காளிதாசனின் சாகுந்தலம் : 04
சாகுந்தலை குனிந்து செடிகளுக்கு நீரூற்றும் அழகில் சொக்கிவிட்டான் துஷ்யந்தன், பொன்னிறமான அழகிய குட்டி மேகம் வானவில் மின்ன இறங்கி வந்து ஒரு செடிக்கு மட்டும் மழை பொழிவது போல் அவள் நீருற்றி கொண்டிருந்தாள.
அவன் மயங்கி கொண்டிருந்தான்
அந்த மயக்கத்திலே தன் குழப்பத்தையும் அந்த குழப்பத்தின் முடிவினையும் மனதிடம் சொன்னான்
புயல்காற்று அலைகழித்த மரகலம் போல் அவள் அவனை உலுக்கியிருந்தாள், பெரிய அலை ஒன்று வீசியடித்த படகு கரையில் கிடப்பது போல் அவன் மனம் சலனற்று கிடந்தது
மழையுடன் கூடிய சூறாவளியில் சிக்கிய பறவை நன்கு நனைந்து ஒடுங்கி பின் மெல்ல பறக்க முயல்வது போல அவன் தன் மனதிடம் சொன்னான்
“மனமே இவள் உண்மையிலே துறவியர் குல மகளாக இருக்க முடியுமா? ஒரு அரசனுக்கு ராஜகுடும்பத்து பெண்ணின் வனப்பு தெரியாதா? அந்த அளவு உணரமுடியாதவனா நான்?
மயில் ஒன்றை கிளிகளுடன் கண்டால் மயிலென்று கண்டுகொள்ள என்ன தயக்கம்? அதனிடம் நீ மயிலினம் அல்லவா, கிளிகளுடன் என செய்கின்றாய் என ஏன் நான் கேட்டு தெரிந்துகொள்ள கூடாது சொல்?
அவளின் அழகென்னும் கடலில் மூழ்கி மூழ்கி ஆனந்தமடைந்ததால் இதை சொல்கின்றேன்
நல்லோர் மனமெனும் தராசின் முள் சரியான பக்கமே சாயும், என் மனம் அவள்பால் சாய்கின்றது என்றால் அவள் நிச்சயம் அரசகுலமாகத்தான் இருக்கமுடியும்
அதை இனி கேட்டுவிடுவேன் மனமே, அது மட்டும் தெரிந்து கொள்வேன், ஆனால் அதன்பின் நான் உலகின் அதிபாக்கியசாலியா இல்லை உலகிலே அதிக துரதிருஷ்டம் பிடித்தவனா என்பதும் தெரியவரும் மனமே”
அவன் இப்படி மனத்தோடு சொல்லி கொண்டிருக்க அங்கே சாகுந்தலை ள் குனிந்து செடிக்கு தண்ணீர் ஊற்றிய நேரம் ஒரு வண்டு அவள் முன் வந்து முகத்தில் முட்டிற்று, அதன் பின்னும் செல்லாமல் அங்குமிங்கும் அவள் முகத்தை சுற்றியபடி ரீங்காரமிட்டது
பதறிய சாகுந்தலை தன் கையின் குடத்தை கீழே வைத்துவிட்டு முகத்தை மூடி கத்தினாள் “தோழியரே என்னை இந்த வண்டிடம் இருந்து காப்பாற்றுங்கள், அது என் முகததில் கடித்து வைத்துவிட்டு மீண்டும் கடிக்க வருகின்றது, காப்பாற்றுங்கள், விரைந்து வாருங்கள்” என அஞ்சி சொன்னாள்
மறைந்திருந்து அதனை கண்ட துஷ்யந்தன் சொன்னான்
“ஓ, பாக்கியம் பெற்ற நல்லவண்டே, நான் அவளை பற்றி சிந்திக்கும் போதே நீ அவள் முகம் தொடும் பாக்கியம் பெற்றுவிட்டாய், என்ன புண்ணியம் செய்தனை நீ? இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?
அவள் முகத்தை தொட்டதால் இந்த மன்னனை விட நீ பெரியவனாகிவிட்டாய்
அழகான குளிர்ந்த நிலவின் சிறிய கருமை வெளியேறி வண்டாக மாறி அந்த களங்கமில்லா நிலவுக்குள் புக முயல்தல் போல் அவள் முகத்தின் முன் சுழலும் வண்டே நீ வாழ்க..
