கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் விழா
சித்ரா பௌர்ணமி பௌர்ணமிகளில் அது மகா முக்கியமானது. அந்த முழுநிலவு நாள் அன்று சில வழிபாடுகள் விசேஷமானவை.
கண்ணகி கோவில் திருவிழா, கூவாகம் கோவில் அரவாணிகள் விழா அன்றுதான் நடக்கும்.
இதில் அந்த கூவாகம் விழா கொஞ்சம் கவனிக்க வேண்டியது, அது அரவாணிகளுக்கானது
அரவாணிகளின் இன்றைய நிலை பரிதாபமானது, கொடூரமானது, நினைத்து பார்க்கவே கண்ணீர் பெருகும் மகா கொடுமையான வாழ்வு அது.
உலகெல்லாம் எக்காலமும் அந்த தனி இனம் இருந்தது. மேற்காசிய பண்டை மதங்களில் கூட அதன் சாயல் கொண்ட பேச்சுகள் உண்டு. அவை சாபமும் பாவமும் நிறைந்த தலைமுறைகளின் வம்சம் என உலகின் அன்றைய மதங்கள் பல சொன்னது
ஆனால் இந்துமதம் அந்த பிறப்புக்களை தனியாக பார்த்தது, மிக உருக்கமாக அணைத்து தனி இடம் கொடுத்து உயரத்தில் வைத்திருந்தது, அர்த்த நாரீஸ்வரர் என அவர்களுக்கு ஒரு உருவமும் கொடுத்தது
அர்த்த நாரீஸ்வரர் சிலையினை காட்டி பாதி ஆணும் பாதி பெண்ணுமாக இவ்வுருவம் இருக்கின்றதே, மீதி பாதிகள் என்ன ஆனது என விநாயகரிடம் ஒரு தேவன் கேட்டானாம்
மீதி உருவங்கள் உலகில் ஆணும் பெண்ணுமாக சுற்றி திரிகின்றன என்றாராம் விநாயகர் , அப்படி ஆணும் பெண்ணும் சரிநிகர் கலந்து உருவான பிறப்புக்களே அந்த அரவாணிகள்.
ஒவ்வொரு பெண்ணிலும் கொஞ்சம் ஆண் தன்மை உண்டு, ஒவ்வொரு ஆணிலும் கொஞ்சம் பெண் தன்மை உண்டு. மானிட இயல்பு அப்படி
அதில் ஆணும் பெண்ணும் சரிபாதியாக கலந்த பிறப்புக்கள் அரவாணிகள், செப்பு குறைவாகவும் தங்கம் அதிகமாகவும் சேர வேண்டிய நகையில் இரண்டும் சரிபாதியாக இருந்தால் எப்படி உறுதிவருமோ அதுதான் அரவாணிகள்
ஆண் தன்மையும் பெண் தன்மையும் சரிவர கலந்த அந்த பிறப்புக்களை மனித குணங்களை தாண்டிய தெய்வ பிறப்புக்கள் என கொண்டாடியது இச்சமூகம், அவர்களை அன்று மகா முக்கிய இடத்தில் வைத்திருந்தது
அவர்களுக்கு ஆலயத்தில் முன்னுரிமை இருந்தது, அவர்கள் அரண்மனையில் அரசனுக்கு நம்பிக்கைகுரிய இடத்தில் இருந்தார்கள், அமைச்சரவையில் கூட இடம் இருந்தது, அந்தபுரம் காவல் எனும் உயர்ந்த நம்பிக்கையும் அவர்களுக்கு கொடுக்கபட்டிருந்தது
ஆம், அரவாணிகள் ஆணுமற்ற பெண்ணுமற்ற தன்மை கொண்டவர்கள்தான் ஆனால் நம்பிக்கைகுரியவர்களாய் இருந்தனர். அவர்களுக்கு மானிட குணங்களான சூது தெரியாது, களவு தெரியாது, வஞ்சகம் தெரியாது
இன்றும் கவனியுங்கள் அரவாணிகள் என்பவர்கள் கூட்டமாய் கையேர்ந்துவார்கள், அழுவார்கள், கதறுவார்களே தவிர திருட்டோ, துரொகமோ, கொலையோ, கட்ட பஞ்சாயத்தோ எதுவும் அவர்களுக்கு தெரியாது
