காளிதாசனின் சாகுந்தலம் : 07
வேட்டையினை நிறுத்திய துஷ்யந்தன் தொடர்ந்து சொல்கின்றான்.
“கொடிய காட்டுத்தீ புயல் காற்றோடு சேர்ந்து சுற்றி வளைத்து எரிப்பதைப் போல, வேட்டைக்காக எந்த உயிரையும் தப்ப விடாதபடி காட்டை வளைத்த நம் படைகள் அதனை கைவிட்டு அமைதியாக திரும்பட்டும்.
சிங்கத்தின் கம்பீரம் போல் மாட்சிமை மிக்கவர்களும், சினம் தவிர்த்தவர்களுமான தூய துறவிகள் வாழுமிடம் இது. அவர்கள் கோபத் தீயினை மூட்டும் வண்ணம் எந்த செயலும் செய்ய கூடாது தளபதியே.
துறவிகள் சினம் கொள்ளாதவர் போல் சாந்தமே உருவானவர்களாக தோன்றினாலும், கற்புடை பெண்ணின் ஒவ்வொரு அங்கமும் எப்போதும் கற்பின் அறத்தில் விழிப்பாக இருந்து கொண்டே அசையாமல் அந்த விழிப்பு வெளித் தெரியாமல் இருப்பது போல இவர்களின் உள் மனம் உனக்குத் தெரியாது.
அவர்கள் குறிப்பறிந்து நடப்பதே நமக்கு சரி.
நல்ல குளிர்ச்சியாய் அழகானதுமாய் தெரியும் சூர்யகாந்த கல், குழந்தை போல் குளிர்ந்திருக்கும் சூரியகாந்த கல், சூரியனின் ஒரு கதிர்பட்டால் தகிக்கும் கழலாக மாறும். அறம் செய் துறவிகள் அப்படியானவர்கள். அப்படி பார்க்க சாதுவானர்கள். ஆனால் சினம் வந்தால் அவர்கள் சாபம் எரித்துவிடும் என்பதை நினைவில் கொள்.”
மன்னனின் இந்த உத்தரவினைப் பணிந்து ஏற்ற தளபதி சொன்னான் “மன்னரின் ஆணை உடனே நடக்கும்”
தளபதி வேட்டையினை நிறுத்தி திரும்புவதைக் கண்ட பாகன் பெருமூச்சோடு சொன்னான்.
“ஏ தளபதி! உன் திட்டம் நடக்காது. மன்னர் சொல்லிவிட்டார் அல்லவா? போய் வேட்டையினை நிறுத்து. நல்லவர்கள் பிறர் சொல்லும் பொல்லாத வார்த்தைகளை மனதில் வைப்பதில்லை. நம் அரசர் அப்படித்தான்.
மிகப்பெரிய தவம் செய்வோரை கலைக்க கொஞ்சம் கூட அழகோ கவர்ச்சியோ இல்லாத பெண்ணால் முடியாது.”
தளபதி மன்னரின் உத்தரவை அடுத்து பின் வாங்க, அந்தப் பெருங்கூட்டம் ஒரு நதி மெல்ல நடப்பது போல் மெல்ல கலைந்து சென்றது.
எல்லோரையும் அனுப்பிவிட்ட துஷ்யந்தன் தன் தேர் பாகனோடு மட்டும் சற்று தூரம் நடந்து சென்று ஓர் இடத்தில் அமர்கின்றான்.
அப்போது பாகன் தொடர்கின்றான்.
“ஒரு ஈ கூட இல்லாமல் எல்லோரையும் விரட்டிவிட்டு இந்தக் கொடிகளை பின்னி பூக்களால் நிறைந்திருக்கும் பந்தலின் கீழ் அமர்ந்திருக்கும் மன்னா! பொன்னை வைக்க வேண்டிய இடத்தில்தான் பூவை வைப்பார்க்ள், இங்கோ நீர்தான் அமர்ந்திருக்கின்றீர்” என நகைத்துக் கொண்டான்.
சாகுந்தலை நினைவில் பெருகியிருந்த துஷ்யந்தன் சொன்னான்.
