காளிதாசனின் சாகுந்தலம் : 09
துஷ்யந்தன் அந்த கானகத்தின் ஆசிரமத்தை அரக்கரிடம் இருந்து காக்க வந்துவிட்டான் என்றதும் அந்த தவகுடில் மகிழ்ந்தது, மீண்டும் தர்ப்பை புல் சேகரித்தனர், யாக குண்டம் எழுப்பினர் எங்கும் உற்சாகம் கரைபுரண்டது
அப்போது தர்ப்பைபுல் அறுக்க தயாரான பெண் சொன்னாள்
“எவ்வளவு வியப்பு?, எவ்வளவு மகிழ்ச்சி?, வல்லாளன் வில்லாளன் துஷ்யந்தனே வந்து நமக்கு காவல் இருக்கின்றான், வலிமையின் மாட்சிக்கு சிகரமான அவனே வந்தபின் நம் பயம் எங்கே போயிற்று?
முன்பு இந்த அரக்கரை கண்டால் புலிகண்ட மான்கூட்டம் போல் அஞ்சி ஓடுவோமே? அந்த பயம் எங்கே போயிற்று?
அவன் வில்லின் நாண் கொடுக்கும் ஓங்கார ஒசை ஒன்றே நம் யாகத்தை அழிக்கவரும் கூட்டத்தினை தொலைதூரத்துக்கு அப்பால் நிறுத்தி வைத்திருக்கின்றதே
நாகத்தின் சீற்றம் கேட்ட எலிகள் போலே, அரக்கர் கூட்டம் எங்கெல்லாமோ சிதறி ஓடிவிட்டதையும் கண்டோம்
வெறும் வில்லின் நாண் ஓசையிலே எதிரிகளை விரட்டியவர் அம்பு தொடுத்து அடித்தால் என்னாகும்? ஆதலால் அச்சமின்றி நாம் யாகத்தை செய்ய தர்ப்பை அறுத்து வருவோம் என்றவன் எதிரே வந்த ஒருபெண்ணை கண்டு கேட்டாள்
“பிரியம்வதை, கிள்ளபடாத இரு தாமரை இலைகளை, யானையின் பாத தடம் போன்ற அழகான வட்ட தாமரை இலைகளையும், நரந்தம் புல்லின் நெய்யினையும் எங்கே கொண்டு செல்கின்றாய்?”
பிரியம்வதை அவை “சாகுந்தலையின் வைத்தியத்திற்கு” என்றாள்
“என்ன?, உன் தோழி சாகுந்தலை யாகபீடத்தின் அருகே வைத்த மலர்கள் வெமமையால் வாடுவதை போல வாடி கிடக்கின்றாளா?.
அவளை சூழ்ந்திருப்போர் அவள் உடல்வெப்பம் தணிக்க முயல்கின்றார்கள் என்றால் விரைவாய் போ
அந்த சாகுந்தலைதான் நம் கன்னுவ முனிவரின் உள் மூச்சின் வடிவமாய், மூச்சுவிடும் எழில்கொடியாய திகழ்பவள் அல்லவா?, அதனால் நான் இப்போதே அவள் உடல் வெப்பம் குறைய பனிகவ்விய நீரை கொண்டு வந்து கவுதமரிடம் தருவேன்” என சொல்லி சென்றாள்
அப்பக்கம் சாகுந்தலை நினைவே நோயாகி, காம பிணியாகி முன்பின் தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்த துஷ்யந்தன் சொன்னான்
“என்னுள் வளரும் தவம் என்ன என்பதை அறியாதவனா நான்?
என் மனதில் அவள் மேலான ஆசை அல்லவா வளர்கின்றது
அந்த கருங்குழலி சாகுந்தலை என் மனவிருப்பபடி நடக்க விரும்புவாளா? தெரியவில்லை.. ஆனால் அவளே விரும்பினாலும் அவள் இருக்கும் சூழலில் எதுவும் முடியாது என்பதையும் அறிவேன்
ஆனாலும் அவள் மேல் பதிந்த என் நெஞ்சை நான் எப்படி மீள எடுப்பேன்?, என்னால் முடியவில்லை
காதல் எனும் பசுவுக்கு கறந்த பாலை மறுபடியும் உள் இழுக்க தெரியவில்லை, இனி நான் என்ன செய்வேன்?
