சப்த கன்னியர் – 07
இந்திராணி – ஆறாம் கன்னிதெய்வம்
“கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்” என அவளை குமரகுருபரர் சொல்கின்றார், அவள் எப்போதும் மணக்கும் மலர்மாலை அணிந்த இந்திரனின் சக்தி என்கின்றார்.
சப்த கன்னியரில் ஆறாம் தேவி இந்த இந்திராணி.
இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டி அருள் வழங்குபவள்.
மாகேந்திரி என்ற பெயரையும், ஐந்தரி எனும் பெயரையும் கொண்டவள், இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும், தேவேந்திரனின் அம்சமாக இந்திராணி போற்றப்படுகிறாள். மாகேந்திரி என்றும் ஐந்தரி என்றும் இத்தேவதை கொண்டாடப்படுகிறாள்.
இந்திரனை போலவே வஜ்ராயுதம் ஏந்தி வெள்ளை யானையில் வருபவள், விருத்திகாசுரன் என்ற மாபெரும் அசுர சக்தியை அழித்த சக்தியாக இவ்வம்மை வணங்கப்படுகிறாள்.
இந்த தேவியின் தத்துவம் பற்றி கொஞ்சம் ஆழமாக காணலாம்
ப்ரம்பொருள் இந்த உலகை வெகு ஞானமாக வெகு சூட்ச்மமாக படைத்திருக்கின்றன், அந்த சிருஷ்டிகர்த்தா ஒவ்வொரு படைப்பிலும் ஒரு நிறைவையும் அதன் கடமையினையும் அப்படியே அது வழி வழியாக பெருகி வரவேண்டிய வழியினையும் நுணுக்கமாக ஏறப்டுத்தியிருக்கின்றான்
இது பிரபஞ்சத்தில் உண்டு, அதன் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு. படைக்கபட்ட ஒவ்வொரு பொருளுக்கும்
தன்னில் ஒரு நிறைவு அப்படியே தன் சந்ததிகளை உருவாக்கி செல்லுதல் எனும் விதி உண்டு
இது கண்காணா கிருமி முதல் கண்காணும் எல்லா படைப்பிலும் உண்டு
இங்கு எல்லாமே அதனதன் தன்மையில் ஒரு ஆனந்தம் கொண்டிருக்கின்றது, ஆனந்த மயமான இறைவன் அதை ஆனந்தமாகவே உணர வைத்திருக்கின்றான்
வெயிலும் குளிரும் கூட அதனதன் வகையில் ஆனந்தம், இருளும் வெளிச்சமும் கூட அதனதன் இயல்பில் ஆனந்தம்
இந்த பிரபஞ்சம் ஒரு ஆனந்தத்தில் இயங்குகின்றது கோள்கள் ஒரு உணரமுடியா ஆனந்த மயக்கத்தில் சுற்றுகின்றன
அப்படியே பிரபஞ்சம் தோறுவதும் மறைவதும் பின் தோன்றுவதும் உண்டு, பழையன கழிதலும் புதியன புகுதலும் அங்கும் உண்டு
இந்த தத்துவம் ஜடப்பொருளில் உண்டு கடலில் உண்டு நதியில் உண்டு, மலையில் உண்டு, எல்லாமே ஒரு ஆயுள் கொண்டவை, ஒரு ஆனந்தமும் கொண்டவை
கடல் அதன் இயல்பில் ஆனந்தமானது, மலை அதன் இயல்பில் பனியும் காடுகளுமாக ஆனந்தம் கொண்டது
இதே ஆனந்தம் மரம் செடி கொடிகளில் உண்டு, விலங்குகளில் உண்டு, அப்படியே மானிடரிலும் உண்டு
ஒரு சந்ததி வாழும்போது அப்படியே இன்னொரு சந்ததி உருவாகின்றது, இதனாலே எல்லா காலமும் மரமும் கடலும் நதியும் செடிகொடிகளும் விலங்குகளும் பறவைகளும் மீன்களும் மானுடரும் இந்த உலகில் இருந்துகொண்டே இருக்கின்றார்கள்
அந்தந்த இனம் அப்படியே இருக்கின்றது, சிருஷ்டிகர்த்தாவின் அற்புதமான ஞானம் இது