“ஏய் பாகனே, எல்லா அழகும் தொழுது வணங்கும் ஒரு பெரும் அழகை நீ இன்னும் காணாதவனாக இருக்கின்றாய். அழகான விஷயங்களை காணத்தானே ஆண்டவன் கண்களைக் கொடுத்தான். ஆனாலும் நீ இன்னும் அந்த கண்களின் பயனைப் பெறவில்லை, நீ பரிதாபத்துகுரியவன்”
கொஞ்சமும் அசராமல் சொன்னான் பாகன் “ஏன், நான் உம்மை காண்கின்றேனே மன்னா, எனக்கு நீர்தான் பெரும் அழகு, அதைத்தான் நாட்டின் எல்லா கண்களும் சொல்கின்றன”
கண்களை கனவுலகுக்கு கொடுத்து அங்கே சாகுந்தலையினைப் பார்த்துக் கொண்டிருந்த துஷ்யந்தன் சொன்னான்.
“இந்த உலகில் அவரவர் தாங்கள் கண்ட ஒன்றுதான் அழகானது என நினைந்து மன அமைதி கொள்கின்றார்கள் பாகனே,
அந்த தவக்குடில் எனும் சிப்பியிலே இருக்கும் முத்து போன்ற சாகுந்தலையினை, கோலப் பெரும் அழகை, அழகெல்லாம் தன் தலைமேல் வைத்து கொண்டாடத் துடிக்கும் பெரும் அழகை, அந்த சாகுந்தலையினை கடும் வெப்பத்தோடு தேரில் வரும் சூரியன் கூட அவளைக் கண்டால் குளிர்வானே, அந்தப் பொன் நிலாவினைப் பற்றி அறிவாயோ?
பெரிய பாற்கடலாக இருந்தாலும் அங்கே கொஞ்சம்தான் அமிர்தம் உண்டு. அவள் அப்படி அல்ல. சிறிய குளிர்ந்த குளத்தில் கடல் போல் அமுதம் கொண்ட அழகு பெட்டகம் அவள்.
என் பாகனே, அவளைப் பற்றிச் சொல்ல நான் வெட்கப்படவில்லை, அவளுக்காக எல்லாம் துறக்கலாம் எனும் போது நாணம் ஒரு பொருட்டல்ல.
பாகன் குதிரைக்கான மொழியிலே பதில் சொன்னான்.
“நல்லது மன்னா, உங்கள் மனக்குதிரை வேகமாக ஓடுகின்றது, அதன் லாடத்தை கழற்றி விட்டால் எல்லாம் சரியாகும்.
நானும் கேள்விபட்டேன் மன்னா. அறுசுவை உணவில் உப்பு அதிகமானால் எப்படி சரியாகும்? அப்படி அப்பெண் தவசிகள் குலமாமே எப்படி உமக்கு பொருந்தும்?
கொஞ்சம் சிரித்துச் சொன்னான் துஷ்யந்தன்.
“அறியா பதரே ச்சீ போ.. எல்லோரும் நிலவை ஆவலுடன் பார்ப்பார்கள். நீ அதன் கறையினை மட்டும் பார்ப்பவன் போலிருக்கின்றது.
பொங்கி ஒளிவீசும் நிலாவினை சாகரப் பறவை பார்த்தும் பார்க்காமல் பறப்பது போல் நீ அவளை கண்டிருப்பாய் போலிருக்கின்றது.
நான் மிகக் கவுரவமான புரு வம்சத்தவன். அடையக் கூடாததற்கு ஆசைப்படுவது அல்ல என் நெஞ்சம்.
பாகனே! அவள் முனிவர் மகள் இல்லை. அவள் தேவலோகத்தில் ஆடும் அழகிய அரம்பை மேனகையின் மகள்.
அந்த சிற்றிடையாள் குளத்தில் சிந்திய அமுதம் பொல இங்கு தனித்து கிடக்கின்றாள்.
செம்மறிகள் இடையே சேர்ந்த பொன்மான்
செங்கற்கள் இடையே கிடக்கும் பவளப்பாறை
எருக்கம் பூ மேல் வீழ்ந்து கிடக்கும் மல்லிகைப் பூ
பாகன் அலுத்துச் சொன்னான்.
“பேரீச்சம் பழம் உண்டு பழகியவன் காட்டில் புளியம்பழம் தின்று ஆஹா என்ன சுவை என்பது போல் சொல்கின்றீர் மன்னா.
பாயும் அழகுமிக்க குதிரை மேல் ஏறி போர் செய்யச் செல்பவர்கள் பொதி சுமக்கும் விலங்கினை விரும்புவரோ? அரண்மனை உயர்குல மகளிர் எங்கே? இந்த காட்டில் கிடக்கும் இவள் எங்கே?
