ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ராள்
இந்துஸ்தானத்தில் பெரும் அவதாரங்களும் யோகிகளும் எப்போதோ முன்பு தோன்றினார்கள் அதர்மம் களைய பாடுபட்டார்கள் என்பதல்ல விஷயம். எப்பொழுதெல்லாம் இங்கு அதர்மம் தலைவிரிக்குமோ அப்பொழுதெல்லாம் யோகிகளும் ஞானியரும் வந்து இந்து தர்மம் காப்பார்கள்.
அது அகத்தியர் காலம், விசுவாமித்திரர் காலம், கண்ணன் காலம் மட்டுமல்ல. பின்னாளில் சாணக்கியன், வித்யாதாரர், சமர்த்த ராமதாஸர், ராகவேந்திரர், குமரகுருபரர் என அந்த வரிசை வந்து கொண்டே இருந்தது, இன்னும் வரும்
அப்படி வந்த பெரும் மஹான் ஒருவர்தான் நெரூரில் சித்தியடைந்த ப்ரம்மேந்தராள்.
அது 16ம் நூற்றாண்டின் இடைகாலம். அப்பொழுது சிவாஜியின் இந்து பேரரசு எழும்பி ஒளிவீசிய காலம் எனினும் சிவாஜிக்கு பின்னால் சில காலங்கள் ஓளரங்கசீப் பெரும் ஆட்டம் ஆடினான்.
தென்னகத்தில் கோல்கொண்டா சுல்தானத்தின் கரையோரமாக தமிழகத்துக்குள் ஊருருவிய அவன் சிவாஜியின் பரந்த தென்னக இந்து அரசின் தென்பக்கத்தை ஆக்கிரமித்தான்
அப்பொழுது மைசூரில் இந்து சமஸ்தானம் தஞ்சாவூரில் மராட்டியரின் இந்து சமஸ்தானம் என இருந்தாலும் ஆற்காட்டில் ஒரு இஸ்லாமிய பிரதிநிதி அவுரங்கசீப்பால் நிறுத்தபட்டான். ஆற்காடு நவாப் எனும் பதவி உருவாக்கபட்டது
இந்த நவாப் மதுரையினை விழுங்கும் ஆபத்து வந்தது. இதனால் பெருவாரி இந்து வேத விற்பனர்களும், சனாதனவாத தர்மம் அறிந்தவர்களும் இந்து மன்னர்கள் ஆண்ட தஞ்சைக்கு மதுரையில் இருந்து பெயர்ந்தனர்.
(பின்னாளில் இந்த நவாபின் கட்டுபாட்டில் இருந்த பகுதியில்தான் ராபர்ட் கிளைவ் கால்பதித்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலினான்)
அப்படி சென்றவர்கள்தான் சோமநாதரும், தாயார் பார்வதி அம்மையார் எனும் தம்பதியர்கள். இவர்கள் மதுரையில் பிறந்த தன் மகனை தூக்கிகொண்டு சென்றார்கள். அந்த குழந்தையின் பெயர் சிவராம கிருஷ்ணன்.
இறை சக்தியின் அழைப்பு கொண்ட பிறவிகள் இயல்பிலே தனித்து தெரிவார்கள். பின்னாளில் அவர்கள் ஆற்றபோகும் பெரும் காரியங்களுக்காக முளையிலே அவர்கள் அடையாளம் காணபடுவார்கள். அப்படி திருவிசநல்லூரில் வசித்த சிவராம கிருஷ்ணன் கும்பகோணம் மடத்தில் இருந்த பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் எனும் குருக்களால் அடையாளம் காணப்பட்டார்.
அதிலும் பரம்சிவேந்திரர் அவர்மேல் தனி பரிவு கொண்டிருந்தார். மிக சிறந்த மாணவனாக தேறிய அந்த சிவராமகிருஷ்ணனுக்கு தன் குருவிடம் தனி மதிப்பு வந்தது.
