சப்த கன்னியர் – 05
வைஷ்ணவி தேவி – நான்காம் கன்னிதெய்வம்
“கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்” என குமரகுருபரர் இந்த தேவி பற்றி சொல்கின்றார். அதாவது, கடலை கல்லால் நிரப்பி பாலம் கட்டிச் சென்றவள் என்கின்றார்.
ராமனின் சக்தியாக இருந்தவள் இவளே என்பது அதன்பொருள். அவ்வகையில் இவள் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி என்கின்றார் குமரகுருபரர்.
அன்னையின் புராணமும் அதைத்தான் சொல்கின்றது, அன்னை விஷ்ணுவின் மார்பில் இருந்து வெளிபட்டாள் என்பது அவளின் அவதார குறிப்பு.
“ஸஹஸ்ர பாஹும் புருஷம் புராணம்
சயாநம் அப்தௌ லலிதா தவைவ
நாராயணாக்யாம் ப்ரணதோஸ்மி ரூபம்”
என கூர்ம புராணம் சொல்கின்றது, அதவாது நாராயணி தேவி விஷ்ணுவின் அம்சம் என்கின்றது, அந்த நாராயணிதான் வைஷ்னவி தேவி
இவள் விஷ்ணுவின் அம்சம் என்பதால் அவரை போலவே கருடனை வாகனமாக கொண்டவள்.. விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார்.
வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவ தாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பாள்
இந்த வைஷ்ணவி தேவிதான் லட்சுமி கடாட்சம் கொண்வள் , தங்கத்தில் வாசம்செய்பவள், இவள்தான் பூலோக வாழ்வுக்குரிய செல்வத்தை தருபவள், அதனால் இவள் வழிபாடு பெண்களுக்கு மிக மிக முக்கியம்
ஒரு ஆண் சம்பாதித்தாலும் அதை சரியாக சேர்த்து வைத்து, வரவுக்கேற்ப செலவு செய்து குடும்பத்தின் நிதிநிலையினை காப்பவள் பெண், ஒரு பெண் சரியாக இருந்தால்தான் அந்த விடு செல்வ செழிப்பினை பெறும்
பெண்கள் துடிப்பாக இல்லாத வீடு, பெண்கள் நிதிவிவகாரத்தை சரியாக கையாளாத வீடு பொலிவு பெறாது
அந்த ஞானம் எல்லா பெண்களுக்கும் வருவதில்லை, அப்படி கிடைக்கபெறும் பெண்கள் லட்சுமி கடாட்சம் கொண்டவர்கள் அவர்களால் இல்லம் செழிக்கும்
வைஷ்ணவி அருள் என்பது மிகுந்த கவனம், பொருள் சேர்ப்பிலும் செலவழிப்பிலும் பலத்த கணக்கீடுகள், பொருளை காப்பதில் தைரியமும் வலுத்த கவனமும் கொண்டு நிற்பது என ஒருவரம்
அந்த வரமே ஒரு குலத்தை வாழவைப்பதால் பெண்கள் , குடும்ப பெண்கள் இந்த தேவியின் அருளை பெறுதல் அவசியம் என சொல்லி வைத்தார்கள், வழிபட சொன்னார்கள்
திருமகள் எனும் லட்சுமியின் அருளை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள், அவள் அருளே பொருளை தங்க வைக்கும் அறிவை தரும், பொருளை தேடும் அறிவு அதை தக்கவைத்து பெருக்கும் ஞானமெல்லாம் அவள் கொடுப்பது
பூலோக வாழ்வுக்கு பொருள் முக்கியம், அதை தருவதில் லட்சுமியின் அருள் முக்கியம், வைஷ்னவி தேவி அதைத்தான் அருள்கின்றாள்
அவள் பெருமையினை “ஸ்ரீ சாக்தம்” உரக்க பேசுகின்றது, கந்தத்வாரம் எனும் மந்திரம் அவள் அருளை போதிக்கின்றது
அதிசங்கரர் அவள் அருளை பெறவே “கனகதாரா ஸ்ஸோஸ்த்திரம்” என்றொரு மந்திரத்தையே தந்தார்
திருமாலின் ஆதார சக்தி இவளே, திருமால் இப்பூமியில் அவதாரமாக வரும்போதெல்லாம் பெரும் வாழ்வு வாழ்ந்திருப்பார், பெரும் அரசனாக தனவானாக வாழ்ந்திருப்பார்
அந்த பாக்கியத்தை கொடுப்பவள் இந்த மகாலட்சுமி அவள் சாயல் அவள் அம்சம் கொன்டவள் வைஷ்ணவி
திருமால் ராமனாக அவதரித்து வந்தபோது சீதையாகவும், கண்ணனாய் அவதரித்து வந்தபோது ருக்மிணியாகவும், ஸ்ரீனிவாஸனாய் அவதரித்து வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் திருமகளே.
