சப்த கன்னியர் – 08
சாமுண்டி – ஏழாம் கன்னிதெய்வம்
சப்த கன்னியரில் முதலில் தோன்றியவளும் அதிசக்திவாய்ந்தவளுமானவள் இந்த சாமுண்டி, இவள் அதிசக்தி மிக்கவள் மிகபெரிய வடிவாய் எல்லா வகையிலும் காவல் இருப்பவள்
இந்த தேவி பற்றி குமர குருபரர் சொல்கின்றார்
அதாவது “கடகளிறு உதவு கபாய் மிசைப்போர்த்தவள்” மத யானை தந்த தோல் ஆகிய நிலை அங்கியை மேலே போர்தியவள் எனப் பொருள்.
அதாவது அன்னை யானை வடிவில் வந்த அசுரனை அழித்து தோலை போர்த்திக் கொண்டவள் என்பது பொருள், இக்காட்சி தேவி மாஹாமித்யத்தில் உண்டு.
இந்த அன்னையின் தோற்றமும் வல்லமையும் சண்ட முண்ட அசுரர்கள் வதத்தில் தெளிவாக சொல்லப்பட்டது, பெரிய பராக்கிரம சாலிகளான அவர்களை அழிக்க மற்ற ஆறுதேவியும் போராடும் போது இவளை துணையாக அன்னை அனுப்பினாள்,
அந்த பத்ரகாளியின் அம்சமாக வந்த அன்னை சண்ட முண்டனை அழித்ததால் சாமுண்டி என்றானாள்.
ரத்தபீஜனை வதம் செய்தவளும் இவளே.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள் இவள்.
சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல் தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால் எல்லா வகையான காவலையும் பெறலாம்.
வேறு கதியில்லை எல்லாம் இனி அவளே என சரண்டைந்து அழைத்தாள் உடனே வருவாள், பல வடிவங்களில் வருவாள், முடியாததையும் முடித்துவைப்பாள். கறுப்பு நிறமானவர் பயங்கரமான தோற்றம் கொண்டவர்ள்
பிணத்தின் மேல் ஆடும் சாயல் கொண்டவள் கைகளில் கபாலம் கொண்டிருப்பாள்
இவள் அன்னை பத்ரகாளியின் உக்கிர வடிவம், ருத்திரனின் ஆக்ரோஷ வடிவம், தீமைகளை அழித்து த்ர்மத்தை காக்கும் அம்சம்
இந்த அன்னை காவல் அம்சம், முழு காவல் இருப்பாள், இவளே போரின் தளபதியாக நின்று வெற்றியினை தேடி கொடுப்பாள், அடங்காத அதர்மங்களை அடக்குவாள் , தாழகிடக்கும் தர்மத்தை ஏற்றிவைப்பாள்
எதற்கும் அச்சபடாதது இவளின் வரம் , அச்சமன்ற தன்மை தருவாள். தனி ஒரு அடையாளம்ம் தருவாள் இவளின் சக்தியும் தனித்துவமும் அதுதான்
மானிட உடலில் தோலின் மூல தெய்வமாக அதன் அதிபதியாக இவள் போற்றபடுகின்றாள் அவள் யானைதோல் போர்த்தியிருக்கின்றாள் என சொல்லும் தத்துவம் அதுதான்
ஆம், மானிட உடலின் மிகபெரிய உறுப்பு தோல், உடலை போர்த்தியிருக்கும் கவசம் அதுதான்
தோல்தான் ஒரு உடலுக்கு அழகும் அழகான தோற்றமும் தருகின்றது, தோல் இல்லையென்றால் மானிடர் எலும்பும் சதையுமாக எல்லோரும் ஒரு பிண்டம் போல் காட்சியளிப்பார்கள்
தோல்தான் உடலை மறைத்து ஒரு அழகு கொடுத்து வடிவம் கொடுத்து முறையான ஒரு வடிவம் கொடுப்பது இந்த தோல்தான்
வெறும் அழகை மட்டும் கொடுப்பது அல்ல, அதுதான் கழிவுகளை வெளியேற்றும் அதுதான் பருவகால மாறுபாட்டுக்கு ஏற்ப உடலை வெப்பமாகவும் குளிராகவும் வைத்திருக்கும்