அவள் அஞ்சி படபடத்து நடுங்குகின்றாள், நீ அவளை தொட்டுவிட்டாய்
நான் அவளை தொட விரும்பினேன் ஆனால் நீயோ தொட்டேவிட்டாய் என்ன வரம் உனக்கு, யார் கொடுத்த அருள் உனக்கு?, அதுமட்டுமா பெற்றாய் அவள் இதழின் கனிசுவையினை சுவைக்கும் பெரும் தவபயனையும் பெற்றாய்
நான் ஆசைபட்டதை நீ அடைந்தே விட்டாய், தான் தோற்றுவிட்டேன் நீ வென்றுவிட்டாய்
உண்மையினை சொல், அவள் முகம் மலர் என்று தேனருந்த வந்தாயோ, அசையும் அவள் கண்கள் வண்டென்று அது உன் இனமென்று காதல் சொல்ல சென்றாயோ?
அந்த காதலை அடைந்துவிடலாம் என சுற்றி சுற்றி பறக்கின்றாயோ?
நான் அவள் யார் என சிந்திக்கும் முன்பே நீ அவளை தொட்டுவிட்டாயே, அந்த மயக்கும் அழகின் கன்களின் இமையின் வேகம் போல் உன் சிறகுக்ளை அசைத்து அவள் விழியோரமே சென்றுவிட்டாய்
உன் சிறகுகளை அசைக்கும் வித்தையினை அவள் கண் இமைகள்தானே உனக்கு கற்றுதந்தது..
வண்டே அவள் காதோரம் ஏன் செல்கின்றாய்?? அங்கே தேனமுதம் தேடுகின்றாயோ?, இல்லை நீ எதற்கு சென்றாய் என்பதை நானும் அறிவேன்
நீ அவளிடம் உன் காதலை மெல்லிய மயக்கும் குரலில் ரீங்காரமாய் சொல்கின்றாயோ?, அவள் மனதில் ஆசைவிதை விதைக்கின்றாயா?
முளைவிட்டும் இலைவிடா பருவம் போல் இருப்பவளிடம் என்ன சொல்கின்றாய் வண்டே?
நீ எப்படிபட்டவன் என எனக்கு தெரியாதா?, நீதான் மலரை காயாக்குவாய், உன் மகரந்த சேர்க்கையால்தான் பூ காயாகி கனியாகும், அந்த வித்தை செய்பவன் நீ என்பதை நான் அறிவேன், அங்கு என்ன செய்கின்றாய் சொல்?
அப்படிபட்ட நீ அவளிடம் ஏதோ செய்வதை நான் அறிவேன் வண்டே, அவள் கையால் தடுத்தாலும் உன் காரியத்தில் என்னைபோலவே கவனமாக இருக்கும் வண்டே நீ வாழ்க”
அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே சாகுந்தலை சொன்னாள்
“தோழிய்ரே, வழிகேட்ட வழிபோக்கனிடம் வழி சொன்ன பின்னாலும் அவன் செல்லாமல் சுற்றுவதை போல இந்த வண்டு சுற்றிகொண்டிருக்கின்றது
போ என சொன்னாலும் அப்புறமாய் செல்கின்றேன் என சொல்லிவிட்டு சுற்றுபவனை போல் சுற்றுகின்றது,
நான் செய்த வினைபயன் போலே என்னை சுற்றி சுற்றி வருகின்றது, அய்யோ இது என்ன என் உதட்டோரம் கடிக்க வருகின்றது. தோழியரே வந்து என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்களடி” என்றாள்
ஆற்றுநீர் பாறையில் மோதுமிடமும் அழகு மங்கையர் கூடுமிடமும் ஆரவாரங்கள் தெறிக்குமிடம், அனுசுயை சொன்னாள்
“எவ்வளவு பெரிய ஆபத்தம்மா? இதிலிருந்து உன்னை காக்க நாங்கள் யாரம்மா? இப்போது உன்னை காப்பாற்ற அந்த துஷ்யந்த மன்னனால் மட்டும்தான் முடியும்
உலகையும் ஊரையும் இந்த துறவியர்வாழ் கானகத்தையும் காக்கும் மன்னன் உன்னை காக்கவும் வருவான், ஏனென்றால் இந்த ஆபத்தை அவனால்தான் களையமுடியும்”