என் நினைவுகளை எல்லாம் அழித்தாலன்றி ஒளிமிகுந்த சாகுந்தலையினை என் உள்ளத்தில் இருந்து மறக்க முடியாது
இப்படி ஒரு நிலைக்கு என்னை தள்ளிவிட்டவன் அந்த காமதேவன்
ஓ.. காமதேவனே காம இன்பத்தை தருபவனே, காதல் கலைக்கு தேவனே
புவியில் வாழ்வோரை எல்லாம் காயபடுத்தும் மன்மதனே
எளியவனான என் மேல் இரக்கமில்லாமல் என்னை ஏன் அவளை முன்னிட்டு சிதைக்கின்றாய், உனது மலர் அம்புகள் என் நெஞ்சத்தை நெருப்பாய் துளைப்பதையும் ரசிப்பாயோ?
ஓ ….காமதேவனே நான் எப்படியான வெப்பத்தை உன்னால் உணர்ந்தேன் என்பதை அறிவாயா? வெள்ளை அலைகள் ஆடும் கடலின் அடியில் இருக்கும் வடவை தீ எனும் பெரும் தீயின் வெம்மையினை அவளால் உணர்ந்தேன்
ஏ …..காமதேவனே, இதுவரை நெற்றிகண் திறந்த சிவன் உன்னை அந்நெருப்பால் எரித்தார் என்றுதான் அறிந்திருந்தேன் அது பொய் என்பதை இன்று உணர்ந்தேன்
சிவனாரின் நெற்றிகண் நெருப்பில் நீ பொசுங்கினாய் என்பதெல்லாம் பொய் என்பதையும் இன்றுணர்ந்தேன்
ஏ …கொடியவனே நீ சிவன் கொடுத்த நெருப்பால் அழியவில்லை மாறாக அந்நெருப்பை என்மேல் எறிந்து என்னை எரிக்கின்றாய் என்பதை இப்போது அறிந்துகொண்டேன்
மென்மையான பூக்களை அம்பாக கொண்டவனே, நீயும் நிலவும் காதலர்க்கு இன்பம் தருபவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன்
ஆனால் நீ அவ்வளவு நல்லவனும் அல்ல , இன்பம் தரும் ரசனையானவும் அல்ல , நீ காதல் கொண்ட ஒருவனை ஏங்கி சாகடிக்கும் கொடியவன் என்பதை இப்போதல்லவா உணர்ந்தேன்
கொலைவாளை மலர் என வீசும் வஞ்சகன் நீ, நிலாவின் குளிர்ச்சி என்றே கொள்ளிநெருப்பை வீசும் கயவன் நீ
உலகமக்கள் நீயும் நிலவும் இன்பமும் மகிழ்வும் தருபவர்கள் என தவறாக புரிந்திருகின்றனர், கொல்லும் நெருப்பை அள்ளி அள்ளி வீசும் கொலைகாரன் நீ
நான் அவள் மேல் மனம் வைத்தேன் ஆனால் நீயோ மலர் என்றே சொல்லி அம்பும் விடுத்தாய், இப்போதோ இடிபோல் என்மேல் விழுந்து அவை வதைக்கின்றன
அவள் மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக என்னை வதைக்கின்றாயே, அவள் மேல் மயக்கம் கொண்டேன் என்பதற்காக என்னை ஒடிக்கின்றாய் அடித்து புடைக்கின்றாய் இது தகுமா?