வைகுண்டத்தில் மஹாலட்சுமியாகவும். சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும், அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும், புண்யாத்மாக்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், க்ஷத்ரிய குலங்களில் கீர்த்தி லட்சுமியாகவும், வியாபாரிகளிடம் வர்த்தக. சுமியாாவம் ஜொலிப்பவ்ள் அவளே
வேதங்கள் போற்றும் திருமகளின் மற்றொரு வடிவம் பூமாதேவி. ஆம் இந்த பூமி என்பது செல்வங்களின் குவியல் எல்லா வகை செல்வமும் இங்கு குவிந்துகிடப்பதால் பூமாதேவி எனும் பூமியினை மகாலட்சுமியின் அம்சம் என்றே இந்துமதம் சொல்கின்றது
இப்படி செல்வங்களை அள்ளி அள்ளி தந்து வாழவைப்பவள் வைஷ்ணவி, அவள் அருள் பெற்றால் செலவ்ம் குவியும், குவிந்த செல்வத்தை காக்கும் அறிவும் தெளிவும் தைரியமும் அன்னையால் கிடைக்கும்
செல்வம்தான் குடும்பத்தை இயக்கும் இன்னும் சொந்தபந்தங்களில் சமூகத்தில் குடும்பம் சீரான உறவை நல்ல பந்தத்தை, நல்லபடியாக சொந்தங்களை சமூகத்துடன் சுமூகமான உறவை அது கொடுக்கின்றது, எல்லோருடனும் நல்ல இயக்கத்தை செல்வமே கொடுக்கின்றது, அன்னை அதனை அருள்வாள்
இப்படியான அன்னை உடலின் அமைப்பில் கொழுப்புக்கு அதிபதி என சொல்லபடுகின்றாள்
உண்ணும் உணவு உடலுக்கு சக்தியாகின்றது, அந்த உணவின் சக்தியினை உடல் கொழுப்பாக மாற்றி உடலுக்கு சக்தி அளிக்கின்றது
ஆம், உடலுக்கும் அதன் உறுப்புகளுக்கும் நல்ல சக்தி அளிப்பது கொழுப்பு, உணவு உடலுக்கு அடிப்படை ஆனால் போஷாக்கு உள்ள உணவுதான் தோற்றபொலிவும் உள்ளுர சக்தியும் கொழுப்பும் தரும்
உடலுக்கு கொழுப்பு மிக மிக அவசியம், அதுதான் உடலை இயக்குகின்றது, அதுதான் உடலை காக்கவும் செய்கின்றது
கொழுப்பு உடலுக்கு கொடுக்கும் பலன் கொஞ்சமல்ல, அதுதான் சக்தி அதுதான் உடலின் எல்லா பாகத்திலும் எல்ல்லா உறுப்புகளிலும் படர்ந்து நல்ல காவலை கொடுக்கின்றது
உள்ளுறுப்புக்கள் மேல் படலமாக படர்ந்து காப்பது அதுதான், எல்லா உறுப்புக்குமான சக்தியினை அதுதான் கொடுக்கும்
இன்னும் உடல் இணைப்புகள், இணைப்பு பாகங்கள் நல்லமுறையில் இயங்க ஒரு மசகு போன்ற தன்மையினை அதுதான் தரும்
உடலின் சக்தி சேமிப்பு கொழுப்புத்தான், உடல் உணவின்றி கிடந்தால் கூட கொழுப்பின் சக்தியால் அவ்வுடல் கொஞ்சநாளைக்கு தாக்குபிடிக்கும் சக்தியினை கொழுப்புத்தான் கொடுக்கும்
உடலின் எல்லா சத்துக்களும் கொழுப்பாக திரள்கின்றன, அந்த கொழுப்பே சக்தி சேமிப்பு மையமாக ஆதார சக்தியின் களஞ்சியமாக உடலில் உள்ளது
