எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் இசைஞானியும்
ஒரு சித்தனை இன்னொரு சித்தனேதான் அடையாளம் காண முடியும், இனம் இனத்தோடு என்பது அதுதான்
பாலகுமாரனின் நினைலவலைகளில் இளையராஜாவினை பற்றிய வரிகளில் ஒன்று
“இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
கரகரவென்று கண்ணில் நீர்வழிய நான் உட்கார்ந்திருந்த நிகழ்ச்சியும் நடந்தது. அது இளையராஜாவின் “ஹௌவ் டு நேம் இட்” கேசட் வெளியீட்டின் போது. எனக்கு இசையில் ஞானம் கிடையாது காதுகள் மட்டுமே உண்டு. தேர்ச்சி கிடையாது. கொஞ்சம் பயிற்சி உண்டு.
ஒரு வார பத்திரிகைக்காக இளையராஜாவைப் பேட்டி எடுக்கப் போனேன்.
அது என் விடலை பருவத்தின் உச்சக்கட்டம். இளையராஜா பிரகாசமாய் வெளிவந்துவிட்ட காலம்.
கோயில் மணி ஓசைதனைக் கேட்டதாரோ… என்று தெருவெங்கும் ஜனங்கள் பாடிக்கொண்டிருந்த நேரம் அது.
“சங்கீதம் பற்றி சில கேள்விகள்… உதாரணமா தியாகையர் கிருதிள்ள பாவம் முக்கியமாகவும், சியாமா சாஸ்திரிகள் கிருதிகள்ள…”
” ஒரு செகண்ட்… எனக்கு இதுக்கெல்லாம் பதில் தெரியாது.எனக்கு தியாகையரும் தெரியாது. சியாமா சாஸ்திரியும் தெரியாது. எனக்கு தெரிஞ்சது இந்த ஆர்மோனியப் பெட்டி. இதிலேர்ந்து வர்ற சத்தம், இதை சங்கீதம்னு எதுக்க இருக்கிறவங்க சொல்றாங்க. அவ்வளவுதான். இதுல கேள்வியோ பதிலோ எதுவும் இல்லை. முகத்தில் அடித்தைப் போல பதில் வந்தது.
“சங்கீதம் பயிற்சி இல்லாம பாட்டமைப்பது…”
” நல்ல சங்கீதப் பயிற்சி இருக்கிறவர்களுக்கு டியூன் போடத் தெரியணும்னு அவசியமில்லை. டியூன் போடறவங்க எல்லாம் சங்கீதம் பயிற்சி முடிச்சுட்டாங்கன்னும் இல்லை. இசை பெரிய விஷயம். அது என்ன ஏதுன்னு இத்தனை நாளைக்கப்புறமும் எனக்குத் தெரியலை. “
” எனக்கு தெரியலையே முண்டம்! உனக்கு என்ன தெரியும்னு பெரிய பெரிய பேரைச் சொல்லிக் கேள்வி கேட்க வருகிறாய்…? வார்த்தையாய்ச் சொல்லாத உண்மை நெஞ்சுக்குள் உரைத்தது. நான் வெளியேறினேன். இளையராஜா பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார் என்று வார பத்திரிகை ஆசிரியரிடம் போய் சொன்னேன்.
இளையராஜா பேட்டிக்கு மறுக்கவில்லை. இரண்டு வரி பதிலில் என் யோக்கியதையை உடைத்து எனக்கு வெளிப்படுத்தினார்.
இதற்குப் பிறகு நான் அவரை சந்தித்தது சிந்து பைரவி படத்துக்கு டியூன் போட சவேரா ஹோட்டலுக்கு அவர் வந்த போது. டைரக்டரும் மூன்று உதவியாளர்களும், அனந்தவுமாய் நான்கு பேர், இளையராஜா, அவர் உதவியாளர் இவ்வளவுதான்.
ஹார்மோனியம் பிரித்து சுருதி கூட்டியதும் டிபன் வந்ததும. சகலரும் தட்டேந்தி உண்ண, சட்னி சாம்பார் நெடி அறையைச் சூழ்ந்து கொண்டது. பிறகு அரை மணி நேரம் சில முயற்சிகள் செய்துவிட்டு உறையை மூடிவிட்டார். ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று இறங்கிப் போய்விட்டார்.