சொன்னவர்கள் சிரித்தார்கள், துஷ்யந்தனுக்குள் ஒரு வேகம் வந்தது
“நான் எவ்வளவு நேரம்தான் மறைந்திருப்பது? நீண்ட நேரம் மறைந்திருப்பது நல்லதுமன்று. என்னை நான் வெளிபடுத்த இது சரியான நேரம்
மகாபலி முன் வாமனன் விஸ்வரூபம் காட்டியது போல் நான் அவர்கள் முன் இப்போது செல்ல போகின்றேன், நானே துஷ்யந்த மகாராஜா என சொல்லபோகின்றேன்” என சில அடிகளை எடுத்து வைத்தான்
வண்டோடு போராடிய சாகுந்தலை அஞ்சி கத்தியபடியே சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து அங்குமிங்கும் ஓடினாள், காற்றில் பூ ஆடுவது போலவும் அந்த ஆடும் பூமேல் அமர முடியாமல் வண்டு தவிப்பது போல் அந்த அழகிய காட்சி இருந்தது
சட்டென முன் வந்த துஷ்யந்தன் சொன்னான்
“மகா பராக்கிரமம் கொண்ட மனனவன் நல்லோரை காப்பதற்கே மாசற்றதும் புகழ்மிக்கதுமான செங்கோலை ஏந்தியுள்ளான், அவன் ஆணையே அறத்தோடு எங்கும் தழைத்து நல்லோரை காத்திருக்கும்
எல்லோர்க்கும் இந்த உண்மை தெரியும் போது, யார் இங்கே பெண்களுக்கு தீங்கு புரிவது, என்ன சத்தம் இங்கே? இந்த வெகுளி பெண்களுக்கு தீங்கிழைப்பவன் யார்? இங்கே அஞ்சி கத்தியது யார்? “
அவனை கண்ட மூவரும் அதிர்ந்தனர், யார் இவன் இங்கே எப்படி வந்தான் என திகைத்தனர்
சாகுந்தலை அவனை கண்டு மின்னல் தாக்கியவள் போல் சிலையாய் சமைந்தாள், பிரியவ்மதை அஞ்சி பம்மினாள், அனுசுயை மெல்ல பணிந்து சொன்னாள்
“பெரிய ஆபத்தெல்லாம் இல்லை அய்யா, ஒரு வண்டு வந்து அவள் முகத்தில் மோதிற்று, அவள் அஞ்சி அலறிவிட்டாள்” என அவளை கைகாட்டினாள்
துஷ்யந்தன் சாகுந்தலையினை மிக அருகில் கண்டான், தெய்வத்தை அருகில் கண்ட பக்தன் போல் பரவசமானான்
அவளோ அவனை கண்டு அஞ்சி அவனை பார்க்கமுடியாமலும் அதே நேரம் பார்வையினை விலக்க முடியாமலும் தவித்தாள், செய்வதறியாது சிலைபோல் நின்றாள்
தெய்வ விக்ரஹத்தை முதன் முதலில் அருகிருந்து ஒரு பக்தன் பார்ப்பது போல் அக்காட்சி இருந்தது
இருவர் கண்களும் சந்தித்தன, இருவர் மனமும் நெருங்குவதை இருவராலும் உணரமுடிந்தது, அவள் கலையா ஓவியம் போல் நின்றாள், அவன் அவள் கண்களை உற்று நோக்கினான்
அக்கன்கள் குறிப்பால் தோழியரை அடையாளம் காட்டுதலை நொடியில் உணர்ந்தான், பாறைக்குள் யாருமறியாமல் இறங்கும் வேர்போல அவள் குறிப்பு அவனுள் இறங்கிற்று
அவன் சுதாரித்தபடியே சொன்னான் , “இங்கே முனிவர்கள் அமர்ந்து தவம் செய்வது போல் இப்பெண் சிலையாய் நின்று தவம் செய்கின்றாளே? அந்த தவத்துக்கு ஏதும் இடைஞ்சல் வந்துவிட்டதோ”
சகுந்தலை முகத்தில் நாணம் மின்னலாய் வெட்டிற்று ஆனால் அச்சம் மழையாய் கொட்டிற்று
அனுசுயை மெல்ல கேட்டாள், அய்யன்மீர் நீங்கள் யார்?
