காளிதாசனின் சாகுந்தலம் : 05
சாகுந்தலையின் பூர்வீகம் குறித்து துஷ்யந்தன் கேட்க அதற்கு பதில் சொல்ல தொடங்கினாள் அனுசுயை
“அய்யா, கௌசிக குலத்தில் வந்தவரும் பெரும் மன்னனும், கீர்த்திநிரம்பிய ராஜமுனிவராகவும் ஒருவர் இருக்கின்றார் அல்லவா? “
“ஆமாம், கேள்விபட்டது உண்டு” என்றான் துஷ்யந்தன்
அனுசுயை சொன்னாள், “அவர்தான் எங்கள் அன்புக்குரியவளும் அழகு நிரம்பியவளுமான இந்த சகுந்தலையின் தகப்பனார், பெற்றெடுத்த தகப்பனார் .
தவறவிட்ட அழகான மணிமாலை போல் தனித்துவிடபட்ட இவளை கன்வமுனிவர் எடுத்து வளர்க்கின்றார் , கேட்பாரற்று கிடந்த் ஒரு பெண்குழந்தையினை எடுத்துவளர்த்த காரணத்தால் அவர் இப்போது இவள் தந்தையாகிவிட்டார்”
துஷ்யந்தன் குழம்பினான், “பெண்ணே ராஜமுனி என்கின்றாய், இவள் தனியே விடபட்ட குழந்தை என்கின்றாய், எனக்கு ஒன்றும் முழுக்க புரியவில்லை, இனம் பிரிந்த மான்குட்டி போல் இவள் ஏன் தனிமையானாள்? , கொஞ்சம் புரியும்படி சொன்னால் நன்று” என்றான்
அனுசுயை தொடர்ந்தாள் “அய்யா நீங்கள் முழுக்க கேட்கலாம், அதை உங்களுக்கு நாங்களும் விளக்கி சொல்லலாம் நடந்ததை சொல்வதில் தவறேதுமில்லை
அன்றொருநாள் அந்தகௌசிக முனிவர் கொள்தமி ஆற்றின் கரையில் தவமிருந்தார், பொன்னை நெருப்பில் இட்டு புடமிடுதல் போல கடுமையான தவத்தில் அவர் தன்னை இட்டார், இதை கண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு அச்சமும் பதற்றமும் வந்தது, தவத்தில் சிறந்தவர்களை கண்டால் அவர்களுக்கு உதறல் வரும் அல்லவா?”
துஷ்யந்தன் குறுக்கிட்டு சொன்னான் “அவர்களும் இல்லையென்றால் தவத்தினை சோதிப்பது யார்?, சோதனையின்றி ஒருவனை எப்படி வெற்றியாளன் என நிரூபிக்கமுடியும்?”
புன்னகைத்த அனுசுயை தொடர்ந்தாள் “இந்திரன் அவரை சோதிக்க மேனகையினை அனுப்பினான், அவரை சோதித்து மயக்கி தவத்தை கலைக்க சொல்லி கட்டளையிட்டு அனுப்பினான், அவ்ள் ஆடல் பாடல்களில் சிறந்தவள், அந்த கூத்தாடி வந்து அழகு சிலையாய் நின்றாள்
இளவேனில் போன்ற் மேனிகொண்டவள் தன் ஆடை நீக்கி தளிர்களால் ஆடை கொண்டாள், தன் மலர்போன்ற கண்களினால் அவரை கண்டாள், தேனூறும் பூக்களை போன்ற கண்களை கொண்டவளை கன்டதும் வண்டானது முனிவர் மனம்
அழகான கனிகண்ட பறவைபோல் தன்னை மறந்தார், பெண்மையின் நலமெல்லாம் குவிந்திருந்த மேனகையும் நெருப்பின் முன் பஞ்சுபோல் பற்றி நின்றாள்
அழகான பெண்பூவின் வனப்பினில், பெண்மையின் கனிகளின் அழகினில் முனிவர் மனம் வீழ்ந்தது. மண்ணில் பூ விழ பூமேல் வண்டு விழ…..”