அரவாணிகள் மனம் தெய்வத்துக்கு சமம் என்பது உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் உள்ள தன்மை மட்டுமல்ல, அவர்கள் ஜாதகத்தில் புதன் வலுத்திருக்கும் என்பார்கள்., புதன் அரவாணி கிரகம் ஆனால் கலைகளுக்கும் புத்திக்கும் அதிபதி
அரவாணிகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலை ஒளிந்திருக்கும், ஒரு திறமை ஒளிந்திருக்கும், அது ஆடல் பாடல் கலைகள் மட்டுமல்ல, சிலருக்கு போர்கலையும் மிகுந்திருக்கும்
சிகண்டி, அரவாண் என மகாபாரத காட்சிகள் உண்டு, ஆப்கானிய ஆட்சியில் மாலிக்காபூர் எனும் அந்த அரவாண் தளபதி மிகபெரும் உதாரணம். இன்றும் உலகில் ஏகபட்ட திறமையாளர்கள் உண்டு
இந்துக்கள் அரவாணிகளிடம் ஆசி வாங்கினார்களே ஏன்?
அவர்கள் மனதால் தெய்வங்கள், அப்பழுக்கு அற்றவர்கள், அவர்கள் ஆசி கூறி அனுப்பினால் அந்த காரியம் வெல்லும் என உணர்ந்து அவர்களிடம் ஆசிவாங்கும் பழக்கம் அப்படித்தான் இருந்தது.
மகா தூயமனத்தவர் என சமூகம் அவர்களை நம்பியது, அதில் உண்மையும் இருந்தது
ஆம் அரவாணிகளுக்கு பேராசை, வஞ்சகம், சூது, கபடம் என எதுவும் தெரியாது, ஆசைகள் அதிகம் உதிக்கா மனம் அது, அந்த மனதில் தெய்வம் வாழும்
இதனால் அன்றே இந்த நாடு அரவாணிகளை அரவணைத்தது, ஆலயமும் அரசர்களும் இந்து பாரம்பரியங்களும் தர்மமும் வாழும் வரை இங்கு அரவாணிகள் மிகபெரும் இடத்தில் இருந்தார்கள்.
அவை எல்லாம் வீழத்தான் ஒதுங்க மரமின்றிய அந்த பறவைகள் இப்படி சிக்கிவிட்டன, கானகம் அழிக்கபட்ட பின் அனாதையாக்கமாட்ட மான்கள் போல் அவற்றின் இயல்பு மாறிற்று
சித்திரை மாதம் முழு நிலவு நாள் அவர்களுக்கு எதற்காக? அரவாண் பலியிடபட்ட ஆடி 1 இருக்கும் பொழுது சித்திரம் மாத நிலவுக்கும் அவர்களுக்கும் என்ன சம்ப்ந்தம்?
அங்கேதான் இருக்கின்றது அவர்களின் பழைய பெரும் வரலாறு
பாரத போரில் களபலி கொடுக்க வேண்டிய நிலை பாண்டவருக்கு இருந்தது, களப்பலி என்பது எல்லா அம்சங்களும் கலந்த ஒருவனை பலியாக கொடுக்க வேண்டியது. பாண்டவர்களில் அப்படி இருந்தது அரவாணும், அர்ஜூனனுமே
அரவாண் மிகபெரும் அழகும் போர் வீரனுமாயிருந்தான், ஆனால் இயல்பால் அவன் மூன்றாம் பாலினம்
இருக்கும் உயிர்களிலே அழகானதும் அம்சமானதும் பழுதற்ற மனம் கொண்ட மானிடனை பலிகொடுக்க வேண்டும் என்பதுதான் விதி , அப்படி தானே முன் உவந்து பாண்டவருக்காக தன்னை பலிகொடுத்தான் அரவான்
அவன் பெயாராலே அந்த இனம் அரவாணிகள் ஆயிற்று. தாங்கள் எக்காலமும் தியாக பிம்பங்கள் என்பதை உணர்த்தவே அவர்கள் அரவானுக்கு திருவிழா கொண்டாடுவார்கள்
அரவான் கொல்லபட்டது ஆடி 1 எனினும், சித்ரா பவுர்ணமிக்கு ஏன் அவனுக்கு விழா?
