திருமுருகாற்றுப்படை : 16
( 248 முதல் 260 வரையான வரிகள்)
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
பாணனுக்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் பெருமையினைச் சொல்லி அவன் வாழும் இடங்களைச் சொல்லி, அங்கு சென்று முருகனை பணிந்து நல்ல விஷயங்களை பெரும் அருளைப் பெற்றுக் கொள்ள பாணனுக்கு ஆலோசனை சொல்லும் நக்கீரர் முருகப்பெருமானின் சிறப்புக்களை தொடர்கின்றார்.
அறுபடை வீடுகளில் அவன் கோலத்தையும் எல்லா மக்களாலும் தேவர்கள், பார்ப்பணர் தொடங்கி மலைவாழ் வேட்டுவ மக்கள் வரை அவனை கொண்டாடும் பெருமையினைச் சொல்லிப் புகழும் அவர் தொடர்கின்றார்
முருகப்பெருமான் தன் அடியவர்கள் என்ன வேண்டுகின்றார்களோ அதை பெற்றுக் கொள்ளும்படி வரமருள இங்கெல்லாம் தங்கியிருக்கின்றான். இங்கெல்லாம் எழுந்தருளி தன் பக்தர்கள் வாழ்வாங்கு வாழ வரமருள எதிர்பார்த்து தயாராக இருக்கின்றான் என்பது பாடலின் பொருள்.
அதாவது இந்த தலங்களில் மட்டுமல்லாது எந்த இடத்தில் முருகன் இருப்பதாக உன்னை ஆட்கொண்டு ஆண்டு கொள்வதாகக் கருதினாலும் அங்கேயும் வழிபடு என்கின்றார்.
அதாவது முருகப்பெருமான் எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள். அந்த மாபெரும் வல்லமையான தெய்வம் அறுபடை வீடுகளில் மட்டுமன்று இன்னும் அடியார் எங்கெல்லாம் இருந்து அழைப்பார்களோ அங்கெல்லாம் நின்று அருள்பாலிப்பான். அதனால் எந்த இடமென்றாலும் அவன் உன்னை ஆட்கொள்ள எதிர்கொண்டால் அவனை சரணடைந்துவிடு என போதிக்கின்றார்.
முருகப்பெருமான் எல்லா இடங்களிலும் உண்டு என்பது வரியின் பொருள்.
அடுத்து சொல்கின்றார்.
அப்படி நீ அவனை கண்டுவிட்டால் முகம் மலர்ந்து மகிழ்ந்து கைகளால் அவனைத் தொழுது அவன் கால்களில் வீழ்ந்து அவனை வணங்குவாய். அவன் பாதங்களில் சரணடைவாய் என்கின்றார்.
இப்படி முருகப்பெருமானின் சிறப்புக்களைச் சொன்ன நக்கீரர் இனி முருகப்பெருமானை என்னென்ன பெயர்களால் அழைக்க வேண்டும்? அந்த பெயருக்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்கிச் சொல்கின்றார்.
முருகனை ஏன் கார்த்திகேயன் என அழைக்கின்றோம் என்பதை சொல்கின்றார்.
அதற்கு முன் முருகப்பெருமான் அவதாரக் கதையினை ஒருமுறை பார்த்தல் நன்று. முருகப்பெருமானின் அவதாரம் சிவபெருமானின் முகத்தில் இருந்து தொடங்கிற்று.
சிவனுக்கு நான்கு பக்கமும் நான்கு முகங்கள், ஐந்தாவது மேல் பார்த்த முகம் ஆறாவது அதோமுகம் எனும் கீழ்நோக்கிய முகமும் உண்டு.
இந்த ஆறு முகங்களில் இருந்து அக்னிப் பொறிகள் தோன்றின. இவற்றின் புனிதமும் வீரியமும் கருதி பஞ்ச பூதங்களும் ஏற்க அஞ்சின.
பின் ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பு அதை வாயுவிடம் கொடுக்க வாயு கங்கையிலே கொடுக்க கங்கை அதனை நீல தர்ப்பைகள் நிரம்பிய பொதிகையில் சேர்த்தது.
அங்கே ஆறு குழந்தைகளாக அவன் அவதரித்தான். அந்தப் பொய்கை சரவணப் பொய்கையாதலால் அவன் சரவணன்.
அவனை அங்கு வந்த ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் அவன் கார்த்திகேயன்.
இப்படி முருகப்பெருமானுக்கு பல பெயர்கள் வந்த வகையினை அடுத்த வரிகளில் சொல்கின்றார்.