கொழுப்பு உள்ள உடலே திறம்பட இயங்க முடியும், கொழுப்பு இல்லா உடல் எளிதில் நோய்க்கு இரையாகும் காவலை இழக்கும், இயக்கத்தை இழக்கும்
அந்த கொழுப்புத்தான் உடல் இயக்கத்தை, சுமூகமான இயக்கத்தை, நோயற்ற உடலை, சக்திமிகுந்த உடலை, உள்ளுறுப்புகளின் காவலை நிர்மானிக்கின்றது
அன்னையினை வழிபட வழிபட அந்த கொழுப்பு சார் பிரச்சினைகளெல்லாம் தீரும், உடல் நலமாகும் நலமான உடலின் மூச்சும் ரத்த ஓட்டமும் சீராகும்
கொழுப்பும் செல்வம் போன்றதே, செல்வம் இன்றி வாழ்வு இல்லை என்பது போல கொழுப்பு இன்றி உடல் இல்லை
செல்வம் வாழ்வின் சக்தி, கொழுப்பு உடலின் ஆதார சக்தி
கொழுப்பு என்பது உணவின் சக்தி , செல்வம் என்பது வருமானத்தின் சேகரிப்பு
கொழுப்பு உடலின் உணவு இல்லை என்றாலும் கொஞ்சநாள் உடலை தாங்கும், வருமான்மே நின்று போனாலும் செல்வம் வாழ்வை தாங்கும்
ஆனால் செல்வம் தீயவழியில் வந்தாலோ அலல்து தீய வழியில் பெருகி தீயவழிக்கு சென்றாலோ அது அழிவை தருவது போல கெட்ட கொழுப்பு எனும் தீய கொழுப்புக்கள் உடலை பதம்பார்த்துவிடும்
ஆம் செல்வம் நல்ல செல்வமாக இருப்பது பொல கொழுப்பும் நல்ல கொழுப்பாக தீமை செய்யா கொழுப்பாக இருத்தல் அவசியம்
இப்படி கொழுப்புக்கும் செல்வத்துக்குமான தொடர்பு நுணுக்கமானது
இந்த உலகின் பிரபஞ்ச விதி, இயக்கவிதி, மானுட உடல் விதி, மானுட வாழ்க்கை விதி என எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை எதுவும் தனித்து இயங்குபவை அல்ல
எல்லாவற்றுக்கும் இடையில் நுணுக்கமான ஒரு தொடர்பு இருப்பதை அவதானிக்க முடியும், அதாவது ஒரே ஒரு சக்திதான் எல்லாவற்றையும் நடத்துகின்றது
வானத்து கோளை ஒரு சக்தி இயக்குகின்றது, ஒரு சத்தமில்லாமல் சீராக சிறப்பாக துல்லியமாக அந்தவெளியல் வெளிதெரியாத ஒரு சக்தியால் இயக்குகின்றது
அதே சக்தி பூமியில் படைப்பினை இயக்குகின்றது, வெயில் மழை குளிர் கடல் நதி என எல்லாமும் இயக்குகின்றது , உயிர்களை உடல்களை இயக்குவது அதுவே
சூரியனின் வெப்பம், கோள்களின் சுழற்சி என எல்லா தீரா இயக்கத்துக்கும் அதுதான் காரணம்
அதுதான் தேனிக்களை, கரையானை என பலவற்றை இயக்குகின்றது சிப்பிக்கள் இயக்கம் முதல் கஸ்தூரி மானின் கஸ்தூரி உருவாக்கம் வரை அதன் இயக்கமே
எறும்புகள், எலிகள் உணவை சேர்த்து வைக்கும் ஞானம் கொடுத்து இயக்குவதும் அதுதான்
அந்த சக்திதான் மானுட உடலை கொழுப்பு சக்தியாகவும், மானுட வாழ்வினை செல்வமாகவும் இயக்குகின்றது, அந்த அருள் மிக மிக அவசியம்.
அதனாலே வைஷ்ணவி தேவி என அச்சக்திக்கு பெயரிட்டு இந்துக்கள் வழிபட சொன்னார்கள்.