அங்குதான் இருக்கின்றது அரவாணிகளை ஒன்பது என அழைக்கும் இன்றைய இழிவின் உண்மை ரகசியம், அது சுவாரஸ்யமானது
அரவாண் என்பவன் நவ அம்சம் பொருந்தியவன், பேரழகன். சித்திரை மாத நிலவு வழக்கமான நிலவினை விட 9 மடங்கு பிரகாசிக்குமாம்
நிலா அந்த 9 மடங்கு பிரகாசிக்கும் நாளிலே அழகும் தர்மமும் நிறைந்தவனான அந்த அரவாணுக்கு விழா என குறித்தார்கள் அக்கால இந்துக்கள். பாரத அடையாளங்களுக்கு தமிழ்நாட்டில் நிரம்ப கோவில்கள் உண்டு, திரவுபதிக்கு உண்டு, பஞ்சபாண்டவருக்கு உண்டு
அப்படி அரவானுக்கு கூவாகத்திலும் உண்டு
9 மடங்கு ஜொலிப்பான நிலாவின் நாளில் விழா எடுக்கும் கூட்டம், மானிடரை விட 9 மடங்கு அழகான மக்கள் கூடும் கூட்டம் என்பது பின்னாளில் காரணம் மறந்து பெயர் மறந்து வெறும் 9 ஆகிவிட்டது
(9 கிரகங்களின் பூரண அருளையும் பெற்றவர்கள் அரவாணிகள் என்பதும் இன்னொரு தகவல், ஒன்பது வகை புலன்களையும் கட்டுபடுத்தும் சக்தி பெற்றவர்கள் என்பது இன்னொரு கோணம்)
இன்று கேலியும், கிண்டலும், காட்சி பொருளாகவும் ஆகிவிட்ட அந்த மூன்றாம் பாலினம் அன்று முதல் பாலினமாக கொண்டாடபட்டது
இச்சமூகமும் மரபும் மதமும் நம்பிக்கையும் அவர்களை அர்த்த நாரீஸ்வரர் சாயலாக கொண்டாடியது, தெய்வநிலைக்கும் மனித நிலைக்கும் இடையில் இருக்கும் மகா உன்னத நிலை கொண்ட மனதாக அவர்களை கண்டது
கூவாகம் விழா அந்த பழம் பாரம்பரியத்தின், இந்த பூமி அரவாணிகளுக்கு கொடுத்திருந்த மிகபெரும் இடத்தின் சாட்சியாக இன்னும் நீடிக்கின்றது.
அந்த பொற்காலதில் பிறந்த அரவாணிகள் கொடுத்து வைத்தவர்கள், அன்று இவர்களுக்கு இந்த இழி நிலை இல்லை, பிச்சை இல்லை, பாலியல் சீண்டல் இல்லை
அவர்களின் மிக குறைந்தபட்ச தேவையான உணவு, உடை, இல்லம் எல்லாவற்றுக்கும் மேல் மிக உயர்ந்த சமூக அங்கீகாரம் கிடைத்தது.