” கூட்டம் ஜாஸ்தி அதான் அவருக்கு மூடு இல்லை” என்று சொல்லப்பட்டது மற்றொரு முறை வி.ஜி.பி கடற்கரை ஓட்டலில் டியூன் போட நாள் ஒதுக்கிய போது உதவியாளர்கள் யாரும் வர வேண்டாம் என்று சொல்லப்பட்டது.
ஒரு அனுபவத்தை இழக்கிறோம் என்கிற கோபத்தில் மனசு கொதித்தது ஆறு பேர் கூட்டமாக இவருக்கு என்று கேள்வி வந்தது. இளையராஜா அலட்டிக் கொள்கிறார் என்கிற பொருமல் வந்தது.
இந்த பொருமலைத் தந்திரமாய் மனசுக்குள்ளேயே தக்க வைத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை.
வளசரவாக்கம் ஷூட்டிங் முடிந்து அவுட்டோர் போவதற்கு முன்பு இரண்டு பாட்டுக்கள் ஒலிப்பதிவான அன்று தனியே பேச சந்தர்ப்பம் கிடைக்கிற நேரத்தில் கேட்டுவிட்டேன்.
இளையராஜா வாய்விட்டு சிரித்தார்.
என் கேள்விகள் சிரிப்பாயிற்றா… அல்லது அதன் உள்ளூரத் தெரிந்த கோபம் சிரிப்பாயிற்றா தெரியவில்லை.
“நீங்க கதை எழுதுவீங்க இல்லையா?”
“ஆமாம் சார்.”
“பேட்டிக்கு வந்திருந்தீங்க இல்லை!”
“ஆமாம் சார்.”
” நீங்க எழுதுற போது ஆறு பேர் சுத்தி நின்னு எட்டிப் பார்த்த எழுத முடியுமா?”
” முடியாது சார். ஒரு தனிமை வேணும்.”
” அதான் காட்சி சொல்ல டைரக்டர் இருந்தா போதும். அதுவும் காட்சி சொல்ற வரைக்கும். அப்புறம் தனியாவிட்டாதான் டியூன் அமைக்கிறது சுலபம். அன்னைக்கு ஏசி ரூம்ல சாம்பார் நெடி ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. அங்க டிபன் சாப்பிட்டது தப்பு.”
“கூட்டம் ஜாஸ்தின்னு சொல்லிட்டுப் போயிட்டதா சொன்னாங்க. ரொம்ப வருத்தமாயிடுச்சு.
” வருத்தம் எதுக்கு? டியூன் போடறப்ப கொஞ்சம் தனிமை வேணும். இப்ப டியூன் ரெடி. வாங்க வந்து பக்கத்துல உக்கார்ந்து எப்படி வேலை செய்கிறேன்னு பாருங்க.”
இசை பயிற்சி இல்லாதவருக்கும் கூட இளையராஜா இசையமைக்கும் விதம் பார்க்க, கேட்க பரவசமாக முடியும். இழைஇழையாய்ச் சங்கதிகள் பிரித்து நான்கு புறமும் நானாவித இசைக்கருவிகளுக்கு வினியோகித்து, ரெக்கார்டிங் ரூம் போய் மொத்தமும் உள்வாங்கி ஒலி அளவை கூட்டிக் குறைத்துப் பின்னலிட்டு பளபளப்பேற்றி ரத்தினக் கம்பளமாய், பாட்டாய் அது வெளிவர…ரம்பா…! பரம சுகம். ஒரு நாள் முழுக்க கிறுகிறுத்து அங்கே உட்கார்ந்திருக்க முடியும்.
வார பத்திரிக்கைக்கு பேட்டி என்று போனபோது பேச மறுத்த இளையராஜா, வெற்று மனிதனாய் அவரிடம் நான் போய் நிற்க ஆயிரம் விஷயங்கள் பேசினார்.