நோய்கிருமிகள் இன்னும் சூரிய கதிர்கள் வெப்பம், குளிர் என எல்லாவற்றில் இருந்தும் அதுதான் காவல் காக்ககும், உடலுக்கு ஆபத்து என்றால் அது தோலைதாண்டித்தான் வரமுடியும்
அப்படி மிக மிக முக்கியமானதும் மகாபெரிய உறுப்புமானது மானிடரின் தோல், அத்தான் காவல் அரண் அதுதான் முன் அடுக்கில் நின்று எல்லா கவலையும் செய்யும்
இந்த வடிவ அமைப்பு பிரபஞ்சத்தின் எல்லா படைப்பிலும் உண்டு, ஒவ்வொரு படைப்புக்கும் பல அடுக்கு காவல்கள் உணடு, அது பிரபஞ்சத்தில் எல்லா படைக்கும் உண்டு
கோள்களுக்கு உண்டு, மரம் செடி கொடிகளுக்கு உண்டு, இன்னும் ஆமை, நத்தை வரை எல்லாவற்றுக்குமே ஒரு கவசம் உண்டு
அந்த முதல் அடுக்கு காவலின் அம்சம்தான் அன்னை சாமுண்டி, அதனாலே அவளை தோல் உறுப்பின் தெய்வம் என்றார்கள்
குடும்ப பெண்கள் இவளை ஏன் வழிபட வேண்டும் என்றால், குடும்பத்தின் பெண்களுக்கு தைரியமும் காவல் காக்கும் வைராக்கியமும் வேண்டும், எதிர்ப்புகளை ஆபத்துக்களை கண்டால் களந்து போடும் பெரும் சக்தி வேண்டும்
பெண்ணுக்கு தைரியம் முக்கியம், ஆபத்தை கண்டால் துச்சமென போராடி விரட்டி அழித்தல் முக்கியம். ஒரு தாய்கோழி எப்படி குஞ்சுகளை போராடி காக்குமோ, ஒரு தாய்புலி எப்படி குட்டிகளை காக்குமோ, கழுகு தன் குஞ்சுகளை தொட்டால் எப்படி விடாமல் அடித்து காக்குமோ அப்படி ஒரு வரமும் அருளும் போராடும் குணமும் அவசியம்
அந்த வரத்தை தருபவள், பெரும் தைரியத்தோடு காவல் இருக்கும் தைரியத்தை போராடி காக்கும் குணத்தை தருபவள் இந்த அன்னை
யோக தத்துவ வடிவில் இவள் உச்சந்தலையின் சகஸ்ர சக்கரத்துக்கு துரிய சக்கரத்துக்கு தலைவி , அந்த சக்கரம்தான் யோ சக்கரத்தின் கடை நிலை
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே தலையின் உச்சியில் இந்த சக்கரம் இருக்கின்றது
இந்த சக்கரம்தான் இறைசக்தியுடன் சலனமற்ற நிலையில் கடலில் நதிபோல் கலக்க செய்கின்றது, எல்லாம் கடந்த எல்லா உணர்வு சுகதுக்கம் பாசபந்தம் விருப்பு வெறுப்பு கடந்த சமாதி நிலை எனும் அந்த கடைசி நிலை இங்கேதான் உருவாகும்
இந்த சக்கரம் துலங்கும் ஒளிதான் ஞான ஒளி, பெரும் மகான்கள் ஞானியர் தலையினை சுற்றி ஒளிரும் ஞானவட்டம் இதுதான்
இந்நிலையில்தான் எல்லா வடிவமும் தெய்வவடிமாக தோன்றும், காண்பவை காணாதவை எல்லாமே இறைவடிவம் என்பதும், மகா உயர்ந்த ஞான தத்துவங்களும் அப்போதுதான் புரியும்
அந்நிலையில் பிறபில்லா பெரு நிலையினை, பெரு ஞான நிலையினை அடையமுடியும்
(உடல்ரீதியாக இந்த சக்கரம் சரியாக துலங்காதவருக்கு தலைசார் நோய்கள், நரம்பு மண்டல பாதிப்பு, மறதி, மந்த செயல்பாடு போன்ற குழப்பம் வரும்
மனரீதியாக தெளிவற்ற மனம், மூர்க்கம், ஊசலாடும் மனம், சுழலும் மனம் என மனம் சம்பந்தமான எல்லா வகை சீர்கேடுகளும் வரும்)
இந்த துரிய சக்கரம் துலங்கும் போது மனம் அண்டா சராசரத்தில் கரைந்துவிடுகின்றது, நான் தனது எனும் எண்ணெமெல்லாம் மறைந்து தான் இறைவனின் ஒரு துளி எனும் அந்த பெரும் ஞான நிலை வாய்க்கின்றது