நீதியான மனமும், சொல்வாக்கும், தெய்வ தன்மையும் கொண்டவர்கள் என அவர்களிடம் ஆசிவாங்கி அவர்களுக்கு காணிக்கை கொடுத்து கொண்டாடியது இத்தேசம்
ஆம் அரவாணிகளிடம் உண்மை உண்டு , எக்காலமும் உண்டு அந்த உண்மை நிரம்பிய மனம் வாழ்த்தவேண்டும் என வேண்டிகொண்டார்கள், கர்மமற்ற பிறப்பின் ஆன்மா அரவாணிகள் என அவர்கள் உணரபெற்றார்கள் முன்னோர்கள்.
காலம் மாற மாற எல்லாம் மாறிற்று
இன்று எல்லாமே தலைகீழ், அவர்களை புரிந்து கொள்ளவோ, அவர்களின் குரலை செவிமடுக்கவோ யாருமில்லை. சிலர் சொல்வது போல அரவாணிகள் எனும் அந்த பெருமக்கள் விரும்பி அத்தொழிலை செய்வதில்லை, வேறுவழியின்றி எல்லா வகையிலும் வாழ்வு அவர்களை விரட்டி சந்த குழியில் தள்ளிவிடுகின்றது
உண்மையான இந்துதர்ம படி நோக்கினால் அவர்கள் வணங்கதக்கவர்கள் , ஆசி வாங்க வேண்டியவர்கள், கண்ணீர் சிந்த கூடாத மகா உன்னத பிறப்புக்கள்
அரவாணிகள் இழிக்கபடும் தேசம், கண்ணீர் விடும் தேசம் உருப்படாது என்பார்கள், இந்தியாவுக்கு அச்சாபமும் இருக்கலாம்
அவர்களின் புறத்தோற்றத்தை தாண்டி உள்ளே அவர்களுக்கும் ஒரு ஆன்மா உண்டு, அதில் கடவுள் உண்டு என சிந்திப்பார் யாருமில்லை
அவர்களுக்கு தேவை ஒரு அங்கீகாரம், ஒரு ஆறுதல், மரியாதை வேண்டாம் என்றாலும் அவமரியாதை இல்லா ஒரு சூழல், ஒரு வேலை, கொஞ்சம் உணவு, வாழ்வுக்கு உத்திரவாதம் அவ்வளவுதான்
ஆனால் அவர்கள் பிச்சை எடுத்தும் இன்னும் பல சீர்கேடுகளிலும் சிக்கி தவிக்கின்றார்கள்
ஆசை, களவு, கோபம், பேராசை, கொலை,சூது, வஞ்சகம், லஞ்சம் என எல்லா கெட்ட குணங்களை கொண்டவன் அரசியல்வாதி, தொழிலதிபர், பெரிய மனிதன், கல்வி தந்தை , கொடை வள்ளல் என வரும் சமூகத்தில்
கொள்ளை அடிப்பவன், மலை திருடடன், மணல் திருடன், தேசவிரோதி என இன்னும் என்னவெல்லாமோ செய்து பெரிய மனிதன் என சிலர் வலம் வரும் சமூகத்தில் அந்த அரவாணிகள் தூற்றபடுகின்றார்கள்
மாபெரும் வினோதம் இது
அரவாணிகள் எங்காவது யாரையாவது ஏமாற்றி சொத்து சேர்த்ததுண்டா, வஞ்சகம், கொலை, அரசியல், பேராசை, முறையற்ற சொத்து, அடாவடி, தேசவிரோதம் என எதிலாவது அவர்களை நீங்கள் பார்த்ததுண்டா?
அரவாணிளுக்கான சிறை என ஏதுமுண்டா? அதை கட்ட அவசியம் உண்டா?
ஒரு காலமும் இல்லை, அப்படி ஒரு காலமும் வராது. உணவும் உடையும் இடமும் கொடுத்துவிட்டால் அப்படியே நிறைவில் அமரும் பிறப்பு அது, பேராசையோ அதன் சாயலோ அவர்களை நெருங்காது
காரணம் ஆணுமற்ற பெண்ணுமற்ற சராசரி மனிதனுக்கு அப்பாற்பட்ட கடவுள் தன்மையில் அவர்கள் நிலைத்து நிறைந்திருக்கின்றார்கள், அதனால் அன்று கொண்டாடபட்டிருக்கின்றார்கள்.