அந்நாளில் இளமை திருமணம் வழமை என்பதால் சிவராமகிருஷ்ணனுக்கும் கும்பகோண பெண் ஒருத்தியினை திருமணம் செய்தார்கள் அவள் பெயர் நாகலட்சுமி.
முதலில் திருமணம் முடிந்து பின் தாயார் வீட்டில் இருந்த நாகலட்சுமி பூப்படைந்த பின் புக்ககம் வந்தார். அப்பொழுது அவர் உணவு தயாரிக்க தாமதமானதை அடுத்து வெகு கோபம் கொண்டார் சிவராமகிருஷ்ணன். அந்த பெண்ணுடன் வாழமுடியாது என ஆடிதீர்த்தார். வீட்டில் பிரச்சினை வெடித்தது.
அவரை சாந்தபடுத்திய குருநாதர் பரம்சிவேந்திரர் , நீ என்பது ஆத்மாவா? உடலா? பசியா? பசி என்பதை கூட உணர்ந்து கோபத்தை தடுக்க முடியாத நீ எப்படி உன்னை உணர்வாய்? நீ படித்த வேதங்களின் பலன் இதுதானா என அறிவுரை சொல்ல, நாணி குறுகினார் சிவராம கிருஷ்ணன்.
பசி என்பதும் வயிற்றுக்கு கீழ் இருக்கும் அந்த உணர்வின் கொடும் சங்கிலியும் எவ்வளவு அகோரமானது என்பதை மெல்ல மெல்ல புரிந்தவர் தியானங்களிலும் தவத்திலும் ஈடுபட தொடங்கினார்.
அவரின் சில கால மனமாற்றத்துக்காக அவரை மைசூருக்கு அனுப்ப சித்தம் கொண்டார் குருநாதர் பரம்சிவேந்திரர்.
அப்பொழுது சமராஜ உடையார் என்பவர் மைசூர் மன்னராக இருந்தார். இவர் சனாதான தர்மம் காக்க புலவர்களையும், குருக்களையும், வேத பண்டிதர்களையும் அழைத்து அவர்களின் திறமைகேற்ப பரிசும் பொருளும் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்துமதம் காக்கப்பட அப்படி உதவி கொண்டிருந்தார் மன்னர்.
அந்த மன்னரிடம் உதவிபெற்று வருவோர் திறமையானவர்களா என சோதிக்கும் பொறுப்பு இந்த சிவராமகிருஷ்ணனிடம் வழங்கபட்டது. மிக பெரும் பண்டிதரான அவர் அங்குவரும் எல்லோரையும் எளிதில் வென்றார்.
மிகபெரும் ஞானம் கொண்டிருந்த அவரிடம் பரிசு வாங்க வரும் எல்லோரும் தோற்று வெறுங்கையோடு திரும்ப, தோற்றவர்கள் அவரின் குரு பரம்சிவேந்திரரை சந்தித்து புகார் செய்தார்கள். அவர் பெரும் ஞானிதான்; அவர் அளவில் எங்களால் வாதம் செய்யமுடியாதுதான்; அதற்காக மன்னர் தரும் பொருளை இவர் தடுத்தால் நாங்கள் வாழ்வதெப்படி என வருந்தினார்கள்.
ஏராளமான அந்தணர்களும் அடியார்களும் இப்படி பாதிக்கபடுவதை அறிந்த பரம்சிவேந்திரர், அவரை தன்னை வந்து பார்க்குமாறு ஓலை அனுப்பினார். ஓடிவந்தார் சிவராமகிருஷ்ணன்.
“ஊர் வாயெல்லாம் அடக்கும் நீ, உன் வாயினை அடக்காமல் என்ன சாதிக்க போகின்றாய்” என ஒரே ஒரு வார்த்தைதான் கேட்டார் குருநாதர். அந்த நொடி பரம்பொருள் தேர்ந்தெடுத்த நொடியாய் இருந்தது.
