சப்த கன்னியர் – 01 முன்னுரை
இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு.
ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும்.
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே.
புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாக கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை என கொண்டாடுவது இதுதான்.
தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி, சியாமளா நவராத்திரி, அபிராமி பட்டர் கொண்டாடியது இதுதான்.
பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி.
அக்காலத்தில் இதெல்லாம் நடந்துதான் பங்குனி உத்திர பெருவிழா கொண்டாடபட்டிருக்கின்றது, இப்பொழுது பங்குனி உத்திரம் மட்டும் எஞ்சியிருக்கின்றது.
அந்த வசந்த நவராத்திரி இப்பொழுது தொடங்குகின்றது, முறையாக பின்பற்றுவோர் கொண்டாடுகின்றார்கள்.
இது வடக்கே பல இடங்களில் உண்டு, முன்பும் உண்டு இப்பொழுதும் உண்டு.
சியாமளா நவராத்திரி என்பதுதான் மதுரையில் குடிகொண்ட அந்த சியாமளா தேவிக்கு உரிய நவராத்திரி, அப்படித்தான் அக்காலத்தில் கொண்டாடபட்டிருக்கின்றது, மீனாட்சி அம்மன் என அவளை அப்படி கொண்டாடியிருக்கின்றார்கள்.
பின்னாளைய ஆட்சி குழப்பங்களிலும் நாயக்கர் காலத்திலும் இந்த விழா சித்திரைக்கு மாற்றபட்டு சித்திரை திருவிழா என விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.
இந்த வசந்த நவராத்திரி சித்திரை மாத வருடபிறப்பை கொண்டாடும் தயாரிப்பாகவும் ஏற்பாடானது, அன்னையினை வணங்கி புதிய வருடத்தை தொடங்குதல் மரபாய் இருந்தது.
தசமஹா வித்யா எனும் தேவியின் பத்து அம்சங்களுக்கானது.
காளி, தாரா, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, சின்னமஸ்தா, பைரவி, தூமாவதி, பகலாமுகி, மாதங்கி, கமலா என பத்து அம்சங்கள்.
இந்த பத்து அம்சங்களை பத்து நாட்களாக தியானிப்பதே வசந்த நவராத்திரி, இந்த வழிபாடுகள் மிக பிரசித்தியானவை.
இந்த காலகட்டத்தில் அந்த மகாசக்தியின் பலவிதமான அம்சங்களை, பல சக்திவடிவாக அவள் பிரிந்து செய்யும் அற்புதமான சக்திவடிவங்களை நினைத்துபார்த்து வழிபடுதல் நன்று.
அவ்வகையில் சப்த கன்னியர் வழிபாடு இந்துமரபில் முக்கியமானது.
இந்துமதம் இந்த பிரபஞ்சத்தை அணு அணுவாய் ஆராய்ந்து முடிவு சொன்னமதம், இன்றைய விஞ்ஞானம் சொல்லமுடியாதை , கண்டு திகைப்பதை கண்டதையும் ஏதேதோ விஞ்ஞான குறியீட்ட்டு பெயர்களால் சொல்வதை என்றோ அறிந்து, இயங்குவதெல்லாம் சக்தி வடிவம், அது பெண்ணின் தன்மையான சக்திவடிவம் என சொன்னமதம் இந்துமதம்.