“அகம் பிரம்மாஸ்மி” எனும் ஞான நிலை அதுதான்
அத்வைதம் என சங்கரர் போதித்த தத்துவம் அதுதான், தான் வேறு இறைவன் வேறு என எண்ணாமல் அந்த பெரும் சக்தியுடன் ஒன்றாக கலநதுவிடும் பெரும் தத்துவம்
எல்லையில்லா அன்பை , எல்லையில்லா பேரன்பை எல்லோர்மேலும் எல்லா உயிர்கள் மேலும் கொட்டும் பெரும்ஞான நிலை, தெய்வீக நிலை
இந்த சக்கரம் துலங்கி ஒருவன் சமாதி நிலை எனும் முழு ஞான நிலைக்கு, வாக்கும் செயலுமற்ற பெருஞான நிலைக்கு செல்லும்போது அவன் இயக்கம் தெய்வ நிலைக்கு சென்றுவிடும்
அதாவது நன்மை தீமை பகுத்தறியமுடியும், சுத்தமானதை மட்டும் ஏற்றுகொள்ளமுடியும்
எல்லா உயிர்கள் மேலும் அன்பு, முழு அன்பு, ஞானம், முழு விழிப்பு நிலை, தெய்வத்தில் கலந்த ஞானபெருநிலையினை இந்த சக்கரம் அருளும் அதன் அதிபதி இந்த சாமுண்டி
இந்த தெய்வநிலைதான் குலபெண்களுக்கு அவசியம், குடும்பத்தை நடத்தும் பெண்கள் எல்லோர் மேலும் ஒரே விதமான அன்பு செலுத்தி, எல்லா உயிர்களையும் நேசித்து, முழு ஞானத்துடன் முழு விழிப்புடன் தெய்வ நிலையில் நின்று குடும்பத்தை காக்க வேண்டும்
அந்த மாபெரும் மகோத்வ மனநிலையினை, தெய்வ நிலையினை, மகா சாந்த அருள் நிலையினை, எல்லா சூழலிலும் தெய்வாம்சமாக நின்று காக்கும் பெரும் நிலையினை அவள் அடைய வேண்டும்
அந்த அருளை இந்த சாமுண்டிதான் தருவாள்
அதனால் இவளை வணங்கி வழிபட சொன்னார்கள் இந்துக்கள், சப்த கன்னியரில் மகா முக்கியமான இவளின்
அருளே மீதி ஆறு சப்த கன்னியர் அருளையும் காக்கும் சக்தி என்றார்கள்
ஆம் ஆறுபேர் அருளையும் காத்து நின்று வாழ்வை காப்பவள் இவள்தான், எப்படி தோல் இல்லையென்றால் மானிட உடல் காவல் இல்லாமல் வீணாகுமோ அப்படி எல்லா அவையங்களும் ஒரு ஒழுங்கு அமைப்பில் இருக்கவும் எப்படி தோல் மகா முக்கியமோ அப்படி மானிட வாழ்வ் வளமாகவும் காவலாகவும் இருக்க அன்னை அருள் முக்கியம்
தனிபட்ட வடிவத்தை தோல் எப்படி தருமோ அப்படி அன்னை ஒருகுடும்பத்துக்கு தனிபட்ட செல்வமும் அருளும் நல்ல தோற்றமும் நற்பெயரும் தருவாள்
சாமுண்டி என்பவள் இந்தியாவின் அரசகுடும்பத்து தெய்வமாக இருப்பவள், நாயக்க மன்னர்களின் குலதெய்வம் அவள்தான்
கன்னட மாகாணத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி பெருமை எல்லோரும் அறிந்தது, அவள்தான் ஆப்கானிய ஆட்சியினை அகற்ற நாயக்க மன்னர்களுக்கு பலம் கொடுத்தவள்
அதற்கு முன்பே அவள் பிரசித்தி
அந்த அன்னைதான் தைரியம், வீரம் , காவல், அன்பு, தெய்வீகம், கருணை, மகா வைராக்கியம் என எல்லாம் அவளை வடிபட்ட அரசர்களுக்கு கொடுத்தாள்
அந்த மரபில்தான் ராணி ருத்த்ரம்மா, ராணி மங்கம்மா போன்ற பிரசித்தியான இந்து அரசிகள் வந்தார்கள் , எல்லாம் அவள் கொடுத்த ஞானம்
மைசூர் சாமுண்டீஸ்வரி எக்காலமும் பிரதான தெய்வம், அவளை அண்டியோர்க்கு எதிரிகள் அழிவார்கள் பகை ஒழியும், தன் குலத்தை காக்கும் ஞானமும் அறிவும் நிரம்ப கிடைக்கும்