உருவாக்கி வைத்தவள் தன்னிலேநிறைவு கொண்டு ஆனந்தம் கொண்டு இன்னொரு அச்சினை உருவாக்கி வைத்து எக்காலமும்
இறைவன் நிறைவானவன், ஆனந்தமயமானவன், படைக்கும் சக்தி கொண்டவன். அந்த இறைவனின் சாயல் எல்லா உடலிலும் உண்டு ஆனால் அதனை அவனவன் கர்மா மறைத்திருக்கின்றது
இந்த கர்மாவினை தீர்த்தால் அந்த ஆனந்தம் தெரியும், அந்த நிறைவு தெரியும் அவன் இட்ட கட்டளையும் தெரியும்
அந்த வரத்தை தருபவள்தான் இந்திராணி
இந்திரன் போகத்துக்கு அதிபதி, ஆனந்த நிலைக்கு மகா இன்ப நிலைக்கு அதிபதி, அவன் இந்திரியங்கள் எனும் புலன்களின் இன்பங்களுக்கானவன் அதனாலே அவன் எல்லா இன்பங்களும் மகிழ்வும் கொட்டிகிடக்கும் இந்திரலோகத்து அரசன்
அவன் ஆனந்தத்தின் சக்தி அந்த இந்திராணி
இவள் இருவகை அருளை அருள்வாள், முதலில் நிறைவானா மகிழ்வான ஆனந்தமான வாழ்க்கை எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை
இரண்டாவது வாழ்ந்த வாழ்க்கைக்கும் சாட்சிக்குமான சந்ததி,வளமான பலமான சந்ததி
இந்த இரண்டும் அவளின் பலன்கள்
மானுட உடல் அப்படித்தான் எல்லா படைப்புக்களை போல படைக்கபட்டிருக்கின்றது, அந்த உடலுக்கு எல்லா படைப்புக்களை போலவே சில தேவைகள் உண்டு, சில இனம்புரியா மயக்கங்களும் உண்டு
இதில்தான் இந்த உலகம் இயங்குகின்றது
இந்த மானுட உடலுக்கு திருப்தி அவசியம், அது உணவால் உடலால் இன்னும் பலன்களின் மகிழ்வால் ஒரு நிறைவு அவசியம், அந்த எல்லா அவசியத்தையும் எல்லா நிறைவையும் அவளே தருவாள்
நிறைவு என்பது எல்லோரும் அரசன் என்பதல்ல, எல்லோரும் சுகபோகம் என்பதல்ல எல்லோரும் ஆள் அம்பாரத்துடன் வாழ்வது அல்ல
மனம் நிறைய மகிழ்ச்சி எனும் உணர்வு, எல்லா வகையிலும் நிறைவு எனும் ஆனந்த நிலை , அந்த ஆனந்தத்தில உற்சாகமாக கடமை செய்யும் வழி
இதனை தருபவள் அன்னை
எல்லா வகை இன்பத்தையும் போகத்தையும் முழு நிறைவினையும் தந்து இப்பிறவி ஏக்காமற நிறைவுற எல்லாம் அனுபவித்து கடக்க அவள் அருள் செய்வாள்
குடும்பத்தில் மகிழ்ச்சி முக்கியம், நிறைவு முக்கியம். தன்னில் மகிழ்ச்சியுள்ள நிறைவுள்ள ஒருவரே இன்னொருவரிடம் அன்பும் மகிழ்வும் கொண்டிருக்க முடியும் அதை கொடுக்கவும் பரப்பவும் முடியும்
இதனால் குடும்ப பெண்களுக்கு எப்போதும் மகிழ்வும் நிறைவும் புன்னகையும் ஆனந்த மனநிலையும் மகா முக்கியம், அதை தருபவள் இந்த இந்திராணி என்பதால் அவளை வணங்க சொன்னார்கள்
உடலின் தத்துவத்தில் இவள் சுக்கிலம் எனும் மகா முக்கிய தாதுவுக்கு அதிபதி
இந்த சுக்கிலம் என்பது தாம்பத்திய உறவிலும் சந்ததி பெருக்கதிலும் அடிப்படை, இந்த சுக்கில துளியில்தான் ஒரு மானுடன் ஜெனிக்கும் உயிரும் அதன் ரகசியமும் அடைக்கபட்டிருக்கின்றது, அதுதான் விதை