அத்தோடு நிறுத்திகொண்டு முகத்தை நாணி திருப்பி கொண்டாள் அனுசுயை
துஷ்யந்தன் சொன்னான் “ஓ.. புரிந்துகொண்டேன் பெண்ணே, சொர்க்கத்து பேரழ்கி மேனகையின் மகள் இந்த சாகுந்தலை அப்படித்தானே
நல்லதம்மா, மண்ணில் இப்படி ஒரு பெண் பிறக்கமுடியுமா? எந்த மானிட பெண்ணிலும் ஓடாத அழகு வெள்ளம் இவளில் கரைபுரண்டு ஓடுவது எப்படி என சிந்தித்தேன், மறைந்திருந்த உண்மை தெரிந்துவிட்டது நன்றி
நிலத்தில் கால் வைத்து வானில் தலைகாட்டும் மின்னல் கொடியின் அழகு அல்லவா இது?
மண்ணுலக அழகு விண்ணுலக அழகும் கலந்து செய்த பெரும் எழில்சிலை அல்லவா இவள், அதனால்தானே இப்படி பெரும் அழகோடு மின்னுகின்றாள்” என்றான்
அவன் சொல்ல கேடட சாகுந்தலை மெல்ல நாணி தலைகுனிந்தாள், முற்றிய பொன்னிற நெல்கதிர்போல் அவள் நிலம் நோக்கினாள்.
துஷ்யந்தன் தனக்குள் சொல்லிகொண்டான்
“எனக்காக தவத்தை பாதியில் விட்ட கௌசிகரே உமக்கு நன்றி , இவளை பூமியிலே விட்டு சென்ற மேனகையே உன்க்கும் நன்றி
இதோ இவள் யார் என தெரிந்ததும் என் மனகுகையில் வாழும் காதல் முதிர்கின்றது, இனி அதனை எப்படி மறைப்பேன்?
ஆனாலும் இவர்கள் முன்பு பேசிகொண்டதென்ன? அவளுக்கு பிடித்தவனைத்தானே அவள் மணப்பாள் என்றார்கள், அப்படியானால் என்னை பிடிக்காமல் போனால் நான் என்ன செய்வேன்?
மனதுக்கு பொருத்தம் என ஏற்பாளோ, பொருந்தவில்லை என விலக்குவாளோ?, மனதால் விரும்பியவனை மணப்பாளோ இல்லை கண்டதும் காதல் கொண்டான் காமுகன் என ஒதுங்குவாளோ?
தேனில் விழுந்த தேனி தேனருந்தாமல் தன் சிறகுகளை சிக்கவிட்டு தவித்து தேம்புதல் போல தேம்புகின்றேனே மனமே, ஏற்றிவைத்த தீபமொன்று சூறைகாற்றில் ஆடுவது போல் ஆடுகின்றாயே என் மனமே”
அவன் மனகுழப்பம் கண்களில் தெரிந்தது , அவன் கண்களோ சாகுந்தலைமேல் இருந்தது, அதை அறிந்த பிரியம்வதை மெல்ல சொன்னாள்
“அய்யா உங்களிடம் இன்னும் கேள்வி உண்டுபோல் தெரிகின்றது, கேட்க விரும்புவதை கேட்கலாமே, நாங்கள் பதிலளிப்போம்” என்றபடி சகுந்தலையினை நோக்கினாள்
யானையினை பழக்கும் பாகன் சைகையில் பேசுவது போல் நாணமாக கோபத்துடன் நிறுத்து என்பதுபோல் சைகை செய்தாள் சாகுந்தலை
துஷ்யந்தன் தொடர்ந்தான் “நல்லது பெண்ணே, நல்லோரை சிறந்தோரை பற்றி விசாரித்தால் அதற்கு முடிவேது?, இன்னும் இன்னும் என அக்கேள்வி தொடர்ந்து கொண்டே கடல்பயணம் போல் நீளுமே , இன்னும் கொஞ்ச்ம் அறிந்தால் என்ன என ஆசை நீளுமே , இங்கும் அப்படி எனக்கு சில கேள்விகள் காற்றாய் தொடர்கின்றது, அதை கேட்க விரும்புகின்றேன்”
பிரியம்வதை சொன்னாள் “கேளுங்கள் அய்யனே, கேட்பதை தயங்காமல் கேளுங்கள், ஆனால் இது தவமுனிவர்கள் வாழும் குடில் அல்லவா? அதனால் எதை கேட்க வேண்டும் என்பதை நீர் அறிந்திருப்பீர், பின் என்ன தயக்கம்?”
