
தன் தேவைக்கேற்றதைத் தவிர பிற கனியினை தொடாதவர்கள்தானே இங்கு இருக்க முடியும்?
இதோ இளமான்கள் அச்சம் என்பதே அறியாமல் இங்கே உலாவுகின்றன. நம்மை கண்டோ இந்த தேரையோ வில்லையோ கண்டு அவை அச்சமடையவில்லை. ஆபத்து என்றால் என்னவென்றே தெரியாதபடி அன்பால் அவை வளர்க்கப் பட்டிருக்கின்றன. அவை நம்மை கண்ட பின்னும் அச்சமின்றி மேய்ந்து கொண்டும் நம்மை பார்த்து விட்டு அதன்போக்கில் நிற்பதையும் கண்டால், என்ன தோன்றுகின்றது..
இதோ இந்த வழியினைப் பார், இது நீராடச் செல்லும் வழி. காவியாடை அணிந்த துறவிகள் நீராடிவிட்டு இந்த வழியில்தான் வருவார்கள். அப்போது அவர்கள் உடையின் ஓரத்தில் இருந்து சொட்டும் நீர்த் துளிகள் தரையில் விழுந்திருக்கும் அடையாளத்தைப் பார்.
ருத்திராட்ச மணிகளை பதித்தது போல ஒரு அடையாளம் தெரிகின்றது. வரிசையாக இடம் விட்டு கோர்வையாக ருத்திராட்ச மாலையின் தொடர்ச்சி போல் தெரிகின்றது.
அச்சமும் நாணமும் ஏக்கமும் மிகுந்த முதலிரவில் கணவன் முன் தயங்கித் தயங்கி வரும் மணப்பெண் போல மெல்ல மெல்ல வரும் தென்றலைப் பாராய், அப்படியே தயங்கி ஓடும் நதியினைப் பாராய்.
மென்காற்றும், மெல்ல வரும் நீரும்தான் தவக்கோல ரிஷிகளுக்கு தோதான இடம் அல்லவா?
அதோ அங்கே சலசலத்து ஓடும் நதிக்கரையில் நிற்கும் மரத்தின் தடித்த வேர்கள் கப்பலின் நங்கூரம் போல் நிற்பதைப் பார்.
அந்த வேர்களை நீர் கொஞ்சி நலம் விசாரித்து செல்வதை பார். அன்பான காட்சி தெரிகின்றதா?
நிலமகள் அணிந்திருக்கும் செடிகள் கொடிகளெல்லாம் அரும்புகள் நீட்டி சிரிக்கும் அழகை பார்த்தாயா?
காணுமிடமெல்லாம் அன்பு அன்பு அன்பு ஒன்றே தெரிவது எதைக் காட்டுகின்றது?
அமைதி, நிசப்தமான அமைதி, முழு அமைதி. அமைதியின் பலனாய் விளைந்த அன்பு. பரிபூரண அன்பு. மரம், செடி, கனி, கிளி,மான்கள் என எல்லாவற்றின் மேலும் அன்பு, முழு அன்பு என்பதன் மூலம் என்ன?
அதோ பார் பாகனே, என்ன தெரிகின்றது?
இளம் வயதிலே துறவு ஏற்றவன் மனம் காமத்தால் எரியும் அது இயல்பு. அந்த காம நெருப்பு அவன் மனதை வாட்டுவதைப் போலே, இங்கே யாகத்தால் எழுந்த நெருப்பின் புகை மரங்களின் இலையினை வாட்டியிருப்பதைப் பார், அவை புகைப்பட்டு வாடியிருப்பதைப் பார்.
இன்னும் அந்த தர்ப்பை புற்களை பார். அதன் நீளமான கொழுந்து அறுக்கப்பட்டு பின் வளரும் தளிர்கள் முடி வெட்டபட்ட அந்தண சிறுவன் மண்டையில் முடி வளர்வது போல் காட்சியளிக்கின்றது.
அந்த தர்ப்பைப் புல்லைச் சுற்றி மான்கள் அச்சமின்றி மேய்கின்ற. இதெல்லாம் பார்த்த பின்பும் இது முனிவர்கள் தவம் செய்யும் இடம் என்பது புரியாதா?
முனிவர்கள் நம் ஆட்சியின் கண் போன்றவர்கள். அவர்கள் கண்ணுக்குள் கருவிழிப் பாவை போல் தவத்தை கவனமாக வைத்து காத்து வருபவர்கள். அதனால் நாம் இங்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது. ஆங்காங்கே யாராவது தவத்தில் இருக்கலாம்.
நான் பூக்களைத் தொடும் காற்று போல ஓசைப்படாமல் முனிவர் குடிலுக்குச் செல்வேன். நீயும் மீன்கள் போல சலசலப்பில்லாமல் குதிரைகளை நீராட வைத்து சுத்தமாக்கு” என்றபடி ஆசிரமக் குடில் நோக்கிச் சென்றான்.
(தொடரும்..)