அது ஏழுவிதமான படிநிலைகளை அல்லது பிரிவுகளை கொண்டு பிரபஞ்ச இயக்கத்தை பல விதங்களில் சொன்னது
சப்தரிஷி மண்டலம் , ஏழு உலகம், ஏழு கோள்கள், ஏழு கடல்கள் என எல்லாவற்றையும் ஏழு ஏழாக சொல்லி சூரியனின் கதிர்கள் வரை ஏழுவண்ணம் என்றது
அதாவது உலகை இயக்கும் சக்திகளில் முக்கியமானவை ஏழு வகைகள் என வகைபடுத்தியது
இந்த அடிப்படையான ஏழு விஷயங்களைத்தான், உலகமும் பிரபஞ்சமும் இயங்க துணை செய்யும் ஏழு சக்திகளை அது சப்த கன்னியர் என வகைபடுத்தி வணங்க சொன்னது
இந்த சக்திகளின் மூலத்தையும் அது மறக்கவில்லை, இவை எல்லாம் ஆதிபராசக்தியின் வடிவங்கள் மும்மூர்த்திகள் எனும் பரம்பொருளில் இருந்து வந்தவை என்றும் சொல்லிற்று
எப்போதெல்லாம் மகா முக்கியமான காரியத்துகாக , இந்த பிரபஞ்சத்தை அதர்மத்தில் இருந்து மீட்டெடுக்க ஆதிசக்தி களமிறங்குவாளோ அப்போதெல்லாம் இவை துணைக்கு வந்து தர்மம் மீட்கும், இயக்கத்தை காக்கும் என காரணங்களும் சொன்னார்கள்
அது தேவி மஹாமித்யம் எனும் மூல நூலில் உண்டு, இன்னும் பல இடங்களில் உண்டு
இந்த சப்த கன்னியர் சக்தி மிக்கவர்கள் அவர்கள் வழிபாடு மிக அவசியம் என்பதால் எல்லா பிரதான கோவில்களிலும் இவர்களை வைத்தார்கள்
இவர்கள் சிவன் கோவிலில் உண்டு, விஷ்ணு கோவிலில் உண்டு , அம்மன் ஆலயங்களிலும் உண்டு, இன்னும் பழமையான எல்லா கோவில்களிலும் உண்டு
இந்த வழிபாடும் பூஜையும் மகா அவசியம் என வலியுறுத்தவே எல்லா ஆலயங்களிலும் ஸ்தாபித்தார்கள்
அந்த சப்த கன்னியர் பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, நாராயணி, இந்திராணி, வராஹி, சாமுண்டி என ஏழுபேர் என சொல்லிவைத்தார்கள் ரிஷிகள்
இந்த சப்த கன்னியர்கள்தான் ஆதிசக்திகளை மூல ச்கதிகளை இயக்குகின்றார்கள், பிரம்மனில் இருந்து இயக்குபவள் பிராம்மி, மகேஸ்வரனில் இருந்து இயக்குபவள் மகேஸ்ர்வரி, முருகனில் இருந்து இயக்குபவள் கௌமாரி, நாராயணில் இருந்து இயக்குபவள் நாராயணி, வராஹமூர்த்தியின் அம்சமாய் இருப்பவள் வராஜி, ருத்திரனின் அம்சம் சாமுண்டி
இவர்கள்தான் மும்மூர்த்திகளையும் இன்னும் அவற்றின் அம்சங்களையும் இயக்குபவர்கள்
இந்த சப்த கன்னியர்தான் சக்தி கொடுப்பவர்கள், இவர்கள்தான் படைக்கும் தொழில் காக்கும் தொழில் அழிக்கும் தொழில் இயக்கும் தொழில் என எல்லாவற்றுக்கும் ஆதார சக்தியாய் நிற்பவர்கள்
இந்துவழிபாட்டில் இவர்களுக்கு பெரிய இடம் உண்டு, கிராம தேவதைகளாக இருப்பவர்கள் இவர்கள்தான்
கிராமங்களில் இசக்கி அம்மன், பேச்சு அம்மன் என பல வடிவங்களில் வணங்கபடும் தெய்வம் இவர்களே
இந்துமதத்தில் பெருந்தெய்வம் சிறுதெய்வம் எனும் வேறுபாடெல்லாம் இல்லை, அக்காலத்தில் மன்னர்கள் தலைநகரங்களில் கட்டிய பெரும் கோவில்களிலும் கிரமாங்களில் சிறிய கோவில்களிலும் இருந்த தெய்வங்கள் ஒன்றுதான்
ஆலய வகையில் அவை பெரிய ஆலயம், சிறிய ஆலயம் என வருமே தவிர பெருந்தெய்வம் சிறுதெய்வமெல்லாம் பிரிட்டிஷ்கார கும்பல் செய்த புரட்டு
அப்படியான மூல சக்தி வடிவங்கள் ச்பத கன்னியர்
இவர்கள்தான் சப்த மண்டலம் முதல் சகல இடங்களிலும் நின்று நடத்துவார்கள் இயக்குவார்கள், இந்த பிரபஞ்ச இயக்கத்துக்கு இடையூறு என்றால் முன் வந்து தடுப்பார்கள், இயக்கத்தை உறுதி செய்வார்கள்
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்பதால் உடலிலும் இவர்கள் ஆதிக்கமும் காவலும் சூட்சுமமாக உண்டு
ஏழு சக்கரங்கள் எனும் ஏழு சக்திமையங்களின் சக்தியாக இருப்பது இவர்கள்தான்
அதைவிட சூட்சுமமாக உடலை இயக்கும் தாங்கும் சக்தியும் இவர்கள்தான்
உடல் என்பது ஏழுவகை தாதுக்களை அடிப்படையாக கொண்டது, அதில்தான் உடல் கூடு அமைக்கபட்டு இயங்குகின்றது அங்கே ஆன்மா தங்கியிருந்து கர்மாவினை செய்கின்றது
இந்த உடலின் அமைப்பை பற்றி சித்தர்கள் என்றோ சொன்னார்கள்
“தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சக்கிலந் தாதுக்க ளேழு”
என உடலின் அமைப்பை சொன்னார் ஒளவையார்
இந்த உடலானது உதிரம் – இரத்தம், ஊண் – தசை, மூளை – மூளை, நிணம் – கொழுப்பு, என்பு – எலும்பு, சுக்கிலம் – இனப்பெருக்க சக்தி ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது என்பது பொருள்
இந்த ஏழு தாதுக்கள் என்ற உடலின் அடிப்பதை தன்மைக்கு இந்த ஏழு தெய்வங்களின் தன்மை உண்டு, அம்சம் உண்டு
அவர்களாலே இந்த ஏழு தாதுக்களும் சரியாக இயங்கி உடல் இயங்குகின்றது, உடல்நலம் சரியாக இருக்க இந்த ஏழு கன்னியரின் அருள் அவசியம்
ஆம், பிரபஞ்சத்தை இயக்கும் அவர்கள் , உடலை இயக்கும் அவர்கள், உடலின் சக்கரம் முதல் ஏழு தாதுக்களின் தாத்பரியமுமான அவர்கள் அருள் மகா அவசியம்
சரி, இவர்களை ஏன் கன்னியர் என்றார்கள்?