நான் இங்கே விருந்தினராக வந்தேனம்மா என்றான் துஷ்யந்தன், முனிவரை பார்க்க வந்தவர் என நினைந்து அவசரமானாள் அனுசுயை
“சகுந்தலையே இவர் விருந்தினராய் வந்துள்ளார், அவரை உபசரிப்பது நம் கடமையன்றோ? குடிலுக்குள் சென்று நல்ல கனிவகைகள் எடுத்துவந்து படைப்போம், உயர்ந்த உணவளிப்போம், விரைந்து வா
அந்த குடத்தில் மீதமிருக்கும் நீரை அவர் காலை அலம்ப டுக்கலாம், அவரை நன்றாக உபசரிப்போம் அது இந்த குடிலின் தர்மம் அல்லவா?”
துஷ்யந்தன் குறுக்கிட்டான்
“பெண்களே, நீங்கள் என்னை வரவேற்ற அன்பான விதமே எனக்கு விருந்து உண்ட நிறைவினை தருகின்றது, இது போதும், வேறேதும் வேண்டாம்”
பிரியம் வதை சொன்னாள்
“எங்கள் மதிப்புமிகு விருந்தினரே அதோ அந்த பாலை மரத்தடியின் மண்ல் மேட்டில் அமருங்கள், வந்த களைப்பு இருக்குமல்லவா?”
துஷ்யந்தன் சொன்னான்
“உங்களுக்கு நீர் குடம் சுமந்த களைப்பு இருக்குமலவா?, நீங்களும் அமருங்கள்”
சாகுந்தலை கிளி ஒருவரை அவர் அறியாதவாறு பார்ப்பது போல் பார்த்தாள், அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
அவளை நோக்கி சொன்னாள் அனுசுயை “சாகுந்தலை, விருந்தினர் மனம் மகிழ நாம் அவருடன் அமர்ந்திருப்பதே சரி, வா அமர்ந்துகொள்வோம்”
அலை அலையா ஏதோ ஒரு உணர்வு அடிக்கும் மனதோடு அவர்களோடு அமர்ந்து கொண்டாள் சாகுந்தலை
எத்தனையோ போர்களில் கலங்காத அவன் மனம், எத்தனையோ அழகி கண்டும் புன்னகைத்து கடந்த அந்த மனம் முதன் முதலாய் அவளிடம் தள்ளாடியது
அள்ளி அள்ளி யாசகர்க்கு கொடுத்தவன் முதல் முறை மனதால் கையேந்தும் நிலையில் நின்றான்
சாகுந்தலையோ இனம்புரியா மயக்கத்தில் குழம்பினாள், தனக்குள் சொன்னாள்
“என்னாயிற்று எனக்கு? நான் ஏன் இப்படி இவரை கண்டதும் தடுமாறுகின்றேன், இங்கே துறவியர் குடிலில் ஒழுக்கமும் துறவுமே பிரதானம் என வளர்ந்த நான் இப்படி தடுமாறலாமா?
எவ்வளவு கட்டுபாடனவள் நான், ஆனால் அவரை கண்டதும் இல்லற ஆசையும் இனிய பர்வசமும் என்னில் எழுவது என்ன?
தலைவாழை குலைதள்ளி ஓயும்பொது அதனருகே கன்றுவாழை முளைத்தல் போலே என் தவவாழ்க்கை வீழ்ந்து இல்லற ஆசை எழுகின்றதே..என் உள்மனம் இப்படி ஆகிவிட்டதே” என குழம்பிகொண்டிருந்தாள்
மூவரையும் கண்ட துஷ்யந்தன் சொன்னான்
“அழகாலும் வயதாலும் நல்ல குணத்தாலும் ஒருமித்து நிற்கும் நீங்கள் மூவரல்ல ஒருவராகவே எனக்கு தோன்றுகின்றீர்கள், மூன்று முகம் கொண்ட குத்துவிளக்காக தோன்றுகின்றீர்கள், நீவீர் வாழ்க”
சாகுந்தலை தன் மனதிடம் சொன்னாள் “அவர் மட்டும் என்ன? குத்துவிளக்கு அருகில் இருக்கும் மன்னர் போல் அல்லவா இருக்கின்றார் மனமே”
துஷ்யந்தன் சொன்ன மொழிகேட்ட பிரியம் வதை தன் தோழிகளிடம் மெல்ல சொன்னாள்