இந்த தேவி யுத்தத்தில் அதாவது சண்டமுண்டன், மகிஷாசுரன் போன்ற கொடும் அசுரர்களின் சண்டையில் எப்படி பங்கெடுத்தாள் என்றால் படைகளுக்கு தீரா சக்தியினை வழங்கி கொண்டே இருந்தாள்
யுத்தத்தில் ஒரு சக்தி வழங்கல் அவசியம், சக்திகள் எல்லாவகையிலும் கிடைத்து கொண்டே இருத்தல் வேண்டும், அன்னையின் தத்துவம் அதை சொல்கின்றது
அவள் சக்தியினை தொடர்ந்து அருள்வாள், இயக்கு சக்தியினை அருள்வாள் இயக்குவாள் பலத்தை தருவாள் என்பதே இந்த அன்னையின் அருள்வழங்கும் தாத்பரியம்
யோக சாஸ்திரத்தில் இந்த வைஷ்ணவி அனாதக சக்கரம் அதாவது மார்பு பகுதி இருக்கும் இடத்தின் அதிபதி
அங்கேதான் இதயம்,நுரையீரல் என அதிமுக்கிய சக்திகள் இருக்கின்றன, கொழுப்பு பாதிப்படைந்தால் தாக்கும் இதயமும் அங்கேதான் இருக்கின்றது
எதெல்லாம் சக்திவழங்கும் உறுப்புக்களோ அது இருக்குமிடம் அனாதகம், ஈரல், நுரையீரல், இதயம் என மிக முக்கிய பாகங்கள் அங்கேதான் உண்டு
அன்னை சக்தி வழங்குகின்றாள், உடல் இயங்க சக்தி கொடுக்கின்றாள் என்பது இங்கே மிக சரியாகின்றது
நுரையீரல் மூச்சு சக்தி, இதயம் ரத்த ஓட்ட சக்தி இதர சக்திகளின்மையம் அதுதான், அன்னை அங்கேதான் சக்தியாக இருந்து ஆட்சி செய்கின்றாள்
உடலின் பெரும் சக்தி மூச்சு அந்த மூச்சு நுரையீரலினால் சாத்தியமாகின்றது, மூச்சு எனும் வாயு சக்தி இருக்குமிடமும் அனாதகம், அங்கே அன்னை இயக்கு சக்தியாய் நிற்கின்றாள்
உடலை இயக்கும் இதயத்தை துடிக்கவைப்பவள் அவளே அதற்கான சக்தியினை கொடுப்பதும் அவளே
இந்த இயக்கம் உடல் இயக்கம் சரியாக நடக்கவும் அப்படியே குடும்பத்தின் செல்வநிலை சரியாக இருக்கவும் அன்னையின் அருள் அவசியம்
அதனால் அவளை தேடி வணங்குதல் வேண்டும், அவள் அருள் இல்லாமல் உடல் இயக்கம் குடும்ப இயக்கம் ஏன எதுவுமில்லை
குடும்பத்தினை எல்லா வகையிலும் இயக்குபவள் பெண்கள் என்பதால் அவள் அன்னையின் அருளை பெறுதல் அவசியம் என்றார்கள்
இந்த வைஷ்ணவி ஏதோ பெரும் ஆலயங்களில் ஏழுபேரோடு அமர்ந்திருப்பவள் மட்டுமல்ல, கிராமங்களில் இருக்கும் தெய்வங்களிலும் அவள் உண்டு
ஜகத் ஜனனிதான் கலை அம்சங்களுடன் கிராம தேவதைகளாக அவதரித்துக் கொள்கிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன. எந்த தேவி மூன்று சக்திகளும் ஒன்றானவளோ அந்த தேவியே இந்த கிராம தேவதைகளில் உருவத்தில் உள்ளாள்.
“யா யாஸ்ச க்ராம தேவ்ய: ஸ்யுஸ்தா: சர்வா:
ப்ரக்ருதே களா”
என்பது ஸ்லோகம்
அதாவது “ப்ரக்ருதியாகிய சக்தியின் அம்சங்களே கிராம தேவதைகள்” என்பது தேவீ பாகவதத்தின் கூற்று.
