திருமுருகாற்றுப்படை : 19
(290 முதல் 300 வரை உள்ள வரிகள்)
“மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி
அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர’வென
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும் அதி பலவுடன் . .
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல”
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
“மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி” என வரும். மணமும் நல் மனமும் அருளும் இளமையும் அழகும் இணைந்த திருக்கோலம் காட்டி நிற்பான் முருகப்பெருமான் என்பது பொருள்.
அவனை கண்டாலே மனம் மகிழும் இளமையான அவன் திருக்கோலம் பெரும் மகிழ்வைத் தரும் என்கின்றார் நக்கீரர்.
அடுத்து முருகப்பெருமான் என்ன சொல்லி அருள்புரிவான் என்பதைச் சொல்கின்றார் நக்கீரர்.
“அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று”
என் மகனே அஞ்சாதே, நான் உன் வரவை முன்பே அறிந்திருக்கின்றேன் என அன்புடைய நல்ல மொழிகளைச் சொல்லி முருகப்பெருமான் வரவேற்பான் என்பது பாடலின் பொருள்.
ஒரு பெரிய தனவந்தனை, அரசனை, செல்வாக்கு படைத்தவனைக் காணச் செல்லும் போது மனிதரிடம் ஒரு பயமும் அச்சமும் வருவதுண்டு.
அதுவே அரசர்க்கெல்லாம் அரசனும் கடவுளுக்கெல்லாம் கடவுளுமான முருகப்பெருமானைக் காணச் செல்லும் போதும், அவனிடம் அருள்வாங்கச் செல்லும் போதும் வரும்.
அப்படி அஞ்ச வேண்டாம், அஞ்சாதீர்கள், பதறாதீர்கள், நீங்கள் வருவதை அறிந்தவன் நாம். அதனால் உங்களை வரவேற்கின்றேன் என நல்ல மொழிகளைச் சொல்லி வரவேற்பான் முருகப்பெருமான் என்கின்றார் புலவர்.
அடுத்து பாடுகின்றார்.
“இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்”
இந்த உலகத்தை கடல் சூழ்ந்துள்ளது. சூரிய ஒளி இல்லாவிட்டால் அக்கடல் இருளாய்த் தெரியும். உலகைச் சுற்றி இருளே ஆளும், சூரியன் வந்தால் வெளிச்சம் வரும்.
அப்படி அறியாமை இருளில் இருக்கும் உன்னில் அறிவுச் சுடரை முருகன் தருவான். உன் உலகம் அறிவும் ஞானமும் பெற்று வெளிச்சமுமாகும். இந்த உலகில் நீ தனித்துத் தெரியும்படி முருகன் நன்மைகளைத் தருவான் என்பது பொருள்.
மானிடர் குறைவுள்ளவர், அவர் அரசரோ செல்வந்தரோ யாராக இருந்தாலும் ஒரு குறை இருக்கும். அவர் தரும் பொருளும் முழு நிறைவுடன் இல்லாமல் குறைவானதாகவே இருக்கும்.
அப்படியான மானிடர் குறைவான பரிசையே தருவர். முருகப்பெருமானோ நிறைவான ஞானமான விஷயத்தை முழுமையாகத் தருவான் என்கின்றார் நக்கீரர்.
அதாவது மரணமில்லா பெருவாழ்வை முருகப்பெருமான் தருவான் என்பது அவர் சொல்லும் போதனை.
அடுத்து பழமுதிர்சோலையின் அழகைச் சொல்கின்றார் நக்கீரர்.
“அதி பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி”
அதாவது பல சிறிய ஒடைகள் ஒன்றாகச் சேர்ந்து அருவியாகி ஒரு துணி ஒன்று காற்றில் அசைவது போல அசைந்து விழும் அருவிகளைக் கொண்ட மலை என்கின்றார்.
அருவி விழும் அழகு காற்றில் துணி பறப்பது போல் இருக்கும் என வர்ணிக்கின்றார். அது முருகப்பெருமானின் கொடிபோல் தோன்றும் என அழகாக உருவகப்படுத்திப் பாடுகின்றார்.
“அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு”
அந்த அருவி சும்மா வரவில்லை. அது அகில் சந்தனம் ஆகிய மரங்களை உலுக்கி எடுத்து வருகின்றது. அதனால் மணமிக்க நீரைக் கொண்டிருக்கின்றது. இன்னும் கானக மரங்களின் மலரெல்லாம் கொட்டிக் கிடப்பதால் அந்த அருவி மிக்க மணமிக்க நீரைக் கொண்டு வீழ்கின்றது என்கின்றார்.
அடுத்து பாடுகின்றார்.
“விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல”
அந்த அருவி அப்படி மணம் மட்டும் கொண்டு வரவில்லை. வான்வரை வளர்ந்து நிற்கும் மலை உச்சியில் சூரியனைப் போல பெரிதான தேனடைகளை சிதைத்து அள்ளி வருகின்றது.
“அலரிறால்” என்ற வார்த்தை கவனிக்கதக்கது. அலர்+இறால் எனப் பொருள். அலர் என்றால் விரிந்த, இறால் என்றால் தேன்.
ஆம் இறால் எனும் வார்த்தைக்கு சிவந்த தேன் எனப் பொருள். தமிழ் இலக்கணம் அதைத்தான் சொல்கின்றது.
அப்படித் தேனடைகளை சிதைத்து தன்னோடு கலந்து வரும் நீர் என்கின்றார் நக்கீரர்.
அதாவது பழமுதிர்சோலை அருவிகள் மணமும் தேனும் கலந்தவை. சந்தனம் தேன் என எல்லாம் கலந்து வரும் அருவி நீர் அது.
அந்த அருவி நீரால் முருகனுக்கு அபிஷேகம் நடக்கும். அதனால் சந்தன அபிஷேகம் தேன் அபிஷேகமெல்லாம் தனித்து நடக்காமல் ஒன்றாகவே நடக்கும்படி அங்கே முருகப்பெருமானுக்கு இயற்கையே அபிஷேகக் கலவையினை அருவியாகத் தருகின்றது என அதன் வளத்தை மிகச் சரியாக உவமித்துப் பாடுகின்றார் நக்கீரர்.