மணமிக்க சந்தன மரத்தில் கூடுகட்டி வாழும் அன்னப்பறவை கருவேல முள்மரத்தில் கூடு கட்ட நினைக்குமா? தாகம் என்பதற்காக ஆற்று நீரை விடுத்து கடல் நீரை தேடி குடிப்பார் உண்டா? அங்கம் அனைத்திலும் அரச சின்னம் பூண்ட நகைகளை அணிந்த அரசர்குலப் பெண்களை விடுத்து இப்பெண்ணை தேடலாமா மன்னா?
துஷ்யந்தன் மெல்லச் சொன்னான்.
“பாகனே, நீ அவளை கண்டிருந்தால் ஊமையாகி கைகட்டி நின்றிருப்பாய், காணாததால் பேசிக் கொண்டிருக்கின்றாய்.
அந்த பெண்ணழகுப் பேழை எப்படிப்பட்டவள்?
கனுக்கள் இல்லாத பெண் கரும்பு. அவளை நீ இன்னும் காணவில்லை. கரும்பின் உள்ளிருக்கும் சக்கையின்றி தொட்ட இடமெல்லாம் கற்கண்டாய் இருப்பவளை, உண்பதற்கு பதமானதும் குழைந்து நிற்கும் பால்சாதம் போன்ற அவளை நீ இன்னும் காணவில்லை. அதனால் பேசுகின்றாய்.”
பாகன் கொஞ்சம் யோசித்துச் சொன்னான்.
“எளிதில் தளராத உம் மனதையே ஒருத்தி தகர்த்து விட்டாள் என்றால் அவள் பெரும் அழகியாகத்தான் இருக்க முடியும். அவள் பெரும் வசீகரம் கொண்டவளாகத்தான் இருப்பாள். அழகுக்கெல்லாம் உள்ள பெரிய இலக்கணப்படி அவள் பூத்துவந்த புத்தொளி வடிவாக இருக்க வேண்டும் மன்னா.”
அருகிருக்கும் மரத்தில் சாய்ந்து மேலே பார்த்தபடி சொன்னான் துஷ்யந்தன். அவன் கண்களில் காதல் கூடியிருந்தது.
பாகனே, சுருக்கமாகச் சொன்னால் உலகிலுள்ள எல்லா அழகான பெண்களுக்கும் அவளே நெற்றித் திலகம்.
பிரம்மன் அவளை ஒரு ஓவியமாகத்தான் வரைந்து பார்த்திருப்பான். தனியே தன் முழுத் திறமையால் வரைந்து பார்த்திருப்பான். பின் அந்த ஓவியத்துக்கு உயிர்கொடுத்தால் என்ன எனக் கொடுத்திருப்பான்.
தான் படைத்த அழகை தன் பெருமை சொல்ல பூமிக்கு அனுப்பினானோ? அவளின் ஒவ்வொரு அங்க அழகையும் முடிந்த வரைக்கும் இன்னும் அழகாக்கி அனுப்பினானோ?
அந்த அழகை பெண்மையில் தோய்த்து தோய்த்து அழகாக்கினானோ?
தன் ஆற்றலை எல்லாம் கொட்டி அவளைப் படைத்தானோ பிரம்மன். அவளை விட சிறந்தவள் யார் எனக் கேட்டால் மஹாலட்சுமியினை அன்றோ நோக்க முடியும்?
அப்படி வானவர் வியந்து நிற்கும் பெரும் அழகை மண்ணவர் மயங்கி நிற்கும் பெரும் அழகை அவன் எனக்காய் படைத்தானோ?
அதனைக் கேட்ட பாகன் சொன்னான்.
“மன்னா, நீங்கள் சொன்ன விதத்திலே மற்ற பெண்கள் நிலா முன் மின்மினிப் பூச்சிபோல் ஆகிவிட்டார்கள். எல்லோரும் அவளுக்குப் பின்னால் போய் விட்டார்கள்”
துஷ்யந்தன் காதலின் உச்சத்தில் அவள் நினைவின் பெரும் மயக்கத்தில் சொன்னான்.
“அப்படியான பெரும் அழகியினை இவ்வுலகில் எவன் துய்ப்பானோ, யாருக்கு அந்த பெரும் பாக்கியம் கிட்டுமோ?
முன்னால் செய்த நல்ல தவமெல்லாம் ஒரு சேர கனிந்த பெரும் பயனோ?
அன்று செய்த தவமெல்லாம் அவளின் அங்கமாய் சமைந்ததுவோ?
அன்றும் இன்றும் இப்போது வரையும் யாரும் முகர்ந்து பாரா அனிச்சமலர் அவள். அன்றும் இன்றும் இப்போது வரை யாரும் கிள்ளா இளம் தளிர் அவள்.