தைரியமும் வீரமும் அதை செயல்படுத்தும் வரமும் அள்ளிதந்து அவள் காவலிருப்பாள்
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் சாமுண்டி மஹாபிரசித்தியனாவள் இன்ன்னும் நாட்டின் எல்லா இடங்களிலும் ஏகபட்ட ஆலயங்கள் அவளுக்கு உண்டு
மிக மிக முக்கிய ஆலயம் கேரளாவில் திருவனந்தபுரம் அருகே இருக்கும் கரிக்ககம் சாமுண்டி ஆலயம்
மைசூர் சாமுண்டி போல இவளும் மஹா பிரசித்தி, பரசுராமரால் ஸ்தாபிக்கபட்ட இவள் கேரளாவின் மகா முக்கிய தெய்வம் , மைசூர் சாமுண்டி நாயக்கர்களுக்கு என்றால் சேரமன்னர்களை உருவாக்கி காத்தவள் இந்த சாமுண்டி
மலையாள பகவதி இவள் அம்சமே
அந்த கரிக்கத்தில் அவள் ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்தசாமுண்டி தேவி, பாலசாமுண்டிதேவி என மூன்று நிலைகளில் வணங்கபடுகின்றாள், மகா காளியின் அம்சமாக அவள் நிறுவபட்டிருக்கின்றாள்
தமிழகத்தில் பத்ரகாளி என்றும், கிராமபுறங்களில் பிடாரி எனவும் சொல்லபடுபவள் அவளே, கையில் அவள் மண்டை ஓடு வைத்து யானைதோல் போர்த்தி அல்லது புலிதோல் போர்த்தி பிணத்தின் மேல் நின்ற கோலம் காட்டுவது அவள் பிசாசு என்பதல்ல
அவள் கபாலம் எனும் துரிய சக்கரத்தின் அதிபதி, அந்த வரத்தை தருபவள் என்பதை அப்படி சொல்கின்றாள், இன்னும் அவள் தோலை போர்த்தியிருப்பது தோல்போல் தான் காவல் என்கின்றாள்
பிணத்தின் மேல் நிற்கும் காட்சி எதிர்ப்புகளை அழிப்பவள், எதிரிகளை அழித்து தன்னை ந்மபியோரை காப்பவள் என்பது
பிடரி என்றால் தலை, அதை கையில் ஏந்தியதால் அவள் பிடாரி. அந்த பெயரிலே கிராமங்களில் அழைக்கபடுகின்றாள்
பத்ரகாளி, பீடாரி என அழைக்கபடும் தெய்வமெல்லாம் அவளே, அவளை வணங்க வணங்க எல்லா பலமும் காவலும அரச அறிவும் தலமை பண்பும் கைகூடும்
தனி ஒரு அடையாளத்தை செல்வாக்கை அவள் தருவாள்
அன்னை சாமுண்டி வழிபட்ட சப்தகன்னி ஆலயமாக தஞ்சை அருகே உல்ள சப்த கன்னியர் தலங்களில் ஒன்றான திருபுள்ள மங்கை ஆலயம் விளங்குகின்றது
சோழர்கள் ஓடி வந்து வணங்கி நின்ற தலம் இது
அன்னை அஷ்ட நாக கன்னியரோடு இங்கு வந்து வணங்கினாள், அப்படி வந்து வணங்கி அவள் சாபமெல்லாம் தீரபெற்றாள்
இந்த திருப்புள்ள மங்கையின் இன்னொரு பெயர் ஆலந்துறை, அந்த ஆலந்துறை ஆலயத்தை அதாவது இங்கு வந்து தேவாரம் பாடிய சம்பந்தர் அந்த பெயரை சொல்கின்றார்
“மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில் சூழ் புளமங்கை
என்னானவன் இசையானவன் இள ஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே”
ஆம், இந்த ஆலயம் மன்னர்களை உருவாக்கும் ஆலயம் சோழமன்னர்கள் அப்படித்தான் உருவானார்கள்
இந்த தலத்தில் வந்து வணங்கினால் உடல் ரீதியாக தோல்நோய் நீங்கும், அப்படியே தலமை பண்பும் தெய்வீக மனநிலையும் வைராக்கியமும் பெரும் ஞானமும் குடும்பத்தை காத்து வழிநடத்தி எதிரிகளை எதிர்ப்புகளை ஒழித்து குலத்தை நடத்தி செல்லும் எல்லா வளமும் பலமும் கைகூடும்
