பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.
பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.
பாபநாசம் அருகே அமைந்திருக்கும் ஆலங்குடி ஆலயம் பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதானது. இதன் பழைய பெயர் திருஇரும்பூளை என்பது, கருமை நிறமான பூளை செடிகள் நிறைந்து கிடந்ததால் இது பூளைவனம் எனப்பட்டது. பின்னாளில் சிவன்குடி கொண்ட இடமாததால் திருஇரும்பூளை எனப் பெயர்பெற்றது.
இந்த ஆலயத்தின் வரலாறு சிவன் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்த அந்தப் புராண காலத்தில் இருந்து துவங்குகின்றது, சிவன் தேவர்களைக் காக்க நஞ்சுண்ட அதாவது ஆலகால கோலத்தில் எழுந்த தலம் என்பதால் ஆலங்குடி, ஆலகால விஷத்தை குடித்த தலம் என்பதால் ஆலங்குடி என்றுமாயிற்று.
” ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங்குடியான் எனு ஆர் சொன்னார் —
ஆலம் குடியானே யாகில் குவலயத்தோர் எல்லாம்
மடியாரோ மண் மீதினில்.”
எனக் காளமேகர் புலவர் பாடிய ஆலங்குடி தலம் இது.
இன்னும் மன்மதனை சிவன் எரித்துப்போட்டதால் ரதி மிகக் கலங்கி சிவனிடம் மன்னிப்புக் கேட்டபோது அவன் அரூபமாய் நின்று உன்னோடு வாழ்வான் எனச் சிவன் வரம் கொடுத்த இடம் இதுதான்.
இன்னும் சிவனைப் பிரிந்த தேவி தவமிருந்து சிவனை அடைந்த தலமும் இதுதான். இப்படிச் பல சிறப்புக்களைக் கொண்ட தலத்தில்தான் கஜமுகாசுரனை ஒழித்துத் தேவர்களைக் காத்த விநாயகர் கலங்காமல் காத்த விநாயகர் என அருள் பாலிக்கின்றார்.
இந்தத் தலம் தேவாரம் பாடப்பெற்ற தலம். சம்பந்தர் சுந்தரர் என இருவருமே பாடியிருக்கின்றார்கள், இருவருக்கும் நெருக்கமான தலம் இது.
“சீரார் கழலேதொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளையிடங் கொண்டஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண் டகருத்தே”
எனச் சம்பந்த பெருமானால் பாடல்பெற்ற தலமும் இதுதான். இந்த ஆலயம் எப்படி அமைந்தது என்றால் அதற்கொரு பக்தர் காரணமாக இருந்தார். அவர் பெயர் அமுதோகர், அவர் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்தார். அவர் கொஞ்சம் மாணிக்கவாசகர் சாயல்.
அமுதோகர் தன் சொந்தப்பணத்தில் இக்கோவிலைக் கட்டினார். ஆனால், அரசப்பணத்தில் கட்டியதாக சந்தேகித்த மன்னன் அவரைக் கொல்லத் துணிந்தான். அதற்கு முன் ஆலயம் கட்டிய புண்ணியத்தைத் தனக்குத் தாரைவார்க்கும்படி கேட்டான். அவரோ மறுத்தார்.
இதனால் அவர் தலையினை வெட்ட அவன் கட்டளையிட்டபோது ஓங்கிய வாள் ஓங்கியபடி நிற்க பெரிய குரல் “அமுதோகரா” என ஒலிக்க அந்த அமுதோகர் அப்படியே கரைந்துபோனார், அதாவது சிவன் அவரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
அந்த அதிசயம் கண்ட மன்னன் இங்குப் பணிந்து கோவிலுக்குப் பணிகள் செய்தான், இது மிகத் தொன்மையான காலம். அதிலிருந்தே இந்த ஆலயம் வழிவழியாக நிலைத்து சோழமன்னர்கள் காலத்தில் பெரும் அடையாளமிட்டது
சுந்தரமூர்த்தி நாயனார் காவேரியின் கரையில் தவித்தபோது சிவனே ஓடக்காரனாக வந்து அவரை ஆற்றினைக் கடக்கவைத்த இடம் இதுதான்.
விசுவாமித்திர மகரிஷி வழிபட்ட தலம் இது, அகத்திய பெருமானும் இங்குச் சிவனை வணங்கியிருக்கின்றார்.