துளையிடப்படாத தூய மணியோ, தூயமணிகளின் தாயகமோ, வளர்ந்து கொண்டே செல்லும் சுவைக்கு எல்லையே இல்லாத தூய அமுதமோ?
இதுவரை யாருக்கும் கிட்டாத எழில் அமுதமோ. அவள் தேகத்தின் பொலிவினைச் சொல்ல, சரியாக எடுத்துரைக்க உலகில் ஒரு மொழி உண்டோ?”
பாகன் சொன்னான்.
“அப்படி நீர் விருப்பம் கொண்டால் அவளை உடனே சிறை மீட்பீர், ஒரு அம்மி குழவி மேல் மயில் இறகு தடவி என்னாக போகின்றது?
அது ஒரு புலியின் நகங்களை அல்லவா தடவ வேண்டும்?
அப்படி ஆசைகளற்ற ஒரு துறவி கையில் அவள் சிக்கும்முன் காப்பீர் மன்னா, அவள் அகவாழ்வு சிறக்க உடனே விரைவீர்.”
துஷ்யந்தன் சொன்னான்.
“பாகனே, அவள் ஓடும் வெள்ளம் என்றால் எப்போதோ அணைகட்டி எடுத்திருப்பேன். அவளோ அங்கே அடைபட்ட தண்ணீர். அவள் சொந்த எண்ணப்படி நடக்கமுடியாது, அவள் வளர்ப்பு தந்தையும் இப்போது இல்லை அதனால் யோசிக்கின்றேன்.”
பாகன் சொன்னான் “மன்னா, நீர் இப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றீர். ஆனால் அவள் என்ன நினைப்பில் இருப்பாள்? தன் மனதின் குறிப்புகளை கண்கள் எனும் ஜன்னல் வழி சொன்னாளோ, உங்களால் ஈர்க்கப்பட்டதை அறிவித்தாளோ?”
துஷ்யந்தன் தொடர்ந்தான்.
“பெண்கள் என்றால் நாணத்துக்கா பஞ்சம்? அதுவும் பேச்சே இல்லாமல் அமைதி ஒன்றே தவழும் தவசிகள் குடிலில் வாழும் பெண்களிடம் நாம் என்ன அதிகம் பேசமுடியும்?
ஆனால் நான் ஒன்றை அறிவேன்.
அந்த பெரும் அழகி நான் பேசும் போதெல்லாம் எப்படி நிற்பாள் தெரியுமா? தன் மடிமுட்டி கன்று பால் குடிக்கும் போது, தலை தாழ்த்தி நிலம் நோக்கி தன் கன்றின் உடலைத் தழுவி நிற்குமே பசு, அப்படி தலை குனிந்து நிற்பாள்.
ஆனால் நான் அவளை காணாப் பொழுதில் மெல்ல என்னை நோக்குகின்றாள்.
அந்திவான மாலையில் மலையில் பொன்னிறத்தில் சூரியன் இறங்கும் போது கிழக்கே முழு நிலா மெல்ல எழுவது போல் என்னை நோக்கி நான் அறியாதவாறு புன்னகைக்கின்றாள்.
சூரியனும் சந்திரனும் ஒன்றையொன்று பார்த்து கொள்ளவில்லை என்பதால் உலகில் ஒளியில்லை என்றாகுமா? அவளும் நானும் நேரடியாக சந்திக்காததால் அன்பில்லை என்றாகுமா?
காதல் கொண்ட கண்கள் நேருக்கு நேர் சந்திக்க முடியுமா?
புன்னகையால் பட்டை தீட்டப்பட்ட அந்த புதுநிலவினை நாணம் எனும் மேகம் மறைக்கக் கண்டேன்…”
பாகன் அலுத்துச் சொன்னான்.
“இதில் என்னய்யா கண்டீர், உம்மை கண்டவுடன் அவள் உம் மடி மீதா வந்து அமர்வாள். அப்படியா எதிர்பார்த்தீர்?”
துஷ்யந்தன் தொடர்ந்தான்.
“அந்த நங்கையவள் திரும்பிச் செல்லும் போது என்னை எப்படி பார்த்தாள் தெரியுமா?
அவள் தன் தோழியரோடு செல்கையில் அவர்களோடு பேசுவது போல் கண்கள் சுழற்றி என்னை காண்பாள்.