” இன்று பௌர்ணமி. நான் முழுப் பட்டினி. நல்ல வேலை நான் வாசகர்களோடு என் உணவு விஷயம் பற்றி பரிமாறிக் கொள்ளத் தேவையில்லை.”
தன் வெளிநாட்டு அனுபவம் பற்றிக் குமுதத்தில் அவர் எழுதியிருந்த வாசகம் பற்றி நினைவூட்டினேன்.
“எப்படிங்க சோறு பக்திக் கட்டுரை எழுத முடியும்? உலகத்திலே எத்தனையோ பிரமிப்பான விஷயம். எப்படி சாப்பாடு பத்தி எழுதுறது? என்றார்.
” பசிக்குதாங்க சாப்பாடு. அத ருசிச்சுப் பேசுறது அசிங்கம்” நான் ஆமோதித்தேன்.”
“அப்ப எதுல ருசி உங்களுக்கு?”
” சாப்பாடு ருசி ஒழிக்க முடிஞ்சுதுங்க. ஆனா புகழ்ல இருக்கிற ருசி, பணம் பத்தின ருசி, பெண் ருசி இதெல்லாம் போகலைங்க.ஆனால் மெல்ல மெல்ல போகணும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.
” எப்படி?”
“ருசிக்கிற போதே கேள்வி வருது. என்ன இது… ஏனனு யோசனை வருது… ஏண்டா இதைச் செய்யறேன்னு கவலை வருது… அதே சமயம் ருசியும் அறுபடலைங்க. ருசியும் அறுபடாம அதே நேரம் கேள்வியோட இருக்கிற நிலையில் ஒரு அயச்சி வருது. தவிக்கிறேன். ஆனால் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கறேன்.
என் அடிமனத் தவிப்பை கொட்டினேன்.
நான் அவருக்கு சிநேகமானது இங்குதான். இளையராஜா சிறிது நேரம் தான் எழுதின கவிதைகளை படித்துக் காட்டினார். பிறகு மனம் என்று ஒன்று இல்லாத நிலையைப் பற்றி விளக்கினார்.”நிறையப்படிச்சு நிறையக் குழப்பிக்கறீங்க. ரமணர் படிங்க, போதும் நம்ம ஊர் ‘ஸென்’ மாஸ்டர் அவர்தான்.
” மின்சுற்று ஒண்ணு இருந்துதுண்ணா சிந்தனை வரும்.சிந்தனையின் விளைவு ஒப்பிட்டு பார்த்தல். நான் பெரியவனா, நீ பெரியவனான்னு கேள்வி. எல்லோரும் சிந்திக்க ஆரம்பிச்சுட்டோம். ஆக விளைவு? ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், இதைக் கூட்டம் கூட்டமா கோயிலுக்கு போயோ, கட்சிக் கூட்டத்திலோ ஒழிக்க முடியாது. தனித்தனியா மாறனும். இது சுலபமில்லை இது சுலபமாகிற வரைக்கும் இங்கே விடிமோட்சம் இல்லை. என்ன செய்யலாம்… இருந்துட்டு போக வேண்டியதுதான். எனக்கு இது புரிஞ்சு போச்சு. அவ்வளவுதான். எனக்கு புரிந்ததை உங்களுக்குப் எப்படி சொன்னாலும் கேள்வி மேல கேள்விதான் வருமே தவி, நான் சொல்லி நீங்க கேள்வி கேட்டு நான் பதில் சொல்லி… எதுக்கு இந்த நரகம்? இதுக்கு சும்மா இருக்கலாம்.”
” சும்மா இருப்பது என்றால்…”
” ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்போம்…. இசை அமைக்கிறது, நாவல் எழுதுறது, படம் எடுக்கிறது… ஏதாவது…”
” இசைல ஒரு ஆசையோடு மூழ்கலையா நீங்க …”
” ஹானஸ்டா செய்யறேன். எதிர்பார்ப்பு இல்லன்னா ஹானஸ்டி தானா வரும். ஹௌவ் டு நேம் இட்னு ஒரு மியூசிக் கம்போஸ் பண்ணி இருக்கேன். அதுவும் இன்னைக்கு செய்த சிந்து பைரவி பாட்டும் ஒண்ணுதான். ஒரே மாதிரி ஹானஸ்டிதான். அதுவும் ‘நிலா காயுது, நேரம் நல்ல நேரம்’ ஒரே விதம்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமா ஒவ்வொருத்தரைப் பாதிக்கும். அதுக்கு நான் பொறுப்பில்லை. என் பொறுப்பு என் ஹானஸ்டி மட்டுமே. இந்த ஹானஸ்டிக்கு அடிப்படை சும்மா இருத்தல்.”