அந்த வார்த்தை காதில் விழுந்ததும் இனி பேசுவதில்லை என முடிவெடுத்த சிவராம கிருஷ்ணர், பேச்சை அறுத்தார்.
அந்தணன் என்பவன் வாயால் பிழைக்க வேண்டியவன். அவன் வாய் திறக்கவில்லை என்றால் ஏதும் வாழ கிடைக்காது. அந்நிலையிலும் பாராரியாக மவுன சாமியாரானார் சிவராம கிருஷ்ணன்.
ஓயா தவஸ், யோகநிலை என இருந்த அவருக்குள் பெரும் ஞானம் குடிகொண்டது.
மவுனத்தில் தன் உள்ளே நோக்கினார். அதில் நாடிகள் சுத்தமாயின சக்கரங்கள் துலங்கின பிரபஞ்ச அமைதியின் தத்துவம் அவரில் குடியேறி அவரை உன்னத ஞானியாய் ஆக்கிற்று.
கிடைத்ததை உண்டு தரையில் தூங்கி முழு பராரியானார். அப்பொழுது ஒரு வரப்பில் தலைவைத்து படுத்திருந்தபொழுது அந்த வரப்போரம் நடந்த பெண்கள் “சாமியாரானும் தலையணை ஆசை வந்திருக்கின்றது” என சொல்லி செல்ல தான் இன்னும் இழக்க வேண்டியது உண்டு என்பதை உணர்ந்தார்.
உடலை முற்றிலும் மறக்க ஆரம்பித்தார். உணவில் தொடங்கிய அவரின் ஞானம் உடையினை உதறுவதில் முடிந்தது.
முழுபரிபூரண ஞான நிலையில் திகம்பர கோலம் கொண்டுவந்து சிவதலம் தோறும் சுற்றிவந்தார். அவர் பெயர் சதாசிவ பிரமேந்திரர் என்றாயிற்று.
அவர் யாரிடமும் பேசுவதில்லை. சிவாலயம் நோக்கி செல்வார் அங்கே அமர்ந்திருப்பார் கிடைத்ததை உண்பார். யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார் அத்தோடு சென்றுவிடுவார்.
முழு ஞானியின் பக்குவம் அது.
ஒருமுறை திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசிக்க அவர் சென்றபொழுது மாட்டுவண்டியில் விறகை அடுக்கி கொண்டிருந்த கூட்டம் அவரை சீண்டியது, “ஏ கட்டையே வந்து இந்த கட்டைகளை அடுக்கு” என்றது. அவரும் அவர்களுக்கு உதவிவிட்டு நகர்ந்தார் “கட்டை எங்கே போகுது சுடுகாட்டுக்கா?” என்ற கிண்டல் விழுந்த நேரம் வண்டி தீபிடித்தது.
அவரின் சக்தி கண்டு அந்த கூட்டம் அவரை ஓடிவந்து பணிந்தது. அவரோ அவர் போக்கில் சென்றார்.
ஒருவித ஞான பிரக்ய நிலைக்கு வந்திருந்தார். அவரின் அருகாமையில் எல்லோருக்கும் நலம் கிடைத்தது. அவரை தரிசித்தாலே நன்மைகள் கூடின. பிணியும் வறுமையும் அகன்றது.
அவர் செல்லுமிடமெல்லாம் சனாதான தர்மம் வாழ்ந்தது. இது அக்காலத்தில் தொடங்கியிருந்த மதமாற்றத்தை கட்டுபடுத்தியது.
17, 18ம் நூற்றாண்டில் மதமாற்றங்கள் கடுமையாக இருந்தன அந்நாட்களில் இந்துமதங்களை இம்மாதிரி துறவிகள் எளிதாக காத்தனர், இவர்களை சிவ அம்சம் என சொல்லி வணங்கினர். இந்துமதம் தன்னை நிறுத்திகொண்டது.
இம்மாதிரி துறவிகள் பிரபஞ்ச அருளை அள்ளி அள்ளி கொடுக்கும் பொழுது அதற்கான சக்தியினை தவத்தில் இருந்து பெற்றுகொள்ள வேண்டும். அந்த தவம் கடுமையானதாக இருத்தல் அவசியம்.