அந்த சுக்கிலம் இப்படி மகா முக்கியமனது என்றாலும் பொதுவாக சுக்கில எனும் வார்த்தைக்கு முழுமை, பூரணம், நித்திய மகிழ்ச்சி என பொருள் உண்டு, பேரின்ப நிலை என்பதும் பொருள்
அப்படி ஒரு பெரும் போகம் தருவதாலே அந்த கிரகத்தை சுக்கிரன் என்றார்கள்
அப்படி பெரும் மகிழ்வை , பெரும் மகிழ்ச்சியினை, நித்திய பேரானந்தத்தை தருபவள், இது போதும் எனும் மகா நிறைவினை உடலுக்கும் உள்ளத்துக்கும் தந்து மகிழ்ச்சியாய் வைத்திருப்பவள் இந்த அன்னை
சுக்கிலம் ஒரு உடலின் ஆனந்த தாது, அதுதான் இன்னொரு உயிர் பிறக்க அடிப்படை. ஆனால் எந்த உயிரும் இன்னொரு உயிரை எளிதாக படைத்துவிடுவதில்லை
அந்த சிருங்காரத்துக்கு இனம்புரியா மயக்கம் வேண்டும், ஒரு ஆனந்த நிலை வேண்டும் அந்த மயக்கத்தில்தான் உயிர்கள் உருவாகின்றன
அந்த இன்பமான மயக்கத்தை கொடுத்து உயிர்களை உருவாக்குவதும் இவளே, இது எல்லா உயிரிலும் அவள்செய்யும் காரியம்
மானுடர் முதல் மண்ணும் நீரும் கிடைத்துவிட்டால் நிலத்தை கீறி வரும் விதைமுதல் முட்டை உடைத்து வரும் பறவை வரை வானில் தோன்றும் நட்சத்திரம் வரை அவளே இதை செய்கின்றாள்
அந்த வரத்தை மானுடருக்கும் அவள் தருவாள் உடலெல்லாம் மனமெல்லாம் ஆனந்த பரவசம் ஓடசெய்வாள், அந்த நிறைவில் வேறேதும் தோன்றாது
சூரியனின் பரவசம் அதன் ஒளி, கடலின் பரவசம் அதன் அலை, காற்றின் பரவசம் அசைவு என ஒவ்வொரு படைப்புக்குமான பரவச நிலையினை தரும் அன்னை மானிடரின் பரவசம் நித்திய நிறைவு என்பதால் அதை தருவாள்
இந்த அன்னை யோக தத்துவத்தில் ஆக்ஞா எனும் புருவ மத்தி சக்கரத்தின் அதிபதி
இந்த சக்கரம் ஆறாம் சக்கரம், இது ஆகாய தத்துவத்தை குறிப்பது, இந்த நெற்றி சக்கரம் புருவ மத்தியில் இருக்கும் சக்கரம் துலங்கும் பட்சத்தில் ஆகாயம் அளவு பரந்த மனமும் சிந்தையும் வாய்க்கும்
ஞானியரெல்லாம் ரிஷிகளெல்லாம் சித்தர்களெல்லாம் இந்நிலை அடைந்தவர்கள்
அவர்கள் தேவர்களுக்கு சமமான சக்தியினை பெறுவார்கள், இந்திராணி எனும் இந்திரனின் சக்தி அதனை அவர்களுக்கு வழங்குவாள்
அவர்கள் எப்போதும் பேரின்ப பரவச மகிழ்வில் இருப்பார்கள், அந்த மகா பரவச நிலையில் வேறு எந்த இன்பமும் அவர்களுக்கு பொருட்டாக தோன்றாது , அப்படி ஒரு பேரின்ப நிலை அது
நெற்றிபொட்டில் இருக்கும் அந்த சக்கரம் துலங்குவது பேரின்ப நிலை மகா பரவச நிலை
ஞானக்கண் என்பதும், மூன்றாம் கண் என்பதும் இதுதான்
இது மகா சூட்சுமமானது என்பதால் இந்துக்கள் திலகமிட்டு மறைக்குமிடமும் இதுதான், குரு தன் கட்டைவிரலால் அழுத்தி தீட்சை கொடுக்குமிடமும் இதுதான்
ஆனந்த வாசலின் திறவுகோல்தான் தீட்சை, அந்த அனந்தம் அங்கேதான் இருக்கின்றது என்பது தாத்பரியம், இந்திராணி அந்த பேரின்பத்தை தருவாள்