இன்று அவர்களை இழிவுபடுத்துவது என்பது நம் பாரம்பரியம் அறியாத, இந்து மரபு அறியாத, நம் அறம் அறியாமல் வழிதவறி சென்றுவிட்ட தறிகெட்ட தறுதலை சமூகத்தின் நெறிகெட்ட வழி
இந்துமரபும், இந்திய பாரம்பரியமும் அறிந்த எவனும் அதனை செய்யமாட்டான்
இந்தியாவில் அரவாணிகளின் முகத்தை உற்று பாருங்கள், எரியும் கானகத்தில் உலாவும் மான்கள் போல அப்படி ஒரு மிரட்சி, ஒருவித எரிச்சல் ஒருவித பதற்றம் , கோபம்
அவர்களின் உண்மை இயல்பு அதுவல்ல, பசுபோன்ற அமைதியான சாயலே அவர்களுடையது
ஆனால் அடிமைதன கொடுமையில் தன் இயல்பை பறிகொடுத்த அமெரிக்க கறுப்பர்களை போல அவர்கள் பதற்றமும் கோபமும் மிக்கவர்களாகிவிட்டார்கள்.
மேற்குலகில் வாழும் அடிமட்ட மக்களை கொஞ்சம் சினேகமாக உற்று நோக்கினால் அவர்கள் பதறுவார்கள் “என்னை அடிமை என்றுதானே அப்படி எகத்தாளமாய் பார்க்கின்றாய்? என் கஷ்டம் அறிந்துதானே அப்படி பார்க்கின்றாய்?” என சீறுவார்கள்
அவர்கள் அடி ஆழமான மனதில் ஒளிந்திருக்கும் வலியும், இயலாமையும் , கோபமும் அப்படி வெடிக்கும்
அரவாணிகளுக்கும் அதே மனநிலையே, அவர்கள் கத்துவதும் ஆக்ரோஷமாவதும் அப்படியே. ஆனால் எந்நிலையிலும் மகா அடிப்படை குணமான அந்த தெய்வ நிலையில் இருந்து அவர்கள் தவறுவதில்லை.
ஒரு காலத்தில் அவர்களை தேடி சென்று வணங்கிய சமூகம் இன்று அவர்களை தீண்ட தகாதவர்களாக விரட்டி இழித்தும் அடித்தும் துரத்தியும் இம்சை செய்து, அவர்கள் ஆசிவழங்க வந்தாலும் விரட்டி அடிப்பது நம் பாரம்பரியம் மறந்த பாவமே அன்றி வேறல்ல
அந்த தெய்வ நிலையில் அவர்கள் சரியாக இருக்கின்றார்கள் , மனமார ஆசிவழங்க தயாராய் இருக்கின்றார்கள்
ஆனால் அணுவில் விளையாடுவது போல் ஆபத்தான விளையாட்டில் சமூகம் அவர்களோடு விளையாடுகின்றது, அவர்களின் சாபமும் கண்ணீரும் பொல்லாதது, களங்கமற்ற பாவமற்ற பேராசையற்ற கொடுமதியற்ற ஆசைக்கு அப்பாற்பட்ட மனம் இடும் சாபம் அணுகுண்டை விட ஆபத்தானது.
இதை எல்லோரும் புரிதல் வேண்டும்.
அவர்கள் மனம் சத்தியத்திலும், தியாகத்திலும் நிறைந்தது. அந்த ஆன்மாக்கள் கர்மபலன் அற்றவை. அவர்கள் வாழ்த்தினால் ஒரு விஷயம் வாழும், அவர்கள் சபித்தால் அப்படியே நடக்கும்
அந்த ஆன்மாக்களின் கர்ம சக்தி அப்படியானது.
