திருமுருகாற்றுப்படை : 17
(261 முதல் 270 வரையான வரிகள்)
“மாலை மார்ப நூலறி புலவி
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள”
“மாலை மார்ப” என்றால் மாலை அணிந்த மார்பை உடையவன் எனப் பொருள். முருகப்பெருமான் எப்போதும் வெற்றிமேல் வெற்றி பெறுபவன். அதனால் புத்தம் புது மாலைகளை எப்போதும் அணிந்திருப்பவன். நெஞ்சில் ஈரம் கொண்டவன் என்பதைக் காட்ட ஈரமிக்க மலர்களை மணமிக்க மலர்களை அணிந்திருப்பான். அதைச் சொல்கின்றார் நக்கீரர்.
“நூலறி புலவி” தமிழகம் எல்லா காலத்திலும் அறிவுக்கும் ஞானத்துக்கும் பெயர்பெற்ற பூமி. மூவேந்தர்கள் மோதிக்கொள்ளும் காலத்தில் கூட புலவர்களை, மேதைகளைக் கொண்டாட எந்த தமிழக நாடுகளும் தயங்க வில்லை.
எந்த நாட்டவன் என்றாலும் எல்லா இடத்திலும் மதிப்பு இருந்தது, “கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” எனச் சொன்ன மண்ணும் இதுதான்.
அந்த தமிழகத்தில் தமிழ்ச் சங்கங்கள் அன்றே பிரதானமாய் இருந்தன. பெரும் சங்கம் மதுரையில் இருந்தாலும் பல கற்றவர் சங்கங்கள் காஞ்சி, பழையாறை, கரூர், வஞ்சி எனப் பல இடங்களில் இருந்தது.
அந்த இடங்களிலெல்லாம் முருகப்பெருமானே தலைவனாகக் கொண்டாடப் பட்டான். முருகப்பெருமானை கற்றவர் சபையின் தலைவனாக வைக்கும் வழமை இருந்தது.
அதைத்தான் “நூலறி புலவ” என்கின்றார் நக்கீரர்.
இது பற்றி புராணக் கதை உண்டு. திருவிளையாடல் புராணத்திலும் இக்கதை வரும்.
பாண்டிய நாட்டில் ஒரு முறை பெரும் பஞ்சம் வந்து பன்னிரெண்டு ஆண்டுகள் நாடு பாழானது. மக்கள் வெளியேறி எல்லாம் வறண்டது. தமிழும் அதன் இலக்கணக் கூட்டமும், அவையும் சீரழிந்தது.
பின் நாடு செழித்தபோது பாண்டியன் எல்லாவற்றையும் மீள உருவாக்கினான். அப்போது பக்தி இலக்கணத்தை இன்னும் சில விஷயங்களை மீள உருவாக்க முனைந்தான்.
அதற்கு ஆலவாய் நாதனையே வேண்டினான்.
வடமொழியில் முருகப்பெருமான் அருளிய “கெளமார வ்யாகரணம்” நூல் உண்டு. அப்படி ஒன்று தமிழுக்கும் வேண்டும் என விரும்பினான் மன்னன்.
ஆலவாய் நாதனிடம் அதுபற்றி வேண்ட செப்புத் தகட்டில் எழுதப்பட்ட சூத்திரத்தை சிவன் கொடுத்து மறைந்தார். அந்த சூத்திரத்துக்கு 49 புலவர்கள் உரை எழுதினார்கள்.
எதை ஏற்பது என மன்னன் அடுத்து குழம்பினான். அப்போது முருகப் பெருமான் அம்சம் கொண்ட உத்தம ஜென்மன் எனும் சிறுவன் உண்டு. அவன் ஊமை என்றாலும் முருகன் அம்சம். அவனை அழைத்து வந்து சரியானதை தேர்வு செய் என்றார் சிவன்.
அப்படி அச்சிறுவன் முன்னால் 49 சூத்திரங்களும் வாசிக்க ஏற்பாடாயிற்று. அவன் நக்கீரர் எழுதியதையே தேர்ந்தெடுத்தான். அதுதான் “இறையனார் அகப்பொருள்.”
ஆம், முருகப்பெருமானேதான் நூல்களுள் எது சிறந்த நூல் எனக் காட்டிக் கொடுத்தார். அதன் பின்பே நக்கீரர் தலைமைப் புலவரானார்.
அதைத்தான் சொல்கின்றார் நக்கீரர்.
அடுத்து “செருவில் ஒருவ பொருவிறல் மள்ள” என்கின்றார்.