இந்த சக்கரம் பற்றி இந்து வேதங்கள் சொல்கின்றன, வேத நூல்கள் சூட்சுமமானவை அதில் ஒரு வரி இப்படி வரும்
“இரு நதிகள் இடையே தீவில் கன்னிபெண்ணொருத்தி நிற்கின்றாள், பலவந்தமாக அவளை அடைவாயாக”
இது திராவிட மொழிபெயர்ப்பில் கற்பழிப்பு என மாறிவிடும், உண்மை அது அல்ல
இரு கண்களிடையே நிற்கும் இந்த ஆக்ஞா சக்கரத்தை துலக்கினால் பெரும் நித்திய பரவசம், பேரின்ப நிலை வாய்க்கும் என்பது
அங்கேதான் இந்திராணி வாசம் செய்கின்றாள் அவள் அருள் கிடைத்துவிட்டால் பெரும் ஆனந்த நிலை எய்தலாம் என்பது
பெண்கள் ஏன் அன்னையினை வணங்க வேண்டும் என்றால் இச்சக்கரம் சரியாக இல்லாவிட்டால் மனரீதியாக பதட்டம் பயம், கோபம் மன அழுத்தம், எரிச்சல், முன்கோபம், நம்பகதன்மை இல்லாமை, மூர்க்கம், தனிமை என பல குழப்பங்கள் வரும்
பெண்கள் அடிக்கடி திலகமிட சொன்னது, அதுவும் நெற்றி புருவ இடையில் அழுத்தி புருவமிட சொன்ன ரகசியம் இதுவேதான், அந்த சக்கரமையம் துலங்கபெற்றால் பெண் எப்போதும் மகிழ்வும் அமைதியும் புன்னகையும் கொள்வாள், அவள் இருக்குமிடம் சொர்க்கமாகும்
இனி இந்த ஆலயத்தோடு இச்சக்கரம் பொருந்துவதையும், இந்த ஆலாய்த்தின் நீல விடங்கரையும் அங்கு சிவன் ஆடும் தாமரை நடனம் எனும் கமல நடனத்தையும் காணலாம்
கவனியுங்கள், இந்த ஆலயத்தின் விடங்கர் பெயர் நீல விடங்கர். நீலம் என்றால் ஆகாயம் ஆகாய வெளி
நீலவேணி என்பது அன்னை ஆகாயமாக இருக்கின்றாள் என்பதை சொல்வது, கண்ணனுக்கும் நீல நீறம் என சொல்வதும் அப்படியே
கடலும் வானமும் பிரமாணமான வெளிகள், அந்த வெளியின் நிறம் மானிட கண்களுக்கு நீலம்
அந்த ஆகாய தத்துவத்தைத்தான், பிரபஞ்ச பெருசக்தியில் ஒருவன் கலந்து ஆகாயம் போல எல்லாம் காணும் பெரும் விரிந்த பார்வை கொண்ட ஞானகண்ணை பெறுகின்றான் என்பதைத்தான் நீல விடங்கராக சொன்னார்கள்
இந்த அன்னையினை பற்றி , சப்த கன்னியரை பற்றி ஆதிசங்கரரும் தன் சௌந்தர்ய லஹரியில் பாடுகின்றார்
“க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாசஷ்டிஹி சதுரதிக பஞ்சாஸ-தநிலே |
திவி த்விஹி ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்சஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம் ||”
அதாவது தேவியே, தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும், ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களும், அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும், வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும், ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும், மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும் இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது.