“சாகுந்தலையே, ஆனிபொன் நகைபோன்ற மேன்மையும், மாமணியின் ஒளிபோல் உயர்ந்த குணமும், பணிவுமிக்க ஒப்புமையில்லா ஆண்மையும், இன்சொல்லும் கொண்ட மிக உயர்ந்த ஆன்மகன் இவர்
அவரின் இன்சொல் எவ்வளவு இனிமையானது, அவரின் பார்வை தவத்தில் உயர்ந்தோர் பார்க்கும் அருள்பார்வை போல் உள்ளது, அவரின் அரிய குணங்களை பூ தொடுக்கும் மாலை போல் தொடுத்து கொண்டே இருக்கலாம், அவ்வளவுக்கு உயர்ந்தவர் இவர்”
அனுசுயை அவர்களுடன் தொடர்ந்தாள்
“நானும் இந்த தகையாளன் யார் என அறிந்துகொள்ள உன்னைவிட பெரும் ஆவல் கொண்டிருக்கின்றேன் பிரியமவதை ” என்றவள் அவனிடம் கேட்டாள்
அவள் கேட்பதை மிக கவனமாக பதை பதைக்கும் நெஞ்சோடு பார்த்துகொண்டிருந்தாள் சாகுந்தலை
“அய்யா, இனிமையான மொழிகளை மொழிந்தீர்கள், அழகான வார்த்தைகளை சொன்னீர்கள். நானும் என் வெட்கத்தை எரித்துவிட்டு சில கேள்விகள் கேட்குமளவு இறங்கிவிட்டேன், மன்னிப்பீர்
உங்களை பார்த்தால் பெரிய இடத்து மனிதர்போல் தெரிகின்றது, நான் ஒன்று கேட்பேன் மறுக்காமல் மொழிவீராக
எந்த ரிஷி குடும்பம் அல்லது எந்த அரச குடும்பம் உம்மால் பெயர் பெற்று உயர்ந்திருக்கின்றதோ?
எந்த நாடு உம்மால் பெருமை அடைந்திருக்கின்றதோ?
எந்த மக்கள் நீங்கள் இங்கே வந்துவிட்டதால் பிரிந்து துயரபடுகின்றார்களோ? என நிறைய கேட்க விளைகின்றேன்
இப்படி நான் கேள்வி கேட்கத்தான் ஒரு சக்தி உங்களை இங்கு இழுத்துவந்து எம்முன் நிறுத்திற்றோ? இதையெல்லாம் எண்ணி குழம்புகின்றேன்”
அதை கேட்டு தாளமுடியா சகுந்தலை தன் நெஞ்சின்மேல் கைவைத்துசொன்னாள் ” நெஞ்சமே, ஏன் அதிகம் துடிக்கின்றாய்?, அமைதி கொள்
நீ என்னிடம் கேட்ட கேள்வியெல்லாம், என் தோழி அனுசுயை கேட்டுவிட்டாள் அமைதி கொள், அமைதி கொள், அவர் யாரென இனி தெரியும் அமைதிகொள்வாய் கண்டநேரம் முதல் அவருக்காய் துடிக்கும் நன்னெஞ்சே”
அவள் கேள்வி மொழி விழுந்ததும் துஷ்யந்தன் யோசித்தான், அவன் அரசன் எல்லா கலைகளும் பயின்றவன். அதிலும் எப்போது மாறுவேடம் பூணவேண்டும் எப்போது சரியாக களையவேண்டும் எப்போது என்ன பேசவேண்டும் என்பதெல்லாம் அவன் அறிந்தவன்
அதனால் தனக்குள் சொல்லிகொண்டான் “நான் யாரென இப்போது சொல்லபோவதில்லை, சொன்னால் இவர்கள் சிலவற்றை அச்சத்தால் மறைக்க கூடும்”
அவன் தொடர்ந்தான் “என்னை யார் என கேட்ட பெண்ணே இதோ சொல்கின்றேன்
நான் இந்த பௌரவ தேசத்து அரசனின் பணியாளன், என் கடமை பிரகாரம் இங்கே அனுப்பபட்டேன். நம் மன்னருக்கு மக்களுக்காய் தவம்புரியும் முனிவர்கள் உலக நலனுக்காய் வேதம் ஓதி யாகம் பல செய்யும் ரிஷிகள் மேல் பக்தி அதிகம்
யாகமும் தவமுமல்லவா ஒரு நாட்டை செழிக்க செய்யும் அதனால் இந்த துறவியர் குடில் பற்றி அறியவும் குறையிருந்தால் என்ன குறையென்று அறிந்து அதை களையவும் என்னை பணித்தார்
அதனாலே அறம் வளர்க்கும் இந்த வனத்தை, தவம் பழுக்கும் இந்த சோலையினை அடைந்தேன் இனி தவபயனை பெறுவேன் பெண்ணே” என்றான்