“செருவில் ஒருவ” என்றால் முருகன் களத்தில் நின்ற காட்சி. தனி ஒருவனாக அவன் நின்று சூரனை வதம் செய்த அந்தக் காட்சியினை சொல்கின்றார்.
“பொருவிறல் மள்ள” என்றால் போரில் வெற்றிபெறும் மள்ளனே, அதாவது வீரனே என்கின்றார்.
போர்க்களத்தில் தனித்து நின்று வெற்றிபெரும் பெரும் வீரனே என்பது வரியின் பொருள்.
அடுத்து “அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை” என்கின்றார்.
வெறுக்கை என்றால் செல்வம் எனப் பொருள். அந்தணர்களின் செல்வம் வேதங்களும் யாகங்களும். அந்த அந்தணர்கள் கருவூல அதிகாரி போல் காத்து நிற்கும் செல்வங்கள் அவை. அவர்களுக்கு முருகப்பெருமானே காவலாய் நின்று காக்கின்றார் என்பது பொருள்.
“அறிந்தோர் சொல்மலை” என்றால் மெய்யுணர்வை அறிந்தவர்கள் முருகப்பெருமானை பற்றி பாடும் சொற்களின் குவியல் மேல் அவன் அமர்ந்திருக்கின்றான் என்பது.
அடுத்த வரி “மங்கையர் கணவ மைந்தர் ஏறே” தேவயாணி வள்ளி என இரு மங்கையரின் கணவனாக விளங்குபவனே. அவர்களை மணந்ததால் பெரும் புகழ்பெற்றவனே எனப் பொருள்.
அடுத்து ‘வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ” என வரும்.
ஆயுதங்களில் அஸ்திரம், சஸ்திரம் என இரண்டு உண்டு. அஸ்திரம் என்றால் மந்திரங்கள் சொல்லி ஏவுவது. சஸ்திரம் என்றால் கையில் வாள், கதை போல் வைத்து போர் புரிவது.
வேல் இரண்டு வகை ஆயுதமாகவும் பயன்படும். அந்த வேலை கொண்டிருக்கும் வலுவான கைகளைக் கொண்டவன் அவன் வேலாயுதன் என்பது வரியின் பொருள்.
“குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ” என்பது அடுத்த வரி.
ஒரு வினோதமான விஷயத்தைச் சொல்லி சிலாகிக்கின்றார் நக்கீரர். முருகன் கிரவுஞ்ச மலையினைத் தகர்ததவன். அதனால் அவனை “குன்று எரித்த குமரன்” என்பார்கள்.
அப்படியான முருகன் வான்வரை உயர்ந்த குறிஞ்சி நிலைத்தின் தலைவன் (கிழவன்) என்றாகின்றான்.
அடுத்து “பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே”
முருகப்பெருமான் பாரத கண்டத்தின் எல்லா மொழிகளிலும் எல்லா இனங்களாலும் வணங்கப்படும் தெய்வம். சனாதன தர்மத்தில் இருந்து பிரிந்துபோன சமயங்களில் கூட அவன் வழிபாடு மறைமுகமாக உண்டு.
அப்படி மொழிகளை, இனங்களை, சமயங்களைக் கடந்து எல்லோராலும் போற்றப்படும் பாடப்படும் முருகன் என்பது பொருள்.
அடுத்து “அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக” என்கின்றார். அதாவது மரபு என்றால் வரலாறு எனப் பொருள்.
யாருக்கும் இல்லா வரலாற்றை கொண்டவனே. ஆதி முதல் எக்காலமும் வரலாற்றில் பெரும் இடம் பிடித்துவிட்ட முருகப்பெருமானே எனப் பொருள்.
அடுத்து “நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள” என வரும். அதாவது தன்னை நம்பிவரும் அடியார்க்கு அவர் விரும்பியதையும் பெரும் புகழையும் தரும் சிறப்பினை உடையவனே என்பது பொருள்.
ஆக முருகப்பெருமானின் வீரம், அன்பு, அறிவு, வேத ஞானம், பெருமை வரலற்றில் அவன் நிற்கும் பேறு என எல்லா பெரிய அடையாளங்களையும் சொல்லி அவனைப் புகழ்கின்றார் நக்கீரர்.
முன்பு சரவணபவனே, கார்த்திகேயனே, சிவகுமாரா, பார்வதி மைந்தனே, கந்தப் பெருமானே, துர்க்கா சுதா, பராசக்தி மகனே, தேவசேனாதிபதியே என்றெல்லாம் முருகனைப் போற்றியவர் அதன் தொடர்ச்சியாக இப்படி பாடுகின்றார்…