இந்த சக்கரங்களுக்கு கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.
இந்த கிரண கால அளவுகள் நுணுக்கமான கணக்கீடுகள், பூமியில் ஒருவன் வாழும் காலத்தை குறிப்பவை. அதன் மேல் உள்ள சஹஸ்ரார சக்கரம் என்பதுதான் அந்த சக்கரம் விரியப்பெற்றவன் கால நேரத்தை கடந்து நிற்பான் என்பதைச் சொல்கின்றது.
இன்னொரு பாடல் உண்டு. இது யோக நிலையை மேலிருந்து கீழாக, சஹஸ்ராரத்திலிருந்து குண்டலிணிக்கு அன்னை வருவதை குறிக்கின்றது.
ஸூதா-தாராஸாரைஹி சரணயுகலாந்தர்-விகலிதைஹி
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸஹ |
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || “
அதாவது தாயே, உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான ஆதார சக்கரத்தை அடைந்து தன் உருவத்தைச் சர்ப்பம் போல வட்டமாக அமைத்துக் கொண்டு, சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்கரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாள்.
ஆம், அமிர்தம் சுரக்கும் அந்த நிலைதான் பேரானந்தம், அந்த அமிர்தம் உடலெல்லாம் பாய்ந்து ஒருவனை நித்திய மகிழ்ச்சியில் வைத்திருப்பதே பேரின்பம்.
அன்னை இந்த அருளை தருவாள்
இந்திராணி என்பவள் உடலின் மனதின் நிறைவுக்கும் தித்திப்பான நிறைவுக்கும் பேரானந்தத்துக்கும் அதிபதி, எல்லாம் திருப்தியும் மகிழ்ச்சியும் அவளே தருவாள்
உடலின் ஒவ்வொரு புலனும் அவளால் நிறைவடையும்.
இங்கே ஒரு சூட்சும ரகசியமும் உண்டு, யார் தன்னில் நிறைவில்லையோ யார் தன்னில் மகிழ்ச்சி இல்லை என கருதுகின்றார்களோ அவர்கள்தன போதை இதர தீய வழக்கங்களில் வழிதவறி செல்வார்கள்
மீளமுடியா போதை அல்லது வெளிவரமுடியா சிக்கலில் வீழ்வோரெல்லாம் தன்னில் நிறைவும் மகிழ்ச்சியும் இல்லாதவர்கள் நிறைவு இல்லாதவர்கள், புலனோ உள்ளமோ ஒரு குறையான இன்பம் கொண்டவர்கள்
அவர்களுக்கு முழு அருளும் அருளி அவர்கள் தன்னிலே நிறைவு கொண்டு வெளி இன்பங்களை மாய குழப்பங்களில் சிக்காமல் இருக்க அன்னை முழு அருள் தருவாள்
அன்னைக்கு சப்த கன்னியர் ஆலயம் உண்டு, இது போக கிராமங்களில் மோகினி என அறியபடுபவளும் அவள் சாயலே
மோகினி என்பது பிசாசு அல்ல, பேய் அல்ல. அது ஒரு நிறைவினை முழு நிறைவினை முழு ஏகாந்தத்தை அருளும் சகிதி, பகவானின் மோகினி அவதாரம் அப்படி ஒரு நிறைவினை கொடுத்ததாலே அவர்கள் அமிர்தத்தை மறந்தார்கள்
அன்னை முழு நிறைவினை கொடுப்பவள்
அவளின் ஆலயங்கள் பல உண்டு என்றாலும் அவள் வழிபட்ட தலங்கள் இரண்டு, அதில் நாகபட்டினம் மாவட்டம் தருமபுரம் அபயாம்பிகை தருமபுரிஸ்வரர் கோவிலும் ஒன்று , இது திருஞான சம்பந்தரால் புணரமைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் இந்திராணி வந்துவழிபட்டு தன் குறை தீர்ந்து அங்கு அமர்ந்து அருள்பாலிக்கின்றாள், அங்கே சென்று வணங்கினால் அவள் அருள் நிச்சயம்
அப்படியே சப்த கன்னியர் தலமான தாழமங்கை அதில் முக்கியமானது.