இங்குள்ள சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் சிவனுக்குமான பந்தம் இன்னும் உண்டு, ஒருமுறை சோழமன்னன் இங்கிருக்கும் சுந்தரரைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல விரும்பினான், அதை அறிந்த அர்ச்சகர் அந்த விக்ரகத்தைத் துணியில் மறைத்து ஊர் ஊராக சுற்றிக் காத்தார். காவலர்கள் ஒருமுறை சோதனை செய்தபோது இது என் பிள்ளை அம்மை இட்டிருப்பதால் மறைத்திருக்கின்றேன் என்றார், காவலர்களும் அஞ்சிச் சோதிக்கவில்லை.
ஆனால், அதன்பின் அந்தச் சுந்தரர் முகத்தில் அம்மை தழும்பு வந்தது, அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக இப்போதும் அம்மை தழும்பு உண்டு, அவருக்குப் பிடித்தமான தலம் இது என்பதன் சாட்சி இது.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு இது தட்சனாமூர்த்தியின் சிறப்பிடமாகக் கொண்டாடப்பட்டது. திருவிடை மருதூருக்கும் இந்த ஆலயத்துக்கும் உள்ள தொடர்புப்படி இது அந்த ஆலய தட்சணாமூர்த்தியின் ஆலயமாயிற்று.
இதனால் குருபகவானுக்குரிய தலமுமாகி இன்று ஆலங்குடி என்றாலே குருவுக்கான தலம் என்றாயிற்று.
இது குருவுக்கான தலம் என்றாலும் சிலர் குருவும் தட்சணாமூர்த்தியும் ஒன்று எனக் குழப்புவதாலும் சில விஷயங்களைச் சொல்வது சரியானது.
முதலில் தட்சணாமூர்த்திக்கும் குருவுக்குமான வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், சிவனே குருவாக இருந்து ஞானம் வழங்கும் ஞானகுரு வடிவம், அவர் நான்மறைகளோடு அவற்றின் ஆறு அங்கங்களையும் ((அதாவது 1 ஜாதகம் 2 கோளம் 3 நிமித்தம் 4 ப்ரஸன்னம், 5 முகூர்த்தம், 6 கணிதம்). சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு மகா ரிஷிகளுக்கே சொல்லிக் கொடுப்பவர்.
65 வகை சிவவடிவங்களில் அவரும் ஒருவர், இவருக்கு ஆதி அந்தம் இல்லை.
குரு பகவான் என்பவர் நவக்கிரகங்களில் ஒருவர், இவர் மானிடர்க்கு அவர் கர்மவினைப்படி பலன்களை அருள்பவர், 5 ஆம் இடத்தில் இருப்பவர், உதயம் அஸ்தமனம் எனும் இரு தன்மைகள் கொண்டவர்.
இருவரும் வேறு வேறானவர்கள், ஒருவர் மகா தெய்வம் இன்னொருவர் அவருக்குக் கீழே பணிபுரியும் அதிகார தெய்வம், அதாவது குருவுக்குச் சக்தியும் மூலமும் இயக்குபவருமாய் இருப்பவர் தட்சணாமூர்த்தி.
தட்சணாமூர்த்தி சிவன் சந்நிதியின் தென்பக்கம் அமர்ந்திருப்பார், அவர் தெற்கு நோக்கிய தெய்வம், குருவோ நவக்கிரக சந்நிதிகளில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பார்.
இங்கே குரு என்பவருக்கு மஞ்சள் நிறம் உகந்தது, கொண்டை கடலை அவருக்கு நைவேத்தியம் , அதனால் அவருக்கு மஞ்சள் நிற ஆடை அணிவிக்கலாம், கொண்டை கடலை படைக்கலாம்.
வியாழகிழமை குருவுக்கு உகந்தது, அன்று நெய்தீபம் நல்லது, வேறு தீபங்கள் ஆகமவிதிப்படி அவருக்கு உகந்தது அல்ல, தேங்காய் எண்ணெய் அறவே ஆகாது.
நல்லெண்ணெய் நல்லது, எந்த எண்ணெய் என்றாலும் மண் விளக்கே நல்லது.
குருவுக்கு முல்லைமலர், மஞ்சள் நிறப் பூக்கள் இட்டு வணங்கலாம்.