துஷ்யந்தன் தொடர்ந்தான், அவளின் எதிர்கால வாழ்வு பற்றி அறிய முனைந்தான், அவளுக்கு ஏற்கனவே மணம் பேசபட்டிருக்கின்றதா அல்லது அவள் சன்னியாச கோலத்துடன் இந்த குடிலிலே வாழ விரும்புகின்றாளா என்பதை அறியவிரும்பியவன் சாதுர்யமாக கேட்டான்
“பெண்ணே, உன் அழகான தோழியான இந்த சாகுந்தலை பருவத்தின் வாசலில் நிற்கின்றாள், அவள் எதிர்கால கணக்கென்ன?
திருமணம் எப்போது? அது தாமதமாயின் காமதேவன் இவள் மேல் தன் அம்புகளை எய்யாதாவறு, அவன் அவன் தொடுக்கும் போது இவளில் எழும் பெரும் நெருப்பினின்று த்ன்னை காக தடுக்க இவள் வைசாக நோன்பை மேற்கொள்வாளோ?
பருவத்தில் நுழைவோரை அந்த மன்மதன் எப்படியெல்லாம் மலர்கனைகளால் வதைப்பான், அதை தடுக்க அந்த நோன்பை ஏற்பாளோ?
இல்லை உடலெல்லாம் கண்கள் பெற்ற இந்திரனை போல உடலெல்லாம் புள்ளிகள் கொண்ட இந்த புள்ளிமான்களோடு மானாக காலமெல்லாம் கழிப்பாளோ?
அதை அறிந்துகொள்ள விழைகின்றேன் , மொழிந்தால் மகிழ்வேன்”
பிரியம் வதை சொன்னாள் ” அய்யா இவள் நாணல் போன்றவள், எப்படி வளைத்தாலும் தன் நிலையில் நிமிர்ந்து நிற்பாள், அவள் தன் இயல்பை விடமாட்டாள் மீட்டு நிலைப்பாள்
ஆனால் இப்போதோ அவளுக்கென எதுவுமில்லை, தவம் செய்யும் சம்பிரதாயத்துக்கு கூட பிறரை நம்பித்தான் இருக்கின்றாள், அவள் தந்தை சொன்னதை அவள் கேட்பாளே அன்றி அவளுக்கென இதுவரை விருப்பமேதுமில்லை
அவள் தந்தை ஒருவன் கையில் இவளை பிடித்து கொடுக்கத்தான் விரும்புகின்றார், இவளுக்கு இசைந்தவன் தகுதியானவன் யார் என தேடிகொண்டே இருக்கின்றார், வைரகல்லை தங்கத்தில்தானே பொருத்தவேண்டும்?”
துஷ்யந்தன் மகிழ்ந்து தன்னில் சொல்லிகொண்டான்
“மனமே, நீ நினைத்த தவத்தை அடைந்துவிட்டய், எதை மிக விரும்பினாயோ அந்த தவமானை அடைந்தேவிட்டாய்
மலையில் சிகரத்தில் தவம் செய்ய வந்து அதன் உயரம் கண்டு மலைத்தவனுக்கு அந்த மலையே குனிந்து சிகரத்தில் அமர சொன்னது போல் அல்லவா இங்கே எல்லாம் நடக்கின்றது..