அந்த சிவந்த உதடுகளில் பொங்கி வந்த வெட்கத்தை பூட்டி, பெண்மை இன்னும் அதை கட்டிவைத்து நின்றாலும் அதை மீறி அவள் குறிப்பால் தன் எண்ணம் சொன்னாள்.
அந்த குறிப்பால் நெஞ்சத்து எண்ணங்களை கையால் வீசிவிட்டாள்.
தன் அழகான பாதங்களில் தருப்பை புல் குத்திவிட்டதாகப் பதறியது போல் நடித்து திரும்பியவள், தன் காலை பாராது என் முகமல்லவா கண்டாள். அதைவிட அவள் மனதை எப்படி அவளால் சொல்லமுடியும்?
அவள் பாதம் முள்மேல் படவில்லை என்றாலும் முள்ளை எடுப்பது போல் அவள் என்னை கண்ட அந்த ஒரு நொடிக் காட்சி போதாதா? காரிருளில் நொடியில் மின்னும் மின்னலிலே வழியினை காணுதல் போல அவள் கண்ட ஒரு நொடியில் வாழ்க்கை பாதை அவள்தான் எனக் கண்டு கொண்டேன்..”
பாகன் சொன்னான் “நல்லது மன்னா, வாருங்கள் நடையபயனமாக குடில் நோக்கி செல்லலாம்
இந்த காட்டை நீர் சிவன் மன்மதனை எரித்ததை போல் எரித்துபோடத்தான் வந்தீர், ஆனால் இப்போது இந்த காட்டை மன்மதன் மாளிகை போல் ஆக்கி கொண்டிருக்கீன்றீர், பாலையாக வேண்டிய இடம் சோலையாகிவிட்டது
ஆனால் உமது உள்ளத்தில் எரியும் காம நெருப்பு தவகுடிலில் என்ன செய்யுமோ என்பதுதான் அச்சம்”
துஷ்யந்தன் கொஞ்சம் நாணி சொன்னான், முற்றிய காத்ல் மூளை சிதைக்கும் பற்றிய பெண்வழி ஒன்றே நடக்கும்
அரியாசனமும் அறிவுடை நெஞ்சமும் ஒடுங்கி நிற்கும் காதல்பெண் முன்னால், அப்படி தன்னை இழந்து உருமாறி நின்றான் துஷ்யந்தன், அப்படியே சொன்னான்
“பாகனே, எனக்கு தெரிந்த சிலர் குடிலில் உண்டு, ஆனால் எப்படி என்ன சொல்லி அங்கு செல்வது எனப்துதான் தெரியவில்லை”
பாகன் தலையில் அடித்து சொன்னான் “நீர் இந்த நாட்டுக்கே மன்னன், இந்த காடு உமக்கு கட்டுபட்டது, இங்கு யாரிடம் நீர் அனுமதி கேட்கவேண்டும், சொந்த வீட்டில் நுழைய அனுமதி கொருவார் எவருண்டு?”
துஷ்யந்தன் மறுத்தான் “ஏதேனும் காரணம் வேண்டும் பாகனே” என சிரித்தபடியே நெற்றி சுருக்கினான்
பாகன் சொன்னான் “ஆறில் ஒருபங்கு தானியம் வரியாய் கேட்டு செல்வோம், நம் அதிகாரம் அதுதானே”
துஷ்யந்தன் அவன் தலையினை மெல்ல தட்டி சொன்னான்
“மடையனே, வரியாக வரும் தானியங்களை நாமே அவர்களுக்கு தானமாக கொடுக்கின்றொம், பின் நாமே அவர்களிடம் சென்று வரிகேட்டால் எப்படி?
நமக்கு தானே குவியும் தானியத்தையா அவர்களிடம் சென்று கேட்பாய்?
அவர்கள் செய்யும் கடும் தவம் தானே இங்கு எல்லா வளமும் கொட்டுகின்றது, அந்த பலனில்தானே ஆறில் ஒருபங்கு விளைச்சல் வாங்குகின்றோம், தவசிகளின் தவம் தானே நம் நாட்டுக்கு ஆசீர்வாதமாய் கொட்டுகின்றது
தவசிகள் செய்யும் தவமே ஒரு நாட்டை வாழவைக்கும், அந்த தவசிகளிடம் ஆசிவாங்க வேண்டுமே தவிர வரியா வாங்குவா” என அதட்டினான்
அப்போது இரு காவலர்கள் அவனை நோக்கி ஒரு செய்தியோடு வந்தார்கள், திரும்பினான் துஷ்யந்தன்
(தொடரும்….)