அங்கே சிவனிடம் வரம்பெற்ற ராஜ ராஜேஸ்வரியாக அவள் அமர்ந்திருக்கின்றாள், தன் வாழ்நாளில் எல்லா வகையிலும் நிறைவும் மகிழ்வும் பெற்றிருந்த ராஜராஜ சோழன் தன் பிறந்த நாளான ஐப்பசி சதயம் அன்று இங்கு வந்து சந்தணம், குங்குமம் , புணுகு இட்டு வணங்கியதாக கல்வெட்டுகள் உண்டு
அந்த அளவு அவன் இந்திராணியினை இங்கே வந்து வணங்கினான்
இங்கே வந்து பெண்கள் வணங்கினால் அவர்கள் மனம் முழுக்க நிறைவு வரும், அவர்களின் எல்லா ஆனந்தமும் பூர்த்தியாகும், அப்பெண்கள் மிக மகிழ்ச்சியான வாழ்வை மிக ஆனந்தமான குடும்பத்தை பெறுவார்கள், அங்கே நிறைவும் மகிழ்வுமே நிலைத்திருக்கும்
அந்த வீடு நிறைவுபெற்று வாழும்
ராஜ ராஜேஸ்வரி என வணங்கபடும் அன்னை இந்த இந்திராணியே, ராஜ போகங்களை ராஜ வாழ்வின் சம்பத்துக்களை அவள் தந்து காவல் இருப்பாள், எல்லா போகமும் நிறைவும் அவள் தருவாள்
அன்னைக்கான மூல மந்திரம் இதோ
“ஓம் ஹ்ரீம் இந்திராணி ஆசனாயயாய நம
ஓம் ஹ்ரீம் இம் இந்திராணி மூர்த்தியை நம
ஓம் ஹ்ரீம் தம் இம் இந்திராணியே நம”
அன்னைக்கான காயத்ரரி மந்திரம் இதோ
“ஓம் கஜத்வஜாயை வித்மஹே; வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்”
அவளுக்கான தியான ஸ்லோகம்
“ஏக வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன் விதாம்
ஸ ரத்ன மகுடோபேதாம் ஹேமவர்ண ஸ்வரூபிணீம்
வராபயகராம் போஜாம். வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம், வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்”
அன்னையினை வெள்ளிக்கிழமை வழிபடுதல் சிறப்பு, அன்று தாம்பூலமிட்டு சந்தனம் குங்குமமெல்லாம் வைத்து வழிபட நல்ல பலன் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அன்னை நிறைவினை எல்லா விதத்திலும் தருபவள், குடும்பம் ,வேலை, வாரிசுகள், நிதி, ஆரோக்கியம் என எல்லா வகையிலும் அவள் நிறைவினை மகிழ்ச்சியினை ஆனந்தத்தினை தருபவள்.
நல்ல இல்லற வாழ்க்கைக்கும் அதன் மகிழ்வுக்கும், கணவன் மனைவி இடையே பரஸ்பர பந்தம் புரிதல் காலமெல்லாம் நிலைத்திருக்கவும், நல்ல வாழ்க்கை துணை கிடக்கவும் அவளே பிரதான வரத்தை தருவாள்
அவளை பணிந்தால் எல்லா விதமான குறைகளும் தீர்ந்து மானிட வாழ்வே ஆனந்தமாக நிறைவாக மாறும் அந்த வாழ்வு நல்ல வாழ்வாக நிம்மதியான வாழ்வாக பிறவி முடிக்க அருள்செய்யும், வாழ்வினை ஆனந்தமாக கடந்து செல்ல அவள் அருள் அவசியம், அவளை நாடி தருவோர்க்கு அதனை தர அவள் எப்போதும் காத்துகொண்டே இருக்கின்றாள்.