அரசரில் சிறந்தவரும், தவத்தில் ஜொலித்தவருமான கௌசிகரின் மகளை மணக்க என்னைவிட தகுதியானவன் யார்?
அவளுக்கும் என்னை பிடிக்கும் , மேகம் கண்ட மயிலிடம் வரும் மாற்றம்போல என்னை கண்டதும் அவளிடம் கண்ட மாற்றத்தையும் நான் அறிவேன்
அவள் மனதில் காதல் பெருகுகின்றது ஆனால் பெரும் கதவிட்டு இறுக்கமாக மூடிவைத்திருக்கின்றாள், இனி அதைநான் உடைப்பேன், அது உடைய கூடிய கதவுதான்
ஆ.. அந்த பவளத்தை நான் நெருப்பென தவறாக நினைந்து அஞ்சிவிட்டேன், அவள் கூந்தல் கருமேகம் வானமேறி அதை தொடமுடியாது என ஏங்கிவிட்டேன்,
இந்த அழகான கார்மேகம் என்மேல் மழைபொழியாமல் கானல் நீராய் கழிந்துவிடுமோ என அஞ்சினேன்
ஆனால் அது அமுத ஆறாய் ஓடி என்னை நனைத்து என் வாயிலும் புகுந்துவிடும் காலம் வந்தே விட்டது, இனி நானே உலகின் மாபெரும் பாக்கியசாலி”
அவன் சிந்திக்கும் போதே சட்டெனெ எழுந்தாள் சாகுந்தலை , எழுந்தவள் சொன்னாள் “அனுசுயா நான் செல்கின்றேன் இனி உங்களோடு பேசமாட்டேன்”
பதறிய அனுசுயா கேட்டாள் “என்னாயிற்று சாகுந்தலை ஏன் இந்த கோபம்”
“நான் சென்று நம் அன்னையிடம் முறையிடுவேன், இந்த பிரியம் வதை அவள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகின்றாள், என்னை பற்றி என்னென்னவோ பேசுகின்றாள், நான் செல்கின்றேன்”
துஷ்யந்தன் தனக்குள் சொல்லிகொண்டான் “ஓ.. இவளுக்கு அவளுடன் நேரடியாக நாம் பேசவில்லை எனும் கோபம் போலிருக்கின்றது, பெண்களின் செயலும் மனமும் ஒன்றுக்கொன்று தலைகீழானவை அல்லவா?”
அனுசுயை சொன்னாள் “சாகுந்தலை நீ தவறு செய்கின்றாய், விருந்தினர் இருக்கும்போது இப்படி எழுந்து செல்லுதல் முறையல்ல, அதுவும் சூரியனை போன்ற ஒருவர் நம்முன் விருந்தினராக இருக்கும்போது இப்படி எழுந்து செல்லுதல் எப்படி அறமாகும்? இந்த தவகுடிலின் பெருமையாகும்?
இது நம் விருந்தோம்பலுக்கும் அறகுடிலுக்கும் பொருத்தமல்ல நில்”
சாகுந்தலை அதனை கேளாமல் அச்சபட்ட அன்னமொன்று நடப்பது போல் நடந்து சென்றாள்
அவள் மேகமாக அடியெடுத்து வைப்பதை கண்ட துஷ்யந்தன் மனதோடு சொன்னான் ” அழியா பேரழகு நடந்து செல்கின்றது
அவள் மனதில் காதலிருப்பதன் அறிகுறி இது? நான் அறியேனே? இவளை எழுந்து சென்று தடுக்க என் மனம் துடிக்கின்றது , அது நல்ல இயல்பு அல்லவே?