தட்சணாமூர்த்தியினை எல்லாக் கிழமையும் வணங்கலாம்,, அவருக்கு வெண்பட்டு சாத்தி வழிபடலாம். அங்கேயும் நெய்விளக்கு உண்டு.
தட்சணாமூர்த்தி அழிவில்லாதவர் கால காலத்துக்கும் ஞான தத்துவமாய் நிற்பவர். ஆனால், குருபகவான் யுகம் தோறும் தேவர்களைப் போல் அழிந்து மீளத் தோன்றுவார். அவருக்கான ஞானமும் வலிமையும் அறிவும் தட்சணாமூர்த்தியால் வழங்கப்படும்.
ஆக, இங்குச் சிவனே தடசணாமூர்த்தி அம்சமாக நிற்கின்றார் என்பதால் இது அவருக்கான மூல தலமாகின்றது. குரு சந்நிதி என்பது அவரின் பிரதிநித்துவமாகின்றது.
இது சிவனின் மறைத்தல் தொழிலைக் குறிக்கும் தத்துவம். சிவனின் ஐந்து தொழிலில் மறைந்திருந்து இயக்கும் மறைதல் அல்லது கரத்தல் முக்கியமானது.
எல்லாப் படைப்பிலும் எல்லா இயக்கத்திலும் சிவன் ஞானமாக மறைந்திருக்கின்றார் என்பது, மன்மதனை உருவமில்லாமல் மறைவாக இயங்க வைத்ததும் இந்தத் தத்துவமே, சுந்தரருடன் மறைவாக விளையாடியதும் அதுவே.
அமுதோகரை மறைவாய் மனதில் நின்று இயக்கி முக்தி கொடுத்ததும் அப்படியே.
ஆம், இந்த உலகில் எல்லாமும் சிவவடிவம். சிறிய எறும்பின் ஞானம் முதல் மகா பிரமாண்டமாய் வானில் இயங்கும் கோள்கள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு ஞானம் உண்டு, அது தேனி, சிட்டுக்குருவி, சிலந்தி, தூக்கணாங்குருவி, மீன் முதலான் மச்ச வகைகள், கருடன், கழுகு என எல்லாவற்றுக்கும் ஒரு ஞானம் உண்டு, அது தாவரங்களுக்கும் சிறிய எலிக்கும் உண்டு.
இந்த ஞானவடிவில் மறைவாக சிவபெருமான் இந்த உலகை இயக்குகின்றான், அவனே மழையாகின்றான், அவனே நதியாகின்றான், அவனே இயக்கு சக்தியுமாகின்றான். எங்கும் எல்லாமும் இயக்கும் அந்த மகா சக்தி மறைந்திருந்து அருள் பாலிக்கின்றான் என்பதுதான் இந்த ஆலய தத்துவம்.
அந்த மறைந்த அல்லது மானுடர்க்குத் தெரியா இயக்கம் மறைதல் எனப்பட்டது, அப்படி மறைவாய் நின்று உலகை இயக்கும் சிவம் ஏதும் அபாயம் என்றால் தன்னை நம்பும் பக்தர்களை நொடியில் காப்பார்.
அப்படித்தான் அவர் நொடியில் அமிர்தத்தை உண்டார், ஒரு நொடி என்றாலும் அந்தப் பொல்லா விஷம் எல்லோரையும் அழித்திருக்கும், அது தேவர் அசுரர் என அங்கிருந்த அனைவரையும் அழித்திருக்கும். அந்தப் பெரும் ஆபத்தில் இருந்து எல்லோரையும் காத்தார் சிவபெருமான்.
அமுதோகரை மறைமுகமாக இயக்கியவர் சரியான நேரம் தன்னோடு அணைத்துக் கொண்டார், மறைவாய் வந்து சுந்தரருக்கும் உதவினார்.
நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் வரவேற்கும் அமைப்பு உடையது. அந்தக் கலங்காமற் காத்த விநாயகர் எனும் சக்திவாய்ந்த விநாயகர் கோபுர வாயிலில் உள்ளார்.
உள்ளே முதல் பிரகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது.
சூரிய பகவானின் சந்நிதிக்குத் தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி உண்டு, இவர்தான் முகத்தில் அம்மை வடு கொண்டபடி அழகாகக் காட்சி தருவார், சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் இருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார்.