அனுசுயை மொழிந்தாள் “நல்லது அய்யா, இங்கு தவங்கள் செய்யும் முனிவர்க்கு எல்லா உதவியும் செய்ய புவிபோற்றும் ஒருவர் உண்டு” என சொன்னபடியே சாகுந்தலையினை பார்த்து ரகசியமாய் புன்னகைத்தாள்
அதை பிரிந்துகொண்ட பிரியம்வதை இழுத்தாள், ரகசியமாய் சொன்னாள்
“சகுந்தலையே இப்போது மட்டும் உன் தகப்பனார் இருந்திருந்தால் என்ன செய்வார் தெரியுமா”..’என சொல்லி கண்களில் குறும்பு மின்ன சிரித்தாள்
சாகுந்தலையிடம் மின்னல் போல் வந்த நாணமும், தொடரும் மருட்சியும் கண்ட அனுசுயை மெல்ல சொன்னாள்
“அவர் இருந்திருந்தால் தன் மொத்த களஞ்சியமும் தவற்றின் எல்லா பேறுகளின் குவியலுமான ஒன்றை இந்த விருந்தினருக்கு கொடுத்திருப்பார் தெரியுமா”
சாகுந்தலைக்கு நாணமும் மயக்கமும் அவளை மீறி வெளிபட்டது, சூரியனில் மிளிரும் தாமரை போல் நாணத்தில் மின்னினாள் ஆனாலும் சட்டென சுதாரித்தவள் “நீங்களெல்லாம் மனதில் எதையோ வைத்து கொண்டு பேசுகின்றீர்களம்மா, இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்” என சொல்லி தலையினை குனிந்து கொண்டாள்
ஆனாலும் சூரியனை நொக்கி நிமிரும் மலர் மொட்டுபோல் அவள் முகம் அவனை நோக்கி கொண்டிருந்தது
அவர்கள் பேசுவதை அறிந்தும் அறியாதவன் போலிருந்த துஷ்யந்தன் அனுசுயை நோக்கி சொன்னான் ‘பெண்ணே, நீங்கள் அனுமதி தந்தால் உங்கள் தோழிபற்றி விசாரிப்பேன்” என சாகுந்தலை நோக்கி சொன்னான்
ஆயிரம் வீணைகள் மனதில் இசைப்பது போல் சிலிரித்து கொண்டாள் சாகுந்தலை, பாற்கடல் அமுதத்தை யாரோ செவிகளில் ஊற்றுவதை போல் மகிழ்ந்தாள்
அனுசுயை பணிந்து சொன்னாள் ” மாண்புக்கு இலக்கணமானவரே, இந்த பண்புக்காகவே உமக்கு தலைவணங்குகின்றோம்
எம்மை கண்டு தூண்டிவிடாத விளக்குபோல் உம் பெருந்தன்மையில் பிரகாசிக்கும் நீர் சொன்ன சொற்களே எமக்கு போதும், கேட்க விரும்புவதை கேளுங்கள்”
தவம் செய்யும் பக்தன் முன் தெய்வம் வந்த நிலைக்கு வந்தாள் சாகுந்தலை
துஷ்யந்தன் கேட்டான் , “கண்வ முனி பெரிய பிரம்மசாரிய ரிஷி, அவரின் கடுமையான தவமும் பற்றறுத்த கோலமும் எல்லா உலகுக்கும் தெரிந்த விஷயம், அப்படி இருக்க இப்பெண் எப்படி அவளுக்கு மகளானாள்?, அதனால் நான் குழம்புகின்றேன், என் குழப்பம் தீர்ப்பீர்களா”
சாகுந்தலைக்குள் ஆயிரம் தீபங்களை ஏற்றிவைத்து யாருக்கோ காத்திருக்கும் பரபரப்பு வந்தது, இரையிடும் கரங்களை எதிர்பார்க்கும் புறாவினை போல் பரிதவிப்பில் இருந்தாள்
அனுசுயை சொன்னாள் “அந்த கதை நீங்கள் அறியவேண்டிய ஒன்றுதான், இதோ சொல்கின்றேன்”, என அவள் சொல்ல தொடங்கினாள்
“தெய்வமே உனக்கு நன்றி, என் மனமே நீ சரியாக அவளை கணித்தாய், இவள் இனி எனக்கானவள்” என புதையலை எடுத்தவன் போல் நிறைவு கொண்டே கேட்க தொடங்கினான் துஷ்யந்தன்
(தொடரும்..)