நான் இங்கே அமர்ந்திருந்தலும் என் மனம் அவளோடு அல்லவா நடக்கின்றது, அவளோடு அல்லவா அது உடல்கொண்டு நடக்கின்றது?”
பிரியம் வதை எழுந்து சாகுந்தலையினை மறித்தாள்
“சாகுந்தலா நீ நல்லது செய்யவில்லை, இது தகாதது, நில்” என்றாள்
அழகிய ராமன் வளைத்த வில் போல தன் இரு புருவங்களையும் சுருக்கி அவளை கண்ட சாகுந்தலை கேட்டாள் “என்ன சொல்கின்றாய்?”
பிரியம் வதை சொன்னாள் “எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் கேட்கின்றாய், நான் எவ்வளவு சொல்லியும் அறியாதவள் போல் நடக்கின்றாய்
அதைவிடு, நீ இந்த மரம் செடிகொடிகளுக்கெல்லாம் இருகுடம் தண்ணீர் ஊற்றவேண்டும் , ஒரு குடம் ஊற்றிவிட்டாய் இன்னும் ஒருகுடம் பாக்கி உன்டு, அந்த கடனை முடித்துவிட்டு போ”
துஷ்யந்தன் புன்னகைத்தபடி சொன்னான்
“நல்லது சொல்லும் பெண்ணே, மயில் போன்ற இப்பெண் ஒருகுடம் சுமந்து வந்ததிலே களைத்துவிட்டாள், செடி கொடி மரங்களுக்கு நீர் ஊற்ற குடமேந்தி களைத்து போனாள்
இரு குடம் தாங்கிய சிற்றிடை மேல் மூன்றாம் குடம் வைத்ததால் களைத்தாளோ?
மூங்கில் தோள்கள் அழகான இரு குடங்களை சுமக்கும் போது மூன்றாம் குடம் வைத்ததால் களைத்தாளோ, அவள் இடையும் தோளும் இப்படி களைத்து போயிற்றோ?
கிளிகொத்தி குலைந்துவிட்ட மாங்கனி போல் அவள் உள்ளங்கைகள் சிவந்துவிட்டன, அவளின் களைப்பினில் வரும் பெருமூச்சால் இரு மலைகள் ஓங்கி அசைகின்றன
களைப்பினால் அவள் முகத்தில் பெரும் வியர்வினையினை காதோரம் உள்ள பிண்டி மலர்கள் தடுக்கின்றது
அது தாமரைக்கும் நிலவுக்கும் பிறந்த இந்த அழகு முகத்தில் முத்துக்களாய் அரும்பி நிற்கின்றது, அது வானத்தில் மின்னும் நட்சத்திரம் போல, நிலத்தில் சிதறிய விதைகள் போல தனி தனியாக நிற்கின்றது
அவள் மனம் கலைந்தது போல அவள் கட்டிவைத்த கூந்தலும் கலைந்திருக்கின்றது, அது காற்றில் ஆடும் பயிர்கள் போல் ஆடுகின்றது, கவிதைகளில் வரும் உவமைபோல் அழகாய் அமைகின்றது
அவள் ஒரு கையால் கலைந்த கூந்தல் பிடித்த அழகு அந்த களைப்பிலும் ஒரு காவியத்தை காட்டுகின்றது” என்றவன் தொடர்ந்து சொன்னான்
“பெண்ணே, களைத்துவிட்ட இவள் இன்னொரு குடம் நீர் எடுக்க முடியாது, அவள் பட்ட கடனை நானே அடைக்கின்றேன், எனக்கு ஒரு வாய்ப்பை தருவீரோ?”
