பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி

பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி

பஞ்ச ஆரண்ய ஆலய தலங்களில் அடுத்த ஆலயம் திருஅரதைப்பெரும்பாழி ஆலயம். இது தஞ்சை பாபநாசம் அருகே அமைந்துள்ளது, அதன் இன்றைய பெயர் அரித்துவார மங்கலம்.

“பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே”

எனச் சம்பந்த பெருமானால் பாடப்பட்ட தலம் இது, தேவாரம் பாடப்பட்ட 216 ஆம் தலம் இது.

இதன் வரலாறு அடிமுடி காணமுடியாதபடி நின்ற சிவனின் கோலத்தில் இருந்து துவங்குகின்றது. திருவண்ணாமலை தத்துவத்திலே இந்த ஆலய தலவரலாறும் அமைந்திருக்கின்றது.

தங்களில் யார் பெரியவர்கள் எனும் கர்வத்தில் சிவனின் அடிமுடியினைத் தேடி பிரம்மன் அன்னமாகவும் விஷ்ணு வராகமுமாக மாறி முயன்ற புராணம் எல்லோரும் அறிந்தது. அவர் அக்னிவடிவாக நின்ற இடம் திருவண்ணாமலை என்பதும் எல்லோரும் அறிந்தது.

ஆனால், விஷ்ணு பூமியினைத் துளைத்துச் சென்ற இடம் எது என்றால், வராகமாக மாறி அவர் சிவனின் அடிதேடிய இடம் எது என்றால் அது இங்குதான், அதன் அடையாளமாக அந்தத் துவாரம் இப்போதும் உண்டு.

ஹரி துவாரம் இட்ட இடம் என்பதால் ஹரிதுவாரமங்கலம் என்ற பெயராயிற்று. இது சமஸ்கிருத பெயர்.

அரதை என்றால் சாட்சி, பாழி என்றால் குகை அல்லது சுரங்கம் எனும் பொருளில்வரும், விஷ்ணு வராகமாய் வந்து பூமியினைத் துளைத்து சுரங்கமிட்ட இடம் என்பதால் இது அரதைபெரும்பொழி எனத் தமிழில் பெயருமாயிற்று.

சிவனின் காலடித் தேடி பாதாளம் வரை சென்ற விஷ்ணுவுக்கு சிவன் அருள்பாலித்த இடம் என்பதால் சிவனுக்குப் பாதாளேஸ்வரர், பாதாள வரதர் எனப் பெயர் உண்டு.

சிவனின் பாதம் தேடி விஷ்ணு துளையிட்ட இடம் இன்றும் உண்டு, சுரங்கமாக உண்டு. பாதாளேஸ்வரர் முன்னால் உண்டு, இறங்கி பார்க்க அனுமதி உண்டு. சிறிது தூரம் செல்லலாம் பாதுகாப்பு கருதி முழுச் சுரங்கம் செல்ல அனுமதியில்லை, அதன் முடிவினை அறிந்தவர் எவருமில்லை.

அப்படியே இந்த லிங்கத்தின் அடிப்பாகம் எவ்வளவு ஆழமானது என்பதைத் தெரிந்தவருமில்லை, அவ்வளவுக்கு அது சுயம்பாக நிற்பது.

ஆலயக் கருவறையில் இக்காட்சியினை இப்போதும் காணமுடியும்.

இங்கு கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கோயில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.

விநாயகர், பதஞ்சலி, வியாக்ரபாதர், நடராஜர், காசி விஸ்வநாதர், சூரியன், சந்திரன், பைரவர், சப்தமாதர் சன்னதிகள் உள்ளன. தல விருட்சம் வன்னி மரம். மூலவர் பாதாளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியுள்ளார்.

சிவனுக்கு வலது பக்கத்தில், கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். இது மங்கலகரமானது என்பதாலே இந்த ஊர் அரிதுவாரமங்கலம் என்றாயிற்று.

அன்னை இங்கு அலங்காரவல்லி, அவள் இங்கு துர்க்கை அம்சம் என்பதால் இங்கு தனிச் சந்நதி இல்லை.

இங்கு நவக்கிரக சந்நதி இல்லை, காரணம் அடிமுடி காணமுடியாத ஈசனில் நவக்கிரகங்கள் அடக்கம் என்பதால் அவை இல்லை, சிவனே நவகிரக தோஷங்களை எல்லாம் நீக்கிவிடுவார்.

இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிய பின் ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

இந்தத் தலத்தின் விருட்சம் வன்னிமரம், அதாவது இங்குச் சிவனின் பஞ்சபூத தத்துவம் அக்னி என்பதால் அக்னியினை உள்ளடக்கிய வன்னிமரம் இங்கு விருட்சமானது.