” அப்ப இத்தனை பணம்… இத்தனை புகழ்…”
” வருது வச்சிக்கறேன். உன்னை மாதிரி மேதை உண்டாங்கறாங்க… சரின்னு கும்புடறேன். வரலேன்னு வச்சுக்குங்க… அப்ப என்ன செய்வேன். ஆர்மோனியப்பெட்டியைத் தோளில் மாட்டிக்கிட்டு கிராமம் கிராமமா சுக்கினவன்தானே…நான் அப்பவும் சந்தோஷமா இருந்தேனே. அப்ப நான் சுத்தினேன். இப்ப என் பாட்டு சுத்துது. அவ்வளவுதான் வித்தியாசம். நான் பாட்டுக்காரன். இது என் வேலை. அவ்வளவுதான்.”
“நாம் பொறந்ததுக்கு நன்மை ஏதும் செய்ய வேணாமா?”
” நீங்க பொறந்தது நன்மைக்கா… தீமைக்கா யார் பதில் சொல்றது? எப்படி தீர்மானிக்கிறது நமக்குப் பிடிச்ச விதமா ஏதாவது சொல்லிக்கலாம்… நெஜம் என்ன… அது தெரியாத போது தெரிஞ்சுக்கவே முடியாத போது எதுக்கு இந்த கேள்வி?
ஸ்டுடியோ உள்ளே” தொம் தொம் தொம்” பதிவு நடந்து கொண்டிருந்தது. நான் வெளியே சொக்கப்பனையாய் எரிந்து கொண்டிருந்தேன். இளையராஜா மறுபடி வெளியே வந்தார்.
” ஏங்க உங்க வாழ்க்கையில சிக்கலே இல்லையா?”
” இருக்குங்க. அதை ஏன் உங்க கிட்ட சொல்லணும். சொல்லி என்ன லாபம்? என் சிக்கலை நான் தான் பிரிக்கணும். உங்க வேதனைக்கு நீங்கதான் வைத்தியம்.” கார் நகர்ந்தது.
மறுநாள் வேறு ஒரு பாடல் பதிவு.
” பாலகுமாரன் உள்ள வாங்க.” தன் அறைக்கு அழைத்துப் போனார். ரமணர் புத்தகம் ஒன்றை கையெழுத்திட்டு கொடுத்தார்.
” இளையராஜா என்கிற இது பாலகுமாரன் என்ற எனக்கு கொடுத்து வாங்கிக்கொள்வது” அவர் எழுதியதை பிரித்து படிக்க உள்ளுக்குள் உறைந்து போனேன். என் பெரும்பான்மை கர்வங்கள் அன்று ஒடுங்கி ஒழிந்தன. அலட்டலும் ஆரவாரமுமாய் இருந்த பாலகுமாரன் அன்று அழிந்து போனான்.
இதற்குப் பிறகு மனிதர்களோடு நல்லுறவு கொள்வது எனக்கு எளிதாயிற்று.
உள்ளே இருந்த தணலை ஊதி என்னை எரித்த இளையராஜாவை நோக்கி என் வாழ்நாள் முழுவதும் கைகூட்பியிருப்பேன்.
மனச்சுமைகளை உதறிவிட்ட பிறகு அப்பா… நடப்பது எவ்வளவு எளிதாய் இருக்கிறது! இளையராஜாவைக் கர்வி என்று என் காதுபட இன்னும் சொல்கிறார்கள். அப்படியா என்று கேட்டுக்கொள்கிறேன்.
” போதிமரம் தொட்டவருக்கெல்லாம் ஞானம் வரும்” “
– இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.