ஏ கொடியவனே , இரக்கம் இல்லாதவனே கல்நெஞ்சனே நீ உயரபிடித்திருக்கும் மீன்கொடி எனக்கு ஆளை கொல்லும் கொடுமீனாய் தெரிகின்றது, அதை நான் உணர்ந்து கொண்டேன்”
என்றவன் மெல்ல மெல்ல தளர்நடை நடந்து வந்தான் , வந்தவன் தனக்குள் சொல்லிகொண்டான்
“என் காவலால் மிகபெரிய யாகம் ஒன்று தடையின்றி நடந்தது, யாகம் செய்தவனும் மகிழ்ந்து என்னை நன்றியோடு வணங்கி அனுப்பிவிட்டான்
அவனோடு நானும் காவல் இருந்ததால் நானும் தவம் செய்தவனாகி இப்படி தனியாக புலம்பி திரிகின்றேன், உடலால் காவலிலும் உள்ளத்தால் அவளிடமும் தளர்ந்துவிட்ட நான் இளைப்பாற எங்கு செல்வேன்?
ஆம் ,அவளை விட்டு எங்குதான் செல்வேன்? , ஏன் ஆன்மாவினை விட்டு எங்கே செல்வேன்?
அவளின் அழகான திருவுருவை இமைக்காமல் நெஞ்சில் கண்டு உருகும் நான், நேரில் காணாமல் எங்கு செல்வேன்? அவளல்லவா என் கனவு
பெரும் ஆறு உயரத்தில் இருந்தாலும் பள்ளம் நோக்கி பாய்தல் போல என் மனம் அவள்மேல் பாய்கின்றது , காணல் நீரைகண்டு உடல் வெம்மை தீர நீராட முயல்பவன் ஏமாந்து நதி தேடி செல்வது போல் அவளை தேடி செல்கின்றேன்”
என்றவன் மேலே சூரியனை பார்த்து புன்னகைத்தான்
“ஏ கதிரவனே, உன் பூமிகாதலியினை நீ எப்படியெல்லாம் அணைத்து மகிழ்கின்றாய?, உன் வெப்பமிக்க கரங்களால் இந்த மண்மகள் மேனியினை வெதுவெதுப்பாய் தீண்டி அணைக்கின்றாய்
அவள் தனங்களென்னும் மலைமுகடுகளை விளையாட்டாய் தடவுகின்றாய், நீல நிறமாய் அவள் கட்டிய புடவையினை தொட்டுபார்த்து புரட்டுகின்றாய்,
அலைகளால் அவள் ஆடையினை புரட்டி புட்டி பார்க்கின்றாய்
நிலமடந்ததையோடு நீ செய்யும் காதலை காணும் எனக்கு , என் மனம் நிறைந்த காதல் பெண்ணை, மதுநிறைந்த மலர் போன்றவளான என் சாகுந்தலையினை மட்டும் கண்ணில் காட்டாமல் விளையாடுகின்றாயே ஏன்?
எங்கே என் சாகுந்தலை?
கடும்வெப்பம் உடல் எரிக்கும் இந்த கணல் பெருகும் பகல் பொழுதில் அவள் எங்கே செல்வாள்?
பெரும் கொடுமைகளை ஒழிக்க , பாவங்களை சாபங்களை ஒழிக்க திருமாலிடம் சென்று பணிவோர் போல அவள் அந்த மாலினி ஆற்றங்கரை பக்கம் நீராட சென்றிருப்பாள், அவள் இளம்பெண்களுடன் நீராட வருவதற்கு நிழலிடவே ஆற்றங்கரை மரங்கலில் கொடிகளளெல்லாம் பந்தலாய் படந்திருக்கின்றன
அந்த பசுந்தரையில் பந்தலின் நிழலில் அவள் தன்னை களிப்புக்குள் ஆழ்த்த தயாராகி கொண்டிருப்ப்பளோ,
இதோ நான் விரைந்து அங்கு செல்வேன், அமுதத்தை என் கண்ணால் பருக விரைந்து செல்வேன்”
என்றவன் செல்ல விரைகின்றான், அப்போது ஆற்றங்கரை தென்றல் அவன் முகத்தினை மெல்ல தழுவுகின்றது, அவன் அந்த சுகந்தத்தில் பாடுகின்றான்