அரச் பதவியும் ஒரு குடும்பத்தை பெண் நடத்தும் காரியமும் ஒன்று, ஆட்சியும் நிர்வாகமும் அவ்வளளவு சிரமமனாது
குடிகளை காத்து நிதிகளை பெருக்கி ஒரு மன்னன் ஆட்சி செய்வது எவ்வளவு கடினமோ அப்படி குடும்பத்தை நடத்தி செல்வதும் ஒரு ஞானம்
அந்த ஞானத்தையும் வைராக்கியத்தையும் அன்னை தருவாள், ஆபத்துக்களை முறியடித்து வெற்றி தருவாள்
நீங்கள் குழப்பங்களில் இருக்கலாம், எதிரிகளின் அச்சுறுத்தலில் இருக்கலாம், வழிநடத்த யாருமில்லா நிலையில் இருக்கலாம்
பெரும் பொறுப்பும் கடமையும் உங்கள் மேல் சுமத்தபட்டும் அதை செலுத்தும் அளவு அறிவோ திறமையோ தைரியமோ இல்லாதவராக இருக்கலாம்
அந்நிலையில் நீங்கள் அன்னை சாமுண்டீஸ்வரியினை வனங்கினால் எல்லா ஞானமும் அறிவும் தைரியமும் வீரமும் கைகூடும்
அவளின் சப்த கன்னியர் த்லம் ஆலந்துறை எனும் திருப்புள்ளமங்கை, அங்கு சென்று வழிபடலாம்
முடிந்தவர்கள் மைசூர் சாமுண்டீஸ்வரியினை சென்று தரிசித்து வரலாம் பெரும் ஞானமும் அறிவும் வீரமும் வாய்க்க கடவீர்கள்
கேரளாவின் கரிக்கதம்மன் சாமுன்டி இன்னும் விஷேஷம்
இந்த மூன்று ஆலயங்களுமே மன்னர்கள் வழிபட்ட ஆலயம் மூன்றுமே பெரும் ஆட்சிக்கான ஞானம் கொடுத்தவர்கள், குடும்ப கலையும் அப்படியானதே
சாமுண்டி என்பவள் மகா காளியின் ரூபம், அவளே மஹாலட்சுமி, மஹா சக்தி, மஹா சரஸ்வதி என மூன்றுமாக நிற்கின்றாள்
இந்த கல்வி, செல்வம், வீரம் என மூன்றையும் அவள் வழங்குவாள், இதை பெற்றவர்கள் அரசவாழ்வு வாழ்வார்கள், இந்த யோகத்தை ஒருங்கிணைய பெற்ற எல்லோரும் அரச வாழ்வு கொண்டவர்கள்
குடும்பங்களில் ராஜபோகம் கிடைக்க, ராஜவாழ்வு வாழ அன்னை அருள்செய்வாள், அதைத்தான் அவளின் ஆலயங்களும் அவள் வரலாறும் அவளை நம்பி சென்று வரமும் நலமும் பெற்றோர் வாழ்வும் சொல்கின்றது
அன்னைக்கான ஸ்லோகம் இதோ
“ஓம் பிசாசத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்”
அவளுக்கான காயத்ரி மந்திரம் இதோ.
“ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே சக்ரதாரிணி தீமஹி
தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்”
அன்னையினை வணங்கி வர வர அவள் கவசமாய் நின்று காத்து பெரும் அதிகாரமும் செல்வாக்கும் அருளி தெய்வநிலைக்கு உயர்த்துவாள். அவளை அண்டினால் அக்குடுமப்ம், அக்குலம், அந்த நாடு பெருவாழ்வு வாழும்
கேரள சாமுண்டி மைசூர் சாமுண்டி ஆலந்துறை சாமுண்டி என எல்லா சாமுண்டி ஆலயமும் அதை சொல்கின்றது, அவளை நம்பி பணியுங்கள் உடலுக்கு தோல்போல் அவள் உங்களுக்கு கவ்சமாய் இருந்து தனி செல்வாக்கும் தனி அங்கீகாரமும் தனித்துவ பெருமையும் தருவாள்
அப்படியே எதிரிகள் இல்லாத பெருவாழ்வு, ஆனந்த வாழ்வு, இறை அம்சத்தோடு கூடிய தெய்வீக வாழ்வினை அவள் தருவாள் அது சத்தியம்.