என்றவன் “கடன் தீர்க்க இதோ என் கனையாழி” என கழற்ற முயன்றான்
அதுவரை அந்த கனையாழியினை சரியாக காணாத பெண்கள் முதன்முறை கண்டனர், தெய்வசிலை தெய்வமாய் உருமாறுவதை கண்டு அதிர்ந்தனர்
“இவர் அரசர் , இவர் மன்னர்” என பதறினர்
துஷ்யந்தன் புன்னகைத்து சொன்னான் “பெண்களே என்னை அரசனாக காணாதீர்கள், இது அரசன் எனக்களித்த உத்தரவு மோதிரம், மற்றபடி நான் அரசன் அல்ல” என தன்னை மறைத்தான்
பிரியம் வதை சொன்னாள் “அப்படியானல் நீர் அதனை கழற்றவே கூடாது அய்யா, நீங்கள் சொன்ன வார்த்தைகளிலே கடன் தீர்ந்தது” என்றவள் நடந்து கொண்டிருந்த சகுந்தலையினை நோக்கி சொன்னாள்
“சகுந்தலை இவர் உன் கடனை தீர்த்துவிட்டார், இனி உனக்கு கடன் இல்லை நீ போகலாம், முடிந்தால் இவருக்கு நன்றி சொல்லிவிட்டு போ”
துஷ்யந்தன் சிரித்து கொண்டான்
“என்னை நிற்கவும் போகவும் சொல்ல நீயார்?” என சொல்லிவிட்டு நடந்தாள் சாகுந்தலை
துஷ்யந்தன் தனக்குள் சொல்லிகொண்டான்
“பதில் அவளுக்கல்ல எனக்கு, பூலோக பெண்களின் திமிரே பொல்லாதது, இவளிடம் வானலோக திமிரும் சேர்ந்துவிட்டதால் ஆச்சரியம் ஏதுமில்லை
மனமே, நான் அவளை விரும்புவதை போல் அவள் என்னை விரும்புவாளா? என் நெஞ்சில் ஒளி ஏற்றிவைப்பாளா?
மனமே கலங்காதே அதற்கும் வாய்ப்பு உண்டு, அவள் நான் பேசும்போது நாணமுற்றாள், அவள் காய்விடும் மலர் தலை குனிவது போல் குனிந்து நின்றாள்?
ஒளிமிகுந்த அவள் முகம் நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும் குனிந்திருந்து நகைத்ததையும் ஓரகண்ணால் என்னை பார்த்ததையும் நான் அறிவேன்
அவள் தன் நாணத்தை உள்ளே அடக்கி சிரித்தாள், என்னை அவளுள்ளே சிறைவைத்தாள், எங்கோ பார்ப்பது போல் அவள் பார்த்தாலும் அவள் பார்த்த இடத்தில் நான் இருந்தேன் என்பதை அறிவேன் மனமே
பூமிக்குள் ஓடும் நீர்போல் அவளுக்குள் என்மேல் காதல் உண்டு, நீரும் மன்னும் கூடினால் முளைவிடும் விதை போல காலநேரம் கூடியபோது அவளுக்குள்ளும் காதல் முளைக்கின்றது”
அதே நேரம் மன்னன் சென்ற வழியில் அவனை தேடி அவனை பாதுகாக்க துஷ்யந்தனின் பெரும் சேனை காட்டுக்குள் புகுந்ததிருந்தது
மானை தேடி வந்த துஷ்யந்தன் இங்கே சாகுந்தலியிடம் சிக்கிகிடக்க மன்னனுக்கு என்ன ஆயிற்றோ என கலங்கிய அவன் சேனை காட்டுக்குள் புகுந்திருந்தது
அதை அறிந்த துறவிகள் எச்சரிக்கை ஒலி எழுப்பினார்கள்
“எல்லோரும் எழுங்கள் ஆசிரமத்தை சுற்றி காவல் இருங்கள், துஷ்யந்த மகாராஜாவின் சேனை வழமையான காட்டுவேட்டைக்காக இங்கே புகுந்துவிட்டதாம்