“ஆற்றின் குளிர்கரையில் கரைந்து வரும் தென்றலே, அவள் ஆடையினை தழுவி வந்ததால்தானே இவ்வளவு இனிமையானக உள்ளாய்
மொட்டவிழும் தாமரையின் முழுமணமும் கவர்ந்து வரும் குறைவில்லா வளம் கொண்ட தென்றலே
மட்டில்லா மனமது போல் மகிழ்ந்து செல்லும் மாலினி ஆறு எட்டு பக்கமும் தன் நீர் முத்துக்களை எரியும் போது அதனை ஏந்திகொள்ளும் தென்றலே
சூரியனால் விரியும் தாமரையின் வெப்பத்தை குளிவிர்க்கும் மாலினி ஆற்றை போல காதலால் கதகதக்கும் என் உடலை தழுவி குளிவிக்கும் தென்றலே
காம வெப்பத்தால் எரியும் மேனியினை அடிக்கடி தழுவி வெம்மை தீர்க்கும் தென்றலே நீ வாழ்க” என்றவன் ஆற்றங்கரையினை நெருங்கினான்
அங்கே நீராடும் துறையின் பந்தலை கன்டான்
“பிரப்பம் எனும் கொடியினால் வளைக்கபட்ட பந்தலிது, அங்கே கற்றவர் அறிவுபோல் இலை தளைத்த கொடிகள் படந்திருகின்றது
அங்கேதான் காதல் ஊற்றும், காதல் ஊற்றின் நல் தவமும் ,அந்த நல்தவத்தின் ஆனந்தத்தை, அந்த ஆனந்தத்தின் பெண்மை தன்ன்னை, அற்புதத்தின் அற்புதம் எனும் அவளை நான் காண்பேன்
அவள் அங்குதான் இருக்கின்றாள் என்பதை எப்படி உறுதியாக சொல்கின்றேன்?
இதோ அவள் நடந்து சென்ற பாத சுவடுகள், அழகான அழுத்தமாக பதிந்த பாத சுவடுகள்.
அவளின் உடுக்கை போன்ற கொடியிடையின் பின்புறமாய் யாழின் இரு குடங்களை பின்னால் கொண்ட அந்த புதுவாழை தொடைகளான கால்களின் அழுத்ததால் பின்பக்கம் அழுத்தமாக, முன்பக்கம் தூக்கலாக பதிந்துள்ள அந்த மான்விழியாள் பாதங்களின் சுவடுகள் இவை
அவளை தவிர யாருக்கு இப்படி பாதத்தின் பின்பக்கம் அழுத்தமாக பதியும்?”
என்றவன் நெருங்கி சென்றான், ஆற்றங்கரை வருமிடத்தில்நின்று சொன்னான்
“இதோ இந்த மரத்தின் பின்னால் நின்று நான் அவளை காண்பேன், அவளின் கிளிமொழியாள் பேசும் பேச்சை எல்லாம் அவள் அறியாமல் ரசித்து கேட்பேன்,
மணிக்கொடியாள் தளிர்பெண்ணாள் பேசுகின்ற மொழியினை எல்லாம் என் காதால் கேட்டிடல் போல் இன்பம் ஏதுமுண்டோ?”
சொன்னவன் அப்டியே மறைந்து பார்க்கின்றான், அங்கே அவள் நதியோரம் விளையாடி கொண்டிருந்தாள், அவளை கண்டதும் மனதுள் வெடித்தெழுந்த மகிழிவில், உள்ளம் நிறைந்த சிலிர்ப்பில், மனதின் ஆசை கடல் கொடுத்த பெரும் அலையின் ஆர்பரிப்பில் யாருமறியாமல் தன் உள்ளத்தில் மகிந்து சொன்னான்
“இதோ என் உயிரின் உருவத்தை நான் இங்கே பார்க்கின்றேன், அதோ அந்த வெள்ளை கல்வேல் அவள் நிலவென அம்ர்ந்திருக்க நட்சத்திரங்கள் போல் தோழியர் சுற்றி விளையாடுகின்றார்கள்
என் கண்ணின் பயனை காண்கின்றேன்,
வாழ்வின் முக்தி நிலையினை இதோ இதோ இப்போதே காண்கின்றேன்”
(தொடரும்..)