அப்படியே இந்தத் தலத்தை வணங்கும் நேரமும் உச்சிபொழுதானது சூரியன் உச்ச அக்னியினைக் கொட்டும் நேரமே இங்குவழிபாட்டுக்கு உகந்தது.

இத்தலம் சிவனின் ஐந்து தொழிலில் அழித்தல் தொழிலைக் குறிப்பது, அழிப்பது என்பது ஒரு விஷயத்தைப் பொருளை, படைப்பை சாம்பலாக்குவது அன்று. மாறாக, எதெல்லாம் வேண்டாத குணங்களோ எதெல்லாம் ஒருவனுக்கு முட்டுகட்டையோ எதெல்லாம் அறிவை ஞானத்தை மறைக்குமோ அதெல்லாம் அழித்துப்போட்டு முன்னேற்றுவது.

சுருக்கமாகச் சொன்னால் எதெல்லாம் ஒருவனுக்குத் தடையோ அதை அழித்துப்போட்டு அவனுக்கு நல்வாழ்வுதரும் ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் தத்துவம் சரணாகதி, முழுச் சரணாகதி. சிவனை இங்கு முழுக்கச் சரணடைந்தால் எதெல்லாம் ஒருவனின் தடைகளோ குறைகளோ அறியாமையோ அதை எல்லாம் அழித்துப்போடுவார்.

பிரமம்னுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் எனும் கர்வம் இருந்தது, கர்வம் ஒருவனை முடக்கும், பல இன்னல்களைத் தரும். அவனை மாயையில் தள்ளி தீராக் கர்மத்தைச் சேர்த்து பல பிறவி எடுக்கவைத்து அலைகழிக்கும், அதை அழித்து ஒருவனுக்கு நல்வழி தரும் தலம் இது.

பாதையில் முள்ளும் கல்லும் இருந்தால் நடக்கமுடியாது, களைகள் இருக்கும் வயல் செழிக்காது, தடைகள் இருக்கும் மனம் தெளியாது. எதெல்லாம் இங்குக் குழப்பமோ தடையோ அதெல்லாம் இந்த ஆலயம் நீக்கித் தரும்.

சிவன் பாதாளேஸ்வரராக இருப்பதும் விஷ்ணு துளையிட்டு அடிவரை சென்றார் என்பதும் இந்த ஆலயத்தின் ஞான தாத்பரியங்கள்.

அதாவது, எது உங்கள் பிரச்சினையின் மூலமோ அதை வேரோடு களைந்துபோடும் தலம் இது. அது கடனோ, பகையோ, வியாதியோ மனக்கவலையோ பிரச்சினையின் மூலம் எதுவோ அது இங்கு சிவனைத் தொழுதால் முழுக்கச் சரியாகும். பிரச்சினையின் மூலவேர் எதுவோ மூலக் காரணம் அதுவோ அந்த வேர் வரை அகற்றிப்போடும் அருள்மிக்க தலம் இது.

நீங்கள் யாராகவும் இருங்கள், உங்கள் சிக்கல் எப்படியானதாகவும் இருக்கட்டும், இங்கு வந்து முழுக்கத் தயக்கமின்றி துளி சஞ்சலமின்றி இனி உங்களால் ஆவது எதுவுமில்லை எனச் சொல்லி சரணடையுங்கள், முழுக்கச் சரணடையுங்கள். அப்போது உங்களின் எல்லாச் சிக்கலும் அதன் மூலமும் சிவனால் அழித்துப்போடப்படும், வாழ்வு புதியதாகும்.

இங்கு வழிபட்டு சென்றால்தான் திருவண்ணாமலையில் முழு ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ரிஷிகள்வாக்கு, அவ்வகையில் பஞ்ச ஆரண்ய தலங்களில் மூன்றாம் தலமான இந்த ஹரிதுவார் சிவனை வணங்கிவிட்டு அங்குச் சென்றால் பெரும் பலன் உறுதி.

அங்குச் சென்று சிவனுக்கு நெய் விளக்கிட்டு தூபமிட்டு மலர்களிட்டு வணங்குங்கள், முழுச் சரணாகதியுடன் அவரை வணங்குங்கள். மூன்றாம் திருமுறையில் வரும் “பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலி” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி வணங்குங்கள்.

அந்நேரம் உங்கள் வாழ்வில் எல்லாச் சிக்கல்களும் அழிக்கப்பட்டு, சிவனால் எரிக்கப்பட்டு புதிய சக்தி புதிய நெருப்பாக உங்களுக்குள் இறங்கும். அதன்பின் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும், எல்லாவகை சிக்கலும் அதன் மூலம் வரை அழிக்கப்பட்டு புதுவாழ்வு தொடர்வீர்கள். இது சத்தியம்.