இதனால் பசுக்கள் மான்கள் நம்மை நம்பிவாழும் விலங்குகளுக்கு ஆபத்து வரலாம் அவைகளை சுற்றி காவல் இருங்கள்
தொலைவில் அவர்கள் சேனையினால் எழும் புழுதி, அவர்களின் குதிரைகளின் காலடியினால் எழும் புழுதி கூட்டம் மாலை மேகம் போல் சூரியனை மறைக்கின்றது, அந்த புழுதி சூரியனால் சுத்தமாகின்றது பின் அது மரகிளைகளில் காயவைத்திருக்கும் நம் காவி உடைகளில் படிகின்றது
அந்த புழுதியின் துகள்கள் வெட்டுகிளி கூட்டம் போல் வந்து விழுகின்றது
பழக்கிய யானைகளுடன் மன்னர் சேனை வரும்காட்சி குன்றுகள் நகர்ந்துவருவதை போலிருக்கின்றது, காட்டில் ஏற்படும் இந்த சலசலப்பால் காட்டு யானைகள் அஞ்சி மான் கூட்டத்தினை கலைத்து வழியில் இருக்கும் மரங்களை பெயர்த்து முறித்து போட்டு அந்த மரத்தின் கொடிகளெல்லாம் தன் உடலை சுற்றிய கோலத்தில் ஆசிரமம் நோக்கி வருகின்றன
அதனால் எல்லோரும் தயாராகுங்கள், மன்னனின் சேனையிடமிருந்து இந்த குடிலையும் விலங்குகளையும் காக்க தயாராகுங்குங்கள், நாம் யாரென தெரிந்தால் நிச்சயம் அவர்களால் ஆபத்தில்லை”
இப்படி பெரும் குரலும் ஒலியும் பரபரப்பும் தொற்றிகொள்ள பெண்கள் செல்ல தயாரானார்கள், துஷ்யந்தன் தன் சேனையினை நொந்து கொண்டான்
“என்ன என் படைகள்?, இப்படி இந்த குடில்துறவிகளுக்கும் விலங்குகளுக்கும் அச்சமூட்டும் காரியங்களை செய்கின்றார்கள், நான் முன்னால் சென்று நிற்பேன் அப்போது அவர்களால் ஆபத்தேதும் வராது” என சொல்லிகொண்டான்
அனுசுயை சொன்னாள் “அய்யா காட்டு யானை வேகமாக வருகின்றதாம், முருகபெருமானுக்கு மணமுடிக்க வள்ளியினை விநாயகர் யானை உருவில் விரட்டினார் அல்லவா? அப்படி ஒரு யானை மூர்க்கமாக வருகின்றதாம்
அதனால் நாங்கள் பாதுகாப்பான குடிலுக்கு செல்ல அனுமதியுங்கள், விடை கொடுங்கள்”
அவளின் குறும்பான வார்த்தைகளையும், வள்ளி திருமணத்தின் யானை காட்சியினை அவள் சொன்னதையும் நினைந்து புன்னகைத்த துஷ்யந்தன் சொன்னான்
“ஆபத்து காலத்தில் என்ன உத்தரவு? நீங்கள் செல்லுங்கள் பாதுகாப்பாய் இருங்கள்”
அனுசுயை சொன்னாள் “அய்யா நாங்கள் உங்களை சரியாக கவனிக்கவில்லை, உபசரிக்கும் காலம் வருமுன் யானை வந்துவிட்டது
பழத்தை உண்ண கொடுத்தபோது தவறி விழுந்தது போல ஆகிவிட்டது நிலை, மறுபடியும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் உங்களை உபசரிப்போம், இன்னொரு முறை எப்போது வருவீர்கள் என கேட்க விருப்பம், ஆனால் நாணமோ எங்கள் வாயினை தைத்து வார்த்தைகளை வரவிடாமல் செய்கின்றது”