பிரபஞ்ச சக்தி எங்கும் வியாபித்து கிடந்தாலும் மின்னல் இடிதாங்கியில் இறங்குவது போல இம்மாதிரி துறவிகளை தேர்ந்தெடுத்து இறங்கும். அந்த சக்தி மிக பலமானது. அதை தாங்கிபிடிக்க தவம் அவசியம்.
காவேரி ஆற்றின் பாறையில் கடும் தவம் இயற்றினார். அப்பொழுது வெள்ளம் அவரை அடித்து சென்றது. எல்லோரும் அவர் இறந்துவிட்டார் என கருதினார்கள்.
சிலமாதம் கழித்து காவேரி கரையில் மண்ணை தோண்டியபொழுது ரத்தம் வந்தது. அச்சபட்ட மக்கள் அவனமாக மண்ணை அகற்றினால் உள்ளே தவகோலத்தில் இருந்தார் சதாசிவ பிரமேந்திரர்.
அந்த அளவு தன் உடலை மறந்த பெரும் தவம் அவருக்கு வசபட்டிருக்கின்றது. சில நாள் அப்படி இருந்தவர் பின் அவர்போக்கில் எழுந்து வேறிடம் சென்றார்.
அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூடினார்கள். அவரை பார்த்த நிமிடம் நன்மை அடைந்தார்கள். பேசாமல் பார்வை ஒன்றாலே நலம் அருளினார் அந்த ஞானி.
அந்நேரம் மதுரைக்கு நவாப் பயணம் மேற்கொண்டான். மதுரை முழுக்க அந்நியர் வசமாகும் நேரமிது எனும் அச்சம் எழுந்தது. வரும் வழியில் அவன் முகாமிட்டிருந்தான். அவ்வழியே ஏதும் அறியாதது போல் அம்மணமாக வழக்கம் போல் நடந்து சென்றார் சதாசிவ பிரமேந்திரர்.
நவாபின் முகாமில் ஆடையின்றி திரிவது சந்தேகத்திற்கிடமானது என்பதால் வாளை ஏந்தி ஓடிவந்தான் வீரன். ஞானியோ கையினை வீசியபடி அவர்போக்கில் சென்றுகொண்டிருந்தார்.
வீரன் அவர் கையினை வெட்டினான் கை துண்டாக விழுந்தது.
விழுந்த கையினை கண்ட ஞானி தன் இன்னொரு கையால் அதை எடுத்து பொருத்தி ஏதும் நடக்காதது போல் அவர்போக்கில் நடக்க தொடங்கினார்.
நடந்த காட்சியினை கண்டு வீரன் அதிர முகாமே அதிர நவாபுக்கு செய்தி போயிற்று. அவன் தன் முடிவினை மாற்றிகொண்டான். இம்மாதிரி ஞான யோகிகள் இருக்குமிடத்தில் ஏதும் செய்தல் கூடாது என திரும்பினான்.
அந்த ஞானி இப்படி செய்த அதிசயங்கள் ஏராளம்.
கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.
மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.
சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.
விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.
அந்த புதுகோட்டை மன்னர் வம்சம்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி இந்து சமய பெருமையினை உலகறிய செய்தது என்பதுதான் பெரும் ஆச்சரியம்.
சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்த அந்த ஞானி எங்காவது பாடல் பஜனை நடந்தால் அமர்ந்து கொள்வார். திடீரென அவரே பாடல்களை எழுதுவார்.
அப்படி எழுதிய பிரசித்தியான பாடல்தான் “மானச சஞ்சரரே”
ஞானியின் மனநிலையினை விளக்க அதைவிட பொருத்தமான பாடல் இல்லை. “மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாயாக” என சொல்லும் அற்புதமான பாடல்.
அப்படித்தான் சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பாடல்கள் எழுதபட்டன.
‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே சர்வம் பிரம்ம மயம்…’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட முடியும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.
சிலநேரம் எழுத்தாணி எடுத்து மடமடவென எழுதி குவிப்பார், அப்படி எழுதபட்ட நூல்கள்தான் பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற நூல்களையும் எழுதினார்.
ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.
சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
நீண்ட தவமும் பெரும் ஞானமும் கொண்டிருந்த அவர் சுமார் 140 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கின்றது குறிப்புகள். அவர் காலத்தில் இந்துமதம் பெரிதும் காக்கபட்டது.
மைசூருக்கும் தஞ்சாவூருக்குமாக தமிழகமெங்கும் ஓடி ஓடி அலைந்தார். தன்னை நம்பி வந்தோருக்கு அருள் புரிந்தார். நம்பாதோருக்கு தன் சக்தியினை காட்டி எச்சரித்தார்.
அவரின் சமயபணிகள் நிரம்ப உண்டு.
எங்கெல்லாம் ஆலயங்கள் உரிய நேரத்தில் நிறுவப்பட வேண்டுமோ அங்கு திடீரென தோன்றி உதவிவிட்டு அவர்போக்கில் செல்வார்.
தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர். தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர் அவர்தான்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர் அவர்தான்.
இன்னும் ஏகபட்ட பணிகள் உண்டு.
இப்படி மிகபெரும் சேவையினை தன் தவத்தால் செய்து இந்துமத்தை நிறுத்திய சதசிவர், 1753ம் ஆண்டு சித்திரை தசமி அன்று கரூர் அருகே இருக்கும் நெரூரில் ஜீவசமாதி அடைந்தார்.
அவர் சமாதியில் இருந்து இன்றும் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்.
அந்நிய மதங்கள் தமிழகத்துக்குள் ஊடுருவிய காலத்தில் இம்மாதிரி மகான்கள் அவதரித்து தர்மம் காத்தனர். அவ்வகையில் என்றும் மக்களின் வழிபாட்டுகுரியவர் சதாசிவர்.
வாய்ப்பு கிடைத்தால் நேரூரில் இருக்கும் சதாசிவ பிரம்மானந்தரின் சமாதியினை வழிபட்டு வாருங்கள். வாழும் பொழுது செய்த அற்புதங்களை இப்பொழுதும் செய்ய அவர் தயாராக காத்து கொண்டிருக்கின்றார்.
அந்த சமாதி சாதாரணம் அல்ல. உலக புகழ்பெற்றவரும் “யோகியின் சுயசரிதை” எனும் நூலை எழுதியவருமான சுவாமி பரஹம்ச யோகானந்தா தமிழகம் வரும்பொழுது அந்த சமாதியில் வழிபட்டு அங்கு கண்ட அதிசயங்களை எழுதி வைத்திருக்கின்றார்.
அந்த அளவு தேசமெங்கும் யோகிகளும் ஞானியரும் தேடிவரும் சமாதியாய் அது விளங்கி நிற்கின்றது.
அந்த ஞானவிளக்கு ஜோதியாய் நிற்கின்றது. தங்களுக்குள் தீபமேற்ற விரும்புவோர் அதனில் ஏற்றி கொள்ளலாம்.
நல்ல குரு மேலான பக்தியினால் உருவான அவர் இப்பொழுதும் நல்ல குருக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றார். அந்த குருக்கள் எத்தனையோ பேருக்கு தர்ம ஒளிகாட்டி கொண்டிருக்கின்றார்கள்.
அந்த மகானுக்கு இன்று குருபூஜை, சித்திரை தசமி அவருக்கானது இந்துஸ்தானம் சனாதான தர்மத்தில் நிலைத்திருக்கவும், அந்த தர்மம் வாழவு, எல்லா மக்களும் ஞானத்தை அறியவும் அவர் வழிகாட்ட வேண்டி தேசம் பிரார்த்திக்கின்றது.