அடுத்து வரும் உள் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம்.
இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். . அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சித் தருகிறார்.
சோமஸ்கந்தராக முருகப்பெருமானும் இங்கு உண்டு, இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது நியதி.
ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்குக் குரு. ஆம், தட்சிணாமூர்த்திதான் இங்கு குரு, அதனால் இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம், பெரும் ஞானம் என எல்லாமும் வாய்க்கும்.
இந்தத் தல விருட்சம் பூளை செடியில் ஒருவகையான கருமை நிற செடி, இது ஆலகாலம் உண்ட சிவனைப் போலவே கருமையானது .
(அடிப்படையில் பூளை செடி உள் உறுப்புகளுக்கு நல்லது, வெளித் தெரியாத பல நலன்களை அது மருத்துவரீதியாக உடல் உள்ளுறுப்புக்கு வழங்கி நோயினைத் தீர்த்து உறுப்பக்களைக் காத்து வாழவைக்கும் )
இங்குள்ள பொய்கையின் பெயர் அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் .
இந்தக் கோயிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறு மிகப் பிரசித்தி.
இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், காவேரி கிளையான பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் உண்டு என்பதால் இது சக்திவாய்ந்தது. புனிதமானது.
இங்குச் சென்று வழிபட்டால் மறைவான சிக்கல் எல்லாம் காணாமல் போகும். ஒரு மனிதனுக்குச் சிக்கல் அவனுக்கே தெரியாமல் உடலாலும் மனதாலும் எழும் சிக்கல் இங்கு அகலும்.
ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம். இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது.
விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் பெருகும்.
இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்து கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.
இன்றுவரை இந்தத் தலத்தில் பாம்பு முதலான விஷக்கடி, விஷத்தால் சாவு என்பது இங்கு இல்லை அது நடக்கவும் நடக்காது எல்லாவகை விஷத்தையும் கட்டுபபடுத்தும் ஆலயம் இது.
விஷம் என்பது பாம்பு, தேள் இல்லை ரசாயானம் என்பது அல்ல, உடலில் உற்பத்தியாகும் பலவகை திரவங்கள் விஷமாகி அது நோயாகும், அப்படியே அறியாமையால் சிந்தனையில் எழும் விஷயமும் விஷமாகும்.
விஷம் என்பது ஒரு இயக்கத்தை நிறுத்துவது உடலால் கொல்வது, அதே விஷம் அறியாமை என அறிவுக்கும் சிந்தனைக்கும் உண்டு. இந்தத் தத்துவத்தில்தான் இந்த ஆலய தாத்பரியம் உண்டு.
சிவன் அலகால விஷத்தை சிவன் அருந்தினார் என்பது வெறும் விஷம் அல்ல. அது இந்தப் பிரபஞ்ச இயக்கம் நின்றுவிடாதபடி அந்தப் பெரும் ஆபத்தை தன்னில் ஏற்றுத் தன்னை அழிக்கத் துணிந்து இந்த இயக்கத்தை காத்தார் என்பது.
ஆம், முறையான சரியான இயகஅகத்தை எதெல்லாம் நிறுத்துமோ அது விஷம், தர்ம வாழ்வினை ஒரு கர்ம வாழ்வினை எதெல்லாம் தடுக்க வருமோ, முடித்து குழப்ப வருமோ அது விஷம்.
இந்த ஆலயம் அப்படி எல்லாவகை விஷத்தையும் முறித்துப்போட்டு மனதாலும் உடலாலும் எழும் எல்லாவகை தடையினையும் அகற்றி உங்களை வாழவைக்கும், இங்குச் சென்று வணங்கினால் அறிவும்தெளிவும் பெருகும், எல்லா ஆபத்தும் தடைகளும் அகலும், வாழ்வு வளமாகும் ஞானமாகும். இது சத்தியம்.
இங்குக் குருவினை வணங்கச் செல்பவர்கள், குரு பரிகாரம் நிவர்த்தி எனச் செல்பவர்கள் அந்தச் சிவபெருமானை வணங்கிவிட்டே குருவடிவாக இருக்கும் தட்சணா மூர்த்தியினை ஞானகுருவாக வழிபடுதல் நன்று. அந்த ஆலய தர்மமும் சாஸ்திரமும் அதுவே.