அவ்வகையில் அங்கம் ஆளும் அங்காளம்மன் என்பது இந்த வைஷ்ணவி தேவிதான், உடலின் அங்கம் மட்டுமல்ல வாழ்வின் அங்கமான செல்வத்தையும் ஆள்வது அவள்தான்
அங்காளம்மன் என வணங்கபடும் அம்மன் இந்த வைஷ்ணவி தேவிதான்
“ஆரியங்காவு இயக்கி” என சிலப்பதிகாரத்தில் சொல்லபடும் அந்த இயக்கி எனும் இசக்கியும் இவள் வடிவமே, கிராமபுறங்களில் இசக்கி அம்மன் என சொல்லபடும் அம்மனும் இந்த வைஷ்ணவ தேவியின் அம்சமே
பூவாயி அம்மன் என்றால் பூவில் இருக்கும் அம்மன், பூ+ஆயி என பொருள், அந்த பூவாயி அம்மனும் வைஷணவியின் சாயலே
இந்த அங்காளம்மன், இசக்கியின் இன்னொரு வடிவம்தான் இயமத்தின் காஷ்மீரத்தில் இருக்கும் வைஷ்ணவோ தேவி
இங்கு எதுவுமே தனி அல்ல, எல்லாமே ஒன்று எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடயவை அப்படி நுணுக்கமான பிணைப்பினை இந்துமதம் கொடுத்திருக்கின்றது
“சதுர்ப்பி ஸ்ரீகண்டை சிவ யுவதிபி பஞ்சபிரபி
ப்ரபின்னாபி சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி |
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாசர-த்ரிவலய
த்ரிரேகாபி: சார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: ||”
சதுர்ப்பி: – சதுர் என்றால் நான்கு; ஸ்ரீகண்டை:- சிவ சக்ரங்கள். அதாவது சிவசக்ரமான நான்கும், (பஞ்சபிரபி) – பஞ்ச – ஐந்து சக்தி சக்ரங்களும் சேர்ந்து ஒன்பதாக உள்ள பிரபஞ்சத்தின் (மூலப்ரக்ருதிபி:) மூலகாரணமான தத்வங்களுடன் கூடிய இருப்பிடமான ஸ்ரீயந்த்ரம், எட்டுதளம் (வஸீதல), பதினாறு தளம் (கலாச்ர), மூன்று வட்டங்கள் (த்ரிவலய), மூன்று கோடுகள் (த்ரி-ரேகாபி:) ஆகியவற்றுடன் (சார்த்தம்) கூடி பரிணமிக்கும் (பரிணத) நாற்பத்து நான்காக (சது: சத்வாரிம்சத்) இருக்கிறது.
அதாவது நான்கு மூலை எட்டு திக்கு பதினாறு கோணத்தில் உள்ள எல்லாவற்றின் இயக்கு சக்தி நீயே என்கின்றார், எல்லா இயக்கதையும் நடத்தும் அன்னை மானுட உடல் வாழ்வு என அந்த இயக்கத்தையும் தாங்குகின்றாள்
அவளை லலிதா சஹஸ்ரநாமம் “த்ரிகோணாந்தரதீபிகா”, “சக்ரராஜநிகேதநா”, “த்ரிகோணகா”, “ஸ்ரீசக்ரராஜநிலயா” என்கின்றது
சக்கரம் என்றால் நில்லாத இயக்கம் அதிலிருந்து வரும் பெரும் சக்தி, நில்லாமல் கிடைக்கும் சக்தி
ஆக அன்னை வைஷ்ணவி தேவி இயக்கும் சக்தி தருவாள், பெரும் பலம் தருவாள், உடலையும் வாழ்வையும் அவளே காப்பாள்
மனதின் மகிழ்ச்சிக்கும் காரணம் அவளே, மகிழ்ச்சியாய் ஆனந்தமாய் இருக்கும் மனம் நோயில் விழாது, ,கெட்ட கொழுப்புகள் உருவாகி இதய பாதிப்பு வர மனத்துயரமும் ஒரு காரணம் என்கின்றது மருத்துவம்
மனம் மகிழ்ச்சியாய் இருந்தால் நோய்கள் வராது, அன்னை அந்த வரத்தை கெட்ட கொழுப்போ தடைகளோ இல்லா வரத்தை மனதின் மகிழ்ச்சிமூலம் அருள்வாள்
இந்த அன்னை வழிபட்ட ஆலயமாக தஞ்சாவூர் அருகே அந்த சப்த கன்னி தலங்கள் அமைந்திருக்கும் இடங்களில் ஒன்றான நந்திமங்கை எனும் நல்லிச்சேரி விளங்குகின்றது