ஒரு குறை சொல்லமுடியாத , யாரும் குற்றம்சாட்ட முடியாத பீஷ்மர் எனும் வரம்பெற்ற மனிதர், பிரம்ம்சரியம் முதல் எல்லா தர்மங்களையும் காத்து நின்ற மாபெரும் வீரதிருமகன் ஒரு அரவாணியின் கையால் சாவது மகிழ்வானது என ஏற்றுகொண்டார்
ஆம் அந்த சிகண்டியின் கையால் சாவது வரம் என ஏற்றார் அந்த தெய்வ திருமகன்
ஒரு அரவாணியின் பலியால் தொடங்கிய போர், ஒரு அரவாணி எனும் தெய்வ சக்தியாலே மகா திருப்பம் பெற்றது, கவுரவ படையின் ஆணிவேரான பீஷ்மர் அரவாணி எனும் ஒரு தெய்வ சக்திக்கு மட்டும் கட்டுபடுவார் என அழகாக திட்டமிட்டு வீழ்த்தினான் கண்ணன்
அரவாணிகளின் இயல்பு அப்படியானது
அவர்களின் ஆசையும் தேவையும் மிக மிக குறைவானது, அது கிடைக்காத இடத்திலும் ஒருவித தவமே அவர்கள் இயல்பு, ஒதுங்கித்தான் செல்வார்கள்
பெண்கள் மட்டுமல்ல, அரவாணிகள் எனும் அந்த தெய்வ பிறப்புக்களை கதறவைக்கும் சமூகமும் ஒரு காலமும் உருப்படாது, இதை அன்றே சொன்னது இந்துமதம்
இவர்கள் நிம்மதியாக வாழ வாழத்தான் ஒரு குடும்பம் செழிக்கும்
அரவான் கொல்லபட்டது ஆடி 1ம் தேதி என்கின்றது புராணம், இதனால் அந்நாளில் அரவாணிகளுக்கு உணவளித்து, உடை அளித்து ஆதரவளித்தால் அவர்கள் தலைமுறை சோற்றுக்கும் உடைக்கும் பிச்சை எடுக்காது தவித்து நிற்காது என்பது இந்துமத தர்மம்
அந்நாளோடு சித்திரா பவுர்ணமியினையும் சேர்த்து கொள்ளலாம்
அன்று அவர்களுக்கு ஒரு நேர உணவிட்டாலும் அது மிகபெரும் புண்ணியம், தலைமுறைக்கான மிகபெரும் காவல் தர்மம்.
அவர்களை திருநங்கைகள் , திரு நம்பிகள் என சொல்வது கூட சரியான பதில் அல்ல, “திருமக்கள்” என கடவுளின் இயல்பினராகவே அவர்களை கருதல் வேண்டும்
ஆம், கடவுள் ஆண்தன்மை பெண்தன்மை இல்லாதவர் என்பது போல அவர்களும் அந்த தன்மைக்கு அப்பாற்பட்ட கடவுள் இயல்பினர்.
ஒரு காலம் வரும், இந்நாடு தன் தர்மத்தை, அறத்தை, தாத்பரியத்தை மீட்டெடுக்கும். அன்று அரவாணிகள் உலகம் தன் பொற்காலத்தை மீட்டெடுக்கும். அவர்களை கடவுளின் சாயலாக கண்டு அரவணைத்து அவர்களின் உன்னத திறமைகளை மீட்டெடுத்து வணங்கி அச்சமூகம் அவர்களை கொண்டாடியது போல் ஒரு காலம் வரும்.
அதுவரை அவர்களை காத்து நிற்க வேண்டியது ஒவ்வொருரின் கடமைகளில் ஒன்று, தெய்வ இயல்பினரான அவர்களுக்கு செய்யும் உதவிக்கு பரம்பொருளிடமிருந்து நிச்சயம் கைமாறு கிடைக்கும்.