கன்னி என்றால் இளமை என பொருள், எப்போதும் நீங்கா இளமையுடன் அழிவில்லாம்ல் நிலைத்திருப்பவர்கள் என பொருள்
கன்னியர் என இவர்களை பெண்களாக சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, சூட்சுமம் மிகுந்திருந்தது
மானுட சமூகத்தின் இயக்கும் சக்திபெண்கள். பெண்கள் எங்கெல்லாம் சரியாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சிறப்பும் வளமும் அமைதியும் செழுமையும் மகிழ்வும் கைகூடும் இது அடிப்படை நியதி
பெண்கள் நன்றாக நடத்தபடாத குடும்பமும் நாடும் வாழாது அதே நேரம் பொறுப்பில்லா பெண்கள் நிரம்பியதேசமும் நிலைக்காது
பெண்கள்தான் ஒரு சமூகத்தின் நாட்டின் சக்தி, அவ்வகையில் அவர்கள் பலமாகவும் நலமாகவும் உள்ளத்தால் தெளிவாகவும் இருத்தல் அவசியம்
நல்ல பலமும் தெளிவும் கொண்ட பெண்களே நல்ல குழந்தைகளை பெற்று நல்லமுறையில் வளர்த்து நலல் சமூகத்தை உருவாக்கமுடியும், குடும்பத்தை காக்கமுடியும் அவர்கள்தான் ஆதாரம்
அந்த நல்ல குடும்பம்தான் நல்ல சமூகத்தை உருவாக்கும், நல்ல சமூகம் நல்ல நாட்டை உருவாக்கும், நல்ல நாடு நல்ல உலகத்தை படைக்கும்
இதனாலே பெண்களே இந்த உலகில் மகா முக்கியம் என உணர்ந்த இந்துமதம் அவர்களை வழிபாடு, பூஜை, ஆலயம், விழாக்கள் என சொல்லி ஒழுங்குபடுத்தியது
எப்போதும் அவர்கள் இறை சிந்தனையில் நல்ல அமைதியான சூழலில் மகிழ்ச்சியான வகையில் வழிபாட்டில் நிலைத்திருக்க , அவர்கள் மனம் வேறேதும் குழம்பாமல் இருக்க வழி செய்தது
குழம்பாத மனம் தெளிந்திருக்கும் தெளிந்த மனம் இறைபக்தியில் ஒன்றியிருக்கும், அப்படி ஒன்றிய மனதிற்கு பிரபஞ்சத்தின் எல்லா சக்திகளும் கிடைக்கும்
அந்த சக்தி உடல், மனம், சிந்தை, புத்தி என எல்லா வகையிலும் அவர்களை பலமாக்கும், அவர்கள் பெரும் இடத்தில் நின்று நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள்
இதுதான் சப்த கன்னியரை பெண்கள் வழிபட சொன்ன சூட்சுமம்.
இந்த வசந்த நவராத்திரி காலங்களில் சப்த கன்னியரை பற்றி காணலாம், முடிந்தவரை ஏழு சப்த கன்னியரை பற்றி அவர்கள் தாத்பரியம் பற்றி, அவர்களுக்கான ஆலயங்கள் பற்றி , அவர்களுக்கான வழிபாடுகள் பலன்கள் பற்றி தர முயற்சிக்கின்றோம்
அனைவருக்கும் வசந்தநவராத்திரி கொண்டாட்ட வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.