துஷ்யந்தன் சொன்னான் “பெண்களே, இப்படி சொல்லவேண்டாம், நீங்கள் சொன்ன அன்பான மொழியிலும் காட்டிய பரிவிலும் நான் மிகுந்த திருப்தி அடைந்துவிட்டேன், என் தவிப்பெல்லாம் உங்களால் தீர்ந்தது , என் மனம் குளிரசெய்த நீங்கள் மகிழ்வோடு செல்லுங்கள்”
பிரியவம்வதை சொன்னாள் “அய்யா இந்த அச்சமூட்டும் சூழலில் இவள் அன்னை இவளை தேடுவாள், நாங்கள் செல்கின்றோம்” என விடைபெற்றாள்
புன்னகைத்து விடைகொடுத்தான் துஷ்யந்தன்
மழைக்கு அஞ்சி கூட்டை நோக்கி நகரும் பறவைபோல் அவர்கள் பரபரப்பானார்கள்
துஷ்யந்தன் சொன்னான் “எனக்கு நாட்டுக்கு திரும்பும் ஆசை கொஞ்சமுமில்லை அது ஒழிந்தே விட்டது , நல்ல விருந்து உண்டவன் மயங்கி கிடக்கும் நேரம் தொந்தரவு செய்வதுபோல இந்த சேனை வந்துவிட்டது
நான் அதனை குடிலுக்கு வெளியே நிறுத்துவேன்” என சொல்லிகொண்டவன் சாகுந்தலை செல்லும் கோலத்தை கண்டான், கண்டவன் சொன்னான்
“இளங்கொடியாள் செல்வது என் உயிர்பிரிந்து செல்வது போலிருகின்றது, இங்கே அவளை விட்டு அவள் என்னை எடுத்து செல்ல்கின்றாள்
வேறு எங்கும் மாற்றமுடியாதபடி என் எண்ணம் அவள் பின்னாலே செல்கின்றது
பெரும் காற்றடிக்கும் போது கொடிமரத்தை முன் வைத்தாலும் கொடி பின்நோக்கி தானே பறக்கும்?, அப்படி அவள் முன் சென்றாலும் தனித்த என் நெஞ்சம் பின்னேதான் செல்கின்றது”
சொன்னவன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்
சென்று கொண்டிருந்த சாகுந்தலை திடீரென பதறினாள் “அய்யோ என் காலில் முதிர்ந்த புல் முள்போல் குத்திவிட்டதே” என்றவள் பின்னங்காலை மடக்கி தலையினை திருப்பினாள்
காலில் ஒன்றுமே குத்தியிரா போதும் தலையினை திருப்பி கால் முள்ளை எடுப்பது போல சாக்கில் அவனை ஒரு பார்வை பார்த்தாள், அவள் கண்கள் அவனை நோக்கிய வேகத்தில் உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை மின்னலாய் வெட்டியது
அந்த நொடிபொழுது காட்சியில் யாருமறியாமல் காலில் முள் குத்தியது போல் அவள் திரும்பி அவனை பார்த்த பார்வையில் அவன் மனம் ஆனந்த வெடிப்பில் சிக்கி சிலிர்த்தது
ஒன்றுமறியாதவள் போல் பூப்பாதத்தை கீழே வைத்தவள், மெல்ல மெல்ல நடந்தாள்
“ஓ அவள் எனக்காக மெல்ல நடக்கின்றாள், நிலவு போல் நான் ரசிக்க மெல்ல நகர்கின்றாள், என் மனமே அவளின் மின்னல் பார்வையில் காதல் மேகம் கூட கண்டேன்
என் நாடே உன் ராணியினை வரவேற்க தயாராகு, என் மாளிகையே உன்னை ஆள்பவளை தாங்க ஆயத்தம் செய், என் கருவூல நகைகளே உங்களை எள்ளி நகையாட ஒருத்தி வரபோகின்றாள், என் அரியணையே அவளுக்காக பட்டுமமெத்தை இருக்கையுடன் காத்திரு
என் ஆத்துமமே அவள் உன்னோடு இனி கலந்திருப்பாள்….”
(தொடரும்…)