உயர்ந்த இமையத்து நீல நிற தர்ப்பைகள் நிரம்பிய சரவணப் பொய்கையில் அக்னி வடிவமாக வந்தவன் முருகப்பெருமான். அவனை ஆறு பெண்கள் வளர்த்தனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்த செல்வன் அவன் என்கின்றார்.
அடுத்து பாடுகின்றார்.
முருகப்பெருமானின் அவதாரத்தின் மூலத்தை சொல்கின்றார். சிவன் மன்மதனை எரித்தபின் உலகில் உயிர்கள் படைப்பு நின்று போயிற்று. பின் தேவர்கள் கேட்டுக் கொண்ட பின் மன்மதன் உயிர்ப்பிக்கப் பட்டான்.
அதன் பின்பே முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்தது.
அந்த மன்மதனை எரிக்கும் போது சிவபெருமான் ஆலமரத்தின் அடியில் தெற்கே பார்த்த தட்சணாமூர்த்தியாக இருந்து ஞான மூர்த்தியாய் மன்மதனை எரித்தார்.
அந்த தட்சணாமூர்த்தியின் மகன் என்பதை, சிவகுமரன் என்பதைச் சொல்கின்றார். ஆலமரத்தடியில் தென்முகம் பார்த்தமர்ந்த தட்சணாமூர்த்தி எனும் ஞான தெய்வத்தின் மகன் என்பதைச் சொல்கின்றார்.
அடுத்து அவன் பார்வதியின் மகன் என்கின்றார்.
அதை “மால்வரை மலைமகள் மகனே” என்கின்றார். மால் என்றால் மிகப்பெரியதான எனப் பொருள். அப்படி பெரிய பக்கங்களை கொண்ட பர்வத மன்னனின் மகளான பார்வதியின் மகன் அவன் என்கின்றார்.
முருகப்பெருமான் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டான். பின் அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் அணைத்தபோது அவை ஒன்றாயின. அக்குழந்தை அழகுடைய கந்தன் என்றானது.
அந்த கந்தனின் தாய் பார்வதி என்கின்றார்.
அடுத்து முருகப்பெருமானின் ஆற்றல் பற்றி வீரம் பற்றி சொல்கின்றார்.
அதாவது எதிரிக்கு எமனாகும் படி போரில் வெற்றி தரும் கொற்றவையின் மகன் என்கின்றார்.
அடுத்து சொல்கின்றார்.
சாந்தமான உமையாள், வீரமான பார்வதி, உக்கிரமான துர்க்கை என எல்லாமே ஆதிபராசக்தியின் வடிவங்கள். ராஜராஜேஸ்வரி என்றும் திரிபுர சுந்தரி என்றும் பலர் சொல்லும் நாமங்களில் வந்தவள் அவள், பெரும் அழகு மிக்கவள்.
அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் இன்னும் அழகு சேர்க்கின்றன. அப்படிப்பட்டவளின் மகன் முருகன் என்கின்றார் நக்கீரர்.
அழகான நகைகளை அணிந்தவளும் ஆதிசக்தியும் மூத்தவளுமான ஆதிபராசக்தியின் மகன் அவன் என்கின்றார்.
அடுத்து பாடுகின்றார்.
அவன் வானோர் வணங்கும் தளபதி. அவன் தேவலோக சேனாதிபதி என்கின்றார்.
ஆக இப்பாடலில் முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் மட்டுமல்ல எங்கெல்லாம் பக்தர்கள் அழைப்பார்களோ அங்கெல்லாம் வரும் எம்பெருமான். பல வித நாமங்களுடன் உள்ளான் என்கின்றார்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவன் கார்த்திகேயன். சரவண பொய்கையில் ஜொலித்ததால் அவன் சரவணன்.
ஆறுமுகங்களைக் கொண்டதால் அவன் ஷண்முகன், ஆறுமுகன்.
அவன் ஞானம் வழங்கும் தென்முக தெய்வமான தட்சணா மூர்த்தியின் ஞானகுமரன், அவன் சிவகுமரன். அவன் பார்வதியின் மைந்தன், அவன் அழகான தாயின் மகனான கந்தன். கொற்றவையின் குழந்தை. அவன் ஆதிபராசக்தியின் மகன், தேவலோக சேனாதிபதி என முருகப்பெருமானின் பெயர்களைச் சொல்லி அவனின் பெருமையினை விளக்குகின்றார்.