திருமுருகாற்றுப்படை : 18
(271 முதல் 289 வரை உள்ள வரிகள்)
“அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக்
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,
‘அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்
பெரும!நின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇ”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
“அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேய்” ‘அலந்தார்’ என்றால் அல்லல்லுற்றோர் ஒன்றுமில்லாமல் எல்லாம் இழந்து நிற்போர், உதவி எதிர்பார்ப்போர் எனப் பொருள்.
தேவர்கள் எல்லாம் இழந்து நிற்கதியாய் நின்றபோது முருகப்பெருமான் அவர்களுக்காக போராடி சூரனை அழித்து அவர்களைக் காத்தார். அப்படியானவன் முருகப்பெருமான். அதனால் “நிர்கதியானவர்களை காக்கும் பொன் அணிகலன்களை அணிந்த தெய்வக் குழந்தையே” என்கின்றார் நக்கீரர்.
அடுத்து சொல்கின்றார்.
“மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்”
அதாவது ஒரு பெருவீரன் தான் போரில் பகைவரை அழித்து பெற்ற பொருளை தான் வென்ற அரசனின் பொருளை, தன் வீரத்தால் விளைந்த பொருளை தன்னை நாடி வருவோர்க்கு பரிசாகத் தந்து மகிழ்வான்.
அப்படி முருகப்பெருமான் பெரும் வீரன். தோல்வியே இல்லாத வீரன் என்றாலும் தனக்கென ஏதும் வைக்காமல் தன்னை நாடி வருவோருக்கே அனைத்தையும் தருவான் என்கின்றார் புலவர்.
“பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்” அதாவது பிரம்மன் முதலான தேவர்கள், ரிஷிகள், ஞானியர் என எல்லா பெரியவர்களும் போற்றும் முருகப்பெருமானே எனப் பொருள்.
“சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி” என்றால் சூரனின் வம்சத்தை மொத்தமாக அழித்துப் போட்ட வலிமை மிக்க மார்பை உடையவனே எம்பெருமானே எனப் பொருள்.
“போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது”
குரிசில் என்றால் உபகாரி எனப் பொருள். போர்களை விரும்பிச் செய்யும் முருகனே, நல்லோர்க்கு உபகாரியே இப்படியெல்லாம் உன்னை என்னால் இயன்ற அளவு போற்றி துதிக்கின்றேன். ஆனால் இது முழுமையானது அல்ல எம்பெருமானே எனப் பொருள்.
“நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்’
முருகப்பெருமானே உன்னை அண்டி வந்து உன்னில் கரைந்து நிற்பதும் உன் பெருமை பாடுவதும் உயிர்களுக்கு மிக மிக இனிமையான விஷயம் என்பதால் உன்னைத் தேடி வந்து, விரும்பி எண்ணிப் பாடினேன் என்பது பொருள்.
“உள்ளி” என்பது இங்கு எண்ணி எனப் பொருளாகின்றது.
“நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்!” முருகப்பெருமானே உன்னோடு ஒப்புமை சொல்ல முடியாத அளவு யார் உண்டு? யாரோடும் ஒப்பிட முடியாத பெரும் ஞானம் கொண்ட எம்பெருமானே.
“குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்” இன்னும் எவ்வளவோ சொல்ல இருந்தாலும் சொல்ல மொழியில்லையே எம்பெருமானே.
“வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி”
அதாவது முருகப்பெருமானுக்கு ஆலயங்களும் அடியார்களும் அதிகம். அங்கிருக்கும் அடியார்களெல்லாம் பக்தர்கள் பெருக வேண்டும், பெரும் கூட்டம் திரள வேண்டும் எனும் பெரும் விருப்பம் கொண்டிருப்பார்கள்.
அதனால் அவர்கள் பக்தர்கள் நடுவில் இருந்து உரக்கப் பாடுவார்கள். பரிசுபெற்ற புலவன் மன்னனை நோக்கி பாடுதல் போல் பாடுவார்கள்.
“அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்
பெரும!நின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்”
அந்த முருகன் ஞானமுடன் கூடிய கொடையாளி, யாருக்கு என்ன வேண்டுமோ அதை அள்ளி அள்ளித் தருவான். அவனின் பெருமைகளைச் சொல்லி, இனியதும் நல்லவைகளுமான வார்த்தைகளும் சொல்லி வேண்டினால் அவன் என்ன கேட்டாலும் தருவான் அவன் அரசனுக்கெல்லாம் அரசன். புரவலனுக்கெல்லாம் புரவலன் எம்பெருமான் எனப் பாடுகின்றார்.
“தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப்”
அந்த முருகப்பெருமான் வான் வரை உயர்ந்து நிற்பவன். மாபெரும் வல்லமை கொண்டவன் பெரும் வடிவானவன், நெடிய நீண்ட வடிவு கொண்டவன்.
அப்படியான முருகப்பெருமான் பக்தர்களுக்காக தன்னைச் சுருக்கிக் கொண்டு மிகச் சிறிய வடிவினனாக ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிகின்றான். தன் முழுத் திருக்கோலம் காட்டினால் பக்தர்கள் தாங்க மாட்டார்கள் எனக் கருதி மிகச் சிறிய மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கின்றான். அவன் அவ்வளவு கருணையும் இரக்கமும் அன்பும் எளிமையும் கொண்டவன் என உருகிப் பாடுகின்றார் நக்கீரர்.