இங்குள்ள சிவனுக்கு ஜம்புகேஸ்வரர் என பெயர், இந்த தலம் நடுவில்சேரி எனவும் வழங்கபடுகின்றது அனாகத சக்கரம் உடலின் நடுபாகத்தில் அமைந்திருப்பதும் கவனிக்கதக்கது
வைஷ்னவி தேவி தன் இழந்த சக்தியினை இங்கே சிவனை வேண்டி மீளபெற்றாள், சோழ மன்னர்கள் தங்களுக்கு சக்திவழங்கும் தலமாக , தொடர் இயக்க சக்தி கிடைக்கும் தலமாக இதனை வணங்கினார்கள்
இந்த ஆலயத்தில் வணங்க வணங்க குடும்பத்தின் செல்வவளம் பெருகும், உடலில் கொழுப்பினால் ஏற்படும் எல்லா சிக்கலும் தீர்ந்து உடல் சமநிலை அடையும், உடல் நல்ல இயக்கத்தை பெறும்
பெண்களுக்கு இந்த தலம் விஷேஷமானது, ஆண்களை விட பெண்கள் பல கடமைகளை கொண்டவர்கள், குடும்ப நிதிவிவகாரம்முதல் பெற்ற குழந்தைக்கு மார்பில் பாலூட்டி வளர்க்கும் கடமை அவர்களுடையது
தாய்பால்தான் ஒரு மானுடன் பெரும் முதல் சக்தி
அந்த வரத்தை அன்னை தருள்வாள், இது குடும்பபெண்கள் வணங்கவேண்டிய முக்கியமான தலம், உடலும் உள்ளமும் குடும்பமும் வாழும் நல்ல பலத்தை அன்னை குலபெண்களுக்கு கொடுப்பாள்
இந்த ஆலயத்துக்கு சென்றுவழிபட முடிந்தால் வழிபடுங்கள், இல்லையேல் அங்காளம்மன் இசக்கி அம்மன் என சக்தி தரும் தெய்வங்களை இந்த வைஷ்ணவ தேவி வழிபாட்டை நினைத்து வணங்குங்கள் எல்லா வளமும் கிடைக்கும்
காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவ தேவி தனிசக்தி வாய்ந்தவள் முடிந்தவர்கள் அவளையும் தரிசிக்கலாம்
சென்னை அருகே இருக்கும் திருமுல்லைவாயில் என்பதும் வைஷ்ண தேவிக்கு மிக சக்தியான தலம்
வைஷ்ணவ தேவியின் காயத்ரி மந்திரம் இதோ
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்”
அன்னைக்குரிய தியான ஸ்லோகம் இதோ
“சங்க சக்ர தராதேவீ கிரீடமகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவதநா ஷ்யாமாபாச் சுலோசநா
பீதாம்பரதரா தேவீ கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய கருட த்வஜ வாஹிநீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம், விஷ்ணு பூஷண பூஷிதாம்”
அன்னைகுரிய மூலமந்திரம் “ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-வம் – வைஷ்ணவ்யை நம:” என்பது.
அன்னை மகாலட்சுமிய்ன் அம்சம் என்பதால் வெள்ளி கிழமைகளில் அவளை தொழுதல் நன்று, அந்த வைஷ்ணவ தேவிக்கு வெள்ளிகிழமை வெண்மலர்களை சாற்றி தூபமிட்டு புளியோதரை நைவேத்தியம் செய்து நெய்யினை வெள்ளிவிளக்கில் ஏற்றிவர அவள் கடாட்சம் கிடைக்கும்
அந்த வைஷ்ணவ தேவியினை வணங்க வணங்க மனதில் தைரியம் வரும், செல்வம் வரும், உடலில் கொழுப்பு சம்பந்தமான சிக்கல் தீர்ந்து நலம் வரும். அதற்கான ஞானத்தையும் சக்தியும் அவளே அருள்வாள், அவளை வணங்க வணங்க குலம் செழிக்கும், குடுமபம் சீராக செல்வாக்கோடு சக்தியோடு இயங்கும் இது சத்தியம்.